Monday, 24 March 2014

ATMல் பணம் எடுக்கும்பொழுது கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம்!


ATMல் பணம் எடுக்கும்பொழுது யாராவது வந்து அவர்களது கார்டைக் கொடுத்து, “எனக்கு ATMல் பணம் எடுக்கத் தெரியாது, கொஞ்சம் எடுத்துத் தாருங்களேன்” என்று கேட்டால் உடனே நல்ல பிள்ளையாக மாறி கார்டை வாங்கி அவர்களுக்குப் பணம் எடுத்துக் கொடுத்து விடாதீர்கள். எலி பொறியில் சிக்குவது போல் பிரச்னையில் சிக்கிக் கொள்வீர்கள்.

நாம் அவர்களது கார்டைக் கொண்டு பணம் எடுப்பது முழுவதும் கேமராவில் பதிவாகும். அவர்கள் அதை வைத்துக்கொண்டு, “என் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டுள்ளது, என் கார்டைத் திருடி, என் ரகசிய எண்ணை எப்படியோ கண்டுபிடித்து இவர் பணம் எடுத்துவிட்டார்” என்று புகார் கொடுத்து பிரச்னையாக்கி விடுவார்கள். இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளும் ஊருக்குள் அலைகிறார்கள்.  ஜாக்கிரதை!

உண்மையிலேயே பணம் எடுக்கத் தெரியாதவர்களும் நம்மிடம் உதவி கேட்கலாமல்லவா... அப்பொழுது என்ன செய்வது? யார் பணம் எடுத்துக் கேட்டாலும் நீங்கள் கார்டைக் கையில் வாங்காதீர்கள். “நான் சொல்லித் தருகிறேன், நீங்கள் எடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்” என்று சொல்லி அவர்களையே எடுக்க வையுங்கள்.

அவருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். உண்மையிலேயே பணம் எடுக்கத் தெரியாதவர்கள் இதன் மூலம் பணம் எடுக்க அறிந்து கொள்வார்கள். மாறாக, அவர்கள் கள்வர்களாக இருந்தால் முகத்தில் கரி பூசியது போல் ஆவார்கள்.

Friday, 21 March 2014

துளிரில் சிறப்புடன் நடந்து முடிந்த உலக வரலாற்று புகழ் பெற்ற நூல்களின் ஆய்வு!

2014 மார்ச் 16 ஞாயிறு அன்று துளிர் அறக்கட்டளை அறிவுத்துளிர் குடும்ப நண்பர்கள் வட்டம், நிரஞ்சனம் மனநல மன்றம் ஆகிய துளிரின் உள் அமைப்புகளின் சார்பில் உலக வரலாற்றில் புகழ் பெற்ற 'ரோடு ட்டூ மக்கா' எனும் தலைப்பில் முஹம்மது அஸத் வெளியிட்ட ஆங்கில நூலை 'எனது பயணம்' எனும் தலைப்பில் எஸ்.ஓ. அபுல் ஹஸன் கலாமி தமிழில் மொழியாக்கம் செய்த நூலும், 'ரூட்ஸ்' எனும் தலைப்பில் அலெக்ஸ் ஹேலி எழுதிய 'வேர்கள்' எனும் தலைப்பில் எம்.எஸ். அப்துல் ஹமீது தமிழில் மொழியாக்கம் செய்த புதினமும் ஆய்வு செய்யப்பட்டது.


மாலை 5.15 மணிக்கு துளிர் சிற்றரங்கில் நூலாய்வு நிகழ்வு துவங்கியது. அல்ஹாஃபிழ் முஹம்மது இர்ஃ;பான் திருக்குர்ஆன் சூரா 'அபஸா' விலிருந்து சில வரிகளை ஓதி நிகழ்வுகளை துவக்கி வைத்தார். விழிப்புலன் இழந்த போதும் தனது ஆற்றலால் குர்ஆனை மனனம் செய்து இருக்கும் அவருக்கு துளிரின் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

துளிர் நிறுவனர் வழக்கறிஞர் ஹெச்.எம். அஹமது வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் 16 ஆண்டு காலம் அறிவுத்திறனற்ற இயலா நிலை குழந்தைகளுக்கு மறுவாழ்வு பணியாற்றி வரும் துளிர் பொது தளங்களிலும் மக்களுக்கு பயன் தரும் பல்வேறு கருத்தரங்குகள், இலக்கிய கூட்டங்கள், விவாத அரங்குகளையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த நூலாய்வு நிகழ்வும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். கொமைந்தார் இஸ்மாஈல் நூலாய்வு உரை நிகழ்த்தும் பேராசிரியர்களை அறிமுகம் செய்து பேசினார்.

"ROAD TO MAKKAH" - “எனது பயணம்” நூலாய்வு

முதலாவதாக "ROAD TO MAKKAH" - “எனது பயணம்” என்ற நூலாய்வு நிகழ்விற்கு ஹாஜி எஸ்.எம். உஜைர், ஹாஜி எஸ்.ஐ. தஸ்தகீர் ஆகியோர் தலைமை ஏற்றனர். ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஆங்கில துறை தலைவர் முனைவர் ஏ. நிஃமதுல்லாஹ் நூலாய்வு உரையாற்றினார்.


அவர் தனது உரையில் கூறியதாவது:

சிலுவைப் போருக்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அய்ரோப்பியக் கிறித்தவர்களுக்கு இஸ்லாத்தின் மீதான வெறுப்பு முழுக்க தொடங்கி விட்டது. சிலுவைப்போர் அந்த வெறுப்பை நிலைப்படுத்தி விட்டது. இன்று வரை அந்த வெறுப்பும், அருவருப்பும் இஸ்லாத்தின் மீதும், ஏகத்துவத்தின் மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் மனதில் தலைமுறை தலைமுறையாய் வேரூன்றி வருகிறது.

இந்த நிலையில்தான் பிரபல அய்ரோப்பிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லியோ போல்டுவிஸ் (முஹம்மது அஸத்) அவர்கள் அரபியப் பாலைவன நாடுகளில் நுழைகிறார். அந்த மக்களிடம் பழகுகிறார். அரபிய இஸ்லாமிய கலாச்சாரத்தை நுகர்கிறார். அவர்கள் வாழ்முறையைக் கற்கிறார். அவர்களோடு கலந்து போகிறார். இஸ்லாத்தில் கரைந்து போகிறார். புனித கஅபாவை வலம் வருகிறார். சவூதி மன்னர் முதல் சாதாரண அரபு ஒட்டக ஓட்டி வரை இசைவுடன் அவரோடு பழகுகின்றனர். மக்காவை நோக்கிய பயணம் இந்த அய்ரோப்பியரை இஸ்லாமியராக மட்டுமல்ல, அரபியாகவும் ஆக்கி விடுகிறது.

அன்றைய பாகிஸ்தானுக்குச் செல்கிறார். மாபெரும் கவிஞர் அல்லாமா இக்பாலோடு தொடர்பு ஏற்படுகிறது. புதிய பாகிஸ்தானின் அரசியல் ஆலோசகர் ஆகிறார். ஐ.நா. சபையில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற அமைச்சர் ஆகிறார்.

இவ்வளவுக்குப் பின் அமெரிக்கா செல்கிறார். இவர் தம் பழைய நண்பர்கள் இவரை விசித்திரமாகப் பார்க்கிறார்கள். அவர்களின் அறியாமையை உடைத்தெறிய முன் வருகிறார் அஸத். அதுவரை தன் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பாதிருந்த அவருக்கு இப்போது அது அவசியமாகி விட்டது.

ஆம்! இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும், அரபு பற்றியும் அவர்களுக்கு அறிவித்திடத் துடிக்கிறார்.

எழுதுகோலால் கற்பித்த அல்லாஹ்வின் பேருதவியோடு 'ரோடு ட்டூ மக்கா' என்கிற இந்தத் தன் வரலாற்றுக் காவியத்தை இயற்றி முடித்தார். இந்த நூல் அய்ரோப்பிய அறிவாளிகளின் மனத்தில் இஸ்லாம் பற்றிப் படர்ந்திருந்த அறியாமை இருளை முழுமையாக நீக்கியது.

ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அரபியர் பற்றியும், இஸ்லாமிய வாழ்நெறி பற்றியும் உலகம் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துச் செய்திகளின் நேரடி அனுபவ அறிவிப்பாகத் திகழ்கிறது இந்நூல்.

இந்நூலை ஒருவர் படித்து முடித்தால் இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும் அவரால் நிச்சயம் உண்மையை உய்த்து உணர முடியும்.
இதோ அந்த அரிய நூல் தமிழில்!

காயல்பட்டினம் சகோதரர் ஹாஜி அபுல் ஹஸன் கலாமி, அஸத் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார். பெருநூலாய் இருப்பினும் பொருளும், சுவையும் விடாமல் படித்து முடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நூலை வெளியிட்டுள்ள சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் பாராட்டுக்குரியவர்கள்.


இவ்வாறு தெரிவித்த முனைவர் நிஃமத்துல்லாஹ், இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் எளிதில் புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த நூல் என்றும், இந்த அரிய நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


அதன் பின் நூலை மொழியாக்கம் செய்த ஹாஜி எஸ்.ஒ. அபுல் ஹஸன் கலாமி ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் முஹம்மது அஸத் எழுதிய 'ரோடு ட்டூ மக்கா' நூலை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நூலை படித்த போது அது ஒருவரின் சுயசரிதையோ அல்லது வீர செயல்களின் வர்ணணையோ அல்ல என்றும், ஒர் ஐரோப்பியர் இஸ்லாத்தை தெரிதலையும் முஸ்லிம் சமூகத்தோடு அவர் இரண்டற இணைதலையும் விளக்கிடும் கதைதான் அது என்றும் எனக்கு புரிந்தது.

இந்த நூலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அந்த முயற்சிக்காக நான் பல வருடங்கள் செலவிட்டேன். 'ரோடு ட்டூ மக்கா' எனும் ஆங்கில நூலை பல முறை திரும்ப திரும்ப படித்தேன். நான் தமிழாக்கம் செய்த இந்த புத்தகத்திற்கு 'எனது பயணம்' என்று பெயர் வைத்தேன். அதனை சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் வெளியிட்டார்கள். 

இவ்வாறு கூறிய அவர், இந்த நூலாய்வு நிகழ்வினை ஏற்பாடு செய்து என்னை கவுரவப்படுத்திய துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிகழ்வில் துளிரின் அழைப்பினை ஏற்று எல்லா தரப்பினரும் கலந்து கொண்டமைக்கு பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். இந்த நூலாய்வு நிகழ்வில் மாற்று மத சகோதர சகோதரிகளின் பங்களிப்பும் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் தனது ஏற்புரையில் தெரிவித்தார்.

“ரூட்ஸ்” - “வேர்கள்” நூலாய்வு

இரண்டாவதாக “ரூட்ஸ்” - “வேர்கள்” எனும் நூலாய்வு நிகழ்விற்கு ஆர்.எஸ். லத்தீஃப், ஸதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா) எஸ்.இ. அமானுல்லாஹ் ஆகியோர் தலைமை ஏற்றனர்.


ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் முனைவர் ஏ. அஷ்ரஃப் அலீ தனது நூலாய்வு உரையில் கூறியதாவது:

மால்கம் எக்ஸ் இஸ்லாத்தை முன் வைத்து கறுப்பர்களின் விடுதலைக்காக போராடியவர். பல லட்சம் கறுப்பர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தவர்.

மால்கம் எக்ஸ் தன்னுடைய வேகமான இஸ்லாமியப் பிரச்சாரத்தின் போது 'கறுப்பர்களின் சொந்த நாடு அமெரிக்கா அல்ல. அஃது ஆப்பிரிக்கா!' என்ற வாதத்தை முன்வைத்தார். இதில் வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டினார். அவரது ஆதாரங்கள் நிறைந்த உரைகள் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்தன. இந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மைகளை சோதிக்க விரும்பினார் அலெக்ஸ் ஹேலி.

பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் எக்ஸ் கூறும் வரலாற்று இடங்களை தானே நேரில் சென்று கண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். அது அவரது சொந்த பூர்வீகத்தைக் கண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது. 

அதாவது அவரது 'வேரை' அவர் காணும் நல்ல முயற்சியாக முடிந்தது. தனது பயணத்தை, ஆராய்ச்சியை “ரூட்ஸ்” என்று புதினமாக வடித்தார். இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு “வேர்கள்” என்ற பேரில் காயல்பட்டினத்தை சேர்ந்த எம்.எஸ். அப்துல் ஹமீது மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். பெரும் பணி இது. சளைக்காமல் செய்திருக்கிறார். அல்லாஹ் அவருக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக! இந்த நூல் 'இலக்கியச்சோலை' வெளியீடாக வந்துள்ளது.

இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நூலாய்விற்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபை) இருக்கும் எம்.எஸ். அப்துல் ஹமீதை பார்வையாளர்கள் முன்னிலையில் வழக்கறிஞர் அஹமத் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது கருத்துக்களை கேட்டார். 

அப்போது அவர் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரியப்படுத்தினார்: 

அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்ற உண்மையையும் ஆப்ரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்ற ஆச்சரியமான உண்மையையும் நான் மால்கம் எக்ஸ் நூல் மூலமாக அறிந்தேன். அத்தோடு அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” என்ற புதினத்தைப் பற்றியும் முதன் முதலில் அந்நூல் மூலம் அறிந்தேன். அப்பொழுதே “ரூட்ஸ்” நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பிற்றை நாட்களில் அந்த நூலைப் படிக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் கனத்தது. ஆப்ரிக்க கறுப்பர்கள் அமெரிக்கர்களால் பட்ட அவலங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை. அந்த நாவலை படிக்கும் யாரையும் அது உலுக்காமல் விட்டதில்லை.

இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திடும் முயற்சியை துவங்கினேன். ஆங்கிலத்தில் 729 பக்கங்களைக் கொண்டது இந்நாவல். 120 அத்தியாயங்களைக் கொண்டது. அதனை அப்படியே மொழிபெயர்த்தால் தமிழில் 1000 பக்கங்களுக்கு மேல் வரும். அதனால் முடிந்தவரை சுருக்கி மொழிபெயர்த்திருக்கிறேன்.

இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறிய எம்.எஸ். அப்துல் ஹமீது, இந்நூலை நூலாய்விற்கு தெரிவு செய்த துளிர் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

(முன்னதாக இந்த நூலை நான்கு முறை படித்து முடித்து விட்ட காயல் எஸ்.இ. அமானுல்லாஹ் “வேர்கள்” குறித்த அறிமுகவுரையை நிகழ்த்தினார்.

மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ். அப்துல் ஹமீதுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசினை அவர் சார்பில் அவரின் மாமனார் MIW முஹம்மது இஸ்மாஈலும், அவரின் இளைய மகன் முஹம்மது ஸஜீதும் பெற்றுக்கொண்டனர்.)

நன்றி: http://www.kayalnews.com

Wednesday, 19 March 2014

“வேர்கள்” & “எனது பயணம்” நூலாய்வு விழா!


கடந்த 16.03.2014 ஞாயிறன்று காயல் பட்டினம் துளிர் பள்ளி அரங்கில் “வேர்கள்” & “எனது பயணம்” நூலாய்வு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

“The Road to Makkah” எனும் தலைப்பிலான நூலை, காயல் பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஓ. அபுல்ஹஸன் கலாமீ - “எனது பயணம்” எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். “Roots” எனும் ஆங்கில புதினத்தை நான் “வேர்கள்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளேன்.
உலகப் புகழ் பெற்ற இந்த நூல் மொழியாக்கங்களின் அறிமுகம் மற்றும் ஆய்வுரை விழா, இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணிக்கு, துளிர் பள்ளி காணொளிக் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

“வேர்கள்” நூலை முனைவர் A. அஷ்ரஃப் அலீ (இணை பேராசிரியர், வரலாற்றுத் துறை, ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, நெல்லை) அவர்களும், “எனது பயணம்” நூலை முனைவர் A. நிஃமத்துல்லாஹ் (தலைவர், ஆங்கிலத் துறை, ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, நெல்லை) அவர்களும் ஆய்வு செய்து விழாவில் நூலாய்வுரை நிகழ்த்தினார்கள்.


