Friday 3 January 2014

'ஹயா'வும் நம்பிக்கையும்!


இமாம் ஷீஃபாஹ் இப்னு ஹஜ்ஜாஜ் அவர்கள் தன் குதிரையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்துல்லாஹ் அவரை இடைமறித்தான். அப்துல்லாஹ் ஒரு விஷமக்காரன் என்று எல்லோருக்கும் தெரியும். அவன் பாவத்திலேயே ஊறித் திளைத்தவன். தனது வாழ்க்கையையே பாவத்தால் சமைத்துக் கொண்டவன். அது பற்றி நாணமோ, வெட்கமோ சிறிதும் இருந்ததில்லை.

அப்துல்லாஹ் இடைமறித்ததும் இமாம் ஷீஃபாஹ்வுக்கு இப்பொழுது ஒரு பிரச்னை காத்திருக்கிறது என்று தெரிந்து விட்டது. இமாம் ஷீஃபாஹ் ‘அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீத்’ (நபிமொழிகளில் முஃமின்களின் தலைவர்) என்று பெயர் பெற்றவர். தலைசிறந்த ஹதீஸ்கலை வல்லுநர்.

இது அப்துல்லாஹ்வுக்கும் தெரியும். ஆனால் இன்று இவரிடம் கொஞ்சம் சில்மிஷம் பண்ணுவோம் என்று முடிவெடுத்து விட்டான். “ஷீஃபாஹ்… எனக்கொரு ஹதீஸைச் சொல்லும்” என்று கண்களில் குறும்புடன் இமாம் ஷீஃபாஹ்விடம் அப்துல்லாஹ் கேட்டான்.

“ஹதீஸ்களைக் கற்றுக் கொள்வதற்கு இதுவல்ல வழி” என்று பதில் பகர்ந்தார் இமாம் ஷீஃபாஹ். அப்துல்லாஹ் விடவில்லை. “நீங்கள் இப்பொழுது ஒரு ஹதீஸைச் சொல்லப் போகிறீர்கள். இல்லையெனில்...” - குரலில் மிரட்டல் தொனித்தது.

இமாம் ஷீஃபாஹ் அப்துல்லாஹ்விடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு இப்படி சொன்னார்: “சரி... நான் ஒரு ஹதீஸைச் சொல்கிறேன்.”

முதலில் இமாம் ஷீஃபாஹ் அவர்கள் தான் சொல்லப் போகும் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை உரைத்தார். பின்னர் நபிமொழியை நவின்றார். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்: “நீங்கள் ‘ஹயா’வைத் தொலைத்து விட்டால் நீங்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்வீர்கள்.”

அப்துல்லாஹ் இந்த நபிமொழியைக் கேட்டவுடன் திடுக்கிட்டான். அவனது முகம் மாறியது. அண்ணலாரே அவன் முன் தோன்றி “அப்துல்லாஹ்வே. நீ ‘ஹயா’வைத் தொலைத்து விட்டால், நீ விரும்புகின்றவற்றையெல்லாம் செய்வாய்” என்று சொல்வது போலிருந்தது.

அவனை அந்த நபிமொழி ஒர் உலுக்கு உலுக்கிற்று. “நான் உங்களுக்கு தொல்லை தரவே விரும்பினேன்.” - அப்துல்லாஹ் ஒப்புக் கொண்டான். “தயவுசெய்து உங்கள் கரங்களை நீட்டுங்கள். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.” - அவன் இமாம் ஷீஃபாஹ்விடம் கெஞ்சினான்.

இந்தப் பொன்மொழி அவனது வாழ்க்கயையே மாற்றியது. தெருவில் அலைந்து திரிந்து விஷமம் செய்து கொண்டிருந்த அப்துல்லாஹ், ஹதீஸ் கலையின் மாணவராகி, பின் ஹதீஸ் கலையில் வல்லுனரானார்.

இன்று அவர் அப்துல்லஹ் பின் மஸ்லமாஹ் கன்ஆவி என்று அறியப்படுகிறார். இவரது பெயர் ‘ஸிஹாஹ் ஸித்தா’ என்று அறியப்படும் நம்பகமான ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் அடிக்கடி இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக, இமாம் அபூதாவூத் அவர்கள் அப்துல்லாஹ்விடம் கற்ற மாணவர்.

‘ஹயா’ என்றால் என்ன? கண்ணியம், வெட்கம், அடக்கம் என்று அதற்கு சாதாரணமாக பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த வார்த்தைகள் எதுவும் அதன் பொருளை முழுமையாகத் தெரியப்படுத்தவில்லை.

‘ஹயா’ என்பது அனத்துத் தீமைகளை விட்டும் நம்மைப் பாதுகாக்கும் சிறப்பான ஒரு குணத்தைக் குறிக்கிறது. நாம் தவறு செய்ய வேண்டும் என்று தூண்டப்படும்போது இயல்பாகவே நமது உள்ளத்தில் ஒரு சிறு வலி ஏற்படும். அந்தத் தன்மையும் ‘ஹயா’வில் உட்படும்.

இஸ்லாத்தில் ‘ஹயா’வுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனிப்பட்ட முற்றிலும் வேறான ஒரு விஷயம் இருக்கும். இஸ்லாத்தில் அது ‘ஹயா’. ” (ஆதாரம் : இப்னு மாஜா)

இன்னொரு பிரபலமன ஹதீஸ் சொல்கிறது: “ஈமானில் (இறைநம்பிக்கையில்) 70 கிளைகள் இருக்கின்றன. ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை’ என்பது பிரதானமானது. வழியில் கிடக்கும் தீங்கு தரும் பொருட்களை அகற்றுதல் அதில் இறுதியானது. மேலும் ‘ஹயா’ ஈமானில் ஒரு கிளையாகும்.” (ஆதாரம் : புகாரீ, முஸ்லிம்)

சில முஹத்திஸீன்கள் (ஹதீஸ் கலை வல்லுநர்கள்) இந்த ஹதீஸ் குறித்து இப்படி குறிப்பிடுகிறார்கள்: “எண் 70 என்பது பேச்சு வழக்கில் உள்ளதாகும். இந்த ஹதீஸ் எதை விளக்குகின்றது என்றால் இறைவனை ஏற்று சாட்சி பகர்வது ஈமானின் மிக முக்கிய பகுதி. ஆனால் அதுவே முழுமை அல்ல. ஈமானின் யதார்த்தம் வாழ்வின் அனைத்து அசைவுகளிலும் எதிரொலிக்க வெண்டும். அனைத்து அசைவுகளின் மையப் பகுதி ‘ஹயா’வாக இருக்கிறது. இஸ்லாமிய ஒழுக்கவியலின் அடிப்படை அஸ்திவாரமே ‘ஹயா’தான்.

‘ஹயா’ தொலைந்து விட்டால் அனைத்தும் தொலைந்து விடும். இஸ்லாத்திற்கு முன்னுள்ள அன்றைய அரேபிய ஜாஹிலிய்ய சமுதாயம் இந்த வார்த்தையை அறிந்திருந்தது. ஆனால் அதன் பொருள்களை விளங்கியிருக்கவில்லை. ‘ஹயா’வுக்கு மாற்றமான நிர்வாணம், அங்கு அன்றாட வாழ்வின் நடப்பு மட்டுமல்ல, அது ஹஜ்ஜின் மிக முக்கிய அம்சமான தவாஃபில் (கஅபாவை வலம் வருதல்) ஒர் அங்கமாகத் திகழ்ந்தது.

இதனால் அனைத்துத் தீமைகளும் அதிலிருந்து பிரவாகமெடுத்து ஒடியது. இஸ்லாம் இந்த அனைத்துத் தீமைகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளியெறிந்தது. இஸ்லாம் அந்தச் சமுதாயத்தை எந்த அளவுக்கு மாற்றியது என்றால் அங்கே ‘ஹயா’ அனைவராலும் போற்றப்படும் பண்பாக மாறியது.

இன்று வரையும், உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை குத்பாப் பிரசங்கங்களில் மூன்றாவது கலீஃபா செய்யிதினா உதுமான் (ரலி) அவர்கள் இப்படிக் குறிப்பிடப்படுகின்றார்கள்: “முழுமையான ‘ஹயா’வும், முழுமையான ஈமானும் கொண்ட மனிதர். (காமில் லில் ஹயா வல் ஈமான்.)”

‘ஹயா’வை இந்த அளவுக்கு போற்றும் வேறு ஒரு மதம் உண்டா? இஸ்லாம் சொல்லும் ஹிஜாப், ஆணும் பெண்ணும் கலக்க அது விதித்திருக்கும் தடை, ஆண்-பெண் உறவுகளில் அது கற்றுத் தரும் பாடம் இவை அனைத்தும் ‘ஹயா’வைப் பிரதிபலிக்கின்றன.

