Tuesday, 28 January 2014

மதுவில் மதிமயங்கிக் கிடக்கும் பொது சமூகம்!


வீட்டில் குடிப்பதற்காக வைத்திருந்த வெளிநாட்டு மதுவை எடுத்து 8 வயது சிறுவன் குடித்து மரணமான கொடூர சம்பவம் கேரளாவில் பத்மநாமபுரத்துக்கருகில் நடந்துள்ளது. 

தொலைக்காட்சிப் பெட்டி ஸ்டாண்டின் கீழ் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை எடுத்து அந்தச் சிறுவன் குடித்திருக்கிறான். அப்பொழுது அவனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். 300 மில்லிக்கும் அதிகமாக அவன் உடலில் மது சென்றதால் அவனுக்கு மரணம் ஏற்பட்டுள்ளது.

தங்கள் சுகத்திற்காக அநியாயமாக ஒரு சிறுவனைப் பலியாக்கியிருக்கிறார்கள் வீட்டிலுள்ளவர்கள். இது ஒரு நிகழ்வு மாத்திரமல்ல. மதுவினால் ஏற்படும் கொடூரங்களுக்கு இது ஒரு பானைக்கு ஒரு சோறே!

மது இன்று பொது சமூகத்தில் மிகப் பெரிய விபத்தாக வளர்ந்திருக்கிறது. தினமும் மது அருந்துவது, பண்டிகைக் கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகள், விசேஷ தினங்களின்போது மது அருந்துவது என்று மது அருந்துவது மிகச் சாதாரணமாக பரவலாகி வருகிறது.

மது விஷம் என்ற கருத்து போய் மதுவை அருந்துவது கண்ணியம் என்ற நிலை சமூகத்தில் வந்துள்ளது. விருந்து நிகழ்ச்சிகளில் மது அருந்தாதவர்களை ஏளனமாகப் பார்க்கும் போக்கே இதற்குச் சான்று.

தமிழகத்தில் டாஸ்மாக் முதற்கொண்டு அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசுகளே மதுவை விற்கின்றன. அரசு மதுபானக் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. வெளிநாட்டு மதுக்களுக்கு விற்பனை வரியை அதிகப்படுத்தி மாநில அரசுகள் அறிவிக்கின்றன. இதன் மூலம் மது பயன்பாட்டைக் குறைப்பதுதான் நோக்கம் என்று அரசுகள் கூறினாலும் அது அரசுகளுக்கு வருமானத்தை அதிகரிக்கும் ஒரு வழியே என்பதுதான் நிதர்சனம்.

மது பயன்பாடு அதிகமாகி வருகிறது என்பதை விட கவலைக்குரியது அதிகமான இளைஞர்களும், மாணவர்களும் அதற்கு அடிமையாகி வருவது என்பதுதான். என் மருமகன் கோவையில் பொறியியற் கல்லூரியில் படிக்கிறான். அவனுடன் கூடப் படிக்கும் நல்ல மாணவர்களை இணைத்து ஒரு வீடு எடுத்து தங்கலாம் என்று முனையும்பொழுது, குடிக்காத ஒரு மாணவன் கூட கிடைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியானது.

அவனுடன் படிக்கும் அனைத்து மாணவர்களும் குடிப்பார்களாம். கொஞ்சம் பணம் குறைவான குடும்பத்திலுள்ள மாணவன் சொன்னது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. “என் தந்தைதான் எனக்கு மது வாங்கித் தருவார். நான் குடிப்பேன்” என்றான் அந்த மாணவன்.

இப்படி கல்லூரிகளில் மது சர்வசாதாரணமாகப் புழங்கப்படுகிறது. அத்தோடு 10 வயதிற்குக் கீழுள்ள சிறுவர்களும் இப்பொழுது மதுவைக் குடிக்கின்றனர் என்று செய்திகள் வருகின்றன.

வீடுகளில் பெற்றோர் மதுவை அருந்துவது அதிகரித்திருப்பதால் பெரும்பாலான வீடுகளில் மது இருப்பு, வெளியிலும் மது சாதாரணமாகக் கிடைப்பது, சினிமா, சீரியல் போன்றவற்றில் மது அருந்துவது சாதாரணமாகக் காட்டப்படுதல் போன்றவை மதுவின் மீது சிறுவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி பல காரணங்களைச் சொல்லலாம்.

இது மட்டுமல்ல. போதை மருந்தும், கஞ்சாவும் மாணவர்களிடம் இப்பொழுது அதிகப் புழக்கத்தில் வந்துள்ளன. இவற்றை மாணவர்களிடம் விற்பதற்கு பெரும் மாஃபியா கும்பல்கள் அலைந்து கொண்டிருக்கின்றன.

18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை 21 வயதாக அதிகரிக்க ஆலோசனை உண்டு. அதனைச் செயல்படுத்தினால் கொஞ்சமாவது இந்தக் கொடுமை குறைய வாய்ப்பிருக்கிறது.

சமீபத்தில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் அரசின் மதுபானக் கடைகளிலிருந்து மது வாங்குவது செய்தியாக வந்திருந்தது. இளம் பெண்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கிக்கொண்டிருக்கும் படங்கள் சமீபத்தில் முகநூலில் வந்திருந்தன.

குழந்தைகள் குற்றங்கள் புரிவதின் பின்னணியில் மதுவுக்கும், போதை மருந்துக்கும், கஞ்சாவுக்கும் பெரும் பங்குண்டு. சிறு வயதிலேயே கொலைகளிலும், பாலியல் பலாத்காரங்களிலும் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது.

இன்று இளையோர் சிறைகளில் (Juvenile Jails) அடைக்கப்படும் பெரும்பாலான சிறுவர்கள் செய்த குற்றங்கள் மேற்சொன்னவையே. கடந்த 2012ம் ஆண்டு கேரளாவில் மட்டும் 989 இளையோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே கணக்கு 2013ல் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது 2013 செப்டம்பர் 30 வரையுள்ள கணக்குப்படி 1450 பேர் அங்கே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் கொலைக் குற்றத்திற்காகவும், 30 பேர் பாலியல் பலாத்காரக் குற்றத்திற்காகவும் பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடையிலுள்ளவர்களே.

குழந்தைகளிடம் பெற்றோர்கள் இது சம்பந்தமாக அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன. குழந்தைகளிடம் நல்ல பழக்கவழங்களைப் புகுத்த பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாளைய இந்தியா நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.

MSAH

சமூக வலைத்தளங்கள் வரமா? சாபமா?முகநூலில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்திடும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தற்பொழுது ஓர் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கேரளாவைச் சார்ந்த இந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.01.2014) தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். தன் 3 வயது குழந்தையையும், கணவரையும் நிர்க்கதியில் நிறுத்தி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தன் சொந்த சகோதரனுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் அந்தச் சகோதரனின் நண்பன் அந்தப் பெண்ணைக் கண்ணியக் குறைவாக முகநூலில் விமர்சித்தும், தவறான படங்களை வெளியிட்டும் அவமானப்படுத்தியுள்ளான். போலீசில் இது குறித்து புகார் அளித்தும் பலன் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து மாவட்ட கமிஷனருககு புகார் அளித்துள்ளார் அந்த அபலைப் பெண். ஆனால் மாவட்ட நிர்வாகமோ இந்த வழக்கை மீணடும் அதே காவல்நிலையத்திற்குத் திருப்பி விட்டது.

இரு தரப்பாரையும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த அந்தக் காவல் நிலைய துணை ஆய்வாளர் (எஸ்ஐ) அழைத்துள்ளார். தனக்கு இப்பொழுதாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தன் கவணனுடன் காவல் நிலையம் வந்துள்ளார் அந்தப் பெண்.

ஆனால் காவல் நிலையத்தில் நடந்ததுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. நடுவராக இருந்து மத்தியஸ்தம் பேசவேண்டிய எஸ்ஐ, இந்தப் பெண்ணைத் தவறாகப் பேசியுள்ளார். நெருப்பில்லாமல் புகையுமா, ஏதோ இருக்கப் போய்த்தான் இப்படிப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளன என்ற ரீதியில் அவர் அந்தப் பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து அவமானப்படுத்தியுள்ளார்.

இங்கும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, மீண்டும் தான் அவமானப்படுத்தப்பட்டதைத் தாங்க முடியாத அந்தப் பெண் வீட்டுக்கு வந்தவுடன் ஆடை மாற்றிக்கொள்ள அறைக்குள் சென்றபொழுது தூக்கில் தொங்கி தன்னை மாய்த்துக்கொண்டார். அந்தச் சமயம் கணவர் தன் மூன்று வயதுக் குழநதையுடன் வெளியே சென்றிருந்தார். மீண்டும் வீட்டுக்கு வந்த கணவர் பார்த்தது தன் மனைவியின் சடலத்தை. கையில் தன் கைக்குழந்தை. கீழே தன் மனைவியின் சடலம். என்ன பாடு பட்டிருப்பார் அந்தப் பரிதாபக் கணவர்?

இதில் பல கோணங்களில் சிந்திக்க வேண்டியுள்ளது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் இன்று வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. அதில் ஒரு தனி நபரின் தனித்துவம் சிதைக்கப்படும்பொழுது பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இன்று அதிக விலையிலும், மலிவான விலையிலும் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதால் அவை பரவலாகிவிட்ட சூழ்நிலையில் எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருப்பதைப் பார்க்கிறோம்.

பெரும்பாலான  தொலைத்தொடர்பு கம்பெனிகள் மக்கள் வாங்கும் சக்திக்குள் இணையதள இனைப்பையும் கொடுப்பதால் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகநூல். இன்று முகநூலில் கணக்கு இல்லாதவர்களை வேற்றுக் கிரக ஜந்துகளைப் பார்ப்பது போன்று பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

முகநூலும் மற்ற ஊடகங்கள் மாதிரி இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றதுதான். நல்லவைக்கும் பயன்படுத்தலாம். அல்லவைக்கும் பயன்படுத்தலாம். இந்த வகையில் முகநூலைப் பயன்படுத்துபவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கின்றன.

நல்ல விஷயங்கள் பலவும் முகநூல் மூலம் பரவுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அதைவிட அதிகமாக தீய விஷயங்கள் அதிகமாகப் பரவுவதுதான் யதார்த்தம். இன்று ஃபாஸிஸ்டுகள், மோடியின் ஆதரவாளர்கள் முகநூலை அதிகம் பயன்படுத்தி இல்லாத பொல்லாத செய்திகளைப் பரப்பி வருவதைப் பார்க்கின்றோம். அதே சமயம் ஃபாசிச எதிர்ப்பாளர்களும் ஃபாசிசத்திற்கு எதிரான செய்திகளைக் கொடுக்கிறார்கள். இருந்தாலும் ஃபாசிசவாதிகளின் வீரியம் இதில் இல்லை என்பதே உண்மை.

இன்று சைபர் கிரைம் என்று சொல்லப்படும் வலைத்தள குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் அதிக மக்களுக்கு இது தெரிவதில்லை. இன்று சைபர் கிரைம்களில் தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இன்னும் சிலர் எந்தவித ஆதாரங்களையும் விட்டு வைக்காமல் மிகத் துல்லியமாக அடுத்தவர்களைப் பற்றிய ஆபாசப் படங்களை வெளியிட்டுவிட்டு தப்பித்து விடுகின்றனர். இவர்களைப் பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். இவர்களெல்லாம் பெரும்பாலும் இணையத்தைக் கரைத்துக் குடித்தவர்களாக இருப்பார்கள்.

இந்தப் பரிதாபப் பெண்ணின் விஷயத்தில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஏன் மீண்டும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கை விசாரிக்குமாறு சொன்னது? அது சைபர் கிரைம் துறைக்கல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்!

அங்கேயே அந்தப் பெண்ணின் இறுதி வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. எதிர்த்தரப்பாரின் செல்வாக்கினால்தான் போலீசார் அப்படி நடந்து கொண்டனர் என்ற செய்தியும் கசிந்துள்ளது. செல்வமும், செல்வாக்கும் இருந்தால் எந்தத் தவறையும் யாரும் செய்யலாம் என்ற் நிலை என்று மாறும் இந்த நாட்டில்?

MSAH

Saturday, 25 January 2014

கலை என்பது எதைக் குறிக்கிறது?


(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள். (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க் கற்பனை செய்கின்றீர்களா?” அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 10: 59,60)

ஹராமும், ஹலாலும் இஸ்லாத்தின் மிக முக்கிய அம்சங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எது அனுமதிக்கப்பட்டுள்ளது, எது தடுக்கப்பட்டுள்ளது என்பதை ஷரீஅத் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டது அனைத்துமே நமது நன்மைக்காத்தான் என்பது ஒரு சில விஷயங்களில் நமக்குப் புரிகிறது. பல விஷயங்களில் நமக்கு இது புலப்படமால் நன்மைகள் உட்புதைந்திருக்கிறது.

எனினும், மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், மனிதனின் சிந்தனையிலும், நடத்தையிலும் குறுகிய பார்வை என்பது மலிந்து கிடக்கிறது. இந்தக் குறுகிய பார்வை சில நேரங்களில் இஸ்லாம் வரையறுக்கும் கட்டுப்பாடுகளை பெரிய சுமையாகக் கருத வைக்கிறது. அது அந்தத் தீமைகளை விட்டும் நம்மைப் பாதுகாக்கிறதே என்ற எண்ணத்தை வரவிடாமல் தடுக்கிறது.

இதைத்தான் திருக்குர்ஆன், “நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கிறான்” என்று கூறுகிறது.

அல்லாஹ் சொல்லும் ஹலால், ஹராம் என்பது நம் வாழ்வை நாம் பாதுகாத்துக் கொள்ளவும், நமது வாழ்வை நாம் வளப்படுத்திக் கொள்ளவும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு வரம்தான் என்றால் அது மிகையாகாது.

ஆனால், நன்றி கெட்ட, குறுமதியாலான மனிதன் இந்தக் கட்டுப்பாடுகளைப் பெரிய சுமையாகக் கருதி அவைகளை வெறுக்கிறான். அவை நமக்கு நலம் பயப்பவை என்பதை உணர மறுக்கிறான்.
தடுக்கப்பட்டவை (ஹராம்) குறித்த நமது அறிவு, நம்மைப் பாதுகாக்கிறது என்பது மட்டுமல்ல; நமது இலக்கை நாம் பாதுகாப்பாக அடைவதற்கு உதவியும் புரிகிறது. கலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கலை (Art) என்ற வார்த்தையே அழகுபடுத்துதல் என்பதைக் குறிக்கிறது. அழகுபடுத்தும் காரியங்கள் அனைத்தும் கலைகளில் அடங்கும். அழகுபடுத்துதல் என்பது வடிவமைப்பு, கட்டுப்பாடு, ஒரு நோக்கம் என்பதைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

அழகு என்பது புனிதமானது. நல்ல அழகிய கருத்து அதனுடையது. அழகை வெளிப்படுத்த வேண்டும். அது அசிங்கமாக இருந்தால், அது கலையாக இருக்க முடியாது.

சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள், சமூக மதிப்பீடுகள் இவைகளையொட்டி கலைகள் அமைந்திருக்க வேண்டும். இவைகளுக்கு முரண்பட்டு கலைகள் அமையக் கூடாது.

அப்படி அமைந்தால் மிக நுட்பமாக, துல்லியமாக சமூகத்தில் அரங்கேற்றப்படும் ஒரு குற்றம் கூட கலையின் ஒரு வடிவமாகி விடும்.

மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், கலையின் பெயரால் இன்று பிரகடனப்படுத்தப்படும் விஷயங்கள் அனைத்தும் அசிங்கமாக இருக்கின்றன. ஆபாசாகமாக இருக்கின்றன. எந்த அடிப்படையுமற்றதாக இருக்கின்றன.

இது ஏன் ஏற்படுகிறதெனில், துரதிர்ஷ்டவசமாக கலையை இன்று ஆக்கிரமித்திருப்பவர்கள் கட்டுப்பாடுகளை வெறுக்கின்றனர். ஒழுங்கற்ற, கட்டுப்பாடற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க நினைக்கின்றனர்.

வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் அழகிய முறையில் வழிகாட்டும் இஸ்லாம், கலையின் அர்த்தத்தையும் அதன் அழகையும் வெளிச்சப்படுத்தத் தவறவில்லை. ஒழுக்க வழிகாட்டுதல்களையும் சமூகக் கட்டுப்பாடுகளையும் தந்து இஸ்லாம் கலைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. நாத்திகவாதம் கொடுத்துள்ள சுமைகளை அகற்றியுள்ளது.

முஸ்லிம்கள் நவீன கலை வடிவங்களை உருவாக்கியுள்ளனர். கலையம்சங்கள் ஒருங்கேயமைந்துள்ள அழகிய பள்ளிகள், கட்டடக் கலையை இன்று வரை பறையறிவுக்கும் தாஜ்மஹால், அல் ஹாம்ப்ரா அரண்மனை ஆகியவை அதற்கு ஓரிரு சான்றுகளாகும். அழகிய எழுத்துக் கலை (Calligraphy) என்பது கலையின் இன்னொரு அம்சம். இந்தக் கலைக்கு அர்த்தமும், நோக்கமும் தந்தது முஸ்லிம்கள்தான்.

“அழகிய எழுத்துக் கலை (Calligraphy) என்பது ஒரு கலை. அது முஸ்லிம்களின் சிறப்பம்சம்” என்று கூறுகிறார் பேராசிரியர் ஹமீதுல்லாஹ். இவர் சமகால அறிஞர்களில் முக்கியத்துவம் பெற்றவர்.

இந்த எழுத்துக் கலை, படம் வரையும் இடத்தில் கலையை எழுதுகிறது. இந்தக் கலையின் பொதுவான அம்சம் திருக்குர்ஆனின் எழுத்துகள்தாம். ஆம்! திருக்குர்ஆனின் அழகிய வசனங்களுக்கு இன்னும் மெருகூட்டி அழகிய கலை வடிவமைப்பில் கையெழுத்துகளாகவும், பெயிண்டிங்குகளாகவும், சுவரெழுத்துகளாகவும் பெரிய பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்களில் வரையப்படுகிறது.

எழுத்துக் கலையாகட்டும், அல்லது அலங்காரம் செய்தல், ஒளிமயப்படுத்துதல், வாழ்வியல், உண்ணுதல், உடையணிதல், கட்டடங்களைக் கட்டுதல், சமூகத் திட்டங்கள் என்று என்ன விஷயமாகட்டும், இஸ்லாம் சொல்லும் விஷயங்கள் புதுமையாக இருக்கும். அதே சமயம், சமூகப் பிரக்ஞையோடும் இருக்கும். இந்தக் கலைகளினால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கும்.

இஸ்லாம் ஆண்களையும், பெண்களையும் அந்நியர்களுடன் - மஹ்ரம் இல்லாதவர்களுடன் கலப்பதைத் தடுக்கிறது. மஹ்ரம் என்றால் மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள் என்று பொருள்.

இஸ்லாம் ஆண்களையும், பெண்களையும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளப் பணிக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் சமூகத் தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் - பலவீனப்படுத்தும் எதையும் சகித்துக் கொள்ளாது இஸ்லாம்.

இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் தெளிவாக உள்ளன. நல்லவை, தீயவை என்பன தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதில் எந்தக் குழப்பமுமில்லை.

குடும்பம் என்பது விசுவாசத்தினதும், நம்பிக்கையினதும் அடிப்படையில் அமைந்தது ஆகும். இங்கு விசுவாசம் இல்லையெனில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லையெனில் குடும்பமே இல்லை. நம்பிக்கை இல்லையெனில் சமூகமே இல்லை. தேசமே இல்லை. உலக ஒழுங்கே இல்லை.

எந்த மனித சமூகமும் விதிமுறைகளும், தடைகளும் இல்லாமல் ஒழுங்காக வாழ முடியாது. உதாரணத்திற்கு, கார் ஓட்டுவதை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எத்துணை சட்டங்கள் இருக்கிறது தெரியுமா? அமெரிக்காவில் கார் ஓட்டும் விதிமுறைகளை விளக்கும் சட்டங்கள் மட்டும் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட கனமான புத்தகமாகும்.

அதே போல் வாழ்க்கை என்னும் காரை ஓட்டுவதற்கு விதிமுறைகள் கண்டிப்பாகத் தேவை. இந்த உலகத்தில் கார் ஓட்டும் சட்டத்தைப் பின்பற்றி ஓட்டினால் எப்படி பாதுகாப்பாக செருமிடத்திற்கு போய்ச் சேருவோமோ, அதைப் போல் இஸ்லாம் வகுத்து வழங்கிய விதிமுறைகளை வலுவாகப் பின்பற்றி நடந்தால் வாழ்க்கை என்னும் காரைப் பாதுகாப்பாக ஓட்டிச் சென்று மறுமையில் போய்ச் சேருமிடத்திற்கு வெற்றிகரமாகப் போய்ச் சேரலாம்.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி  மே 2002 (இம்பாக்ட் பக்கம் கட்டுரை)

Saturday, 18 January 2014

மரணத்தை நோக்கிய பயணம்!


சில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மஸ்ஜிதில் வைத்து நடைபெற்ற அந்தத் திருமண நிகழ்ச்சியில், மவ்லவி குத்பா உரை நிகழ்த்தினார். திருமணம் சம்பந்தமான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், மணமகனுக்கும், மணமகளுக்கும் பயன்படக்கூடிய உபதேசங்கள், அறிவுரைகள் என்று சொல்லிக் கொண்டே வரும் போது முக்கியமான ஒரு விஷயத்தைக் கூறினார்:

இன்று நாம் திருமண வைபவத்திற்காக ஒன்று கூடியுள்ளோம். திருமண வீட்டார் நமக்கு “கல்யாண அழைப்பு” தந்ததால் வந்துள்ளோம். இதேபோல, வேறு எந்தவித நிகழ்ச்சிகள் யார் வீட்டில் நடந்தாலும், நம்மை அழைத்தால் நாம் செல்வதுண்டு. கல்யாண வீட்டில், மணமக்களின் உற்றார், உறவினர், அண்டை வீட்டார், தெரிந்தவர்கள் என எல்லோரும் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து, மணமக்களை வாழ்த்தி விருந்துண்டு செல்வர். இன்னும் சிலர், மணமக்களை அலங்கரிப்பர். இன்னும் சிலர் கல்யாண முன்னேற்பாடு வேலைகளில் உதவியாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பர். இது சந்தோஷமான ஒரு நாளாக இருக்கும்.

ஆனால் இன்னொரு நாளில், அழைப்பில்லாமலேயே அலை அலையாக மக்கள் வருவார்கள். மனிதனின் நடமாட்டம் நின்றுவிடும். அந்த நாள் கவலைக்குரிய நாளாக இருக்கும். அந்த மனிதனின் பெயர் எல்லாம் சொல்லப்படமாட்டாது. அந்த நாள்தான் மரண நாள். இனி அவனது பெயர் “மய்யித்”. மய்யித், மய்யித் என்றே அங்கு பேச்சுகள் அடி படும். இந்த நாளில் அந்த மரண நாளையும் மறந்துவிடக் கூடாது. அதனை எப்போதும் நினைவு கூர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.” இவ்வாறு மவ்லவி தனது உரையில் சொல்லிக் கொண்டே போனார்.

எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது! எவ்வளவு ஆழமான கருத்துக்கள் அந்த மவ்லவியின் உரையில் பதிந்திருந்தது! எவ்வளவு பெரிய உண்மை அது! அதுவும் எத்தகைய சபையில் அவர் அந்த மரண நாளை நினைவூட்டுகிறார்!

மணமுடிக்கும் தம்பதியர் அவர்கள் தங்கள் வாழ்க்கையை துவங்குமுன் இந்த அடிப்படையை ஒரு கணம் நினைவில் வைத்துக் கொண்டு துவங்கினால் அவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். ஏன், நம் வாழ்க்கையில் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டிய முக்கியமான ஒன்றுதான் மரணம்.

நம் எல்லோரையும் மரணம் வந்தடையவே செய்யும். அது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த நிலையிலும் வரலாம் என்பதை எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் சொல்கிறான்: “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்.” (அல்குர்ஆன் 3 : 185)

அந்த மரணம் வரும்போது, மலக்குகள் நம் ரூஹை வாங்க வரும்போது நாம் வெறும் கையும், வீசின கையுமாக போனால் என்னவாகும் நம் கதி...? அல்லாஹ் இந்த நிலைமையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவானாக! அந்த மலக்குகளிடம் நான் இப்பொழுது வரமாட்டேன், கொஞ்ச நாட்கள், மாதங்கள் கழித்து வருகிறேன் என்றாவது சொல்ல முடியுமா?

அல்லாஹ் சொல்கிறான்: “எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனை) பிற்படுத்த மாட்டான்.” (அல்குர்ஆன் 63 : 11)இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம்தான். நம்மில் எல்லோருக்கும் மரண பயம் இருக்கத்தான் செய்கிறது. மறுமையில் நரகத்திலிருந்து தப்பிக்க, சுவனபதி கிடைக்க என்று ஆசைகள் மனதில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதற்கான முன்னேற்பாடுகள்தான் இல்லை. அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நமக்கு நேரமில்லை. ஏதோ இருந்தோம்! தொலைவோம்! என்று இருக்கிறோம்.

ஆனால், நம் சத்திய சஹாபாக்கள் வாழ்க்கையைப் பாருங்கள். அவர்கள், தங்களுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்ற இலட்சியம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அதனால், அவர்கள் எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயங்கவில்லை.நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “சிரமங்களால் சொக்கம் சூழப் பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப் பெற்றுள்ளது.” (முஸ்லிம்)ஆனால் அந்த சொர்க்கம் சும்மா கிடைக்குமா? ஒரு போதும் கிடைக்காது. ஏனெனில் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: “உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்). (அல்குர்ஆன் 2 : 214)

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால், பொறுமை உடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 155)

எனவே, நாம் துன்பங்கள், கஷ்டங்கள் என்று எந்த சோதனைக்குள்ளாக்கப்படும்போதும், சகித்துக் கொள்ள வேண்டும். ரசூல் (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அடைந்த சோதனைகள் ஒன்றும் நம்மை அடைந்துவிடவில்லையே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறைநம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. (முஸ்லிம்)

ஆக, ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு நல்லது ஏற்பட்டாலும், தீங்கு ஏற்பட்டாலும் அவன் பொறுமை காத்தான் என்றால் அவனுக்கு அது நன்மையாக முடிகிறது.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “கியாமத் நாளில் 4 விஷயங்களைப் பற்றி கேட்கப்படாமல் மனிதனின் காலடிகள் அசையாது:

1. அவனுடைய ஆயுள் காலம். அதை அவன் எப்படி செலவழித்தான்?
2. அவனுடைய வாலிபம். அதை எதில் தொலைத்தான்?
3. அவனுடைய செல்வம். எங்கிருந்து சம்பாதித்தான்? எதற்காக செலவழித்தான்?
4. கல்வி: அவனுக்கு தெரிந்தவைகளில் எதைக் கடைப்பிடித்தான்?” (திர்மிதி)

ஆக, கியாமத் நாளில் இவ்வகையான கணக்குகளை ஒப்படைக்காமல் அசைய முடியாது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஏழு விஷயங்களுக்கு முன்னால் நீங்கள் முண்டியடித்து நற்செயல்களில் ஈடுபடுங்கள்:

1. கடுமையான வறுமை
2. மித மிஞ்சிய பணம்
3. அழிவு தருகிற நோய்
4. மிகத் தள்ளாத வயது
5. (வாழ்க்கை முடிவுற்று) மரணத்தை நோக்கியுள்ள பயணம்
6. தஜ்ஜால் - அது எதிர்பார்க்கப்படுகின்ற மறைவானவற்றில் மோசமானது.
7. மறுமை நாள். (திர்மிதி)

அல்லாஹ் நமக்கு தந்திருக்கின்ற அருட்செல்வங்களைக் கொண்டு நாம் பயனடைய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “மனிதர்களில் அதிகமானோர் கீழ்க்கண்ட அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்: 1. ஆரோக்கியம் 2. ஓய்வு.” (புகாரி)

ஆரோக்கியமும், ஓய்வு நேரமும் கிடைக்கும்போது நன்மையான வழிகளில் செலவழிக்க வேண்டும். நம் நேரத்தைக் கூறு போட்டு நன்மை செய்வதற்கென்று ஒதுக்க திட்டமிட வேண்டும். அப்படி திட்டமிடாவிட்டால், நமக்குக் கிடைத்த இந்த இரண்டு அருட்செல்வங்களை தொலைத்த நஷ்டவாளிகளாகி விடுவோம். நம்மை விட்டு அவை பறி போன பின் அப்பாடா… எப்பாடா… என்று கூறி நிலைகுலைந்து பயனில்லை.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள்! உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள்! அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.” (முஸ்லிம்)

அத்தகைய மறுமை நாளில் வேதனை மிகுந்த தண்டனையிலிருந்து தப்பிக்க வழி சொல்லும் ஒரு வியாபாரத்தை அல்லாஹ் அழகாக சொல்கிறான்:“நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய ரசூலையும் விசுவாசம் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உங்களுடைய செல்வங்களைக் கொண்டும், சரீரங்களைக் கொண்டும் போரிட வேண்டும். அது உங்களுக்கு நன்மை பயக்கும் - நீங்கள் அறிந்திருந்தால்.” (அல்குர்ஆன் 61 : 11)

நம்முடைய செல்வங்களைக் கொண்டு நாம் எவ்வாறு ஈடில்லா பலனை அடைவது என்பதை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இங்கே சொல்வதைப் பாருங்கள்:

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “ஒருவர் பரிசுத்தமான சம்பாத்தியத்திலிருந்து ஒரு ஈத்தம்பழம் அளவுக்கு தர்மம் செய்தால் (பரிசுத்தமானதில்லாததை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்) அதை அல்லாஹ் தனது வலது கை கொண்டு (சந்தோஷமாக) ஏற்றுக் கொள்வான். பின்னர், இந்த மனிதருக்காக, அல்லாஹ் உங்களில் ஒருவர் தன்னுடைய குதிரைக் குட்டியை வளர்ப்பது போல அதை வளர்த்துக் கொண்டிருப்பான். அப்படியாக அது மலை போல ஆகிவிடும்.”

மனிதனோடு ஓட்டிப் பிறந்த இரண்டு ஆசைகளை அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்:

“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.” (முஸ்லிம்)

நாம் உலக ஆசைகளிலிருந்தும் விடுபட வேண்டும். அல்லாஹ் சொல்கிறான்:
“உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமே அன்றி வேறில்லை. பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டாமா?” (அல்குர்ஆன் 6 : 32)

“செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும். என்றும் 
நிலைத்து நிற்கக்கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மை பலனுடையவையாகவும், (அவனிடத்திலும்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18 : 46)

எனவேதான் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் இப்படியாக:
“அல்லாஹ்வே! இவ்வுலகத்தை எங்களுடைய முக்கிய நினைப்பாக ஆக்கி விடாதே! எங்களுடைய மொத்த கல்வி ஞானமும் அனாதையாக்கி விடாதே”

இன்னும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

“அடியான் என் செல்வம், என் செல்வம் என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியதாகும். அவன் உண்டு கழித்ததும், உடுத்திக் கிழித்ததும் அல்லது கொடுத்துச் சேமித்துக் கொண்டதும்தான் அவனுக்குரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக் கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக் கூடியவையுமாகும்.”

சுவர்க்கத்தில் நுழைய வாய்ப்பை இழந்தவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:

“எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ, அவர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்.” (முஸ்லிம்)
“தமது உள்ளத்தில் கடுகு மணியளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்.”

அப்தில்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும். தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன், அவன் அழகையே விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

பாழும் நரக நெருப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றி, சுகந்தம் தரும் சுவர்க்கத்தை நம் எல்லோருக்கும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.

M.S. மரியம் (என் சகோதரி)

Friday, 3 January 2014

'ஹயா'வும் நம்பிக்கையும்!


இமாம் ஷீஃபாஹ் இப்னு ஹஜ்ஜாஜ் அவர்கள் தன் குதிரையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்துல்லாஹ் அவரை இடைமறித்தான். அப்துல்லாஹ் ஒரு விஷமக்காரன் என்று எல்லோருக்கும் தெரியும். அவன் பாவத்திலேயே ஊறித் திளைத்தவன். தனது வாழ்க்கையையே பாவத்தால் சமைத்துக் கொண்டவன். அது பற்றி நாணமோ, வெட்கமோ சிறிதும் இருந்ததில்லை.

அப்துல்லாஹ் இடைமறித்ததும் இமாம் ஷீஃபாஹ்வுக்கு இப்பொழுது ஒரு பிரச்னை காத்திருக்கிறது என்று தெரிந்து விட்டது. இமாம் ஷீஃபாஹ் ‘அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீத்’ (நபிமொழிகளில் முஃமின்களின் தலைவர்) என்று பெயர் பெற்றவர். தலைசிறந்த ஹதீஸ்கலை வல்லுநர்.

இது அப்துல்லாஹ்வுக்கும் தெரியும். ஆனால் இன்று இவரிடம் கொஞ்சம் சில்மிஷம் பண்ணுவோம் என்று முடிவெடுத்து விட்டான். “ஷீஃபாஹ்… எனக்கொரு ஹதீஸைச் சொல்லும்” என்று கண்களில் குறும்புடன் இமாம் ஷீஃபாஹ்விடம் அப்துல்லாஹ் கேட்டான்.

“ஹதீஸ்களைக் கற்றுக் கொள்வதற்கு இதுவல்ல வழி” என்று பதில் பகர்ந்தார் இமாம் ஷீஃபாஹ். அப்துல்லாஹ் விடவில்லை. “நீங்கள் இப்பொழுது ஒரு ஹதீஸைச் சொல்லப் போகிறீர்கள். இல்லையெனில்...” - குரலில் மிரட்டல் தொனித்தது.

இமாம் ஷீஃபாஹ் அப்துல்லாஹ்விடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு இப்படி சொன்னார்: “சரி... நான் ஒரு ஹதீஸைச் சொல்கிறேன்.”

முதலில் இமாம் ஷீஃபாஹ் அவர்கள் தான் சொல்லப் போகும் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை உரைத்தார். பின்னர் நபிமொழியை நவின்றார். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்: “நீங்கள் ‘ஹயா’வைத் தொலைத்து விட்டால் நீங்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்வீர்கள்.”

அப்துல்லாஹ் இந்த நபிமொழியைக் கேட்டவுடன் திடுக்கிட்டான். அவனது முகம் மாறியது. அண்ணலாரே அவன் முன் தோன்றி “அப்துல்லாஹ்வே. நீ ‘ஹயா’வைத் தொலைத்து விட்டால், நீ விரும்புகின்றவற்றையெல்லாம் செய்வாய்” என்று சொல்வது போலிருந்தது.

அவனை அந்த நபிமொழி ஒர் உலுக்கு உலுக்கிற்று. “நான் உங்களுக்கு தொல்லை தரவே விரும்பினேன்.” - அப்துல்லாஹ் ஒப்புக் கொண்டான். “தயவுசெய்து உங்கள் கரங்களை நீட்டுங்கள். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.” - அவன் இமாம் ஷீஃபாஹ்விடம் கெஞ்சினான்.

இந்தப் பொன்மொழி அவனது வாழ்க்கயையே மாற்றியது. தெருவில் அலைந்து திரிந்து விஷமம் செய்து கொண்டிருந்த அப்துல்லாஹ், ஹதீஸ் கலையின் மாணவராகி, பின் ஹதீஸ் கலையில் வல்லுனரானார்.

இன்று அவர் அப்துல்லஹ் பின் மஸ்லமாஹ் கன்ஆவி என்று அறியப்படுகிறார். இவரது பெயர் ‘ஸிஹாஹ் ஸித்தா’ என்று அறியப்படும் நம்பகமான ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் அடிக்கடி இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக, இமாம் அபூதாவூத் அவர்கள் அப்துல்லாஹ்விடம் கற்ற மாணவர்.

‘ஹயா’ என்றால் என்ன? கண்ணியம், வெட்கம், அடக்கம் என்று அதற்கு சாதாரணமாக பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த வார்த்தைகள் எதுவும் அதன் பொருளை முழுமையாகத் தெரியப்படுத்தவில்லை.

‘ஹயா’ என்பது அனத்துத் தீமைகளை விட்டும் நம்மைப் பாதுகாக்கும் சிறப்பான ஒரு குணத்தைக் குறிக்கிறது. நாம் தவறு செய்ய வேண்டும் என்று தூண்டப்படும்போது இயல்பாகவே நமது உள்ளத்தில் ஒரு சிறு வலி ஏற்படும். அந்தத் தன்மையும் ‘ஹயா’வில் உட்படும்.

இஸ்லாத்தில் ‘ஹயா’வுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனிப்பட்ட முற்றிலும் வேறான ஒரு விஷயம் இருக்கும். இஸ்லாத்தில் அது ‘ஹயா’. ” (ஆதாரம் : இப்னு மாஜா)

இன்னொரு பிரபலமன ஹதீஸ் சொல்கிறது: “ஈமானில் (இறைநம்பிக்கையில்) 70 கிளைகள் இருக்கின்றன. ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை’ என்பது பிரதானமானது. வழியில் கிடக்கும் தீங்கு தரும் பொருட்களை அகற்றுதல் அதில் இறுதியானது. மேலும் ‘ஹயா’ ஈமானில் ஒரு கிளையாகும்.” (ஆதாரம் : புகாரீ, முஸ்லிம்)

சில முஹத்திஸீன்கள் (ஹதீஸ் கலை வல்லுநர்கள்) இந்த ஹதீஸ் குறித்து இப்படி குறிப்பிடுகிறார்கள்: “எண் 70 என்பது பேச்சு வழக்கில் உள்ளதாகும். இந்த ஹதீஸ் எதை விளக்குகின்றது என்றால் இறைவனை ஏற்று சாட்சி பகர்வது ஈமானின் மிக முக்கிய பகுதி. ஆனால் அதுவே முழுமை அல்ல. ஈமானின் யதார்த்தம் வாழ்வின் அனைத்து அசைவுகளிலும் எதிரொலிக்க வெண்டும். அனைத்து அசைவுகளின் மையப் பகுதி ‘ஹயா’வாக இருக்கிறது. இஸ்லாமிய ஒழுக்கவியலின் அடிப்படை அஸ்திவாரமே ‘ஹயா’தான்.

‘ஹயா’ தொலைந்து விட்டால் அனைத்தும் தொலைந்து விடும். இஸ்லாத்திற்கு முன்னுள்ள அன்றைய அரேபிய ஜாஹிலிய்ய சமுதாயம் இந்த வார்த்தையை அறிந்திருந்தது. ஆனால் அதன் பொருள்களை விளங்கியிருக்கவில்லை. ‘ஹயா’வுக்கு மாற்றமான நிர்வாணம், அங்கு அன்றாட வாழ்வின் நடப்பு மட்டுமல்ல, அது ஹஜ்ஜின் மிக முக்கிய அம்சமான தவாஃபில் (கஅபாவை வலம் வருதல்) ஒர் அங்கமாகத் திகழ்ந்தது.

இதனால் அனைத்துத் தீமைகளும் அதிலிருந்து பிரவாகமெடுத்து ஒடியது. இஸ்லாம் இந்த அனைத்துத் தீமைகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளியெறிந்தது. இஸ்லாம் அந்தச் சமுதாயத்தை எந்த அளவுக்கு மாற்றியது என்றால் அங்கே ‘ஹயா’ அனைவராலும் போற்றப்படும் பண்பாக மாறியது.

இன்று வரையும், உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை குத்பாப் பிரசங்கங்களில் மூன்றாவது கலீஃபா செய்யிதினா உதுமான் (ரலி) அவர்கள் இப்படிக் குறிப்பிடப்படுகின்றார்கள்: “முழுமையான ‘ஹயா’வும், முழுமையான ஈமானும் கொண்ட மனிதர். (காமில் லில் ஹயா வல் ஈமான்.)”

‘ஹயா’வை இந்த அளவுக்கு போற்றும் வேறு ஒரு மதம் உண்டா? இஸ்லாம் சொல்லும் ஹிஜாப், ஆணும் பெண்ணும் கலக்க அது விதித்திருக்கும் தடை, ஆண்-பெண் உறவுகளில் அது கற்றுத் தரும் பாடம் இவை அனைத்தும் ‘ஹயா’வைப் பிரதிபலிக்கின்றன.

‘ஹயா’வை இழக்காத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்தப் பண்புகள் இயல்பாகவே வந்து விடும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். ஒரு பெண் தன் மகன் போரில் இறந்து விட்டார் என்று கேள்விப்படுகிறார். அவர் அந்தச் செய்தி உண்மைதானா என்று  அறிய போர்க்களம் நோக்கி ஒடுகிறார். ஆனால் அதற்கு முன் அப்பொழுதுதான் அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ஹிஜாப்’ முறைப்படி தனது உடல் முழுவதும் மூடப்பட்டிருக்கிறதா என்று சில மணித்துளிகள் எடுத்து அவர் உறுதி செய்து கொள்கிறார்.

பின்னாளில் அந்தப் பெண்ணிடம் அந்தத் துக்ககரமான சமயத்திலும் எப்படி உங்களால் ‘ஹிஜாப்’ விஷயத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று வினவப்பட்டது. அதற்கு அந்தப் பெண் இப்படிப் பதிலளித்தார்: “நான் என் மகனைத்தான் இழந்தேன். என் ‘ஹயா’வை இழக்கவில்லையே...”

இதற்குப் பின் நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தன் ‘ஹயா’வை இழக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் நிலங்கள் காலனியாதிக்கத்தின் கீழ் பிடிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரு நாகரிகத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது.

அந்த நாகரிகம் ‘ஹயா’வைப் பொறுத்தவரை இஸ்லாத்திற்கு முன்னுள்ள ஜாஹிலிய்ய சமுதாயத்தை ஒத்திருந்தது. அந்தக் காலனியாதிக்கத்தில் நல்ல ஒழுக்கங்கள் இருந்ததில்லை. ஆனால் நல்ல குண்டுகள் இருந்தன. இராணுவத்தில் துப்பாக்கி முனையிலும், அரசியல் மேலாதிக்கத்திலும் முஸ்லிம் சமுதாயங்களில் குடிகொண்டிருந்த ‘ஹயா’வின் படி கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்தது.

இந்தப் போரில் சக்திமிக்க, கவர்ச்சிமிக்க மீடியா எனும் செய்தி ஊடகங்கள் முக்கிய கருவியாகப் பயன்பட்டன. முதலில் அந்த ஊடகங்கள் என்பது புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித் தாள்கள் என்று இருந்தன. அதன் பிறகு வானொலி வந்தது. இப்பொழுது தொலைக்காட்சி.

இவைகளனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஹயா’வைப் பிடித்து கீழே சாய்க்கும் அனத்து விஷயங்களையும் பரப்புகின்றன. அசிங்கமான நடத்தைகள் இந்த மீடியாக்களில் அழகாக்கப்படுகின்றன. 20ம் நூற்றாண்டில் முஸ்லிம் சமுதாயங்களின் ஒழுக்க வீழ்ச்சி பற்றி எழுதப் போகும் வரலாற்று ஆய்வாளர்கள், நிச்சயமாக அந்த வீழ்ச்சியில் தொலைக்காட்சியின் பங்கைக் குறிப்பிடுவார்கள்.

நமது ஒழுக்க வீழ்ச்சியை நாமே உணரலாம். 10  வருடங்களுக்கு முன்பு நாம் எதனை ஜீரணிக்க முடியாமல் இருந்தோமோ அதனை நாம் இப்பொழுது சர்வ சகஜமாகச் சகித்துக்கொள்கிறோம்.

இன்னும் சில விஷயங்களில் நாம் நமது முழு கட்டுப்பாட்டையும் இழந்து விட்டோம். இன்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தொலைக்காட்சிகளில் ஒழுக்க விதிகளைக் காட்டித் தடை செய்யப்பட்ட விளம்பரங்கள் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசில் காட்டப்படுகின்றனவே... அது அதிர்ச்சி தரவில்லையா?

இவையெல்லாம் ஒழிய வெண்டும் என்றால், முஸ்லிம் சமுதாயம் தான் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டுமானால் ‘ஹயா’வைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் - தனது தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும்.

இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் இல்லாமல் இஸ்லாமிய வாழ்வு இல்லை. ‘ஹயா’ இல்லாமல் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் இல்லை.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி  ஏப்ரல் 2002 இதழில் ‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 3


யாஸ்மின் பின்த் முஹம்மத் அலீ

இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) கூறிய வகையில் நேரத்தை எவ்வாறு ஈருலக வாழ்விற்கும் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்று கூறுவதே இப்புத்தகத்தின் நோக்கம். 

நேர நிர்வாகம் குறித்து ஆங்கிலத்தில் பல புத்தகம் வெளி வந்து இருந்தாலும் தமிழில் வெளி வந்த முதல் இஸ்லாமிய நூலாக கருதப்படுவது இப்புத்தகத்தையும், எழுதியவரையும் மென்மேலும் சிறப்பிக்கிறது. 

நேரத்தை பயனுள்ள வகையில் கையாண்டு சமுதாயத்தில் பெரும் பிரளயத்தை உருவாக்கி, இஸ்லாத்தை நிலை நாட்டிய அக்கால முஹம்மது (ஸல்) அவர்கள் முதல் இக்கால மால்கம் எக்ஸும் முன்னோடியாக பதிப்புரையில் குறிப்பிட்டு கூறப்படுவது மேலும் சிறப்பு.

இரண்டு பதிப்பாக வெளி வந்துள்ள இப்புத்தகம், முதல் பதிப்பின் சிறு சிறு குறைகள் சரி செய்யப்பட்டு, சுருக்கமான சில தலைப்புகள் விரிவாக்கப்பட்டும் படிக்கும் வாசகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துள்ளார் நம்முடைய ஆசிரியர்.

இப்புத்தகத்தில் கூறும் ஒவ்வொரு விசயங்களும் குர்ஆன், ஹதீஸை மூலதனமாக கொண்டு, இவ்வுலக வாழ்வில் மனிதர்களின் நேர வீணடிப்பை சிறு சிறு எடுத்துக்காட்டுகளின் மூலம் பொருத்திக் கூறுவதை படிக்குபோதே பக் என்கிறது. நம் நிலை எதுவென்று சிந்திக்க தூண்டுகிறது.

ஒவ்வொரு எடுத்துக் காட்டையும் நம் வாழ்வோடு ஒப்பிட்டு நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளும் அளவில் மிக அற்புதமானவை. நம்மை செதுக்கி கொள்ள தூண்டுதலாக அமைகிறது அல்ஹம்துலில்லாஹ்.

இதோ புத்தகத்தில் இருந்து என்னை மிகவும் கவர்ந்த ஒரு சிறு எ.கா சுருக்கமாக உங்களுக்காக:-

ஒரு நாள் இரவு, சிறுவன் ஒருவன் அடர்ந்த காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருக்கும்பொழுது அவன் காலில் ஒரு பை தட்டுப்படுகிறது. அதை அவன் கையில் எடுத்து தடவி பார்த்தால் பை முழுவதும் கற்கள். இருட்டில் தனிமை பயத்தில் இருந்த அவன் ஒரு இடத்தில் அமர்ந்தான், பையில் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து வீசினான். 

அருகிலிருந்த ஆற்றில் விழுந்த கல் “ப்ளக்” என்று சத்தம் கொடுத்தது. அந்த சத்தத்தில் ஆறுதல் அடைந்த சிறுவன் ஒவ்வொன்றாக விடியும் வரை வீசிக் கொண்டே இருந்தான். சூரியன் உதயமாகும் தருணத்தில் வீசிய கல் மின்னியதை கண்ட சிறுவன் பையை நோக்கினால், பையில் இருந்த அனைத்தும் மாணிக்க கற்கள்.

இருந்து என்ன பயன், அதில் பெரும்பாலான கல்லை அவன் வீசி எறிந்து இருந்தான். இதனால் இறுதியில் எந்த பயனும் இன்றி கைசேதப்பட்டான் சிறுவன்.

இருள், காடு, மாணிக்க கற்களை நம் வாழ்க்கையுடன் ஒப்பிடும் ஆசிரியர், இந்த இடத்தில் நேரத்தை மாணிக்க கற்களுக்கு ஒப்பிடுகிறார். நம் அறியாமையில் விலை மதிப்பில்லாத நம் நேரம் இவ்வாறு தான் வீணாகிறது என்பதை இச்சிறு எடுத்துக்காட்டு உணர்த்துகிறது. மனதில் மாற்றத்தை தேடுகிறது.

காலம் என்பது பொன் போன்றதல்ல; மாறாக உயிர் போன்றது. காரணம், பொன் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் - உயிர் இருந்தால். ஆனால் உயிரே போனால்... ஆம்! காலம் உயிரை போன்றதுதான். என்ன விலை கொடுத்தாலும் அதை திருப்பி வாங்க முடியாது என்ற மறுக்க முடியாத உண்மையை பல இடத்தில் நம் தலையில் 'நங்'கென்று ஆணி அடிக்கும் விதமாக புத்தகம் நம்மை பயணிக்கச் செய்கிறது. திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது, நம் உலக இச்சைகளை கட்டுக்குள் கொண்டு வர.

மேலும் நேரத்தை சேமிக்கும் வழிகள், வேலைகளை எப்படி பிரித்து செய்வது, எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஈருலகிற்கும் பயனுள்ள வகையில் எவ்வாறு செலவழிப்பது என்று பல குறிப்புகளை தருகிறது இப்புத்தகம். அல்ஹம்துலில்லாஹ்.

நேரம் வீணாகிவிட்டதே என்று மரணம் வரும் தறுவாயில் சிந்திப்பதில் பயனில்லை. இனி இருக்கும் காலங்களையாவது பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்...

படிக்கவே சோம்பேறிபடும் என்னையவே ஒரே சிட்டிங்கில் படிக்க வைத்த புத்தகம், படித்த பின் டைம் டேபிள் போட வைத்த புத்தகம். என் பேவரைட் லிஸ்டில் ஆட் செய்யப்பட்ட புத்தகம்.

மதிப்புரை எழுதுவதற்காக என் வாழ்க்கை சாதனையாக இரண்டாம் முறை படித்த புத்தகம்.

கண்டிப்பாக படிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு மாற்றத்தை இப்புத்தகம் ஏற்படுத்தும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

அனைவரும் வாங்கி படியுங்கள். காலத்தை கடமையாக வலியுறுத்திய இஸ்லாத்தில் பிறந்த நாம் எவ்வாறு நம் காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம் என்று நம்மை நாமே நிற்க வைத்து கேள்வி கேட்கும் நிலைக்கு நம்மை இப்புத்தகம் தள்ளிச்செல்லும் என்பதில் ஐயமில்லை.

டிஸ்கி: பல முக்கிய விஷயங்கள் எழுத நினைத்தேன், பட் இன்னும் நீண்டு விடும் என்று குறைத்துக் கொண்டேன்.

யாஸ்மின் பின்த் முஹம்மத் அலீ

Wednesday, 1 January 2014

இஸ்லாம் சொல்லும் நீதி!

விடியல் வெள்ளி   டிசம்பர் 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


இஸ்லாமியச் சட்டங்கள் அனைத்திலும், இஸ்லாமியப் போதனைகள் அனைத்திலும் நாம் ஒரு வார்த்தையைக் காணலாம். அந்தப் பகுதி முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் இஸ்லாமிய விழுமியங்களை அந்த வார்த்தைதான் விவரிக்கும். அதுதான் “நீதி” என்ற வார்த்தை!

அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் கூறுகிறது:

நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்து கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். (அல்குர்ஆன் 57:25)

இறைத்தூதர்கள் இந்த உலகுக்கு அனுப்பப்பட்டதே நீதியை நிலைநாட்டவும் அநீதிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும்தான். பரந்த பொருளில் கூற வேண்டுமானால், நீதியைச் செய்வது என்பது அவரவருக்கு அவரவரின் உரிமைகளைக் கொடுப்பது என்பதாகும்.

ஆனால் இந்த எளிதான வார்த்தை மாறிக் கொண்டிருக்கும் சொந்த பந்தங்களில், உணர்ச்சிக் கொந்தளிப்புகளில், அச்சங்களில், முரண்பாடுகளில், இரண்டுங்கெட்டான் நிலைகளில் ஏற்படும் பெரும் பெரும் சிக்கல்களை மறைத்து விடுகின்றது.

மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ் இறைத்தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடனும், வேதத்துடனும், தராசுடனும் அனுப்பி வைத்தான். வேதத்தில் எது நீதி, எது அநீதி, எது சரி, எது தவறு என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கூறப்பட்டுள்ளன.

நல்லது எது, தீயது எது என்பதை அளந்திடவும், கணக்கிடவும் உள்ள நமது திறமையைத் தராசு குறிக்கிறது. அதனால் நாம் வேதம் சொல்கின்ற பாதையில், இறைத்தூதர்கள் விளக்கிக் காட்டிய வழியில் நமது பயணத்தைத் தொடரலாம்.

மேலும் அல்லாஹ்வின் உரிமைகளையும், பிற மக்களின் உரிமைகளையும், நம் மீதான நமது மக்களின் உரிமைகளையும் இந்த வேதமும், தராசு என்ற நல்லது தீயதுகளை அளக்கும் கருவியும் நமக்குக் கற்று தருகின்றன.

மேலும் அவை இவர்களுக்கிடையே எப்படிச் சமமாக நடக்க வேண்டும் என்பதையும் நமக்குக் கற்றுத் தருகின்றன. இறைத்தூதர்களும் அதைத்தான் நமக்குக் கற்றுத் தருகின்றனர்.

அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஒரு வாழ்க்கை என்பது தனிப்பட்ட முறையிலும், ஒன்றுபட்ட நிலையிலும் நடுநிலையான செயலாகும்.

அறநெறி மிக்க ஒரு சூழலில் பெரும்பாலோர் நீதமாக நடக்க முடியும். ஆனால் இஸ்லாம் அதனைப் பின்பற்றுபவர்களை நீதமாக நடக்கும்படி கட்டளையிடுகிறது. கடுமையான, முரண்பாடான நிலையிலும் இஸ்லாம் நீதத்தோடு நடக்க கட்டளையிடுகிறது.

பிற மனிதர்களோடு உறவாடுகின்றபோது இரண்டு பெரும் தடைகள் நீதமாக நடப்பதற்கெதிராக வந்து நிற்கும். அவை அன்பும், வெறுப்பும்.

