Saturday 25 August 2018

காழ்ப்புணர்வைக் குறைக்கும் கால்பந்து நட்சத்திரம்!


முஹம்மத் ஸலாஹ்... இன்று கால்பந்து உலகம் முழுவதும் எதிரொலிக்கும் மந்திரப் பெயர் இதுதான். எகிப்து நாட்டைச் சார்ந்த முஹம்மத் ஸலாஹின் நாமம் சொந்த நாட்டின் மூலை முடுக்குகளிலும், உணவு விடுதிகளிலும், தெரு வீதிகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆம்! கால்பந்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதல்லவா… 25 வயதாகும் முஹம்மத் ஸலாஹ் இன்று உலகப் புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திர வீரர். இவர் மைதானத்தில் இறங்கினால் “முஹம்மத் ஸலாஹ்… முஹம்மத் ஸலாஹ்” என்ற முழக்கத்தில் மொத்த அரங்கமும் அதிர்கிறது. ஆவேசமாக அவரை வரவேற்கிறது.

எகிப்து நாட்டு கால்பந்து அணியில் பங்கு பெற்றுள்ள முக்கிய வீரர்தான் முஹம்மத் ஸலாஹ். எதிர்வரும் 201ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு எகிப்து தேர்வாகி விட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த நட்சத்திர வீரர் என்றால் அது மிகையல்ல.

இவர் ஐரோப்பாவின் லிவர்பூல் கால்பந்து கிளப்பில் சேர்ந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். அதுதான் இப்பொழுது உலக கால்பந்து ரசிகர்களையே இவர் பக்கம் ஈர்த்துள்ளது.

இவர் ஆடுகளத்தில் காண்பிக்கும் ஆவேசமும், மின்னல் வேக ஓட்டமும், நுணுக்கமான விளையாட்டுத் திறனும், மைக்ரோ நொடியில் கிடைக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி கோல் போடும் அழகும் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி விடுகிறது. அவர் கோல் போட்டதும் ஒட்டுமொத்த அரங்கத்தினரும் தங்களையறியாமலேயே மெய்சிலிர்த்து எழுந்து நிற்கின்றனர். ஆவேசமாக அவருக்கு வாழ்த்துகளைப் பங்களிக்கின்றனர்.
கோல் போட்டதும் ரசிகர்கள் அருகில் ஓடிச் சென்று அவர்களை வாரியணைக்கும் விதமாக இரு கரங்களையும் விரித்து அவர்களின் வாழ்த்துகளை வாஞ்சையுடன் ஏற்றுக் கொள்கிறார் ஸலாஹ். அவர்களின் அன்பு மழையில் நனைந்து சிறிது நேரம் அசையாமல் நிற்கிறார்.

அவரின் சக அணியினரின் வாழ்த்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஸலாஹ் மெதுவாக மைதானத்தின் நடுவட்டத்திற்கு வருகிறார். இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி பிரார்த்திக்கிறார். அப்பொழுது ஒட்டுமொத்த மைதானமும் அவரைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது. பின்னர் அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து, பூமியில் தன் நெற்றியைப் பதித்து சாஷ்டாங்கத்தில் வீழ்கிறார். அங்கேதான் முஹம்மத் ஸலாஹ் தன் இறைநம்பிக்கையை வெகு ஆழமாக வெளிப்படுத்துகிறார்.



சாஷ்டாங்கத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவித்து அவர் எழுந்ததும் மீண்டும் ரசிகர்களிடமிருந்து பழைய ஆரவாரம் மைதானத்தை ஆட்கொள்கிறது. மீண்டும் ரசிகர்கள் அவரை வாழ்த்திப் பாடத் தொடங்குகின்றனர்.
முஹம்மத் ஸலாஹ் விளையாடும் மைதானங்களில் எல்லாம் இந்தக் காட்சி நிரந்தரமாகி விட்டது. மைதானத்தில் இறங்கி ஆட்டம் தொடங்கும் முன்பும் இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி அவர் பிரார்த்திக்கிறார். பின்னர் ஒவ்வொரு கோலுக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக பூமியில் நெற்றி பதித்து சாஷ்டாங்கத்தில் வீழ்கிறார்.

இஸ்லாமில் தொழுகையில் ஸஜ்தா என்ற சாஷ்டாங்கம் இருக்கிறது என்பதை நாமறிவோம். தொழுகைக்கு வெளியே மகிழ்ச்சியான கட்டங்களில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் சாஷ்டாங்கம் இருக்கிறது. அந்த சாஷ்டாங்கத்தில் வீழ்ந்துதான் அவர் அடிக்கும் ஒவ்வொரு கோலுக்குப் பிறகும் தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்.

புகழின் உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டிருந்தாலும் அந்தப் புகழுக்குக் காரணமான, புகழைத் தந்துகொண்டிருக்கும் இறைவனை மறவாமல் நன்றி செலுத்தும் பாங்கைப் பார்க்கும்பொழுது உண்மையிலேயே உடலெல்லாம் புல்லரித்துத்தான் போகிறது.

ஐரோப்பிய கால்பந்து நட்சத்திர வீரராக மிளிரும் முஹம்மத் ஸலாஹ் லிவர்பூலில் முதல் சீசனில் இதுவரை 49 கால்பந்துப் போட்டிகளில் விளையாடி 43 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தின் இந்த ஆண்டுக்கான ஆட்ட நாயகனாக முஹம்மத் ஸலாஹ் ஆவதற்கு அவரது அணியின் சக வீரர்களும் ஓட்டளித்திருக்கிறார்கள். கால்பந்து எழுத்தாளர்கள் சங்கமும் (Football Writers’ Association) ஓட்டளித்திருக்கிறது.
ஒவ்வொரு போட்டி முடியும்பொழுதும் அவரது நட்சத்திர அந்தஸ்து கூடிக்கொண்டே போகிறது. அவர் தன் இறைநம்பிக்கையை இப்படிப் பொதுத்தளத்தில் வெளிப்படுத்துவது அவரை சமூக, கலாச்சாரத்தின் முக்கிய பிரமுகராக மாற்றியிருக்கிறது.

முஹம்மத் ஸலாஹ் இன்று பிரிட்டனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மட்டுமல்ல, கொண்டாடப்படும் இந்தக் காலகட்டத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இஸ்லாமோஃபோபியா என்னும் இஸ்லாம் குறித்த அச்சமும், வெறுப்பும் பிரிட்டனில் புரையோடிப் போயுள்ள காலகட்டம் இது. சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் படி இஸ்லாமிற்கெதிரான ஒரு வெறுப்பு சூழ்நிலை எங்கும் நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் வடக்கு ஆப்பிரிக்காவைச் சார்ந்த ஒரு முஸ்லிம் பிரிட்டனில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மட்டுமல்ல, கொண்டாடப்பட்டும் கொண்டிருக்கிறார்.

அவர் இஸ்லாமிய மாண்புகளை உள்ளடக்கியவர் என்றும், இறைநம்பிக்கையை இறுகப் பற்றிப் பிடிப்பவர் என்றும் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் பிரிட்டனின் துணைப் பொதுச் செயலாளர் மிக்தாத் வெர்சி கூறுகிறார். “அவரிடம் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அணியின் கதாநாயகன் அவரே. மொத்த லிவர்பூலும் உண்மையிலேயே மனம் விரும்பி அவரைச் சூழ்ந்து அணிவகுத்து நிற்கிறது. இஸ்லாமோஃபோபியாவுக்கு அவர்தான் தீர்வு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அது இல்லாமலாவதற்கு இவர் முக்கிய பங்கு வகிக்க முடியும்” என்று அவர் கூறுகிறார்.

எகிப்தில் இன்று முஹம்மத் ஸலாஹ் ஒரு தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறார். அது கடந்த வருடம் அக்டோபரில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் கடைசி நிமிடத்தில் அவர் அடித்த பினால்டி கிக்கில் விழுந்த கோல் மூலம் உறுதியானது. அதன் மூலம் எகிப்து அணி எதிர்வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றிருக்கிறது. 1990க்குப் பிறகு இப்பொழுதுதான் எகிப்து கால்பந்து அணி உலகக் கோப்பை போட்டிக்குள் நுழைகிறது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்வு நடந்த எகிப்தின் அலெக்ஸாந்திரியா நகரிலுள்ள மைதானம் முழுவதும் அன்று ரசிகர்கள் ஸலாஹ்வைத் தங்கள் தோள்களில் சுமந்து வலம் வந்து கொண்டாடினார்கள்.

எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எண்ணற்ற சுவர்கள் இன்று ஸலாஹ்வின் படத்தைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. கெய்ரோவில் ஸலாஹ்வின் உருவப்பட சுவர் சித்திரம் உள்ள ஓர் உணவு விடுதி இன்று சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் எகிப்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடவில்லை என்றாலும் அவர் போட்டியிடுவதற்கு கணிசமான ஆதரவைப் பெற்றிருந்தார் என்கிற அளவுக்கு அவர் புகழ் உயர்ந்து நிற்கிறது.

பிரிமியர் லீகும், ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகளும் எப்பொழுதும் எகிப்தில் மிகவும் பிரபலம். இன்று ஆயிரக்கணக்கானோர் கெய்ரோவின் தேநீர் கடைகளிலும், ஷிஷா பார்களிலும் லிவர்பூல் கால்பந்துப் போட்டிகளைக் காண்பதற்காக ஆர்வமாக ஒன்று கூடுகிறார்கள். அதற்குக் காரணம் முஹம்மத் ஸலாஹ்!

ஸலாஹ்வின் புகழ் அவர் கால்பந்து நட்சத்திர வீரர் என்பதால் மட்டுமல்ல. வாரி வழங்குவதில் பாரி வள்ளலாக திகழ்கிறார் என்பதும் ஒரு காரணம். “அவர் தொடர்ச்சியாக நற்காரியங்களுக்கு பொருளாதார உதவி செய்து வருகிறார். அவர் பிறந்த ஊருக்கும் நிறைய செய்து வருகிறார்” என்று அவரின் பயிற்சியாளர் ஸயீத் அல் ஷிஷ்னி கூறுகிறார். இந்த ஸயீத் அல் ஷிஷ்னிதான் ஸலாஹின் திறமையை அவர் குழந்தையாக இருக்கும்பொழுது கண்டுபிடித்தவர். அவரது சொந்தக் கிராமமான நைல் நதி டெல்டா பகுதியில் அமைந்துள்ள நக்ரிக் என்ற கிராமத்தில் முஹம்மத் ஸலாஹை குழந்தைப் பருவத்திலேயே ஒரு நட்சத்திர கால்பந்து வீரராகக் கண்டார் ஸயீத் அல் ஷிஷ்னி.

நக்ரிக்கிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு ஸலாஹ் ஒரு டயாலிஸிஸ் இயந்திரம் கொடையளித்துள்ளார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடையளித்துள்ளார். பொது விளையாட்டு மையம் ஒன்றைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். ஒரு கல்விக் கூடத்தையும், ஒரு மஸ்ஜிதையும் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். எகிப்தின் வலுவற்ற பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள முதலீட்டு நிதிக்கு பணம் கொடுத்துள்ளார். இப்படி ஸலாஹின் நன்கொடைகள் நாடு முழுவதும் விரிகின்றன.

கடந்த ஏப்ரலில் போதை மருந்துப் பழக்கத்திற்கெதிராக அரசு நடத்திய விழிப்புணர்வுப் பிரச்சார காணொளியில் பங்குபெற்று அதற்கு ஆதரவு தெரிவித்தார். அந்தக் காணொளி வெளிவந்த மூன்று நாட்களுக்குள் போதை மருந்துப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்து விட்டது என்று எகிப்தின் சமூக ஒற்றுமை அமைச்சகம் அறிவித்துள்ளது.
“ஒரு முஸ்லிமல்லாத நாட்டில், இஸ்லாமோஃபோபியா வளர்ந்து வரும் ஒரு நாட்டில் அதைப் பற்றி கிஞ்சிற்றும் அஞ்சாமல் முழங்காலில் அமர்ந்து நெற்றியை பூமியில் பதித்து இவர் வணங்குவதை எகிப்திய மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாக அதனைக் கருதுகிறார்கள்” என்று எகிப்தின் கால்பந்து விமர்சகர் அஹமத் அட்டா கூறுகிறார்.

அதேபோன்று இங்கிலாந்தில் லிவர்பூல் பகுதியில் வசிக்கும் சிரிய, யமனிய, வங்க தேச முஸ்லிம்களும் உணர்கிறார்கள். லிவர்பூலில் உட்பகுதியில் அமைந்திருக்கும் டாக்ஸ்டெத் என்ற நகரத்திலுள்ள அல் மஸ்ரா மஸ்ஜிதின் இமாம் அபூ உஸாமா அத்தஹபி, “முஸ்லிம்கள் ஓர் அழுத்தத்தில் உள்ளார்கள்” என்கிறார்.

சமீபத்திய ஆண்டுகளில், முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரங்களும், குற்றங்களும் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளன என்று அங்குள்ள காவல்துறை புள்ளிவிவரங்கள் அறிவிக்கின்றன. 2015ல் பாரிஸ் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்புகள், 2016ல் லண்டனில் நடந்த குண்டுவெடிப்புகள் ஆகியவற்றின் விளைவாக இங்கிலாந்தில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்தல்கள் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 47 சதவீதம் அதிகரித்திருந்தன என்று டெல் மாமா என்ற நிறுவனத்தின் அறிக்கை அறிவிக்கிறது. 2012 முதல் 2016 வரையுள்ள கணக்கைப் பார்த்தால் இது 75 சதவீதம் அதிகரித்திருக்கின்றது என்று அங்குள்ள காவல்துறை பதிவுகள் பறைசாற்றுகின்றன.

“ஸலாஹ் அந்த அழுத்தத்தைக் குறைத்துள்ளார்” என்று அல் மஸ்ரா மஸ்ஜித் இமாம் அத்தஹபி கூறுகிறார். “ஒவ்வொரு முஸ்லிமும் அவரால் பெருமிதம் கொள்கின்றனர்” என்று லிவர்பூலில் உள்ள அல் ரஹ்மா மஸ்ஜிதின் அருகில் மளிகைக் கடை வைத்திருக்கும் அலீ அடென் கூறுகிறார். “சில நேரங்களில் நாங்கள் இங்கே இரண்டாந்தர குடிமக்களாக உணர வைக்கப்படுவோம். இந்தச் சூழ்நிலையில் மத்திய கிழக்கிலிருந்து ஒரு முஸ்லிம் எங்கள் நகரத்திற்கு வந்து புகழ் பெறுகிறார் என்பது பெருமிதமே” என்கிறார் அவர்.
“முஸ்லிம் சமூகத்திற்கும், லிவர்பூல் நகரத்திற்கும் ஒரு நல்லிணக்கப் பாலமாக அவர் விளங்க முடியும்” என்று இமாம் அத்தஹபி கூறுகிறார்.
“அவர் தரையில் வீழ்ந்து ஸுஜூது செய்வதால் அவர் அடிக்கும் ஒவ்வொரு கோலும் முஸ்லிம்களின் மேல் படிந்துள்ள கறையை நீக்குகிறது” என்று முன்னாள் கால்பந்து வீரர் அன்வருத்தீன் கூறுகிறார்.

ஸலாஹைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ள ஒரு பாடலில், “அவர் இன்னும் சில கோல்கள் போடுவாரானால், நானும் முஸ்லிமாகி விடுவேன்” என்ற வரிகள் வருகின்றன.

இதுதான் ஒரு முஸ்லிமின் இலட்சியமாக இருக்க வேண்டும். தன் சொல்லால், செயலால் அவன் வெளிப்படுத்துபவை காண்போரை இஸ்லாமின் பால் ஈர்க்க வேண்டும். முஹம்மத் ஸலாஹ் தனக்குக் கிடைத்துள்ள இந்தப் பேரையும், புகழையும் இப்பொழுது போல் எப்பொழுதும் இதே போன்று மற்றவர்களை இஸ்லாமின் பால் ஈர்ப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

MSAH

புதிய விடியல்