Monday 7 October 2013

கண்போன்ற காலத்தை பொன்னென்று எடுத்துக்காட்டி...!


"இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்" நூலினைக் குறித்து கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் காவிரிமைந்தன் (மு. ரவிச்சந்திரன்) அவர்கள் எழுதிய கவிதை


நொடிகூட பெரிதென்று துடிதுடிக்கும் சிவப்புமுள்!
காலத்தைக் காட்டுதற்கு சுற்றிவரும் சிறியமுள்!
நிமிடத்தை அளந்தெழுத இயக்கமெனும் பெரியமுள்!
கடிகாரம் தனிலுள்ள இவைகாட்டும் நேரத்தை………………

ஐவேளைத் தொழுகையெனும் அல்லாஹ்வின் நியதிகளுடன்
இஸ்லாத்தின் கடமைகளும் இடையிடையே இணைத்து
‘ஜகாத்’ ‘நோன்பு’ ‘ஹஜ்’ புனித யாத்திரை – இவையாவும்
காலத்தோடு இணைந்திருக்கும் தன்மைதனை புரியவைத்து……

அரியபல தகவல்களை ஆர்வமுடன் திரட்டியங்கே
அழகியதோர் நூல்வடிவில் வழங்கியுள்ள ஆசிரியர்
திருமறையில் தினம்தோய்ந்து உளமுருகி இறையோனின்
பரிபூரண நல்லாசிகளால் உருவாக்கிய காரணத்தால்……………..

மேற்கோள்கள் சிறுகதைகள்.. உவமையுடன் உதாரணங்கள்
மேலும்மேலும் படிப்பதற்கு உகந்தாற்போல் உரைநடைகள்
சிறப்புகள் பல சேர்ந்து சீராக வடித்த நூலாய்…
மறுமைக்கும் வழிகாட்டும் மறைநாதப் புதுப்புனலாய்……..

ஆன்மீக நெறியோடு அறிவுக்கண் கொண்டு
கண்போன்ற காலத்தை பொன்னென்று எடுத்துக்காட்டி
இன்னுமொரு நூல்வடிவம் எளியநல் தமிழ்நடையில்
இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்!!

தக்கதோர் நூலினை தமிழிலே தந்திருக்கும்
தகைசார்ந்த ஆசிரியரை உளமாறப் பாராட்டுகிறேன்!

காவிரிமைந்தன்

No comments:

Post a Comment