Thursday 12 January 2017

பர்வின் பானு அனஸ் அவர்களின் “துரோகி” அனுபவம்! (முகநூல் பதிவு)



நீண்ட காலங்களுக்கு பிறகு வழமையான புதியதொரு அனுபவம்.

காலையில் எடுத்த புத்தகம் கையை விட்டு இறங்க மறுத்தது. முடித்துவிட்ட பின் இனந்தெரியாத சோகமும் கையறுநிலையும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான மனநிலை ஒட்டிக்கொண்டது.

பொதுவாக மொழிபெயர்க்கப்படும் புத்தகங்ஙகளின் உயிர்ப்பு தன்மை நீர்த்துப் போகாமல் இருப்பது ஆசிரியரின் திறனில் உள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தன் பணியை நிறைவாக செய்துள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்ப்ருக்ஸுடன் நாமும் பயணம் செய்து குவாண்டனாமோ நிகழ்வுகளுக்கு சாட்சியாகியது போன்ற உணர்வு எழுவது தவிர்க்க முடியாதது.

இறுதியில் சிலருக்கு கிடைத்த விடியல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பிய "முஸ்தஃபா" போன்றே நம் மனமும் ஏங்குகின்றது.

நன்றி : பர்வின் பானு அனஸ்

அநியாயமாக குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டு அப்பாவி என்று விடுவிக்கப்பட்ட ‘ஜெனரல்’ அஹமத் அர்ராஷிதி “துரோகி” நூலுக்கு எழுதிய முன்னுரை!

‘ஜெனரல்’ அஹமத் அர்ராஷிதி



அழகிய மணம் கொண்ட, வண்ணமயமான மரத்தை இஸ்லாம் மார்க்கத்திற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஏனெனில், ஒரு மரம் வளர்ந்தால் அது மக்களுக்குப் பயன் தரக்கூடிய நிழல், பழம், மனம் கவரும் மணங்கள், கண் கவரும் வண்ணங்கள் போன்ற பல பலன்களைத் தருகிறது.

இப்பொழுது கற்பனை செய்து பாருங்கள். இந்த மரம் ஒவ்வொரு முறை வளரும்பொழுதும் நசுக்கப்பட்டு, வேரோடு பிடுங்கப்பட்டால், அத்தோடு மக்களிடம் இந்த மரம் பெரும் தீங்கிழைக்கும் என்றும், கொடிய விஷமுள்ளது என்றும், இது வளர்ந்தால் அதன் விஷத்தன்மையால் பிறரை அழித்து விடும் என்றும், ஆதலால் இம்மரம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சொல்லப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

என்ன நடக்கும்? கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அந்த மரத்தை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். அதனை வெறுக்கத் தொடங்குவார்கள். அதன் அழகையும், அது தரும் பலனையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஒரு முறை அம்மரத்தை விட்டு விலகி விட்டார்களானால் இனி அந்த மரத்தின் பக்கமோ, அதன் அழகின் பக்கமோ அவர்கள் திரும்பவே மாட்டார்கள். ஆனால் ஹோல்ட்புரூக்ஸ் போன்ற ஒரு படைவீரர் இந்த மரத்தைப் பற்றி கேள்விப்படுகிறார். மரங்களோ, தாவரங்களோ ஒருபொழுதும் வளராத ஒரு இடத்தில் வைத்து, இடங்களிலெல்லாம் மிக மோசமான ஒரு இடத்தில் வைத்து அம்மரத்தின் பலன்களை அவர் கேள்விப்படுகிறார்.

ஆம்! அதுதான் குவாண்டனாமோ!

குவாண்டனாமோ என்ற அந்த இடத்தில் மக்களிடையே பகைமையும், வெறுப்புமே குடிகொண்டிருந்தன.

குவாண்டனாமோவில் சிறைவாசிகளுக்கு அணிவிக்கப்படும் ஆரஞ்சு ஆடைகளும், அந்தச் சிறைவாசிகளை சித்திரவதைப்படுத்துவதற்காக வளர்க்கப்படும் கொடிய விலங்குகளும் ஹோல்ட்புரூக்ஸுக்கு சிறைவாசிகளை அணுகுவதற்கு தடையாக இருந்திடவில்லை. அவர் அவர்களைத் தயங்காமல் அணுகி இஸ்லாம் பற்றிப் பேசினார். அவரது அணுகுமுறைகளிலும், கேள்விகளிலும் அவர் மிகுந்த தைரியசாலியாகத் திகழ்ந்தார்.

அவரது சுதந்திரமான, வெளிப்படையான சிந்தனை கண்டு நான் வியப்படைந்திருக்கிறேன். இஸ்லாம் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளாலும், பாரபட்சங்களாலும் அவரது சிந்தனையில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை.

சிறைவாசிகளிடம் காட்டப்படும் அதிகாரத்தின் மேலுள்ள மோகமும், திமிரும் அவரை என்றுமே மிகைத்ததில்லை. மற்ற படைவீரர்கள் அந்த அதிகார மோகத்தில் வீழ்ந்து கிடந்தனர். ஆனால் அவரோ சிறைவாசிகள் மேல் அவதூறாக வீசப்படும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்தார். ஏனெனில் அவர் மற்ற படைவீரர்கள் காணாததைக் கண்டார். மற்ற படைவீரர்கள் கண்டுபிடிக்காததை கண்டுபிடித்தார்.

அத்தோடு அவர் தனது ஆய்வை, தனது தேடலை பிடிவாதமாக தொடர்ந்தார். அந்த மரத்தை அவர் நேசித்ததே அதற்குக் காரணம். அந்த மரம் ஏற்படுத்திய நல்ல பல விளைவுகளை அவர் அந்தச் சிறைவாசிகளிடம் கண்டார். அவர் அந்த மரத்தைத் தனதாக்க விரும்பினார். அதேபோன்று அந்த மரம் தன்னை உள்வாங்க வேண்டும் என்றும் விரும்பினார்.

பாவம் செய்த ஒரு பணியாள் மன்னிப்பதற்குத் தயாராகக் காத்திருக்கும் அன்பு நிறைந்த எஜமானனைக் கண்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வானோ அதே மகிழ்ச்சியை அவர் அடைந்தார்.

அஹமத் அர்ராஷிதி (முன்னாள் சிறைவாசி 590)

எல்லையில் ராணுவ வீரன் - நியூஸ் 7 டிவி செய்தியாளர் ஹாஜா குதுப்தீன் (முகநூல் பதிவு)



"படை வீரர்களை மூளைச் சலவை செய்து கேள்வி கேட்காத ஒரு நிலைக்கு கொண்டு வரும் தந்திரம்தான் அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை பயிற்சிகளாகும்.

இராணுவத்தில் எதைப் பற்றியும் யோசிக்காத, கேள்வி கேட்காத படை வீரர்கள்தான் ஒரு பணியை முடிக்க பெரிதும் உதவியாக இருப்பார்கள்.

படைவீரர்கள் என்பவர்கள் மேலதிகாரிகளுக்கு கருவிகள் போன்றவர்கள். அவர்களின் இலட்சியத்தை அடைவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள்."

- டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்,

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க ராணுவ வீரன், 'துரோகி' நூலில்...

நன்றி : ஹாஜா குதுப்தீன் (நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர்)

செய்யத் காலிதின் பார்வையில் “துரோகி”! (முகநூல் பதிவு)




குவாண்டனாமோ - மனித உயிர்கள் உடலாலும், மனதாலும் சித்ரவதைகளை மட்டுமே அனுபவிக்க தயார்படுத்தப்பட்ட கொடுஞ்சிறை.

மனிதன் மனிதனாக வாழ முடியாத, சித்ரவதைகளை மட்டுமே அனுபவிக்க பணிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், இவர்கள் யாரும் மனிதர்களே அல்ல என்று தன் உயர் அதிகாரிகளால் போதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்னும் அமெரிக்க கிருத்தவ இராணுவ வீரனின் தேடல் இறைவனின் அருட்கொடையாம் இஸ்லாத்தை பரிசாக பெறச் செய்கிறது.

விறுவிறுப்பாக பயணிக்கிறது துரோகி. வாசிக்க துவங்கிய எவரும் 204 பக்கங்களை முடிக்காமல் செல்ல முடியாத ஈர்ப்பு புத்தகத்தின் பக்கங்களில் உண்மை புதைந்து கிடப்பதை காணலாம்.

'தேடுங்கள் கிடைக்கப்படும்' என்ற பைபிளின் வசனம் பொய்யாகுமா???.

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் தன் தேடலின் வெகுமதியை பெற்றுக்கொண்டார்.

நன்றி ; செய்யத் காலித்

Saturday 7 January 2017

துரோகி



“தேசியவாதமும் இஸ்லாமும்”, “இம்பாக்ட் பக்கம்”, “மனதோடு மனதாய்...”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “இஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவுகளும்” ஆகிய நூல்களுக்குப் பிறகு எனது அடுத்த  மொழிபெயர்ப்பு நூல் - “துரோகி”!

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்ற அமெரிக்க இராணுவ வீரர் எழுதிய Traitor என்ற நூலின் தமிழாக்கமே இந்நூல்.

ஓர் அமெரிக்க இராணுவ வீரன் இஸ்லாம் குறித்து தான் புரிந்து வைத்திருந்த அத்தனை தவறான செய்திகளுக்கும் சரியான விளக்கம் காண்கிறான்.

எங்கே? குவாண்டனாமோ சிறையில்!

யார் மூலமாக? கைதிகள் மூலமாக!

விளைவு? அவன் இஸ்லாமை ஆரத் தழுவுகிறான்!

ஆம்! ஓர் அமெரிக்க இராணுவ வீரனின் குவாண்டனாமோ பயணம் இஸ்லாமில் முடிகிறது. அதனை அந்த இராணுவ வீரனே வெகு தத்ரூபமாக விளக்குவதுதான் இந்த நூல்.



நூலாசிரியர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் நம்மை வேறோர் உலகுக்கு கொண்டு செல்கிறார். அங்கே புற்பூண்டுகள் இல்லை. மரம் செடி கொடிகள் இல்லை. அவற்றுக்குப் பதிலாக மனிதர்கள். தாடி வைத்த மனிதர்கள். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து தலை முதல் தோள் வரை சாக்குத் தொப்பி அணிவிக்கப்பட்டு சரக்குகள் ஏற்றும் விமானத்தில் விலங்கிட்டு தூக்கி வரப்பட்ட மனிதர்கள்.

இராட்சத சிலந்திகளும், பெருச்சாளிகளும் உலா வரும் அந்த இடத்தில், மனித சஞ்சாரமே கூடாத அந்த இடத்தில் மனிதத்தை மிதித்து உருவாக்கப்பட்ட இருண்ட கண்டம்.

அங்கே அன்பு இல்லை. அரவணைப்பு இல்லை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டு வரப்பட்ட சித்திரவதைக் கருவிகளும், சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிடுசிடு மூஞ்சிகளும் உள்ள கொடூரமான இடம்.



அங்கே கடுமைக்குப் பதில் கருணை பிறக்கிறது இந்நூலாசிரியருக்கு. இஸ்லாத்தின் மேல் வெறுப்புக்குப் பதில் விருப்பம் பிறக்கிறது. அதுவும் அந்த அப்பாவி கைதிகளின் அன்றாட நடவடிக்கை மூலமாக!

கல் நெஞ்சும் கரையும் சோகங்கள் ஒவ்வொரு கைதியிடமும். கைதிகளின் கதறல் கதைகளைச் சொல்கிறார். அவரும் கண்ணீர் வடிக்கிறார். நம்மையும் கண்ணீர் விட வைக்கிறார் இந்நூலில்.

கூடவே அமெரிக்கப் பட்டாளத்தின் சீழ் பிடித்த மனநிலையை பல்வேறு சந்தர்ப்பங்களில் படம் போட்டுக் காட்டுகிறார்.

இறுதியில் அவரது கண்ணீர் கண்ணியமிகு இஸ்லாத்தில் கொண்டு போய் அவரைச் சேர்க்கிறது.