Showing posts with label மனதோடு மனதாய்.... Show all posts
Showing posts with label மனதோடு மனதாய்.... Show all posts

Wednesday, 23 December 2020

அல்லாஹ்வின் அருள்மொழி!

உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 7000 மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது கலாச்சாரம், வாழ்க்கை ஆகியவற்றின் கண்ணாடி போன்றது. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் அனைத்தையும் பிரதிபலிக்கின்ற ஊடகம்தான் மொழி.
அல்லாஹ் மனிதனுக்கு அளித்துள்ள ஒரு மகத்தான அருள் இந்த மொழி என்பது. இதனை அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்: “அளவற்ற அருளாளன். இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.” (55:1-4)
தான் நினைப்பதைப் பிறருக்கு எத்தி வைக்கும் ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கினான். தான் விரும்பியதை, தான் வெறுப்பதை, தனக்கு தேவையுள்ளதை என்று எல்லாவற்றையும் மனிதன் பிறருக்குத் தெரிவிப்பதற்கு அல்லாஹ் பல்வேறு மொழிகளை மனிதனுக்கு நல்கியுள்ளான்.
இந்த மொழியின் மூலம் மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பந்தங்களை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். ஒருவன் எந்த நாட்டைச் சார்ந்தவன், நாட்டில் எந்தப் பகுதியைச் சார்ந்தவன் என்lபதை அவன் பேசும் மொழியை வைத்து, அந்த மொழியை அவன் உச்சரிக்கும் விதத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
உலகிலுள்ள மொழிகளில் சிலவற்றுக்கு மொழிச் செறிவும் இலக்கியச் செறிவும் அதிகம் உண்டு. மிகத் தொன்மையான தமிழ் அதில் ஒன்று. அதேபோன்று அனைத்து சிறப்புகளும் அமைந்துள்ள மொழிதான் அரபி.
நமது தமிழைப் போலவே அரபியும் ஒரு செம்மொழி. அதன் சொல்வளம் வியக்கத்தக்கது.
ஆண்டு என்பதற்கு 24 சொற்களையும்
ஒளி என்பதற்கு 21 சொற்களையும்
இருள் என்பதற்கு 52 சொற்களையும்
கதிரவன் என்பதற்கு 29 சொற்களையும்
நீர் என்பதற்கு 170 சொற்களையும்
ஒட்டகம், வாள் போன்ற வார்த்தைகளைக் குறிக்க 1000 சொற்களையும்
கொண்டுள்ளது அரபி.
“நாகரிக உலகின் மத்திய காலக்கட்டத்தில் பல நூற்றாண்டுகள் அரபி ஒரு கற்பிக்கும் மொழியாக, கலாச்சார மொழியாக, முற்போக்குக் கருத்துகளை முன்னிறுத்திய மொழியாக விளங்கியது. 9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை தத்துவம், மருத்துவம், வானியல், புவியியல் பற்றிய அநேகப் படைப்புகள் அரபியில் படைக்கப்பட்டது போல் வேறு எந்த மொழியிலும் படைக்கப்படவில்லை” என்கிறார் கீழ்த்திசை மொழியியல் வல்லுநர் பிலிஃப் கே. ஹிட்டி.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அரபி மொழியோடு அவனுக்கு ஆழமான தொடர்பு இருக்கவேண்டும். ஏனெனில் இது அவனது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு, வாழ்வின் அனைத்துத் திசைகளுக்கும் வழிகாட்டியாக அவன் தேர்ந்தெடுத்துள்ள மார்க்கமான தீனுல் இஸ்லாமை அல்லாஹ் மனிதனுக்குக் கற்றுக் கொடுப்பது அரபி மொழியில்தான்.
(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்தக் குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). (39:28)
இன்று 26 நாடுகளில் ஆட்சி மொழியாக அரபி இருக்கிறது. சுமார் 30 கோடி மக்கள் அரபி மொழியைப் பேசுகின்றனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் அரபியும் ஒன்று. சின்னஞ் சிறிய வார்த்தைகளில் பென்னம் பெரும் கருத்துகளைச் சொல்லும் தனிச் சிறப்பு மிக்க மொழியாக அரபு மொழி விளங்குகிறது.
(குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும். இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)
இந்த அற்புத மொழியைக் கற்பது நமது கடமை என்றும்
அதனைக் கற்றால்தான் நம்முடைய தீனை
முழுமையாகக் கற்க முடியும் என்றும்
அதனை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் ஒரு முஸ்லிம் எண்ணவேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும். அரபி மொழியை முழுமையாகக் கற்கவேண்டும்.
டிசம்பர் 18 - சர்வதேச அரபிமொழி தினம்!

 

Tuesday, 7 November 2017

அகங்காரம்

1912ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்திலிருந்து 'டைட்டானிக்' கப்பல் கிளம்பியபோது, 'கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது' என்று இந்தக் கப்பலின் கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் இறுமாப்புடன் சொன்னார். இந்தப் பெருமையுடனும், அகங்காரத்துடனும் கிளம்பிய ‘உலகிலேயே நகரும் பிரம்மாண்ட அரண்மனை’ என்று பறைசாற்றப்பட்ட அந்தக் கப்பல், வெறும் ஜந்தே நாளில் பனிப் பாறையில் மோதி தனது முதல் பயணத்திலேயே சமாதியானது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் நடுக்கடலில் கடுங்குளிரில் மூழ்கி மாண்டனர்.
இது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் எத்தனையோ அகங்காரம் கொண்டோர் அவமானப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றனர். ‘அன ரப்புகுமுல் அஃலா’ என்று கொக்கரித்த சிம்மாசன அகம்பாவம் தலையில் முறுக்கேறிய ஃபிர்அவ்ன், நீரை வரவழைப்பதே நான்தான் என்று எக்களித்த ஃபிர்அவ்ன் அந்த நீரிலேயே மூழ்கிப் போனான். செல்வச் செருக்கில் தன்னை விட்டால் ஆளில்லை என மார் தட்டிய காரூன் போன்றவர்கள் இறைத் தண்டனைக்காளாகி சிறுமைப்பட்டு மாண்டனர்.
பெருமைக்குரியவன் அல்லாஹ் மட்டுமே. அவன் தன்னை ‘முதகப்பிர்‘ (பெருமைக்குரியவன்) என்று அழைக்கிறான். அனைத்துப் பெருமைகளுக்கும் சொந்தக்காரனான அல்லாஹ் மட்டுமே முதகப்பிர். எதிலும் முழுமை, அளவின்மை, வரையறையின்மை, கட்டுப்பாடின்மை என்பது அவனுக்கு மட்டுமே உடையது. ஆகவே அவன் பெருமைப்பட முழுத் தகுதியும் அருகதையுமுடையவன்.
அவனுடைய படைப்பினங்கள் ஒன்றுக்கும் அந்த உரிமை இல்லை. ஒரு முஃமினின் அத்தியாவசிய பண்பு பணிவு. எவனது உள்ளத்தில் அனைத்துப் பெருமைகளுக்கும் உரிமை படைத்தவன் வல்ல அல்லாஹ் ஒருவன்தான் என்ற எண்ணம் மேலோங்குகிறதோ அவன் எப்பொழுதும் பணிந்து நடப்பான். செருக்கு கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை உணர்ந்து வாழ்வான்.
பணிவு மனிதனை உயர்த்தும். ஆணவம் மனிதனைத் தாழ்த்தும். ‘எவர் அல்லாஹ்வுக்கு பணிந்தாரோ அவரை அல்லாஹ் உயர்த்துவான். மேலும் எவர் பெருமை கொண்டாரோ அவரை அல்லாஹ் தாழ்த்துவான்’என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அல்-முஃஜம் அல்-அவ்ஸத்)
“நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, “பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே” என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பாளர்: ஹாரிஸா பின் வஹ்பு, நூல்: புகாரீ)
“பணிவு கண்ணியவான்களின் குணங்களைச் சார்ந்தது. இறுமாப்பு நீசர்களின் குணங்களைச் சார்ந்தது. மனிதர்களில் அந்தஸ்தால் உயர்ந்தவர் தனது அந்தஸ்தைப் பாராதவராவார். அவர்களில் சிறப்பால் உயர்ந்தவர் தனது சிறப்பைப் பாராதவராவார்’என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனை நாம் புகழ்வதால் இறைவனுடைய தகுதி கிஞ்சிற்றும் உயர்ந்து விடப் போவதில்லை. மாறாக, நமது தகுதிதான் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயரும்.
நமக்கு எது கிடைத்தாலும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று திருப்தியுறும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால், நமக்குக் கிடைக்கும் எந்த வெற்றியும் நம்மால் ஆனது அல்ல, இறைவன் நம் மீது கொண்ட கருணையினாலேயே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் ஆணவம், அகங்காரம், பெருமை என்று அனைத்துமே நம்மை விட்டு பறந்து விடும்.
“எவரது உள்ளத்தில் அணுவளவு மமதை உள்ளதோ அவர் சுவர்க்கம் புக மாட்டார்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘பெருமை என்பது உண்மையை மறுப்பதும் மனிதர்களை அற்பமாகப் பார்ப்பதுமாகும்’ என்று பெருமைக்கு விளக்கம் அளித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் பணிவுடனேயே வாழ்ந்தார்கள். பணிவையே மக்களுக்கு போதித்தார்கள். அகங்காரம், பெருமை, கர்வம் போன்றவற்றைக் கொண்டு மக்களை எச்சரித்தார்கள். அவர்களின் பணிவு காரணமாக அல்லாஹ் அவர்களை ஈருலகிலும் உயர்த்தினான்.
எனவேதான் பெருமையை மனிதனுக்கு ஹராமாக்கியது இஸ்லாம். அதனைப் பாவமாகப் பார்ப்பதுடன் அதற்குத் தண்டனைகளையும் விதித்துள்ளது. பெருமைக்காரர்கைளையும், ஆணவக்காரர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
மேலும் உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! மேலும் பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் பெருமையாக நடப்பவர், பெருமையடிப்பவர் எவரையும் நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 31:18)

Saturday, 6 May 2017

நெருக்கடியில் முஸ்லிம்களின் நிலைப்பாடு!


இன்று முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலகட்டம். ஆட்சி பீடங்கள் எதிரிகளின் கைகளில் அடைக்கலமாகி விட்ட நேரம் இது. மாட்டு உயிரை விட மலிவாக முஸ்லிம்களின் உயிர்கள் மாறிவிட்ட காலம் இது.

