Saturday 6 May 2017

நெருக்கடியில் முஸ்லிம்களின் நிலைப்பாடு!


இன்று முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலகட்டம். ஆட்சி பீடங்கள் எதிரிகளின் கைகளில் அடைக்கலமாகி விட்ட நேரம் இது. மாட்டு உயிரை விட மலிவாக முஸ்லிம்களின் உயிர்கள் மாறிவிட்ட காலம் இது.

இந்தச் சமயத்தில் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு மிக முக்கியம் வாய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இக்கட்டான காலத்தில் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள், எப்படி தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இன்று இந்தியா மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மட்டும் கழுத்துச் சுறுக்கு இடப்படுகிறது. பலருக்கும் முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தில் மட்டும் மாச்சரியங்கள் ஏற்பட்டு விடும்.

இதே நிலை அன்றைய மக்காவிலும் இருந்தது. மக்காவின் மதச் சடங்குகளைத் தாண்டி வெளியிலுள்ள வணக்க வழிபாட்டு முறைகள் எதனையும் எதிர்க்கும் பழக்கம் மக்காவாசிகளுக்கு இருந்ததில்லை. இறைபக்தர்களும், வியாபாரிகளுமாக வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வந்து போகின்ற ஊராக மக்கா இருந்ததால் கலாச்சார சகிப்புத்தன்மை இயல்பாகவே அங்குள்ள மக்களுக்கு இருந்தது.

புனித கஅபா ஆலயம் உள்ள பகுதியில் அமைதி குலையாமல் குறைஷிகள் சிறப்பு கவனம் எடுத்து பார்த்துக் கொண்டார்கள். அங்கே உரிமை மீறல்களையும், இரத்தம் சிந்துவதையும் அவர்கள் அனுமதித்திடவில்லை.

அதனால்தான் மக்காவாசிகளின் பலதெய்வக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த வரகா இப்னு நவ்ஃபல், ஸைத் இப்னு கத்தாப் போன்ற வேற்று மதப் பண்டிதர்கள் எந்தவித அச்சமுமில்லாமல் மக்காவில் சுதந்திரமாக வாழ முடிந்தது. அப்படியானால் முஹம்மத் (ஸல்) அவர்களின் புதிய மார்க்கத்தை மட்டும் மக்காவாசிகள் மல்லுக்கட்டி எதிர்த்தது ஏன்?

முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் இருந்த அதிக முக்கியத்துவத்தை அவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்தார்கள். தங்கள் சமூக அந்தஸ்து தகர்ந்து போகும் என்று அஞ்சினார்கள். அதனால்தான் அவர்கள் அண்ணலாரையும், அவர்தம் தோழர்களையும் ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தார்கள்.

இன்று இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் எதிரிகள் அதிகமாக குறி வைப்பதும் இதே காரணத்திற்காகத்தான். இஸ்லாம் தழைத்தோங்கி விட்டால், முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளுடன் வாழ ஆரம்பித்து விட்டால் அவர்களது குடுமிகள் ஆட்டம் கண்டு விடும் என்று அஞ்சுகிறார்கள்.

மக்காவுக்கு சிறிது தூரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் முஸ்லிம்கள் ஒரு தடவை கூட்டாக தொழுகையில் ஈடுபட்டிருந்ததை குறைஷிகள் பார்த்தவுடன் அவர்களைத் தாக்கினார்கள். ஆட்கள் குறைந்த பலஹீனமான நிலையிலும் முஸ்லிம்கள் கையில் கிடைத்ததைக் கொண்டு திருப்பித் தாக்கினார்கள். ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) ஒட்டகத்தின் நாடி எலும்பைக் கொண்டு எதிரிகளைத் தாக்கினார்.

ஒரு சமூகத்தின் மேல் தொடர்ந்து நடத்தப்படும் துன்புறுத்தல்களும், புறக்கணிப்புகளும் அதன் தனித்துவம் பாழ்படுவதற்குக் காரணமாகி விடும். அச்சம் என்பது அடிமைத்தனத்தின் பாதையைத் திறந்து கொடுக்கும்.
அதனால்தான் அண்ணலார் அவர்தம் தோழர்களை சுதந்திரமாக வாழ வைக்க முயற்சிகளை எடுத்தார்கள். எதிரிகளின் விமர்சனங்களையும் கிண்டல்களையும் கண்டு பயந்து ஒதுங்கி நிற்காமல் மக்காவிலேயே அவ்வப்பொழுது பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தங்கள் உரிமைகள் எதனையும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. குறைஷிகளின் பிடியிலிருந்த கஅபாவில் வைத்து மக்கள் கேட்கும்படி உலக மறையை உரக்க ஓதினார்கள். பகிரங்கமாக பல பேர் பார்க்கும் வண்ணம் தொழுதார்கள்.

நிராகரிப்பாளர்களுக்கு பலமான பதிலடிகள் அடங்கிய குர்ஆன் பாகங்கள் இறங்கிய காலகட்டமாக இருந்தது அது. ஊர்க்காரர்களின் வெறுப்புக்கு அஞ்சி அண்ணலார் அந்த அருள்மறை வசனங்களையெல்லாம் பகிரங்கப்படுத்தாமல் மூடி வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட வீழ்ச்சி நேரிட்டுவிடக் கூடாது என்று அல்லாஹ் அண்ணலாருக்குக் கட்டளை பிறப்பித்தான்.

(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும். நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை. அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான். (ஹூது 11:12)

இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் பலஹீனமாக இருந்த மக்கா வாழ்க்கையில் தங்கள் சக்திக்கேற்ப சத்தியத்தின் பாதையில் மக்களை அழைத்து மார்க்கத்தைப் பாதுகாத்தார்கள். மதீனா சென்றதும் தங்கள் பலத்தை ஒன்று திரட்டி எதிரியுடன் பொருதினார்கள்.

ஆக, எந்நிலையிலும் நமது கலாச்சாரத்தையும், உரிமைகளையும் விட்டுவிடக் கூடாது. எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவது அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment