Saturday, 26 April 2014

வல்லரசு இந்தியாவில் வாரிசு அரசியல்!


இந்தியா ஒரு வல்லரசு நாடாக ஆகப் போகிறது என்று எல்லோரும் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்தியா வல்லரசாக மாறுமோ இல்லையோ வாரிசு இந்தியாவாக மாறிவிடும் போலிருக்கிறது.

ஆம்! இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பெரும்பாலான மூத்த அரசியல் தலைவர்கள் தங்கள் மகன்கள், மகள்கள், மனைவிகள், மருமக்கள் என்று தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கே சீட்டுகளை கிடைக்கச் செய்துள்ளார்கள்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் அலசிப் பார்த்தால் இந்த வாரிசு எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டிச் செல்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திதான் இந்த வரிசையில் முதலில் வருபவர். இவரிலிருந்துதான் இந்த எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக, எஸ்டிபிஐ, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள்தான் இந்த வாரிசு அரசியலின் விதிவிலக்குகள். (அதிமுகவில் இப்பொழுது இருக்கிற அமைச்சர்களுக்கே எப்பொழுது சீட் கிழியும் என்று தெரியாது. இதில் அவர்களின் வாரிசாவது, அரசியலாவது…!)

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒரிசாவில் மட்டும் ஐந்து முன்னாள் முதல்வர்களின் பிள்ளைகள் வரிந்து கட்டிக்கொண்டு வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.

நாட்டுக்கே சாபமான நரேந்திர மோடி ராகுல் காந்தியை "இளவரசர்" என்று கிண்டலடிக்கிறார். இவருக்கு இதனைச் சொல்ல ஒரு அருகதையும் இல்லை. ஏனெனில் அவர் சார்ந்திருக்கும் பாஜகவில் மட்டும் என்ன வாழுகிறதாம்? அங்கும் “இளவரசர்களின்” இராஜ்யம்தான்!

இரண்டு பாஜக முதல்வர்களின் பிள்ளைகள் களத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளார்கள். மூன்று முன்னாள் முதல்வர்களின் பிள்ளைகளும் களத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா ஜார்க்கண்டிலுள்ள அவருடைய தந்தையின் பாரம்பரிய தொகுதியான ஹஸாரிபாக் தொகுதியில் நிற்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் வாரிசு கார்த்தி சிதம்பரம் சிதம்பரத்தின் பாரம்பரிய சிவகங்கை தொகுதியில் நிற்கிறார்.

இது ஒரு புறம் இருக்கட்டும். இந்திய அரசியலில் அதிகரித்து வரும் இந்த வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்தையும், அதன் எதிர்கால வளர்ச்சியையும் எங்கே கொண்டு செல்கிறது?

முதலில் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். பாட்ரிக் ஃப்ரெஞ்ச் என்ற வரலாற்றாய்வாளர் இந்திய பாராளுமன்றத்திலிருந்து இப்பொழுது வெளியேறப் போகும் நடப்பு 545 தொகுதி எம்பிக்களின் பின்னணிகளை ஆராய்ந்தார். இதில் அவர் கண்டறிந்தது என்னவென்றால், எம்பிக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 28.2 சதவீத எம்பிக்கள் தங்கள் குடும்பத் தொடர்பை வைத்துதான் பாராளுமன்றத்தில் நுழைந்துள்ளார்கள்.

இது இங்கு மட்டுமல்ல. ஜனநாயகத்தை அமுல்படுத்தும் பல்வேறு நாடுகளிலும் இதுதான் நிலை. அரசியல் வர்க்கம் என்றறியப்படும் அந்த வகுப்பு மக்களிடம் இரண்டாவது, மூன்றாவது தலைமுறை வரை இந்த வாரிசு அரசியல் நீண்டு கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் வானில் குடும்பங்களின் பங்கை ஒத்திருக்கும் நாடு ஜப்பான்தான்.

பாட்ரிக் ஃப்ரெஞ்ச் தனது ஆய்வில் இன்னொரு புள்ளிவிவரத்தையும் குறிப்பிடுகிறார். 69.5 சதவீத இந்திய பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் நுழைந்தது குடும்பத் தொடர்பை வைத்துதான். இது  வயதை அனுசரித்து மாறுபடுகிறது. இள வயது எம்பிக்களே அதிகமாக  குடும்பத் தொடர்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.