இந்தச் சமயத்தில் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு மிக முக்கியம் வாய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இக்கட்டான காலத்தில் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள், எப்படி தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இன்று இந்தியா மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மட்டும் கழுத்துச் சுறுக்கு இடப்படுகிறது. பலருக்கும் முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தில் மட்டும் மாச்சரியங்கள் ஏற்பட்டு விடும்.

இதே நிலை அன்றைய மக்காவிலும் இருந்தது. மக்காவின் மதச் சடங்குகளைத் தாண்டி வெளியிலுள்ள வணக்க வழிபாட்டு முறைகள் எதனையும் எதிர்க்கும் பழக்கம் மக்காவாசிகளுக்கு இருந்ததில்லை. இறைபக்தர்களும், வியாபாரிகளுமாக வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வந்து போகின்ற ஊராக மக்கா இருந்ததால் கலாச்சார சகிப்புத்தன்மை இயல்பாகவே அங்குள்ள மக்களுக்கு இருந்தது.

புனித கஅபா ஆலயம் உள்ள பகுதியில் அமைதி குலையாமல் குறைஷிகள் சிறப்பு கவனம் எடுத்து பார்த்துக் கொண்டார்கள். அங்கே உரிமை மீறல்களையும், இரத்தம் சிந்துவதையும் அவர்கள் அனுமதித்திடவில்லை.

அதனால்தான் மக்காவாசிகளின் பலதெய்வக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த வரகா இப்னு நவ்ஃபல், ஸைத் இப்னு கத்தாப் போன்ற வேற்று மதப் பண்டிதர்கள் எந்தவித அச்சமுமில்லாமல் மக்காவில் சுதந்திரமாக வாழ முடிந்தது. அப்படியானால் முஹம்மத் (ஸல்) அவர்களின் புதிய மார்க்கத்தை மட்டும் மக்காவாசிகள் மல்லுக்கட்டி எதிர்த்தது ஏன்?

முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் இருந்த அதிக முக்கியத்துவத்தை அவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்தார்கள். தங்கள் சமூக அந்தஸ்து தகர்ந்து போகும் என்று அஞ்சினார்கள். அதனால்தான் அவர்கள் அண்ணலாரையும், அவர்தம் தோழர்களையும் ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தார்கள்.

இன்று இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் எதிரிகள் அதிகமாக குறி வைப்பதும் இதே காரணத்திற்காகத்தான். இஸ்லாம் தழைத்தோங்கி விட்டால், முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளுடன் வாழ ஆரம்பித்து விட்டால் அவர்களது குடுமிகள் ஆட்டம் கண்டு விடும் என்று அஞ்சுகிறார்கள்.

மக்காவுக்கு சிறிது தூரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் முஸ்லிம்கள் ஒரு தடவை கூட்டாக தொழுகையில் ஈடுபட்டிருந்ததை குறைஷிகள் பார்த்தவுடன் அவர்களைத் தாக்கினார்கள். ஆட்கள் குறைந்த பலஹீனமான நிலையிலும் முஸ்லிம்கள் கையில் கிடைத்ததைக் கொண்டு திருப்பித் தாக்கினார்கள். ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) ஒட்டகத்தின் நாடி எலும்பைக் கொண்டு எதிரிகளைத் தாக்கினார்.

ஒரு சமூகத்தின் மேல் தொடர்ந்து நடத்தப்படும் துன்புறுத்தல்களும், புறக்கணிப்புகளும் அதன் தனித்துவம் பாழ்படுவதற்குக் காரணமாகி விடும். அச்சம் என்பது அடிமைத்தனத்தின் பாதையைத் திறந்து கொடுக்கும்.
அதனால்தான் அண்ணலார் அவர்தம் தோழர்களை சுதந்திரமாக வாழ வைக்க முயற்சிகளை எடுத்தார்கள். எதிரிகளின் விமர்சனங்களையும் கிண்டல்களையும் கண்டு பயந்து ஒதுங்கி நிற்காமல் மக்காவிலேயே அவ்வப்பொழுது பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தங்கள் உரிமைகள் எதனையும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. குறைஷிகளின் பிடியிலிருந்த கஅபாவில் வைத்து மக்கள் கேட்கும்படி உலக மறையை உரக்க ஓதினார்கள். பகிரங்கமாக பல பேர் பார்க்கும் வண்ணம் தொழுதார்கள்.

நிராகரிப்பாளர்களுக்கு பலமான பதிலடிகள் அடங்கிய குர்ஆன் பாகங்கள் இறங்கிய காலகட்டமாக இருந்தது அது. ஊர்க்காரர்களின் வெறுப்புக்கு அஞ்சி அண்ணலார் அந்த அருள்மறை வசனங்களையெல்லாம் பகிரங்கப்படுத்தாமல் மூடி வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட வீழ்ச்சி நேரிட்டுவிடக் கூடாது என்று அல்லாஹ் அண்ணலாருக்குக் கட்டளை பிறப்பித்தான்.

(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும். நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை. அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான். (ஹூது 11:12)

இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் பலஹீனமாக இருந்த மக்கா வாழ்க்கையில் தங்கள் சக்திக்கேற்ப சத்தியத்தின் பாதையில் மக்களை அழைத்து மார்க்கத்தைப் பாதுகாத்தார்கள். மதீனா சென்றதும் தங்கள் பலத்தை ஒன்று திரட்டி எதிரியுடன் பொருதினார்கள்.

ஆக, எந்நிலையிலும் நமது கலாச்சாரத்தையும், உரிமைகளையும் விட்டுவிடக் கூடாது. எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவது அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

Saturday, 4 February 2017

மரகத மணிகள்


முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள். வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. (அல் அஹ்ஜாப் 33:23)

எல்லோருக்கும் அல்லாஹ் ஷஹாதத் என்ற பாக்கியத்தை வழங்கிடுவதில்லை. தான் நாடியவருக்கே அல்லாஹ் இந்த மாபெரும் பாக்கியத்தை வழங்குகிறான்.

யர்முக் போரின்போது ரோமப் படைத் தளபதி மஹன் என்பவன், காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைப் பார்த்து ஏளனமாகப் பேசினான். “பஞ்சைப் பராரிகளே… தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடி விடுங்கள்’‘ என்றான். “நீ தவறாகப் புரிந்துகொண்டாய். உங்கள் இரத்தத்தை சுவைக்கவே நாங்கள் இங்கே வந்துள்ளோம்’‘ என்று அவனுக்கு பதிலடி கொடுத்த காலித் (ரலி), தன் தோழர்களைப் பார்த்து இவ்வாறு முழங்கினார்: “என் அருமைத் தோழர்களே, சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா? அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்க காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? வெற்றியின் நற்பேறும் காத்திருக்கிறது. முன்னேறுங்கள்!”

சுவனத் தென்றலின் சுவையை உணரத் துடித்த முஸ்லிம்கள் அன்று தீரமாகப் போராடி ஒரே நாளில் 1,20,000 ரோமர்களைக் கொன்றொழித்தார்கள். முஸ்லிம்களிலும் நிறைய பேர் ஷஹீத் ஆனார்கள்.

இந்தப் போரில் கலந்துகொண்ட ஜர்ஜாஹ் என்ற ரோமப் படைத்தளபதி காலிதிடம் வந்து, “உங்கள் நபி வானத்திலிருந்து வாள் ஒன்றைப் பெற்றுத் தந்தார்களோ? உங்களைச் சந்திக்கும் எதிரிகள் அனைவரும் தோற்று ஓடுகிறார்களே…” என்று கேட்டான்.

அதற்கு காலித் இவ்வாறு பதிலளித்தார்: “நான் இஸ்லாத்தின் கொடிய எதிரியாக இருந்தேன். பிறகு நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “காலிதே, நீங்கள் அல்லாஹ்வின் வாள். உங்கள் வாள் வலிமையானது. எதிரிகளின் வலிமையை அது அழித்தொழிக்கும்” என்றார்கள். அதிலிருந்து “ஸைஃபுல்லாஹ்” என்று எனக்கு பெயர் வந்தது.”

உடனே, “இந்தக் கொள்கையை நான் ஏற்றுக்கொண்டால் நீங்கள் அடைந்த இந்த நற்பேறுகளை நான் அடைந்து கொள்ள முடியுமா? அதிலும் குறிப்பாக உங்களைப் போன்றே ஆக முடியுமா?” என்று ஜர்ஜாஹ் கேட்டார். “ஆம்” என்று கூறிய காலித் அவருக்கு அழகிய முறையில் இஸ்லாமை எடுத்து வைத்தார். ஜர்ஜாஹ் இஸ்லாம் தழுவினார். மறுநாள் நடந்த போரில் பங்கெடுத்து அவர் ஷஹீதானார்.

காலித் (ரலி) அவர்களின் உந்துதல் பேச்சால் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஷஹாதத் பதவியை அன்று அடைந்தார்கள். அதேபோன்று முந்தைய நாள் இஸ்லாம் தழுவிய ஜர்ஜாஹுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. ஆனால் அவர்களின் ஷஹாதத்துக்கெல்லாம் காரணமாக இருந்த காலித் (ரலி) அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திடவில்லை.

காலித் (ரலி) மரணத் தறுவாயில் இருக்கும்பொழுது அழுது கொண்டே இவ்வாறு கூறினார்: “நான் எத்தனை போர்களில் கலந்துகொண்டிருப்பேன். எத்துணை வாள்களையும், அம்புகளையும் என் உடல் சந்தித்திருக்கும். அப்போதெல்லாம் உயிர்த் தியாகியாக மாறி, சுவனத் தோட்டங்களிலும், அல்லாஹ்வின் அர்ஷிலும் பச்சைப் பறவையாக பறக்கத் துடித்தேனே! என் உடம்பில்தான் எத்துணை எத்துணை தழும்புகள்! இதில் ஒன்றாவது என்னை உயிர்த் தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே! என் ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே!”

அந்த நிலையிலேயே ஹிஜ்ரி 21ல் அவருக்கு மரணமும் நிகழ்ந்தது. வெற்றியாளர்களாக அல்லாஹ் குறிப்பிடுவதும் இந்த ஷஹீதுகளைத்தான். அதனைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அத் தவ்பா 9:20)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார் - உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தனக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்து முறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். (அனஸ் இப்னு மாலிக் (ரலி), புகாரீ)

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2015 (மனதோடு மனதாய்...)

