Showing posts with label இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம். Show all posts
Showing posts with label இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம். Show all posts

Thursday, 23 November 2017

கஃபூரின் கதை


கஃபூருக்கு திடீரென்று ஒரு செய்தி வருகின்றது:

‘‘இன்னும் 24 மணி நேரத்தில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்!’’
எப்படியிருக்கும் கஃபூருக்கு?

(ஒரு பேச்சுக்குத்தான்! மரணத்தை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!)

இனி கஃபூருக்கு 24 மணி நேரம்தான் இருக்கிறது.

அவர் இந்த 24 மணி நேரத்தை எப்படி செலவழிப்பார்? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

நகரத்தில் அலைந்து திரிந்து ‘ஜாலியாக ஷாப்பிங்’ செய்து கொண்டிருப்பாரா? நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருப்பாரா? நல்ல ஆடை அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக்கொண்டிருப்பாரா? என்ன செய்வார்?

சப்த நாடியும் ஒடுங்கி நல்ல பிள்ளையாகி விடுவார். அதுவரை இருந்த அலட்டல்களெல்லாம் அடங்கிப் போய் விடும். ஒரே ஓர் எண்ணம்தான் அவருள் எங்கும் வியாபித்திருக்கும். அது – அல்லாஹ்!

எங்கும் அல்லாஹ்! எதிலும் அல்லாஹ்!!

அவரது ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கதாகிவிடும். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே இருக்கும்.

ஒரு நொடியைக் கூட அல்லாஹ்வின் ‘திக்ர்’ இல்லாமல் அவர் செலவழிக்கமாட்டார். ஒரு சிறு பாவத்தைக்கூட செய்யமாட்டார்.

இப்பொழுது நமது நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அது கஃபூரை விட மோசமானது.

ஆம்! கஃபூருக்காவது 24 மணி நேரம் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. நமக்குத் தெரியுமா? நாம் எப்பொழுது மரணமடையப் போகிறோம் என்று யாருக்காவது தெரியுமா? அடுத்த நிமிடமே நமக்கு மரணம் வரலாம்.
அதனால்தான் நாம் ஒவ்வொரு தொழுகையையும்; தொழும்பொழுது இதுதான் நமது இறுதித் தொழுகை என்று எண்ணித் தொழ வேண்டும் என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பினார்கள்.

‘‘மகிழ்ச்சியை மண் மூடிப் புதைக்கும் ஒன்றை அதிகமாக நினைவு கூருங்கள். (அதுதான்) மரணம்!’’ என்று அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

‘‘கப்றுக் குழியில் இருக்கும் மனிதர்களோடு உங்களையும் எண்ணிப் பாருங்கள்’’ என்று மேலும் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும்பொழுது, முதல் நிலைக் கேள்விகள் அனைத்தும் நமக்கு அருளப்பட்ட அளவிலா மதிப்புடைய நேரத்தைச் சுற்றித்தான் இருக்கும்.

‘‘நீங்கள் கணக்கு கேட்கப்படும் முன் உங்களை நீங்களே கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் மதிப்பிடப்படும் முன் உங்களை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் உங்களைக் கணக்கு பார்த்துக்கொண்டால், நாளை நடக்கும் கேள்வி கணக்கு இலகுவாக இருக்கும். அந்த நாளில் (காட்சி தருவதற்காக) உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்: ‘‘அந்த நாளில் நீங்கள் (அல்லாஹ்வின் முன்) கொண்டு வரப்படுவீர்கள். (அப்பொழுது) உங்களது ஒரு ரகசியமும் மறைக்கப்படாது (69:18)’’ என்று உமர் (ரலி) அவர்கள் உரைத்தார்கள்.

(‘இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்’ நூலிலிருந்து.)

Thursday, 22 January 2015

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 4


அஹமது யஹ்யா அய்யாஷ்

"நேர நிர்வாகம்"- தமிழ் கூறும் நல்லுலகிற்கு இஸ்லாமிய வரையறைகளை தாங்கி நேர நிர்வாகம் குறித்து இந்நூல் அலசுகிறது.

யதார்த்த மொழிநடை, அழகான சொற்செறிவு, சிந்திப்பூட்டும் உதாரணங்கள், வலியுறுத்தும் குர்ஆன்-ஹதீஸ் என நூல் முழுக்க மிகவும் அவசியமான பக்கங்களாக இந்நூல் நகர்கிறது.

நேர நிர்வாகத்தின் செயல்வடிவத்தை ஏட்டுச்சுரைக்காயாய் அணுகிவிடாமல் தம் வாழ்விலும் பயிற்சி செய்து அதன் அனுபவக் கூறுகளை அழகாய் வடித்துள்ளார் இந்நூலின் ஆசிரியர் காயல்பட்டினம் அப்துல் ஹமீது காக்கா அவர்கள்.

சமூக போராளிகளுக்கான மிக முக்கியமான புத்தகம். இந்நூலில் பயணம் குறித்து அலசுகையில் புத்தகப் பை குறித்து வலியுறுத்துகிறார். வாசிப்பை நேசிக்கும் உள்ளங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

புத்தகத்தை வாசிக்கும், எழுத்தை நேசிக்கும் தோழர்களுக்கு இந்நூல் திறமைகளை மேம்படுத்தும் அழகிய துணுக்குகளை சான்றுகளோடு பேசுகிறது.

நேரம் போதவில்லை, நேரமே இல்லை என புலம்பும் தோழர்களுக்கு இந்நூல் நேரத்தை ஆரோக்கியமாய் பயன்படுத்த அழகிய வழிமுறைகளை கற்றுத் தர காத்திருக்கிறது.

இந்நூல் நிச்சயம் மாற்றம்தனை விதைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பல்வேறு நூல்களை எழுதிய அப்துல் ஹமீது காக்காவின் மிகச் சிறந்த நூல்களில் நேர நிர்வாகம் இன்றியமையாத ஒன்று.

ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்களுக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக!

அஹமது யஹ்யா அய்யாஷ்

Friday, 3 January 2014

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 3


யாஸ்மின் பின்த் முஹம்மத் அலீ

இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) கூறிய வகையில் நேரத்தை எவ்வாறு ஈருலக வாழ்விற்கும் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்று கூறுவதே இப்புத்தகத்தின் நோக்கம். 

நேர நிர்வாகம் குறித்து ஆங்கிலத்தில் பல புத்தகம் வெளி வந்து இருந்தாலும் தமிழில் வெளி வந்த முதல் இஸ்லாமிய நூலாக கருதப்படுவது இப்புத்தகத்தையும், எழுதியவரையும் மென்மேலும் சிறப்பிக்கிறது. 

நேரத்தை பயனுள்ள வகையில் கையாண்டு சமுதாயத்தில் பெரும் பிரளயத்தை உருவாக்கி, இஸ்லாத்தை நிலை நாட்டிய அக்கால முஹம்மது (ஸல்) அவர்கள் முதல் இக்கால மால்கம் எக்ஸும் முன்னோடியாக பதிப்புரையில் குறிப்பிட்டு கூறப்படுவது மேலும் சிறப்பு.

இரண்டு பதிப்பாக வெளி வந்துள்ள இப்புத்தகம், முதல் பதிப்பின் சிறு சிறு குறைகள் சரி செய்யப்பட்டு, சுருக்கமான சில தலைப்புகள் விரிவாக்கப்பட்டும் படிக்கும் வாசகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துள்ளார் நம்முடைய ஆசிரியர்.

இப்புத்தகத்தில் கூறும் ஒவ்வொரு விசயங்களும் குர்ஆன், ஹதீஸை மூலதனமாக கொண்டு, இவ்வுலக வாழ்வில் மனிதர்களின் நேர வீணடிப்பை சிறு சிறு எடுத்துக்காட்டுகளின் மூலம் பொருத்திக் கூறுவதை படிக்குபோதே பக் என்கிறது. நம் நிலை எதுவென்று சிந்திக்க தூண்டுகிறது.

ஒவ்வொரு எடுத்துக் காட்டையும் நம் வாழ்வோடு ஒப்பிட்டு நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளும் அளவில் மிக அற்புதமானவை. நம்மை செதுக்கி கொள்ள தூண்டுதலாக அமைகிறது அல்ஹம்துலில்லாஹ்.

இதோ புத்தகத்தில் இருந்து என்னை மிகவும் கவர்ந்த ஒரு சிறு எ.கா சுருக்கமாக உங்களுக்காக:-

ஒரு நாள் இரவு, சிறுவன் ஒருவன் அடர்ந்த காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருக்கும்பொழுது அவன் காலில் ஒரு பை தட்டுப்படுகிறது. அதை அவன் கையில் எடுத்து தடவி பார்த்தால் பை முழுவதும் கற்கள். இருட்டில் தனிமை பயத்தில் இருந்த அவன் ஒரு இடத்தில் அமர்ந்தான், பையில் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து வீசினான். 

அருகிலிருந்த ஆற்றில் விழுந்த கல் “ப்ளக்” என்று சத்தம் கொடுத்தது. அந்த சத்தத்தில் ஆறுதல் அடைந்த சிறுவன் ஒவ்வொன்றாக விடியும் வரை வீசிக் கொண்டே இருந்தான். சூரியன் உதயமாகும் தருணத்தில் வீசிய கல் மின்னியதை கண்ட சிறுவன் பையை நோக்கினால், பையில் இருந்த அனைத்தும் மாணிக்க கற்கள்.

இருந்து என்ன பயன், அதில் பெரும்பாலான கல்லை அவன் வீசி எறிந்து இருந்தான். இதனால் இறுதியில் எந்த பயனும் இன்றி கைசேதப்பட்டான் சிறுவன்.

இருள், காடு, மாணிக்க கற்களை நம் வாழ்க்கையுடன் ஒப்பிடும் ஆசிரியர், இந்த இடத்தில் நேரத்தை மாணிக்க கற்களுக்கு ஒப்பிடுகிறார். நம் அறியாமையில் விலை மதிப்பில்லாத நம் நேரம் இவ்வாறு தான் வீணாகிறது என்பதை இச்சிறு எடுத்துக்காட்டு உணர்த்துகிறது. மனதில் மாற்றத்தை தேடுகிறது.

காலம் என்பது பொன் போன்றதல்ல; மாறாக உயிர் போன்றது. காரணம், பொன் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் - உயிர் இருந்தால். ஆனால் உயிரே போனால்... ஆம்! காலம் உயிரை போன்றதுதான். என்ன விலை கொடுத்தாலும் அதை திருப்பி வாங்க முடியாது என்ற மறுக்க முடியாத உண்மையை பல இடத்தில் நம் தலையில் 'நங்'கென்று ஆணி அடிக்கும் விதமாக புத்தகம் நம்மை பயணிக்கச் செய்கிறது. திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது, நம் உலக இச்சைகளை கட்டுக்குள் கொண்டு வர.

மேலும் நேரத்தை சேமிக்கும் வழிகள், வேலைகளை எப்படி பிரித்து செய்வது, எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஈருலகிற்கும் பயனுள்ள வகையில் எவ்வாறு செலவழிப்பது என்று பல குறிப்புகளை தருகிறது இப்புத்தகம். அல்ஹம்துலில்லாஹ்.

நேரம் வீணாகிவிட்டதே என்று மரணம் வரும் தறுவாயில் சிந்திப்பதில் பயனில்லை. இனி இருக்கும் காலங்களையாவது பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்...

படிக்கவே சோம்பேறிபடும் என்னையவே ஒரே சிட்டிங்கில் படிக்க வைத்த புத்தகம், படித்த பின் டைம் டேபிள் போட வைத்த புத்தகம். என் பேவரைட் லிஸ்டில் ஆட் செய்யப்பட்ட புத்தகம்.

மதிப்புரை எழுதுவதற்காக என் வாழ்க்கை சாதனையாக இரண்டாம் முறை படித்த புத்தகம்.

கண்டிப்பாக படிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு மாற்றத்தை இப்புத்தகம் ஏற்படுத்தும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

அனைவரும் வாங்கி படியுங்கள். காலத்தை கடமையாக வலியுறுத்திய இஸ்லாத்தில் பிறந்த நாம் எவ்வாறு நம் காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம் என்று நம்மை நாமே நிற்க வைத்து கேள்வி கேட்கும் நிலைக்கு நம்மை இப்புத்தகம் தள்ளிச்செல்லும் என்பதில் ஐயமில்லை.

டிஸ்கி: பல முக்கிய விஷயங்கள் எழுத நினைத்தேன், பட் இன்னும் நீண்டு விடும் என்று குறைத்துக் கொண்டேன்.

யாஸ்மின் பின்த் முஹம்மத் அலீ

Sunday, 15 December 2013

காலம் ஓர் ஆயுதம்!


'காலம் ஓர் ஆயுதம்' என்ற தலைப்பின் கீழ் காலத்தின் அவசியம் பற்றியும், அதை எவ்வாறு இறைவழியில் செலவிடலாம் என்பது பற்றியும் சகோதாரி ஆயிஷாவும், சகோதாரி ஆமினாவும் அவர்களின் உரையாடல் மூலமாக விளக்குகிறார்கள்.

ஆமினா: (அஸர் தொழுகைக்குப் பின்) அன்புச் சகோதாரி ஆயிஷா... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.

ஆயிஷா: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ. உள்ளே வாருங்கள் ஆமினா. நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா?

ஆமினா: அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் கிருபையால் எல்லோரும் நலமாக இருக்கிறோம்.

ஆயிஷா: என்ன ஆமினா... நோன்பு வந்ததில் இருந்து இத்தனை நாளாக இங்கு வரவே இல்லையே ஏன்?

ஆமினா: என்ன செய்வது? எல்லாம் நேரப் பற்றாக்குறைதான். அல்லாஹ்வின் கிருபையால் அருள் நிறைந்த ரமலான் மாதம் வந்தது. அம்மாதத்தில் செய்யக்கூடிய நல்ல அமல்களுக்குண்டான கூலி பல மடங்காகும். அதைத் தவற விட்டால் நாளை மறுமையில் கைசேதப்பட்டவர்களாகி விடுவோம். அப்படிப்பட்ட மாதத்தில் இறைவணக்கம் புரிவதற்கும் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதற்கும் நேரம் சாரியாக இருந்தது.

ஆயிஷா: (டி.வி சப்தத்தைக் குறைத்துக் கொண்டே) சரி ஆமினா... இப்போதாவது வந்தீர்களே... மிகவும் சந்தோஷம். என்ன சாப்பிடுறீங்க?

ஆமினா: அது இருக்கட்டும். நீங்க நோன்பு நோற்றீர்களா? இறைவணக்கமெல்லாம் எப்படி? ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு வைத்தீர்களா?

