Monday, 19 February 2018

துபையில் ‘துரோகி’ நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய ஏற்புரை

துரோகி நூல் வெளியீட்டு விழாவில் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

துரோகி எனது 9வது நூலாகும்.

சிறு வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் இருந்தது. சமுதாய மேம்பாட்டிற்காக எழுத்துலகில் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அப்பொழுதே பத்திரிகைகளுக்கு ஏதாவது எழுதியனுப்பிக்கொண்டிருப்பேன்.
அது முறைப்படுத்தப்பட்டது 1996ல்தான். 96களில் முறையான கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன். முதன் முதலாக எனது மொழிபெயர்ப்பு நூலான “வேர்கள்” வெளிவந்தவுடன்தான் எனது எழுத்துலகில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

“வேர்கள்” என்னை எழுத்துலகில் அடையாளப்படுத்தியும் காட்டியது. வேர்களை நினைவுகூரும்பொழுது மால்கம் எக்ஸை நினைவு கூராமல் இருக்க முடியாது. அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் தனது உச்சகட்ட பிரச்சாரப் பணியை மேற்கொண்டிருந்த சமயத்தில் அவரது பிரச்சாரங்களிலும், பல்கலைக்கழக விரிவுரைகளிலும் ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டிருப்பார்.

அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்டவர்கள். அப்படி கடத்திக்கொண்டு வரப்பட்டவர்கள் ஆப்ரிக்காவில் முஸ்லிம்களாக இருந்தவர்கள். அவர்கள் இங்கே கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டார்கள் என்ற கருத்தை அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

மால்கம் எக்ஸின் வரலாறை எழுத முனைந்த அலெக்ஸ் ஹேலி என்ற எழுத்தாளர் அவர் கூடவே வெகு காலம் பயணித்தவர். மிகவும் பரபரப்பாக இருந்த மால்கம் எக்ஸின் வரலாறை அவரது பிரயாணத்தின்பொழுது அவர் சொல்லச் சொல்ல அலெக்ஸ் ஹேலி எழுதுவார். இறுதியில் The Life of Malcolm X As Told To Alex Haley என்ற நூலும் வெளிவந்தது.

மால்கம் எக்ஸின் இந்தக் கூற்றை அலெக்ஸ் ஹேலி கேட்டார். மீண்டும் மீண்டும் கேட்டார். அவரும் ஒரு கறுப்பர்தான். ஆதலால் அவருக்கு அவருடைய மூதாதையரை அறியும் ஆவல் உண்டாயிற்று. தனது வேர்களைத் தேட ஆரம்பித்தார். குடும்பத்திலுள்ள மூத்தவர்களிடம் அவர்களது குடும்ப வரலாறைக் கேட்டார். நாட்டுப்புறப் பாடல்கள் போல் அவர்கள் குடும்ப வரலாறை காலாகாலமாகப் பாடி வந்தனர். அதனையெல்லாம் சேகரித்தார். பல நூல்நிலையங்கள் சென்று கறுப்பர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் படித்தார். சேகரித்தார். ஒன்றிரண்டல்ல, 12 வருடங்கள் இப்படியாக அவரது ஆராய்ச்சி தொடர்ந்தது.

12வது வருடத்தில் அவர் கண்டுபிடித்தது அவரது ஏழாவது தலைமுறை ஆப்ரிக்காவில் காம்பியா என்னும் சிறு நாட்டில் ஜுப்பூர் என்ற சிறு கிராமத்தில் முடிந்தது என்பதை. அந்த ஆராய்ச்சியை ஒரு வரலாற்றுப் புதினமாக உருவாக்க முடிவெடுத்தார்.

புதினத்தை ஜுப்பூரிலிருந்து ஆரம்பித்தார். ”ரூட்ஸ்” என்ற வராற்றுப் புதினம் பிறந்தது. இது வெளிவந்ததுதான் தாமதம் அமெரிக்கக் கறுப்பர்கள் தங்கள் பூர்வீகங்களை அறிந்து கொண்டனர். தங்களது பூர்வீக மார்க்கம் இஸ்லாம் என்பதை அறிந்து இஸ்லாத்தை இதயத்தோடு தழுவிக்கொண்டனர். படிக்கத் தெரியாத கறுப்பர்கள் கூட இதனை பைபிள் போன்று பட்டுத்துணி போர்த்தி பாதுகாத்து வந்தனர்.

அதனை தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொண்டு சேர்க்க இலக்கியச்சோலை பதிப்பகம் முடிவு செய்தது. மொழிபெயர்ப்புப் பணியை நான் செய்ய வேண்டும் என்றார்கள். ஆங்கிலத்தில் 700 பக்கங்களுக்கும் மேலுள்ள பெரிய நாவல் அது. மலைப்பாக இருந்தது. மலைப்பிலேயே காலம் கடந்தது. அதன் பின்தான் ‘யானையைத் தின்னும் முறை’யைக் கடைப்பிடித்து ஒரு பக்கத்தை ஒரு நாளில் மொழிபயர்த்தேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்து முடிந்தது. இது சுருக்கப் பதிப்புதான்.

படித்த எவரையும் பாதிக்காமல் விட்டதில்லை வேர்கள். சென்னையில் ஒரு நண்பர் வந்து சொன்னார். பிராமணத்திலிருந்து இஸ்லாம் தழுவிய தன் மனைவி வேர்களைப் படித்து விட்டு மூன்று நாட்கள் சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை என்று சொன்னார்.

அமெரிக்க துறைமுகங்களில் ஆப்ரிக்காவிலிருந்து வரும் கப்பல்களிலிருந்து இறக்கப்படும் சரக்குப் பொருட்களைப் பட்டியல் போடும்பொழுது சாமான்கள் ஒவ்வொன்றாக எழுதப்பட்டிருக்கும். அதில் கடைசியில் ஆண்கள் இத்தனை பேர், பெண்கள் இத்தனை பேர், குழந்தைகள் இத்தனை பேர் என்று சரக்கோடு சரக்காக எழுதப்பட்டிருக்கும். ஆம்! இரத்தமும், சதையும் கொண்ட மனிதர்கள்தாம் சரக்குகளாக மூட்டை போன்று கட்டி ஏற்றப்பட்டு அமெரிக்க சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.

ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அன்றைய கப்பற்பயணம் 4 மாதங்களுக்கு மேல் பிடிக்கும். இந்த நான்கு மாதங்களும் கப்பலின் அடித்தட்டில் விலங்குகள் போன்று கட்டி வைத்திருப்பார்கள் ஆப்ரிக்கர்களை. உதாரணத்திற்கு 500 பேர் உள்ளனர் என்றால் இறுதியில் அமெரிக்க துறைமுகங்களில் இறங்கும்பொழுது அதில் பாதி பேர்தான் இருப்பார்கள். மீதி பேர் கப்பலில் வைத்து இறந்திருப்பார்கள். இறந்தவர்களை கடலில் தூக்கி எறிந்து விட்டு உயிரோடு இருப்பவர்களை மட்டும் இங்கே தூக்கி வந்து விற்பார்கள்.

அந்த வரலாற்றைக் கண்டு பிடித்து எழுதினார் அலெக்ஸ் ஹேலி. ஒரு பெரும் கூட்டம் முஸ்லிம்கள் அடிமைகளாக, கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட வரலாறை தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பத்திலேயே அதனைத் தமிழில் கொண்டு வந்தோம்.

அதன் பின் வந்ததுதான் “சிறையில் எனது நாட்கள்”. இஃப்திகார் ஜிலானி என்ற கஷ்மீர் பத்திரிகையாளர் டெல்லியில் ஒன்றிரண்டு பிரபல பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் செய்தியாளராகப் பணியாற்றினார். திடீரென்று ஒரு நாள் நடுநிசி இரவு அவரது வீடு தட்டப்பட்டது. மத்திய உளவுத்துறையினரும், டெல்லி போலீசும் சேர்ந்து அவரது வீட்டை தடாலடியாக சோதனை போட்டனர். கம்ப்யூட்டரிலிருந்து சில தகவல்களை எடுத்தனர். அவரைப் பிடித்துக்கொண்டு சென்றனர். அதன் பிறகு அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட்டது 8 மாதங்கள் கழித்துதான்.

எவரும் தரவிறக்கம் செய்ய முடிகிற சில தகவல்களை அவரது கம்ப்யூட்டரிலிருந்து எடுத்துவிட்டு அவரை தேச விரோத வழக்கில் Official Secrets Act என்ற ரகசிய காப்புச் சட்டத்தில் “பயங்கரவாதி”யாக கைது செய்து திஹார் சிறையில் அடைத்து விட்டார்கள். அதன் பிறகு ஒவ்வொரு கணமும் அவருக்கு சித்திரவதைகளாகக் கழிந்தன.

அவர் செய்த ஒரே தவறு கஷ்மீரில் பிறந்ததுதான். கஷ்மீரில் ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலீ ஷா கீலானியுடைய மகளைத் திருமணம் செய்த மருமகன் வேறு. கேட்கவா வேண்டும்?

ஒரு வழியாக 8 மாதங்கள் கழித்து வெளியே வந்தவர் தனது சிறைக் கொடூர அனுபவங்களை நூலாக வடித்தார். அதுதான் My Days in Prison.

அது தமிழில் “சிறையில் எனது நாட்கள்” என்ற பெயரில் வெளி வந்தது. இதன் ஆங்கில மூலத்தில் அன்றைய ஹிந்து பத்திரிகையின் துணை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அற்புதமான முன்னுரை ஒன்று எழுதியிருப்பார்.

அடுத்து வந்ததுதான் “மனித இனத்திற்கெதிரான குற்றம்”. 2002ல் குஜராத்தில் நடந்தது முஸ்லிம் இனப்படுகொலை. அது நடந்து அங்கே எரிந்த நெருப்பின் புகை மறையும் முன்பே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களை ஒவ்வொருவராகக் கண்டு ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள் அவர்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பதிவு செய்து அரசுக்கும் சமர்ப்பித்தது ஒரு குழு. அதுதான் Concernd Citizens Tribunal. தமிழில் ‘அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம்” என்று அதனை அழைக்கலாம். அதன் தலைவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.

அவர்கள் அரசுக்கும், இந்த உலகுக்கும் அளித்த அறிக்கையின் பெயர்தான் Crime Against Humanity. மொத்தம் இரண்டு வால்யூம்கள். “மனித இனத்திற்கெதிரான குற்றம்” என்ற தலைப்பில் முதல் பாகத்தை நான் மொழிபெயர்த்தேன்.

இதனை 2008 ஜனவரி மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வைத்து வெளியிட்டோம். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சென்ன பாசப்பா அவர்கள் அதனை வெளியிட்டார்கள். அதனைப் படித்து விட்டு பலர் குஜராத்தில் கொடூரங்களை நேரடியாகக் கண்டது போன்று உணர்ந்ததாக கூறினர்.

துபையிலும் அதே 2008ல் அதன் வெளியீட்டு நிகழ்ச்சி வைத்திருந்தோம். அதனை வெளியிட்டு உரையாற்றியவர் நமது முஸ்லிம் லீக் முன்னாள் எம்பி அப்துர் ரஹ்மான் அவர்கள். அவர்கள் தங்கள் உரையில் இதனை ஒரே இரவில் முழுவதுமாக விழித்திருந்து படித்ததாகவும், படித்து முடித்த பின் தனது வீடு மரணம் ஏற்பட்ட வீடு போன்று தனக்கு இருந்ததாகவும் கூறி மிக உருக்கமாக உரையாற்றினார்.

ஏன் இப்படி இரத்த வாடை அடிக்கிற நூலாக எழுதுகிறீர்கள் என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். “அழகிய இலக்கியம் படைப்பதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள், இப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளான மக்களைக் குறித்துள்ள இலக்கியங்கள் வருவதுதான் காலத்தின் தேவையாக இருக்கிறது. அதனால்தான் அப்படிப்பட்ட நூற்களைத் தேர்ந்தெடுக்கின்றேன்” என்று சொன்னேன்.

இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவது, இஸ்லாத்தின் மேலுள்ள தவறான குற்றச்சாட்டுகளைக் களைவது, பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் என்று இப்படி தேர்ந்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அந்த வரிசையில் வந்ததுதான் துரோகி. இலக்கியச்சோலை மூலமாக நாங்கள் இதை தமிழில் கொண்டு வர விரும்புகிறோம் என்று சொன்னவுடன் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் அனுமதி தந்து விட்டார். அவருக்கு அவ்வளவு ஆர்வம் - குவாண்டனாமோ கொடுமைகள் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்று.

அமெரிக்க ஆங்கிலம் என்பதால் மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடினமாகவே இருந்தது. இரண்டாவது ஹோல்ட்புரூக்ஸ் அமெரிக்க இராணுவத்தில் பணி புரிந்ததால் அவர்களுக்குள் புழங்கும் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருப்பார். அதுவும் சுருக்கெழுத்து வேறு. உதாரணத்திற்கு SOP. அதாவது Standard Operating Procedures. இதே மாதிரி பல வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார். அதுவும், அவரது அமெரிக்க எழுத்து நடையும் மொழிபெயர்ப்புக்கு மிக்க சவாலாக இருந்தது.

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸின் தற்போதைய பெயர் முஸ்தஃபா அப்துல்லாஹ். தனது 19வது வயதில் 2003ம் வருட கோடை காலத்தில் அவர் குவாண்டனாமோ நுழைகிறார். இறைநம்பிக்கை இல்லை. குடிக்க வேண்டும், ராக் இசையில் மூழ்கி கூத்தாட வேண்டும், உடம்பு முழுவதும் பச்சை குத்த வேண்டும் - இதுதான் அன்றைய ஹோல்ட்புரூக்ஸ்.

அமெரிக்காவில் அரிஸோனாவில் வளரும் ஹோல்ட்புரூக்ஸின் பெற்றோர்கள் அவரது ஏழாவது வயதில் பிரிந்து போய் விடுகிறார்கள். அவரை வளர்ப்பது அவரது பாட்டனாரும், பாட்டியும்தான். பாட்டனாரும் முன்னாள் ஹிப்பி. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த ஹோல்ட்புரூக்ஸ் குடும்ப வறுமையைப் போக்க இராணுவத்தில் இணைகிறார்.

குவாண்டனாமோவுக்கு இன்னும் சிறிது காலத்திற்குள் அவர் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு வந்தவுடன் அவருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளை நூலில் விவரிக்கிறார். குவாண்டனாமோவில் காலெடுத்து வைக்கும் வரை அவருக்கு இஸ்லாம் குறித்து அ, ஆ கூட தெரியாது. ஆனால் ஆறே மாதங்களில் தலைகீழ் மாற்றம். 2003ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி, அஹமத் அர்ராஷித் முன்னிலையில் அந்த மாற்றம் நிகழ்ந்தது.

குவாண்டனாமோ சென்ற முதல் நாளிலிருந்து தன் மேலதிகாரிகளிடம் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். கடலையே பார்த்திராத 16 வயது முஸ்லிம் பையன் ஒருவனை குவாண்டனாமோவில் பார்த்த ஹோல்ட்புரூக்ஸுக்கு இவனுக்கும் பயங்கரவாதத்திற்கெதிரான போருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறார்.

குவாண்டனாமோவின் பயங்கரத்தை ஏற்படுத்தும் தனிமையையும், விரக்தியையும் போக்க சக வீரர்கள் குடியிலும், ஆபாசங்களிலும், விளையாட்டுகளிலும் மூழ்கியிருக்கும்பொழுது, அதே தனிமையையும், விரக்தியையும் தாண்டி இராணுவ வீரர்களின் திட்டுகளையும், ஏச்சுகளையும், பேச்சுகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் நேரிடும் சித்திரவதைகளையும் எவ்வாறு முஸ்லிம் சிறைவாசிகள் அமைதியாக புன்னகையுடள் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஹோல்ட்புரூக்ஸின் மண்டையில் புழு ஓடிக்கொண்டே இருந்தது.

அந்தப் புழு அவரைத் தூங்க விடவில்லை. ஒழுங்காக சாப்பிட விடவில்லை. இறுதியில் அதற்கு நிரந்தர தீர்வை - நிம்மதி இடத்தை அவர் அடையும் வரை அந்தப் புழுவின் குடைச்சல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

குவாண்டனாமோவை நேரில் கண்டவர்கள் ஹோல்ட்புரூக்ஸ் மாதிரி நிரந்தர பதிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

ஹாரிஸ் அஹமத், ஃபர்ஹான் ஹாரூன், வகார் ஸித்தீக்கி ஆகியோர் “டிப்டன் ட்ரியோ” என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் முஸ்லிம் மும்மூர்த்திகள். இரண்டு வருட குவாண்டனாமோ வாசத்திற்குப் பிறகு எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று வெளிவிடப்பட்டவர்கள். The Road To Guantanamo என்ற உண்மையும், சித்தரிப்பும் கலந்த படத்தில் இந்த மூன்று பேருமே நடித்துள்ளார்கள். Mat Whitecross, Michael Winterbottom ஆகியோர் இயக்கிய இந்தப் படம் 2006ம் ஆண்டு வெளியானது.

அதே போன்று இன்னொரு முக்கிய கைதியான அஹமத் அர்ராஷிதி ஐந்தரை வருடங்கள் குவாண்டனாமோவில் சிறைப்பட்டுவிட்டு, குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். மொராக்கோ நாட்டைச் சார்ந்த அவர் லண்டனில் ஒரு உணவு விடுதியில் சமையற்காரராக வேலை பார்த்து வந்தார்.

குவாண்டனாமோவிலிருந்து விடுதலையான பின்னர் 2013ம் ஆண்டு அவரும் தனது அனுபவங்களைக் கொண்டு ஒரு நூலை எழுதினார். அதன் பெயர் "The General: The ordinary man who challenged Guantanamo" <https://en.wikipedia.org/w/index.php?title=The_General:_The_ordinary_man_who_challenged_Guantanamo&action=edit&redlink=1>".

நமக்கு முன்னிருக்கும் கடமைகளையும், பொறுப்புகளையும் நோக்கும்பொழுது நான் செய்த பணிகள் ஒன்றுமே இல்லை. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது.

நான் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் நூல் - “இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்”. பெருமானார் ﷺ அவர்கள் மரணித்த பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்களின் காலத்திலும், பின்னர் தொடர்ந்து உமர் (ரலி) காலத்திலும் முஸ்லிம்கள் ஷாமுக்குப் படையெடுத்து அதனை வெற்றி கொண்ட வீர வரலாறை தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன்.

அரபி மூலம் : அல் இமாம் அல் வாகிதீ (ஃபத்ஹுஷ் ஷாம்)
ஆங்கிலத்தில் மொழியாக்கம் : மௌலானா சுலைமான் அல் கிந்தி

இந்த நூலும் நல்லபடியாக வெற்றி பெறவும், மரணம் வரை தொடர்ந்து சமுதாயத்திற்காக நல்ல பல படைப்புகளைத் தந்துகொண்டிருக்கவும், என்னாலான சமூகப் பணிகளைச் செய்துகொண்டிருக்கவும் அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகளே, உங்கள் முன் ஒரே ஒரு வேண்டுகோளை வைக்க ஆசைப்படுகிறேன். நம் நாட்டின் நிலையை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாடும், சமுதாயமும் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

ஃபாசிசம் என்ற கொடிய கரங்களால் இன்று நம் சமுதாயம் சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் காவி மயமாகி வருகிறது. முஸ்லிம்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். நாம் இங்கே நம் வாழ்வாதாரத்திற்காக வந்துள்ளோம். இருந்தாலும் நமக்கும் கடமைகள் இருக்கின்றன.

இது காலத்தின் கட்டாயம். இஸ்லாமும் இதனைத்தான் வேண்டுகிறது. வெறும் தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் என்பவை மட்டுமல்ல இஸ்லாம். சமூகப் பணிகள், சமுதாயத்திற்குத் தேவையான சேவைகளைச் செய்வது என்பது மிக முக்கிய கடமை. அதற்கு அல்லாஹ் அளப்பரிய நன்மைகளை அள்ளித் தருகிறான்.

எனது வேண்டுகோள் இதுதான். நம் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் பலப்பல திறமைகளைத் தந்துள்ளான். ஒருவருக்கு பேச்சுத் திறமை இருந்தால் ஒருவருக்கு எழுத்துத் திறமை இருக்கும், ஒருவரிடம் பொருளாதாரம் இருந்தால் ஒருவரிடம் நேரம் இருக்கும். ஒருவரிடம் செயல்படும் திறமை இருக்கும். நம்மிடம் உள்ள திறமைகளைப் பயன்படுத்தி அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து சமுதாயத்திற்கு நம் பங்களிப்பை வழங்கவேண்டும். அது எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்பொழுது சமுதாயத்திற்காக சிறு துரும்பைத் தூக்கிப் போடுவது கூட மிக்க அவசியமாகிறது. இன்ஷா அல்லாஹ் நமது சமுதாய மேம்பாட்டிற்காக நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்று கூறியவனாக எனது உரையை முடிக்கிறேன்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

வ ஆஃகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

“இடப்பெயர்ச்சி என்பது வளர்ச்சியல்ல என்பதை பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும்!” - வஸதா சாய்பாபா புதிய விடியலுக்கு அளித்த பேட்டி

மஹாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒன்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களுக்கு கடந்த மார்ச் 7ம் தேதி ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் 90% மாற்றுத் திறனாளியான பேரா. சாய்பாபாவுக்கு மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் என்ற யுஏபிஏ கொடூரச் சட்டத்தின் 13, 18, 20, 38, 39 ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி பிரிவின் கீழும் அந்த அமர்வு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

நமது புதிய விடியல் சிறப்பு செய்தியாளர் தன்வீர் இக்பால் பேரா. சாய்பாபா அவர்களின் மனைவி திருமதி வஸதா சாய்பாபா அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு:

பு.வி.: பேரா. சாய்பாபா அவர்களுக்கு கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு பற்றி என்ன கூறுகிறீர்கள்?

வஸதா: ஆயுள் தண்டனை என்பது அதிர்ச்சியை அளித்தது. முற்றிலும் எதிர்பாராதது. வழக்கு நடந்துகொண்டிருந்த பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞரால் சாய்பாபாவுக்கெதிராக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு ஆதாரத்தைக் கூட கொண்டு வர முடியவில்லை. மஹாராஷ்ட்ரா வரலாற்றிலேயே குற்றம் சுமத்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஆயுள் தண்டனையின் அத்தனை பிரிவுகளின் கீழும் தண்டனை அளிக்கப்படுவது இதுவே முதல் முறை.

நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 23 சாட்சிகளில் 22 பேர் போலீஸ்காரர்கள். மீதமுள்ள ஒரே ஒருவர் ஒரு நாவிதர். அந்த நாவிதரும் கூட போலீஸின் ஆளே. அதனை அவரே அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் தன்னை சாட்சி சொல்லும்படி போலீஸ்தான் வற்புறுத்தியது என்று கூறினார்.

2014ல் டெல்லி பல்கலைக்கழக வடக்கு வளாகத்திலுள்ள எங்கள் வீட்டில் காவல்துறையின் சோதனை நடந்தது. அப்பொழுது கணிணியின் நிலைவட்டு (ஹார்ட் டிஸ்க்) கைப்பற்றப்பட்டது. அது உட்பட சில மின்னணு ஆதாரங்களையே அதிகபட்ச ஆதாரங்களாகக் கொண்டு சாய்பாபாவுக்கு இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆதாரம் முத்திரை வைக்கப்படாததால் மிக எளிதாக அதில் மாற்றங்களைச் செய்யலாம். சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் பிரகாஷ் என்ற பெயரில் வேலை செய்தாராம். சாய்பாபா பிரகாஷ் என்ற பெயரில் வேலை செய்ததற்கு ஒரு ஆதாரம் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. மேல்முறையீட்டில் மேல் நீதிமன்றங்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பு.வி.: ஏன் இப்படிப்பட்ட வழக்கு சாய்பாபாவின் மேல் கட்சிரோலி நீதித்துறை எல்லைக்குள் தொடுக்கப்பட்டது?

வஸதா: முதலில் காவல்துறை 2013 செப்டம்பரில் எங்கள் வீட்டை சோதனையிட்டது. மஹாராஷ்ட்ராவில் அஹேரியில் திருடப்பட்ட பொருளைத் தேடியெடுப்பதுதான் அதன் நோக்கமாக இருந்தது. அது நடந்து 9 மாதங்களுக்குப் பிறகு சாய்பாபா கைது செய்யப்பட்டார். 2014ம் ஆண்டு மே 9ம் தேதி டெல்லி பல்கலைக்கழத்தில் ஒரு பரீட்சை மையத்திலிருந்து அவர் திரும்பிக்கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமான யுஏபிஏ சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி, பாம்பே உயர்நீதிமன்றம் நாக்பூர் சிறையில் மோசமாகிக்கொண்டு வரும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளின் அடிப்படையில் மூன்று மாத பிணை வழங்கியது.

பு.வி.: 2014ல் சாய்பாபா கைது செய்யப்பட்டதை ‘அது ஒரு கடத்தல்’ என்று சாய்பாபா வர்ணித்திருந்தார். அதனை விவரிக்க முடியுமா?

வஸதா: மே 9ம் தேதி தவுலத் ராம் கல்லூரியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மதிப்பீட்டு மையத்தின் தலைமைத் தேர்வு மேற்பார்வையாளராக சாய்பாபா நியமிக்கப்பட்டார். மதிய உணவு இடைவேளையில் தனது காரில் சாய்பாபா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பல்கலைக்கழக விளையட்டரங்கத்தின் அருகிலுள்ள வளைவில் திரும்பும்பொழுது திடீரென்று 45 முதல் 50 பேர் காருக்கு முன்பாக வந்தனர். காரை நிறுத்தினர். சில நொடிகளில், கார் ஓட்டுனரை ஒருவன் இழுத்து வெளியே தள்ளி விட்டு, காரினுள் அமர்ந்தான். சாலை வழிப்பறியாக இருக்கலாம் என்றுதான் சாய்பாபா எண்ணினார். ஆனால் அவர்கள் காரை சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். சாய்பாபாவை காரிலேயே இருக்கும்படி உத்தரவிட்ட அவர்கள் அவரது கைபேசியைப் பிடுங்கினர். தேர்வு வினாத் தாள்களையும் பிடுங்கினர். அதன்பிறகுதான் அவர்கள் 50 பேரும் காவல்துறை அதிகாரிகள் என்று சாய்பாபாவுக்குத் தெரிய வந்தது. அவர்கள் சாதாரண உடைகளில் வந்த மஹாராஷ்ட்ரா காவல்துறை, ஆந்திரா காவல்துறை, மத்திய உளவுத்துறை, சிறப்புப் பிரிவு காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள்.

சாய்பாபாவை ஒரு மேஜிஸ்திரேட்டின் முன்பு ஆஜர் படுத்தாமல், விசாரணைக்காக விண்ணப்பிக்காமல் அவர் நாக்பூருக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். சாய்பாபாவின் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்த பணியாளரின் அலைபேசி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை செல்லும்பொழுது சாய்பாபா எங்களைத் தொடர்பு கொண்டார்.

பு.வி.: சாய்பாபாவின் உடல்நிலை எப்படி உள்ளது? பிணையில் வெளிவரும் முன் சிறையில் எப்படி அவர் சமாளித்தார்?

வஸதா: 2014ல் அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரது இடது கையை அவரால் தூக்கவே முடியாத நிலையில் உள்ளார். நாக்பூருக்குச் செல்லும் வழியில் அவரது சக்கர நாற்காலி உடைந்து விட்டது. அப்பொழுது போலீஸ் கான்ஸ்டபிள்கள் மணல் மூட்டையை அள்ளுவது போல் அவரைத் தூக்கியிருக்கின்றனர். நாக்பூர் சிறையில் அவரது தசைகள் சிதிலமடைந்து வருவதைக் கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு தசைகளுக்கான நரம்பியல்-உடற்கூறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தனர். சிறையில் சாய்பாபாவுக்கு மேலைநாட்டுப் பாணியிலான கழிவறை கொடுக்கப்படவில்லை. காவலர்கள் சாய்பாபாவின் தோள்களைப் பிடித்துக்கொள்ள, அவர் இந்திய கழிவறையை மிகவும் சிரமப்பட்டு பயன்படுத்தினார். இது அவரது எலும்புகளைப் பிணைக்கும் தசைநார்களைப் பாதித்தது. நரம்புகளும் பாதிப்படைந்தன. அவை சிதிலமடையத் தொடங்கின. சாய்பாபாவின் தண்டுவடமும் சேதமடைந்தது. அவரது விலா எலும்புகள் நுரையீரலை உந்தித் தள்ள ஆரம்பித்தன. சாய்பாபாவுக்கு உடனடியாக பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

பு.வி.: அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் அவரது வேலை என்னவாயிற்று? உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? குடும்பச் செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

வஸதா: 2014ல் மஹாராஷ்ட்ரா கட்சிரோலி காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஆர்.எல்.ஏ. கல்லூரியிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். நாங்கள் மூன்று பேர் அவரைச் சார்ந்து வாழ்கிறோம். நான், சாய்பாபாவின் அம்மா, எங்கள் 19 வயதுடைய மகள் ஆகியோரே அந்த மூவர். சாய்பாபாவை பணியிடைநீக்கம் செய்த பின்னர், டெல்லி பல்கலைக்கழகம் எங்களை எங்கள் வடக்கு கட்டட வளாகத்திலிருந்த வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஆதலால் வேறு வழியில்லாமல் நாங்கள் அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். வழக்கு செலவுகளுக்காகவும், இன்னபிற அன்றாடச் செலவுகளுக்காகவும் சில நண்பர்கள் உதவி செய்கிறார்கள். நிறைய கடன்கள் உள்ளன. எங்களது முக்கிய வருமானம் என்பது சாய்பாபாவின் சம்பளமே. இப்பொழுது அவர் பணியிடைநீக்கத்தில் இருப்பதால் மூன்றில் ஒரு பகுதி சம்பளமே எங்களுக்குக் கிடைக்கிறது.

பு.வி.: எந்த நீதிமன்றத்திலாவது அவருக்கு குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளனவா?

வஸதா: இந்த வழக்கு தவிர்த்து வேறு எந்த வழக்கும் அவர் மீது இல்லை. அவர் ஒரு பேராசிரியர். அவர் கல்லூரியில் வகுப்பு எடுப்பவர். அநீதிக்கெதிராக அவர் ஜனநாயக வழியில் குரல் கொடுப்பார். ஆனால் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அசீமானந்தா போன்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆர்எஸ்எஸ்ஸுடன் பின்னிப் பிணைந்தவர்கள். ஆர்எஸ்எஸ் பாஜக மூலமாக ஒரு பதிலி அரசை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த அரசோ பெருநிறுவனங்களுக்குச் சாதகமான அரசு. தேசத்தின் கனிம வளங்களை இந்தப் பெருநிறுவனங்கள் சுரண்டுகின்றன.

சாய்பாபாவின் வழக்கை ஏதோ தனிப்பட்ட வழக்காக காண முடியாது. இது ஒரு தொடரின் எச்சமே. இது பினாயக் சிங் முதல் கோபாட் கண்டி வரை தொடர்கிறது. இதற்கு முன் பினாயக் சிங்கைக் கைது செய்தார்கள். அவர் ஒரு மருத்துவர். ஆதிவாசிகளுக்கு நடக்கும் மனிதஉரிமை மீறல்களுக்கெதிராக அவர் குரல் கொடுத்தார். அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்தார். அவரை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தினார்கள். கோபாட் கண்டி சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் உறுப்பினராக இருப்பதால் அவரை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்தார்கள்.

ஒரு புறம், தடை செய்யப்பட்ட அரசியல் நம்பிக்கைகளைக் கொண்ட தனிப்பட்டவர்களை குற்றமயப்படுத்துவதற்காக காட்டுமிராண்டித்தனமான சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு புறம், அரசின் கொள்கைகளுக்கெதிராக கேள்வி கேட்போரின் குரலை ஒடுக்குகிறார்கள். ஆப்பரேஷன் கிரீன் ஹன்ட் போன்றவை மூலமாக பழங்குடியினரின் மேல் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுப்பவர்களை வேட்டையாடுகிறார்கள். ஆதிவாசிகளை இடம் பெயரச் செய்கிறார்கள். இந்த அநீதிக்கெதிராக குரல் கொடுப்பவர்களை மாவோயிஸ்ட் என்கிறார்கள்.

பு.வி.: சாய்பாபா வழக்கில் வந்துள்ள தீர்ப்புக்கெதிராக மேல்முறையீடு செய்துள்ளீர்களா?

வஸதா: டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, சத்திகரைச் சார்ந்த மருத்துவர் பினாயக் சென் ஆகியோரின் வழக்குகளில் நமக்கு முன்னோடி உள்ளது. சாய்பாபா மீது குற்றஞ்சாட்டியது போன்றே தேசத்துரோகம் உட்பட பல குற்றச்சாட்டுகள் இந்த இருவரின் மீது சுமத்தப்பட்டன. ஆனால் உயர்நீதிமன்றங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். நாங்கள் நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். சாய்பாபா அனைத்து வழக்குகளிலிருந்தும் குற்றமற்றவராக விடுவிக்கப்படுவார் என்ற முழுமையான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பு.வி.: தற்போதைய நீதித்துறை பற்றிய தங்கள் கருத்து என்ன?

வஸதா: தற்பொழுது மக்களின் மனங்கள், சிந்தனைகள், பேச்சுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது. சாய்பாபாவின் வழக்கு மருத்துவர் பினாயக் சென்னின் வழக்கைப் போன்றதே. பினாயக் சென்னின் வழக்கிலும் காவல்துறை உறுதியான ஆதாரங்களைத் தர முடியாமல் தோற்றுப் போனது. மக்கள் விரோத கொள்கைகளை, அரசு இழைக்கும் அநீதிகளை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்களை நீதித்துறையைப் பயன்படுத்தி ஒடுக்கப் பார்க்கிறது. சாய்பாபா 90% இயலாமையில் உள்ளவர். இந்த நிலையில் உள்ளவரால் யாருக்கு என்ன கெடுதி செய்து விட முடியும்? மத்திய பாஜக அரசுக்கெதிராக தங்கள் குரல்களை உயர்த்துபவர்களைக் கண்டு அது அஞ்சுகிறது என்பது தெளிவு. ஆதலால் நீதித்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. பேரா. சாய்பாபா போன்ற அப்பாவி மக்களை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தி பொது மக்களின் அனுதாபத்தைப் பெற்று விடாதவாறு மீடியாவின் ஒரு பகுதியும் செயல்படுகிறது.

பு.வி.: சமூகத்திற்கும், தேசத்திற்கும் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

வஸதா: பெருநிறுவனங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைப்படி மக்களுக்கெதிரான, ஜனநாயகத்திற்கு முரணான கொள்கைகளைத் திணிப்பதில் மத்திய மாநில அரசுகள் நீதித்துறைக்கு அதிகமான அழுத்தங்கள் கொடுக்கின்றன. இந்த நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்க மக்களின் குரல்களை ஒடுக்குவதற்கு அரசுகள் முனைகின்றன. மத்திய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு நேரடியாகவே காய்களை நகர்த்துகின்றன.

நீதிமன்றத்தை கண்ணியப்படுத்தும் முகமாக, தனது மோசமாகி வரும் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் சாய்பாபா இத்தனை வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். ஒரு மனைவி என்ற அடிப்படையில் அவருக்காக நீதி வேண்டி உயர் நீதிமன்றங்களுக்குச் சென்று நான் போராடுவேன். நான் ஜனநாயகவாதிகள், மக்கள் அமைப்புகள், அறிவார்ந்தவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்து மக்களுக்கும் அரசின் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களைக் கண்டிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழில்: MSAH

புதிய விடியல்

Wednesday, 14 February 2018

“பேராசிரியர் பெருமானார் (ஸல்)” - நூலாய்வுரை
காயல் பட்டினத்தைச் சார்ந்த ஆலிமா சித்தி லரீஃபா அவர்கள் உம்மு நுமைரா என்ற புனைப் பெயரில் எழுதிய நூலே “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.

அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாகத் திகழ்பவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களே சூப்பர் ஹீரோ. எனவேதான் முஸ்லிம்கள் அண்ணலாரை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர்.

அகிலத்தாருக்கு அல்லாஹ்வின் அருள்மறையைப் போதிக்க வந்த அண்ணலார் அவர்கள் ஆசிரியராக மிளிர்ந்தார்கள் என்பதில் வியப்பில்லை. ஆனால் அனைத்துத் திறமைகளையும் கொண்ட, கற்றுத் தருதலின் அனைத்து முறைமைகளையும் அக்குவேறு ஆணிவேராக அறிந்திருந்த பேராசிரியராகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் நூல்தான் “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.

“அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஓர் ஆன்மீகத் தலைவராய், சிறந்த ஆட்சித் தலைவராய், வீரமும், விவேகமும் நிறைந்த போர்த் தளபதியாய், உற்ற தோழராய், அன்புக் கணவராய், ஆருயிர்த் தந்தையாய், கண்ணியமிகு மனிதராய் எனப் பல்வேறு பரிமாணங்களில் நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் நாமெல்லாம் அதிகம் அறிந்திராத சிறந்த ஆசிரியராய் அவர்களை உங்களிடம் அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கமாகும்” என்று நூலாசிரியர் எழுதிய முன்னுரையின் முதல் வாசகமே நூலின் நோக்கத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

“சுமார் பதினைந்து ஆண்டுகளாக ஓர் ஆசிரியையாக பணியாற்றிய வகையில், அண்ணலாரின் நடைமுறைகளை நபிமொழிகள் வடிவிலாக நெருங்கி நின்று பார்க்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றதினால் பேராசிரியர் பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்த்து பிரமித்துப் போனேன். நான் ஆச்சரியப்பட்ட, பிரமித்த, இரசித்த விஷயங்களை உங்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்நூலை எழுத விழைந்தேன்” என்று நூலாசிரியர் குறிப்பிட்டதைப் படிக்கும்பொழுது நமக்கும் சுவாரசியம் ஒட்டிக் கொள்கிறது.

30 அத்தியாயங்களாக இந்நூலைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கற்றல் முறையை அழகுற விளக்குகிறது.

கேட்பவர்களை சடைவடையச் செய்யாதிருத்தல், எளிமையான மொழி நயம், கேட்பவர்களின் அறிவுக்கும், புரிதல் திறனுக்கும் ஏற்றவாறு பேச்சுகளை அமைத்துக் கொள்ளுதல், வினாக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் புரிய வைத்தல், உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்குதல், கோடுகள் மற்றும் வரைபடங்கள் மூலமாக விளக்குதல், … என்று நீளும் பொருளடக்கப் பட்டியலைப் படிக்கும்போதே எழும் ஆர்வத்திற்கு அணை போட முடியவில்லை.

நம் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் திருப்தியுடன் பூர்த்தி செய்கிறார் நூலாசிரியர். தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தலைப்புக்கும் பொருத்தமான ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய இடங்களில் சரியாகப் பொருத்தியிருக்கிறார்.

“அநாதைகளை ஆதரிப்பவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம்” என்று தமது சுட்டுவிரலையும், நடு விரலையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள்” என்ற நபிமொழியை மையப் பொருளாக வைத்து “கையசைவுகள் மற்றும் சைகைகள் காட்டி விளக்குதல்” என்ற அத்தியாயத்தைத் தீட்டியிருக்கிறார் நூலாசிரியர்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டை விட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்” என்ற அண்ணலாரின் அருள்மொழியை அடிப்படையாக வைத்து “கண் முன்னால் காணும் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல்” என்ற அத்தியாத்தை வரைந்துள்ளார் நூலாசிரியர்.

இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் அழகிய உதாரணங்களாக அண்ணலாரின் அருள்மொழிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

நபிகளார் முக்கியமான சில வார்த்தைகளை ஏன் மூன்று முறை கூறினார்கள், கதைகளையும், முற்கால நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது ஏன் கூறினார்கள், சிலரிடம் மட்டும் ஏன் தனிக் கவனம் செலுத்தினார்கள் போன்ற கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தைத் தருகிறது இந்நூல்.

அவசியமான இடங்களில் அண்ணலார் கோபமும், கண்டிப்பும் காட்டியது, தோழர்களிடம் நிதானமாகவும், மென்மையாகவும் நடந்துகொண்டது, செய்திகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்திக் கூறியது, படிப்படியாகக் கற்றுக் கொடுத்தது, தோழர்களின் திறமைகளைப் பாராட்டியது, அவர்களை உற்சாகப்படுத்தியது, தோழர்களின் அறிவைப் பரிசோதிப்பதற்காக வினா எழுப்பியது, வெட்கப்படக்கூடிய விஷயங்களை கற்பிக்கும்போது நாசூக்காக நளினமாகக் கூறியது, தோழர்களின் தேடுதல் திறனை அதிகரிப்பதற்காக சில விஷயங்களை மூடலாகக் கூறியது என்று பல நிகழ்வுகள் விளக்கங்களுடன் விரிகிறது இந்நூலில்.

“மதிப்பெண்கள் அதிகமாய் எடுப்பவர்களை நல்ல மனன சக்தி உள்ளவர் என்று வேண்டுமானால் கூறலாம். நல்ல அறிவுடையவர் என்று நிச்சயமாய் கூறிவிட முடியாது” என்று ஓரிடத்தில் நூலாசிரியர் நச்சென்று குறிப்பிடுவது இன்றைய கல்வி முறையின் முகத்தில் அறைவது போல் உள்ளது.

“நானும் ஓர் ஆசிரியராகவே அனுப்பப் பட்டுள்ளேன்” என்று உரக்கச் சொன்ன உத்தம நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறை எவ்வாறெல்லாம் இருந்தது என்பதன் ஒரு வடிவம் மூளைக்குள் முளைத்து விடுகிறது நூலைப் படித்து முடிக்கும்பொழுது.

சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகமதிகம் அவசியம் என்ற காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு நூலாசிரியர் இன்னும் பல நூல்களைப் படைத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிட வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அச்சுப் பிழைகளின்றி, மிக நேர்த்தியாக அச்சுச்கோர்ப்பு செய்து, அழகிய வகையில் பக்கங்களையும் வடிவமைத்திருக்கிறார்கள் தாருஸ் ஸலாஹ் பதிப்பகத்தார். அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. பாராட்டுகள்.

அனைத்து முஸ்லிம்களும் அவசியம் படித்திட வேண்டிய நூல். குறைந்தபட்சம் அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் தகைமைகளை வளர்த்திட அவசியம் அள்ளிப் பருக வேண்டிய நூல்.

புதிய விடியல், டிசம்பர் 16-31, 2017

Tuesday, 5 December 2017

முஹம்மத் ஸாதிக் அலீ அவர்கள் எழுதிய ‘எளிய முறை கணிதம்’ - எனது அணிந்துரை
என் அருமை நண்பர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்களின் கன்னி முயற்சி இது. அதுவும் புதிய முயற்சி. சமுதாயத்திற்குத் தேவையான அரிய முயற்சி.

நூலாசிரியர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்கள் இது போன்று பல துறைகளில் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருப்பவர். நேர நிர்வாக நிபுணர்.

துபையில் ஒரு முறை இவர் நேர மேலாண்மை வகுப்பு எடுக்கும்பொழுதுதான் நான் முதன் முதலாக இவரைப் பார்த்தேன். அப்பொழுது எந்த அறிமுகமும் இல்லை. இருந்தும் நான் மின்னஞ்சலில் கேட்டவுடன் பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை உடனே அனுப்பி எனக்கு உதவினார்.

நான் “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” நூல் எழுதும் முயற்சியில் இருந்த நேரம் அது. அவர் அனுப்பித் தந்தது எனக்கு மிக்க உதவியாக இருந்தது. பல புதிய பார்வைகளைத் தந்தது.

நூலாசிரியர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்களைக் கண்டு பல முறை நான் வியந்திருக்கிறேன். தன் தொழிற்பணிப் பளுவுக்கு இடையில் நேரத்தை நன்கு நிர்வாகம் செய்து சமுதாயப் பணிகளைச் செய்வதோடு, சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் இம்மாதிரி புதிய முயற்சிகளை அவர்கள் செய்து கொண்டிருப்பது என்னை மாதிரி சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு உள்ளபடியே உத்வேகம் அளிக்கிறது.

எளியமுறை கணிதம் மூலம் மாணவச் செல்வங்களுக்கு மிக எளிதாக கணிதம் பயில ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்நூல். கணித வாய்ப்பாடு என்பது பல மாணவர்களுக்கு கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பாடுகளை எளிய முறையில் மனப்பாடம் செய்வதற்கு நிறைய உத்திகளைச் சொல்லும் இந்நூல் ஒர வரப்பிரசாதமாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

நூலாசிரியரின் இந்நூல் பெரும் வெற்றி பெற்று, இதேபோன்று சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் பல நூல்களை அவர் எழுதிட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

M.S. அப்துல் ஹமீத்
19.03.2017
துபை

Thursday, 23 November 2017

கஃபூரின் கதை


கஃபூருக்கு திடீரென்று ஒரு செய்தி வருகின்றது:

‘‘இன்னும் 24 மணி நேரத்தில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்!’’
எப்படியிருக்கும் கஃபூருக்கு?

(ஒரு பேச்சுக்குத்தான்! மரணத்தை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!)

இனி கஃபூருக்கு 24 மணி நேரம்தான் இருக்கிறது.

அவர் இந்த 24 மணி நேரத்தை எப்படி செலவழிப்பார்? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

நகரத்தில் அலைந்து திரிந்து ‘ஜாலியாக ஷாப்பிங்’ செய்து கொண்டிருப்பாரா? நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருப்பாரா? நல்ல ஆடை அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக்கொண்டிருப்பாரா? என்ன செய்வார்?

சப்த நாடியும் ஒடுங்கி நல்ல பிள்ளையாகி விடுவார். அதுவரை இருந்த அலட்டல்களெல்லாம் அடங்கிப் போய் விடும். ஒரே ஓர் எண்ணம்தான் அவருள் எங்கும் வியாபித்திருக்கும். அது – அல்லாஹ்!

எங்கும் அல்லாஹ்! எதிலும் அல்லாஹ்!!

அவரது ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கதாகிவிடும். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே இருக்கும்.

ஒரு நொடியைக் கூட அல்லாஹ்வின் ‘திக்ர்’ இல்லாமல் அவர் செலவழிக்கமாட்டார். ஒரு சிறு பாவத்தைக்கூட செய்யமாட்டார்.

இப்பொழுது நமது நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அது கஃபூரை விட மோசமானது.

ஆம்! கஃபூருக்காவது 24 மணி நேரம் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. நமக்குத் தெரியுமா? நாம் எப்பொழுது மரணமடையப் போகிறோம் என்று யாருக்காவது தெரியுமா? அடுத்த நிமிடமே நமக்கு மரணம் வரலாம்.
அதனால்தான் நாம் ஒவ்வொரு தொழுகையையும்; தொழும்பொழுது இதுதான் நமது இறுதித் தொழுகை என்று எண்ணித் தொழ வேண்டும் என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பினார்கள்.

‘‘மகிழ்ச்சியை மண் மூடிப் புதைக்கும் ஒன்றை அதிகமாக நினைவு கூருங்கள். (அதுதான்) மரணம்!’’ என்று அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

‘‘கப்றுக் குழியில் இருக்கும் மனிதர்களோடு உங்களையும் எண்ணிப் பாருங்கள்’’ என்று மேலும் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும்பொழுது, முதல் நிலைக் கேள்விகள் அனைத்தும் நமக்கு அருளப்பட்ட அளவிலா மதிப்புடைய நேரத்தைச் சுற்றித்தான் இருக்கும்.

‘‘நீங்கள் கணக்கு கேட்கப்படும் முன் உங்களை நீங்களே கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் மதிப்பிடப்படும் முன் உங்களை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் உங்களைக் கணக்கு பார்த்துக்கொண்டால், நாளை நடக்கும் கேள்வி கணக்கு இலகுவாக இருக்கும். அந்த நாளில் (காட்சி தருவதற்காக) உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்: ‘‘அந்த நாளில் நீங்கள் (அல்லாஹ்வின் முன்) கொண்டு வரப்படுவீர்கள். (அப்பொழுது) உங்களது ஒரு ரகசியமும் மறைக்கப்படாது (69:18)’’ என்று உமர் (ரலி) அவர்கள் உரைத்தார்கள்.

(‘இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்’ நூலிலிருந்து.)

Monday, 20 November 2017

சிறிய அமல்...! பெரிய பலன்..!! அல்லாஹ்வின் கருணை விசாலமானது!!!


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு,
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு ரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.” (முஸ்லிம்)
திர்மிதீயில் இடம் பெற்ற ஹதீஸில் கீழ்க்கண்ட துஆவும் சேர்த்து கூறுமாறு வந்துள்ளது:
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன் (யாஅல்லாஹ், பாவமன்னிப்பு தேடுபவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக! பரிசுத்தமானவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக! (திர்மிதீ)

சொர்க்கம் கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல; அதுவும் எட்டு வாசல்கள் திறந்து வைக்கப்பட்டு அழைக்கப்படுவது என்றால்…! அந்த பாக்கியம் இந்த மிகச் சிறிய அமலால் கிடைத்து விடுகிறது. அதற்காக எந்தத் தொகையும் செலவழிக்க வேண்டியதில்லை. எந்தச் சிரமும் படவேண்டியதில்லை.
இந்தச் சிறிய நற்செயலுக்குப் போய் இவ்வளவு பெரிய சொர்க்கத்தை அல்லாஹ் வழங்கிடுவானா என்று நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் கருணை மிக விசலானமானது. அதையும் இந்த நபிமொழியே நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.

திருக்குர்ஆனில் நரகத்தைப் பற்றியும் அதன் வாசல்களின் எண்ணிக்கை பற்றியும் இப்படி வந்துள்ளது: “நிச்சயமாக, (ஷைத்தானைப் பின்பற்றும்) அவர்கள் அனைவருக்கும் நரகம்தான் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆகும்.” (15:44)

சொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் என்று திருக்குர்ஆனில் (39:73) பொதுவாக வந்துள்ளது. ஆனால் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கையைப் பற்றி திருக்குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. எனினும் நபிமொழிகளில் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கை எட்டு என வந்துள்ளது. இந்த நபிமொழியிலும் எட்டு வாசல்கள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நரகத்தின் வாசல்களை ஏழாக அமைத்த அல்லாஹ், சொர்க்கத்தின் வாசல்களையும் ஏழு என அமைக்கவில்லை. மாறாக, ஒன்றை அதிகமாக்கி, எட்டு என அமைத்து, எனது கோபத்தை விட கருணையே விசாலமானது; எனது அருளே அதிகமானது என்பதை உணர்த்துகிறான். எனவே அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்று சொர்க்கம் செல்ல இந்த இலகுவான துஆவை உளூவிற்குப் பிறகு ஓதி வருவோமாக!