Wednesday, 9 December 2015

வெள்ள நிவாரணப் பணிகளில் ‘தி இந்து’வுடன் கைகோர்த்த பாப்புலர் ஃப்ரண்ட்!


இது குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் 10.12.2015 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தி வருமாறு:

நேற்றைய தினம் ‘தி இந்து’வுடன் கைகோர்த்தது பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு. அதன் மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷேக் அன்சாரீ கூறும்போது, “இதுவரை நாங்கள் சுமார் 83 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் அளித்துள்ளோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ‘தி இந்து’ குழுமம் சிறப்பான முறையில் உதவிகளை செய்து வருவதை அறிகிறோம்.

எனவே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் உங்களோடு இணைந்து பணியாற்றும் விதமாக ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பாய், போர்வை, தலையணை, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குகிறோம். எங்கள் செயல்வீரர்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

Monday, 28 September 2015

எது சிறந்த கல்வி?


அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அறிவு. அறிவைத் தேடுவது, அறிவு ஞானத்தை வளர்ப்பது, அதனை அடுத்தவருக்கு எத்தி வைப்பது, அடுத்த தலைமுறைக்கு அதனைக் கொண்டு சேர்ப்பது போன்றவை மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள சிறப்பு,

அறிவைத் தேடுவதற்கு ஊக்குவிக்கும் ஒரு கிரந்தம்தான் திருக்குர்ஆன். சிந்தனைக்கும், ஆராய்ச்சிக்கும் அது தூண்டுகோலாக அமைகிறது.

"அவன் தான் நாடுவோருக்கு ஞானத்தை வழங்குகின்றான். எவர் ஞானம் கொடுக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக அதிக நன்மைகள் வழங்கப்பட்டவராவார். சிந்தனையுடேயோர்தான் படிப்பினை பெறுவார்கள்."(அல்குர்ஆன் 2:269)

அத்தோடு அறிவைத் தேடுவது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை கடமை என்று வலியுறுத்தினார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அதனை அடிப்படையாக வைத்துதான் முன்வாழ்ந்த முஸ்லிம்கள் அறிவியலில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். பல விஞ்ஞான உண்மைகளைக் கண்டுபிடித்து உலகத்துக்கு தந்தார்கள். அறிவியலில் அவர்கள் செய்த பங்களிப்பு அளப்பரியது.

நம்முடைய முன்னோர்களில் அறிவியல் ஆராய்ச்சிக்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்கள் பலர் இருந்தார்கள். அடுத்த தலைமுறைக்கு தாங்கள் தேடிப் பெற்ற அறிவியல் உண்மைகளைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இஸ்லாமிய அறிஞர்களின் வரலாறுகளைப் படிக்கும்பொழுது நாம் இதனை நிதர்சனமாகக் காணலாம். அவிசென்னா என்றழைக்கப்படும் அலீ இப்னு சீனா மருத்துவ உலகில் ஒரு மாமேதையாக திகழ்ந்தார். “மருத்துவ உலகின் தந்தை” என்றறியப்பட்டார். இன்றைய தலைமுறையின் அநேக மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு இப்னு சீனாவின் மருத்துவ கண்டுபிடிப்புகளே அடிப்படை அம்சமாக அமைந்துள்ளது.

இப்னு சீனா போன்று இஸ்லாம் அனைத்துவித அறிவுகளையும், பல்வேறு துறைகளின் கல்வி ஞானத்தையும் பெறுவதற்கு மனிதனைத் தூண்டுகிறது. மனிதகுலத்தை நேர்வழிப்படுத்துவதற்காக இறக்கப்பட்ட மாமறையின் முதல் வாசகமே “வாசிப்பீராக!” என்பதுதான். அதன் தொடர்ச்சியாக வரும் ஒரு சில வசனங்களும் கற்றல், கற்றுக் கொடுத்தல், எழுதுகோல் என்று அறிவு தேடுவது சம்பந்தமாகவே அமைந்துள்ளன.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கல்வி ஞானத்துக்கும், சுவனத்துக்கும் முடிச்சு போடுகிறார்கள். அவர்கள் அருளினார்கள்: “ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.” (முஸ்லிம்)

இப்படி அறிவைத் தேடுவதை ஒரு புனிதப் பணியாக இஸ்லாம் காண்கிறது. எல்லா துறைகளிலுமுள்ள அறிவையும் இஸ்லாம் தேடச் சொல்கிறது. அந்த அறிவுகளிலெல்லாம் தலைசிறந்தது எது என்றும் அது பறை சாற்றுகிறது. அதுதான் ‘‘லாஇலாஹ இல்லல்லாஹ்” என்பதைக் குறித்து உள்ள அறிவு.

இந்த அடிப்படை அம்சத்திலிருந்துதான் அனைத்து அறிவு ஞானங்களும் ஊற்றெடுக்கின்றன. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் எவ்வளவு பெரிய கல்வியைப் பெற்றாலும் அந்தக் கல்வியின் பின்னணியில் அவன் அடைவது தன்னைப் படைத்த இறைவனாக இருக்க வேண்டும். அதாவது, அவனது அடிப்படைக் கல்வியான “லாஇலாஹ இல்லல்லாஹ்” அவனிடமிருந்து மாறிப் போனால் அவன் நஷ்டவாளிகளில் ஒருவனாவான்.

அவன் பெறும் கல்வி அல்லாஹ்வின் ஆற்றலையும், மகத்துவத்தையும் அவனுக்கு உணர்த்துவதாக இருக்க வேண்டும். அவனது ஏகத்துவத்தை எடுத்தியம்புவதாக அமைய வேண்டும். அந்தக் கல்வியினூடாக அல்லாஹ்வின் மகா வல்லமையைக் கண்டு அவனுக்கு தன்னடக்கம் வரவேண்டும். அல்லாஹ்தான் அதிசக்தி படைத்தவன் என்றுணர்ந்து அவன் முன் சாஷ்டாங்கம் செய்பவனாக அவன் மாற வேண்டும். இப்படிப்பட்ட கல்வியைத்தான் இஸ்லாம் விரும்புகின்றது.

வானங்கள், பூமி, நட்சத்திரம், சந்திரன், மிருகங்கள், பறவைகள் என்று தொடங்கி ஈ வரை பரிசுத்த குர்ஆன் கலந்துரையாடுகின்றது. ஓர் ஈயை உதாரணமாகக் கூறுவதைக் கொண்டு தான் வெட்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான்.

வானியல் ஆராய்ச்சி செய்தாலும், புவியியல் பற்றிப் படித்தாலும், நட்சத்திரங்களைக் குறித்து அறிந்தாலும், உயிரினங்களைப் பற்றிப் பாடம் நடத்தினாலும் அவற்றைப் படைத்தது யார் என்பதை நாம் உணர வேண்டும்.

பின்தங்கிப் போயிருந்த நம் சமுதாயத்தினர் இன்று கல்வி கற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால் நம் இளவல்கள் கற்கும் கல்வி ஈமானுக்கு வலு சேர்க்கிறதா? இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கிறதா என்பதை பெற்றோர்தான் உறுதி செய்ய வேண்டும்.

புதிய விடியல்  ஜூன் 2015 (மனதோடு மனதாய்...)

Sunday, 27 September 2015

ரேடியோ ஸலாம் மாறுமா?


ஐக்கிய அரபு அமீரகத்தில் 106.5 அலைவரிசையில் ரேடியோ ஸலாம் என்ற தமிழ் FM வானொலி இயங்கி வருவது அமீரக தமிழ் மக்கள் அறிந்ததே.

BJP, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இன்னும் ஆளே இல்லாத இந்து இயக்கங்களின் செய்திகளை தவறாமல் சொல்லும் இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் எவ்வளவு பெரிய போராட்டங்களாக இருந்தாலும் கண்களுக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியமே.

அந்தப் போராட்டங்களால் நாடே குலுங்கினாலும் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஜாதி மதம் பாராமல் விடுவிக்க வேண்டும் என்று முஸ்லிம் இயக்கங்கள் போராடி வருகின்றன. இதைப்பற்றியெல்லாம் வாயே திறக்காதவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களை விடுவித்தால் நாட்டின் அமைதி கெட்டு விடும் என்று பாஜக திருவாய் மலர்ந்துள்ளதை ஒரு செய்தியாக சொல்கிறார்கள். ஊரில்தான் ஊடகங்களில் பாரபட்சம் என்றால் முஸ்லிம்கள் அதிகம் வாழும் முஸ்லிம் நாட்டிலுமா இப்படி?