அன்பு

நமது நெருங்கிய சொந்தங்களோடு உறவாடுகின்றபோது, முதல் பெரும் தடையான அன்பை எப்படி முறியடிப்பது என்பதைத் திருக்குர்ஆன் அழகாக நமக்குக் கற்றுத் தருகின்றது.

விசுவாசிகளே! நிங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தையருக்கோ, அல்லது உங்கள் உறவினர்களுக்கோ விரோதமாக இருந்த போதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர்கள் பணக்காரராயிருந்தாலும் சரி, ஏழையாயிருந்தாலும் சரி (உண்மையையே) கூறுங்கள். ஏனென்றால் அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன்.

ஆகவே நிங்கள் (உங்கள்) சரீர இச்சைகளைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள். (தாட்சண்யத்தையோ அல்லது குரோதத்தையோ முன்னிட்டு) நிங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும், நிச்சயமாக அல்லாஹ், உங்களுடைய (இத்தவறான) செயலை நன்கறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 57:25)

இதுதான் திருக்குர்ஆன் வழங்கும் நீதிக்கும் சுய இலாபத்திற்கும் இடையில் உள்ள என்றென்றும் நிலைத்திருக்கிற முரண்பாடுகளைக் குறித்த தீர்மானமாகும். நீதமாக இருங்கள், அது உங்கள் நெருங்கிய சொந்தங்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே.

அறியாமையில் இருக்கும் மக்கள் பிறருக்கு அநீதம் செய்வதன் மூலம் அவர்களது சுய இலாபத்தைப் பாதுகாப்பதாக நினைக்கின்றனர். அந்த அறியாமை இருளில் இருக்கும் மக்கள் தங்கள் சுய இலாபத்தையே எப்பொழுதும் கணக்கு போடுகின்றனர்.

ஆனால் அல்லாஹ்வின் மேல் உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இந்த மனப்பான்மையை விட்டு விலகி விடுகின்றனர். மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மக்களின் நாட்டங்களுக்கெல்லாம், பாதுகாவலன் அல்லாஹ்தான் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.

மேலும் நீதமாக இருக்கும்படி நாம் அவனது கட்டளைகளை நிறைவேற்றினால் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பான். இஸ்லாம் சொல்லும் நீதியானது யாருக்கும் சாந்திருக்கும் தன்மையை அகற்றிவிடும்.

வெறுப்பு

நீதியைச் செலுத்துவதில் இன்னொரு பெரிய தடை - வெறுப்பு.

திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

விசுவாசிகளே! அல்லாஹ்வுக்காக, நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம், அவர்களுக்கு அக்கிரமம் செய்யும்படி, உங்களைத் தூண்டாதிருக்கவும். (எவ்வளவு குரோதமிருந்தபோதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வையே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 5:8)

இதை இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், உங்கள் எதிரியோடு உறவாட வேண்டியிருந்தாலும் நீங்கள் அநீதியைச் செய்ய முடியாது.

எதிரியை மனிதாபிமானமற்று நடத்துவதையே இயல்பான, படிப்பறிவில்லாத, பண்படாத ஒருவன் விரும்புவான். இப்படித்தான் “ஜாஹிலிய்யா” என்னும் அறியாமைக் காலத்தில் இருந்த சமூகத்தின் மனோநிலை இருந்தது. அதுதான் இன்றைய நவீன ”வெளிச்சமடைந்த” நாகரிகமடைந்த காலத்திலும் நடைமுறை.

இஸ்லாம் எப்படி இவற்றை அடியோடு கருவறுக்கிறது என்பதை மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் தெளிவாக உனர்த்துகிறது. இதனை விசுவாசிகளுக்குக் கட்டளையாக இஸ்லாம் பிறப்பிக்கிறது.

நீதி, நியாயமான தண்டனையை வேண்டுகிறது. அதனால்தான் இஸ்லாம் “கண்ணுக்குக் கண்” என்று சொல்கிறது. இதற்கு “அப்பாவிகளின் கண்ணுக்கு அப்பாவிகளின் கண்” என்று பொருள் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

கண்ணுக்குக் கண் என்பதற்கு “குற்றத்திற்குப் பலியானவரின் கண்ணுக்குக் குற்றம் செய்தவரின் கண்” என்றுதான் அர்த்தம் கொள்ள முடியும். ஆனால் பாதிக்கப்பட்டவனைக் கொடுமையானவன் என்று அழைப்பது வினோதமாக உள்ளது.

1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்ட மேற்கண்ட கட்டளைகள் ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்டிற்று. அங்கே பணக்காரன், ஏழை, நண்பன், பகைவன், முஸ்லிம், முஸ்லிமல்லாதவன், ஆள்பவன், ஆளப்படுபவன் - இப்படி அனைவரும் சமமாக, நீதமாக நடத்தப்பட்டார்கள்.

அங்கே கலீஃபாவுக்கும், ஒரு சாதாரணக் குடிமகனுக்கும் இடையில் ஒரு பிரச்னை உண்டாகிவிட்டால், இருவரும் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்கு நிற்க வேண்டும். இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதற்கு நிறைய உதாரணங்களைக் காணலாம்.

முஸ்லிம்கள் ஆண்ட அந்தப் பொன்னான காலகட்டத்தில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற இந்த கோட்பாடுதான் நிலவியது. முஸ்லிம்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் கூட, இந்த நீதி பரிபாலனம் நிலைத்து நின்றிருந்தது.

சமீப கால வரலாற்றில் நடந்த ஒரு சம்பவம் இதற்குப் போதுமான சான்றாகும். இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலம். ஒரு துண்டு நிலத்திற்குச் சொந்தம் கொண்டாடும் பிரச்னை ஒன்று ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் எழுந்தது. ஹிந்துக்கள் அது ஒரு கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றனர். முஸ்லிம்கள் அது ஒரு மஸ்ஜிதுக்குச் சொந்தமான இடம் என்றனர். இரு பக்கமும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள். கலவரம் வெடித்து விடும் சூழ்நிலை.

அந்த ஆங்கிலேய நீதிபதிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் முடிவெடுப்பதற்குரிய சரியான தகவல்கள் அவரிடம் இல்லை. உண்மை எது என்று அவருக்குப் பிடிபடவில்லை.

அதனால் அவர் இரு தரப்பாரையும் அழைத்து, யாரவது ஓர் உண்மை பேசும் நல்ல மனிதர் இதற்குச் சாட்சி சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அவர்கள் “சரி” என்றனர். ஒரு முஸ்லிமை அனைவரும் நாடினர். அவர் ஒர் இமாம். இறையச்சம் அதிகம் உடையவர். அவருக்கு இந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரியும்.

அந்த இமாம் வழக்கில் சாட்சி சொல்லும்படி அழைக்கப்பட்டார். ஊரே கொந்தளித்துக் கொண்டிருந்தது. மொத்த முஸ்லிம் சமுதாயமும் அந்த இமாமிடம் சமுதாயத்திற்காக இந்த வழக்கில் வெற்றி பெற உதவ வெண்டும் என்று கேட்டுக் கொண்டது. அவரது சாட்சியை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.

அவர் நீதிமன்றத்தில் இவ்வாறு சான்று பகர்ந்தார்: “இந்த வழக்கில் ஹிந்துக்கள் பக்கமே நியாயம் உள்ளது. முஸ்லிம்களின் வழக்கு அடிப்படையற்றது.”

அந்த இமாமின் சாட்சி முஸ்லிமல்லாதவர்களுக்குச் சாதகமாக இருந்தாலும் அவர் அவரது சமுதாயத்துக்குத் துரோகம் இழைக்கவில்லை.

எந்த வித அச்சமும், ஒருதலைப்பட்சமும் இல்லாமல் அவர் சொன்னது முஸ்லிம்களின் நீதி செலுத்தும் குணத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இந்த வகையான நீதியே இன்றைய உலகின் தேவை!

(விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பு கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே திர்ப்பளிக்குமாறும், நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனாகவும், உற்று நோக்குகிறவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 5:8)

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH