Monday, 29 August 2016

அமைதியடைந்த ஆத்மாக்கள்


மனிதனைச் சோதிப்பதற்கு அல்லாஹ் பயன்படுத்தும் மிகப் பெரிய ஆயுதம்தான் மனிதனின் மனம்.

“மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்” (4:28) என்ற இறைவசனத்திற்கேற்ப மனிதனின் மனம் பாவம் செய்யத் தூண்டக்கூடிய இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளது. இதற்கு “நஃப்ஸே அம்மாரா” எனப்படும்.

அல்லாஹ் மனிதனை வழிகெடுக்கும் ஷைத்தானைப் படைத்து அவனுக்கெதிராக நேர்வழி காட்டும் நபிமார்களைப் படைத்தது போன்று “நஃப்ஸே அம்மாரா” என்ற பாவம் செய்யத் தூண்டக்கூடிய மனதைப் படைத்து அதற்கெதிராக “நஃப்ஸே லவ்வாமா”வையும் படைத்துள்ளான்.

“நஃப்ஸே லவ்வாமா” என்றால் மனசாட்சி என்று தமிழில் பொருள் கொள்ளலாம். மனிதன் எந்தத் தீமையைச் செய்யும்பொழுதும் ஒரு மனஉறுத்தல் ஏற்படும். இந்த மனஉறுத்தலுக்கு மனசாட்சி என்று பெயர் கொடுத்தால் அதுதான் “நஃப்ஸே லவ்வாமா” எனப்படும்.

இதைத்தான் வல்ல இறைவன் “இடித்துரைக்கும் ஆன்மாவின் மீது நான் சத்தியம் செய்கிறேன்” (75:2) என்று கூறுகிறான். நன்மை, தீமையை உணர்த்.தும் இந்த உள்ளக்குடுக்கையைப் பற்றி இன்னும் ஏராளமான இறைவசனங்கள் விவரிக்கின்றன.

“நஃப்ஸே அம்மாரா” எல்லோரிடத்திலும் இருப்பது போன்று “நஃப்ஸே லவ்வாமா”வும் எல்லோரிடத்திலும் இருக்கும். “நஃப்ஸே லவ்வாமா”வைப் (மனசாட்சி) பயன்படுத்தி “நஃப்ஸே அம்மாரா”வை அடக்கினோம் என்றால் “நஃப்ஸே முத்மஇன்னா” என்ற நிலையை அடையலாம்.

இதனை “அமைதியடைந்த ஆத்மா” என்று பொருள் கொள்ளலாம். ஆக, மனிதனின் இலட்சியம் “நஃப்ஸே முத்மஇன்னா”வாக இருக்க வேண்டும். அதனை அடைவதில்தான் அவனது பயணம் அமைய வேண்டும்.

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) அமைதியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன் மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (அல் ஃபஜ்ர் 89:27-30)

இந்த அமைதியடைந்த ஆத்மாவாக (நஃப்ஸே முத்மஇன்னா) நாம் மாறும்பொழுதுதான் சுவனத்தில் அல்லாஹ் நம்மை நுழைவிக்கச் செய்கிறான். நபிமார்களும், ஷுஹதாக்களும், ஸித்தீக்கீன்களும், ஸாலிஹான நல்லடியார்களும் நஃப்ஸே முத்மஇன்னாவைக் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

“ஹவா” என்ற மனோஇச்சை இலேசானது அல்ல. “ஹவா”வுக்குப் பலியான மனிதன் நிரந்தர வெற்றியை பெற்றதும் இல்லை. சர்வாதிகாரிகள் முதல் சாதாரண மனிதன் வரை இந்த “ஹவா” ஆட்டிப் படைக்கிறது. இந்த “ஹவா”வுக்கு அடிமையானவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையை (ஹவாவை) தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (அல் ஜாஸியா 45:23)

“லாஇலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லும் முஸ்லிம் கூட “லாஇலாஹ இல்லல் ஹவா” (வணக்கத்துக்குரிய நாயன் மனோஇச்சையைத் தவிர வேறு யாருமில்லை) என்ற நிலைக்கு ஆளாகி விடுகிறான் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அடியான் ஒரு தவறிழைத்து விட்டால் அவனது இதயத்தில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிடுகிறது. அதிலிருந்து அவன் கழன்று பாவமன்னிப்பு தேடி பாவமீட்சி பெற்றுக்கொண்டால் அவனது உள்ளம் தெளிவாகி விடுகிறது. அவ்வாறின்றி மீண்டும் தவறுகளையே செய்ய முற்பட்டால் அந்தக் கரும்புள்ளிகள் அதிகப்படுத்தப்பட்டு அவனது உள்ளத்தில் அது பற்றிப் படர்ந்து விடுகின்றன. இதைத்தான் “அப்படியல்ல. அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன” (83:14) என்று அல்லாஹ் கூறுகின்றான்.” (அபூஹுரைரா (ரலி), திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா)

இந்த எச்சரிக்கை மணி நம் காதுகளில் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது உள்ளங்களை இறைவழியில் புரட்டிப் போட்டிட வேண்டும். அப்பொழுதுதான் நாம் அமைதியடைந்த ஆத்மாக்களாக மாறுவோம். அவர்களுக்குத்தான் அறுதி வெற்றி காத்திருக்கிறது.

புதிய விடியல் அக்டோபர் 2015 (மனதோடு மனதாய்...)

Saturday, 27 August 2016

கலாச்சார அனாச்சாரம்!!


உலக அளவில் எங்கு நோக்கினும் தீமையின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. நன்மையை அடக்கி, தீமை ஆட்டம் போடுகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும், அதன் கூட்டணி நாடுகளும் செய்யும் அராஜகம் ஒரு பக்கம், அவர்களின் இராணுவ மேலாதிக்கம் இன்னொரு பக்கம்.

முதலாளித்துவ கலாச்சாரம் பொருளாதாரத்திலும், வாழ்க்கைப் பாணியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. கல்வி, மருத்துவம் என்று முக்கியமான துறைகளில் பணம்தான் முக்கிய கருவியாக மாறியிருக்கிறது.

கலாச்சார அனாச்சாரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகின்றது. வாழ்க்கை என்றால் அனுபவித்தல் என்ற கருத்துப் பரவல் அதிகமாகியிருக்கிறது. ஆண்-பெண் உறவுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தரங்கெட்ட மனிதன் தன் மகள்களிடம் அல்ல, பிறந்த குழந்தைகளிடம் கூட பாலியல் வக்கிரத்தில் ஈடுபடுகின்றான்.

கல்வி, கலாச்சார வளர்ச்சி, வாசிப்பு, ஆய்வு போன்றவற்றின் முக்கியத்துவங்கள் குறைந்து விட்டன. கொடூரங்கள், தற்கொலைகள், கொலைகள் போன்றவை “வாழ்க்கையை அனுபவிக்கிறோம்” என்ற பெயரில் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்படுகின்றன. மனங்கள் மரத்து, மரித்துப் போய்விட்டதையே இவை காட்டுகின்றன.

சத்தியம், நீதி எல்லாம் அன்னியமாகி விட்டன. அப்பாவிகள் கிஞ்சிற்றும் தயக்கமில்லாமல் தூக்கிலேற்றப்படுகிறார்கள். நீதிமன்றங்களே அநீதிகளுக்கு சாட்சியாக நிற்கின்றன.

மது அருந்துவது என்பது சாதாரண நீர் அருந்துவது போன்று இப்பொழுது கருதப்படுகின்றது. இளைஞர்கள் இதன் அடிமைகளாக மாறிய காலம் போய், அரசின் கைங்கரியத்தால் இன்று இளம் பெண்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். வீடுகளில் இப்பொழுது இதனை எதிர்க்கவோ, கண்டிக்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குடிக்கும் மகனிடம் “குடிக்காதே” என்று சொல்லும் தைரியம் பெற்றோருக்கு இல்லை.