இது குறித்து முகநூலில் பதிவிட்ட பொழுது நிறைய மக்களின் ஆதங்கமும் இதுவாகத்தான் இருக்கிறது என்று தெரிய வந்தது.

முகநூலில் எனது பதிவின் பின்னூட்டமாக தனது கருத்தை ஒருவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

“உண்மை, நீங்கள் மட்டுமல்ல. இது அமீரகத்தில் இருக்கும் எல்லோரும் தொடர்ந்து கவனித்து வரும் நிகழ்வு. இது ரேடியோ தொடங்கிய காலம் முதல் இன்று வரை தொடர்கதையாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதோ சின்னச் சின்ன செய்தியானாலும் இந்துத்துவ ஃபாசிச செய்திகளாக இருந்தால் உடனே அதை பெரிய செய்தி போலவும், முஸ்லிம் எதிர்ப்பு செய்திகள் யாரோ ஒரு வழிப்போக்கன் சொன்னால் கூட அதை தலைப்புச் செய்தியாகவும் சொல்லி முக்கிய செய்தியாக்குவார்கள். இவர்கள் மோடிக்கு அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே தூக்கிய காவடிகள் கொஞ்சமல்ல.

இந்த ரேடியோவின் ஃபாசிசப் போக்கை பலரும் பல சந்திப்புகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை ரேடியோ சலாம் Radio Salaam 106.5fm திருத்திக்கொள்ள வேண்டும். இதை அமீரகத்தில் உள்ள எல்லா தரப்பும் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அவர்கள் மாறினால் அவர்களுக்கு நலம்.”

அமீரகத்தில் இயங்கி வரும் மலையாள பண்பலை வானொலிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ரேடியோ ஸலாம் முஸ்லிம்கள் குறித்து, அதுவும் தமிழ் முஸ்லிம்கள் குறித்து மிகக் குறைவான செய்திகளையே தருகின்றது. மலையாள வானொலிகள் அதிகமான செய்திகளைத் தருவதுடன், முஸ்லிம்கள் குறித்து ஓரளவு நடுநிலையான செய்திகளையே வெளியிடுகின்றன.

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று இஸ்லாமிய உலகின் எதிர்மறையான செய்திகளை தவறாமல் ஒலிபரப்பும் ரேடியோ ஸலாம், முஸ்லிம்கள் குறித்த நேர்மறையான, ஆக்கபூர்வமான, நடுநிலையான செய்திகளை மிக அரிதாகவே சொல்கிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் முன்பாக இங்கே பாஜகவுக்கான பிரச்சார பீரங்கி போல் செயல்பட்டது ரேடியோ ஸலாம். அது ஒலிபரப்பிய அனைத்து செய்திகளிலும் பாஜகவின் பெயர் வராமல் இருந்ததில்லை. மோடி புகழ் பாடாமல் ஒரு செய்தி கூட இருந்ததில்லை.

அமீரகத்திலுள்ள தமிழ் மக்களுக்காக நடத்தப்படும் இந்த வானொலி இங்குள்ள தமிழ் மக்களின் நிலையை, தமிழகத்தின் நிலையை, குறிப்பாக இங்கே அதிகமாக வாழும் தமிழ் முஸ்லிம்களின் நிலையை, அவர்களின் வாழ்வாதாரங்களை, அவர்களின் அவலங்களை, அவர்கள் தங்கள் வாழ்நிலைகளை மேம்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளை எடுத்துரைப்பது நல்லது. அதுதான் ஊடக தர்மம்.

அமீரக தமிழ் மக்களின் அவாவை ரேடியோ ஸலாம் நிறைவேற்றுமா? நடுநிலையோடு செய்திகளை வெளியிடுமா?

Sunday, 7 June 2015

உண்மையான உள்ளங்கள் எங்கே?தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு ஆள் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளிவந்தார். தகுதியானவர் யார் என்று விசாரித்து, கடைசியில் அவர் அந்தப் பணத்தைக் கொடுத்தது ஒரு திருடன் கையில்.

மக்கள் இந்த விசித்திர நடவடிக்கை கண்டு ஆச்சரியப்பட்டனர். பலவாறாகப் பேசிக்கொண்டனர். திருடனுக்கு தர்மம் வழங்குகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால், தான் செய்தது குறித்து அவர் மிக்க திருப்தி கொண்டிருந்தார். நல்ல ஒரு செயல் செய்ய வாய்ப்பளித்ததற்காக அல்லாஹ்வுக்கு அவர் நன்றி செலுத்தினார்.

இன்னொரு நாளும் அதே போன்று கொஞ்சம் பணத்துடன் தர்மம் செய்வதற்காக அவர் வெளிவந்தார். இத்தவணை அவரது தர்மம் சென்றடைந்தது ஒரு விபச்சாரியிடம். அன்று போல் இன்றும் மக்கள் புருவத்தை உயர்த்தினர். பலவாறாகப் பேசிக் கொண்டனர். அவர் மீது மீண்டும் குற்றம் சாட்டினர். ஆனால், அவர் தான் செய்தது குறித்து மிக்க திருப்தியடைந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

அதற்கடுத்த நாளும் அவர் கொஞ்சம் பணத்துடன் தர்மம் செய்வதற்காக வெளிவந்தார். இத்தவணை அவர் தர்மம் கொடுப்பதற்காக தேர்ந்தெடுத்தது ஒரு பணக்காரரை!

அந்தப் பணக்காரர் கஞ்சனிலும் மகா கஞ்சன். பணக்காரனுக்கு தான தர்மம் நல்கிய கொடை வள்ளல் என்று மக்கள் அவரைக் கேலி பேசிக் கிண்டலடித்தனர். ஆனால், அவரோ இப்பேற்பட்ட ஒரு பணக்காரருக்கு தர்மம் வழங்கிட வாய்ப்பளித்த வல்ல இறைவனுக்கு நன்றி நவின்று பூரண திருப்தியுடன் புளகாங்கிதம் அடைந்தார்.

திருடனுக்கும், விபச்சாரிக்கும் தர்மம் அளித்தது அவர்களது தவறான தொழில்களிலிருந்து அவர்களைத் திருத்த உதவும் என்று மிக்க நம்பிக்கை கொண்டிருந்தார் அவர். அதனாலேயே அவர்களுக்கு தர்மம் அளித்தார். தர்மம் பெற்ற பணக்காரர் அதிலிருந்து மிகப் பெரும் பாடம் பெற்று தன் கஞ்சத்தனத்தை விட்டொழித்து பிறருக்கு தன் பொருளிலிருந்து தான தர்மம் வழங்க தொடங்குவார் என்று இவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனாலேயே அவருக்கு தர்மம் வழங்கினார்.

எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் கூறிய ஓர் அனுபவக் கதைதான் இது.

தூய்மையான எண்ணம்தான் எந்தவொரு செயலுக்கும் பூரணத்துவத்தை அளிக்கிறது. வெளியில் பார்க்கும்பொழுது முட்டாள்தனமாக தெரியும் எல்லா செயல்களும் உண்மையில் முட்டாள்தனங்களல்ல. அதில் பலவற்றில் பல நல்ல நோக்கங்கள் ஒளிந்து கிடக்கும்.

அதே போன்று, வெளியில் நல்லதாக தெரியும் எல்லா செயல்களும் நல்ல செயல்களல்ல. மாசு படிந்த உள்ளங்களுடன் செய்யப்படும் நல்ல காரியங்கள் அதன் பூரணத்துவத்தை இழந்து விடுகின்றன. இந்த நல்ல செயல்களால் பெரிதாக பலன் எதுவும் ஏற்பட்டுவிடாது.

பண்டைய காலம் தொட்டே ஹஜ்ஜுக்கு வருவோருக்கு சேவை புரிவதும், மிருக பலி கொடுப்பதும், இன்னபிற சேவைகளும் அரபிகளுடைய பழக்கமாக இருந்தது. அது அவர்களுக்கு பெருமையாகவும் இருந்தது. இந்தச் சேவைகள் மூலம் புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதை விட அவர்களுக்கு தங்கள் குலப் பெருமையையும், தலைமைப் பதவியையும் உயர்த்திப் பிடிப்பதுதான் இலட்சியமாக இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மல்லுக்கு நின்றபொழுதும், யுத்தங்கள் புரிந்தபொழுதும் குறைஷிகள்தான் மக்காவில் இறையில்ல சேவகர்களாக இருந்தனர். அவர்கள் அதில் மிக்க அபிமானம் கொண்டிருந்தனர்.

