Showing posts with label நூல்கள். Show all posts
Showing posts with label நூல்கள். Show all posts

Saturday, 19 January 2019

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் முஸ்தஃபா இல்லை... இல்லை... (துரோகி)யான கதை!

இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் என்னை உடனடியாக படிக்கத் தூண்டிய புத்தகம்தான் "துரோகி".

காரணம்,  அதனுடைய தலைப்பு என்னை கவர்ந்தது. பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இரண்டே நாளில் வாசித்து முடித்தேன் அந்தப் புத்தகத்தை.

மிக அற்புதமான அனுபவக் கட்டுரையை தந்துள்ளார் 'டெர்ரி ஹொல்ட்புரூக்ஸ்'. தமிழில் அதனை மிக எளிமையாக தந்திருக்கிறார் M.S.அப்துல் ஹமீது அவர்கள்.

கட்டுரையாளர் ஓர் அமெரிக்க இராணுவ வீரர். எதிர்பாராத விதமாக கியூபாவிலுள்ள குவாண்டனாமோ சிறைச்சாலையில் அவர் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார். அங்கு, தான் கண்ட அனுபவத்தையும், அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் விவரிக்கும் அற்புதமான பயணம், இறுதியில் இஸ்லாமில் முடிகிறது.

அவரை இஸ்லாமின் பக்கம் இழுத்த காரணிகளில் மிக முக்கியமானது,
முஸ்லிம்கள்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அவர் கொண்டிருந்த தவறான எண்ணங்களுக்கு, சரியான விளக்கத்தை சிறைக் கைதிகளிடம் காண்பது மட்டுமல்லாமல் நேரடியாக பார்க்கிறார், உணர்கிறார்.

நூலில், குவாண்டனாமோ சிறையையும் அங்கு கைதிகளுக்கு தரப்படும் தண்டனை பற்றிய விவரிப்பும் அதிர்ச்சி ரகம்.

அமெரிக்க மக்களின் ஒட்டுமொத்த சிந்தனைத் தொகுப்பையும் கட்டுரையாளர் மிக அழகாக விளக்குகிறார்.

எழுத்துநடை மிக எளிதாக வேகமாக வாசிக்க தூண்டுகிறது. மொழிபெயர்ப்பு மிக அற்புதம். எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.

கட்டுரையாளர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் கைதிகளிடம் பேசியதாலே  துரோகியாக்கபட்டார் என்பது சுவாரஸ்யமானது. படித்துப் பாருங்கள். நல்ல அனுபவம்.

மொழிபெயர்ப்பாளர் சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதிகை வசந்தன் (நெல்லை நியாஸ்)

Saturday, 17 November 2018

இஹ்ஸான் ஜாஃப்ரியை படுகொலை செய்த அன்று நடந்தது என்ன?


குஜராத் இனப்படுகொலை 2002
பிப்ரவரி 28 2002 அஹமதாபாத்
குல்பர்க் சொஸைட்டி

காலை 10.30 மணியளவில் வார்டு எண் 19ன் காங்கிரஸ் உறுப்பினர் அம்பலால் நாடியா, வார்டு எண் 20ன் உறுப்பினர் கன்னுலால் சோலங்கி ஆகியோருடன் இஹ்ஸான் ஜாஃப்ரியைக் காண வந்தார் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே. போலீஸ் படையை உடனே அனுப்பி வைப்பதாகவும், அவர் முழுவதுமாகப் பாதுகாக்கப்படுவார் என்றும் அவர்கள் இஹ்ஸான் ஜாஃப்ரியிடம் உறுதியளித்தனர்.

காவல்துறை ஆணையர் சென்ற 5 நிமிடத்தில், அதாவது காலை 10.35 மணியளவில், குல்பர்க் சொஸைட்டிக்கு கொஞ்சம் வெளியே இருந்த ஸாஹிர் பேக்கரியும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பகல் 11.15-11.30 மணியளவில் குல்பர்க் சொஸைட்டியில் கல்வீச்சு தொடங்கியது. 45 நிமிடங்கள் கழித்து, அதாவது பகல் 12.15-12.30 மணியளவில், குல்பர்க் சொஸைட்டியின் பின்பக்கம் உள்ள கட்டடங்களிலிருந்தும், பங்களாக்களிலிருத்தும் கற்கள், அமில பல்புகள், கண்ணாடிக் குப்பிகள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவை குல்பர்க் சொஸைட்டி மீது வீசப்பட்டன.

பகல் மணி 12.30க்கும்.12.45க்கும் இடைப்பட்ட வேளையில், ஒரு முஸ்லிமல்லாதவருக்குச் சொந்தமான பங்களாவின் மொட்டை மாடியிலிருந்து கற்களும், பெரும் பாறாங்கற்களும் எறியப்பட்டன. குல்பர்க் சொஸைட்டியின் குடியிருப்பு வளாகங்கள் இதனால் பெருத்த சேதமடைந்தன. இந்த வளாகங்கள் சேதமடையாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் ஒருவேளை தங்களைக் காத்திருக்கலாம்.

பெரும் பெரும் கற்கள், அமில பல்புகள், எரியும் துணிப் பந்துகள் ஆகியவை மதியம் 1-1.15 மணி வரை வீசப்பட்டுக் கொண்டே இருந்தன. மதியம் ஒரு மணியளவில், அந்த சொஸைட்டியில் வசிக்கும் யூசுஃப் என்பவர் வன்முறையாளர்களிடம் பிடிபட்டார். கயவர்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டி, தீ வைத்துக் கொளுத்தினர்.

குடியிருப்பில் வசிப்பவர்களிடையே பீதி அதிகமானது. இந்தச் சமயத்தில் இஹ்ஸான் ஜாஃப்ரியின் வீட்டில் 80 நபர்கள் இருந்தனர்.

பிற்பகல் 2.30-2.45 மணியளவில், "குசி ஜாவோ"(உள்ளே செல்லுங்கள்) என்ற கத்தல்களுக்கிடையே, திடீரென்று சொஸைட்டியின்பின்பக்கம், இருப்புப் பாதைக்கு அருகிலுள்ள கதவு உடைக்கப்பட்டது.

பிற்பகல் மணி 2.30க்கும் 2.45க்குமிடையில், வன்முறைக் கும்பலின் குறியான இஹ்சான் ஜாஃப்ரி அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டார். அவர் மிகவும் சிரத்தை  எடுத்துக் கட்டிய அவரது வீட்டின் முன்பு, 45 நிமிடங்களாக, அவர் மிகக் கொடுமையாக துண்டு துண்டாக வெட்டப்பட்டார். இறுதியில் அவரது தலையும் வெட்டப்பட்டது.

அவர் கொல்லப்படுவதற்கு முன்பு ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்வப்பட்டார் "வந்தே மாதரம் ", "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லுமாறு வலியுறுத்தப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவரது விரல்களைத் துண்டு துண்டாக வெட்டிய பின், அந்தப் பகுதி முழுவதும் அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டும் வந்தார். அடுத்ததாக அவரது கரங்களும், கால்களும் வெட்டப்பட்டன.

அதன்பின், கூர்மையான ஒரு கருவியை அவரது கழுத்தில் மாட்டி, இழுத்துச் சென்றது அந்தக் கொலைகாரக் கும்பல். பின்னர், அவர் தீயில் வீசப்பட்டார்.

பொதுச் சேவையிலேயே தன் வாழ் அர்ப்பணித்த ஒரு மனிதருக்கு நேர்ந்த கொடூர முடிவு இது. இந்தத் தாக்குதலில், இஹ்சான் ஜாஃப்ரியுடன் அவரது மூன்று சகோதரர்களும், இரண்டு மருமகன்களும் கொல்லப்பட்டனர்.

-oOo-

சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்த முஸ்லிம்கள் பாதுகாப்புக்காக சொஸைட்டிக்கு வந்தனர். குல்பர்க் சொஸைட்டிக்கு பின்பக்கம் ஒரு இருப்புப்பாதை செல்கிறது. அதற்கு அப்புறமுள்ள பணியாளர்கள் குடியிருப்புகளிலிருந்து 5000-6000 பேர் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் வந்தது. ஐக்ரூப் சிங் ராஜ்புட் என்பவன்தான் இந்தக் கும்பலுக்குத் தலைமையேற்று வந்தான்.

பாஜக அஹமதாபாத் முனிசிபாலிட்டியில் பெரும்பான்மை பலத்துடன் இருந்தபொழுது, இவன் துணை மேயராக இருந்தான். இந்தக் கும்பலிடமிருந்தும் கல்லெறிதல் தொடங்கியது.

ஆக, குல்பர்க் சொஸைட்டியின் அனைத்துத் திசைகளிலிருந்தும் கல்மழை பொழிந்தது.

இதற்கிடையில் ஜாஃப்ரி 200 தடவைகளுக்கு மேல் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். காவல்துறை ஆணையர் பாண்டே, காந்தி நகரிலுள்ள அமர்சிங் சௌத்ரி, நரேஷ் ராவல், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் என்று பலரையும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஒரு நேரடி சாட்சி சொல்கிறார்: “பிற்பகல் 2.30 மணியளவில் கதவருகில் கைகளைக் கூப்பியபடி நின்று கொண்டிருந்த ஜாஃப்ரி ஸாஹிபை 4 பேர் வெளியே இழுத்து வந்தனர். அந்த நால்வர் பெயர்கள் வருமாறு: சமன்புராவில் கேபிள் ஆப்பரேட்டராக இருக்கும் நாராயன் கப்ரா,
“பாயாஜி" ரமேஷ் சோட்டி, ராஜஸ்தான் மளிகைக் கடை உரிமையாளரின் மகன் மனிஷ் ஜெய்ன், சம்பாபென் என்பவரின் மகன் கிருஷ்ணா.(காவல்துறையின் புலன் விசாரணைகளின்போது நேரடி சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களிலும் இந்த நால்வரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.)

“ஜாஃப்ரி ஸாஹிபை வெளியே இழுத்து வரும்பொழுதே ஒரு வாளால் அவரை மூன்று துண்டுகளாக வெட்டினர். ஜாஃப்ரி ஸாஹிபை தீ வைத்துக் கொளுத்திய பிறகு, அந்த வன்முறைக் கும்பல் டயர்களை எரிக்கத் தொடங்கியது. அந்தக் கும்பல் ஜாஃப்ரி ஸாஹிப் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் உடைத்து, எல்லா புறங்களிலும் தீ வைத்தது. உள்ளே 35 குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் அனைத்தும் கைகளைக் கூப்பியபடி கெஞ்சிக் கூத்தாடின. ஆனால் அக்குழந்தைகளால் வெளியே வர முடியாது. பிற்பகல் 3.15 மணியளவில் ஜாஃப்ரியின் வீடு முழுவதும் புகைமண்டலமாக நிரம்பியது. பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த அனைவரும் மூச்சு விட முடியாமல் திணறினர்.

வெளியே வந்தால் பாதுகாப்பு தருவோம் என்று சொல்லப்பட்டதன் பேரில் சில பெண்கள் வெளியே வந்தனர். இந்தக் குழுமத்தின் முன் வாக்குமூலம் அளித்த நேரடி சாட்சிகள், கையில் வாளுடன் வந்த தினேஷ் பிரபுதாஸ் ஷர்மா என்பவன் யூஸுஃப் என்பவரைக் கொல்வதை நேரில் கண்டனர்.

ஒரு நேரடி சாட்சியின் மகளின் ஆடைகளை லாதியா என்பவன் கிழித்தெறிந்தான். பின்னர் அந்தப் பெண்ணைக் கற்பழித்து கொலை செய்தான். ஏற்கனவே தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட லாலா மோகன்சிங் தர்பார் என்பவன் வேறொரு பெண்ணைக் கொன்றான்.

மாலை 4.45 மணியளவில், ஒரு சிறிய தோட்டத்தில் சிறு அறையில் ஒளிந்திருந்த ஒரு நேரடி சட்சிக்கு "ஓடு... ஓடு..." என்ற சப்தங்கள் கேட்டன. போலீஸ் வத்திருக்கும் என்று அந்த நேரடி சாட்சி யூகித்துக் கொண்டார்.

மூச்சு முட்டலில் திணறிக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றுமாறு இந்த நேரடி சாட்சி காவல்துறை ஆணையர் டான்டனிடம் கோனார். ஆனால் அவர் அவர்களைக் காப்பாற்ற தயங்கினார்.

இந்தத் தாக்குதல் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஜாஃப்ரியின் வீட்டிலிருந்த தொட்டிகளும், தோட்டத்திலும், அடுத்த வீடுகளிலுமிருந்த தொட்டிகளும் முதலில் காலி செய்யப்பட்டு சொட்டு தண்ணீர் இல்லாமல் ஆக்கினார்கள் கயவர்கள். இதனால் தீயை அணைக்க முடியாமல் ஆக்கினார்கள்.

தீ படு வேகமாகப் பரவியது. ஆனால் அந்தக் காவல்துறை துணை ஆணையாளர் டான்டன் உயிர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.

போலீஸ் வந்து அரை மணி நேரம் கழித்து, அதாவது மாலை 5.15 மணியளவில், ஜாஃப்ரியின் விட்டிலிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்தன. தப்பிக்க முடியாமல் உள்ளேயே சிக்கியிருந்த அனைவரும் இறந்தனர். பெண்களும், குழந்தைகளும் எரிந்து சாம்பலாயினர் குர்பர்க் சொஸைட்டியில் நடந்த படுகொலைகளுக்கு முழு உடந்தையாக இருந்த குஜராத் அரசின், அதன் காவல்துறையின் பாதகத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

முதல்வர் (மோடி), உள்துறை அமைச்சர், காவல்துறை ஆணையர் என்று அனைவரையும் ஜாஃப்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இந்தத் தாக்குதல் 7 மணி நேரம் நீடித்தது. 5 மணி நேரம் மிகக் கொடூரமான கொலைவெறி தாண்டவமாடியது.

சமன்புராவிலுள்ள குல்பர்க் சொஸைட்டி அமைதாபாத் நகரில் இதயப் பகுதியில் இருக்கிறது. மாநிலத்தில் வேறு எங்கோ தூர தொலைவில் இது இல்லை.

(“மனித இனத்திற்கெதிரான குற்றம்” நூலிலிருந்து...)

Thursday, 9 November 2017

எனது பார்வையில் ‘துரோகி’ - நூருத்தீன்

புதிய விடியல்  ஆகஸ்ட் 16-31, 2017 இதழில் சகோதரர் நூருத்தீன் அவர்கள் எழுதிய நூலாய்வுரை!


அக்கிரமமான அந்தச் சிறைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை?

சிறைச்சாலை அமைந்துள்ள நிலம் பக்கத்து நாட்டுக்காரனுக்குச் சொந்தமானது. உலக மகா தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி அங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்களோ குற்றத்திற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள். உள்நாட்டுச் சிறைகளில் அவர்களை அடைத்தால், மனித உரிமை, மண்ணாங்கட்டி என்று யாராவது தேவையில்லாத கூக்குரல் எழுப்புவான்; மனித உரிமைச் சங்கம், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்று வேலை மெனக்கெட்டு அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுப்பார்கள். பிறகு மிருகத்தைப் போல் கைதிகளை அடித்துச் சாத்தி துவைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவையெல்லாம் அனாவசிய தடங்கல்கள்... என்று அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட அநீதக் காரணங்கள். அதனால் கியூபா தீவில், குவாண்டனாமோ பகுதியில் அமெரிக்கா தனக்கான ஒரு சிறைச்சாலையை அமைத்துக் கொண்டது. ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்டவர்களால் அக் கொட்டடி நிரப்பப்பட்டது. 9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுள் மிகப் பெரும் வேதனை இது.

அங்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி சி ஹோல்ட்புரூக்ஸ். எத்தனையோ நூறு பேரில் அவர் ஒருவர். ஆனால் அவர் நூற்றில் ஒருவர் ஆனதுதான் விந்தை. இராணுவத்தினரை அங்கு அனுப்பும் முன் நியூயார்க் நகரில் அவர்களது மூளையை வழக்கம்போல் சலவை செய்யும் டிடர்ஜென்ட் ஹோல்ட்புரூக்ஸை சரியாக வெளுக்காமல் போனது. அங்கு ஆரம்பித்ததுதான் அவரது முதல் திசை மாறல். சரியான திசைக்கான மாறல்.

காட்டுமிராண்டிகளையும் மனிதகுல விரோதிகளையும் உலக மகா தீவிரவாதிகளையும் சமாளித்து, உரிய முறையில் கவனித்து நல்ல பாடம் புகட்டப்போகிறோம், சேவையாற்றி அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் குவாண்டனாமோ மண்ணில் வந்து இறங்கிய ஹோல்ட்புரூக்ஸுக்கு முதல் நொடியிலேயே அதிர்ச்சி. அந்நாட்டு மண், தட்ப வெப்பம், அபாய ஜந்துக்கள் புழங்கும் சூழலில் அமைந்துள்ள சிறை என்று திரைப்படக் காட்சி போல் புழுதி பறக்க விரிகிறது அவரது அனுபவம். கொடுங்கோல் சிறை அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் நிகழும் உலக மகா அயோக்கியத்தனம், அவர் கற்பனை செய்திருந்ததற்கு மாறாக ஒழுக்கத்தையும் இணக்கத்தையும் இறைவழிபாட்டையும் மேற்கொண்டுள்ள முஸ்லிம் கைதிகள் என்று அவர் கண்டதெல்லாம் பேரதிர்ச்சி.

கைதிகளின் உடைமையான குர்ஆன் கழிவறையில் வீசப்படுவது, விசாரணை என்ற பெயரில் பெண் காவலரின் மாதவிடாய் இரத்தத்தை முஸ்லிம் ஆண் கைதியின் முகத்தில் தேய்ப்பது போன்ற செயல்கள் அவருக்குள் ஏற்படுத்திய விளைவுகளைக் குறிப்பிட பேரதிர்ச்சி என்ற சொல் போதாது. ஆனால் அத்தகு கடும் சூழ்நிலையிலும் மனிதாபிமானத்திற்கு சற்றும் தொடர்பற்ற சித்திரவதைகளுக்கு நடுவிலும் அந்த முஸ்லிம் கைதிகள் கட்டிக் காத்த ஒழுங்குமுறைதான் ஹோல்ட்புரூக்ஸினுள் பல வினாக்களை எழுப்பியது. ஆவலைத் தூண்டியது. தேடலுக்கு வித்திட்டது. யார் இவர்கள்? அதென்ன அரபு மொழி? அப்படி என்னதான் சொல்கிறது இவர்களின் இஸ்லாம்?

அவ்வினாக்களுக்கான விடைகள் அச்சிறைக் கம்பிகளுக்குப் பின்னிருந்து கிடைக்கின்றன. தெளிவு பிறக்கிறது. அமெரிக்க அதிகாரிகளிடம் பட்டம் கிடைக்கிறது: ‘துரோகி’!

இஸ்லாத்தின் மீது ஆகப் பெரிய களங்கத்தைச் சுமத்தி அதை வேரறுக்க நினைக்கும் வல்லரசின் திட்டத்திற்கு எதிர்மாறாய் அவர்களின் படைவீரர்களுள் ஒருவரான அவரிடம் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் அவரது வாழ்வியல் நெறியானது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த முஸ்லிம் கைதிகள் அவரிடம் மதத்தைத் திணிக்கவில்லை. இஸ்லாத்தை வற்புறுத்தவில்லை; முஸ்லிமாகிவிடு என்று அறிவுறத்தவும் இல்லை என்பதுதான் இதிலுள்ள அற்புதம். தாங்கள் கற்றறிந்த இஸ்லாத்தைக் கொடுமையான அச்சூழலிலும் அக்கைதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எவ்வித சமரசமும் புரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்!

திரைப்படம் போல் விறுவிறுப்பான நிகழ்வுகள், காட்சி விவரிப்புகள் என்று உள்ளத்தைத் தொடும் அருமையான அனுபவம் இந்நூல். தமிழ் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் முக்கியப் பணி ஆற்றியுள்ளது இலக்கியச்சோலை டீம். நிறைய உழைத்துள்ளார் சகோதரர் M.S. அப்துல் ஹமீது. பாராட்டுகளும், நன்றியும் அவர்களுக்கு உரித்தாவன. ஆனால் அச்சுப் பிழைகள் ஒரு குறை. அவற்றை திருத்தி சீரான முறையில் மறுபதிப்பை அவர்கள் வெளியிட வேண்டும் என்பது என் பேரவா.

நூருத்தீன்

Thursday, 9 February 2017

சிறைக் கைதி Vs சிறைக் காவலர்: ஒப்புதல் வாக்குமூலங்கள் - நியூஸ் 7 டிவி செய்தியாளர் குதுப்தீன் (முகநூல் பதிவு)



எதிர்ப்பாலினத்தை அளவு கடந்து நேசிக்கும்போது, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை விட அதிக தாக்கங்களை ஏற்படுத்தும் வலிமை வாசிப்புக்கு உண்டு.

காதலிப்பதை விட வாசிக்கும்போது கிடைக்கும் சுகம் அலாதியானது.
ஒரே சமயத்தில் இருமை ஆன்மாக்களை நேசிக்கும் வாய்ப்பு அரிய ஆச்சரியம்தான்! (ஆண்: மனைவி / தாய் # பெண்: கணவன் / மாமியார்)
அதே போன்றதுதான் இருமை ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பும்...
ஒரே நேரத்தில் மால்கம்-மையும், மார்ட்டின் லூதர் கிங்-கையும் கற்பது...
காந்தியை அறியும்போது, ஜின்னாவை படிப்பது...
கருணாநிதியை தெரிந்து கொள்ளும்போது, எம்.ஜி.ஆர்.ரை வாசிப்பது...
இப்படியான சுகானுபவங்களைப் போல, கடந்த ஒரு மாதமாக சிறைக் கைதி, சிறைக் காவலருடன் வாழ்ந்தேன்.
செக்கோஸ்லோவாக்கியாவின் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஜூலியஸ் ஃபூசிக், ஒரு கைதியாக "தூக்கிலிடுபவரின் குறிப்புகள்" நூல் வழியாக சிறைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ், கியூபா தீவான குவாண்டானமோ அதி பயங்கரச் சிறைக்கு நம்மை அதிகாரியாக்கி கழிவிரக்கம் கொள்ளும் 'துரோகி'யாக்குகிறார்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கை 1942-ம் ஆண்டில் நிகழ்கிறது. ஹிட்லரின் சர்வாதிகாரத்துக்கு பலியான கம்யூனிஸ ஆன்மாக்களில் ஃபூசிக்கும் ஒருவர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ள குவாண்டானமோ கொடுஞ்சிறையில், 2003-ம் ஆண்டு ஹோல்ட்புரூக்ஸ் சிறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
ஃபூசிக்-கும் ஹோல்ட்புரூக்சும் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை வாழ்க்கையை தவமாய் வாழ்கின்றனர்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கையில் இருந்து 8 தசாப்தங்களை இந்த பூமி கடந்திருந்தாலும் சர்வாதிகாரம் - ஹிட்லரிசம் வெவ்வேறு வடிவங்களில் நிலை கொண்டுள்ளதை குவாண்டானமோ-வில் காட்சிப்படுத்துகிறார் ஹோல்ட்புரூக்ஸ்.
இரண்டு நூல்களிலும் பல்வேறு காட்சிகள் ஒரே மாதிரியாக இருப்பது கொடுங்கோலர்களின் காலம் மாறவில்லை என்பதற்கு சாட்சி. அதே போல கருணையாளர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியும் கூட...
# சிறையில் இருப்பதற்கான சட்ட ரீதியான காரணம் கைதிக்கு தெரியாது.
# சிறையில் அடைக்கப்பட்ட கணவன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா - மனைவிக்கு தெரியாது.
# சுய நினைவில்லாதவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முட்டாள்தனம்.
# கடும் சிறைக் கண்காணிப்புக்கிடையில் கண்களால் தகவல்களைப் பறிமாறிக் கொள்வது.
# விசாரணை என்ற பெயரில் விவரிக்க முடியாத சித்ரவதை
ஹோல்ட்புரூக்ஸ் ஓர் இலக்கியவாதி இல்லை என்பதால் ‘துரோகி’ விக்ரமன் படம் போல...
ஃபூசிக் - ஒரு பாலா, ஒரு மிஷ்கின், ஒரு வெற்றிமாறனின் சரியான கலவை....
தன்னை விசாரணை செய்வதைக் குறிக்க அதனை கவித்துவமாக 'சினிமா' என்றே அழைக்கிறார் ஃபூசிக்.
இலட்சியவாத சமூகம் அமைய விரும்பும் போராளிகள் பாடம் பெற வேண்டிய அம்சங்கள் ஃபூசிக்கின் எழுத்துகளில் உள்ளது.
அவரது மனைவி குஸ்தினா பற்றிய பார்வையும் நேசமும் 'காதல் இலக்கணம்' எழுதுகிறது. போராட்ட வாழ்வை தழுவும் தம்பதிகளுக்கு ஆறுதலும் உத்வேகமும் தருகிறது ஃபூசிக்-குஸ்தினா நேசம்.
சிறைக்குள்ளேயே - எதிரிகளின் பதுங்கு குழிக்குள்ளேயே இயக்கத்தை கட்டியமைக்கும் வல்லமையை படித்த போது, "முன்னேறிச் செல்ல விரும்புபவனுக்கு வாளின் கூர்முனைதான் உள்ளதென்றால், அதிலாவது ஏறி முன்னேறுவான்" என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.
அந்தக் கொடுஞ்சிறையிலும், ஃபூசிக் மற்றும் கம்யூனிஸ தோழர்களுக்கு சிறை அதிகாரிகள் உதவும் நெகிழ்ச்சியை, ஹோல்ட்புரூக்ஸ் பார்வையிலிருந்து குவாண்டானமோ-வில் புரிந்து கொள்ளலாம்.
அறச்சீற்றம் கொண்டு போராடத் துணியும் புரட்சியாளர்களுக்கு ஃபூசிக்-கின் தியாகமும் ஹோல்ட்புரூக்ஸின் நேர்மையும் ஆதர்சம்!
#தோழமைக்கு_கிட்டாத_வாய்ப்பு

காஜா குதுப்தீன்

Thursday, 12 January 2017

பர்வின் பானு அனஸ் அவர்களின் “துரோகி” அனுபவம்! (முகநூல் பதிவு)



நீண்ட காலங்களுக்கு பிறகு வழமையான புதியதொரு அனுபவம்.

காலையில் எடுத்த புத்தகம் கையை விட்டு இறங்க மறுத்தது. முடித்துவிட்ட பின் இனந்தெரியாத சோகமும் கையறுநிலையும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான மனநிலை ஒட்டிக்கொண்டது.

பொதுவாக மொழிபெயர்க்கப்படும் புத்தகங்ஙகளின் உயிர்ப்பு தன்மை நீர்த்துப் போகாமல் இருப்பது ஆசிரியரின் திறனில் உள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தன் பணியை நிறைவாக செய்துள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்ப்ருக்ஸுடன் நாமும் பயணம் செய்து குவாண்டனாமோ நிகழ்வுகளுக்கு சாட்சியாகியது போன்ற உணர்வு எழுவது தவிர்க்க முடியாதது.

இறுதியில் சிலருக்கு கிடைத்த விடியல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பிய "முஸ்தஃபா" போன்றே நம் மனமும் ஏங்குகின்றது.

நன்றி : பர்வின் பானு அனஸ்

அநியாயமாக குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டு அப்பாவி என்று விடுவிக்கப்பட்ட ‘ஜெனரல்’ அஹமத் அர்ராஷிதி “துரோகி” நூலுக்கு எழுதிய முன்னுரை!

‘ஜெனரல்’ அஹமத் அர்ராஷிதி



அழகிய மணம் கொண்ட, வண்ணமயமான மரத்தை இஸ்லாம் மார்க்கத்திற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஏனெனில், ஒரு மரம் வளர்ந்தால் அது மக்களுக்குப் பயன் தரக்கூடிய நிழல், பழம், மனம் கவரும் மணங்கள், கண் கவரும் வண்ணங்கள் போன்ற பல பலன்களைத் தருகிறது.

இப்பொழுது கற்பனை செய்து பாருங்கள். இந்த மரம் ஒவ்வொரு முறை வளரும்பொழுதும் நசுக்கப்பட்டு, வேரோடு பிடுங்கப்பட்டால், அத்தோடு மக்களிடம் இந்த மரம் பெரும் தீங்கிழைக்கும் என்றும், கொடிய விஷமுள்ளது என்றும், இது வளர்ந்தால் அதன் விஷத்தன்மையால் பிறரை அழித்து விடும் என்றும், ஆதலால் இம்மரம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சொல்லப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

என்ன நடக்கும்? கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அந்த மரத்தை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். அதனை வெறுக்கத் தொடங்குவார்கள். அதன் அழகையும், அது தரும் பலனையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஒரு முறை அம்மரத்தை விட்டு விலகி விட்டார்களானால் இனி அந்த மரத்தின் பக்கமோ, அதன் அழகின் பக்கமோ அவர்கள் திரும்பவே மாட்டார்கள். ஆனால் ஹோல்ட்புரூக்ஸ் போன்ற ஒரு படைவீரர் இந்த மரத்தைப் பற்றி கேள்விப்படுகிறார். மரங்களோ, தாவரங்களோ ஒருபொழுதும் வளராத ஒரு இடத்தில் வைத்து, இடங்களிலெல்லாம் மிக மோசமான ஒரு இடத்தில் வைத்து அம்மரத்தின் பலன்களை அவர் கேள்விப்படுகிறார்.

ஆம்! அதுதான் குவாண்டனாமோ!

குவாண்டனாமோ என்ற அந்த இடத்தில் மக்களிடையே பகைமையும், வெறுப்புமே குடிகொண்டிருந்தன.

குவாண்டனாமோவில் சிறைவாசிகளுக்கு அணிவிக்கப்படும் ஆரஞ்சு ஆடைகளும், அந்தச் சிறைவாசிகளை சித்திரவதைப்படுத்துவதற்காக வளர்க்கப்படும் கொடிய விலங்குகளும் ஹோல்ட்புரூக்ஸுக்கு சிறைவாசிகளை அணுகுவதற்கு தடையாக இருந்திடவில்லை. அவர் அவர்களைத் தயங்காமல் அணுகி இஸ்லாம் பற்றிப் பேசினார். அவரது அணுகுமுறைகளிலும், கேள்விகளிலும் அவர் மிகுந்த தைரியசாலியாகத் திகழ்ந்தார்.

அவரது சுதந்திரமான, வெளிப்படையான சிந்தனை கண்டு நான் வியப்படைந்திருக்கிறேன். இஸ்லாம் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளாலும், பாரபட்சங்களாலும் அவரது சிந்தனையில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை.

சிறைவாசிகளிடம் காட்டப்படும் அதிகாரத்தின் மேலுள்ள மோகமும், திமிரும் அவரை என்றுமே மிகைத்ததில்லை. மற்ற படைவீரர்கள் அந்த அதிகார மோகத்தில் வீழ்ந்து கிடந்தனர். ஆனால் அவரோ சிறைவாசிகள் மேல் அவதூறாக வீசப்படும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்தார். ஏனெனில் அவர் மற்ற படைவீரர்கள் காணாததைக் கண்டார். மற்ற படைவீரர்கள் கண்டுபிடிக்காததை கண்டுபிடித்தார்.

அத்தோடு அவர் தனது ஆய்வை, தனது தேடலை பிடிவாதமாக தொடர்ந்தார். அந்த மரத்தை அவர் நேசித்ததே அதற்குக் காரணம். அந்த மரம் ஏற்படுத்திய நல்ல பல விளைவுகளை அவர் அந்தச் சிறைவாசிகளிடம் கண்டார். அவர் அந்த மரத்தைத் தனதாக்க விரும்பினார். அதேபோன்று அந்த மரம் தன்னை உள்வாங்க வேண்டும் என்றும் விரும்பினார்.

பாவம் செய்த ஒரு பணியாள் மன்னிப்பதற்குத் தயாராகக் காத்திருக்கும் அன்பு நிறைந்த எஜமானனைக் கண்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வானோ அதே மகிழ்ச்சியை அவர் அடைந்தார்.

அஹமத் அர்ராஷிதி (முன்னாள் சிறைவாசி 590)

எல்லையில் ராணுவ வீரன் - நியூஸ் 7 டிவி செய்தியாளர் ஹாஜா குதுப்தீன் (முகநூல் பதிவு)



"படை வீரர்களை மூளைச் சலவை செய்து கேள்வி கேட்காத ஒரு நிலைக்கு கொண்டு வரும் தந்திரம்தான் அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை பயிற்சிகளாகும்.

இராணுவத்தில் எதைப் பற்றியும் யோசிக்காத, கேள்வி கேட்காத படை வீரர்கள்தான் ஒரு பணியை முடிக்க பெரிதும் உதவியாக இருப்பார்கள்.

படைவீரர்கள் என்பவர்கள் மேலதிகாரிகளுக்கு கருவிகள் போன்றவர்கள். அவர்களின் இலட்சியத்தை அடைவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள்."

- டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்,

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க ராணுவ வீரன், 'துரோகி' நூலில்...

நன்றி : ஹாஜா குதுப்தீன் (நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர்)

செய்யத் காலிதின் பார்வையில் “துரோகி”! (முகநூல் பதிவு)




குவாண்டனாமோ - மனித உயிர்கள் உடலாலும், மனதாலும் சித்ரவதைகளை மட்டுமே அனுபவிக்க தயார்படுத்தப்பட்ட கொடுஞ்சிறை.

மனிதன் மனிதனாக வாழ முடியாத, சித்ரவதைகளை மட்டுமே அனுபவிக்க பணிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், இவர்கள் யாரும் மனிதர்களே அல்ல என்று தன் உயர் அதிகாரிகளால் போதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்னும் அமெரிக்க கிருத்தவ இராணுவ வீரனின் தேடல் இறைவனின் அருட்கொடையாம் இஸ்லாத்தை பரிசாக பெறச் செய்கிறது.

விறுவிறுப்பாக பயணிக்கிறது துரோகி. வாசிக்க துவங்கிய எவரும் 204 பக்கங்களை முடிக்காமல் செல்ல முடியாத ஈர்ப்பு புத்தகத்தின் பக்கங்களில் உண்மை புதைந்து கிடப்பதை காணலாம்.

'தேடுங்கள் கிடைக்கப்படும்' என்ற பைபிளின் வசனம் பொய்யாகுமா???.

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் தன் தேடலின் வெகுமதியை பெற்றுக்கொண்டார்.

நன்றி ; செய்யத் காலித்

Saturday, 7 January 2017

துரோகி



“தேசியவாதமும் இஸ்லாமும்”, “இம்பாக்ட் பக்கம்”, “மனதோடு மனதாய்...”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “இஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவுகளும்” ஆகிய நூல்களுக்குப் பிறகு எனது அடுத்த  மொழிபெயர்ப்பு நூல் - “துரோகி”!

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்ற அமெரிக்க இராணுவ வீரர் எழுதிய Traitor என்ற நூலின் தமிழாக்கமே இந்நூல்.

ஓர் அமெரிக்க இராணுவ வீரன் இஸ்லாம் குறித்து தான் புரிந்து வைத்திருந்த அத்தனை தவறான செய்திகளுக்கும் சரியான விளக்கம் காண்கிறான்.

எங்கே? குவாண்டனாமோ சிறையில்!

யார் மூலமாக? கைதிகள் மூலமாக!

விளைவு? அவன் இஸ்லாமை ஆரத் தழுவுகிறான்!

ஆம்! ஓர் அமெரிக்க இராணுவ வீரனின் குவாண்டனாமோ பயணம் இஸ்லாமில் முடிகிறது. அதனை அந்த இராணுவ வீரனே வெகு தத்ரூபமாக விளக்குவதுதான் இந்த நூல்.



நூலாசிரியர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் நம்மை வேறோர் உலகுக்கு கொண்டு செல்கிறார். அங்கே புற்பூண்டுகள் இல்லை. மரம் செடி கொடிகள் இல்லை. அவற்றுக்குப் பதிலாக மனிதர்கள். தாடி வைத்த மனிதர்கள். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து தலை முதல் தோள் வரை சாக்குத் தொப்பி அணிவிக்கப்பட்டு சரக்குகள் ஏற்றும் விமானத்தில் விலங்கிட்டு தூக்கி வரப்பட்ட மனிதர்கள்.

இராட்சத சிலந்திகளும், பெருச்சாளிகளும் உலா வரும் அந்த இடத்தில், மனித சஞ்சாரமே கூடாத அந்த இடத்தில் மனிதத்தை மிதித்து உருவாக்கப்பட்ட இருண்ட கண்டம்.

அங்கே அன்பு இல்லை. அரவணைப்பு இல்லை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டு வரப்பட்ட சித்திரவதைக் கருவிகளும், சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிடுசிடு மூஞ்சிகளும் உள்ள கொடூரமான இடம்.



அங்கே கடுமைக்குப் பதில் கருணை பிறக்கிறது இந்நூலாசிரியருக்கு. இஸ்லாத்தின் மேல் வெறுப்புக்குப் பதில் விருப்பம் பிறக்கிறது. அதுவும் அந்த அப்பாவி கைதிகளின் அன்றாட நடவடிக்கை மூலமாக!

கல் நெஞ்சும் கரையும் சோகங்கள் ஒவ்வொரு கைதியிடமும். கைதிகளின் கதறல் கதைகளைச் சொல்கிறார். அவரும் கண்ணீர் வடிக்கிறார். நம்மையும் கண்ணீர் விட வைக்கிறார் இந்நூலில்.

கூடவே அமெரிக்கப் பட்டாளத்தின் சீழ் பிடித்த மனநிலையை பல்வேறு சந்தர்ப்பங்களில் படம் போட்டுக் காட்டுகிறார்.

இறுதியில் அவரது கண்ணீர் கண்ணியமிகு இஸ்லாத்தில் கொண்டு போய் அவரைச் சேர்க்கிறது.





Thursday, 22 January 2015

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 4


அஹமது யஹ்யா அய்யாஷ்

"நேர நிர்வாகம்"- தமிழ் கூறும் நல்லுலகிற்கு இஸ்லாமிய வரையறைகளை தாங்கி நேர நிர்வாகம் குறித்து இந்நூல் அலசுகிறது.

யதார்த்த மொழிநடை, அழகான சொற்செறிவு, சிந்திப்பூட்டும் உதாரணங்கள், வலியுறுத்தும் குர்ஆன்-ஹதீஸ் என நூல் முழுக்க மிகவும் அவசியமான பக்கங்களாக இந்நூல் நகர்கிறது.

நேர நிர்வாகத்தின் செயல்வடிவத்தை ஏட்டுச்சுரைக்காயாய் அணுகிவிடாமல் தம் வாழ்விலும் பயிற்சி செய்து அதன் அனுபவக் கூறுகளை அழகாய் வடித்துள்ளார் இந்நூலின் ஆசிரியர் காயல்பட்டினம் அப்துல் ஹமீது காக்கா அவர்கள்.

சமூக போராளிகளுக்கான மிக முக்கியமான புத்தகம். இந்நூலில் பயணம் குறித்து அலசுகையில் புத்தகப் பை குறித்து வலியுறுத்துகிறார். வாசிப்பை நேசிக்கும் உள்ளங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

புத்தகத்தை வாசிக்கும், எழுத்தை நேசிக்கும் தோழர்களுக்கு இந்நூல் திறமைகளை மேம்படுத்தும் அழகிய துணுக்குகளை சான்றுகளோடு பேசுகிறது.

நேரம் போதவில்லை, நேரமே இல்லை என புலம்பும் தோழர்களுக்கு இந்நூல் நேரத்தை ஆரோக்கியமாய் பயன்படுத்த அழகிய வழிமுறைகளை கற்றுத் தர காத்திருக்கிறது.

இந்நூல் நிச்சயம் மாற்றம்தனை விதைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பல்வேறு நூல்களை எழுதிய அப்துல் ஹமீது காக்காவின் மிகச் சிறந்த நூல்களில் நேர நிர்வாகம் இன்றியமையாத ஒன்று.

ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்களுக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக!

அஹமது யஹ்யா அய்யாஷ்

Friday, 3 January 2014

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 3


யாஸ்மின் பின்த் முஹம்மத் அலீ

இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) கூறிய வகையில் நேரத்தை எவ்வாறு ஈருலக வாழ்விற்கும் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்று கூறுவதே இப்புத்தகத்தின் நோக்கம். 

நேர நிர்வாகம் குறித்து ஆங்கிலத்தில் பல புத்தகம் வெளி வந்து இருந்தாலும் தமிழில் வெளி வந்த முதல் இஸ்லாமிய நூலாக கருதப்படுவது இப்புத்தகத்தையும், எழுதியவரையும் மென்மேலும் சிறப்பிக்கிறது. 

நேரத்தை பயனுள்ள வகையில் கையாண்டு சமுதாயத்தில் பெரும் பிரளயத்தை உருவாக்கி, இஸ்லாத்தை நிலை நாட்டிய அக்கால முஹம்மது (ஸல்) அவர்கள் முதல் இக்கால மால்கம் எக்ஸும் முன்னோடியாக பதிப்புரையில் குறிப்பிட்டு கூறப்படுவது மேலும் சிறப்பு.

இரண்டு பதிப்பாக வெளி வந்துள்ள இப்புத்தகம், முதல் பதிப்பின் சிறு சிறு குறைகள் சரி செய்யப்பட்டு, சுருக்கமான சில தலைப்புகள் விரிவாக்கப்பட்டும் படிக்கும் வாசகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துள்ளார் நம்முடைய ஆசிரியர்.

இப்புத்தகத்தில் கூறும் ஒவ்வொரு விசயங்களும் குர்ஆன், ஹதீஸை மூலதனமாக கொண்டு, இவ்வுலக வாழ்வில் மனிதர்களின் நேர வீணடிப்பை சிறு சிறு எடுத்துக்காட்டுகளின் மூலம் பொருத்திக் கூறுவதை படிக்குபோதே பக் என்கிறது. நம் நிலை எதுவென்று சிந்திக்க தூண்டுகிறது.

ஒவ்வொரு எடுத்துக் காட்டையும் நம் வாழ்வோடு ஒப்பிட்டு நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளும் அளவில் மிக அற்புதமானவை. நம்மை செதுக்கி கொள்ள தூண்டுதலாக அமைகிறது அல்ஹம்துலில்லாஹ்.

இதோ புத்தகத்தில் இருந்து என்னை மிகவும் கவர்ந்த ஒரு சிறு எ.கா சுருக்கமாக உங்களுக்காக:-

ஒரு நாள் இரவு, சிறுவன் ஒருவன் அடர்ந்த காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருக்கும்பொழுது அவன் காலில் ஒரு பை தட்டுப்படுகிறது. அதை அவன் கையில் எடுத்து தடவி பார்த்தால் பை முழுவதும் கற்கள். இருட்டில் தனிமை பயத்தில் இருந்த அவன் ஒரு இடத்தில் அமர்ந்தான், பையில் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து வீசினான். 

அருகிலிருந்த ஆற்றில் விழுந்த கல் “ப்ளக்” என்று சத்தம் கொடுத்தது. அந்த சத்தத்தில் ஆறுதல் அடைந்த சிறுவன் ஒவ்வொன்றாக விடியும் வரை வீசிக் கொண்டே இருந்தான். சூரியன் உதயமாகும் தருணத்தில் வீசிய கல் மின்னியதை கண்ட சிறுவன் பையை நோக்கினால், பையில் இருந்த அனைத்தும் மாணிக்க கற்கள்.

இருந்து என்ன பயன், அதில் பெரும்பாலான கல்லை அவன் வீசி எறிந்து இருந்தான். இதனால் இறுதியில் எந்த பயனும் இன்றி கைசேதப்பட்டான் சிறுவன்.

இருள், காடு, மாணிக்க கற்களை நம் வாழ்க்கையுடன் ஒப்பிடும் ஆசிரியர், இந்த இடத்தில் நேரத்தை மாணிக்க கற்களுக்கு ஒப்பிடுகிறார். நம் அறியாமையில் விலை மதிப்பில்லாத நம் நேரம் இவ்வாறு தான் வீணாகிறது என்பதை இச்சிறு எடுத்துக்காட்டு உணர்த்துகிறது. மனதில் மாற்றத்தை தேடுகிறது.

காலம் என்பது பொன் போன்றதல்ல; மாறாக உயிர் போன்றது. காரணம், பொன் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் - உயிர் இருந்தால். ஆனால் உயிரே போனால்... ஆம்! காலம் உயிரை போன்றதுதான். என்ன விலை கொடுத்தாலும் அதை திருப்பி வாங்க முடியாது என்ற மறுக்க முடியாத உண்மையை பல இடத்தில் நம் தலையில் 'நங்'கென்று ஆணி அடிக்கும் விதமாக புத்தகம் நம்மை பயணிக்கச் செய்கிறது. திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது, நம் உலக இச்சைகளை கட்டுக்குள் கொண்டு வர.

மேலும் நேரத்தை சேமிக்கும் வழிகள், வேலைகளை எப்படி பிரித்து செய்வது, எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஈருலகிற்கும் பயனுள்ள வகையில் எவ்வாறு செலவழிப்பது என்று பல குறிப்புகளை தருகிறது இப்புத்தகம். அல்ஹம்துலில்லாஹ்.

நேரம் வீணாகிவிட்டதே என்று மரணம் வரும் தறுவாயில் சிந்திப்பதில் பயனில்லை. இனி இருக்கும் காலங்களையாவது பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்...

படிக்கவே சோம்பேறிபடும் என்னையவே ஒரே சிட்டிங்கில் படிக்க வைத்த புத்தகம், படித்த பின் டைம் டேபிள் போட வைத்த புத்தகம். என் பேவரைட் லிஸ்டில் ஆட் செய்யப்பட்ட புத்தகம்.

மதிப்புரை எழுதுவதற்காக என் வாழ்க்கை சாதனையாக இரண்டாம் முறை படித்த புத்தகம்.

கண்டிப்பாக படிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு மாற்றத்தை இப்புத்தகம் ஏற்படுத்தும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

அனைவரும் வாங்கி படியுங்கள். காலத்தை கடமையாக வலியுறுத்திய இஸ்லாத்தில் பிறந்த நாம் எவ்வாறு நம் காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம் என்று நம்மை நாமே நிற்க வைத்து கேள்வி கேட்கும் நிலைக்கு நம்மை இப்புத்தகம் தள்ளிச்செல்லும் என்பதில் ஐயமில்லை.

டிஸ்கி: பல முக்கிய விஷயங்கள் எழுத நினைத்தேன், பட் இன்னும் நீண்டு விடும் என்று குறைத்துக் கொண்டேன்.

யாஸ்மின் பின்த் முஹம்மத் அலீ

Sunday, 1 December 2013

மனதோடு மனதாய்... - பதிப்புரை


பொதுவாக மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, சோர்வு என அனைத்துமே மாறி மாறி வந்து கொண்டிருக்கும். இப்போதுள்ள இயந்திரத்தனமான வாழ்க்கையில் ‘மனச் சோர்வு’ என்பது மனிதர்களை விடாமல் துரத்தி வருகின்றது.

அதுவும், சமூகப் பணிக்காக பொது வாழ்வில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் “சமூக உரிமைப் போராளிகளையும்” இந்த மனச் சோர்வு விட்டு வைப்பதில்லை.

மொத்தத்தில் மனச்சோர்வு என்ற இந்த பிரம்மை அல்லது மனிதர்களை பலஹீனப்படுத்தி பாதை மாறச் செய்யும் ஷைத்தானிய வேலை என எப்படி எடுத்துக் கொண்டாலும் மனித உள்ளங்கள் இந்த மனச் சோர்விலிருந்து விடுபட்டு தொய்வில்லாமல் தங்களது பணிகளிலும், பொதுநலப் பணிகளிலும் ஈடுபாடு காட்டுவதற்கு ஒரு உந்து சக்தி தன்னைப் போன்ற சக மனிதர்களிடமிருந்தும் கிடைக்கப் பெறலாம். அல்லது உலகின் போக்கை மாற்றிய வரலாற்று நிகழ்வுகளிலிருந்தும் கிடைக்கப் பெறலாம்.

அந்த நிகழ்வுகளிலிருந்து கிடைக்கப் பெறும் படிப்பினைகளைக் கொண்டு நம்பிக்கை வரப் பெற்றவர்களாக நம்முடைய மனச்சோர்வைப் போக்கி உற்சாகத்துடன் ஓய்வில்லாமல் உழைத்தோமென்றால், நாமும் வரலாறு படைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதுதான் வரலாறுகள் நமக்கு உணர்த்தும் பாடம்.

மேற்கூறிய மனச் சோர்வைப் போக்கி வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி தெளிவுகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை ஆன்மீகத்துடன் இரண்டறக் கலந்து “தேஜஸ்” என்ற மலையாள நாளிதழின் ஞாயிறு மலரில் ஆன்மீக சிந்தனையாளர் ஏ. சயீத் அவர்களால் பதிவு செய்யப்பட்டதுதான் ‘மனதோடு மனதாய்’ என்ற இந்த நூல்.

மலையாள மொழியில் வெளிவந்த அந்தத் தொடர்களை விடியல் வெள்ளி மாத இதழின் துணை ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தன்னுடைய பணிச்சுமைகளுக்கு மத்தியில் அழகுத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததை விடியல் வெள்ளி  மாத இதழில் கடைசிப் பக்கத்தில் வெளியிட்டோம்.

பொதுவாக, ஒரு புத்தகத்தை மக்கள் வாங்கினால் முதல் பக்கத்திலிருந்துதான் படிக்கத் துவங்குவார்கள் அல்லது தனக்குப் பிடித்தமான பகுதியை முதலில் வாசிப்பார்கள்.

நாம் விடியல் வெள்ளியில்  ‘மனதோடு மனதாய்’ என்ற இந்த வரலாற்று நிகழ்வுகளைத் தொடராக வெளியிடத் துவங்கியவுடன், விடியலை வாங்கும் பெரும்பாலான வாசகர்கள் முதலில் கடைசிப் பக்கத்தைப் படிக்கக் கூடிய அளவிற்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது இது.

அதோடல்லாமல், இத்தொடர்களை அவசியம் நூலாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வாசகர்களிடமிருந்து வலுப் பெற்று வந்தது. அவர்களின் கோரிக்கைகளை ஏற்று மனித வாழ்விலும் பொது வாழ்விலும் ஏற்படக்கூடிய மனச் சோர்வுகள் நீங்கி நம்பிக்கையுடன் வீறு நடை போடக்கூடிய புதிய தலைமுறை உருவாக வேண்டும் என்ற சீரிய சிந்தனையுடன் இந்நூலை வெளியிடுகின்றோம்.

பல சமூகப் பணிகளுக்கிடையில் நேரத்தை ஒதுக்கி வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்தளித்து நமக்குள் ஆர்வத்தை ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கும் ஆன்மீக சிந்தனையாளர் ஏ. சயீத் அவர்களுக்கும், அதனை மொழிபெயர்த்துத் தந்த துணை ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்களுக்கும் அல்லாஹ் நிரம்ப நற்கூலியை வழங்கிடுவானாக!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. குறைகள் எங்களைச் சாரும். நிறைகள் எல்லாம் நிறைந்த இறைவனைச் சாரும்.

இவண்,

மு.முஹம்மத் இஸ்மாயீல்
காப்பாளர்
இலக்கியச்சோலை சாரிடபிள் டிரஸ்ட்

நூல்         : மனதோடு மனதாய்...
மூலம்     : ஏ. ஸயீத்
தமிழில்   : M.S. அப்துல் ஹமீது
விலை    : ரூ. 45/-
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

Sunday, 27 October 2013

வேர்கள் - மொழிபெயர்த்தோன் உரை



அமெரிக்கக் கறுப்பர் மால்கம் Xன் வாழ்க்கை வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதன் முதலில் தந்தவர்கள் விடியல் வெள்ளி மாத இதழின் ஆசிரியர் மு. குலாம் முஹம்மத் அவர்கள்.

அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்ற உண்மையையும், ஆப்ரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்ற ஆச்சரியமான உண்மையையும் நான் “மால்கம் X” நூல் மூலமாக அறிந்தேன்.

அத்தோடு அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” என்ற புதினத்தைப் பற்றியும் முதன்முதலில் அந்நூல் மூலம் அறிந்தேன். அப்பொழுதே “ரூட்ஸ்” நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.

பிற்றை நாட்களில் அந்த நூலைப் படிக்கும்பொழுது நெஞ்சமெல்லாம் கனத்தது. ஆப்ரிக்கக் கறுப்பர்கள் அமெரிக்கர்களால் பட்ட அவலங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை. அந்த நாவலைப் படிக்கும் யாரையும் அது உலுக்காமல் விட்டதில்லை.

இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திடும் எனது ஆசையை அண்ணன் குலாம் முஹம்மத் அவர்களிடம் தெரிவித்தபொழுது, மகிழ்ச்சியுடன் இசைவு தந்தார்கள். அத்தோடு ஆலோசனைகள் பல தந்து, ஆர்வமும் ஊட்டினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

எனினும் உடனடியாக இந்த வேலையைத் தொடர முடியவில்லை. இப்பொழுதுதான் இந்தப் பணி நிறைவடைந்திருக்கிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

ஆங்கிலத்தில் 729 பக்கங்களைக் கொண்டது இந்நாவல். 120 அத்தியாயங்களைக் கொண்டது. அதனை அப்படியே மொழிபெயர்த்தால் தமிழில் 1000 பக்கங்களுக்கு மேல் வரும். அதனால் முடிந்தவரை சுருக்கியிருக்கிறேன் - மூலத்தின் வேகம் குறையாமல்.

இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

M.S. அப்துல் ஹமீது


நூல்                       : வேர்கள்
மூலநூல்             : Roots : The Saga of an American Family
மூல ஆசிரியர்  : Alex Haley
தமிழில்                : எம்.எஸ். அப்துல் ஹமீது
விலை                  : ரூ. 100
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

வேர்கள் - பதிப்புரை



அடிமைகளாய் ஆக்கப்பட்டார்கள் ஒரு பெரும் கூட்டம் மக்கள் உலகில். காரணம், அவர்கள் நிறத்தால் கறுப்பர்கள் என்பதே!

அவர்களை அடிமைகளாக ஆக்கியவர்கள், அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையில் உயர்ந்தார்கள். காரணம், அவர்கள் நிறத்தால் வெள்ளையர்கள்.

இந்த நிறவெறிக் கொடுமைகளுக்கெதிராகப் போராடிய மாவீரரே மால்கம் X என்ற மாலிக் அல் ஷாபாஸ் ஷஹீத்.

மால்கம் X இஸ்லாத்தை முன்வைத்து கறுப்பர்களின் விடுதலைக்காகப் போராடியவர். பல லட்சம் கறுப்பர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தவர்.

மால்கம் X தன்னுடைய வேகமான இஸ்லாமிய பிரச்சாரத்தின்போது, “கறுப்பர்களின் சொந்த நாடு அமெரிக்கா அல்ல, அஃது ஆப்ரிக்கா!” என்ற வாதத்தை முன்வைத்தார். இதில் வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டினார்.

அவரது ஆதாரங்கள் நிறைந்த உரைகள் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்தன.

இந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மைகளை சோதிக்க விரும்பினார் அலெக்ஸ் ஹேலி.

பல வினாக்களை மால்கம் Xஐ நோக்கி வீசினார். மலைக்கும் அளவில் மால்கம் X பதில்களைத் தந்தார்.

வரலாற்றில் மால்கம் Xக்கு தன்னை விட அதிக அறிவு இருப்பதைக் கண்டார் அலெக்ஸ் ஹேலி. ஆகவே, வரலாற்று ஆசிரியர்களைக் கொண்டே மால்கம் Xஐக் கேள்வி கேட்டார்கள். மால்கம் X அவர்கள் அதிரும்படி ஆதாரங்களை அள்ளிச் சொரிந்தார்.

பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் X கூறும் வரலாற்று இடங்களை தானே நேரில் சென்று கண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். அது அவரது சொந்த பூர்வீகத்தைக் கண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது. அதாவது, அவரது வேரை அவர் காணும் நல்ல முயற்சியாக முடிந்தது.

தனது பயணத்தை, ஆராய்ச்சியை புதினமாக வடித்தார்.

பல லட்சம் வாசகர்களைக் கவர்ந்தார். அது திரைப்படமாக வந்தது. அது பல லட்சம் கறுப்பர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்தது.

இவற்றையெல்லாம் என்னிடம் நேரிலும், மால்கம் X நூல் மூலமும் கேட்டுக் கொண்டிருந்தார் தம்பி அப்துல் ஹமீது. அவர் நான் நடத்தும் விடியல் வெள்ளி மாத இதழின் துணை ஆசிரியர். அவர் இந்த வரலாற்றில் அதிகமான ஆர்வம் காட்டினார்.

இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தர வேண்டும் என்றேன். கடினமாக உழைத்து நம் மனக் கோட்டைகளை நிதர்சனமாக்கி இருக்கின்றார்.

பெரும் பணி இது. சளைக்காமல் செய்திருக்கின்றார்!

அல்லாஹ் அவருக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக!

இதுபோன்ற இலக்கியங்களை அடிமைகள் விடுதலையில் ஆர்வம் கொண்ட சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தமிழில் கொண்டுவரத் தயாராக இருந்தாலும் இந்தப் பணிகள் இஸ்லாமிய வட்டங்களிலிருந்து வந்திட வேண்டும்.

அந்தப் பணியைச் சமுதாயத்தின் சார்பில் சாதித்திருக்கின்றார் தம்பி அப்துல் ஹமீது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இந்த நூல் இலக்கியச்சோலை வெளியீடாக வருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இலக்கியச்சோலையின் இலக்கியப் பணிகளும், இஸ்லாமியப் பணிகளும் தொடர்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

வழக்கம் போல் வாசகர்கள் தங்கள் ஆதரவைத் தந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவண்,                                                                                                             சென்னை

மு. குலாம் முஹம்மத்                                                                                  12.12.2005



நூல்                       : வேர்கள்
மூலநூல்             : Roots : The Saga of an American Family
மூல ஆசிரியர்  : Alex Haley
தமிழில்                : எம்.எஸ். அப்துல் ஹமீது
விலை                  : ரூ. 100
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

Monday, 21 October 2013

இஸ்லாம் : சந்தேகங்களும் தெளிவுகளும்



நூல்         : இஸ்லாம் : சந்தேகங்களும் தெளிவுகளும்
மூலம்    : அஷ்ரஃப் கல்பெட்டா (மலையாளம்)
தமிழில் : M.S. அப்துல் ஹமீது
விலை   : ரூ. 10
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

மனதோடு மனதாய்...





நூல்         : மனதோடு மனதாய்...
மூலம்     : தேஜஸ் மலையாள நாளிதழ்
தமிழில்  : M.S. அப்துல் ஹமீது
விலை    : ரூ. 45/-
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

வேர்கள்

எனது முதல் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்


மூல நூல்


மூலநூல் ஆசிரியர் அலெக்ஸ் ஹேலி


நூல்                       : வேர்கள்
மூலநூல்             : Roots : The Saga of an American Family
மூல ஆசிரியர்  : Alex Haley
தமிழில்                : எம்.எஸ். அப்துல் ஹமீது
விலை                  : ரூ. 100
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

Sunday, 20 October 2013

மனித இனத்திற்கெதிரான குற்றம் - பேரா. அ. மார்கஸ் அவர்களின் அணிந்துரை



அணிந்துரையின் சுருக்கம்

2500 பேர் கொல்லப்பட்டு, இரண்டுட லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்ட குஜராத் கொடூரம் குறித்த முழுமையான தரவுகளும், விவரங்களும் இப்போது ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டு விட்டன.

2002 பிப்ரவரி இறுதியில் தொடங்கிய அந்த இன அழிப்பு அடுத்த சில நாட்களில் எங்கெங்கு, எவ்வெவ்வாறு நடைபெற்றன, எவ்வளவு பேர் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கொன்று எரிக்கப்பட்டனர், அவர்களின் விவரங்கள், எவ்வாறு அந்தக் கொடூரம் நிகழ்ந்தது, யார் அவற்றைத் தலைமை தாங்கி நடத்தியது, இன்று அவ்வழக்குகள் தொடர்பான நிலை என்ன, கொலையாளிகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் முதலான எல்லா விவரங்களும் இப்போது நம்மிடமுள்ளன.

இந்தக் கொடூருங்கள் அம்பலப்படுத்தப்பட்டதிலும், ஆவணப்படுத்தப்பட்டதிலும் மனித உரிமையாளர்கக, ஆங்கில ஊடகங்கள் ஆகியவற்றின் பங்கு இங்கே நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டிய ஒன்று. சக மனிதர்களின் துயரம் கண்டு கசியும் மனங்கள், கசிவதோடு நில்லாமல், உயிரையும் பணயம் வைத்து நியாயம் கோரி இறுதி வரை நிற்கும் திட உள்ளங்கள் இன்றும் உள்ளன என்பதொன்றே நமக்கிருக்கும் ஒரே ஆறுதல்.

இந்தக் கொடூரங்கள் பத்திரிகைகளில் வரத் தொடங்கி அடுத்த கணமே இன்னும் எரிந்து முடிந்திராத குஜராத்திற்கு விரைந்து உண்மைகளை உலகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டின சுமார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட உண்மையறியும் குழுக்கள்.

மும்பையிலிருந்து செயல்படக்கூடிய சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் என்னும் ஃபாசிச எதிப்பு அமைப்பு வெளியிட்டு வரும் இருமாத இதழாகிய கம்யூனலிசம் காம்பட் என்கிற முக்கிய இதழ் ‘இன அழிப்பு - குஜராத் 2002’ என்னும் சிறப்பிதழை (மார்ச் - ஏப்ரல் 2002) உடனடியாகக் கொணர்ந்தது.

டபுள் டெம்மி அளவில் 150 பக்கங்களில் வெளிவந்த அந்த இதழ் கலவரம் நடந்த பகுதிகள், கொல்லப்பட்டோர் விவரங்கள், அழிக்கப்பட்ட சொத்துகள், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பெயர்கள், தப்பிப் பிழைத்தோரின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை அன்றைக்குக் கிடைத்த தகவல்கள் வரை தொகுத்து ஆவணப்படுத்தியிருந்தது. அதில் பிரசுரிக்கப்பட்டிருந்த சுமார் 40 வண்ணப் படங்களைப் பார்ப்பதற்கு மன உறுதி வேண்டியிருந்தது.

.................

கடமையைச் செய்யத் தவறி கலவரக்காரர்களுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் இன்று உயர் பதவிகளில், நேர்மையாக இருந்தவர்கள் ஓரங்கட்டப்பட்ட நிலை, தங்களை அழித்தவர்கள் இன்று தங்கள் முன் தலைவர்களாக வெற்றி நடை போடுவதைப் பார்க்கும் பாதிக்கப்பட்ட மனம் எப்படி உணரும்?

மரண வியாபாரி நரேந்திர மோடி தமிழகத்திற்கு ஜெயலலிதாவின் விருந்தினராக வர இருக்கும் சூழலில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூலை வெளியிட்டுள்ள இலக்கியச்சோலை வெளியீட்டகம் இதுபோன்ற அரசியல் முக்கியத்துவம் மிக்க ஏராளமான நூற்களை வெளியிட்டுள்ளது.

மொழிபெயர்த்துள்ள எம்.எஸ். அப்துல் ஹமீது, “வேர்கள்” உள்ளிட்ட புகழ்பெற்ற நூற்களை மொழிபெயர்த்த அனுபவம் மிக்கவர். நிரடலற்ற இயல்பான நடையில் இதைப் பெயர்த்துள்ளார். ஃபாசிசத்தின் கோர முகத்தை அடையாளம் காண விரும்புவோருக்கு உதவக் கூடிய முக்கிய ஆவணமாக  இது அமைந்துள்ளது.

இந்தக கொடுமைகளை ஊரறிய, உலகறியச் செய்த மனித உரிமைப் போராளிகள் என்றென்றும் நமது நன்றிக்குரியவர்கள்.

அ. மார்க்ஸ்


நூல்         : மனித இனத்திற்கெதிரான குற்றம் - குஜராத் இனப்படுகொலை 2002 (Crime Against Humanity - Gujarat Genocide 2002)
மூலம்    : அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் (Concerned Citizens Tribunal)
தமிழில் : M.S. அப்துல் ஹமீது
விலை   : ரூ. 100
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com


Saturday, 19 October 2013

சிறையில் எனது நாட்கள் - தி ஹிந்து துணை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் வழங்கிய முன்னுரை



தி ஹிந்து ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அவர்கள் வழங்கிய முன்னுரையின் சுருக்கம்

அடுத்த தடவை ஒரு அமைச்சரோ அல்லது அரசியல்வாதியோ, ஒரு போலீஸ்காரரோ அல்லது படைவீரரோ,  ஓர் அதிகாரியோ, நீதிபதியோ, ஏன், ஒரு பத்திரிகையாளரோ என்னிடம் வந்து சட்டத்தின் ஆட்சியை நான் கவனத்தில் எடுக்கிறேன் என்று சொன்னால், என்னிடம் இரண்டே இரண்டு வார்த்தைகள்தான் உள்ளன : இஃப்கிகார் ஜீலானி.

இந்தப் புத்தகம் சொல்லும் அதிர்ச்சியான விஷயங்கள் சலன புத்தியுடைய, கொடுங்கோன்மையான அதிகாரத்தையோ, அல்லது இந்திய அரசின் மானக்கேடான செயல்களையோ மட்டும் குற்றஞ்சாட்டிடவில்லை. ஒரு சமூகத்தின் தூண்கள் என்று கருதப்படும் - பத்திரிகைத்துறை என்ற நான்காவது தூண் உட்பட -  அனைத்தும் எப்படி ஓர் அநியாயமான காரியத்திற்கு அணி சேர்ந்து கொண்டன என்பதன் தொகுப்புதான் இந்நூல்.

.........

இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள தொடர் நிகழ்வுகளைப் படிக்கும்பொழுது பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி அரசுக்கு ஏழு மாதங்களாக திகார் சிறையில் வாடி வதங்கும் இஃப்திகார் நிரபராதி என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தே இருக்கிறது என்பது அறிய வரும்.

இருந்தும். தேசிய பாதுகாப்பின் பொறுப்பாளர்களான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வேண்டுமென்றே அவரைக் கம்பி எண்ண வைத்தனர்.

..........

இஃப்திகார் இன்று ஒரு சுதந்திர மனிதர். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதற்கும், சிறையில் அடைக்கப்பட்டதற்கும் காரணமான விஷயங்கள் இன்னும் தொடப்படாமல் அப்படியே இருகின்றன.

அரசின் தேசிய பாதுகாப்பு இயந்திரங்கள் யாரை வேண்டுமானாலும் தங்கள் பிடிக்குள் கொண்டு வரலாம் என்பதை அவரது விவகாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

............

இஃப்திகாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு பிரச்சாரம் மேற்கொள்ளும் செய்தி சுருக்கமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஜூன் 10 இதழில் வெளியானது. இதனைக் காவல்துறையினராலும், ஐ.பி.யாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைவதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றுணர்ந்தார்கள்.

விளைவு - “தான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜண்ட்” என்று இஃப்திகாரே ஒப்புக்கொண்டதாக ஒரு கட்டுக் கதையைக் கட்டவிழ்த்து விட்டார்கள், நீட்டா ஷர்மா என்ற பெண் செய்தியாளர் மூலம்.

...............

பத்திரிகையாளர்கள்தான் தங்கள் தொழில் தர்மத்திலிருந்து விலகிவிட்டார்கள் என்றால் எல்.கே. அத்வானியின் உள்துறை அமைச்சகம் செய்த செயல்கள் அதனை விட வெட்ககரமானதும், வேதனையானதும் ஆகும். உள்துறை அமைச்சகம் செய்த தவறுகளை பத்திரிகையாளர்களோடு ஒப்பிட்டால், பத்திரிகையாளர்கள் தவறு சிறிதுதான் என்றறியலாம்.

..................

கண்ணியமான மனிதரான இஃப்திகார் அவரது துக்ககரமான கதையை, இந்நூலில் சிறிது கூட கண்ணியக் குறைவு இல்லாமல் சொல்லியிருக்கிறார். அங்கேதான் தான் ஒரு கண்ணியமான பத்திரிகையாளர் என்ற முத்திரையைப் பதித்திருக்கிறார் இஃப்திகார்.

இந்நூலில் நெஞ்சை உருக்கும் சம்பவங்களும் உண்டு. நகைச்சுவையும் உண்டு. தனது பத்திரிகை அனுபவத்தைப் பயன்படுத்தி தனது பாதிப்புகளை மட்டும் எழுதாமல், இந்த மொத்த அமைப்பில் பலியான பிறரின் அவல நிலைகளிலும் கவனத்தைக் கொண்டு வருகிறார் இஃப்திகார்.

................

சித்தார்த் வரதராஜன்
1 பிப்ரவரி 2005


நூல்          : சிறையில் எனது நாட்கள்
மூலநூல் : My Days in Prison by Iftikhar Gilani
ஆசிரியர் : இஃப்திகார் ஜீலானி
தமிழில்   : M.S. அப்துல் ஹமீது
விலை     : ரூ. 60
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

Friday, 18 October 2013

இம்பாக்ட் பக்கம் - பாகம் 2


விடியல் வெள்ளி மாத இதழில் வெளிவந்த இம்பாக்ட் பக்கம் கட்டுரைகளின் தொகுப்பு - பாகம் 2


நூல் அறிமுகம்

இம்பாக்ட் இண்டர்நேஷனல் என்றொரு ஆங்கிலப் பத்திரிகை லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதனைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே First Things First என்ற பெயரில் ஒரு பக்கக் கட்டுரை ஒன்று இடம் பெற்றிருக்கும்.

இன்றைய பிரச்னைகளை அலசி, அதற்கு இஸ்லாமியத் தீர்வை மிக அழகாகச் சொல்லியிருப்பார்கள் அந்தப் பக்கத்தில்.

அதனைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்க வேண்டும் என்று அவா கொண்டோம். அதனால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை விடியல் வெள்ளி மாத இதழில் நடுப்பக்கக் கட்டுரையாகக் கொண்டு வந்தோம். அந்தப் பக்கத்திற்கு “இம்பாக்ட் பக்கம்” என்றே பெயர் வைத்தோம்.

முடிந்த வரை மூலமொழியின் சுவை குன்றாமல் அதே விறுவிறுப்புடன் இதனை மொழிபெயர்த்துள்ளேன். வாசகர்களிடம் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

வாசகர்கள் இதனை நூலாகக் கொண்டு வர வேண்டும் என்று விழைந்தனர். ஆதலால் “தேசியவாதமும் இஸ்லாமும்” என்ற பெயரில் முதல் பாகம் நூலாக வெளிவந்தது.

“இம்பாக்ட் பக்கம்” என்ற பெயரே வாசகர்களிடம் பிரபலமானதால் இந்த இரண்டாம் பாகத்திற்கு “இம்பாக்ட் பக்கம்” என்றே பெயர் வைக்கப்பட்டது.

எல்லா இஸ்லாமியப் பத்திரிகைகளுக்கும் ஏற்படும் நெருக்கடி இம்பாக்ட் இண்டர்நேஷனல் பத்திரிகையையும் விட்டு வைக்கவில்லை. அதுதான் நிதி நெருக்கடி! நிதி நெருக்கடியினால் அந்தப் பத்திரிகையை நிறுத்தி விட்டனர்.


நூல்          : இம்பாக்ட் பக்கம் - பாகம் 2
மூலம்      : இம்பாக்ட் இண்டர்நேஷனல், லண்டன் (Impact International, London)
தமிழில்   : M.S. அப்துல் ஹமீது
விலை     : ரூ. 40
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com