‘ஹயா’வை இழக்காத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்தப் பண்புகள் இயல்பாகவே வந்து விடும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். ஒரு பெண் தன் மகன் போரில் இறந்து விட்டார் என்று கேள்விப்படுகிறார். அவர் அந்தச் செய்தி உண்மைதானா என்று  அறிய போர்க்களம் நோக்கி ஒடுகிறார். ஆனால் அதற்கு முன் அப்பொழுதுதான் அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ஹிஜாப்’ முறைப்படி தனது உடல் முழுவதும் மூடப்பட்டிருக்கிறதா என்று சில மணித்துளிகள் எடுத்து அவர் உறுதி செய்து கொள்கிறார்.

பின்னாளில் அந்தப் பெண்ணிடம் அந்தத் துக்ககரமான சமயத்திலும் எப்படி உங்களால் ‘ஹிஜாப்’ விஷயத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று வினவப்பட்டது. அதற்கு அந்தப் பெண் இப்படிப் பதிலளித்தார்: “நான் என் மகனைத்தான் இழந்தேன். என் ‘ஹயா’வை இழக்கவில்லையே...”

இதற்குப் பின் நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தன் ‘ஹயா’வை இழக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் நிலங்கள் காலனியாதிக்கத்தின் கீழ் பிடிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரு நாகரிகத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது.

அந்த நாகரிகம் ‘ஹயா’வைப் பொறுத்தவரை இஸ்லாத்திற்கு முன்னுள்ள ஜாஹிலிய்ய சமுதாயத்தை ஒத்திருந்தது. அந்தக் காலனியாதிக்கத்தில் நல்ல ஒழுக்கங்கள் இருந்ததில்லை. ஆனால் நல்ல குண்டுகள் இருந்தன. இராணுவத்தில் துப்பாக்கி முனையிலும், அரசியல் மேலாதிக்கத்திலும் முஸ்லிம் சமுதாயங்களில் குடிகொண்டிருந்த ‘ஹயா’வின் படி கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்தது.

இந்தப் போரில் சக்திமிக்க, கவர்ச்சிமிக்க மீடியா எனும் செய்தி ஊடகங்கள் முக்கிய கருவியாகப் பயன்பட்டன. முதலில் அந்த ஊடகங்கள் என்பது புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித் தாள்கள் என்று இருந்தன. அதன் பிறகு வானொலி வந்தது. இப்பொழுது தொலைக்காட்சி.

இவைகளனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஹயா’வைப் பிடித்து கீழே சாய்க்கும் அனத்து விஷயங்களையும் பரப்புகின்றன. அசிங்கமான நடத்தைகள் இந்த மீடியாக்களில் அழகாக்கப்படுகின்றன. 20ம் நூற்றாண்டில் முஸ்லிம் சமுதாயங்களின் ஒழுக்க வீழ்ச்சி பற்றி எழுதப் போகும் வரலாற்று ஆய்வாளர்கள், நிச்சயமாக அந்த வீழ்ச்சியில் தொலைக்காட்சியின் பங்கைக் குறிப்பிடுவார்கள்.

நமது ஒழுக்க வீழ்ச்சியை நாமே உணரலாம். 10  வருடங்களுக்கு முன்பு நாம் எதனை ஜீரணிக்க முடியாமல் இருந்தோமோ அதனை நாம் இப்பொழுது சர்வ சகஜமாகச் சகித்துக்கொள்கிறோம்.

இன்னும் சில விஷயங்களில் நாம் நமது முழு கட்டுப்பாட்டையும் இழந்து விட்டோம். இன்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தொலைக்காட்சிகளில் ஒழுக்க விதிகளைக் காட்டித் தடை செய்யப்பட்ட விளம்பரங்கள் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசில் காட்டப்படுகின்றனவே... அது அதிர்ச்சி தரவில்லையா?

இவையெல்லாம் ஒழிய வெண்டும் என்றால், முஸ்லிம் சமுதாயம் தான் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டுமானால் ‘ஹயா’வைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் - தனது தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும்.

இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் இல்லாமல் இஸ்லாமிய வாழ்வு இல்லை. ‘ஹயா’ இல்லாமல் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் இல்லை.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி  ஏப்ரல் 2002 இதழில் ‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை

No comments:

Post a Comment