40 வயதுக்குக் கீழுள்ள எம்பிக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாரிசுதாரர்கள். இதை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் 30 வயதுக்குக் கீழுள்ள அனைத்து எம்பிக்களும் வாரிசுதாரர்களே.

இதனை சொல்லிவிட்டு பாட்ரிக் ஃப்ரெஞ்ச் இவ்வாறு அந்த ஆய்வை முடிக்கிறார்: "நீங்கள் இளமையானவராக இருந்து அரசியலில் நுழைய விரும்பினால் குடும்பத் தொடர்புகள் மட்டும்தான் மிக முக்கிய வழியாக இருக்கிறது."

அப்படியென்றால் திறமை உள்ளவர்கள், துடிப்புள்ள சூடேறிய இரத்தம் கொண்ட இளைஞர்கள் அரசியலில் எளிதாக நுழைய முடியாது, மேலே வர முடியாது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்த ஆய்வின் படி அதிக வாரிசு அரசியலைக் கொண்ட கட்சிகளாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள், அகாலி தள், பிஜு ஜனதா தள், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை விளங்குகின்றன.

சட்டம், மருத்துவம், விளையாட்டு, இராணுவம் ஆகிய துறைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் வாரிசுகளும் அதே துறைகளில் நுழைந்து மிளிர வேண்டும் என்று விரும்புவார்கள். இதே போன்று அரசியல்வாதிகளும் எண்ணுவதில் என்ன தவறு இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம்.

ஆனால் பாட்ரிக் ஃப்ரெஞ்ச் சொல்லும் இன்னொரு முக்கிய விஷயம்தான் நம்மை இதில் கவனம் கொள்ள வைக்கிறது. கட்சியிலும், சமூகத்திலும் கடுமையாக உழைத்து உன்னத இடங்களை அடைந்த அரசியல்வாதிகளின் வாரிசுகளில் பெரும்பாலோர் "வெறும் வாரிசுகளாகவே" உள்ளனர் என்றும், அவர்கள் கட்சியிலோ சமூகத்திலோ மிளிரவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

வாரிசு அரசியலால் பல தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கட்சியை உருவாக்கியவர் அல்லது கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தனது வாரிசை கட்சியின் முக்கிய பதவிக்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்பினால் மற்ற உறுப்பினர்கள் அந்த பதவிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

ராகுல் காந்தி தான் பிரதமர் பதவியை ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என்று சமிக்கை காட்டிவிட்டார். இனி அந்தக் கட்சியில் ஒரு இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு வேறு யாரும் அந்தப் பதவியை அடையவே முடியாது.

கலைஞர் கருணாநிதி தன் மகன் ஸ்டாலினை அடுத்த முதல்வராக்க வேண்டும் என்று சூசகமாக தெரிவித்துவிட்டார். இனி அந்தக் கட்சியில் வேறு யாரும் முதல்வர் கனவு காண முடியுமா?

தன் மகன் அன்புமணி ராமதாசுக்கு மதிய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இதுவரை பேசி வந்த அனைத்து அறங்களையும் அடுப்பில் போட்டு பொசுக்கி விட்டு பாசிச பாஜகவுக்கு வால் தூக்கி ஓட்டு பொறுக்கிய ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியில் வேறு யாராவது மதிய அமைச்சர் ஆக முடியுமா?

தன் மைத்துனன் சதீஷுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாடாவது மண்ணாங்கட்டியாவது என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாசிச பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து மோடிக்கு பிரச்சாரம் செய்கிறேன் என்ற பெயரில் ஊர் ஊராக உளறிக்கொட்டிய விஜயகாந்தின் தேமுதிகவில்தான் வேறு யாரும் அமைச்சராக முடியுமா?

மூன்றாவது முன்னணி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் ஆகி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் முலாயம் சிங் யாதவ் தான் வகிக்க வேண்டிய முதல்வர் பதவியை மிக பாதுகாப்பாக தன் மகன் அகிலேஷ் யாதவிடம் ஒப்படைத்தார்.

அதேபோல் முன்னர் லல்லு பிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழலில் சிக்கி முதல்வர் பதவியை இழக்க நிர்பந்தம் ஆன பொழுது தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார்.

தன் சொந்த பந்தங்களை, தன் உறவினர்களை கட்சியில் மேலே கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ள தலைவர்களைக் கொண்ட கட்சியில் உண்மையிலேயே திறமை உள்ளவர்கள் ஒரு பொழுதும் மேலே வர முடியாது. அல்லது மின்னும் தலைவர்களாக மிளிர முடியாது.

அதே போல், நடப்பில் எம்எல்ஏவாக இருக்கும் ஒருவர் எம்பியாக செல்கிறார் என்றால் அவர் காலியாகப் போகும் தனது எம்எல்ஏ இடம் தன் நெருங்கிய உறவினருக்குக் கிடைக்க வேண்டும் என்று தனது செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி லாபி செய்கிறார். அதே போல் நடப்பில் எம்பியாக இருப்பவர் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு வருகிறார் என்றால் தனது எம்பி பதவிக்கு தன் நெருங்கிய உறவினரையே அமர்த்த வேண்டும் என்று துடிக்கிறார்.

இதுதான் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்தது. எம்பியாக இருந்த வீரபத்ர சிங் மாநில முதல்வராக ஆனபொழுது தனது எம்பி சீட்டை அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி தன் மனைவி பிரதிபா சிங்குக்கு கிடைக்கச் செய்தார்.

ஆக, வாரிசு அரசியல் இந்திய அரசியலை கறை படுத்தும். வாரிசு அரசியல் கட்சிக்குள் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும்.

இது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். வாரிசு அரசியல் நாட்டுக்கு ஒருபொழுதும் நல்லதல்ல.

MSAH

Wednesday, 23 April 2014

அரசியல் புரட்சியில் ஓர் அரிச்சுவடி!


வடசென்னையில் திருவிக நகரின் குறுகிய சந்துகளில் அந்த வீர உரை கேட்கிறது. கைதேர்ந்த பேச்சு. பேச்சு அத்தனையும் மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது. மாய வார்த்தை ஜாலங்கள்இல்லை. மயக்கும் வாக்குறுதிகள் இல்லை. பேச்சின் வீச்சு அங்கிருக்கும் சந்துகளில் அடர்ந்து வாழும் சேரி மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

அந்தப் பேச்சு ஏற்படுத்திய மாற்றம் அவர்களின் முகங்களில் தெரிகிறது. குறுகிய சந்து ஒன்றில் அமைக்கப்பட்ட சிறிய மேடையில் அவர் கைதேர்ந்த பொருளாதார நிபுணரைப் போல பொருளாதார தாராளமயக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறார். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைப் பற்றிப் பேசுகிறார். அம்பானிகளை அச்சுறுத்துகிறார். டாட்டாக்களுக்கு எச்சரிக்கை டாட்டா காட்டுகிறார். முதலாளித்துவத்தின் கோர முகங்கள்தாம் இந்த அம்பானி வகையறாக்கள் என்று அம்புகளைப் பாய்ச்சுகிறார்.

வடசென்னை தொகுதியின் நடுத்தர வகுப்பு மக்களின், ஏழைகளின் மோசமான நிலைக்கு அம்பானி வகையறாக்கள்தான் முக்கிய காரணம் என்று புள்ளிவிவரங்களுடன் புட்டுப் புட்டு வைக்கிறார். அந்த மேடை எஸ்டிபிஐயினுடையது. அதில் பேசியவர் எஸ்டிபிஐயின் சாதாரண ஒரு பொறுப்பில் உள்ளவர்.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் அமைந்திருக்கும் ராயபுரத்திற்கு அருகிலுள்ள வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் ஒற்றுமைக்கான அழைப்பு எஸ்டிபிஐ மேடையிலிருந்து எதிரொலிக்கிறது. ஆனால் அது முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியல்ல என்று அவர்கள் ஏற்கனவே பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள்.


அந்த அழைப்புக்கு அடுத்தபடியாக நடுத்தர வகுப்பு மக்களின் நலனுக்காகப் பேசுகிறார்கள். ஏழை எளிய மக்களின் ஏற்றத்துக்கு உழைப்போம் என்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலையை இல்லாமலாக்க பாடுபடுவோம். என்கிறார்கள். இப்படி எல்லோருக்குமான கட்சியாக மேடை தோறும் முழங்குகிறார்கள்.

எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவியாகட்டும், சாதாரண கட்சிப் பொறுப்பாளராகட்டும், மக்கள் கூட்டம் அலை மோதும் பொதுக்கூட்டங்களாகட்டும், சிறு சந்துமுனைக் கூட்டங்களாகட்டும் – ஒலிபெருக்கியில் கேட்பது அனைத்தும் மக்களின் அன்றாட பிரச்னைகள். அவற்றுக்கான தீர்வுகள் அவர்களின் உரைகளில் அனல்களாகத் தெறிக்கின்றன.

வண்ணாரப்பேட்டையின் லாலாகுண்டா பகுதியில் எஸ்டிபிஐ பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டம் வழிந்தோடுகிறது. மேடையில் எஸ்டிபிஐ வடசென்னை தொகுதி வேட்பாளர் நிஜாம் முஹைதீன் விஜயகாந்தை விமர்சித்துப் பேசுகிறார்.

நாட்டு மக்களைப் பற்றி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன்னைப் பற்றியும், தன் கட்சியைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டு ஃபாசிச பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து நரேந்திர மோடிக்கு காவடி தூக்கிக் கொண்டு அலையும் விஜயகாந்தின் மேல் அம்புக் கணைகளாக வந்து விழுகின்றன நிஜாம் முஹைதீனின் சரமாரியான கேள்விகள்.

அதே போல் நெல்லை தொகுதியில் போட்டியிடும் முபாரக்கின் பேச்சுகளும் அவர்கள் மக்களுக்கு செய்த சேவைகளை சுற்றியே வருகின்றன. பேச்சில் அலங்காரங்கள் இல்லை. அகங்காரங்கள் இல்லை. ஆனால் யதார்த்தம் இருக்கிறது. ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது. மக்களுக்காக உழைக்கும் எண்ணம் தென்படுகிறது.

இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் டாக்டர் நூர் ஜியாவுதீன். இவர் ஒரு சித்த மருத்துவர். மக்கள் அனைவரையும் சந்திக்கிறார். இவரும், இவரது சகபாடிகளும், குறிப்பாக பெண்களும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதைக் கண்டு மற்ற கட்சியினர் கதி கலங்கி நிற்கிறார்கள்.

போட்டியிடும் மூன்று தொகுதிகளிலுமே அவர்களின் மகளிர் அணியினர் வெயிலென்றும் பாராமல் வீடு வீடாக, குடிசை குடிசையாக சென்று ஓட்டு கேட்டது அவர்களுக்கு பெரும் சாதகமாக அமைந்திருக்கிறது. ஆரம்பித்து 5 வருடங்களே ஆனாலும் தாங்கள் மக்களுக்காக செய்த சேவைகளை சொல்லி தைரியமாக ஒட்டு கேட்கிறார்கள். இந்த தைரியம் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு இருக்கிறதா என்று நெஞ்சு நிமிர்த்தி கேட்கிறார் நெல்லை முபாரக்.

"எங்கள் கட்சிக்கு இங்கே 2009 முதல் நல்ல கட்டமைப்பு இருக்கிறது. வெறும் தேர்தலுக்காக மட்டும் நாங்கள் இங்கே  வரவில்லை. இங்குள்ள மக்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்" என்று twocircles என்ற ஆங்கில இணையதள ஊடக செய்தியாளரிடம் தெம்போடு கூறுகிறார் வடசென்னை வேட்பாளர் நிஜாம் மொஹைதீன்.

அதே மூச்சில் அவர் இன்னொன்றையும் சொல்கிறார்: "நாங்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் போராடவில்லை. எங்கள் கட்சி முஸ்லிம் கட்சியல்ல. ஒடுக்கப்பட்ட அதனை மக்களுக்கும் உள்ள கட்சிதான் எஸ்டிபிஐ. நான் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் குரலாக ஒலிக்க விரும்புகிறேன். நல்ல சாலைகள் அமைத்திடவும், அனைவருக்கும் நல்ல கல்வி கிடைத்திடவும், சுத்தம், சுகாதாரம் கிடைத்திடவும் நாங்கள் பாடுபடுகிறோம்."

இவர்களின் துடிப்பில் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்திய அரசியலில் இந்தக் கட்சி பெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

MSAH