இந்தச் சேவைகள் மூலம் அல்லாஹ் தங்களுக்கு உதவிகள் புரிந்து கரையேற்றி விடுவான் என்ற அவர்களின் நம்பிக்கைக்கு அல்லாஹ் இவ்வாறு பதில் அளித்தான்:

(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்கு தண்ணீர் புகட்டுவோரையும் கஅபத்துல்லாஹ்வை (புனிதப் பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்கு சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அத்தவ்பா 9:19)

நல்ல செயல்கள் நல்ல உள்ளங்களிலிருந்து புறப்பட வேண்டும். அதுவே அறுதி வெற்றியை ஈட்டித் தரும்.

புதிய விடியல் மே 2015

Sunday, 17 May 2015

அவசரமும், நிதானமும்!இன்றைய அவசர உலகில் மனிதனுக்கு எதற்கும் நேரம் இல்லை. எல்லாமே அவசரம். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற ஆவேசம். அதனை நிதானமாக செய்ய வேண்டும் என்ற பொறுமை இல்லை.

மனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான் என்று அல்லாஹ் கூறுகிறான்: “மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 17:11)

வாகனம் ஓட்டும் போதும் அவசரம். அவசரம் ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அதே போன்று கிடைத்த செய்தியை ஆராயாது அதனைப் பரப்புவதில் அவசரம். வாட்ஸ்அப், முகநூல் போன்ற வலைத்தளங்களில் செய்திகளை ஷேர் செய்யும் போது அவசரம் காட்டுகிறோம். அது உண்மையான செய்திதானா என்று ஆராய்வதற்கு முன்பே ஷேர் செய்து விடுகின்றோம்.

தலாக் சொல்வதில் அவசரம். மனைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் மனைவி பற்றி கிடைத்த தகவலை வைத்து, தாயகம் சென்று தீர ஆராயாமல் அங்கிருந்துகொண்டே அவசரப்பட்டு தலாக் சொல்லும் அவலங்கள் நடக்கின்றன.

தொழுகைக்கு வந்தால் கடைசி நேரத்தில் முட்டி மோதி ஓடும் நிலை. எதையும் முற்கூட்டியே திட்டமிட்டு, தயார் படுத்தி, நிதானமாக செய்யும் நிலையில் மனிதன் இல்லை.

அவனது விலை மதிக்க முடியா நேரங்கள் எல்லாம் வேறு எதிலோ தொலைந்து போய்க்கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி அவன் சிந்திப்பதும் இல்லை. நாம் செலவழிக்கும் பயனுள்ள நேரங்கள் எவை, நாம் வீணாக்கும் நேரங்கள் எவை என்று கூட அவனுக்குத் தெரிவதில்லை. எதிலும் ஊன்றிக் கவனிக்க முடியாத அவசர உலகில் அவனது வாழ்க்கை.

அவசரத்தனத்தால் சுவர்க்கத்தை இழந்தவர்களும் உண்டு. அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒரு மனிதருக்குக் காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். “என் அடியான் தன் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்” என்று அல்லாஹ் கூறி விட்டான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி),   நூல்: புகாரீ)

இஸ்லாம் எல்லாவற்றிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. எதிலும் நடுத்தரத்தை மேற்கொள்ளச் சொல்கிறது.

“நிதானம் அல்லாஹ்விடத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ)

முக்கிய வணக்கமாகிய தொழுகைக்குச் செல்லும்பொழுது கூட நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது இஸ்லாம். மாறாக மனிதன் தொழுகைக்கு ஓடுகின்றான். அமைதியாக, நிதானமாக தொழ வேண்டிய தொழுகையை அவசரம் அவசரமாக தொழுகின்றான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்." (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி, அபூதாவூத்)

இப்படி அனைத்து காரியங்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லும் இஸ்லாம், சிலவற்றில் மட்டும் விரைவு காட்ட வேண்டும் என்று சொல்கிறது. நன்மையைச் செய்வதில், தீமையைத் தடுப்பதில், நோன்பு துறக்கும்பொழுது, ஏழைக்கு உணவளிப்பதில், ஜனாஸாவை அடக்கம் செய்வதில், கடனை திரும்பக் கொடுப்பதில், பாவமன்னிப்பு செய்வதில் அவசரம் காட்ட வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகின்றது.

புதிய விடியல்  ஏப்ரல் 2015

Thursday, 22 January 2015

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு – 1

ஏ.ஜி. நூரானி இதுவரை வெளிவராத உண்மைளை விளக்குகிறார்!

கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் அன்று மாலை ஸ்வபன் தாஸ் குப்தா தொலைக்காட்சியில் ஓர் உண்மையை வெளிப்படுத்தினார். வி.டி. சாவர்க்கருக்கு மகாத்மா காந்தியின் படுகொலையில் பங்குண்டு என்றும், ஆனால் அவர் தப்பித்து விட்டார் என்றும் மொரார்ஜி தேசாய் சொன்னதாக எல்.கே. அத்வானி தன்னிடம் கூறினார் என்பதுதான் அந்தச் செய்தி.

அன்றைய பாம்பே மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் ஒருமுறை இவ்வாறு கூறினார்: “காந்தியின் படுகொலை குறித்த புலன் விசாரணை பாம்பே மாகாணத்தில் நடந்து வருகிறது. அதில் நான் நேரடியாகத் தொடர்பு வைத்து கேட்டு அறிந்து வருகிறேன்.”

அவருக்கு உண்மை என்ன என்று தெரியும். பாம்பே குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) சிறப்புக் கிளையின் துணை கமிஷனராக இருந்த ஜாம்ஷெட் நகர்வாலாவுக்கும் அது தெரியும். அவர் உள்துறை அமைச்சர் மொரார்ஜிக்கு மிக நெருங்கியவராக இருந்தார்.

1948ம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இவ்வாறு எழுதியனுப்பினார்:

“காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை நான் தினமும் கவனித்து வருகிறேன். சாவர்க்கரின் கட்டுப்பாட்டிலுள்ள ஹிந்து மகாசபாவின் தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலைக்கான சதித் திட்டத்தைத் தீட்டி, அதனை நிறைவேற்றியது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 56)

அன்றைய மத்திய அமைச்சரவையில் ஓர் அங்கமாக இருந்த சியாம பிரசாத் முகர்ஜி சாவர்க்கருக்காக பட்டேலிடம் பொருத்தமற்ற முறையில் வக்காலத்து வாங்கி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்ட அதே நாளில் சாவர்க்கரின் சார்பில் முகர்ஜி பட்டேலிடம் பேசினார். சியாம பிரசாத் முகர்ஜிதான் சாவர்க்கருக்கு அடுத்தபடியாக ஹிந்து மகாசபாவின் தலைவரானார்.

பட்டேல் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இவ்வாறு பதிலனுப்பினார்:
“இந்த வழக்கின் பொறுப்பாளரான பாம்பேயின் அரசுத் தரப்பு வழக்கறிஞர், இன்னபிற சட்ட வல்லுனர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆகியோர் என்னை டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்தனர். நான் அவர்களிடம் ஒன்றைத் தெளிவாகச் சொன்னேன். சாவர்க்கரை இந்த வழக்கில் சேர்ப்பது என்பது முழுக்க முழுக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான்.

இந்த விவகாரத்தில் அரசியல் வந்து விடக்கூடாது. சாவர்க்கரை வழக்கில் சேர்க்கவேண்டும் என்ற கருத்திற்கு அவர்கள் வருவார்களேயானால் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதற்கான ஆவணங்கள் என் மேஜைக்கு வரவேண்டும் என்று நான் மீண்டும் அவர்களுக்குத் தெளிவு படுத்தி விட்டேன்.

ஹிந்து மகாசபா ஓர் அமைப்பு என்ற ரீதியில் காந்தி படுகொலையின் சதிக்குக் காரணமில்லை என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். ஆனால் அதே வேளை, அதன் கணிசமான உறுப்பினர்கள் காந்தி படுகொலை நடந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடியதையும் நாம் கவனிக்காமல் கண் மூடி இருந்துவிட முடியாது. இந்த (இனிப்பு வழங்கப்பட்ட) விவகாரம் தொடர்பாக நம்பகமான தகவல்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்துள்ளன. அத்தோடு ஆபத்தான இன்னொன்றும் உள்ளது. அது தீவிரவாத வகுப்புவாதம்.

மகந்த் திக்விஜய் நாத், பேரா. ராம் சிங், தேஷ்பாண்டே போன்ற ஹிந்து மகாசபாவின் பேச்சாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த மதவெறி பிடித்த தீவிரவாத வகுப்புவாதத்தைப் பிரச்சாரம் செய்து வந்தனர். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெருத்த ஆபத்தை உண்டு பண்ணும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இதே ஆபத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்தும் உள்ளது. இராணுவ நடவடிக்கைகள் அல்லது பகுதி இராணுவ நடவடிக்கைகளை அது மறைமுகமாக நடத்தி வருகிறது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Pages 65-66)

பட்டேல் முகர்ஜிக்கு மீண்டும் எழுதினார்:
“காந்திஜியின் படுகொலை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபா ஆகிய இரு அமைப்புகளின் பங்கு குறித்து நான் இப்பொழுது கருத்து கூறக்கூடாது. ஆனால் ஒன்றை எனக்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவால், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளின் விளைவால், நாட்டில் ஒரு சூழல் உருவானது. எப்படிப்பட்ட சூழல் என்றால் இப்படிப்பட்ட கொடூரக் கொலைகள் நடப்பதற்கு சாத்தியப்படக்கூடிய அளவுக்கு மோசமான சூழல் உருவானது.

ஹிந்து மகாசபாவின் மதவெறி பிடித்த தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலையைச் செய்தது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகள் அரசின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அது தடை செய்யப்பட்ட பின்பும், அதன் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்று எனக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மாறாக, உண்மையில் சொல்லவேண்டும் என்றால், அதன் கீழறுப்பு நடவடிக்கைகள் அதிகமாகத்தான் ஆகியிருக்கின்றன.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)

“மகாத்மா காந்தியின் வாழ்வும், மரணமும்” (The Life and Death of Mahatma Gandhi) என்ற நூலை ராபர்ட் பெய்ன் (Robert Payne) என்பவர் எழுதி 1969ல் வெளியிட்டார். அதில் சாவர்க்கர் குறித்து அவர் இவ்வாறு எழுதுகிறார்:

“காந்தி படுகொலை செய்யப்பட்டு 8 மணி நேரத்துக்குள் சாவர்க்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர்தான் இந்தப் படுகொலையின் முதல் சந்தேகத்திற்குரியவர். ஆனால் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஆரம்பத்தில் கைது செய்யப்படவில்லை. அவர் லண்டனில் வசித்திருந்தால் உடனே அவர் மீது சந்தேகம் பாய்ந்திருக்கும்.

நாதுராம் வினாயக் கோட்சேதான் சதித் திட்டம் தீட்டுவதற்கு ஒருங்கிணைப்பு செய்தவர் என்று காட்டுவதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு எந்தக் கஷ்டமும் இருந்திடவில்லை.

ஆனால் சாவர்க்கர் நேரடியாக இதில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்படுவதற்கு மிகுந்த கஷ்டம் இருந்தது. படுகொலை நடப்பதற்கு முன்பாக பல மாதங்கள் தான் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், சொற்ப நபர்களே தன்னை வந்து சந்தித்ததாகவும், கோட்சேயோ, நாராயண் டி. ஆப்தேயோ தன்னை ஒரு வருடத்திற்கும் மேலாக சந்திக்கவேயில்லை என்றும் சாவர்க்கர் கூறினார்.

காந்திப் படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது ஜனவரி 17ம் நாள், திகாம்பர் பாட்கே என்பவர் கோட்சேவையும், ஆப்தேவையும் பாம்பேயில் சாவர்க்கர் இல்லத்திற்கு காலை 9 மணிக்கு அழைத்துச் சென்றார். பாட்கே கீழ்த்தளத்தில் காத்திருக்க, தங்கள் அரசியல் குருவான சாவர்க்கரை கடைசியாக ஒரு முறை பார்க்கவும், இறுதிக் கட்ட அறிவுரைகளைக் கேட்டு விட்டுப் போகவும் கோட்சேவும், ஆப்தேவும் மேல் தளத்திற்குச் சென்று சாவர்க்கரைச் சந்தித்தனர்.

ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் கோட்சேவும், ஆப்தேவும் திரும்பி கீழ்த்தளத்திற்கு வந்தனர். அவர்களுடன் சாவர்க்கரும் வந்தார். “வெற்றியுடன் திரும்பி வாருங்கள்” என்று சாவர்க்கர் அவர்களிடம் சொன்னார். இந்தப் படுகொலைக்கு தார்மீக ரீதியான அதிகப் பொறுப்பு சாவர்க்கருக்கே உள்ளது.” (Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)

1975ம் ஆண்டு லாரி காலின்ஸ், டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய மிகப் பிரபலமான “நள்ளிரவில் சுதந்திரம்” (Freedom at Midnight) என்ற நூல் வெளிவந்தது. அந்த நூல் காவல்துறை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேற்கு பாகிஸ்தானிலிருந்து இங்கே வந்த அகதியான மதன்லால் கே. பஹ்வா 1948ம் ஆண்டு ஜனவரி 20 அன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு குண்டை வெடிக்கச் செய்தான். அவனுடன் கூட வந்த கோட்சேயும், இன்னும் சிலரும் தப்பி ஓடி விட்டனர்.

அடுத்த நாள், இந்த வழக்கு விசாரணையை பாம்பே மாகாண உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் காவல்துறை அதிகாரி நகர்வாலாவிடம் ஒப்படைத்தார். “நள்ளிரவில் சுதந்திரம்” நூலில் அதன் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்:

“நகர்வாலா மதன்லாலைப் பிடிக்க அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். காந்தியைக் கொல்ல முனைந்தவர்கள் பனை மரங்களுக்கிடையில் அமைதியாக இருந்த வீடுகளைக் கடந்து பாம்பேயின் கெலுக்சர் சாலையில் அமைந்துள்ள சாவர்க்கரின் வீட்டிற்குச் சென்றார்கள் என்பதைக் கண்டறிய அந்த இளம் அதிகாரிக்கு வெகு நாட்கள் பிடிக்கவில்லை. மதன்லால் அந்தக் கொலை முயற்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாவர்க்கரை அவரது வீட்டில் வைத்து சந்தித்ததை அடிப்படையாக வைத்து சாவர்க்கரைக் கைது செய்ய நகர்வாலா மொரார்ஜியிடம் அனுமதி கேட்டார்.

மொரார்ஜி கோபத்துடன் அதற்கு மறுத்ததுடன் இவ்வாறு அந்த அதிகாரியிடம் எரிந்து விழுந்தார்: “உமக்கென்ன பைத்தியமா? இந்த மொத்த மாகாணமும் தீக்கிரையாகிப் போக வேண்டும் என்று நீர் எண்ணுகிறீரா?”

நகர்வாலாவால் சாவர்க்கரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் போட முடியவில்லை. ஆனால் ஒரு காரியம் செய்தார். பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட அதிபுத்திசாலிப் பிரிவான ‘கண்காணிப்பாளர் பிரிவு’ (Watchers’ Branch) என்ற பிரிவுக்கு சாவர்க்கரைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைக்க முடிந்தது.” (நள்ளிரவில் சுதந்திரம், பக். 417)

சாவர்க்கர் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வந்தார். ”ஜிம்மி நகர்வாலாவின் பாம்பே புலன் விசாரணை முதல் 48 மணி நேரத்தில் கொஞ்சம் புதிய செய்திகளைக் கொண்டு வந்தது. பாம்பே கண்காணிப்பாளர் பிரிவு சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கர் இல்லத்தின் முன்பு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால் அதிபுத்திசாலியான சாவர்க்கர் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை. சில ஆபத்தான மர்ம அலை அந்த இல்லத்திலிருந்து வெளிவருவது போலிருந்தது.

சாவர்க்கரின் வீட்டைச் சுற்றி அவரின் சீடர்களின் நடமாட்டங்களில் நகர்வாலாவுக்கு சந்தேகம் பிறந்தது. அவரது போலீஸ் மூளை ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தது. டெல்லி காவல்துறைத் தலைவரிடம் நகர்வாலா இவ்வாறு கூறினார்: “ஏன் என்று கேட்காதீர்கள். இன்னொரு கொலை முயற்சி நடக்கவிருக்கிறது. இங்கு நிலவும் சூழ்நிலையை வைத்து நான் இதனை உணர்கிறேன்.”
(நள்ளிரவில் சுதந்திரம், பக். 429-430)

நன்றி : Frontline
தமிழில் (சுருக்கம்) : MSAH

விடியல் வெள்ளி  மார்ச் 2013

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 4


அஹமது யஹ்யா அய்யாஷ்

"நேர நிர்வாகம்"- தமிழ் கூறும் நல்லுலகிற்கு இஸ்லாமிய வரையறைகளை தாங்கி நேர நிர்வாகம் குறித்து இந்நூல் அலசுகிறது.