வட்டிக்காரர்கள் மறுபிறவி எடுத்துள்ளார்கள். மொத்த சமுதாயத்திலுமே பொருளாதார ஒழுங்கு என்பது சீரழிந்து கிடக்கின்றது. ஜாதிய-வகுப்புவாத சக்திகள், ஃபாசிசம், ஹிந்துத்துவம் போன்றவை இன்று வளர்ச்சி, மறுமலர்ச்சி என்ற முகமூடிகளில் புதிய படையெடுப்பைத் தொடங்கியிருக்கின்றன. வளர்ச்சியின் நாயகர்களாக பல கொலைகளுக்குக் காரணமான கோர முகங்கள் காட்டப்படுகின்றன.

இவற்றிற்கு முன்னால் ஜனநாயகம் பலஹீனக் குரல் எழுப்புகின்றது. அது பெயரளவிலேயே உள்ளது என்றாகிவிட்டது. பலவீனமான மக்கள் எப்பொழுதும் போல் அதிகார மையங்களிலிருந்து இன்றும் அகன்றே நிற்கின்றனர். வகுப்பு பேதங்கள் குறைந்தபாடில்லை, மாறாக இன்னும் அதிகரிக்கவே செய்துள்ன. முந்தாநாள் வரை தீண்டாமைக் கொடுமைகள், நேற்று வரை ஜாதிக் கலவரங்கள், இன்று வரை வகுப்புக் கலவரங்கள் என்று நாடு வீரநடை போடுகின்றது அழிவின் பாதையில்!!

இதுதான் இன்றைய இந்தியாவின் சித்திரம். இந்தச் சூழலில்தான் நாம் நம்மைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முஸ்லிம்கள் ஓர் உறுதியான நிலைப்பாடு எடுப்பதற்குத் தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

எது நன்மை, எது தீமை, எது நன்மையின் கூட்டம், எது தீமையின் கூட்டம்... என்று எதுவுமே முஸ்லிம்களுக்குத் தெரிவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் ஒரு விசுவாசி சத்தியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். நீதியின் சாட்சி பகர்வதன் மூலம் ஒரு விசுவாசி அல்லாஹ்வுக்கு சாட்சி பகர்கிறார். இஸ்லாம் தீமைக்கெதிராகப் போராடுவதில் பன்முகத்தன்மை கொண்டது. இதனைத்தான் இறைத்தூதர்களின் உதாரணங்களும், இறைவேதங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

முஃமின்களே! நியாயத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (அல் மாயிதா 5:8)

புதிய விடியல் செப்டம்பர் 2015 (மனதோடு மனதாய்...)

அருட்கொடைகள் அருளப்பட்ட உம்மத்!


மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரான இஸ்ரவேலர்கள் இறைவன் புறத்திலிருந்து பல சான்றுகளை கண்கூடாக கண்டார்கள். வல்ல இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தும் பல அற்புதங்களை கண்டார்கள்.

மன்னு சல்வா என்ற விண்ணுலக உணவு இறைவன் புறத்திலிருந்து இலவசமாக இவர்களுக்கு வழங்கப்பட்டது. மூஸா (அலை) அவர்களையும் அவர்களுடன் இருந்த ஈமான் கொண்டவர்களையும் காப்பாற்றுவதற்காக அல்லாஹ் கடலில் ஒரு பாதையை ஏற்படுத்தினான். இதை கண்கூடாக கண்டு இறைவனது அற்புத உதவியால் உயிர் பிழைத்தவர்கள்தான் இந்த இஸ்ரவேலர்கள்.

தண்ணீருக்கு வழியில்லாமல் தாகத்தால் இவர்கள் வாடியபோது தனது கைத்தடியை பாறையின் மீது அடித்து அதில் பன்னிரண்டு நீரூற்றுகளை மூஸா (அலை) அவர்கள் இறைவனுடைய உதவியால் வரவழைத்தார்கள். இந்த அற்புதத்தையும் கண்ணால் கண்டு பயனடைந்தவர்கள்தான் இந்த இஸ்ரவேலர்கள்.

ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நிறைய அற்புதங்களை வழங்கினான். அவர்களது பிறப்பே ஓர் அதிசயம்தான். குழந்தையாக இருந்தபொழுது அவர்கள் மக்களிடம் பேசினார்கள். களிமண் பறவையில் ஊதினால் அது உயிர் பெற்றெழும். பிறவிக் குருடர்களையும், குஷ்டரோகிகளையும் குணப்படுத்தினார்கள். இறந்தோரை உயிர்ப்பித்தார்கள்.

கொலை செய்யப்பட்ட ஒருவர் இறைவனால் உயிரூட்டப்பட்டு கொலை செய்தவர் யார் என்பதை தன் வாயினால் தெளிவுபடுத்திய அற்புதத்தையும் கண்கூடாக இவர்கள் கண்டார்கள்.

இப்றாஹீம் (அலை) அவர்களை நெருப்புக் குண்டத்தில் வீசிய பொழுது அது அவர்களுக்கு இதமான குளிரூட்டும் சோலையாக மாறிய அற்புதம் நடந்தது.

இந்த உம்மத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அருட்கொடைகள் ஆச்சரியமளிக்கின்றன. ஆனால் அற்புதங்களுக்குப் பதிலாக அனைத்தும் அன்பளிப்புகள். முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தை சுவர்க்கத்திற்கு அனுப்புவதில் அத்தனை முனைப்பையும் அல்லாஹ் காட்டுகிறான். உதாரணத்துக்கு ஜும்ஆவை எடுத்துக்கொள்வோம்.

இப்படி முந்தைய நபிமார்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் நிகழ்த்தியதாக காணக் கிடைக்கவில்லை. ஆனால் அத்தனை நபிமார்களுக்கும் தலைவரே அவர்கள்தான்.

“ஒருவர் ஜும்ஆ தினத்தன்று குளித்துவிட்டு, தம் சக்திக்குட்பட்ட உடைகளை அணிந்துகொண்டு, தன் இல்லத்திலிருக்கும் நறுமணத்தை பூசி, பள்ளிவாசலுக்கு சென்று, அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு சிரமம் கொடுக்காமல், தன் மீது விதியாக்கப்பட்டுள்ளதை தொழுது, இமாம் உபதேசம் செய்ய எழுந்ததும் அவரது உபதேசத்தை செவி சாய்த்து கேட்டால், அத்தினத்திற்கும் மறு ஜும்ஆவிற்குமிடையிலும் அவரால் நிகழ்த்தப்படும் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸல்மான் (ரலி), புகாரீ)

அதேபோன்று குறைந்த காலத்தில் நிறைந்த நன்மைகளையும் அல்லாஹ் பலப்பல சந்தர்ப்பங்களில் இந்த உம்மத்துக்கு வழங்கியிருக்கிறான். திருக்குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குவதாக அண்ணலார் அருளினார்கள்.

இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என்றும், ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் மீதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என்றும் அண்ணலார் கூறியுள்ளார்கள்.

இத்தகைய அன்பளிப்புகளின் உச்சகட்டம்தான் நம்மைக் கடந்து சென்ற ரமலான். அல்லாஹ் தன் அடியார்களை சுவர்க்கத்தில் நுழைவிக்க ஏற்பாடு செய்த அற்புத மாதம்.

ஒரு சுன்னத்துக்கு ஃபர்ளின் நன்மையையும், ஒரு ஃபர்ளுக்கு 27 ஃபர்ளுகளின் நன்மையையும், ஒரு ஜமாஅத் தொழுகைக்கு 70 மடங்கு நன்மையையும் அல்லாஹ் அள்ளி வழங்கினான். லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க இரவை ரமலானில் வழங்கினான்.

தாவூத் (அலை) அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றார்கள். நம்மால் அப்படி செய்ய முடியுமா? ஆனால் ஷவ்வால் மாதம் 6 நோன்புகள் நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்.

“யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

புதிய விடியல் ஆகஸ்ட் 2015 (மனதோடு மனதாய்...)

Wednesday, 24 August 2016

இறுதிநாள் எனும் எதார்த்தம்!


ஒட்டகங்களை மேய்க்கிற சாதாரண இடையராக இருந்து, 22½ லட்சம் சதுர மைல்களை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை மறுமை நாள் என்னும் மையப்புள்ளியைச் சுற்றியே அமைந்திருந்தது.

இறுதி நாளைப் பற்றி நினைவு வந்து விட்டாலோ அல்லது யாராவது நினைவு படுத்தி விட்டாலோ உடனே மாலை மாலையாக கண்ணீர் விட்டு அழுது விடுவார்கள். அந்த அளவு இறுதி நாளின் மீதும், அன்று நடக்கும் கேள்வி கணக்கு விசாரணையின் மீதும் அச்சத்தைக் கொண்டிருந்தார்கள். அந்த அச்சம் அவர்களுக்கு எச்சரிக்கையை கொடுத்தது.

அதன் விளைவுதான் பல லட்சம் சதுர மைல்களுக்கு அதிபராக இருந்தும் எளிமை ஜனாதிபதியாக திகழ்ந்தார்கள். அரசாங்க கஜானாவிலிருந்து சொற்ப தொகையையே ஊதியமாக பெற்ற உமர் (ரலி) அவர்களுக்கு மாற்று ஆடை கூட இருந்ததில்லை. இருந்த ஓர் ஆடையை துவைத்துப் போட்டு காய்வதற்கு தாமதமானதால் ஒரு ஜும்ஆவுக்கு சிறிது தாமதமாக வந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட நிகழ்வும் அவர்களது வாழ்வில் அரங்கேறியது.

ஒரு முறை ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆவுக்காக மஸ்ஜிதுக்கு வரும்பொழுது, அவரை ஸல்மானுல் ஃபார்ஸி (ரலி) தடுத்து நிறுத்தி, “உமரே! நீங்கள் இப்போது அணிந்திருக்கிற ஆடை ஒரு தடவை அன்பளிப்பாக உங்களுக்கு கிடைத்தது. இதே போன்று எனக்கும் ஒன்று கிடைத்தது. இப்போது நீங்கள் கீழாடை, மேலாடையாக இரண்டு ஆடைகளை அணிந்திருக்கிறீர்களே... அது எப்படி?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் இந்தக் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் தன் மகன் அப்துல்லாஹ்வை நோக்கினார். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), “சகோதரரே! என் தந்தையுடையது ஓர் ஆடைதான். உங்களுக்கு அன்பளிப்பாக ஆடை கிடைத்த அதே சமயத்தில் எனக்கும் ஓர் ஆடை கிடைத்தது. அதை நான் என் தந்தைக்கு கொடுத்தேன்” என்றார்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு ஒற்றை ஆடை கூட கேள்விக்குரியதாக இருந்தது. அவர்களது ஆடைகளில் ஒட்டுக்களும் அதிகம். “உமரின் ஆடையில் தோள் புஜங்களுக்கு இடையே நான்கு ஒட்டுக்களை நான் பார்த்தேன்” என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

ஒரு தடவை உமர் (ரலி) அவர்களிடம் முதியவர் ஒருவர் வந்து, ‘‘நான் ஏழை. எனக்கு பெண் குழந்தைகள் இருக்கின்றன. எனக்கும், என் குழந்தைகளுக்கும் அணிவதற்கு சரியான ஆடைகள் இல்லை. ஆடை ஏதாவது இருந்தால் கொடுங்கள்” என்று கேட்டார்.

உமர் (ரலி) அவர்களுக்கு இருப்பது ஓர் ஆடைதான் என்பது அந்த முதியவருக்கு தெரியாது. உமர் (ரலி) அவர்கள் அவரிடம், ‘‘என்னிடம் ஆடைகள் ஏதும் இல்லையே…” என்றார்கள்.

அதற்கு அவர் ஏமாற்றத்துடன், ‘‘இங்கிருந்து நான் சென்று விடுவேன்” என்று கூறினார். ‘‘நீர் சென்று விட்டால் என்ன நடக்கும்?” என்று உமர் (ரலி) அவர்கள் வினவ, அந்த முதியவர் கூறினார்: ‘‘உமரே! அவ்வாறு நான் சென்று விட்டால், மறுமை நாளில் அந்தப் பெண் குழந்தைகளைக் குறித்து இறைவன் உம்மிடம் விசாரிப்பான். பின்னர் நீர் நரகம் செல்வதா அல்லது சுவனம் செல்வதா என்று அப்போது தீர்மானிக்கப்படும்.”

அவ்வளவுதான்! “மறுமை நாள்” என்ற வார்த்தையைக் கேட்டதும் திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள் தங்கள் தாடி நனையும் அளவுக்கு அழ ஆரம்பித்தார்கள். உடனே அங்கிருந்த பணியாளரிடம் கூறினார்கள்: ‘‘எனது ஆடையை இவருக்குக் கொடுங்கள்.”

பின்னர் அந்த முதியவரிடம் கூறினார்கள்: ‘‘இறைவன் மீது ஆணையாக! இப்போது என்னிடம் இதைத் தவிர வேறு ஆடை எதுவும் இல்லை. மறுமையில் நான் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படக் கூடாது என்பதற்காக இதோ இப்போது இதனை வைத்துக் கொள்ளுங்கள்.”

இறுதி நாளின் எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் இப்படித்தான் தங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

விடியல் வெள்ளி  ஜூலை 2015 (மனதோடு மனதாய்...)

Tuesday, 23 August 2016

உண்மையான உள்ளங்கள் எங்கே?


தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு ஆள் கொஞ்சம் பணத்துடன் வீட்டிலிருந்து வெளிவந்தார். தகுதியானவர் யார் என்று விசாரித்து விசாரித்து கடைசியில் அவர் அந்தப் பணத்தைக் கொடுத்தது ஒரு திருடன் கையில்.

மக்கள் இந்த விசித்திர நடவடிக்கை கண்டு ஆச்சரியப்பட்டனர். பலவாறாகப் பேசினர். திருடனுக்கு தர்மம் வழங்குகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால் தான் செய்தது குறித்து அவர் மிக்க திருப்தி கொண்டிருந்தார். நல்ல ஒரு செயல் செய்ய வாய்ப்பளித்ததற்காக அல்லாஹ்வுக்கு அவர் நன்றி செலுத்தினார்.

இன்னொரு நாளும் அதே போன்று கொஞ்சம் பணத்துடன் தர்மம் செய்வதற்காக அவர் வெளிவந்தார். இத்தவணை அவரது தர்மம் சென்றடைந்தது ஒரு விபச்சாரியிடம். அன்று போல் இன்றும் மக்கள் புருவத்தை உயர்த்தினர். பலவாறாகப் பேசிக்கொண்டனர். அவர் மீது மீண்டும் குற்றம் சாட்டினர். ஆனால் அவர் தான் செய்தது குறித்து மிக்க திருப்தியடைந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

அதற்கடுத்த நாளும் அவர் கொஞ்சம் பணத்துடன் தர்மம் செய்வதற்காக வெளிவந்தார். இத்தவணை அவர் தர்மம் கொடுப்பதற்காக தேர்ந்தெடுத்தது ஒரு பணக்காரரை!

அந்தப் பணக்காரர் கஞ்சனிலும் மகா கஞ்சன். பணக்காரருக்கு தானதர்மம் நல்கிய கொடைவள்ளல் என்று மக்கள் அவரைக் கேலி பேசி கிண்டலடித்தனர். ஆனால் அவரோ இப்பேற்பட்ட ஒரு பணக்காரருக்கு தர்மம் வழங்கிட வாய்ப்பளித்த வல்ல இறைவனுக்கு நன்றி நவின்று பூரண திருப்தியுடன் புளகாகிதம் அடைந்தார்.

திருடனுக்கும், விபச்சாரிக்கும் தர்மம் அளித்தது அவர்களது தவறான தொழில்களிலிருந்து அவர்களைத் திருத்த உதவும் என்று மிக்க நம்பிக்கை கொண்டிருந்தார் அவர். அதனாலேயே அவர்களுக்கு தர்மம் அளித்தார். தர்மம் பெற்ற பணக்காரர் அதிலிருந்து மிகப் பெரும் பாடம் பெற்று தன் கஞ்சத்தனத்தை விட்டொழித்து பிறருக்கு தன் பொருளிலிருந்து தான தர்மம் வழங்க தொடங்குவார் என்று இவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனாலேயே அவருக்கு தர்மம் வழங்கினார்.

எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் கூறிய ஓர் அனுபவக் கதைதான் இது.

தூய்மையான எண்ணம்தான் எந்தவொரு செயலுக்கும் பூரணத்துவத்தை அளிக்கிறது. வெளியில் பார்க்கும்பொழுது முட்டாள்தனமாக தெரியும் எல்லா செயல்களும் உண்மையில் முட்டாள்தனங்களல்ல. அதில் பலவற்றில் பல நல்ல நோக்கங்கள் ஒளிந்து கிடக்கும்.

அதேபோன்று வெளியில் நல்லதாக தெரியும் எல்லா செயல்களும் நல்ல செயல்களல்ல. மாசு படிந்த உள்ளங்களுடன் செய்யப்படும் நல்ல காரியங்கள் அதன் பூரணத்துவத்தை இழந்து விடுகின்றன. இந்த நல்ல செயல்களால் பெரிதாக பலன் எதுவும் ஏற்பட்டு விடாது.

பண்டைய காலம் தொட்டே ஹஜ்ஜுக்கு வருவோருக்கு சேவை புரிவதும், மிருக பலி கொடுப்பதும், இன்னபிற சேவைகளும் அரபிகளுடைய பழக்கமாக இருந்தது. அது அவர்களுக்கு பெருமையாகவும் இருந்தது. இந்தச் சேவைகள் மூலம் புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதை விட அவர்களுக்கு தங்கள் குலப் பெருமையையும், தலைமைப் பதவியையும் உயர்த்திப் பிடிப்பதுதான் இலட்சியமாக இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மல்லுக்கு நின்றபொழுதும், யுத்தங்கள் புரிந்தபொழுதும் குறைஷிகள்தான் மக்காவில் இறையில்ல சேவகர்களாக இருந்தனர். அவர்கள் அதில் மிக்க அபிமானம் கொண்டிருந்தனர்.

இந்தச் சேவைகள் மூலம் அல்லாஹ் தங்களுக்கு உதவிகள் புரிந்து கரையேற்றி விடுவான் என்ற அவர்களின் நோக்கத்தில் அல்லாஹ் இவ்வாறு மண்ணை அள்ளிப் போட்டான்:

(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப் பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (அத் தவ்பா 9:19)

நல்ல செயல்கள் நல்ல உள்ளங்களிலிருந்து புறப்பட வேண்டும். அதுவே அறுதி வெற்றியை ஈட்டித் தரும்.

விடியல் வெள்ளி  மே 2015 (மனதோடு மனதாய்...)