Tuesday, 15 November 2016

கரை சேர்க்கும் கப்பலோட்டிகள்!


1857ம் ஆண்டு செப்டம்பர் 12ம் நாள் “சென்ட்ரல் அமெரிக்கா” என்ற அமெரிக்க கப்பல் வட கரோலினா கடலில் மூன்று நாள் சூறாவளியில் சிக்கி அலைக்கழிந்தது. அது தறி கெட்டு மூழ்கத் தொடங்கிய போது அதிலிருந்த 152 பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக உயிர் காக்கும் படகுகளில் ஏற்றி அனுப்பினார் அந்தக் கப்பலின் மாலுமி.

கப்பலில் எஞ்சியுள்ள 400 பயணிகளையும் காப்பாற்ற வழி தெரியாமல் அந்த மாலுமியும், இதர ஊழியர்களும் தவித்தனர். அந்தக் கப்பலோட்டிகளுக்கு தங்களது உயிரும் உடலும் பெரிதாகத் தெரியவில்லை. வீட்டில் தங்களின் வருகைக்காக காத்திருக்கும் வயதான பெற்றோரின், இளம் மனைவியரின், பால் வடியும் குழந்தைகளின் முகங்களும் நினைவிற்கு வரவில்லை. கப்பலிலுள்ள 400 பயணிகள்தான் நினைவில் நின்றார்கள். ஆனால் ஹடீராஸ் முனையில் அந்த கப்பல் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் மூழ்கி விட்டது.

முடிந்த வரை காப்பாற்றி விட்டோம், இனி நாம் தப்புவதில் தவறில்லை என மாலுமியும், சக கப்பலோட்டிகளும் முடிவு செய்து நீந்தி வெளியேறி இருந்தாலும் உலகம் அவர்களை பழித்திருக்காது. 44 வயதே நிரம்பிய அந்தத் தலைமை மாலுமியின் பெயர் கமாண்டர் வில்லியம் லூவிஸ் ஹெண்டன் (William Lewis Herndorn).

ஒரு கப்பல் பயணம் தொடங்கிவிட்டால் அதன் முழு பொறுப்பும் அந்த மாலுமிக்கும், அதில் பணி புரியும் சக ஊழியர்களுக்குமே சாரும். அதே போன்றுதான் சமூக சேவகர்களும்.

சமூகம் என்ற கப்பலை சுமூகமாக ஓட்டிச் சென்று, காப்பாற்றி கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூக சேவகர்களுக்கு இருக்கிறது.

சமூக சேவகர்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள். இப்படி பல திறமை உடையவர்களை, பல கலைஞர்களை, பலதரப்பட்ட மக்களை ஒரே குழுவாக ஆக்கி, ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இந்தச் சமூகத்தின் இடர்பாடுகளை நீக்கி இதன் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும்.

அந்தக் குழு கட்டுக்கோப்பாக செயல்படுவதற்கு, அனைத்து சமூக ஊழியர்களும் ஓர் ஒழுங்குடன் பணியாற்றுவதற்கு, அவர்களை சமுதாய முன்னேற்றத்தின்பால் அழைத்துச் செல்வதற்கு ஓர் உறுதியான தலைமை தேவை. அந்தத் தலைமையும், ஊழியர்களும் சேர்ந்து ஒரு குழுவாக மாறி செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குழு அதன் இலட்சியத்தை அடையும். இதனைத்தான் இஸ்லாமும் இயம்புகிறது.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். (சூரா அன்னிசா 4:59)

ஒரு கப்பலை மாலுமி எப்படி செலுத்துவாரோ அதே போன்று அந்தக் குழுவை தலைமை வழிநடத்திச் செல்லும். அந்தத் தலைமைக்குக் கீழ் கப்பலின் ஊழியர்களாக சமூக ஊழியர்கள் செயல்பட வேண்டும். கப்பல் கடலில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்று தன் இலக்கை அடைவதற்கு அந்த மாலுமியும், அதன் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாகப் பணியாற்றுவது போன்று இவர்களும் பணியாற்ற வேண்டும்.

கடல் சீற்றம், புயல், கொட்டும் மழை என்பன போன்ற அமைதியற்ற சூழல் இந்தக் குழுவுக்கும் நேரிடலாம். இத்தகைய காலகட்டங்களில் இறையச்சமும், கூர்மதியும், துணிவும், தன் இழப்பை துச்சமென கருதும் தீரமும் கொண்ட மாலுமிகளாலும், கப்பலின் ஊழியர்களாலும்தான் சமூகம் என்ற கப்பலைக் காப்பாற்ற முடியும்.

கப்பல் ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள். அவர்களின் குணம், திறமை, மனோநிலை, ஆர்வம் எல்லாம் மாறுபடும். அவர்களெல்லோரையும் அரவணைத்துச் சென்று, கப்பலைக் கரை சேர்ப்பதுதான் மாலுமிகளின் பணி.

நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த தோழர்களும் ஒரே மாதிரியாக இருந்திடவில்லை. பலவிதத்தில் மாறுபட்டு நின்றார்கள். வட துருவங்களும், தென் துருவங்களும் அங்கே இருந்தன. நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினாலும் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அபூபக்கர் (ரலி) போன்றோரும், சில வேளைகளில் மனக் கஷ்டமும், நிராசையும் அடைந்த உமர் (ரலி) போன்றோரும் அங்கே இருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் பேரப் பிள்ளைகளை முத்தமிட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘‘எனக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் இன்று வரை நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” எனக் கூறிய நாட்டுப்புறத்து அரபியைப் போன்றோரும் அங்கே இருந்தனர். முதலிரவில் தன் மனைவியிடமிருந்து பிரிந்து சென்று போர்க்களத்தில் ஷஹீதான நபித்தோழர் ஹன்ழலா (ரலி) போன்ற வீரத் தியாகிகளும் அங்கே இருந்தனர். இஸ்லாத்திற்காக கொடூரமான சித்திரவதைகளைத் தாங்கிய பிலால் (ரலி) போன்ற பொறுமையின் சிகரங்களும் அங்கே இருந்தனர்.

இப்படி அத்தனை வித்தியாசமான குணங்களையும் உட்கொண்டு, அவர்களுடன் தோளோடு தோள் நின்று, பொறுமையுடன் அவர்களை வளர்ச்சியை நோக்கி வழிநடத்திச் சென்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அதாவது, அவர்களைத் தூய்மைப்படுத்தி பண்படுத்தினார்கள். வெவ்வேறு நோக்கத்தில் இருந்தவர்களை ஒரே இலட்சியத்தின்பால் இட்டுச் சென்றார்கள்.

இப்படிப்பட்ட தலைமையும், சமூக ஊழியர்களும் கப்பலோட்டிகளாக மாறி சமூகம் என்ற கப்பலை முன்னேற்றம் என்ற கரையில் கொண்டு சேர்க்க முன்வர வேண்டும்.

விடியல் வெள்ளி  ஜனவரி 2015 (மனதோடு மனதாய்...)

ஆக்கமும், தூக்கமும்!


அறிஞர் அண்ணாவின் வருகைக்காக இரவு நேரத்தில் ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மக்கள் காத்திருந்தனர். அண்ணாவின் வருகை காலதாமதம் ஆனதால் அவர்கள் அப்படியே உறங்கி விட்டனர். அண்ணா வந்தார். சில வினாடிகளாவது பேசுங்கள் என்றனர்.

மக்கள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணா இவ்வாறு பேசினார்: “காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை, உதயசூரியனுக்கு போடுங்கள் முத்திரை…”

அண்ணாவின் பேச்சுத் திறனை வெளிப்படுத்துவதற்காக சொல்லப்பட்டதல்ல இது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த மக்கள் பத்தரை மணியாகும்பொழுதே தூங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் அதற்கு முன்பே உறங்கும் வழக்கம் உடையவர்களாக இருந்திருக்க வேண்டும்.

இந்தக் காலத்தில் பத்தரை மணிக்கு இப்படி யாராவது உறங்குவார்களா? 11 மணிக்கு முன்பு உறங்குவது என்பதை யோசிக்கக்கூட முடியாத காலத்தில் இருக்கிறோம். பலநூறு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் 'பொழுதோடு தூங்கி காலை பொழுதோடு எழுந்திரு' என்ற பழக்கம் இன்று மாறி விட்டது.

இந்தக் கலாச்சார ஓட்டத்தில் முஸ்லிம்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டார்கள்.

ஆம்! இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் இரவு மிகவும் தாமதமாக உறங்குகிறார்கள். இரவு மிக நீண்ட நேரம் டிவி அல்லது இண்டர்நெட், மொபைல் போன் என்று நேரம் கழிகிறது. ஃபஜ்ரு தொழுதோ, தொழாமலோ அதிகாலையில் தூங்குகிறார்கள்.

களைப்பாறி அமைதி பெறுவதற்காகவே இரவை அமைத்துள்ளதாக அல்லாஹ் தன் திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இஸ்லாம் ஒன்றைக் கற்றுத் தந்தால் அதில் அனைத்து நன்மைகளும் அடங்கியிருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் நாம். அந்தப் புனித இஸ்லாம் நம்மை முற்கூட்டியே உறங்கி முற்கூட்டியே விழிக்கச் சொல்கிறது. அன்றாடப் பணிகளை அதிகாலையிலேயே ஆரம்பிக்கச் சொல்கிறது.

இஷாத் தொழுகைக்குப் பின் கண் விழித்து பேசிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (புகாரீ)

நம்மில் எத்தனை பேர் நபிகளார் கற்றுத் தந்த உறங்கும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கிறோம்?