யதார்த்த மொழிநடை, அழகான சொற்செறிவு, சிந்திப்பூட்டும் உதாரணங்கள், வலியுறுத்தும் குர்ஆன்-ஹதீஸ் என நூல் முழுக்க மிகவும் அவசியமான பக்கங்களாக இந்நூல் நகர்கிறது.

நேர நிர்வாகத்தின் செயல்வடிவத்தை ஏட்டுச்சுரைக்காயாய் அணுகிவிடாமல் தம் வாழ்விலும் பயிற்சி செய்து அதன் அனுபவக் கூறுகளை அழகாய் வடித்துள்ளார் இந்நூலின் ஆசிரியர் காயல்பட்டினம் அப்துல் ஹமீது காக்கா அவர்கள்.

சமூக போராளிகளுக்கான மிக முக்கியமான புத்தகம். இந்நூலில் பயணம் குறித்து அலசுகையில் புத்தகப் பை குறித்து வலியுறுத்துகிறார். வாசிப்பை நேசிக்கும் உள்ளங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

புத்தகத்தை வாசிக்கும், எழுத்தை நேசிக்கும் தோழர்களுக்கு இந்நூல் திறமைகளை மேம்படுத்தும் அழகிய துணுக்குகளை சான்றுகளோடு பேசுகிறது.

நேரம் போதவில்லை, நேரமே இல்லை என புலம்பும் தோழர்களுக்கு இந்நூல் நேரத்தை ஆரோக்கியமாய் பயன்படுத்த அழகிய வழிமுறைகளை கற்றுத் தர காத்திருக்கிறது.

இந்நூல் நிச்சயம் மாற்றம்தனை விதைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பல்வேறு நூல்களை எழுதிய அப்துல் ஹமீது காக்காவின் மிகச் சிறந்த நூல்களில் நேர நிர்வாகம் இன்றியமையாத ஒன்று.

ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்களுக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக!

அஹமது யஹ்யா அய்யாஷ்

Saturday, 17 January 2015

ரணபூமியில் ரத்தம் சிந்திய ரச்சேல்! - உண்மைச் சிறுகதை


மார்ச் 16, 2003.

இந்த நாளில் ஓர் ஆமெரிக்க இளம் பெண் ஃபலஸ்தீன மண்ணில் யூத இனவெறியர்களால் கொல்லப்பட்டாள்!

ஏன் அவளை யூத இனவெறியர்கள் கொன்றனர்? ஏன் அவள் ஃபலஸ்தீன மண்ணுக்குச் சென்றாள்?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்த உண்மைச் சிறுகதையைப் படிக்கும்பொழுது அறிவீர்கள். 8 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

இதே மார்ச் மாதம் ரச்சேல் கோரி என்ற அந்த 23 வயது இளம் பெண் அநியாயமாகக் கொல்லப்பட்டாள். அவளது ரத்தக் கறைகளை அவளின் நினைவுகளோடு இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது புனித ஃபலஸ்தீன மண்!

நாமும் அவளின் நினைவுகளில் கலப்போம்.                  - ஆசிரியர்

ரணபூமியில் ரத்தம் சிந்திய ரச்சேல்!


வானம் இருண்டிருந்தது. மழை வரும் போலிருந்தது.

ரச்சேல் கோரி (Rachel Corrie) தன் தோழிகளுடன் சர்வதேச ஒற்றுமை இயக்கக் (International Solidarity Movement - ISM) கூட்டங்களில் பேசிக்கொண்டதை நினைத்துக்கொண்டாள்.

யானையின் காலில் நசுங்கும் எறும்புகள் போல் நித்தம் நித்தம் யூதக் குண்டுகளுக்கு இரையாகி வருகின்றனர் ஃபலஸ்தீனர்கள். அவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அவளது கண்ணிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் சொரிந்தது.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு, அந்த மண்ணிலேயே சாகும் அபலைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த சர்வதேச ஒற்றுமை இயக்கம்.

இந்த இயக்கம் யூத வெறி பிடித்த இஸ்ரேல் அரசையும், அதற்குத் துணை நிற்கும் அமெரிக்க அரசையும் எதிர்க்கும் ஓர் அமைப்பு.

வாஷிங்டனில் பிறந்து வளர்ந்த ரச்சேல் முதலில் ஃபலஸ்தீனைப் பற்றிய செய்திகளைக் கேட்டபோது அனைத்தும் பொய் என்றே எண்ணினாள்.
இப்படியும் நடக்குமா என்று அவளின் தோழிகளிடம் கேட்டுக் கேட்டு ஓய்ந்தாள்.

மிருக பலம் கொண்ட மீடியாவை தனது முரட்டுக் கைகளுக்குள் வைத்திருக்கும் ஏகாதிபத்திய நாடுகளையும் மீறி, அதே மீடியாவில் ஃபலஸ்தீனைப் பற்றி சில உண்மைச் செய்திகளும் வரத்தான் செய்கின்றன.

இவற்றைக் கேட்டுத்தான் ரச்சேல் நம்ப முடியாமல் தவித்தாள். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா? இந்த விஞ்ஞான யுகத்தில் இது சாத்தியமா? மனித உரிமைகள் மலை போல் உறுதியாக உருவாகிவிட்ட இந்தக் காலத்தில் இது முடியுமா?

ஃபலஸ்தீன மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை வாஷிங்டனில் இருந்து கொண்டே இந்த இயக்கத்தவர்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு எதிர்ப்புக் கூட்டத்திலும் ரச்சேல் தவறாமல் பங்கெடுத்தாள்.

ஒரு கூட்டத்தில் அவள் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு காணப்பட்டாள். இவளோடு இன்னும் 6 பேர் எழுந்து நின்றனர்.

கூட்டத்தின் அனைத்து கண்களும் இவர்களையே மொய்த்து நின்றன. என்ன சொல்லப் போகிறார்கள் இவர்கள்? எல்லோரும் ஆவலாய் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

ரச்சேல்தான் பேச அரம்பித்தாள்: “நாங்கள் ஃபலஸ்தீன மண்ணுக்குப் போகப் போகின்றோம். அங்கே நடக்கும் அநியாயங்களை நேரில் கண்டு
அவற்றை எதிர்க்கப் போகின்றோம்.”

கூட்டத்தில் ஒரு சிலர் அதனை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினர். ஒரு சிலருக்கு இது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அது அவர்களின் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர்களை ரச்சேல் ஏளனமாகப் பார்த்தாள்.
.....................

ரஃபா என்ற சிற்றூரில் அந்த 7 பேரும் வந்திறங்கினார்கள்.

ரச்சேலோடு அவளுடைய தோழிகளும், அமெரிக்காவைச் சேர்ந்த சில இளைஞர்களும், பிரிட்டனைச் சேர்ந்த சில இளைஞர்களும் வந்திருந்தார்கள். அவர்களும் ரச்சேலைப்போலவே இஸ்ரேலிய பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். அதற்குத் துணை நிற்கும் தங்கள் நாடுகளையும் (அமெரிக்கா, இங்கிலாந்து) எதிர்ப்பவர்கள்.

ஃபலஸ்தீனில், காஸா பகுதியிலுள்ள ஒரு சிற்றூர்தான் ரஃபா. 
தான் அமெரிக்காவில் இருந்தபோது தொலைக்காட்சியில் கண்டதை, கேட்டதை விட மோசமாக இருந்தது அவ்வூர்.

நித்தம் நித்தம் யூத வெறி டாங்குகள் அங்கே கொலைவெறியோடு சுற்றிச் சுற்றி வருகின்றன. எங்கு பார்த்தாலும் இடிந்த வீடுகள். இடிந்த வீடுகளின் கற்களின் நடுவில் வாழும் ஏழை அபலைகளின் அவல வாழ்க்கை.

அந்த ஏழைக் குடும்பங்களுடன் இந்த ஏழு இளைஞர்களும் தங்கினார்கள். ரச்சேலுக்கு அந்த வாழ்க்கை முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் போகப் போகப் பழகிவிட்டது.

