Saturday 5 May 2018

கொடையளிப்பதன் முக்கியத்துவம்!


கொடை என்பது தேவையுடையோருக்கு பணம் அளிப்பது மட்டுமல்ல. உங்கள் குடும்பத்திற்காக, நண்பர்களுக்காக, சமுதாயத்திற்காக உங்களையே கொடுப்பதுதான் உண்மையான நன்கொடை. 

அதாவது இந்தப் பூமியில் ஆக்கபூர்வமான சக்தியாக உங்கள் நன்கொடை அமைய வேண்டும். நாம் செல்லுமிடமெல்லாம் நல்லவற்றைப் பரப்புவது, நேர்மையை வெளிப்படுத்துவது, நம்மிடருந்து அதிகபட்சமாக என்னவெல்லாம் அளிக்க முடியுமோ அவையனைத்தையும் வழங்குவது. அதாவது, நம் இதயத்தைக் கொடுப்பது, புன்னகை புரிவது, நல்ல வார்த்தைகள் கூறுவது - இவைதான் நன்கொடைகள்.

உண்மையில் தொடர்ச்சியாக கொடையளிப்பவர்கள்தான் தங்களைத் தாங்களே தேவையுடையவர்களாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவை? அல்லாஹ்வின் கருணையும், அவனது மன்னிப்பும்! பிறர் துன்பங்களை நீக்க வேண்டும் என்று அவர்கள் அவசியப்படுகிறார்கள். அதன் மூலம் மறுமை நாளில் அல்லாஹ் தங்களின் துன்பங்களை நீக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சுவர்க்கத்தின் விலை

சுவர்க்கத்தினுள் நுழைவதற்குரிய விலையே நீங்கள்தான். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் பெறும் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிறீர்கள்.
உங்கள் ஆன்மாவின் ஆழத்திலிருந்து அடுத்தவருக்கு அன்பைப் பொழியுங்கள். பிறரிடம் நம்பிக்கையை விதையுங்கள். பிறருக்காக பிரார்த்தனை புரியுங்கள். உங்கள் குழந்தைகளிடமும், வாழ்க்கைத் துணையுடனும், நீக்ஙள் நேசிக்கும் ஒருவருடனும் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு தருணம் என்பது பிறர் மதிப்புமிக்கதாகக் கருதும் நேரம் என்பதாகும்.

யாராவது உங்களிடம் உதவி கோரினால், நீங்கள் தளர்வாக இருந்தாலும் “இல்லை” என்று கூறாதீர்கள். யாராவது உங்களிடம் பண உதவி கோரினால், நீங்கள் பணக்காரராக இல்லாவிட்டாலும் “இல்லை” என்று கூறாதீர்கள். உங்கள் சமுதாயத்தை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கு உங்கள் திறமையையும், அறிவையும் பயன்படுத்துங்கள். நீங்கள் தனித்துவமிக்கவர்கள். எங்கோ யாரோ உங்கள் உதவிக்காகக் காத்திருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்களுக்காக சமைத்திடுங்கள். உங்கள் அண்டை வீட்டாருக்கு உணவைப் பாத்திரத்தில் வைத்து கொடுங்கள். கொடுத்த பாத்திரத்தைத் திரும்பக் கேட்காதீர்கள்.

நன்மைக்காகப் போராடும் பாதையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயிர் உங்களுடையது அல்ல; அது அல்லாஹ்வுக்குச் சொந்தமானது.

கொடுத்துக் கொடுத்துக் களைத்துப் போய் விட்டீர்கள் என்றால், உங்கள் கண்களின் கீழுள்ள வளையங்கள் கருத்துப் போய்விட்டன என்றால், பணிச் சுமையின் காரணமாக உங்கள் தோள்கள் துவண்டு வளைந்து விட்டதென்றால், உங்கள் ஆன்மாவை ஊக்கப்படுத்துவதற்கும், உங்கள் உடலை வலுப்படுத்துவதற்கும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் உற்சாகமாக எழுந்து அதிகம் அதிகம் கொடையளியுங்கள்.
வெகு விரைவிலேயே நீண்ட தூக்கத்துக்கும், நிரந்தர ஓய்வுக்கும் நேரம் வந்து விடும்!

உங்களுக்கென்று பொருட்களைச் சேகரித்து குவித்துக் கொண்டே இருக்காதீர்கள். ஏனெனில் இறுதி நாளில், “எவ்வளவு சேகரித்து வைத்துள்ளாய்?” என்று உங்களிடம் கேட்கப்படாது. மாறாக, “எவ்வளவு கொடையளித்தாய்?” என்றுதான் கேட்கப்படும்.

“அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான் என்றால், அது ஒருபொழுதும் உங்களை அழிப்பதற்காக அல்ல. உங்களுக்கு பெரிய அளவிலுள்ள அன்பளிப்புகளை அளிப்பதற்காகவே உங்கள் கைவசமுள்ள சிலவற்றை அவன் எடுத்துக்கொண்டு, உங்கள் கரங்களை அவன் வெறுமையாக்குகிறான்.” (இப்னு அல் கய்யூம்)

Source: "A Temporary Gift: Reflections on Love, Loss, and Healing" By Asmaa Hussein