நான் துபையில் இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆதலால் நூலைப் பற்றிய அறிமுகவுரையை “வேர்கள்” நூலை நான்கு முறை படித்து முடித்துவிட்ட காயல் அமானுல்லாஹ் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

நான் துபையிலிருந்து தொலைபேசி மூலம் சிறிது நேரம் உரையாற்றினேன். அது விழாவில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.

ஹாஜி எஸ்.ஓ. அபுல்ஹஸன் கலாமீ அவர்களுக்கும், எனக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசினை என் சார்பாக என் மாமனார் MIW முஹம்மது இஸ்மாஈல் அவர்களும், என் இளைய மகன் முஹம்மது ஸஜீதும் பெற்றுக்கொண்டார்கள்.


கலந்துகொண்டவர்கள் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததாக கூறினார்கள். இந்த நிகழ்ச்சிக்குத் தூண்டுகோலாய் அமைந்த நண்பர் சாளை பஷீர் அவர்களுக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து துளிர் பள்ளியில் சிறப்பாக நடத்தி முடித்த வழக்கறிஞர் அஹமது அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் உண்டு.

Saturday, 15 March 2014

சிரித்து வாழ வேண்டும்!


நோய் குணமாவதற்கு மிக எளிதான, செலவற்ற வழி நன்றாகச் சிரிப்பது என்று இன்று மருத்துவத்துறையில் கூறுகிறார்கள். அதனைத்தான் நம் முன்னோர்கள் “வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்று சொன்னார்கள்.

நாம் சாதாரணமாக சிரித்துவிட்டுப் போகிறோம். ஆனால் ஒரு சிரிப்பினால் நம் உடலில் எவ்வளவு விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?

ஆம்! நிறைய மாற்றங்கள் நம் உடலில் நடைபெறுவதற்கு தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதிர்ஷடவசமாக அந்த மாற்றங்கள் அனைத்தும் நம் உடலுக்கு நன்மை பயக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் பலப்படுத்துவது முதல் நம் ஆற்றல் அளவை (Energy Level) அதிகப்படுத்துவது வரை பல நல்ல மாற்றங்களை சிரிப்பு ஏற்படுத்துகிறது. மேலும் நம் மனஅழுத்தத்தைக் குறைத்து மனதை இலேசாக்குகிறது. நம் உடலிலுள்ள வலியைக் கூட சிரிப்பு குறைக்கிறது.

நன்றாக வயிறு வலிக்கச் சிரித்தால், அல்லது விழுந்து விழுந்து சிரித்தால் அடுத்த 45 நிமிடங்களுக்கு நம் உடல் முழுவதும் ரிலாக்ஸ் ஆகிவிடுகிறது. மன அழுத்தம், பதட்டம், படபடப்பு போன்றவை ஓடிப் போய் விடுகின்றன. நம் தசை நார்களின் இறுக்கம் குறைந்து இலேசாகிப் போகின்றன.

இது எப்படி நம் உடலில் நிகழ்கிறது? நாம் வாய் விட்டுச் சிரிக்கும்பொழுது “மகிழ்ச்சி’‘க்கான ஒரு வேதியியல் பொருள் சுரக்கும். அதுதான் என்டார்ஃபின். இந்த என்டார்ஃபின் சுரந்தால் நம் உடல் நல்ல நிலைக்கு வந்துவிடும்.

அதே சமயம் வேறு ஒரு செயலும் சிரிக்கும்பொழுது நடக்கிறது. மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஹார்மோன்கள் சுரப்பது குறைக்கப்படுகிறது. ஒரு புறம் என்டார்ஃபின் என்ற மகிழ்ச்சிப் பொருள் சுரக்கிறது. மறுபுறம் மன அழுத்த ஹார்மோன்கள் சரப்பது மட்டுப்படுத்தப்படுகிறது.

அத்தோடு நாம் மேலே கூறியவாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது எப்படி?

சிரிக்கும்பொழுது நம் உடல் தூண்டப்பட்டு கிருமிகளை எதிர்க்கும் ஆண்டிபாடிகள் உஷார் ஆக்கப்படுகின்றன. இவை உடனே செயலில் குதிக்கின்றன. இவை களத்தில் இறங்கினால் உடலில் நோய்க் கிருமிகளை அண்ட விடுமா?

ஆக, என்டார்ஃபின் சுரப்பு, மன அழுத்த ஹார்மோன்கள் மட்டுப்படுத்தப்படுதல், ஆண்டிபாடிகள் களத்தில் குதித்தல் – இந்த மூன்று நிகழ்வுகளால் நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கப்படுகிறது.

அனைத்தையும் நேர்மறையாக (Positive) எடுப்பவர்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் “சிரிப்பு யோகா” என்றொரு யோகா கற்றுத் தரப்படுகிறது.

அதாவது, சிரிப்புப் பயிற்சியும், சில யோகா முறை மூச்சுப் பயிற்சிகளும் இணைக்கப்படுவதுதான் இந்தச் சிரிப்பு யோகா என்பது. இதனுடைய முக்கிய நோக்கம் நம் உடலுக்குள் பிராண வாயுவின் (ஆக்ஸிஜன்) அளவை அதிகப்படுத்துவதுதான்.

குழந்தைகள் கள்ளங்கபடமில்லா உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் சிரிப்பும் அப்படித்தான். குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் அதிகமதிகம் சிரிக்கிறோம். ஆனால் வயதாக, வயதாக நம் சிரிப்பு குறைந்துகொண்டே போகிறது.

குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 முதல் 400 தடவை சிரிக்க முடியும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. ஆனால் இதுவோ வயது வந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 15 தடவை என்று குறைந்துவிடுகிறது.

இதனை ஈடு கட்டுவதற்காக மனோதத்துவவியலாளர்கள் வலுக்கட்டாயச் சிரிப்பை ஊக்குவிக்கிறார்கள்.

“வலுக்கட்டாயச் சிரிப்பு சக்தி மிக்கது. எப்பொழுதும் கிடைக்கக் கூடியது. செலவே இல்லாதது. இதனை வயது வந்தவர்கள் செய்து வந்தால் அவர்களின் “மூடு” (மனப்போக்கு) நன்றாக மாறும். அதாவது அவர்கள் நல்ல மனநிலைக்கு வருவார்கள். மனோ ரீதியாக நல்ல விளைவு ஏற்படும்” என்று மனோதத்துவப் பேராசிரியர் சார்லஸ் ஷேஃபர் கூறுகிறார்.

இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஃபேர்லெய் டிக்கின்சன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர் சிரிப்பு சம்பந்தமாக இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

ஷேஃபர் சில மாணவர்களை வைத்து ஒரு சோதனை நடத்தினார். அவர்களிடம் அவர்களின் மனப்போக்கை (மூடு) அறிவதற்காக தொடராக சில கேள்விகளைக் கேட்டார். பிறகு அவர்களை ஒரு நிமிடம் நன்றாகச் சிரிக்கச் சொன்னார். பிறகு அவர்களின் மனப்போக்கைப் பரிசோதித்தார்.

ஷேஃபர் கேட்ட கேள்விகளுக்கு சிரிப்பதற்கு முன்பு மாணவர்கள் சொன்ன பதில்களை விட சிரிப்புக்குப் பின் அவர்கள் சொன்ன பதில்கள் மிகச் சிறப்பாக இருந்தன.

“மூளை சிரிக்க வேண்டும் என்று உடலுக்குக் கட்டளை பிறப்பித்தவுடன், நம் உடல் எதைப் பற்றியும் கவலைப்படாதாம். அது என்டார்ஃபின்களை உடனே சுரந்து தள்ளி விடும். மன அழுத்தம் குறைந்து விடும். சிரிப்பு என்ற உடல் சார்ந்த செயலுக்கு மனரீதியான செயல்தான் மனஅழுத்தக் குறைவு என்பது” என்கிறார் பேராசிரியர் ஷேஃபர்.

ஆக, சிரிப்பு என்பது ஆரோக்கியத்தின் முதலீடு.

சிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால், சிரிப்பின் மகிமையை உணர்ந்தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம்.

சிரிப்பினால் ஏற்படும் இன்னொரு பலன், சிரிக்கும்பொழுது முகத்தின் தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகு அதிகரிக்கக் காரணமாகிறது.

சிரிப்பதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வயிறு குலுங்கச் சிரிப்பது வயிற்றுக்குப் பயிற்சியாக மாறுகிறது. நீண்ட சிரிப்பின் மூலம் உடலில் அதிக கலோரி எரிந்து விடும். அத்தோடு சிரிக்கும்பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது. இது உணவு எளிதாக ஜீரணிக்க உதவுகிறது.

சிரிப்பு நமது ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவசரமான நமது வாழ்க்கையில் சிரிக்கக் கூட நமக்கு நேரமில்லை. டென்ஷன் நமது ஆயுளை வீழ்த்துகிறது. இங்கேதான் சிரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நிராசையிலிருந்து சிரிப்பு நம்மை விடுவிக்கிறது. கவலைகளைக் காற்றில் பறக்க விட சிரிப்பால் மட்டுமே முடியும். சிரிப்பு கோபத்தின் தீயை அணைக்கிறது. சோகத்தை அகற்றி உள்ளத்தை கிளர்ச்சியடையச் செய்கிறது. இதயத் துடிப்பை சாதாரணை நிலைக்கு கொண்டு வர சிரிப்பு உதவுகிறது. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் உறுதியை சிரிப்பு தருகிறது.

மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள ஒரு பெரிய கொடைதான் “ஹியூமர் சென்ஸ்” என அழைக்கப்படும் நகைச்சுவை உணர்வு. நகைச்சுவையான ஒரு செயலைக் கண்டாலோ அல்லது வார்த்தைகளைக் கேட்டாலோ சிரிக்க முடிவதே ஒரு பாக்கியம்தான்.

யாரைக் கண்டாலும் சிரிக்கும் நபர்கள் எங்கும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து விடுவார்கள். இரண்டு நபர்களுக்கு இடையேயான அகலத்தைக் குறைக்க சிரிப்பால் முடியும். சிரிக்காத நபர்களுடன் யாரும் எளிதில் நெருங்கமாட்டார்கள். அவர்களை சிடுமூஞ்சி என்றழைப்பார்கள்.

சிரிப்பவர்களால் எங்கும் நல்லுறவுகளை ஏற்படுத்த முடியும். அவர்கள் சமூகத்தில் விரைவில் பிரபலமாகி விடுவார்கள்.

சிறந்த ஆளுமையின் அடையாளமாக சிரிப்பு விளங்குகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு நேர்முகத் தேர்விற்குச் செல்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். “ஃபஸ்ட் இம்ப்ரஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரஷன்’‘ எனக் கூறுவார்கள். அதாவது, முதலில் ஒருவரிடத்தில் ஏற்படுத்தும் தாக்கமே சிறந்ததாகும்.

இங்கே உங்களது கல்வித் தகுதிகளை விட உங்களது மிடுக்குத்தனத்திற்கே அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். காரணம், ஒரே தகுதிகளைக் கொண்ட பலர் நேர்முகத் தேர்விற்கு வந்திருப்பார்கள். அவர்களில் சிறந்த நபரைத் தேர்வு செய்யும் அளவுகோலாக அவர்களின் ஆளுமைத்திறன் கவனத்தில் கொள்ளப்படும். ஆளுமைத்திறனுக்கு ஆக்கம் கூட்டும் சிரிப்பு உங்கள் முகத்தில் மலர்ந்தால் நீங்கள் மிடுக்கான நபர் என்பது நேர்முகத் தேர்வை நடத்துபவர்களுக்கு புரிந்து விடும். உங்களது ஒரு சிரிப்பில் அதிக மதிப்பெண்களை நீங்கள் தட்டிச் செல்லலாம்.

இஸ்லாம் சிரித்து மகிழ்ந்து இருப்பதற்குத் தடை ஏதும் விதிக்கவில்லை. இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நகைச்சுவை இழையோடியது. சிரிப்பு இடம் பெற்றிருந்தது.

“உள்ளங்கள் சோர்வடைந்திருக்கும்பொழுது உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சியாக (ராஹத்தாக) வைத்திருங்கள்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)

எப்பொழுதும் ‘உர்’ என்று இறுக்கமாக இருக்க இஸ்லாம் இயம்பவில்லை. மனித மனம் இப்படியிருந்தால் மரத்துப் போய் விடும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு எவ்வளவு அவசியமோ அதே போல் மகிழ்ச்சியும் அவசியம்.

அல்லாஹ் அனுமதித்த வழியில் சிறிது நேரம் சிரித்து மகிழ்ந்து இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சிரிப்பே வாழ்க்கையாகி விடக் கூடாது. அது அடுத்தவர்களின் மனதை நோகடிப்பதாக ஆகி விடக்கூடாது.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அறிவிக்கின்றார்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். சில நேரம் ஜாஹிலிய்யாக் கால விஷயங்களைக் கூறிச் சிரிப்பார்கள். அதை அண்ணலார் ஒருபோதும் தடுத்ததில்லை.

கருணை நபி (ஸல்) அவர்கள் தங்கள் கடைவாய்ப் பல் தெரியுமளவுக்கு சிரித்துள்ளார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்.

கஅப் இப்னு மாலிக் (ரலி) பின்வருமாறு அறிவிக்கின்றார்:
சங்கை நபி (ஸல்) அவர்களுக்கு சந்தோஷமேற்பட்டால் அவர்களது முகம் பிரகாசிக்கும். அது பௌர்ணமி நிலவின் துண்டு போல் ஜொலிக்கும். (புஹாரீ, முஸ்லிம்)

நானிலம் போற்றும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு இடையிலும் மிகப் பெரும் நகைச்சுவையாளராக விளங்கினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகின்றார்.

ஆயிஷா (ரலி) அறிவிப்பதைப் பாருங்கள்:
“ஒரு நாள் எனது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், ஸவ்தாவும் இருந்தனர். நான் ஹரீரா என்ற உணவைச் செய்தேன். அதைக் கொண்டு வந்து ஸவ்தாவிடம் உண்ணும்படி கூறினேன். அதற்கவர் எனக்கு விருப்பமில்லை என்று கூறினார். நீ சாப்பிடாவிட்டால் உனது முகத்தில் பூசுவேன் என்று கூறினேன். இது எனக்கு சாப்பிட்டுப் பழக்கமில்லை என்று கூறினார். நான் அந்த மாப்பண்டத்தை எடுத்து அவளின் முகத்தில் பூசினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கும் அவளுக்கும் இடையில் அமர்ந்திருந்தார்கள். என்னைப் பிடித்துக் கொள்வதற்காக அவர்களது முழங்கால்களைத் தாழ்த்தினார்கள். நான் அப்பண்டத்தை எடுத்து எனது முகத்திலும் பூசினேன். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.” (அபூயஃலா)

“நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்னகைப்பவரை நான் கண்டதில்லை” என்று அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) கூறுகின்றார். (திர்மிதி, அஹ்மத்)

“உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான், திர்மிதி)

ஆக, சிரிப்பு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆரோக்கியத்தைத் தருகிறது. நோயைப் போக்குகிறது. மொத்த குணநலனையும் மாற்றிவிடுகிறது.

நல்ல ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் நன்றாகச் சிரியுங்கள். அதேவேளையில் தனியாக அமர்ந்தோ, அளவுக்கதிகமாகவோ சிரித்து விடாதீர்கள். நம்மை தவறாகக் கருதிவிடுவார்கள்!

MSAH

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2014

Tuesday, 11 March 2014

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 2


ஏ.ஜி. நூரானி இதுவரை வெளிவராத உண்மைகளை விளக்குகிறார்!

மொரார்ஜியின் மௌனம், ஒரு நீதிபதியின் தடை

மெரார்ஜி மிகத் தாமதமாக தன் கருத்தைத் தெரிவித்தார். காந்தி படுகொலை வழக்கில் அவர் ஆதாரங்களைத் தந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.கே. தஃப்தாரி என்பவர் நீதிபதி அத்மா சரணுக்கு அளித்த மனுவின் உள்ளடக்கச் செய்தியை 1948ம் ஆண்டு செப்டம்பர் 1 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் வெளியிட்டது. அதில் சாவர்க்கர் சம்பந்தப்பட்ட செய்தி உள்ள பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“கண்ணியத்திற்குரிய மொரார்ஜி தேசாய் அவர்களைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கர்) வழக்கறிஞர் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டார்: “சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பேரா. ஜெய்னின் கூற்று போக, உங்களுக்கு சாவர்க்கர் குறித்து வேறு ஏதேனும் தகவல் தெரியுமா?”

“மொரார்ஜி இதற்கு இவ்வாறு பதிலளித்தார்: “நான் முழு உண்மைகளையும் சொல்லட்டுமா? நான் பதிலளிக்கத் தயாராகவே வந்திருக்கிறேன். சாவர்க்கர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”
குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கரின்) வழக்கறிஞர் தான் கேட்ட கேள்வியைப் பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்தக் கேள்வி, பதில், சாவர்க்கரின் வழக்கறிஞரின் கூற்று இவையனைத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய அனுமதிக்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதி அவ்வாறு பதிவு செய்வதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.”

இப்படி நீதிபதி போட்ட தடையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 8, 1948 அன்று பாம்பே சட்டசபையில் மொரார்ஜி வெளிப்படையாக இவ்வாறு சொன்னார்: “சாவர்க்கரின் கடந்த கால சேவைகள் அனைத்தும் இந்தத் தீய சேவையின் மூலம் அழிந்துவிட்டது.”

அனைத்துக் கொலைகளிலும் முக்கிய குற்றவாளிக்கெதிரான வழக்கில் அவருடன் கூட சென்று, அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்து, பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூற அனுமதிக்கப்பட்ட ஒருவரின் (அப்ரூவராக மாறியவரின்) வாக்குமூலம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும்.
காந்திப் படுகொலை வழக்கில் அது நடந்தது டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரால். இந்த வழக்குக்குத் தீர்ப்பளித்த நீதிபதி ஆத்மா சரண் தனது தீர்ப்பில் டிகாம்பர் பாட்கேவின் வாக்குமூலத்தை மிகத் துல்லியமாக அலசுகிறார்.

“டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் 20.07.1948 முதல் 30.07.1948 வரை நடைபெற்றது. அவர் ஏழு நாட்கள் குறுக்கு விசாரணை மட்டும் செய்யப்பட்டார். ஆதலால் அவரது ஆதாரம் கொடுக்கும் விதம், அவரது அந்தஸ்து அனைத்தையும் அறிய முடிந்தது. அவர் அவரது தரப்பு உண்மைகள் அனைத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக விவரித்தார். அவர் எந்தவொரு குறுக்கு விசாரணைக் கேள்விக்கும் நழுவலாக பதில் சொல்லவில்லை. அல்லது அந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்க முயலவில்லை. இவ்வளவு நீண்ட நெடிய சம்பவத்தை பிசிறில்லாமல் துல்லியமாகச் சொல்வது வேறு யாருக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இவ்வளவு நீண்ட விஷயங்களை எவராலும் மனனம் செய்யமுடியாது.

“அப்ரூவர் அவரது ஆதாரத்தில் சொல்லும்பொழுது, 20.01.1948 அன்று மெரினா ஹோட்டலில் வைத்து அவர்கள் வெடிப்பஞ்சுகளுக்கு பிரைமர் பொருத்தியதாகவும், கையெறி குண்டுகளுக்கு வெடிக்கருவி பொருத்தியதாகவும், சதித்திட்டம் குறித்து கலந்தாலோசித்ததாகவும், அவர்களிடையே சில “விஷயங்களை” பரிமாறிக்கொண்டதாகவும் கூறுகிறார்.

ஆனால் இதற்கு நேரடி தொடர் ஆதாரம் எதனையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்க முடியவில்லை ஆனால் மறுமகமான தொடர் ஆதாரம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. நைன் சிங் என்பவரின் ஆதாரத்தின் படி (விசாரணைகள் பி-17, பி-24 ஆகியன ஆதரித்தபடி) மூன்று தேநீர்கள் சொல்லப்பட்டு, அறை எண் 40ல் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.

“ஆதாரங்களை ஆராயும்பொழுது ஒரு விஷயம் எல்லோருக்கும் நன்றாக விளங்கும். அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கூறும்பொழுது அதன் வெளிச்சத்தில் முந்தைய நடப்புகளையும் நாம் கணித்துக்கொள்ளலாம். அப்ரூவரின் வாக்குமூலம் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளுக்கு முழுமையாகப் பொருந்துகிறது. தொடராகவும் அமைந்துள்ளது. ஆனால் வி.டி. சாவர்க்கர் போன்ற சில குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் விஷயத்தில் அப்ரூவரின் ஆதாரம் தொடராக இல்லை.

“அப்ரூவர் (சாவர்க்கர் விஷயத்தில்) கூறிய ஆதாரம் என்னவென்றால் 14.01.1948 அன்று நாதுராம் வி. கோட்சேயும், நாராயண் டி. ஆப்தேவும் அவரை தாதரில் உள்ள ஹிந்து மகாசபா அலுவலகத்திலிருந்து சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். “விஷயத்தை” வைப்பதற்கு சில ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டது. “விஷயம்” அடங்கிய பையைக் கையில் வைத்திருந்த கோட்சேவும், ஆப்தேவும் சாவர்க்கர் சதானின் வெளியில் அப்ரூவரை விட்டு விட்டு வீட்டின் உள்ளே சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் அதே பையுடன் வெளியே வந்தனர்.

“அதன் பிறகு அப்ரூவர் என்ன சொல்கிறார் என்றால், 15.01.1948 அன்று, தீட்சித் மகாராஜ் கோயிலின் சுற்றுச்சுவருக்கருகில் வைத்து நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் இவ்வாறு கூறினார்: “காந்தி கொல்லப்படவேண்டும் என்று சாவர்க்கர் தீர்மானித்திருக்கிறார். அந்த வேலையை எங்களிடம் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.”

“அதன் பிறகு அப்ரூவர் சொல்வது என்னவென்றால், 17.01.1948 அன்று கடைசியாக ஒரு தடவை சாவர்க்கரைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று நாதுராம் வி. கோட்சே சொன்னார். அதன்படி அவர்கள் சாவர்க்கர் சதானுக்குச் சென்றனர். நாராயண் டி. ஆப்தே தரைத் தளத்திலுள்ள ஓர் அறையில் அப்ரூவரைக் காத்திருக்குமாறு கூறிவிட்டு, அவரும், கோட்சேவும் முதல் தளத்திற்குச் சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் கீழே வந்தனர். அவர்களுக்குப் பின்னால் சாவர்க்கரும் தொடர்ந்து வந்தார். நாதுராம் வி. கோட்சேவையும், நாராயண் டி. ஆப்தேவையும் நோக்கி சாவர்க்கர் “யஷஸ்விஹூன்யா” (சென்று வாருங்கள், வென்று வாருங்கள்) என்று கூறினார்.

“சாவர்க்கர் சதானிலிருந்து திரும்பி வரும்பொழுது நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் சாவர்க்கர் தங்களிடம் இவ்வாறு கூறியதாகக் கூறினார்: “காந்தியின் 100 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த வேலை வெற்றிகரமாக முடியும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை”.

“வினாயக் டி. சாவர்க்கர் மேல் அரசுத்தரப்பு தொடுத்துள்ள வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தை மட்டுமே மையமாக வைத்து அமைந்துள்ளது. வினாயக் டி. சாவர்க்கருக்கெதிரான அப்ரூவரின் கூற்றே அரசுத் தரப்பு விளக்கத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அப்ரூவர் கூறும் நிகழ்வுகளின் இடைத்தொடர்ச்சிக்கு செல்வி ஷாந்தாபாய் பி. மோடக், அய்தப்பா கே. கோடியான் ஆகிய இருவரின் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நீதிமன்றம் அந்த இருவரையும் அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை.
“சாவர்க்கரின் இல்லத்தில் முதல் தளத்தில் நாதுராம் வி. கோட்சேவுக்கும், நாராயண் டி. ஆப்தேவுக்கும் இடையில் என்ன உரையாடல் நடைபெற்றது, அவ்விருவருக்கும், சாவர்க்கருக்குமிடையே என்ன உரையாடல் நடைபெற்றது என்பது குறித்த எந்த விவரமும் வழக்குப் பதிவில் இல்லை. ஆதலால் சாவர்க்கர் அப்ரூவர் முன்னிலையில் கோட்சேயிடமும், ஆப்தேவிடமும் (சென்று வாருங்கள், வென்று வாருங்கள் என்று) வாழ்த்துக் கூறியது மகாத்மா காந்தியின் படுகொலை சம்பந்தப்பட்டதுதான் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

“ஆதலால் அப்ரூவரின் கூற்றை வைத்து சாவர்க்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது உறுதியில்லாததாக ஆகிறது.”

ஆக, அப்ரூவராக மாறிய பாட்கே உண்மையான ஒரு சாட்சிதான் என்று நீதிபதி ஒப்புக்கொண்டாலும், சாவர்க்கர் சம்பந்தப்பட்டு அவர் கூறிய நிகழ்வுகள் ஒப்புறுதிப்படுத்தப்படாததால் (uncorroborated), அதன் தொடர்ச்சி உறுதிப்படுத்தப்படாததால் சாவர்க்கருக்கு தண்டனை அளிப்பது “பாதுகாப்பற்றது” என்று நீதிபதி கருதுகிறார்.

ஆனால், ஏழு பக்கங்கள் கழித்து, அடுத்த அத்தியாயத்தில் (XXV), பாட்கே குறித்து நீதிபதி கூறிய கருத்துகளுக்கு அவரே முரண்படுகிறார். ஆதாரச் சட்டத்தின் அடிப்படையில் சாவர்க்கரை சிறைக்கு அனுப்புவது “பாதுகாப்பற்றது” என்றுதான் நீதிபதி கூறியுள்ளார். ஆனால் சாவர்க்கரின் பங்கு குறித்து நீதிபதி இவ்வாறு கூறுகிறார்:

“வினாயக் டி. சாவர்க்கர் அவரது வாக்குமூலத்தில் இந்தச் ‘சதி’யில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுகிறார். தனக்கு கோட்சே, ஆப்தே ஆகியோர் மேல் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்றும் கூறுகிறார். மேலே குறிப்பிடப்பட்டது போல் அரசுத்தரப்பு வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக குறிப்பிடப்பட்டது போல் அப்ரூவரின் கூற்றை மட்டுமே வைத்து சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது பாதுகாப்பற்றது. ஆதலால் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்று கருதுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை.”

இந்த இறுதி வாக்கியம் தீர்ப்பின் இடைக்கூற்று மட்டுமே. இதற்கு சட்டரீதியாக எந்த மதிப்பும் இல்லை. அப்ரூவர் பாட்கேயின் வாக்குமூலத்தில் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்ரூவரின் கூற்றில் நம்பகத்தன்மைக்கு எந்தக் குறைவுமில்லை. ஆனால் ஒப்புறுதிப்பாடு (corroboration) குறைபாடு மட்டுமே உள்ளது.

ஆதாரம் ஒப்புறுதிப்படுத்தப்பட்டது, ஆனால் மிகத் தாமதமாக!

சாவர்க்கரின் மரணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவரது உதவியாளர்கள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷன் முன் காந்திப் படுகொலை குறித்து பேசினார்கள். அப்பொழுது அப்ரூவர் பாட்கேவின் கூற்றுகளுக்கு போதுமான அளவு ஒப்புறுதிப்பாட்டைக் கொடுத்தார்கள்.

நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷனின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “1948 மார்ச் 4ம் தேதி பாம்பே போலீசில் பதிவு செய்யப்பட்டபடி, சாவர்க்கரின் மெய்க்காப்பாளரான அப்பா ராம்சந்த்ர காசரின் வாக்குமூலம் இவ்வாறு கூறுகிறது: 1946லேயே ஆப்தேவும், கோட்சேவும் சாவர்க்கரை அடிக்கடி சந்திக்க வருவர். கர்க்கரேயும் சில நேரங்களில் சாவர்க்கரைச் சந்திக்க வருவார். 1947 ஆகஸ்ட் மாதம் சாவர்க்கர் ஒரு கூட்டம் சம்பந்தமாக பூனா சென்றிருந்தபொழுது கோட்சேயும், ஆப்தேயும் அவர் கூடவே எப்பொழுதும் இருந்தனர். அவர்கள் சாவர்க்கருடன் ஹிந்து மகாசபாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். தனக்கு வயதாகிக்கொண்டு வருவதாகவும், அவர்கள்தான் இந்தப் பணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சாவர்க்கர் ஆப்தேவிடமும், கோட்சேயிடமும் கூறினார். 1947 ஆகஸ்ட் 5 அல்லது 6ம் தேதி, டெல்லியில் அனைத்திந்திய ஹிந்து மாநாடு நடைபெற்றது. அதற்கு சாவர்க்கரும், கோட்சேயும், ஆப்தேவும் விமானத்தில் சென்றனர். அதேபோல் அங்கிருந்து பாம்பேக்கு ஒன்றாகவே விமானத்தில் திரும்பினர். 1948 ஜனவரி 13 அல்லது 14 அன்று, கர்க்கரே ஒரு பஞ்சாபி இளைஞனோடு சாவர்க்கரிடம் வந்தார். அவர்கள் சாவர்க்கரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேட்டி கண்டனர். அதேபோல் 15 அல்லது 16ம் தேதி, ஆப்தேவும், கோட்சேவும் இரவு 9.30 மணியளவில் சாவர்க்கரைப் பேட்டி கண்டனர். அதற்கு ஒரு வாரம் கழித்து, 23 அல்லது 24 தேதியாக இருக்கலாம், ஆப்தேவும், கோட்சேவும் மீண்டும் சாவர்க்கரைச் சந்திக்க வந்தனர்.காலை 10 முதல் 10.30 மணியளவில் அவருடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.”

இப்படிப் போகிறது அந்த அறிக்கை.

ஆக, சாவர்க்கர் காந்திப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதுது முழு முதல் உண்மை. வழக்கு நடந்த நேரத்தில் அப்ரூவரின் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கருதியதால் சாவர்க்கர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதற்குப் பின்னால் வந்த அனைத்து ஆதாரப்பூர்வ தகவல்களும் காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக்கு முழு பங்கிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இதனை உணர்ந்து நாட்டையே களங்கப்படுத்தும் விதமாக பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் சாவர்க்கருக்கு வைத்த சிலை அகற்றப்படுமா?

நன்றி : Frontline
தமிழில் (சுருக்கம்) : MSAH

விடியல் வெள்ளி  ஏப்ரல் 2013

Wednesday, 5 March 2014

திருக்குர்ஆனோடு நமக்கு என்ன தொடர்பு?


திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம். அதன் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளே நிரம்பியிருக்கின்றன. வானவர் கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இது அருளப்பட்டது.

நாம் எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்லவிருக்கிறோம் என்பததைத் திருக்குர்ஆன் நமக்குக் கூறுகிறது. மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்பதையும் அது நமக்குக் கூறுகிறது.

அது நேரான வழியைக் காட்டுகிறது. அந்த வழி நம்மை அழிவில்லாத சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்கிறது. அதே போல் அது நரகத்தினுடைய பாதைகளையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றது.

அது தனி மனிதனுக்கும் ஒழுக்க விதிகளைக் கற்றுத் தருகிறது. ஒரு அரசுக்கும் ஒழுக்க விதிகளைக் கற்றுத் தருகிறது. அது ஷரீஅத் சட்டங்களை நமக்கு வழங்குகிறது.

திருக்குர்ஆன் நமது இதயத்தோடும் மூளையோடும் பேசுகிறது. அது கல்வி புகட்டுகின்றது, வழிகாட்டுகின்றது, காயங்களைக் குணப்படுத்துகின்றது. அது நமக்கு வழியை மட்டும் காட்டவில்லை. அந்த வழியைப் பின்பற்றுவதற்கான தூண்டுதலையும், ஆற்றலையும் தருகின்றது.

அதனை வாழ்க்கை வழிகாட்டியாய் எடுத்துக் கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல முடியாது. அதனை அலட்சியப்படுத்திய யாரும் நிரந்தர வெற்றியை ஈட்ட முடியாது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள்தான் திருக்குர்ஆனைப் பின்பற்றிய முதல் கூட்டம். மிகவும் கீழான நிலையிலிருந்து அவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு மாறினார்கள்.

இறையச்சத்திற்கும், பக்திக்கும் உதாரணப் புருஷர்களாகத் திகழ்ந்த அவர்கள், எந்தச் சமூகத்தாலும் ஒப்பிட முடியா உயரத்தை எட்டினார்கள்.

அவர்கள் ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்கள். அங்கே நீதி, நியாயம், நல்லவையே நிரம்பியிருந்தன.

“ஆனால் அதற்குப் பிறகு அவர்களுடைய வாரிசுகள் வந்தார்கள். அவர்கள் திருக்குர்ஆனை விட்டும் வெகு தூரம் விலகிச் சென்று விட்டார்கள்.” - இப்படிக் கூறுகிறார் அஷ்செய்க் யூசுஃப் அல் கர்ளாவி தனது “திருக்குர்ஆனோடு நாம் எப்படி தொடர்பு வைத்திருக்க வேண்டும்?” என்ற நூலில். மேலும் அந்நூலில் அவர் குறிப்பிடுகிறார்:

“நபித்தோழர்களுக்குப் பின் வந்தவர்கள் திருக்குர்ஆனின் வார்த்தைகளைப் பாதுகாத்தார்கள். ஆனால் அதன் கட்டளைகளைப் புறக்கணித்தார்கள். அவர்கள் திருக்குர்ஆனை மோசமாக புரிந்து கொண்டார்கள். இறைவேதம் எதனை முதன்மைப்படுத்தச் சொன்னதோ அதனை அவர்கள் முதன்மைப்படுத்தவில்லை. எதனை அது இறுதியாக்கியதோ அதனை அவர்கள் இறுதியாக்கவில்லை. அது எதற்கு முக்கியத்துவம் கொடுத்ததோ அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது எதனை அலட்சியப்படுத்தியதோ அதனை அவர்கள் அலட்சியப்படுத்தவில்லை. இந்த உம்மத் அதன் பின்னடைவிலிருந்து, அழிவிலிருந்து, இழப்புகளிலிருந்து மீள வேண்டுமானால் திருக்குர்ஆனின் பக்கம் அது சாய்வதைத் தவிர வேறு வழியில்லை.

திருக்குர்ஆனின் பக்கம் திரும்புவது என்பதற்கு கீழ்வரும் படிநிலைகள் தேவைப்படுகின்றன. திருக்குர்ஆனை நாம் அரபியில் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் நமது குழந்தைகளுக்கும் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நாம் அதனை மனனம் செய்ய வேண்டும். நாம் அதனைத் தொடர்ந்து ஓத வேண்டும். திருக்குர்ஆன் ஓதப்படாமல் ஒரு நாள் கூட கழியக்கூடாது. நாம் அது தரும் செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். அது இடும் கட்டளைக்கேற்ப நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த மனித குலத்தையும் இதன் பக்கம் அழைக்க வேண்டும்.

திருக்குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதுதான். ஆனால் ஒருவர் அதனை நேர்மையாக உண்மையாக அணுக வேண்டும். முறையாக அணுக வேண்டும்.

திருக்குர்ஆனை விளக்குவதற்கும், அது பற்றி விரிவுரை ஆற்றுவதற்கும் சில திறமைகள் தேவைப்படுகின்றன.

முதலாவதாக, அரபியில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும். அதன் வார்த்தை அமைப்புகள், இலக்கணம் போன்றவற்றை நன்கு கற்றிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, திருக்குர்ஆனின் வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக, ஹதீஸ்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். திருக்குர்ஆனை விளக்குவதே இறைத்தூதரின் பணியாக இருந்தது. ஆதராப்பூர்வமான ஹதீஸ் ஒரு வசனத்திற்கு விளக்கமளித்தால், அதற்கு மாற்றமான விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

நான்காவதாக, நபித்தோழர்களால் திருக்குர்ஆனுக்குக் கூறப்பட்ட கருத்துரைகளை அறிந்திருக்க வேண்டும்.

ஐந்தாவதாக, இந்த உம்மத்தின் அறிஞர் பெருமக்கள் எழுதிய தஃப்ஸீரை அறிந்தவராக இருக்க வேண்டும்.

ஆறாவதாக, ஷரீஅத்தைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கக் வேண்டும்.

ஏழாவதாக, சிறந்த பயபக்தி உள்ளவராக, இறையச்சமுள்ளவராகத் திகழ வேண்டும். ”

திருக்குர்ஆன் அதனை உண்மையாகப் பின்பற்றாதவர்களுக்கு அதன் கதவை திறக்காது. திடீரென்று குர்ஆனைத் திறந்து அதற்கு பொருள் கூற முடியாது. இப்படிச் செய்பவர்கள் பின்வரும் எச்சரிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூரியுள்ளதாக செய்யிதினா அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: “திருக்குர்ஆனுக்குத் தன் மனம் போன போக்கில் விளக்கம் கூறுபவர் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.” (திர்மிதீ)

துரதிர்ஷ்டவசமாக, இன்று பெரும்பாலான மக்கள் இதனைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் திருக்குர்ஆன் ஆய்வுக்குழு என்று வைத்துக் கொண்டு திருக்குர்ஆனுக்கு விளக்கம் கூற ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அப்படி விளக்கம் கொடுப்பவர் நல்ல பேச்சாளராக இருந்தால், அவர் கேட்பவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறுவார். அதன் பின் அந்த விரிவுரையாளர்கள் எந்தவிதக் குறைந்தபட்சத் தகுதியும் இல்லாமல், திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஷரீஅத் பற்றி மணிக்கணக்கில் பேசுவர்.

இதைக் கேட்பவர்கள் பரவசப்பட்டுப் போவார்கள். அவர்களும் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு அவரவர் இஷ்டத்திற்கு கருத்துக் கூறுவார்.

நபித்தோழர்களுடைய நடைமுறைகளையும், இதனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய முரண்பாடுகள் நமக்குத் தெரிய வரும்.

நபித்தோழர்கள் திருக்குர்ஆனின் மொழியை மட்டும் அறிந்தவர்களல்ல. அதன் வசனங்கள் இறக்கப்பட்டபோது நேரடி சாட்சிகள் அவர்கள். அப்படியிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து திருக்குர்ஆனை ஒவ்வொரு வசனமாகக் கற்றுக் கொள்ளாமல் அவர்கள் அதனைப் பற்றி விளக்கம் கூறத் துணிந்ததில்லை.

அப்படிக் கூறிக் கொண்டாலும், திருக்குர்ஆனுக்கு எச்சரிக்கையோடு வார்த்தைகளைக் கையாளுவார்கள். செய்யிதினா அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “திருக்குர்ஆனைப் போதிய அறிவில்லாமல் நான் விளக்கம் கூறினால் எந்த மண் என்னைக்  காப்பாற்றும்? அந்த ஆகாயம் என்னைக் காப்பாற்றும்?”

அதேபோல் யஸீத் பின் யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்”: “நாங்கள் செய்யிதினா சயீத் பின் அல் முஸ்அப் (ரலி) அவர்களிடம் ஹலால், ஹராம் குறித்து வினவினோம். அவர்கள் அவற்றைப் பற்றி மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். ஆனால் ஏதாவது ஒரு திருக்குர்ஆன் வசனத்திற்கு தஃப்ஸீர் செய்யும்படி கூறினால், அது காதில் விழாத மாதிரி அமைதியாக இருந்து விடுவார்கள்.”

திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்வது நம் மீது உள்ள கடமை. ஆனால் அதற்கு முறையான வலி, நம்பத் தகுந்த தஃப்ஸீர் வழி படிப்பது அல்லது தகுதி வாய்ந்த ஒரு ஆசிரியர் மூலம் பயில்வது. இதுவே நம்மை ஈடேற்றமடையச் செய்யும்.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி, நவம்பர் 2002 (இம்பாக்ட் பக்கம்)

Sunday, 2 March 2014

நபிகளாரின் நற்பண்புகள்!


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்.” (முஅத்தா)

இறைவன் தன் இறைத்தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்துத் தந்தான். அதன்படி அவர்களை வாழச் செய்தான்.

ஒழுக்கத்தின் சிகரமாய் வாழ்ந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களை நமக்கு அழகிய முன்மாதிரியாய் ஆக்கித் தந்தான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடமே இருக்கின்றது. (அல்குர்ஆன் 33:27)

ஓர் இறைநம்பிக்கையாளன் ஒழுக்கமுள்ளவனாகத் திகழ வேண்டும். ஒழுக்கமில்லாதவன் சமுதாயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

ஒழுக்கமுள்ளவனைத்தான் மக்கள் நம்புவார்கள். அவன் சொல்வதைத்தான் காது கொடுத்துக் கேட்பார்கள். மனிதனுக்குக் கடமையாக்கப்பட்டுள்ள அனைத்து வணக்கங்களும் ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றன. தொழுகை, ஜக்காத், நோன்பு, ஹஜ் போன்ற அனைத்தும் ஒழுக்கத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன.

“விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்” (அல்குர்ஆன் 9:119) என்று அல்லாஹ் கூறுவதன் மூலம் ஒழுக்கம் இறைநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது என்பதை நாம் உணரலாம். ஆக, நல்ல ஒழுக்கத்தையும், இறைவணக்கத்தையும், இறைநம்பிக்கையையும் பிரிக்க முடியாது. அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம், “எந்த முஸ்லிமின் நம்பிக்கை முழுமையானது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “யாரிடம் சிறந்த ஒழுக்கப் பண்புகள் இருக்கின்றவோ அவரே” என்று பதில் பகர்ந்தார்கள். (தப்ரானி)

இன்னொரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நியாயத் தீர்ப்பு நாளில் ஒரு முஃமினின் தராசில் சிறந்த ஒழுக்கத்தை விட கனமானது எதுவும் இருக்கப் போவதில்லை. அல்லாஹ் ஆபாசமாகவும், கடினமாகவும் பேசுகின்றவனை வெறுக்கின்றான். நல்ல ஒழுக்கத்தை உடைய ஒருவர், தொழுகை, நோன்பு ஆகியவற்றை உடையவரது நிலைக்கு வந்து விடுகின்றார்.” (இப்னு அஹ்மத்)

இதன் அடிப்படையிலேயே அண்ணலாரின் பண்புகளும் அமைந்திருந்தன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை. யாரிடமும் கடினமாக நடந்ததில்லை. தனக்குப் பணிவிடை செய்யும் தோழர்களிடம் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சொற்களை உதிர்த்ததில்லை.

நபிகளாரைக் கண்ட எவரும் அவர்களின் கரம் பற்றி ஸலாம் கொடுத்தால் அவர் தன் கரத்தை எடுக்கும் வரை நபிகளார் தங்கள் கைகளை விலக்கிக் கொண்டதில்லை.

மற்றவர் தனது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் வரை நபிகளார் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை.

சம்மணமிட்டு அமர்ந்தால் அவர்களது கால்கள் மற்றவர்களின் கால்களை விட அதிகமாக நீண்டதில்லை.

நபிகளார் தங்களது கரங்களால் யாரையும் அறைந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் வஞ்சம் தீர்த்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் ஒரு போதும் சும்மா விட்டதில்லை.

எப்பொழுதும் இன்முகத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்தால் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள்.

கஞ்சத்தனம் கிஞ்சிற்றும் அவர்களிடம் இருந்ததில்லை. எப்பொழுதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். நேர்மையானவர்கள். தைரியமானவர்கள்.

மதீனாவில் அனைவரும் ஆழ்துயிலில் இருந்த இரவு நேரம். எங்கும் அமைதி. திடீரென்று பேரிடி போல் ஒரு சப்தம். என்ன ஏதென்று புரியாமல் அலறிப் புடைத்துக் கொண்டு மதீனத்துவாசிகள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளி வந்தார்கள். ஆனால் சப்தம் வந்த திசையிலிருந்து நபிகளார் குதிரையில் வந்து கொண்டிருந்தார்கள். “மக்களே கவலைப்பட வேண்டாம். ஒன்றும் இல்லை” என அனைவரையும் தங்கள் இல்லம் திரும்பிடச் செய்தார்கள்.

இப்படி அனைவருக்கும் முன்பாகச் செல்வதில் அசாத்திய தைரியம். போர்க்களத்தில் எதிரிகளோடு நெருக்கமாக நிற்பது நபிகளார்தான்.

கேட்டது எதையும் இல்லை என்று அவர்கள் சொன்னதில்லை. இருந்தால் கொடுப்பார்கள். இல்லையெனில் மனநிறைவோடு கேட்டவர் திரும்பிடுமாறு செய்வார்கள்.

எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம்பெருமானார் சிரிப்பார்கள். தோழர்களோடு மிருதுவாகப் பேசுவார்கள். தாரளாமாக கலந்து பழகுவார்கள்.

குழந்தைகளோடு கனிவுடன் பேசுவார்கள். அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். காதுகளில் ரகசியமாக யாரும் பேசினால், அவர் வாயை எடுக்கும் வரை தனது காதை எடுக்க மாட்டார்கள்.

யாரிடமும் முதன் முதலில் ஸலாம் எனும் முகமன் கூறுவது நபி பெருமானார் (ஸல்) அவர்களாகத்தான் இருக்கும்.

அண்ணலார் அவர்களை யார் காண வந்தாலும் தங்களது மேலாடையை விரித்து அதில் அவரை அமரச் செய்வார்கள்.

தோழர்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் அழகிய பெயர் சொல்லி அழைப்பார்கள். யாராவது அவர்களிடம் பேசினால் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்பார்கள். இடைமறிக்க மாட்டார்கள்.

விருந்தினர்களுக்கு நபிகளாரே எழுந்து உணவு பரிமாறுவார்கள். அண்ணலார் அவர்கள் வரும்போது தோழர்கள் எழுந்து நிற்பதைத் தடுத்தார்கள்.

யாரிடமும் அவசியமின்றி பேசமாட்டார்கள். குறுநகையே அவர்களது சிரிப்பு. நடக்கும்போது அவர்களது காலடிகள் நிதானமாக இருக்கும். வேகமோ, நடுக்கமா இருக்காது.

பேச்சுகள் நிதானமாக இருக்கும். அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பெருமானார் (ஸல்) அவர்களின் பேச்சுகள் எவ்வளவு நிதானமாக இருந்தன என்றால் ஒருவர் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை எண்ணிட விரும்பினால் தாராளமாக எண்ணி விடலாம்.”

நறுமணத்தை விரும்பினார்கள். அதிக நேரங்களில் நறுமணத்தோடு இருந்தார்கள். ஆடம்பரத்தை வெறுத்தார்கள். எளிய வாழ்க்கையை விரும்பினார்கள்.

கோழைத்தனமில்லாமல் வாழ்ந்து காட்டினார்கள். கோழைத்தனத்தை விட்டும் பாதுகாத்தருளும்படி பிரார்த்தித்தார்கள். அவ்வாறு பிரார்த்திக்கும்படி நமக்கும் கற்றுத் தந்தார்கள்.

இவ்வளவு நல்ல பண்புகளைக் கொண்டிருந்ததனால்தான் அவர்கள் இவ்வுலகில் வெற்றி வாகை சூடினார்கள். பூமி முழுவதும் அல்லாஹ்வின் நாமம் ஒலிக்கச் செய்தார்கள்.

அண்ணலாரது நபித்தோழர்கள் புடம் போட்ட தங்கங்களாக மின்னினார்கள். அல்லாஹ்வின் ஆட்சியை அகிலமெங்கும் நிலை நாட்டினார்கள்.

இந்தப் பண்புகளைக் கொண்ட கொள்கைக் கோமேதகங்களாக நாம் திகழ்வோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

MSAH

விடியல் வெள்ளி  செப்டம்பர் 2002 (இம்பாக்ட் பக்கம்)