உறங்கும் ஒழுங்குமுறைகள்

1. அலீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் தூங்குவதற்கு சென்ற சமயம் நபியவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்களோ எழும்ப எத்தனித்தோம். “உங்கள் இடத்திலேயே இருங்கள்” எனக் கூறிவிட்டு வந்து எங்களுக்கிடையில் அமர்ந்தார்கள். அவர்களின் கால் பாதத்தின் குளிர் எனது நெஞ்சில் உணரும் அளவுக்கு (நெருக்கமாக) அமர்ந்தார்கள். பின்பு, “வேலையாளை விட மிகச் சிறந்ததொன்றை உங்கள் இருவருக்கும் சொல்லட்டுமா?’‘ எனக் கேட்டுவிட்டு, “நீங்கள் உங்கள் படுக்கை விரிப்புக்குச் சென்று தூங்கப் போனால், 33 தடவை 'ஸுப்ஹானல்லாஹ்' என்றும், 33 தடவை 'அல்ஹம்துலில்லாஹ்' என்றும், 34 தடவை 'அல்லாஹு அக்பர்' என்றும் கூறுங்கள். இதுவே வேலையாளை விட உங்களுக்கு சிறந்ததாகும்” எனக் கூறினார்கள். (புகாரீ)

2. ''நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று நபியவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி), புகாரீ 3275)

3. நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில், ''குல்ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின் னாஸ்'' ஆகிய (112, 113, 114) மூன்று அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (ஆயிஷா (ரலி), புகாரீ 5017)

4. தூங்கும் முன் “அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா” (இறைவா! உன் பெயரால் மரணிக்கின்றேன். உன் பெயரால் உயிர் பெறுகின்றேன்) (புகாரீ 6325) என்ற துஆவை ஓத வேண்டும்.

5. “நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூ செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், “அல்லாஹும்ம அஸ்லம்து வஜ்ஹீ இலைக்க, வஃபவ்வள்து அம்ரீ இலைக்க, வஅல்ஜஃது ளஹ்ரீ இலைக்க, ரஃக்பத்தன் வரஹ்பத்தன் இலைக்க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்க இல்லா இலைக்க, அல்லாஹும்ம ஆமன்து பிகிதாபிகல்லதீ அன்ஸல்த வபிநபிஇய்யிக் கல்லதீ அர்ஸல்த” என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (பராஃ இப்னு ஆஸிஃப் (ரலி), புகாரீ 247)

''இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு நின்று வணங்கியவர் போலாவார். ஃபஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதவர் முழு இரவும் நின்று வணங்கியவர் போலாவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (உஸ்மான் (ரலி), முஸ்லிம்)

நாம் இரவு தூங்கினால் கூட அதனையும் அல்லாஹ் நமக்கு நன்மையாக மாற்றி விடுகின்றான். ஒன்று தூய்மையாக்குகின்றான். இன்னொன்று இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையை வழங்குகின்றான். அப்பேற்பட்ட அருளாளனான அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு நாம் மாறு செய்யலாமா?

விடியல் வெள்ளி  அக்டோபர் 2014 (மனதோடு மனதாய்...)

Sunday, 6 November 2016

அதிகாலையில் எழுதலும், தொழுதலும்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைப் புதல்வி அன்னை ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: “அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் ரிஸ்க் என்னும் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் ரிஸ்க் எனும் வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)

ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள். அண்ணலார் இஷாவுக்குப் பிறகு உலக காரியங்கள் ஒன்றிலும் ஈடுபடாமல் உடனே உறங்கிவிடுவார்கள். தஹஜ்ஜுதுக்கு எழுந்து விடுவார்கள். ஸுபுஹு தொழுகைக்குப் பிறகு அவர்கள் தூங்கியதே இல்லை. தங்கள் குடும்பத்தாரையும் அவ்வாறு தூங்காமல் தடுத்துள்ளார்கள். அதற்கோர் உதாரணத்தைத்தான் மேற்கண்ட நபிமொழியில் கண்டோம்.

இரவு தாமதமாக உறங்குவதால் என்னென்ன தீய விளைவுகள் உடலுக்குள் ஏற்படுகின்றன என்று இன்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதேபோன்று அதிகாலையிலேயே தங்கள் பணிகளைத் துவங்குபவர்களுக்கு என்னென்ன நன்மைகள் விளையும் என்பதையும் அண்ணலார் சொல்லியிருக்கிறார்கள்.

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

“படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்: “வானவர்களே! என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள். படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு? எனது அருள் மீது ஆசை வைத்தா? எனது தண்டனையைப் பயந்தா?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்: “உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் அளிப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்பு கொடுப்பேன்.” (அஹ்மத்)

ஃபஜ்ரு தொழுகை பற்றி அறிஞர்கள் ஆய்ந்தறிந்து கண்ட உண்மைகள்: 1. அதிகாலையில் எழும் மனிதனை எந்த அலைவரிசையும் குறுக்கீடு செய்வதில்லை. அந்தச் சமயத்தில் உலா வரும் தூய்மையான காற்றுக்கு “பிரபஞ்சக் காற்று” என்று பெயர். அதற்கு ஆற்றல்கள் பல இருக்கின்றன. ஆயுளைக் கூட்டும் வல்லமை அந்தக் காற்றுக்கு உண்டு. 2. தன் மீது தனக்கே நம்பிக்கை ஏற்படும். இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைக்காது. அவர்களின் அன்றைய பணிகள் வெற்றி பெறும்.

“நீங்கள் அதிகாலையில் எழுந்தால் உங்களுக்கு அன்று கிடைப்பது இரண்டு நாள்” என்று சொல்வார்கள். இதைத்தான் “இரட்டை நாள் தியரி” என்பார்கள். பறவைகள் அதிகாலையிலேயே எழும்பி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பலவிதமான ஒலிகளையும் எழுப்பும். அதேபோன்று அதிகாலையிலேயே எழும் மனிதன் சுறுசுறுப்பாக தன் பணிகளைத் துவக்குவான். அவனது முழு ஆற்றலும் அப்பொழுது வெளிப்படும்.

நேரம் செல்லச் செல்ல அவனுக்கு சோர்வு ஏற்படும். நண்பகல் வேளையில் அவன் முழுவதுமாக சோர்ந்திருப்பான். அந்த நேரத்தில் அவன் ஒரு சிறு தூக்கம் போட்டு எழுந்தால் அவன் மீண்டும் உற்சாகம் பெறுகிறான். பிற்பகலிலிருந்து அவன் புதிய ஒரு நாளைத் துவக்குகிறான். ஆக, ஒரு நாள் என்பது இரண்டு நாட்கள் போன்று செயல்படுகிறது. இதனை அன்றே அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் செய்து காட்டினார்கள். நண்பகல் வேளையில் அவர்கள் சிறிது நேரம் உறங்குவார்கள். இந்தத் தூக்கத்திற்கு “கைலூக்கா” என்று பெயர். இந்த நேரத்தில் உறங்குவது ஸுன்னத் ஆகும்.

அண்ணலார் எங்கு செல்வதாக இருந்தாலும் அதிகாலையில்தான் புறப்படுவார்கள். அனைத்துப் போர்களுக்கும் அதிகாலையிலேயே புறப்பட்டார்கள். அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தையும் அறிவையும் அள்ளித் தரும். அதிகாலையில் காற்று மண்டலத்தில் ஓஸோன் கலந்திருக்கும். அந்த நேரத்தில் மலர்களின் சுகந்தமும், பனிக்காற்றில் உள்ள இரும்புச் சத்தும் மூச்சுக் காற்றில் கலந்து சுவாசிக்கப்படும்போது மூளைக்கு நிறைய ஆக்சிஜன் செல்லும். இரத்த ஓட்டம் சுத்தம் அடையும். நினைவாற்றல் பெருகும். உள்ளம் உற்சகாம் அடையும்.

விடியல் வெள்ளி  நவம்பர் 2014 (மனதோடு மனதாய்...)

Wednesday, 19 October 2016

சோதனைகள் பலவிதம்!


சிறிதளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றின் சேதத்தாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமை காப்போருக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக. (சூரா அல் பகரா 2:155)

அல்லாஹ் மனிதனின் வாழ்க்கை நியதியை இந்த வசனத்தில் எடுத்துரைக்கிறான். மனிதனை சோதனைகள் சூழவே இந்த உலகுக்கு அனுப்புகிறான். அவனை சோதனைகளுக்குட்படுத்தி பரீட்சித்துப் பார்க்கிறான்.

இன்னொரு வசனத்தில், “உங்களில் தியாகம் புரிவோரையும், பொறுமை காப்போரையும் நாம் அடையாளம் காணும் வரையிலும், உங்கள் (செயல்பாடுகள் குறித்த) செய்திகளைப் பரிசீலிக்கும் வரையிலும் உங்களை நாம் சோதிப்போம்” (47:31) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சோதனை என்பது பயம், பசி போன்ற துன்பங்களாலும் ஏற்படலாம். மகிழ்ச்சியாலும் ஏற்படலாம். இன்பத்திலும் சோதனை உண்டு. துன்பத்திலும் சோதனை உண்டு.

சோதனை என்பதற்கு நம்மில் பலரிடம் தவறான கண்ணோட்டம் இருக்கிறது. துன்பம் வந்தால் மட்டும்தான் சோதனை என்று எண்ணுகிறோம். உதாரணத்திற்கு வறுமையை எடுத்துக் கொள்ளலாம். வறுமை நீங்கி வளம் வந்துவிட்டால் எனக்குள்ள சோதனைகள் எல்லாம் நீங்கிவிட்டன என்று மனிதன் பெருமிதத்துடன் கூறுகிறான்.

அப்படியல்ல. அடுத்த கட்ட சோதனை ஆரம்பமாகின்றது என்று அதற்கு அர்த்தம். அதாவது, எடுத்து சோதித்த இறைவன் இப்பொழுது கொடுத்து சோதிக்கிறான்.

ஒரு வகையில் சொல்லப்போனால் துன்பத்தில் வரும் சோதனையை விட இன்பத்தில் வரும் சோதனையில்தான் மனிதன் அதிகம் தோற்றுப் போகிறான். துன்பத்தில் உழலும்போது அல்லாஹ், அல்லாஹ் என்று கையேந்துவான். பொறுமை காப்பான். அப்படிப் பொறுமையுடையோருக்கு நல்ல செய்தியை - நன்மையை அல்லாஹ் அளிக்கிறான்.

ஆனால் இன்பத்தில் திளைக்கும்பொழுது அல்லாஹ் உட்பட எல்லாவற்றையும் மறந்து விடுவான்.

மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கிறான். அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. (சூரா யூனுஸ் 10:12)

பணம், பதவி, புகழ் என்று வந்துவிட்டால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற மனநிலைக்கு மனிதன் மாறுகிறான். இவையும் சோதனைதான் என்பதை மறந்து விடுகிறான். ஆசாபாசங்களிலும், கேளிக்கை கூத்துகளிலும் ஈடுபடுகிறான். தன் பொருளாதாரச் செழிப்பைக் காட்ட ஆடம்பரமாக செலவழிக்கிறான். டாம்பீகமாக திருமணத்தை நடத்துகிறான். கோடிகள் செலவழித்து வீடுகளைக் கட்டுகிறான்.

