Sunday 2 March 2014

நபிகளாரின் நற்பண்புகள்!


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்.” (முஅத்தா)

இறைவன் தன் இறைத்தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்துத் தந்தான். அதன்படி அவர்களை வாழச் செய்தான்.

ஒழுக்கத்தின் சிகரமாய் வாழ்ந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களை நமக்கு அழகிய முன்மாதிரியாய் ஆக்கித் தந்தான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடமே இருக்கின்றது. (அல்குர்ஆன் 33:27)

ஓர் இறைநம்பிக்கையாளன் ஒழுக்கமுள்ளவனாகத் திகழ வேண்டும். ஒழுக்கமில்லாதவன் சமுதாயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

ஒழுக்கமுள்ளவனைத்தான் மக்கள் நம்புவார்கள். அவன் சொல்வதைத்தான் காது கொடுத்துக் கேட்பார்கள். மனிதனுக்குக் கடமையாக்கப்பட்டுள்ள அனைத்து வணக்கங்களும் ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றன. தொழுகை, ஜக்காத், நோன்பு, ஹஜ் போன்ற அனைத்தும் ஒழுக்கத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன.

“விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்” (அல்குர்ஆன் 9:119) என்று அல்லாஹ் கூறுவதன் மூலம் ஒழுக்கம் இறைநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது என்பதை நாம் உணரலாம். ஆக, நல்ல ஒழுக்கத்தையும், இறைவணக்கத்தையும், இறைநம்பிக்கையையும் பிரிக்க முடியாது. அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம், “எந்த முஸ்லிமின் நம்பிக்கை முழுமையானது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “யாரிடம் சிறந்த ஒழுக்கப் பண்புகள் இருக்கின்றவோ அவரே” என்று பதில் பகர்ந்தார்கள். (தப்ரானி)

இன்னொரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நியாயத் தீர்ப்பு நாளில் ஒரு முஃமினின் தராசில் சிறந்த ஒழுக்கத்தை விட கனமானது எதுவும் இருக்கப் போவதில்லை. அல்லாஹ் ஆபாசமாகவும், கடினமாகவும் பேசுகின்றவனை வெறுக்கின்றான். நல்ல ஒழுக்கத்தை உடைய ஒருவர், தொழுகை, நோன்பு ஆகியவற்றை உடையவரது நிலைக்கு வந்து விடுகின்றார்.” (இப்னு அஹ்மத்)

இதன் அடிப்படையிலேயே அண்ணலாரின் பண்புகளும் அமைந்திருந்தன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை. யாரிடமும் கடினமாக நடந்ததில்லை. தனக்குப் பணிவிடை செய்யும் தோழர்களிடம் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சொற்களை உதிர்த்ததில்லை.

நபிகளாரைக் கண்ட எவரும் அவர்களின் கரம் பற்றி ஸலாம் கொடுத்தால் அவர் தன் கரத்தை எடுக்கும் வரை நபிகளார் தங்கள் கைகளை விலக்கிக் கொண்டதில்லை.

மற்றவர் தனது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் வரை நபிகளார் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை.

சம்மணமிட்டு அமர்ந்தால் அவர்களது கால்கள் மற்றவர்களின் கால்களை விட அதிகமாக நீண்டதில்லை.

நபிகளார் தங்களது கரங்களால் யாரையும் அறைந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் வஞ்சம் தீர்த்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் ஒரு போதும் சும்மா விட்டதில்லை.

எப்பொழுதும் இன்முகத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்தால் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள்.

கஞ்சத்தனம் கிஞ்சிற்றும் அவர்களிடம் இருந்ததில்லை. எப்பொழுதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். நேர்மையானவர்கள். தைரியமானவர்கள்.

மதீனாவில் அனைவரும் ஆழ்துயிலில் இருந்த இரவு நேரம். எங்கும் அமைதி. திடீரென்று பேரிடி போல் ஒரு சப்தம். என்ன ஏதென்று புரியாமல் அலறிப் புடைத்துக் கொண்டு மதீனத்துவாசிகள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளி வந்தார்கள். ஆனால் சப்தம் வந்த திசையிலிருந்து நபிகளார் குதிரையில் வந்து கொண்டிருந்தார்கள். “மக்களே கவலைப்பட வேண்டாம். ஒன்றும் இல்லை” என அனைவரையும் தங்கள் இல்லம் திரும்பிடச் செய்தார்கள்.

இப்படி அனைவருக்கும் முன்பாகச் செல்வதில் அசாத்திய தைரியம். போர்க்களத்தில் எதிரிகளோடு நெருக்கமாக நிற்பது நபிகளார்தான்.

கேட்டது எதையும் இல்லை என்று அவர்கள் சொன்னதில்லை. இருந்தால் கொடுப்பார்கள். இல்லையெனில் மனநிறைவோடு கேட்டவர் திரும்பிடுமாறு செய்வார்கள்.

எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம்பெருமானார் சிரிப்பார்கள். தோழர்களோடு மிருதுவாகப் பேசுவார்கள். தாரளாமாக கலந்து பழகுவார்கள்.

குழந்தைகளோடு கனிவுடன் பேசுவார்கள். அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். காதுகளில் ரகசியமாக யாரும் பேசினால், அவர் வாயை எடுக்கும் வரை தனது காதை எடுக்க மாட்டார்கள்.

யாரிடமும் முதன் முதலில் ஸலாம் எனும் முகமன் கூறுவது நபி பெருமானார் (ஸல்) அவர்களாகத்தான் இருக்கும்.

அண்ணலார் அவர்களை யார் காண வந்தாலும் தங்களது மேலாடையை விரித்து அதில் அவரை அமரச் செய்வார்கள்.

தோழர்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் அழகிய பெயர் சொல்லி அழைப்பார்கள். யாராவது அவர்களிடம் பேசினால் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்பார்கள். இடைமறிக்க மாட்டார்கள்.

விருந்தினர்களுக்கு நபிகளாரே எழுந்து உணவு பரிமாறுவார்கள். அண்ணலார் அவர்கள் வரும்போது தோழர்கள் எழுந்து நிற்பதைத் தடுத்தார்கள்.

யாரிடமும் அவசியமின்றி பேசமாட்டார்கள். குறுநகையே அவர்களது சிரிப்பு. நடக்கும்போது அவர்களது காலடிகள் நிதானமாக இருக்கும். வேகமோ, நடுக்கமா இருக்காது.

பேச்சுகள் நிதானமாக இருக்கும். அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பெருமானார் (ஸல்) அவர்களின் பேச்சுகள் எவ்வளவு நிதானமாக இருந்தன என்றால் ஒருவர் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை எண்ணிட விரும்பினால் தாராளமாக எண்ணி விடலாம்.”

நறுமணத்தை விரும்பினார்கள். அதிக நேரங்களில் நறுமணத்தோடு இருந்தார்கள். ஆடம்பரத்தை வெறுத்தார்கள். எளிய வாழ்க்கையை விரும்பினார்கள்.

கோழைத்தனமில்லாமல் வாழ்ந்து காட்டினார்கள். கோழைத்தனத்தை விட்டும் பாதுகாத்தருளும்படி பிரார்த்தித்தார்கள். அவ்வாறு பிரார்த்திக்கும்படி நமக்கும் கற்றுத் தந்தார்கள்.

இவ்வளவு நல்ல பண்புகளைக் கொண்டிருந்ததனால்தான் அவர்கள் இவ்வுலகில் வெற்றி வாகை சூடினார்கள். பூமி முழுவதும் அல்லாஹ்வின் நாமம் ஒலிக்கச் செய்தார்கள்.

அண்ணலாரது நபித்தோழர்கள் புடம் போட்ட தங்கங்களாக மின்னினார்கள். அல்லாஹ்வின் ஆட்சியை அகிலமெங்கும் நிலை நாட்டினார்கள்.

இந்தப் பண்புகளைக் கொண்ட கொள்கைக் கோமேதகங்களாக நாம் திகழ்வோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

MSAH

விடியல் வெள்ளி  செப்டம்பர் 2002 (இம்பாக்ட் பக்கம்)

No comments:

Post a Comment