Friday, 21 March 2014

துளிரில் சிறப்புடன் நடந்து முடிந்த உலக வரலாற்று புகழ் பெற்ற நூல்களின் ஆய்வு!

2014 மார்ச் 16 ஞாயிறு அன்று துளிர் அறக்கட்டளை அறிவுத்துளிர் குடும்ப நண்பர்கள் வட்டம், நிரஞ்சனம் மனநல மன்றம் ஆகிய துளிரின் உள் அமைப்புகளின் சார்பில் உலக வரலாற்றில் புகழ் பெற்ற 'ரோடு ட்டூ மக்கா' எனும் தலைப்பில் முஹம்மது அஸத் வெளியிட்ட ஆங்கில நூலை 'எனது பயணம்' எனும் தலைப்பில் எஸ்.ஓ. அபுல் ஹஸன் கலாமி தமிழில் மொழியாக்கம் செய்த நூலும், 'ரூட்ஸ்' எனும் தலைப்பில் அலெக்ஸ் ஹேலி எழுதிய 'வேர்கள்' எனும் தலைப்பில் எம்.எஸ். அப்துல் ஹமீது தமிழில் மொழியாக்கம் செய்த புதினமும் ஆய்வு செய்யப்பட்டது.


மாலை 5.15 மணிக்கு துளிர் சிற்றரங்கில் நூலாய்வு நிகழ்வு துவங்கியது. அல்ஹாஃபிழ் முஹம்மது இர்ஃ;பான் திருக்குர்ஆன் சூரா 'அபஸா' விலிருந்து சில வரிகளை ஓதி நிகழ்வுகளை துவக்கி வைத்தார். விழிப்புலன் இழந்த போதும் தனது ஆற்றலால் குர்ஆனை மனனம் செய்து இருக்கும் அவருக்கு துளிரின் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

துளிர் நிறுவனர் வழக்கறிஞர் ஹெச்.எம். அஹமது வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் 16 ஆண்டு காலம் அறிவுத்திறனற்ற இயலா நிலை குழந்தைகளுக்கு மறுவாழ்வு பணியாற்றி வரும் துளிர் பொது தளங்களிலும் மக்களுக்கு பயன் தரும் பல்வேறு கருத்தரங்குகள், இலக்கிய கூட்டங்கள், விவாத அரங்குகளையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த நூலாய்வு நிகழ்வும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். கொமைந்தார் இஸ்மாஈல் நூலாய்வு உரை நிகழ்த்தும் பேராசிரியர்களை அறிமுகம் செய்து பேசினார்.

"ROAD TO MAKKAH" - “எனது பயணம்” நூலாய்வு

முதலாவதாக "ROAD TO MAKKAH" - “எனது பயணம்” என்ற நூலாய்வு நிகழ்விற்கு ஹாஜி எஸ்.எம். உஜைர், ஹாஜி எஸ்.ஐ. தஸ்தகீர் ஆகியோர் தலைமை ஏற்றனர். ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஆங்கில துறை தலைவர் முனைவர் ஏ. நிஃமதுல்லாஹ் நூலாய்வு உரையாற்றினார்.


அவர் தனது உரையில் கூறியதாவது:

சிலுவைப் போருக்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அய்ரோப்பியக் கிறித்தவர்களுக்கு இஸ்லாத்தின் மீதான வெறுப்பு முழுக்க தொடங்கி விட்டது. சிலுவைப்போர் அந்த வெறுப்பை நிலைப்படுத்தி விட்டது. இன்று வரை அந்த வெறுப்பும், அருவருப்பும் இஸ்லாத்தின் மீதும், ஏகத்துவத்தின் மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் மனதில் தலைமுறை தலைமுறையாய் வேரூன்றி வருகிறது.

இந்த நிலையில்தான் பிரபல அய்ரோப்பிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லியோ போல்டுவிஸ் (முஹம்மது அஸத்) அவர்கள் அரபியப் பாலைவன நாடுகளில் நுழைகிறார். அந்த மக்களிடம் பழகுகிறார். அரபிய இஸ்லாமிய கலாச்சாரத்தை நுகர்கிறார். அவர்கள் வாழ்முறையைக் கற்கிறார். அவர்களோடு கலந்து போகிறார். இஸ்லாத்தில் கரைந்து போகிறார். புனித கஅபாவை வலம் வருகிறார். சவூதி மன்னர் முதல் சாதாரண அரபு ஒட்டக ஓட்டி வரை இசைவுடன் அவரோடு பழகுகின்றனர். மக்காவை நோக்கிய பயணம் இந்த அய்ரோப்பியரை இஸ்லாமியராக மட்டுமல்ல, அரபியாகவும் ஆக்கி விடுகிறது.

அன்றைய பாகிஸ்தானுக்குச் செல்கிறார். மாபெரும் கவிஞர் அல்லாமா இக்பாலோடு தொடர்பு ஏற்படுகிறது. புதிய பாகிஸ்தானின் அரசியல் ஆலோசகர் ஆகிறார். ஐ.நா. சபையில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற அமைச்சர் ஆகிறார்.

இவ்வளவுக்குப் பின் அமெரிக்கா செல்கிறார். இவர் தம் பழைய நண்பர்கள் இவரை விசித்திரமாகப் பார்க்கிறார்கள். அவர்களின் அறியாமையை உடைத்தெறிய முன் வருகிறார் அஸத். அதுவரை தன் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பாதிருந்த அவருக்கு இப்போது அது அவசியமாகி விட்டது.

ஆம்! இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும், அரபு பற்றியும் அவர்களுக்கு அறிவித்திடத் துடிக்கிறார்.

எழுதுகோலால் கற்பித்த அல்லாஹ்வின் பேருதவியோடு 'ரோடு ட்டூ மக்கா' என்கிற இந்தத் தன் வரலாற்றுக் காவியத்தை இயற்றி முடித்தார். இந்த நூல் அய்ரோப்பிய அறிவாளிகளின் மனத்தில் இஸ்லாம் பற்றிப் படர்ந்திருந்த அறியாமை இருளை முழுமையாக நீக்கியது.

ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அரபியர் பற்றியும், இஸ்லாமிய வாழ்நெறி பற்றியும் உலகம் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துச் செய்திகளின் நேரடி அனுபவ அறிவிப்பாகத் திகழ்கிறது இந்நூல்.

இந்நூலை ஒருவர் படித்து முடித்தால் இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும் அவரால் நிச்சயம் உண்மையை உய்த்து உணர முடியும்.
இதோ அந்த அரிய நூல் தமிழில்!

காயல்பட்டினம் சகோதரர் ஹாஜி அபுல் ஹஸன் கலாமி, அஸத் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார். பெருநூலாய் இருப்பினும் பொருளும், சுவையும் விடாமல் படித்து முடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நூலை வெளியிட்டுள்ள சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் பாராட்டுக்குரியவர்கள்.


இவ்வாறு தெரிவித்த முனைவர் நிஃமத்துல்லாஹ், இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் எளிதில் புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த நூல் என்றும், இந்த அரிய நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


அதன் பின் நூலை மொழியாக்கம் செய்த ஹாஜி எஸ்.ஒ. அபுல் ஹஸன் கலாமி ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் முஹம்மது அஸத் எழுதிய 'ரோடு ட்டூ மக்கா' நூலை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நூலை படித்த போது அது ஒருவரின் சுயசரிதையோ அல்லது வீர செயல்களின் வர்ணணையோ அல்ல என்றும், ஒர் ஐரோப்பியர் இஸ்லாத்தை தெரிதலையும் முஸ்லிம் சமூகத்தோடு அவர் இரண்டற இணைதலையும் விளக்கிடும் கதைதான் அது என்றும் எனக்கு புரிந்தது.

இந்த நூலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அந்த முயற்சிக்காக நான் பல வருடங்கள் செலவிட்டேன். 'ரோடு ட்டூ மக்கா' எனும் ஆங்கில நூலை பல முறை திரும்ப திரும்ப படித்தேன். நான் தமிழாக்கம் செய்த இந்த புத்தகத்திற்கு 'எனது பயணம்' என்று பெயர் வைத்தேன். அதனை சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் வெளியிட்டார்கள். 

இவ்வாறு கூறிய அவர், இந்த நூலாய்வு நிகழ்வினை ஏற்பாடு செய்து என்னை கவுரவப்படுத்திய துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிகழ்வில் துளிரின் அழைப்பினை ஏற்று எல்லா தரப்பினரும் கலந்து கொண்டமைக்கு பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். இந்த நூலாய்வு நிகழ்வில் மாற்று மத சகோதர சகோதரிகளின் பங்களிப்பும் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் தனது ஏற்புரையில் தெரிவித்தார்.

“ரூட்ஸ்” - “வேர்கள்” நூலாய்வு

இரண்டாவதாக “ரூட்ஸ்” - “வேர்கள்” எனும் நூலாய்வு நிகழ்விற்கு ஆர்.எஸ். லத்தீஃப், ஸதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா) எஸ்.இ. அமானுல்லாஹ் ஆகியோர் தலைமை ஏற்றனர்.


ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் முனைவர் ஏ. அஷ்ரஃப் அலீ தனது நூலாய்வு உரையில் கூறியதாவது:

மால்கம் எக்ஸ் இஸ்லாத்தை முன் வைத்து கறுப்பர்களின் விடுதலைக்காக போராடியவர். பல லட்சம் கறுப்பர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தவர்.

மால்கம் எக்ஸ் தன்னுடைய வேகமான இஸ்லாமியப் பிரச்சாரத்தின் போது 'கறுப்பர்களின் சொந்த நாடு அமெரிக்கா அல்ல. அஃது ஆப்பிரிக்கா!' என்ற வாதத்தை முன்வைத்தார். இதில் வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டினார். அவரது ஆதாரங்கள் நிறைந்த உரைகள் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்தன. இந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மைகளை சோதிக்க விரும்பினார் அலெக்ஸ் ஹேலி.

பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் எக்ஸ் கூறும் வரலாற்று இடங்களை தானே நேரில் சென்று கண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். அது அவரது சொந்த பூர்வீகத்தைக் கண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது. 

அதாவது அவரது 'வேரை' அவர் காணும் நல்ல முயற்சியாக முடிந்தது. தனது பயணத்தை, ஆராய்ச்சியை “ரூட்ஸ்” என்று புதினமாக வடித்தார். இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு “வேர்கள்” என்ற பேரில் காயல்பட்டினத்தை சேர்ந்த எம்.எஸ். அப்துல் ஹமீது மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். பெரும் பணி இது. சளைக்காமல் செய்திருக்கிறார். அல்லாஹ் அவருக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக! இந்த நூல் 'இலக்கியச்சோலை' வெளியீடாக வந்துள்ளது.

இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நூலாய்விற்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபை) இருக்கும் எம்.எஸ். அப்துல் ஹமீதை பார்வையாளர்கள் முன்னிலையில் வழக்கறிஞர் அஹமத் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது கருத்துக்களை கேட்டார். 

அப்போது அவர் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரியப்படுத்தினார்: 

அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்ற உண்மையையும் ஆப்ரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்ற ஆச்சரியமான உண்மையையும் நான் மால்கம் எக்ஸ் நூல் மூலமாக அறிந்தேன். அத்தோடு அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” என்ற புதினத்தைப் பற்றியும் முதன் முதலில் அந்நூல் மூலம் அறிந்தேன். அப்பொழுதே “ரூட்ஸ்” நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பிற்றை நாட்களில் அந்த நூலைப் படிக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் கனத்தது. ஆப்ரிக்க கறுப்பர்கள் அமெரிக்கர்களால் பட்ட அவலங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை. அந்த நாவலை படிக்கும் யாரையும் அது உலுக்காமல் விட்டதில்லை.

இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திடும் முயற்சியை துவங்கினேன். ஆங்கிலத்தில் 729 பக்கங்களைக் கொண்டது இந்நாவல். 120 அத்தியாயங்களைக் கொண்டது. அதனை அப்படியே மொழிபெயர்த்தால் தமிழில் 1000 பக்கங்களுக்கு மேல் வரும். அதனால் முடிந்தவரை சுருக்கி மொழிபெயர்த்திருக்கிறேன்.

இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறிய எம்.எஸ். அப்துல் ஹமீது, இந்நூலை நூலாய்விற்கு தெரிவு செய்த துளிர் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

(முன்னதாக இந்த நூலை நான்கு முறை படித்து முடித்து விட்ட காயல் எஸ்.இ. அமானுல்லாஹ் “வேர்கள்” குறித்த அறிமுகவுரையை நிகழ்த்தினார்.

மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ். அப்துல் ஹமீதுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசினை அவர் சார்பில் அவரின் மாமனார் MIW முஹம்மது இஸ்மாஈலும், அவரின் இளைய மகன் முஹம்மது ஸஜீதும் பெற்றுக்கொண்டனர்.)

நன்றி: http://www.kayalnews.com

No comments:

Post a Comment