ஏழைகளுக்கு உதவுவதில்லை. வறியவர்களுக்கு வாரி வழங்கவில்லையென்றாலும் கோரியதையாவது கொடுக்கலாம். அதுவும் செய்வதில்லை. பணம் சேரச் சேர அவன் உள்ளம் இறுகுகிறது. இறுமாப்பு கொள்கிறது. நன்மைகள் செய்வதில் நாட்டம் வருவதில்லை.

அதனால்தான் ஒரு வகையில் துன்பத்தில் வரும் சோதனையை விட இன்பத்தில் வரும் சோதனையில்தான் மனிதன் அதிகம் ஏமாந்து போகின்றான் என்று மேலே குறிப்பிட்டோம்.

வறுமையில் உழலும்பொழுது எப்படி பொறுமை காட்டுகிறானோ அதேபோன்று வசந்தம் வரும்பொழுது தியாகம் காட்டவேண்டும். அதனைத்தான் “உங்களில் தியாகம் புரிவோரையும், பொறுமை காப்போரையும் நாம் அடையாளம் காணும் வரையிலும்…” என்று அல்லாஹ் கூறுகிறான்.

தன் செல்வங்கள் தனக்குரியதல்ல, அவை இறைவன் தனக்களித்த சோதனைப் பொருட்கள் என்பதை மனிதன் உணர வேண்டும். அந்தச் செல்வங்களிலிருந்து அவனது தேவைகளை நடுநிலையாக நிறைவேற்றிவிட்டு, மீதியை தானதர்மங்களில் அவன் வாரி வழங்கிடவேண்டும். ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். வறுமையில் கல்வி கற்க முடியாத சிறார்களைத் தத்தெடுத்து படிக்க வைக்க வேண்டும். வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். ஏழைக் குமர்களைக் கரை சேர்க்க வேண்டும். பசி, பட்டினியை சமுதாயத்திலிருந்து போக்குவதற்கு முயற்சிகள் புரிய வேண்டும்.

இவற்றையெல்லாம் மனிதன் செய்கிறானா என்று அல்லாஹ் சோதிக்கிறான். தன்னைப் பிரதிநிதியாக்கி அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு உதவ நாடுகிறான், அதற்காகத்தான் தனக்கு பொருள்களை வாரி வழங்குகிறான் என்று மனிதன் உணர வேண்டும்.

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (சூரா ஹூது 11:10)

புதிய விடியல்  ஜனவரி 2016 (மனதோடு மனதாய்...)

மனிதனின் பரிதாப நிலை!


புஸ்ர் பின் ஜஹ்ஹாஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை தமது உள்ளங்கையில் உமிழ்நீரை உமிழ்ந்தார்கள். பிறகு அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்:

“ஆதமின் மகனே! (மனிதனே!) என்னை உன்னால் எப்படி தோற்கடிக்க முடியும்? இதை (உமிழ்நீரை)ப் போன்ற ஒன்றிலிருந்தே உன்னைப் படைத்துள்ளேன். இறுதியாக உன்னைச் சீராக்கிச் செம்மைப்படுத்தினேன். ஆனால் நீயோ இரண்டு மேலாடைகளை அணிந்துகொண்டு, சப்தம் வரும் அளவுக்கு பூமியை மிதித்து (மிடுக்கோடு) நடந்தாய். செல்வங்களைச் சேமித்து அதை இறுக்கி வைத்துக் கொண்டாய். இறுதியில் உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்ததும் நீ தானதர்மம் செய்வேன் என்கிறாய். அப்போது தானதர்மம் செய்வதற்குரிய கால அவகாசம் எங்கே இருக்கிறது?”

இவ்வாறு மனிதனின் நிலையை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஓர் உதாரணத்தைக் காட்டி அற்புதமாக விளக்கினார்கள்.

மனிதன் பலஹீனமான இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டுள்ளான் என்பதை தங்கள் உமிழ்நீரை உமிழ்ந்து உதாரணம் காட்டினார்கள். மனிதன் பலஹீனமான இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டு, பின்னர் பிறர் உதவியுடன் தத்தித் தத்தி வளர்கிறான். சொந்தக் காலில் நின்று, சுயபுத்தி வந்தவுடன் செருக்காகி விடுகிறான். தன்னை விட்டால் ஆளில்லை என்ற இறுமாப்பு அவனிடம் வந்து விடுகிறது. தனது வருமானமெல்லாம் தன் திறமையால் தனக்குக் கிடைத்தது என்று பெருமை கொள்கிறான்.

செருக்குடனும், செல்வச் செழிப்புடனும் பூமியில் மிடுக்காக நடக்கிறான். இதனைத்தான் “சப்தம் வரும் அளவுக்கு மனிதன் பூமியை மிதித்து மிடுக்கோடு நடந்தான்” என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூளினார்கள்.

பணம் பணம் என்று மனிதன் அலைகிறான். செல்வத்தை சேர்த்து சேர்த்து பூட்டி வைக்கிறான். ஆடம்பரமாக செலவழிக்கிறான். ஆனால் தானதர்மங்களில் ஈடுபடுவதில்லை. இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.

இதனைத்தான் “செல்வங்களைச் சேமித்து அதை இறுக்கி வைத்துக் கொண்டான் மனிதன்” என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைவழியை விட்டும் தவறிய வழியில் அவனது நேரங்கள் தொலைவதைப் பற்றி அவனுக்குக் கிஞ்சிற்றும் கவலையில்லை. பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தைக் கொல்வதற்குரிய நவீன மின்னணு சாதனங்களை வாங்குகிறான்.

தனக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடையான காலத்தை வீணாக்குகிறான். காலம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிற மனிதன் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறான். நிறைய கால அவகாசம் உள்ளவன் நேரம்தான் இருக்கிறதே... பிறகு பார்ப்போம் என்று நேரங்களை வீணாக்கி விடுகிறான்.

“பிறகு”, “பிறகு” என்று தள்ளிப்போடும் மனப்பான்மை (Procrastination) உள்ளவன் நிகழ்காலத்தை நிராகரிக்கிறான். எதிர்காலத்தைப் பாழாக்குகிறான்.

“காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பித் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்கப் பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்து முடியுங்கள்” என்று ஓர் அறிஞன் கூறினான்.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காலத்தை வீணான விஷயங்களில் வீணாக்கி விட்டு மரண வேளையில் எனக்கு காலம் கிடைக்காதா என்று மனிதன் தவிக்கிறான். இதனைத்தான் “உயிர் தொண்டைக் குழியை அடைந்ததும் தானதர்மம் செய்வேன் என்கிறான் மனிதன், அப்போது தானதர்மம் செய்வதற்குரிய கால அவகாசம் எங்கே இருக்கிறது?” என்று அல்லாஹ் கேட்பதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உத்தம நபியவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளங்கையில் உமிழ்ந்து காட்டி விளக்கிய மனிதனின் பரிதாப எதார்த்தத்தை அவன் புரிந்துகொள்வானா?

புதிய விடியல்  நவம்பர் 2015 (மனதோடு மனதாய்...)

Wednesday, 5 October 2016

முன் எழுந்து முன் மறையும் அதிசயம்!


நமது உடல் ஓர் அற்புதப் படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System). இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி. கடலை உருண்டை வடிவில் இருக்கும் அது பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பினியல் சுரப்பி ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. அதுதான் மெலடோனின். இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது. புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று இன்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்.

ஆம்! இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்.

ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு இருளில் சுரக்கும் மெலடோனின் நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. பினியல் சுரப்பி மெலடோனினை இஷாவுக்குப் பிறகு சுரக்க ஆரம்பித்து ஃபஜ்ருக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்.

ஆகவே இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம். எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது.

அதே போன்று அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால் இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான். இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆக, இரவு முற்கூட்டியே உறங்குவதால் மெலடோனின் கிடைக்கிறது. அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால் ஓஸோன் கிடைக்கிறது. நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள். அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள். அவர்களது வாழ்க்கை முறை இஷாவுக்குப் பின் உடனே உறங்கி முன்அதிகாலையில் தஹஜ்ஜுதுக்கு எழும் வழக்கம் உடையதாக இருந்தது.

ஸிக்ர் அல் கமிதி என்பவர் அறிவிக்கிறார்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், “அல்லாஹ்வே, என் சமுதாயம் அதிகாலை எழுவதில் அருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை புரிவார்கள். அவர்கள் ஒரு படையையோ, ஒரு குழுவையோ எங்கும் அனுப்பினால் அதனை அதிகாலையிலேயே புறப்படச் செய்வார்கள்.” (அபூதாவூத்)

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அதிகாலையில் எழும்பொழுது நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும். அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்.

ஒரு முஸ்லிமின் வாழ்வு அதிகாலையில் துவங்குகிறது. அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாதவர்கள் எழுந்து இவ்வுலகை மாசு படுத்தும் முன் முஸ்லிம் எழுகிறான். அண்ணலார் பிரார்த்தித்தபடி அவன் அதிகாலையில் எழுவதன் மூலம் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சி செய்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அருளியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்:

“ஷைத்தான் நீங்கள் உறங்கும்பொழுது மூன்று முடிச்சுகளை உங்கள் தலையின் பின்புறம் கட்டுகிறான். ‘உனக்கு மிகப் பெரிய இரவு இருக்கிறது. அதனால் உறங்கு’ என்று சொல்லியே அவன் ஒவ்வொரு முடிச்சுக்கும் முத்திரை இடுகின்றான். அதிகாலையில் நீங்கள் எழுந்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழும். நீங்கள் தொழுகைக்காக உளூ செய்தால் அடுத்த முடிச்சு அவிழும். நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால் மூன்றாவது முடிச்சும் அவிழும். அந்தக் காலைப்பொழுதில் நீங்கள் உயிரோட்டத்தோடும், உள்ளச் சுத்தியோடும் உலா வருவீர்கள். அப்படியில்லையெனில், அந்தக் காலைப் பொழுது உங்களுக்குத் தீமையாகவும், சோம்பேறித்தனமாகவும் மாறிவிடும்.” (புகாரீ)

எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும், அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும் ஒரு முஸ்லிம் முன் தூங்கி முன் எழ வேண்டும்.

