Monday 1 April 2019

மோடியின் மாயாஜாலம்!


ஏற்கனவே துவக்கப்பட்ட அதே திட்டங்கள் மீண்டும் துவக்கம்!!

30 நாட்களில் 157 திட்டங்கள்!!!

கடந்த ஒரு மாத காலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 157 திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளார். ஆனால் இவற்றில் சில ஏற்கனவே துவக்கப்பட்டு செயல்படாமல் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் என்று என்டிடிவி அம்பலப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அவசரம் அவசரமாக துவக்கப்படும் இந்தத் திட்டங்களில் இன்னும் சில துவக்கப்பட்டு சிறிது வேலைகளும் நடைபெற்றிருக்கின்றன. அவற்றையும் மோடி திறந்து வைத்து மக்களின் கண்களில் மண்ணைத் தூவ முயற்சி செய்திருக்கிறார்.

பாஜகவினர் எப்பொழுதும் மக்களை மதிப்பதில்லை என்பது நாடறிந்த இரகசியம். அவர்கள் மக்களை மடையர்களாகவே காண்கின்றனர் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

ஆனால் மக்கள் மடையர்கள் இல்லை. அவர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்பதற்கு நாடு முழுவதும் பாஜக ஆட்சிக்கெதிராக வீசும் அலை உறுதிப்படுத்துகிறது.

கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஜான்சியில் பாதுகாப்பு கட்டடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. ஆனால் இதே மோடியால் இந்தக் கட்டடத்திற்கு கடந்த வருடம், அதாவது 2018 பிப்ரவரி 21ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன் பிறகு அங்கே ஒரு வேலையும் நடக்கவில்லை. அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள்.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாரனாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி, மீண்டும் அதே மருத்துவமனைக்கு கடந்த மாதம் பிப்ரவரி இறுதியில் அடிக்கல் நாட்டிய அசிசயத்திற்கு இந்த உலகம் சாட்சியானது.

அதே போன்று கடந்த மாதம் பிப்ரவரியில் பீகாரில் பரோனியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. ஆனால் அதே ஆலைக்கு அதே மோடி கடந்த 2017ம் ஆண்டு அக்டோபார் மாதம் அடிக்கல் நாட்டியிருந்தார்.

இந்த மாதம் மார்ச் 3ம் தேதி, .பி. அமேதியில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இராணுவத் துப்பாக்கிகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி. இது கலாஷ்னிகோவ் ஏகே-203 என்ற துப்பாக்கிகளைத் தயாரிக்கும் நிறுவனம்.

ஆனால் மத்திய அரசின் பத்திரிகை அறிக்கையின்படி, இதே நிறுவனம் கடந்த 2007 டிசம்பர் மாதமே அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2010 முதல் ஆயுதத் தயாரிப்புகளைத் தொடங்கி விட்டது. துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று அது தயாரித்து வருகின்றது. இப்படி பத்து வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட நிறுவனத்தை மீண்டும் துவங்கி நாட்டுக்கு அரிய சேவையைச் செய்திருக்கிறார் மோடி.

அதே போன்று இன்னொரு அவலமும் நடந்திருக்கிறது. கடந்த 30 தினங்களில் மோடி அறிவித்த 157 திட்டங்களில் 140க்கும் அதிகமான திட்டங்கள் மிகச் சிறிய அளவிலான திட்டங்கள் என்று என்டிடிவி அம்பலப்படுத்துகிறது.

அதாவது, நாட்டின் உயர்ந்த பதவியிலுள்ள ஒருவர் துவக்க வேண்டிய திட்டங்கள் அல்ல அவை. ரயில்வே பாதைகள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றின் சில பகுதிகளின் சிறு சிறு விரிவாக்கப் பணிகளை அத்தனைப் பணிகளையும் விட்டு விட்டு மோடி துவக்கி வைக்கிறார்.

இதற்கு சில உதாரணங்களைச் சொன்னால் பளிச்சென்று புரியும். கடந்த மாதம் பிப்ரவரி 10ம் தேதி, சென்னை மெட்ரோவின் கடைசிக் கட்ட 10 கிமீ நீளம் கொண்ட ஏஜி-டிஎம்ஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையுள்ள பாதையை மோடி திருப்பூரிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதேபோன்று விக்ரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை நால்வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். 36 கிமீ நீளம் கொண்ட கரைப்பேட்டை-வாலாஜாபேட்டை ஆறுவழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

அதே பிப்ரவரி 10ம் தேதி, திருப்பூரிலிருந்து கர்நாடகாவுக்குப் பறந்த மோடி, அங்கே 18 கிமீ நீளம் கொண்ட சிக்ஜாஜூர்-மாயாகொண்டா இரட்டிப்பாக்கப்பட்ட இருப்புப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நகராட்சி அளவிலுள்ள திட்டங்களையும் மாபெரும் பாரத நாட்டின் பிரதமர் துவக்கி வைத்த அற்புதமும் இந்தத் திருநாட்டில் நடந்தேறியது. மேற்கு .பி.யில், காஸியாபாத் நகராட்சிக்குட்பட்ட பசு பாதுகாப்பு மையம், கழிவுநீர் கால்வாய் திட்டம், வீடுகள் வழங்கும் திட்டம் போன்ற சிறு சிறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி.

ஆனால் கணிசமான எண்ணிக்கையிலான திட்டங்களைத் துவக்கி வைக்க அந்த அந்த இடங்களுக்குச் செல்ல மோடிக்கு நேரம் இல்லாததால் சுமார் 17 பெரிய திட்டங்களை வீடியொ கான்ஃபரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
இன்னொரு கொடுமையும் நடந்துகொண்டிருக்கிறது. மோடி அரசுத் திட்டங்களைத் துவக்கி வைக்கச் செல்லும் இடங்களிலெல்லாம் பாஜக அரசியல் விழாக்களிலும் கலந்துகொள்கிறார். அதாவது மக்களின் வரிப் பணத்தில், அரசின் திட்டங்களை நிறைவேற்றும் சாக்கில், பாஜகவுக்கான பிரச்சாரமும் கனகச்சிதமாக நடக்கிறது.

சமீபத்தில் அவர் சென்ற 28 இடங்களில் அரசுத் திட்டங்களைத் துவக்கி வைத்த மோடி, அவற்றில் 5 இடங்களில் பாஜகவின் பேரணிகளிலும், மாநாடுகளிலும் கலந்துகொண்டார். உதாரணத்திற்கு, கடந்த மாதம் பிப்ரவரி 3ம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் லே என்ற இடத்தில் அரசுத் திட்டங்களைத் துவக்கி வைத்த மோடி, அதே தினம் அருகிலுள்ள ஜம்முவில் பாஜகவின் பேரணியில் கலந்துகொள்கிறார்.

அதேபோன்று கடந்த ஜனவரியில் மதுரையில் அரசு விழாவில் கலந்துகொண்ட அவர், அதே தினம் மதுரையில் நடந்த பாஜக பேரணியில் கலந்துகொள்கிறார். இப்படி இரண்டையும் கலந்து இவர் செய்யும் பிரயாணங்களுக்கு யார் பணம் செலவழிக்கிறார்கள் என்று என்டிடிவி கேள்வி எழுப்புகிறது.

இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இந்த அரசு விழாக்களையும் மோடி தன் அரசியல் எதிரிகளைத் தாக்கும் மேடையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

மே 23ம் தேதி இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் விடிவு கிடைக்கவில்லையென்றால் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணுவதே கொடுமையாக இருக்கிறது.

MSAH

புதிய விடியல்  மார்ச் 16-31, 2019