அந்த மக்களைப் பார்க்கும்போது வினோதமாக இருந்தது. யூதக் கொலைவெறி டாங்குகள் முன், மரணத்தின் வாயிலில் நின்று கொண்டு விளையாடும் சிறுவர்கள்!

இதோ டாங்குகள் அவர்களை நோக்கி முன்னேறுகின்றன. ஆனால் அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் எந்தப் பயமும் இல்லை. மலர் போன்ற அவர்களின் வதனங்களில் எந்தக் கவலையும் இல்லை. இன்னுயிரைத் தவிர இழப்பதற்கு அவர்களிடம் இப்போது என்ன இருக்கிறது?

சாவைச் சற்றும் சலனமில்லாமல் சந்திக்கத் தயாராக இருக்கும் அந்தக் குழந்தைகளையே ரச்சேல் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

அந்தச் சிறார்கள் கற்களை எடுத்து டாங்குகள் மேல் வீசினர். டாங்குகள் இவர்களை நோக்கித் திரும்பும்பொழுது சிரித்துக்கொண்டே ஓடி ஓளிந்தனர். ஓ இதுதான் ஓடிப் பிடித்து விளையாடும் மரண விளையாட்டோ...?

எவ்வளவு தைரியம் இவர்களுக்கு? இந்த தைரியம் இந்த மண்னோடு ஒட்டிப் பிறந்ததா? ரச்சேல் அமெரிக்காவில் இவற்றைக் கேள்விப்படும் பொழுது நம்ப முடியாமல் தவித்திருக்கிறாள். ஆனால் இன்று நிதர்சனமாக நேரில் அவற்றைக் காண்கிறாள்.

ரச்சேலும், அவளின் நண்பர்களும் அந்த ஊரை வலம் வந்தனர். இடிந்த வீடுகளின் இடிபாடுளின் இடையிலிருந்து கரும் புகை எழுகிறது. ஆம்! அந்த மக்கள் இடிந்த வீடுகளின் கற்களிடையே சமைக்கிறார்கள் தங்கள் வயிற்றைக் கழுவுவதற்காக.

இவர்களைக் கண்டவுடன் அன்போடு அவர்களுக்கும் உணவு தருகின்றார்கள். இஸ்லாம் கற்றுத் தந்த விருந்தோம்பல் அல்லவா இது! 

பசித்திருந்தாலும் பகுத்துண்ணும் பழக்கம் கண்டு ரச்சேலும், அவளின் தோழர்களும் அதிசயித்துப் போனார்கள். அந்த மக்களோடு மக்களாக ஐக்கியமானார்கள்.

அமெரிக்காவில் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம். இந்த மக்கள் இங்கே என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்! ரச்சேலின் கண்கள் குளமாயின.

.........................

ஆயிற்று. ரச்சேல் ரஃபா வந்து இரண்டு வாரங்கள் ஆயிற்று.

அன்றிரவு ரச்சேலுக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்தாள். அமெரிக்காவிலிருக்கும் தன் பெற்றோர்களுக்கு தான் நேரில் கண்டவற்றை, தன் ரத்தத்தில் உறைந்த உணர்வுகளை மின்னஞ்சலில் எழுத ஆரம்பித்தாள்.

அன்புள்ள என் தாய், தந்தையரே!

நான் ஃபலஸ்தீனுக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகிவிட்டது. ஆனால் நான் இங்கே காண்பதை விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கின்றேன்.

குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் யூத ஆக்கிரமிப்பு இராணுவம் - இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூட புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு 8 வயதுச் சிறுவனை இஸ்ரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. அவன் பெயர் அலீ என்று கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். 

ஷேரோன் யார், புஷ் யார் என்று அரபியில் அவர்கள் கேட்க, ஷேரோன் ஒரு கிறுக்கன், புஷ் ஒரு பைத்தியம் என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள்.

உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் எட்டு வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.

புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப் படங்கள் போன்ற பல வழிகளில் ஃபலஸ்தீனைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும் விஞ்சுகிறது இங்குள்ள யதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதனைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு வேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப் புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.

என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை மூடினாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது. உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி விடலாம். என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றதில்லை.

எனக்கொரு வீடு இருக்கிறது. நான் ஆற அமர கடலைக் கண்டு ரசித்திருக்கின்றேன். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ என்ற அச்சமின்றி மகிழ்ச்சியாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.

எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள் கால் வைத்த மறு கணமே, இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறு கணமே என் ரத்தம் கொதிக்கிறது. ஒரு வேளை ஒரு ஃபலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிதுடிக்கும் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

இவர்களைப் போலன்றி நான் வேறோரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை மூடி, குடிக்கும் தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட எண்ணி அஞ்சியதில்லை. இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத் தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை. தன் சொந்தங்களை இராணுவத்திற்குக் காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை.

என்னுடைய வீட்டை நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறி பார்க்கவில்லை. ஆனால் இந்த ஃபலஸ்தீன சிறுவர்கள் நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. எண்ணிப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே நீங்கள் போராடிக்கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று!

உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின் நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதை எதிர்த்து நீங்கள் போராடிக்கொண்டேயிருக்க வாழ்க்கை என்பதே இதுதான் என்றால் அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த ஃபலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.

--------------------------

ரச்சேலும், அவளுடைய தோழர்களும் வீட்டை விட்டு வெளிக் கிளம்பினர். அதோ ஒரு புல்டோசர் வருகிறது. இஸ்ரேலிய இராணுவத்தின் புல்டோசர் அது. இன்று எந்தெந்த வீடுகளை அது காவு கொள்ளப் போகின்றதோ என்று ரச்சேல் பதறினாள்.

அவளும், தோழர்களும் அந்த புல்டோசரை நோக்கி ஓடினார்கள். புல்டோசர் இடிக்க வந்த வீட்டின் முன்பாக நின்றார்கள் - அதனை மறிக்கும் முகமாக.

ஆனால் அந்த புல்டோசரை ஓட்டியவன் கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை. அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவன் புல்டோசரின் மண் வாரியால் இவர்களை அள்ளி வீசினான். இவர்கள் வீட்டின் ஒரு பக்கம் போய் விழுந்தார்கள்.

புல்டோசரை ஓட்டியவன் வீட்டின் மறுபக்கத்தை இடித்துக் கொண்டிருந்தான்.

வீட்டின் கற்கள் ஒவ்வொன்றாகச் சிதறிக் கொண்டிருந்தன. மாறாக, ரச்சேலின் மனமோ பாறை போல் இறுகிக் கொண்டிருந்தது.

அன்றிரவு அவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. தன் பெற்றோருக்கு மீண்டும் மின்னஞ்சலில் இவ்வாறு எழுதினாள்:

அன்பு நிறைந்த என் பெற்றோரே! நிராயுதபாணிகளான ஃபலஸ்தீன மக்களைச் சுட்டுத் தள்ளுகிறது இஸ்ரேல் இராணுவம். ஆனால் நிராயுதபாணியான ஓர் அமெரிக்கக் குடிமகளைச் சுட்டுத் தள்ளும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா?

பேதைப் பெண்ணுக்கு யூத ஃபாசிஸ்டுகளைப் பற்றித் தெரியவில்லை. ஷாப்ரா, ஷத்தீலா அகதிகள் முகாம்களில் பச்சிளங்குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றவன் இந்த ஏரியல் ஷேரோன். ஈவு, இரக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மனம் படைத்தவர்கள் இந்த ஏரியல் ஷேரோனும், இவனைச் சார்ந்தவர்களும். இவர்களின் ஃபாசிஸப் போக்கிற்குக் குறுக்காக வரும் எவரையும் இந்த யூத வெறி நாய்கள் விட்டு வைப்பதில்லை.

ரச்சேலும், அவளுடைய தோழர்களும் புல்டோசரை மறிப்பதும், அவர்கள் வீசப்படுவதும் அன்றாட நடவடிக்கை ஆகிவிட்டன. ஒவ்வொரு தடவை வீசப்படும்போதும் ரச்சேலின் மனம் இறுகிக் கொண்டிருந்தது. இதற்கெதிராக ஏதாவது செய்தாக வேண்டும்.