ஆயிஷா: அதை ஏன் கேட்கிறீங்க ஆமினா? எனக்கு தொழுகைக்கே நேரம் கிடைப்பதில்லை. எப்பொழுதும் வேலையும் குழந்தையுமாக இருக்கிறேன்.

ஆமினா: ஸுப்ஹானல்லாஹ். ஆயிஷா... உங்களிடமிருந்து இந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஆயிஷா: ஒரு நிமிடம்... (செல்போனில் அழைப்பு) ஹலோ யாரு மர்யமா? என்ன 12.30 மணிக்கு சீரியல் பார்க்கவில்லையா? நான் எப்பாடு பட்டாவது பார்த்து விடுவேன். வீட்டுக்கு சகோதாரி ஆமினா வந்திருக்கிறார்கள். உங்களுக்கு பிறகு அந்த சீரியல் கதையை சொல்கிறேன். (செல்போனை அணைத்து விட்டு) சாரி... நீங்க சொல்லுங்க.

ஆமினா: ஆயிஷா... நீங்க மரியமிடம் பேசியதை நான் கவனித்தேன். நல்ல விஷயம் செய்ய நேரமில்லை என்று சொன்ன உங்களுக்கு டிவி பார்க்க மட்டும் நேரம் இருக்கிறதா?

ஆயிஷா: வேலை பார்த்துக் கொண்டே டிவியும் பார்ப்பேன்.

ஆமினா: வேலை பார்க்கவும், டிவி பார்க்கவுமா வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்தான்? மனிதர்களாகிய நாம் ஒரு உன்னத நோக்கத்திற்காக படைக்கப் பட்டுள்ளோம். அந்த நோக்கம்தான் இறைவனை வணங்குவது.

ஆயிஷா: என்ன ஆமினா சொல்றீங்க? உலகில் பிறந்தோம், வாழ்கிறோம், வெந்ததைத் தின்று விட்டு விதி வந்தால் சாவோம்... இப்படித்தான் என்னுடைய நாட்கள் நகர்கிறது.

ஆமினா: ஆயிஷா... சாவோம் என்று சொல்கிறீர்களே. அது உங்களுக்கு எளிதாக உள்ளதா? மரணத்திற்குப் பின் மறுமை வாழ்வு உண்டு என்று நம்பக்கூடிய உண்மை முஸ்லிம்கள் நாம். அதை மறந்து விடாதீர்கள்.

ஆயிஷா: எல்லாம் தொரியத்தான் செய்கிறது. தொழத்தான் நேரம் கிடைக்கவில்லை.

ஆமினா: ஆயிஷா... வல்ல ரஹ்மான் தன் திருமறையில் “இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (51:56)” என்று கூறுகிறான். நம்மை அவன் படைத்ததின் நோக்கமே அவனை வணங்கத்தான். நாம் அதையே மறந்து வாழ்ந்தால் என்ன அர்த்தம்?

ஆயிஷா: என்ன செய்வது? எனக்கு நேரம் கிடைப்பதில்லை. வேலை நேரம் போக குழந்தையை கவனிப்பது. குழந்தை தூங்கினால் நானும் தூங்கிவிடுகின்றேன். பின் இன்டர்நெட்டில் ஈமெயில் பார்ப்பேன்.

ஆமினா: உங்களிடம் இறைவன் விசாரிக்கும் நாளைப் பற்றி உங்களுக்கு சொல்கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு சின்ன கேள்வி. அமானிதம் என்றால் என்ன?

ஆயிஷா: எனக்குத் தொரிந்ததைச் சொல்கிறேன். பிறர் நம்மிடம் ஒப்படைக்கும் பொருளைப் பாதுகாத்து அவர்கள் கேட்கும்போது அதை நல்ல முறையில் ஒப்படைக்க வேண்டும். இதில் நம்முடைய நேர்மையை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆமினா: நல்ல பதில்தான். இதே போன்றுதான் ஒரு மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வாழ்நாள், அவனுக்கு இறைவன் வழங்கிய அமானிதம் ஆகும். அதைப் பற்றி இறைவன் நாளை மறுமையில் நம்மை கண்டிப்பாக கேள்வி கேட்பான்.

இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “இறுதித் தீர்ப்பு நாளில் நான்கு விஷயங்களுக்கு பதில் சொல்லாதவரை ஆதமுடைய மகனின் கால்கள் நகராது. அவன் தன் வாழ்நாளை எவ்வாறு செலவிட்டான், இளமையை எவ்வாறு செலவிட்டான், எப்படி பொருள் சம்பாதித்தான் - அதை எவ்வாறு செலவிட்டான், தன் அறிவை எப்படி செலவிட்டான்.”

ஆயிஷா: இவை அனைத்தும் காலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறதே! இப்படியுமா சொல்லியிருக்கிறான் அல்லாஹ்?

ஆமினா: இது மட்டுமா? வல்ல ரஹ்மான் தன் திருமறையில் காலத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பல இடங்களில் சொல்லியிருக்கிறான். நாம் எல்லோருக்கும் தொரிந்த சிறிய அத்தியாயமான சூரா அல் அஸ்ரை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டே துவக்குகிறான்.

ஆயிஷா: இப்படியெல்லாம் அல்லாஹ் சொல்லியிருக்கிறான். ஆனால் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லையே.

ஆமினா: நல்ல காரியங்களை உடனே செய்யுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். “ஏழு பேரழிவுகளில் ஒன்று உங்களை பீடிக்கும் முன் நன்மைகளைச் சேகரியுங்கள். 1) பட்டினி - அது உங்களின் அறிவுக்கு அணை போடலாம். 2) வசதி - அது உங்களை வழிகெடுக்கலாம். 3) நோய் - அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கலாம்.  4) முதுமை - அது உங்கள் புலன்களைப் பாதிப்புக்குள்ளாக்கலாம். 5) திடீர் மரணம். 6) தஜ்ஜால். 7) உலக முடிவுநாள் - அது உண்மையிலேயே மிகவும் கடினமானதும், கசப்பானதுமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆயிஷா: இப்படிப்பட்ட நேரத்தை நான் எப்படியெல்லாம் வீணடித்து விட்டேன்! இனி நான் என்னுடைய நேரத்தை ஒதுக்கி ஐந்து வேளை தொழுகைகளையும் குறித்த நேரத்தில் தொழுவேன்.

ஆமினா: தொழுகையோடு சேர்த்து ஒரு நிமிடத்தில் கூட அதிகமான நன்மைகளை அள்ளிவிடலாம்.

ஆயிஷா: என்ன? ஒரு நிமிடத்தில் அதிகமான நன்மைகளா? அதை எனக்கும் சொல்லித் தாருங்களேன்.

ஆமினா: கண்டிப்பாக சொல்லித் தருகிறேன். அதில் எனக்கும் நன்மை உண்டு. மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் கேளுங்கள். எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்கிறேன்.

1) ஒரு நிமிடத்தில் சூரா அல் ஃபாத்திஹாவை சாதாரணமாக ஓதினால் 3 தடவை ஓதலாம். ஒரு தடவை அல்·பாத்திஹா ஓதினால் 600 நன்மைகள் கிடைக்கும். ஆக, மூன்று தடவை ஓதினால் 1800 நன்மைகள் கிடைத்து விடும், அதுவும் ஒரு நிமிடத்தில்.
2) ஒரு நிமிடத்தில் சூரா அல் இஃக்லாஸை சாதாரணமான நடையில் ஓதினால் 20 தடவை ஓதலாம். இந்த சூராவை ஓதுவது முழு குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதியை ஓதியதற்குச் சமம். நீங்கள் 20 தடவை ஓதினால் அது திருக்குர்ஆன் முழுவதையும் 7 தடவை ஓதுவதற்குச் சமமாகி விடும்.
3) ஒரு நிமிடத்தில் திருக்குர்ஆனின் ஒரு பக்கத்தை ஓதி விடலாம்.
4) ஒரு நிமிடத்தில் திருக்குர்ஆனின் சிறிய வசனத்தை மனப்பாடம் செய்து விடலாம்.
5) ஒரு நிமிடத்தில் “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்” என்று 20 தடவை ஓதி விடலாம்.
6) ஒரு நிமிடத்தில் 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்' என்று 50 தடவை கூறலாம். இவை நாவுகளால் சொல்வதற்கு மிகவும் இனிமையானவை. அல்லாஹ்வின் தராசுத் தட்டில் மிக்க கனமானவை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹா¡ரி,முஸ்லிம்)
7) ஒரு நிமிடத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை 50 தடவை கூறலாம். இது தௌஹீத் எனும் ஏகத்துவம் பொதிந்த வார்த்தையாகும். ஒரு மனிதன் உயிர் விடும் போது கடைசி வார்த்தை இதுவாக இருந்தால் அவன் சுவனம் புகுவான் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
8) ஒரு நிமிடத்தில் ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என்று 100 தடவை கூறலாம்.
9) ஒரு நிமிடத்தில் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கும் முகமாக 'அஸ்தஃபிருல்லாஹ்' என்னும் சொல்லை 100 தடவை கூறலாம்.
10) ஒரு நிமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். ஒரு ஸவாத்திற்கு அல்லாஹ் நம் மீது 10 அருள்களைப் பொழிகிறான். ஆக, 500 அருள்கள் நமக்குக் கிடைக்கிறது.
11) ஒரு நிமிடத்தில் எளிதில் புரிகின்ற நல்ல இஸ்லாமிய நூல் ஒன்றில் இரண்டு பக்கங்கள் படிக்கலாம்.
12) ஒரு நிமிடத்தில் நம் இறைவனிடத்தில் கையேந்தி துஆ செய்யலாம்.
13) ஒரு நிமிடத்தில் துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறலாம்.
14) ஒரு நிமிடத்தில் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை - ஆக, 100 தடவை ஓதி இறைவனை அதிகம் நினைவு கூரலாம்.

ஆயிஷா: எல்லாம் புரிந்தது சகோதரி. நான் இரவில் அதிக நேரம் விழித்து விடுவதால் பகலில் சீக்கிரமாக விழிப்பதில்லை. என்ன செய்வது?

ஆமினா: “அல்லாஹ்வே... எனது சமுதாயம் அதிகாலையில் எழுவதற்கு அருள் புரிவாயாக!” என்று அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக பிரார்த்திக்கும்போது கூறினார்கள் (அபூதாவூத்).

அதிகாலையில் எழுவதில் அல்லாஹ் தன் அருள்களைப் பொதிந்துள்ளான். அது வெற்றியின் பக்கம் நம்மை அழைத்துச் செல்லும். இரவு முன்கூட்டியே படுத்து அதிகாலை சீக்கிரமே எழும் பழக்கம் ஒரு மனிதனை ஆரோக்கியமுள்ளவனாக ஆக்கும். புத்திசாலியாக மாற்றும். வளத்தைக் கொண்டு சேர்க்கும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நீங்கள் உறங்கும்போது ஷைத்தான் உங்கள் தலையின் பின்புறம் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். உனக்கு மிகப் பெரிய இரவு இருக்கிறது உறங்கு என்று சொல்லியே ஒவ்வொரு முடிச்சுக்கும் முத்திரையிடுகிறான். அதிகாலையில் நீங்கள் எழுந்து நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் முதல் முடிச்சு அவிழும். தொழுகைக்காக ஒழு செய்யும்போது இரண்டாவது முடிச்சு அவிழும். நீங்கள் தொழுதால் மூன்றாவது முடிச்சு ஆவிழும். அந்தக் காலைப் பொழுதில் உயிரோட்டத்தோடும் உள்ள சுத்தியோடும் உலா வருவீர்கள். அப்படி இல்லையெனில் அந்தப் பொழுது உங்களுக்கு தீமையாகவும் சோம்பேறித்தனமாகவும் இருக்கும்.” (புகாரீ)

அதேபோல் அறிவியல் பூர்வமான உண்மையும் அதில் உண்டு. அதிகாலை வேளையில் வாயு மண்டலத்தில் 'ஓஸோன்' காற்று அதிகமாக இருக்குமாம். அதனை அதிகமாக சுவாசிப்பவர்களுக்கு ஆயுள் நீடிக்குமாம். ஆயுள் நீடிக்கிறது என்றால் நம் உடலில் உள்ள நோய்களை ஓஸோன் காற்று குணப்படுத்துகிறது என்று தானே அர்த்தம்.

ஆயிஷா: ஆமாம். ஒத்துக் கொள்கிறேன். இனி அதிகாலையில் எழுந்து தொழுவதற்கு நானும் முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

ஆமினா: மிக்க மகிழ்ச்சி. அத்தோடு டிவி பார்ப்பதையும் நீங்கள் குறைத்து விடுங்கள்.

ஆயிஷா: அது ஒரு சின்ன பொழுதுபோக்குதானே!

ஆமினா: நான் முதலில் சொன்னேனல்லவா... நம்முடைய பொழுதுபோக்கு நன்மையானதாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல. கெட்டதைப் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம், கெட்டதைக் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கெட்டதைப் பேசுவது வாய் செய்யும் விபச்சாரம்.

வல்ல ரஹ்மான் நாளை மறுமையில் உன்னைக் கேள்வி கேட்கும்போது இப்படிப்பட்ட அருவருப்பான பதிலையா சொல்வாய்? கொஞ்சம் சிந்தித்துப் பார்.

ஆயிஷா: உங்களை சந்தித்து உங்கள் மூலம் பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள அல்லாஹ் நாடி இருக்கின்றான். நானும் இனி இறைவழி சொன்ன நேர நிவாகத்தைப் பேணி நடந்து கொள்கிறேன். எனக்காக நீங்களும் துஆச் செய்யுங்கள்.

ஆமினா: இன்ஷா அல்லாஹ் துஆச் செய்கிறேன். எனக்கும் மஃக்ரிப் தொழ நேரமாகி விட்டது. நான் வருகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆக்கம் : சகோதரி மன்ஸூரா

நன்றி : "அல் மர்ஜான்" (சவூதி அரேபியாவில் இந்தியா ஃபிரட்டர்னிட்டி ஃபோரம் பெண்கள் தமிழ் பிரிவு மூலம் வெளிவரும் காலாண்டிதழ்)

Monday, 7 October 2013

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் - பதிப்புரை (சுருக்கம்)


நூலில் வெளிவந்துள்ள 'பதிப்புரை'யின் சுருக்கம்:

நேரம் குறித்த அங்கலாய்ப்பு நம் எல்லோருக்கும் உண்டு. வாழ்வில் வெற்றி பெற்றவர்கள்/வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவர்கள் என அனைவரும் நேரத்தின் போதாமை மற்றும் நேர நிர்வாகத்தின் அவசியம் குறித்து உணர்ந்திருக்கின்றனர்.

அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டியான இஸ்லாம் நேரம் குறித்து மனிதர்களை கடுமையாக எச்சரிக்கின்றது. தற்போது நிர்வாகவியல் துறையில் நிபுணர்களாக உள்ளவர்கள் நேர நிர்வாகம் என்பதை கலை என்பதோடு, உலகியல் வெற்றியின் தேவையெனவும் அதை வலியுறுத்துகின்றனர்.

இஸ்லாம் இதனிலும் ஒரு படி மேலே போய் நேரத்தை முறையாக செலவழிப்பது என்பதை ஒரு கடமையாகவே குறிப்பிடுகின்றது. நவீன நிர்வாக தத்துவங்களோ உலகியல் வெற்றி குறித்து பேசும்போது இஸ்லாமோ இம்மை மற்றும் மறுமை வெற்றியையும் இணைத்தே பேசுகின்றது.

தமிழ் இஸ்லாமியப் பதிப்புலகில் நேர நிர்வாகம் குறித்து முதன் முதலாக வெளிவரும் இந்நூல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம் - வாசகர்கள் ஒத்துழைத்தால்!


நன்றி: adiraipost.blogspot.ae

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 2


M.Z. முஹம்மது இஸ்மாஈல், ஷார்ஜா

1. அதிக பட்சம் 2-1/2 இல் இருந்து 3 மணி நேரம் போதும் இப்புத்தகத்தை படித்து முடிப்பதற்கு. அந்த அளவு விறுவிறுப்பாக இருந்தது படிப்பதற்கு. படித்த அனைத்தையும் நம் வாழ்வில் உபயோகப்படுத்தினால் இன்ஷாஅல்லாஹ் நாம் மேல் நிலைக்கு உயர வாய்ப்பு இருக்கின்றது.

2. எழுத்து நடை மிகவும் அழகாக இருக்கின்றது.

3. நேர நிர்வாகம் மட்டும் அல்ல இந்த புத்தகம். ஒரு முஸ்லிமின் பண்புகளின் நிர்வாகம் என்று கூட குறிப்பிடலாம். அந்த அளவு ஒரு முஸ்லிமின் பண்புகளை சரி செய்யக்கூடிய புத்தகமாக இருக்கின்றது.

4. காதர் கதையை விட சிறுவன் ஆற்றில் மாணிக்கத்தை எறிந்த கதை நெஞ்சில் இறங்கியது.

5. வருடம், மாதம், வாரம், மணித்தியாலம், நிமிடம், வினாடி... பற்றி மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது.

6. ஒரு நிமிடத்தில் என்ன செய்யலாம் என்று படிக்கும் பொழுதே ஹதீதுகளையும் திக்ருகளையும் ஓத வைத்து விட்டார் ஆசிரியர். அருமையான முயற்சி.

7. ஒரு நிமிடத்தில் "ஒரு நிமிடத்தில் செய்ய வேண்டியவை" பற்றி அறிந்து கொண்டேன்.

8. இஸ்லாத்தின் பாதையில் யார் நஷ்டவாளி என்பதை உணர்ந்தேன்.

9. நமக்கென்று ஒரு பை - புத்தகங்கள் படிக்க நேரமே இல்லை என்பதற்கும் கிடைக்கிற நேரங்களிலெல்லாம் புத்தகங்கள் படிக்கிறேன் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தீர்களா? (மிகவும் முக்கியமான விஷயம்).

நன்றி: onlinebookreadersclub.blogspot.ae

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 1


ஸாதிக் மீரான், தம்மாம்


நேர நிர்வாகம் என்ற தலைப்பு, நூலின் உட்புகுமுன் எதிர்மறையான சிந்தனையை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.

காரணம், இதுவரை நேர நிர்வாகம் குறித்து நாம் வாசித்த நூல்களில் அதுநாள் வரை கேட்டே இராத புதிய ஆங்கில வார்த்தைகள், ஒன்றிற்கு பத்து முறை படித்தாலும் மனதில் நிற்காத சுலோகன்கள், எளிதில் விளங்குவது போன்று தோன்றும் ஆனால் மனதில் நிற்காத உதாரணங்கள் என்பவைகளைத்தான் அதிகம் கண்டிருக்கிறேன்.

ஆனால் இந்நூல் வாசிக்க வாசிக்க சலிப்பில்லா நடை, பாமரனும் விளங்கிக் கொள்ளும் உதாரணங்கள், அவ்வப்போது நம் காதுகளில் விழும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் என்பவை, சொல்ல வரும் விஷயத்தை எளிதில் மனதில் பதிய வைப்பவைகள்.

நேர நிர்வாகத்தை மேலைநாட்டு மினுமினுப்பில் ஒப்பீடு செய்பவர்களுக்கு இந்த நூலில் புதுமைகள் இல்லாமல் தோன்றலாம். ஆனால் மரணத்தை நோக்கிய பயணத்தில், மனிதன் தன் இறைவனை நெருங்குவதற்கு தடையாக இருக்கும் நேரத்தை எங்ஙணம் நிர்வகிக்க முடியும் என்பதற்கான பல நூறு வழிகள் நூல் முழுக்க விண்மீன்களாய் விரவிக் கிடக்கின்றன.

வாசிப்பினூடே மனதில் பதிந்த சில சிறப்பம்சங்களுள் சில: 

• நேரம் என்ற மாணிக்கக் கல்லை வெறும் கல் என்று எண்ணிக் கொண்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி என்ன செய்வது என்று தெரியாமல் நம் வாழ்க்கை முழுவதையும் வீணாக தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். (பக்கம் : 22)

• ஒரு நிமிடத்தில் என்னென்ன செய்யலாம் எனும் 21 குறிப்புகள். (பக்கம் : 28-31)

• ஒரு ஆசிரியரின் குடுவை நிரப்பும் கதை. (பக்கம் : 56)

• மனதைக் கட்டுப்படுத்தி ஷைத்தானை ஆள்பவர்கள்தான் நேரத்தை ஆக்கப்பூர்வமாக ஆளும் சாதனையாளர்களாக இம்மையிலும்,
மறுமையிலும் ... (பக்கம் : 91)

• வாழ்க்கை என்பது சாவை நோக்கிய ஒரு பயணம். நாமெல்லாம் மரணத்தின் வாயிலில் கைதி போல் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றோம். நமக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் நெருங்க நெருங்க ஒன்றும் செய்ய இயலாமல் ”ஙே” என்று விழித்துக் கொண்டிருக்கின்றோம். (பக்கம் : 112)

• மனிதர்கள் நேரத்தைக் கொல்வது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நேரம் ஆரவாரமின்றி அமைதியாக மனிதனைக் கொன்று கொண்டிருக்கிறது. (பக்கம் : 115)

• நாம் எப்போதும் பிஸியாக - பரபரப்பாக இருக்கின்றோம். ஆனால் நாளின் இறுதியில் இஸ்லாத்திற்காக என்ன செய்து கிழித்தோம்? (பக்கம் : 130)

• ஆம்! மரணம் அனேக தர்க்கங்களுக்கு அணை போடுகின்றது. முடிவு கட்டுகின்றது. (பக்கம் : 135)

குறைத்திருக்கலாமோ என்று தோன்றும் சில விஷயங்கள்:

• காலம் என்பது ஓர் அருள் என்ற தலைப்பில் இரவும் பகலும் குறித்து குர்ஆன் சொல்லும் 8 வசனங்கள். இதனை சுருங்க இரண்டு அல்லது மூன்று வசனங்களில் சுருக்கி இருக்கலாமோ? (பக்கம் : 20 - 21)

• நேரத்தைத் திட்டமிடுதலும், ஒருங்கிணைத்தலும் எனும் தலைப்பில் சூறா யூசுஃபின் 47 – 48 வசனங்கள் மன்னர் கண்ட கனவிற்கான விளக்கமாகவே குர்ஆன் சொல்கிறது. யூசுஃப் (அலை) அவர்களின் தனிப்பட்ட திட்டமிடல் அல்ல என்பது சரியாக இருக்குமோ? (பக்கம் : 71)

• நேரத்தை வீணடிப்பது பற்றிய விழிப்புர்வு எனும் தலைப்பில் எடுத்தாளப்பட்டுள்ள சூறதுன் நூரின் 27 – 28 வசனங்கள் சொல்ல வரும் விடயம் அதுவல்ல என்பதால் அதனை தவிர்த்திருக்கலாமோ? (பக்கம் : 39 - 40)

• நூலின் துவக்கத்தில் தலைப்புகளை எளிதில் சென்று படிக்கும் வகையில் ஒரு உள்ளடக்கப் பட்டியலை இணைத்திருக்கலாமோ?

மொத்தத்தில் வர்ணங்கள் பல தீட்டி விளம்பரம் செய்து மக்களின் பணத்தை சட்டைப் பைகளில் திணித்துக் கொள்ள நவீன சிந்தனைவாதிகள் நடத்தும் நேர மேலாண்மை குறித்த வகுப்புகளுக்கு சாவு மணி அடிக்கும் நூல் இது என்றால் அது மிகையல்ல.

இந்நூலினூடே ஆசிரியர் ஏராளமான செய்திகளை சொல்லியிருக்கின்றார் என்றாலும் அவைகளில் முத்தாய்ப்பாக, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்களே, இதோ நீங்கள் அன்றாடம் படிக்கும் திருமறையிலும், நபிமொழியிலும் நிர்வாகவியல் குறித்த ஏராளம் செய்திகள் நிரம்பிக் கிடக்கின்ற, அவைகளை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா எனும் கேள்வியே!

இவ்வளவு எளிதாக நிர்வாகவியல் குறித்த நூல் எழுத முடியுமா எனும் ஆச்சரியமான கேள்வியை இஸ்லாமிய எழுத்தாளர்களிடையே, சிந்தனைவாதிகளிடையே இந் நூல் எழுப்பப் போவது உண்மை.

அந்த வகையில் இந்த நூல் ஒரு மைற்கல் என்றால் அது மிகையல்ல!


நன்றி: puthiyadesam.blogspot.ae