Monday, 29 August 2016

அமைதியடைந்த ஆத்மாக்கள்


மனிதனைச் சோதிப்பதற்கு அல்லாஹ் பயன்படுத்தும் மிகப் பெரிய ஆயுதம்தான் மனிதனின் மனம்.

“மனிதன் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான்” (4:28) என்ற இறைவசனத்திற்கேற்ப மனிதனின் மனம் பாவம் செய்யத் தூண்டக்கூடிய இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளது. இதற்கு “நஃப்ஸே அம்மாரா” எனப்படும்.

அல்லாஹ் மனிதனை வழிகெடுக்கும் ஷைத்தானைப் படைத்து அவனுக்கெதிராக நேர்வழி காட்டும் நபிமார்களைப் படைத்தது போன்று “நஃப்ஸே அம்மாரா” என்ற பாவம் செய்யத் தூண்டக்கூடிய மனதைப் படைத்து அதற்கெதிராக “நஃப்ஸே லவ்வாமா”வையும் படைத்துள்ளான்.

“நஃப்ஸே லவ்வாமா” என்றால் மனசாட்சி என்று தமிழில் பொருள் கொள்ளலாம். மனிதன் எந்தத் தீமையைச் செய்யும்பொழுதும் ஒரு மனஉறுத்தல் ஏற்படும். இந்த மனஉறுத்தலுக்கு மனசாட்சி என்று பெயர் கொடுத்தால் அதுதான் “நஃப்ஸே லவ்வாமா” எனப்படும்.

இதைத்தான் வல்ல இறைவன் “இடித்துரைக்கும் ஆன்மாவின் மீது நான் சத்தியம் செய்கிறேன்” (75:2) என்று கூறுகிறான். நன்மை, தீமையை உணர்த்.தும் இந்த உள்ளக்குடுக்கையைப் பற்றி இன்னும் ஏராளமான இறைவசனங்கள் விவரிக்கின்றன.

“நஃப்ஸே அம்மாரா” எல்லோரிடத்திலும் இருப்பது போன்று “நஃப்ஸே லவ்வாமா”வும் எல்லோரிடத்திலும் இருக்கும். “நஃப்ஸே லவ்வாமா”வைப் (மனசாட்சி) பயன்படுத்தி “நஃப்ஸே அம்மாரா”வை அடக்கினோம் என்றால் “நஃப்ஸே முத்மஇன்னா” என்ற நிலையை அடையலாம்.

இதனை “அமைதியடைந்த ஆத்மா” என்று பொருள் கொள்ளலாம். ஆக, மனிதனின் இலட்சியம் “நஃப்ஸே முத்மஇன்னா”வாக இருக்க வேண்டும். அதனை அடைவதில்தான் அவனது பயணம் அமைய வேண்டும்.

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) அமைதியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன் மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (அல் ஃபஜ்ர் 89:27-30)

இந்த அமைதியடைந்த ஆத்மாவாக (நஃப்ஸே முத்மஇன்னா) நாம் மாறும்பொழுதுதான் சுவனத்தில் அல்லாஹ் நம்மை நுழைவிக்கச் செய்கிறான். நபிமார்களும், ஷுஹதாக்களும், ஸித்தீக்கீன்களும், ஸாலிஹான நல்லடியார்களும் நஃப்ஸே முத்மஇன்னாவைக் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

“ஹவா” என்ற மனோஇச்சை இலேசானது அல்ல. “ஹவா”வுக்குப் பலியான மனிதன் நிரந்தர வெற்றியை பெற்றதும் இல்லை. சர்வாதிகாரிகள் முதல் சாதாரண மனிதன் வரை இந்த “ஹவா” ஆட்டிப் படைக்கிறது. இந்த “ஹவா”வுக்கு அடிமையானவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையை (ஹவாவை) தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (அல் ஜாஸியா 45:23)

“லாஇலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லும் முஸ்லிம் கூட “லாஇலாஹ இல்லல் ஹவா” (வணக்கத்துக்குரிய நாயன் மனோஇச்சையைத் தவிர வேறு யாருமில்லை) என்ற நிலைக்கு ஆளாகி விடுகிறான் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அடியான் ஒரு தவறிழைத்து விட்டால் அவனது இதயத்தில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிடுகிறது. அதிலிருந்து அவன் கழன்று பாவமன்னிப்பு தேடி பாவமீட்சி பெற்றுக்கொண்டால் அவனது உள்ளம் தெளிவாகி விடுகிறது. அவ்வாறின்றி மீண்டும் தவறுகளையே செய்ய முற்பட்டால் அந்தக் கரும்புள்ளிகள் அதிகப்படுத்தப்பட்டு அவனது உள்ளத்தில் அது பற்றிப் படர்ந்து விடுகின்றன. இதைத்தான் “அப்படியல்ல. அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன” (83:14) என்று அல்லாஹ் கூறுகின்றான்.” (அபூஹுரைரா (ரலி), திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா)

இந்த எச்சரிக்கை மணி நம் காதுகளில் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது உள்ளங்களை இறைவழியில் புரட்டிப் போட்டிட வேண்டும். அப்பொழுதுதான் நாம் அமைதியடைந்த ஆத்மாக்களாக மாறுவோம். அவர்களுக்குத்தான் அறுதி வெற்றி காத்திருக்கிறது.

புதிய விடியல் அக்டோபர் 2015 (மனதோடு மனதாய்...)

Saturday, 27 August 2016

கலாச்சார அனாச்சாரம்!!


உலக அளவில் எங்கு நோக்கினும் தீமையின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. நன்மையை அடக்கி, தீமை ஆட்டம் போடுகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும், அதன் கூட்டணி நாடுகளும் செய்யும் அராஜகம் ஒரு பக்கம், அவர்களின் இராணுவ மேலாதிக்கம் இன்னொரு பக்கம்.

முதலாளித்துவ கலாச்சாரம் பொருளாதாரத்திலும், வாழ்க்கைப் பாணியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. கல்வி, மருத்துவம் என்று முக்கியமான துறைகளில் பணம்தான் முக்கிய கருவியாக மாறியிருக்கிறது.

கலாச்சார அனாச்சாரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகின்றது. வாழ்க்கை என்றால் அனுபவித்தல் என்ற கருத்துப் பரவல் அதிகமாகியிருக்கிறது. ஆண்-பெண் உறவுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தரங்கெட்ட மனிதன் தன் மகள்களிடம் அல்ல, பிறந்த குழந்தைகளிடம் கூட பாலியல் வக்கிரத்தில் ஈடுபடுகின்றான்.

கல்வி, கலாச்சார வளர்ச்சி, வாசிப்பு, ஆய்வு போன்றவற்றின் முக்கியத்துவங்கள் குறைந்து விட்டன. கொடூரங்கள், தற்கொலைகள், கொலைகள் போன்றவை “வாழ்க்கையை அனுபவிக்கிறோம்” என்ற பெயரில் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்படுகின்றன. மனங்கள் மரத்து, மரித்துப் போய்விட்டதையே இவை காட்டுகின்றன.

சத்தியம், நீதி எல்லாம் அன்னியமாகி விட்டன. அப்பாவிகள் கிஞ்சிற்றும் தயக்கமில்லாமல் தூக்கிலேற்றப்படுகிறார்கள். நீதிமன்றங்களே அநீதிகளுக்கு சாட்சியாக நிற்கின்றன.

மது அருந்துவது என்பது சாதாரண நீர் அருந்துவது போன்று இப்பொழுது கருதப்படுகின்றது. இளைஞர்கள் இதன் அடிமைகளாக மாறிய காலம் போய், அரசின் கைங்கரியத்தால் இன்று இளம் பெண்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். வீடுகளில் இப்பொழுது இதனை எதிர்க்கவோ, கண்டிக்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குடிக்கும் மகனிடம் “குடிக்காதே” என்று சொல்லும் தைரியம் பெற்றோருக்கு இல்லை.

வட்டிக்காரர்கள் மறுபிறவி எடுத்துள்ளார்கள். மொத்த சமுதாயத்திலுமே பொருளாதார ஒழுங்கு என்பது சீரழிந்து கிடக்கின்றது. ஜாதிய-வகுப்புவாத சக்திகள், ஃபாசிசம், ஹிந்துத்துவம் போன்றவை இன்று வளர்ச்சி, மறுமலர்ச்சி என்ற முகமூடிகளில் புதிய படையெடுப்பைத் தொடங்கியிருக்கின்றன. வளர்ச்சியின் நாயகர்களாக பல கொலைகளுக்குக் காரணமான கோர முகங்கள் காட்டப்படுகின்றன.

இவற்றிற்கு முன்னால் ஜனநாயகம் பலஹீனக் குரல் எழுப்புகின்றது. அது பெயரளவிலேயே உள்ளது என்றாகிவிட்டது. பலவீனமான மக்கள் எப்பொழுதும் போல் அதிகார மையங்களிலிருந்து இன்றும் அகன்றே நிற்கின்றனர். வகுப்பு பேதங்கள் குறைந்தபாடில்லை, மாறாக இன்னும் அதிகரிக்கவே செய்துள்ன. முந்தாநாள் வரை தீண்டாமைக் கொடுமைகள், நேற்று வரை ஜாதிக் கலவரங்கள், இன்று வரை வகுப்புக் கலவரங்கள் என்று நாடு வீரநடை போடுகின்றது அழிவின் பாதையில்!!

இதுதான் இன்றைய இந்தியாவின் சித்திரம். இந்தச் சூழலில்தான் நாம் நம்மைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முஸ்லிம்கள் ஓர் உறுதியான நிலைப்பாடு எடுப்பதற்குத் தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

எது நன்மை, எது தீமை, எது நன்மையின் கூட்டம், எது தீமையின் கூட்டம்... என்று எதுவுமே முஸ்லிம்களுக்குத் தெரிவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் ஒரு விசுவாசி சத்தியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். நீதியின் சாட்சி பகர்வதன் மூலம் ஒரு விசுவாசி அல்லாஹ்வுக்கு சாட்சி பகர்கிறார். இஸ்லாம் தீமைக்கெதிராகப் போராடுவதில் பன்முகத்தன்மை கொண்டது. இதனைத்தான் இறைத்தூதர்களின் உதாரணங்களும், இறைவேதங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

முஃமின்களே! நியாயத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (அல் மாயிதா 5:8)

புதிய விடியல் செப்டம்பர் 2015 (மனதோடு மனதாய்...)

அருட்கொடைகள் அருளப்பட்ட உம்மத்!


மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரான இஸ்ரவேலர்கள் இறைவன் புறத்திலிருந்து பல சான்றுகளை கண்கூடாக கண்டார்கள். வல்ல இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தும் பல அற்புதங்களை கண்டார்கள்.

மன்னு சல்வா என்ற விண்ணுலக உணவு இறைவன் புறத்திலிருந்து இலவசமாக இவர்களுக்கு வழங்கப்பட்டது. மூஸா (அலை) அவர்களையும் அவர்களுடன் இருந்த ஈமான் கொண்டவர்களையும் காப்பாற்றுவதற்காக அல்லாஹ் கடலில் ஒரு பாதையை ஏற்படுத்தினான். இதை கண்கூடாக கண்டு இறைவனது அற்புத உதவியால் உயிர் பிழைத்தவர்கள்தான் இந்த இஸ்ரவேலர்கள்.

தண்ணீருக்கு வழியில்லாமல் தாகத்தால் இவர்கள் வாடியபோது தனது கைத்தடியை பாறையின் மீது அடித்து அதில் பன்னிரண்டு நீரூற்றுகளை மூஸா (அலை) அவர்கள் இறைவனுடைய உதவியால் வரவழைத்தார்கள். இந்த அற்புதத்தையும் கண்ணால் கண்டு பயனடைந்தவர்கள்தான் இந்த இஸ்ரவேலர்கள்.

ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நிறைய அற்புதங்களை வழங்கினான். அவர்களது பிறப்பே ஓர் அதிசயம்தான். குழந்தையாக இருந்தபொழுது அவர்கள் மக்களிடம் பேசினார்கள். களிமண் பறவையில் ஊதினால் அது உயிர் பெற்றெழும். பிறவிக் குருடர்களையும், குஷ்டரோகிகளையும் குணப்படுத்தினார்கள். இறந்தோரை உயிர்ப்பித்தார்கள்.

கொலை செய்யப்பட்ட ஒருவர் இறைவனால் உயிரூட்டப்பட்டு கொலை செய்தவர் யார் என்பதை தன் வாயினால் தெளிவுபடுத்திய அற்புதத்தையும் கண்கூடாக இவர்கள் கண்டார்கள்.

இப்றாஹீம் (அலை) அவர்களை நெருப்புக் குண்டத்தில் வீசிய பொழுது அது அவர்களுக்கு இதமான குளிரூட்டும் சோலையாக மாறிய அற்புதம் நடந்தது.

இந்த உம்மத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அருட்கொடைகள் ஆச்சரியமளிக்கின்றன. ஆனால் அற்புதங்களுக்குப் பதிலாக அனைத்தும் அன்பளிப்புகள். முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தை சுவர்க்கத்திற்கு அனுப்புவதில் அத்தனை முனைப்பையும் அல்லாஹ் காட்டுகிறான். உதாரணத்துக்கு ஜும்ஆவை எடுத்துக்கொள்வோம்.

இப்படி முந்தைய நபிமார்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் நிகழ்த்தியதாக காணக் கிடைக்கவில்லை. ஆனால் அத்தனை நபிமார்களுக்கும் தலைவரே அவர்கள்தான்.

“ஒருவர் ஜும்ஆ தினத்தன்று குளித்துவிட்டு, தம் சக்திக்குட்பட்ட உடைகளை அணிந்துகொண்டு, தன் இல்லத்திலிருக்கும் நறுமணத்தை பூசி, பள்ளிவாசலுக்கு சென்று, அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு சிரமம் கொடுக்காமல், தன் மீது விதியாக்கப்பட்டுள்ளதை தொழுது, இமாம் உபதேசம் செய்ய எழுந்ததும் அவரது உபதேசத்தை செவி சாய்த்து கேட்டால், அத்தினத்திற்கும் மறு ஜும்ஆவிற்குமிடையிலும் அவரால் நிகழ்த்தப்படும் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸல்மான் (ரலி), புகாரீ)

அதேபோன்று குறைந்த காலத்தில் நிறைந்த நன்மைகளையும் அல்லாஹ் பலப்பல சந்தர்ப்பங்களில் இந்த உம்மத்துக்கு வழங்கியிருக்கிறான். திருக்குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குவதாக அண்ணலார் அருளினார்கள்.

இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என்றும், ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் மீதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என்றும் அண்ணலார் கூறியுள்ளார்கள்.

இத்தகைய அன்பளிப்புகளின் உச்சகட்டம்தான் நம்மைக் கடந்து சென்ற ரமலான். அல்லாஹ் தன் அடியார்களை சுவர்க்கத்தில் நுழைவிக்க ஏற்பாடு செய்த அற்புத மாதம்.

ஒரு சுன்னத்துக்கு ஃபர்ளின் நன்மையையும், ஒரு ஃபர்ளுக்கு 27 ஃபர்ளுகளின் நன்மையையும், ஒரு ஜமாஅத் தொழுகைக்கு 70 மடங்கு நன்மையையும் அல்லாஹ் அள்ளி வழங்கினான். லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க இரவை ரமலானில் வழங்கினான்.

தாவூத் (அலை) அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றார்கள். நம்மால் அப்படி செய்ய முடியுமா? ஆனால் ஷவ்வால் மாதம் 6 நோன்புகள் நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்.

“யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

புதிய விடியல் ஆகஸ்ட் 2015 (மனதோடு மனதாய்...)

Wednesday, 24 August 2016

இறுதிநாள் எனும் எதார்த்தம்!


ஒட்டகங்களை மேய்க்கிற சாதாரண இடையராக இருந்து, 22½ லட்சம் சதுர மைல்களை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை மறுமை நாள் என்னும் மையப்புள்ளியைச் சுற்றியே அமைந்திருந்தது.

இறுதி நாளைப் பற்றி நினைவு வந்து விட்டாலோ அல்லது யாராவது நினைவு படுத்தி விட்டாலோ உடனே மாலை மாலையாக கண்ணீர் விட்டு அழுது விடுவார்கள். அந்த அளவு இறுதி நாளின் மீதும், அன்று நடக்கும் கேள்வி கணக்கு விசாரணையின் மீதும் அச்சத்தைக் கொண்டிருந்தார்கள். அந்த அச்சம் அவர்களுக்கு எச்சரிக்கையை கொடுத்தது.

அதன் விளைவுதான் பல லட்சம் சதுர மைல்களுக்கு அதிபராக இருந்தும் எளிமை ஜனாதிபதியாக திகழ்ந்தார்கள். அரசாங்க கஜானாவிலிருந்து சொற்ப தொகையையே ஊதியமாக பெற்ற உமர் (ரலி) அவர்களுக்கு மாற்று ஆடை கூட இருந்ததில்லை. இருந்த ஓர் ஆடையை துவைத்துப் போட்டு காய்வதற்கு தாமதமானதால் ஒரு ஜும்ஆவுக்கு சிறிது தாமதமாக வந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட நிகழ்வும் அவர்களது வாழ்வில் அரங்கேறியது.

ஒரு முறை ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆவுக்காக மஸ்ஜிதுக்கு வரும்பொழுது, அவரை ஸல்மானுல் ஃபார்ஸி (ரலி) தடுத்து நிறுத்தி, “உமரே! நீங்கள் இப்போது அணிந்திருக்கிற ஆடை ஒரு தடவை அன்பளிப்பாக உங்களுக்கு கிடைத்தது. இதே போன்று எனக்கும் ஒன்று கிடைத்தது. இப்போது நீங்கள் கீழாடை, மேலாடையாக இரண்டு ஆடைகளை அணிந்திருக்கிறீர்களே... அது எப்படி?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் இந்தக் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் தன் மகன் அப்துல்லாஹ்வை நோக்கினார். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), “சகோதரரே! என் தந்தையுடையது ஓர் ஆடைதான். உங்களுக்கு அன்பளிப்பாக ஆடை கிடைத்த அதே சமயத்தில் எனக்கும் ஓர் ஆடை கிடைத்தது. அதை நான் என் தந்தைக்கு கொடுத்தேன்” என்றார்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு ஒற்றை ஆடை கூட கேள்விக்குரியதாக இருந்தது. அவர்களது ஆடைகளில் ஒட்டுக்களும் அதிகம். “உமரின் ஆடையில் தோள் புஜங்களுக்கு இடையே நான்கு ஒட்டுக்களை நான் பார்த்தேன்” என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

ஒரு தடவை உமர் (ரலி) அவர்களிடம் முதியவர் ஒருவர் வந்து, ‘‘நான் ஏழை. எனக்கு பெண் குழந்தைகள் இருக்கின்றன. எனக்கும், என் குழந்தைகளுக்கும் அணிவதற்கு சரியான ஆடைகள் இல்லை. ஆடை ஏதாவது இருந்தால் கொடுங்கள்” என்று கேட்டார்.

உமர் (ரலி) அவர்களுக்கு இருப்பது ஓர் ஆடைதான் என்பது அந்த முதியவருக்கு தெரியாது. உமர் (ரலி) அவர்கள் அவரிடம், ‘‘என்னிடம் ஆடைகள் ஏதும் இல்லையே…” என்றார்கள்.

அதற்கு அவர் ஏமாற்றத்துடன், ‘‘இங்கிருந்து நான் சென்று விடுவேன்” என்று கூறினார். ‘‘நீர் சென்று விட்டால் என்ன நடக்கும்?” என்று உமர் (ரலி) அவர்கள் வினவ, அந்த முதியவர் கூறினார்: ‘‘உமரே! அவ்வாறு நான் சென்று விட்டால், மறுமை நாளில் அந்தப் பெண் குழந்தைகளைக் குறித்து இறைவன் உம்மிடம் விசாரிப்பான். பின்னர் நீர் நரகம் செல்வதா அல்லது சுவனம் செல்வதா என்று அப்போது தீர்மானிக்கப்படும்.”

அவ்வளவுதான்! “மறுமை நாள்” என்ற வார்த்தையைக் கேட்டதும் திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள் தங்கள் தாடி நனையும் அளவுக்கு அழ ஆரம்பித்தார்கள். உடனே அங்கிருந்த பணியாளரிடம் கூறினார்கள்: ‘‘எனது ஆடையை இவருக்குக் கொடுங்கள்.”

பின்னர் அந்த முதியவரிடம் கூறினார்கள்: ‘‘இறைவன் மீது ஆணையாக! இப்போது என்னிடம் இதைத் தவிர வேறு ஆடை எதுவும் இல்லை. மறுமையில் நான் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படக் கூடாது என்பதற்காக இதோ இப்போது இதனை வைத்துக் கொள்ளுங்கள்.”

இறுதி நாளின் எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் இப்படித்தான் தங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

விடியல் வெள்ளி  ஜூலை 2015 (மனதோடு மனதாய்...)

Tuesday, 23 August 2016

உண்மையான உள்ளங்கள் எங்கே?


தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு ஆள் கொஞ்சம் பணத்துடன் வீட்டிலிருந்து வெளிவந்தார். தகுதியானவர் யார் என்று விசாரித்து விசாரித்து கடைசியில் அவர் அந்தப் பணத்தைக் கொடுத்தது ஒரு திருடன் கையில்.

மக்கள் இந்த விசித்திர நடவடிக்கை கண்டு ஆச்சரியப்பட்டனர். பலவாறாகப் பேசினர். திருடனுக்கு தர்மம் வழங்குகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால் தான் செய்தது குறித்து அவர் மிக்க திருப்தி கொண்டிருந்தார். நல்ல ஒரு செயல் செய்ய வாய்ப்பளித்ததற்காக அல்லாஹ்வுக்கு அவர் நன்றி செலுத்தினார்.

இன்னொரு நாளும் அதே போன்று கொஞ்சம் பணத்துடன் தர்மம் செய்வதற்காக அவர் வெளிவந்தார். இத்தவணை அவரது தர்மம் சென்றடைந்தது ஒரு விபச்சாரியிடம். அன்று போல் இன்றும் மக்கள் புருவத்தை உயர்த்தினர். பலவாறாகப் பேசிக்கொண்டனர். அவர் மீது மீண்டும் குற்றம் சாட்டினர். ஆனால் அவர் தான் செய்தது குறித்து மிக்க திருப்தியடைந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

அதற்கடுத்த நாளும் அவர் கொஞ்சம் பணத்துடன் தர்மம் செய்வதற்காக வெளிவந்தார். இத்தவணை அவர் தர்மம் கொடுப்பதற்காக தேர்ந்தெடுத்தது ஒரு பணக்காரரை!

அந்தப் பணக்காரர் கஞ்சனிலும் மகா கஞ்சன். பணக்காரருக்கு தானதர்மம் நல்கிய கொடைவள்ளல் என்று மக்கள் அவரைக் கேலி பேசி கிண்டலடித்தனர். ஆனால் அவரோ இப்பேற்பட்ட ஒரு பணக்காரருக்கு தர்மம் வழங்கிட வாய்ப்பளித்த வல்ல இறைவனுக்கு நன்றி நவின்று பூரண திருப்தியுடன் புளகாகிதம் அடைந்தார்.

திருடனுக்கும், விபச்சாரிக்கும் தர்மம் அளித்தது அவர்களது தவறான தொழில்களிலிருந்து அவர்களைத் திருத்த உதவும் என்று மிக்க நம்பிக்கை கொண்டிருந்தார் அவர். அதனாலேயே அவர்களுக்கு தர்மம் அளித்தார். தர்மம் பெற்ற பணக்காரர் அதிலிருந்து மிகப் பெரும் பாடம் பெற்று தன் கஞ்சத்தனத்தை விட்டொழித்து பிறருக்கு தன் பொருளிலிருந்து தான தர்மம் வழங்க தொடங்குவார் என்று இவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனாலேயே அவருக்கு தர்மம் வழங்கினார்.

எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் கூறிய ஓர் அனுபவக் கதைதான் இது.

தூய்மையான எண்ணம்தான் எந்தவொரு செயலுக்கும் பூரணத்துவத்தை அளிக்கிறது. வெளியில் பார்க்கும்பொழுது முட்டாள்தனமாக தெரியும் எல்லா செயல்களும் உண்மையில் முட்டாள்தனங்களல்ல. அதில் பலவற்றில் பல நல்ல நோக்கங்கள் ஒளிந்து கிடக்கும்.

அதேபோன்று வெளியில் நல்லதாக தெரியும் எல்லா செயல்களும் நல்ல செயல்களல்ல. மாசு படிந்த உள்ளங்களுடன் செய்யப்படும் நல்ல காரியங்கள் அதன் பூரணத்துவத்தை இழந்து விடுகின்றன. இந்த நல்ல செயல்களால் பெரிதாக பலன் எதுவும் ஏற்பட்டு விடாது.

பண்டைய காலம் தொட்டே ஹஜ்ஜுக்கு வருவோருக்கு சேவை புரிவதும், மிருக பலி கொடுப்பதும், இன்னபிற சேவைகளும் அரபிகளுடைய பழக்கமாக இருந்தது. அது அவர்களுக்கு பெருமையாகவும் இருந்தது. இந்தச் சேவைகள் மூலம் புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதை விட அவர்களுக்கு தங்கள் குலப் பெருமையையும், தலைமைப் பதவியையும் உயர்த்திப் பிடிப்பதுதான் இலட்சியமாக இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மல்லுக்கு நின்றபொழுதும், யுத்தங்கள் புரிந்தபொழுதும் குறைஷிகள்தான் மக்காவில் இறையில்ல சேவகர்களாக இருந்தனர். அவர்கள் அதில் மிக்க அபிமானம் கொண்டிருந்தனர்.

இந்தச் சேவைகள் மூலம் அல்லாஹ் தங்களுக்கு உதவிகள் புரிந்து கரையேற்றி விடுவான் என்ற அவர்களின் நோக்கத்தில் அல்லாஹ் இவ்வாறு மண்ணை அள்ளிப் போட்டான்:

(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப் பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (அத் தவ்பா 9:19)

நல்ல செயல்கள் நல்ல உள்ளங்களிலிருந்து புறப்பட வேண்டும். அதுவே அறுதி வெற்றியை ஈட்டித் தரும்.

விடியல் வெள்ளி  மே 2015 (மனதோடு மனதாய்...)

Sunday, 3 January 2016

இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்!


சமூகத்தில் மிக முக்கிய பிரிவினர்தாம் இளைஞர்கள். அந்த இளைஞர்களின் கரங்களில்தான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் எதிர்காலமும், பாதுகாப்பும் அடங்கியிருக்கின்றன. ஒரு நல்ல சமூகத்தின் அடிப்படை அம்சம் என்பதே இளைஞர்கள்தாம்.

இளைஞர்களின் ஆற்றல், அறிவு, நேரம் போன்றவை ஆக்கபூர்வமான பாதையில் செலவழிக்கப்பட்டு அவர்களும், அவர்கள் மூலம் சமூகமும் பலனடைய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் காட்டித் தந்த பாதை.

நபி (ஸல்) அவர்கள் இளைஞர்களிடம் காட்டிய அணுகுமுறையும், அவர்களிடம் பழகிய விதமும் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆற்றல் மிக்க இளைஞர்களை அண்ணலார் சமூகத்தின் ஒரு முக்கிய அம்சமாக மாற்றிக் காட்டினார்கள். அவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினார்கள். அவர்களின் துடிக்கும் இள ரத்தத்தை சமூக நலன்களுக்கு பயன்படுத்தினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒளிர்ந்து மின்னியவர்கள் பலர். அவர்களில் அதிகமானோர் இளைஞர்களாக இருந்தார்கள் என்பது இன்பமளிக்கிறது. அலீ இப்னு அபூதாலிப், ஜஅஃபர் இப்னு அபூதாலிப், உஸாமா பின் ஸைத், முஸ்அப் இப்னு உமைர், பர்ரா இப்னு ஆஜிப், ஸைத் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், அம்ர் இப்னு அல் ஆஸ் போன்ற பிரபல நபித்தோழர்கள் அனைவரும் இளைஞர்களாக இருக்கும்பொழுது இஸ்லாத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள்.

திருக்குர்ஆனும் இளைஞர்களின் பங்களிப்பை சிலாகித்துச் சொல்கிறது. குகைத் தோழர்கள் சம்பவத்தில் அவர்களை இளைஞர்கள் என்று சொல்கிறது. அண்ணலார் தம் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவக்கிய ஆரம்ப காலகட்டங்களில் அவர்களுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இஸ்லாம் தழுவும்பொழுது வயது 37. அதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாம் தழுவும்பொழுது அவர்களுக்கு வயது 33. இப்படி இளமைப் பருவத்தினரின் உதவியுடன்தான் இஸ்லாம் வளர்ந்தது.

நபி (ஸல்) அவர்கள் முதுமைப் பருவத்தை அடையும் முன் இளமைப் பருவத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியிருக்கின்றார்கள்.

அந்த வகையில் இளைஞர்களை திட்டமிட்ட முறையில் பயிற்றுவிக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருக்கின்றது. இன்று இளைஞர்களை திசை திருப்புவதற்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. நவீன தொடர்பு சாதனங்கள், மனோ இச்சை, அந்நியக் கலாசாரத் தாக்கம், மார்க்கத் தெளிவின்மை போன்ற சவால்கள்தாம் அவை.

வானொலி. தொலைக்காட்சி, அலைபேசி, இணையதளம் (வாட்ஸ்அப், முகநூல்) என நவீன தொடர்பு சாதனங்களின் பட்டியல் நீள்கிறது. இவை மூலம் காதல், கத்தரிக்காய் என்று இளைஞர்கள் தங்கள் நேரங்களை வீணாகக் கழிக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் இரண்டு அருட்கொடைகளை அநீதம் செய்கின்றனர். ஒன்று - ஓய்வு நேரம், இரண்டு - ஆரோக்கியம்”.

இன்றைய நவீன தொடர்பு சாதனங்கள் இளைஞர்களின் பொன்னான ஓய்வு நேரங்களை பாழாக்கி, அவர்களை வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்கின்றன. இதனால் அவர்களின் உள்ளமும், உடலும் ஆரோக்கியமிழந்து கிடக்கின்றன.

“அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்களே அதில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வணக்கத்தில் வளர்ந்த இளைஞர்கள்.

ஐந்து வருவதற்கு முன்னர், நீங்கள் ஐந்தைத் தேடிக்கொள்ளுங்கள் என்று கூறிய அண்ணலார், முதுமைக்கு முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளப் பணித்தார்கள்.

மனிதன் தனது வாழ்வின் வசந்த காலப் பருவமாகத் திகழும் இளமையை வீணாக்கிவிடாது, மிகக் கவனமாகப் பயன்படுத்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் பேரவா.

விடியல் வெள்ளி  டிசம்பர் 2014 (மனதோடு மனதாய்...)