இந்தக் கொடுமைகள் உலகுக்குத் தெரிய வேண்டும். உலக மக்களின் மவுனத்தைக் கலைக்க வேண்டும். தனது அமெரிக்க அரசின் நயவஞ்சகத்தனம் வெளிச்சத்திற்கு வரவேண்டும். உலக மக்கள் அனைவரும் சேர்ந்து இஸ்ரேலின் மீது காறித் துப்ப வேண்டும். அந்த உமிழ்நீரின் வெள்ளத்திலேயே இந்தக் கொலைவெறி யூத ஃபாசிஸ்டுகள் மூழ்கிச் சாக வேண்டும்.

ரச்சேல் ஒரு முடிவுக்கு வந்தாள். இந்தக் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும், ஓர் இடைப் புள்ளியாவது (கமா) வைக்க வேண்டும் என்று நினைத்தாள் - தனது இரத்தத்தால்!

----------------

மார்ச் 16, 2003

ரச்சேலின் தோழன் எங்கிருந்தோ கொண்டு வந்த பூ ஒன்று மாடத்தில் இருந்தது.

வழக்கம் போல் ரச்சேலும், அவளுடைய தோழர்களும் வெளிக் கிளம்பினர். ரச்சேல் எதேச்சையாக அந்த மாடத்தைப் பார்த்தாள். அந்தப் பூ அவளைப் பார்த்து அழுவது போல் இருந்தது.

ரஃபாவின் பாதி வீடுகள் இடிந்து கிடக்கின்றன. மீதி வீடுகளை விட்டு வைப்பானேன்? இஸ்ரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் வெறி கொண்டலையும் நாய்களைப் போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.

ஒரு வீட்டை நோக்கி ஒரு புல்டோசர் வந்து கொண்டிருந்தது. ரச்சேல் தீர்க்கமாக அந்தப் புல்டோசரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேக வேகமாகச் சென்று, அந்தப் புல்டோசர் குறி வைக்கும் வீட்டின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். மற்ற தோழர்கள் புல்டோசரை நோக்கி, இடிக்காதே... இடிக்காதே... என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.

புல்டோசரின் வேகமோ இன்னும் அதிகரித்தது.

உடலில் மனித இரத்தம் ஓடுபவர்களுக்கு மனிதாபிமானம், சூடு, சொரணை இருக்கும். இந்த இஸ்ரேலிய யூத வெறியர்கள் உடல்களில் மிருக இரத்தம் அல்லவா ஓடுகிறது.

தோழர்களின் காட்டுக் கத்தல் அந்த புல்டோசரை ஓட்டியவனின் காதில் விழவேயில்லை. ரச்சேலுக்குப் புரிந்து விட்டது. அந்தக் கணம் நினைத்திருந்தாலும் அவள் பக்கவாட்டில் பாய்ந்து தப்பித்திருக்கலாம். ஆனால் அவள் முடிவெடுத்து விட்டாள். நித்தம் நித்தம் அடித்துச் செதுக்கிய அம்மி போல் இறுகி விட்ட அடி மனதின் முடிவு அது. அதனை யாராலும் மாற்ற முடியாது.

அவளுடைய தோழர்கள் அவசரம் அவசரம் அவளை அகற்ற முனைந்தனர். ஆனால் அதற்குள் அந்த புல்டோசர் ரச்சேலின் மேல் ஏறி இறங்கி விட்டது. ரச்சேலின் உடல் அந்தக் கணமே துடிதுடித்து அடங்கியது.


ரச்சேலின் இரத்தம் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்குப் பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவுக்குச் சாவுமணி. இன்று அமெரிக்க அரசை எதிர்த்து அமெரிக்காவிலேயே நிறைய ரச்சேல்கள் உருவாகி விட்டார்கள். இனி அமெரிக்காவுக்கு தங்கள் இரத்தங்களால் அவர்களே பாடம் புகட்டுவார்கள். இவர்கள் விழ விழ எழுவார்கள். ஒன்று விழ ஒன்பதாய் எழுவார்கள்.

ரஃபாவின் வீதியில் ரச்சேலின் இரத்தம் சிதறிக் கிடந்தது. தோழர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். (ரச்சேல் கோரி பற்றிய முழுமையான செய்திகளை அறிய http://www.rachelcorrie.org/ என்ற வலைத்தளத்தைக் காண்க.)

விடியல் வெள்ளி மார்ச் 2011

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 40

நாம் எவ்வகையிலாவது, எப்பாடு பட்டாவது பொது ஊடகத்தை உருவாக்க வேண்டும்.

ஏனெனில்…

“18ம் நூற்றாண்டில் யார் கைகளில் கடற்படை இருந்ததோ அவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது. 19ம் நூற்றாண்டில் விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள்தான் உலகைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தன. ஆனால் 20ம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும்” என்கிறார் முன்னாள் மலேசியா பிரதமர் முஹம்மத் மகாதீர் அவர்கள்.

இன்று உலக ஊடகங்கள் அமெரிக்க ஸியோனிஸ்டுகளின் கையில் இருப்பதால் 20ம் நூற்றாண்டும், 21ம் நூற்றாண்டும் அமெரிக்க - யூத ஸியோனிஸ்டுகளின் இரும்புப் பிடிக்குள் உள்ளன.

ஸியோனிஸம் என்பது ஒரு யூதப் பரவலாக்க இயக்கம். உலகை யூதர்களின் நிழலில் இயக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள். எனவேதான் இஸ்ரேல் என்று தாங்கள் கையகப்படுத்திய நிலப்பரப்புடன் அவர்கள் நின்று விடாமல் அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களை தங்களது ஆட்சி அதிகாரங்கள் மூலம் தங்கள் வசமாக்கி வைத்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் ஒரே ஏகாதிபத்திய யூத ஆட்சி வரவேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு. அந்தத் திட்டத்துடன் பூமிப் பந்தின் அனைத்து சந்து பொந்துகளிலும் அவர்களின் எல்லைகளை விரித்து வருகிறார்கள்.

ஊடகங்களில் யூதர்களின் மிருக பலத்தை உறுதிப்படுத்தும் ஒரு சிறிய உரையாடல் இதோ:

கிரஹாம்: ஊடகங்களின் மீதான யூதர்களின் ஆளுமையை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அது அமெரிக்காவை அழிவிற்கு இழுத்துச் செல்லும்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: நீங்கள் அதை நம்புகிறீர்களா?

கிரஹாம்: ஆம். நான் அதை உறுதியாக நம்புகிறேன்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: ஆம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் அதை நான் ஒரு போதும் வெளியில் சொல்ல முடியாது.

‍மதத் தலைவர் பில்லி கிரஹாமும் (Billy Graham), அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனும் (Richard Nixon) தொலைபேசியில் பேசிய பேச்சின் ஒலி நாடாப் பதிவுதான் இது.

இன்றைக்கு இந்த எச்சரிக்கை எல்லையைக் கடந்து அமெரிக்கா தனது முழு ஆளுமையையும் யூதர்களின் இரும்புப் பிடிக்குள் இழந்து ஸியோனிஸ்டுகளின் அமெரிக்காவாகி விட்டது.

உலகின் தலைசிறந்த மின்னணு செய்தி ஊடகங்களும், அச்சுச் செய்தி ஊடகங்களும்,  உலக சினிமாக்களின் தலைநகரமான ஹாலிவுட்டும் அமெரிக்க ஸியோனிஸ்டுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. திரைப்படங்களின் மூலமாகவும், செய்தி நிறுவனங்களின் மூலமாகவும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்துப் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஹாலிவுட்டின் தலைசிறந்த திரைப்பட நிறுவனமான வால்ட் டிஸ்னி (Walt Disney), இன்னும் பல செய்தி, விளையாட்டு தொலைக்காட்சிகள், திரைப்பட நிறுவனங்களையும் நிர்வகிப்பது மைக்கேல் ஈஸ்னர் (Michael Eisner) என்ற ஸியோனிஸ்ட் யூதர்தான். குழந்தைகளுக்கான கார்ட்டூன்களிலும், கேளிக்கைப் படங்களிலும் ஸியோனிஸக் கருத்துத் திணிப்புகளை உருவாக்குகிறார்கள்.

தற்பொழுது அதி நவீன கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் வீடியோ கேம்கள், 3D கற்பனை உலகப் படங்கள், மின்னணு விளையாட்டு ஊடகங்கள் போன்றவற்றின் மூலமும் இளைஞர்களிடயே வன்முறையையும், கொடிய பாலுணர்வுக் கிளர்ச்சிகளையும் தூண்டி நிரந்தர மன போதையாளர்களாய் ஆக்கி விட முயற்சிகள் நடைபெறுகின்றன. இவர்களின் பிரம்மாண்ட நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளன‌.

ஹாலிவுட்டின் முன்னணி திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) ஒரு ஸியோனிஸ்ட் யூதர். டேவிட் கெஃப்பன் (David Geffen), ஜெஃப்ரி கேட்ஸன்பர்க் (Jeffrey Katzenberg) - இவர்கள் எல்லோரும் திரைப்படத் துறையைச் சார்ந்த யூத பிரபலங்கள்.

பிரமாண்டங்களுக்குப் பெயர் போன இவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் யூத ஸியோனிஸக் கருத்துக்களை மையமாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. உலகின் நான்காவது பெரிய செய்தி ஊடக நிறுவன குழுமம் எட்ஜர் பிரான்மன் (Edgar Bronfman) என்ற யூதரின் பிடியில் உள்ளது.

அமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகையான The New York Post பீட்டர் காலிகவ் (Peter Kalikow) என்பவரால் நடத்தப்படுகிறது. முஸ்லிம்களுக்கெதிரான நிகழ்ச்சிகளை நடத்தும் சிறந்த ரேடியோ நிகழ்ச்சியாளர் ஹோவார் ஸ்டெம். இவரின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் மிகப் பிரபலமானவை.

அமெரிக்கன் ஃபிலிம் மேகசின் கணக்கெடுப்பின்படி உலகின் தலைசிறந்த பத்து திரைப்பட நிறுவனங்களில் முதல் 8 திரைப்பட நிறுவனங்கள் யூதர்களுக்குச் சொந்தமானது. 

பத்து ஆண்டுகளில் வெளிவந்த 1000 ஹாலிவுட் திரைப்படங்களில் 90% சதவீதம் முஸ்லிம்களையும், கம்யூனிஸ்டுகளையும் தீவிரவாதிகளாகவும், அவர்களின் நாடுகளை பயங்கரவாதங்களின் உற்பத்தித் தலமாகவும் காட்டியுள்ளன. இந்தத் திரைப்பட ஊடகங்கள் கொடூரமான எண்ண அலைகளை மக்களிடம் உண்டு பண்ணியிருக்கின்றன. முஸ்லிம்களுக்கெதிரான, கம்யூனிசத்திற்கெதிரான வெறுப்பு அரசியலை ஊடகங்களின் மூலம் பரப்புகிறார்கள் அமெரிக்க ஸியோனிஸ்டுகள்.

இவர்கள் நூல் வெளியீட்டு நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. தலைசிறந்த எல்லா பதிப்பகங்களும் யூதர்களுடையவை. ரேண்டம் ஹவுஸ், சைமன் & ஷுஸ்டர், டைம் ஆகியவை அவற்றில் சில. இதில் வெஸ்டர்ன் பப்ளிஷிங் (Western Publishing) நிறுவனம்தான் உலகிலேயே குழந்தைகளுக்கான சிறந்த புத்தகப் பதிப்பகமாக விளங்குகிறது.

இந்த யூதப் பதிப்பாளர்கள் இஸ்லாமையும், முஸ்லிம்களையும், அவர்களது கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் மிகக் கேவலமான வடிவில் சித்தரிக்கிறார்கள். மேலும் ஸியோனிஸக் கருத்துத் திணிப்புகளையும், ஃபாசிச சிந்தனைகளையும் தேசபக்தி போன்ற கருத்து மாற்றங்களுடன் சிறு குழந்தைகளின் மனங்களில் நச்சு விதைககளாக விதைக்கிறார்கள்.

ஆக, இத்தகைய கொடூர யூத மிருகப் பிடியிலிருந்து ஊடகங்களைக் காக்கவும், இந்திய ஃபாசிச சிந்தனை ஊடுருவியிருக்கும் ஊடகத்தின் களங்கத்தைத் துடைத்தெறியவும் முஸ்லிம்கள் முன்வரவேண்டும். ஊடகங்களில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

பணம் படைத்தவர்கள் பத்திரிகைகளை ஆரம்பிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அறிவுஜீவிகளும், சிந்தனையாளர்களும் தங்கள் அறிவையும், அனுபவத்தையும் ஊடகத்தின்பால் திருப்ப வேண்டும்.

“இந்தியா நெக்ஸ்ட்” என்ற ஹிந்தி மாதமிரு இதழ் இன்று முஸ்லிம்களால் துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இது ஊடக உலகில் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது.

தலைமுறை தலைமுறையாக நாம் ஏங்கி தாங்கி வந்த நமது ஊடகக் கனவை நம் தலைமுறையில் நடப்பாக்கிக் காட்டுவோம். வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 39

சமீபத்தில் நமது தேசத்தின் தலைநகராம் புது தில்லியில் சில முஸ்லிம் அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடினர். எட்டு மாநிலங்களிலிருந்து கலந்துகொண்ட இவர்களின் ஒரே நிகழ்ச்சித் திட்டம் : “ஆங்கில ஊடகத்தின் அவசியமும், முக்கியத்துவமும்”.

அந்தக் கூட்டத்தின் இறுதியில் அவர்கள் அனைவரும் ஏகோபித்த ஒரு கருத்தில் ஊன்றி நின்றனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமாக ஓர் ஆங்கில ஊடகம் அவசர, அவசியமாக துவங்கப்பட வேண்டும் என்பதே அந்த ஏகோபித்த கருத்து.

இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆட்சியாளர்களுக்கும், சமூகத்திற்கும் நம் சமுதாயத்தின் குரல் போய்ச் சேர வேண்டும் என்றால் அதற்கு ஆங்கில ஊடகம் அவசியம் இருக்க வேண்டும் என்ற கருத்து அங்கே அறுதி வரை நிலவியது.  இந்தக் கூட்டத்திற்கு உயிர் மூச்சாய் இருந்து ஏற்பாடு செய்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் 2014ல் இன்ஷா அல்லாஹ் ஓர் ஆங்கில நாளிதழ் ஆரம்பிக்கப்படும் என்று கூட்டத்தில் உறுதியளித்தார்.

கூட்டத்தில் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மேற்கு வங்காளத்தைச் சார்ந்த உமர் கான் இவ்வாறு கூறினார்: “இந்தியாவிலும், உலகிலும் மூலை முடுக்கெங்கிலும் நமது குரல் கேட்க வேண்டும் என்றால் நமக்கு ஆங்கில ஊடகம் அவசியம். இன்று ஆங்கில ஊடகம் முஸ்லிம்கள் குறித்த தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றது. முஸ்லிம்களிடம் ஆங்கில ஊடகம் இல்லாததால் இவற்றிற்கு தகுந்த பதிலை நம்மால் கூற முடியவில்லை.”

மத்திய பிரதேச மாநில எஸ்.டி.பி.ஐ. தலைவர் வழக்கறிஞர் ஸஜ்ஜாத் அந்தக் கலந்துரையாடலில் இவ்வாறு கூறினார்: “அமைச்சர்களுக்கு, ஆட்சியாளர்களுக்கு, தலைவர்களுக்கு நமது செய்திகளை எடுத்தியம்புவதற்கு நம்மிடம் தகுந்த ஊடகம் இல்லை. எனவே அரசியலில் குதிப்பதற்கு முன்னால் நாம் ஊடகத்தில் கால் பதிக்க வேண்டும். ஏனெனில் ஊடகம் இல்லையெனில் நாம் அரசியலில் வெற்றி பெற முடியாது.”

உர்து பத்திரிகையாளரும், கட்டுரையாளருமான ஆபித் அன்வர் தனது துவக்க உரையில் இவ்வாறு கூறினார்: “இன்று ஊடகம் அனைத்துத் துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் அதன் முக்கியத்துவம் இன்று பன்மடங்காக உயர்ந்துள்ளது.”

இந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துர் ரஹ்மான் ஓர் ஆங்கில நாளிதழைக் கொண்டு வரவேண்டும் என்ற கனவைக் கொண்டவர். “கடந்த காலத்தில் ஆங்கில நாளிதழ் துவங்குவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எடுபடவில்லை. அந்தக் கனவு நனவாகவில்லை. இன்ஷா அல்லாஹ் 2014க்கு முன்பாக ஓர் ஆங்கில நாளிதழ் துவங்கப்படும்” என்று அவர் கூறினார்.

நாமும் அந்த நன்னாளுக்காகக் காத்திருப்போம். அவர்களின் கனவுப்படி ஓர் ஆங்கில நாளிதழ் உருவாகட்டும். அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக.