Wednesday 10 May 2017

அபாய உலகில் சில மணிநேர அகோரப் பயணம்: “துரோகி” நூலாய்வு - ஆமினா முஹம்மத்

நேர்த்திமிகு அடித்தளத்துடன் ஆரம்பித்த கட்டடத்தை மெல்ல மெல்ல சுவாரசியமும் எதிர்பார்ப்பும் கொண்ட ‘துரோகி’ எனும் மாளிகையாய் வடித்து, கட்டுமானம் முதல் பிரவேசம் வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் நாம் இணைந்தே இருப்பது போன்ற அனுபவத்தை முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை உருவாக்கியிருக்கும் மாயக்காரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்! அந்த நேர்த்தியை சிதைத்திடாத வண்ணம், ஆங்கில தடம் அறியா வண்ணம் தமிழுக்கு இடப்பெயர்த்திருக்கிறார் எம்.எஸ். அப்துல் ஹமீது. ஆம்... அப்துல் ஹமீது ட்ரய்டரை மொழிபெயர்க்கவில்லை, துரோகியாக இடப்பெயர்த்திருக்கிறார்! 2017 சென்னை புத்தகத்திருவிழா வரவுகளில் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற புத்தகங்களில் ஒன்றாக ‘துரோகி’ இருந்தது. - புதிய விடியல்  ஆசிரியர்

அபாய உலகில் சில மணிநேர அகோரப் பயணம்!


இப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் துரோகி யார்? இரட்டைக் கோபுரத்தை தரைமட்டமாக்குவதில் சதி செய்த அமெரிக்காவா? குவாண்டனாமோவின் சிறைவாசிகளா? அவர்கள் மீது டெர்ரி கொண்ட இரக்கத்திற்காக அவரை தொந்தரவு செய்யும் மேலதிகாரிகளா? என்ற தேடல் இன்னும் வாசிப்பை சுவாரசியப்படுத்தியது. இந்தக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட புத்தகம்தான் ‘துரோகி’.

முதல் பக்கத்தில் துருதுருவென அமெரிக்க வீதிகளில் வலம் வந்த சராசரி இளைஞனான டெர்ரிதான் பின்னட்டையில் தாடி சகிதம் முஸ்லிம் தோற்றத்தில் காட்சி தந்துள்ளார் என்பதே பெரும் சிலிர்ப்பை உண்டாக்கிச் சென்றது. ஹாலிவுட் படம் போலவே புத்தகத்தை துவக்கியிருக்கிறார் டெர்ரி. தரைமட்டமாக்கப்பட்ட, இரட்டைக் கோபுரங்கள் அமைந்திருந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்ட பட்டாளத்தினரில் ஒருவரான டெர்ரி அவ்விடத்தில் சற்று அதிகமாக சிரித்து விட்டார். அவர் சிரிப்பின் காரணம் ‘இதுதான் மனிதகுலத்திற்கு நேர்ந்த மிகப் பெரிய துயரச் சம்பவம்’ என்று அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த வாசகம். இந்நேரம் பல்லை நறநறவென கடித்து முஸ்லிம்களுக்கெதிரான பகையை நெஞ்சில் முழுக்க நிரப்பி தன் தாய்நாட்டை சீண்டியவர்களை பழி வாங்கும் குரோதத்துடன் டெர்ரி மனித மிருகமாய் மாறியிருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்கா அவனிடம் எதிர்பார்த்தது.

ஆனால் அதிகாரவர்க்கத்தின் திட்டத்திற்கு டெர்ரி பலியாகவில்லை. ‘இதுவரை நடந்த மனிதப் பேரிழப்புக்கு அருகில் கூட இது வர முடியாது தெரியுமா?’ எனத் தன் சிரிப்பிற்கான காரணத்தை அவர் தன் சக படைவீரர்களிடம் சொன்னபோது எவரும் காது கொடுத்துக் கேட்கவில்லை. இனி புத்தகம் முழுவதும் இதே நிலைதான்... டெர்ரி தவிர பெரும்பாலும் அனைத்து படைவீரர்களும் மனரீதியாக குவாண்டனாமோ கைதிகளை துன்புறுத்தப் போகும் அரக்கர்களாக மாறியிருந்தனர். சாதாரண சிறை அதிகாரியாக டெர்ரி குவாண்டனாமோ செல்வது, அங்கே சிறைவாசிகளுக்கு நேர்ந்த கொடுமை, டெர்ரி முஸ்லிமானது என அனுபவங்கள் பக்கங்களாக விரிகின்றன. எனினும் ஒவ்வொரு பக்கத்திலும் பேரதிர்ச்சியைத் தருகிறார் டெர்ரி!

குவாண்டனாமோ... கியூபாவின் தீவில் அமெரிக்காவால் கட்டப்பட்ட சிறை. சகல பாதுகாப்புடன் கட்டப்பட்ட கொட்டளம். அப்படி இருந்தும் தலையணை கொண்டு கழுத்து இறுக்கி மூன்று கைதிகள் தற்கொலை செய்து சிறைச்சாலையின் கொடூரத்தை உலகுக்கு வெளிச்சம் காட்ட முனைந்தனர். அதன் பின் விக்கிலீக்ஸ் தன்னிடமிருக்கும் கோப்புகளை பத்திரிகைகள் மூலம் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியது. இன்னும் பல மொழிகளில் துர் அனுபவ நூல்கள் வந்தாலும் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலைத்தளங்களில் இதன் அகோரங்கள் குறித்து பேசப்பட்டாலும் அவை துல்லியமாக இருந்ததில்லை. முதன்முறையாக ‘துரோகி’ மூலம் இருட்டப்பட்ட அறைக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிறைக் கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளை ஒவ்வொரு பக்கமும் விவரிக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் உஷணத்தீவு அது. விஷ ஜந்துக்கள் சர்வ சாதாரணமாக மிகைத்திருக்கும் அகோர பூமி. இவையெல்லாவற்றையும் விட வெறுப்பால் உஷ்ணத்திலும் செய்கைகளால் விஷங்களினும் கொடிய மனிதர்களை பயிற்சி சிறைக்கைதிகளிடம் அவர்கள் காட்டவிருக்கும் முகம் கற்பனைக்கும் எட்டிராதது. மரண ஓலங்கள் கூட நாட்டுக்குக் கேட்காது. மேல்முறையீடு, மனு என எதுவும் குவாண்டனாமோ அகராதியில் இல்லை. படங்களில் கூட காட்சிப்படுத்தப்படாத கொடூரங்களின் அரங்கேற்றம் நாள்தோறும் நடந்தது. காதைக் கிழிக்கும் இசையை மிகையழுத்த ஒலியில் நீண்ட நேரம் ஒலிக்கச் செய்வதும், சதையையும் எலும்பையும் இறுக்கும் அளவுக்கு குளிரூட்டப்பட்ட அறையில் கைதிகளை விடுவதும், விலங்குகளை ஏவி கைதிகளை துன்புறுத்துவதுமாக சித்திரவதைகள் பல வண்ணங்களில் அரங்கேற்றம் செய்யப்பட்டன!

சாத்தான்களின் கண்காணிப்பில்தான் பாவப்பட்ட சிறைக்கைதிகள் விடப்பட்டுள்ளனர். ஆம்... இவர்கள் அப்பாவிகள் என்பது அமெரிக்காவுக்கும் கூட தெரியும் என்று விக்கிலீக்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. இந்த உண்மை நிலை மனோவியல் ரீதியாக பயிற்சியளிக்கப்பட்ட எந்த அதிகாரிக்கும் புரியாது. ஆனால் நாம் முன்பே சொன்னது போல் ஆரம்பம் முதலே இதில் நாட்டமில்லாத டெர்ரி மனிதத் தன்மையுடன் கைதிகளிடம் நடந்துகொண்டார். இத்தனை சித்திரவதைகளுக்குப் பின்னும் சிறைவாசிகள் முகத்தில் படரும் புன்னகை டெர்ரியை வெகுவாக ஈர்த்தது. பாங்கோசையை சிதைத்து ஒலிக்கச் செய்வதன் மூலமும், இஸ்லாத்தைப் பற்றி தவறாக பேசுவதன் மூலமும் மனரீதியாகவும் அவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

எனினும் அந்த அழுத்தங்கள் பெயரளவு முஸ்லிம்களையும் தன் மார்க்கத்தில் வலுவுள்ளவர்களாக மாற்றிய உளவியல்களையும் கவனிக்கத் தவறவில்லை டெர்ரி. இவையெல்லாம் சேர்த்து இன்னும் அவர்களுடன் நெருங்கிப் பழகும் ஆர்வத்தை டெர்ரிக்கு தூண்டியது. அதுதான் டெர்ரிக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியது. கைதிகளின் மீது இரக்கம் கொண்ட டெர்ரி மற்ற அதிகாரிகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்ததை மற்றோர்கள் துல்லியமாக கவனித்துவிட்டார்கள். இதன் மூலம் டெர்ரிக்கும் அடி உதை விழுந்தது. அதையும் மீறி அவர் மனம் கைதிகள் பற்றி சிந்திக்கலாயிற்று! அது அவரை தூய மார்க்கத்தின் பால் நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்தியது. டெர்ரி ‘முஸ்தஃபா அப்துல்லாஹ்’வானார்.

‘துரோகி’யின் பக்கங்கள் 203 உடன் நிறைவு பெற்றாலும் அடுத்தடுத்த வாசிப்புக்கு அழைத்துச் செல்ல தூண்டியிருக்கிறது. அதில் முக்கியமாக டெர்ரி தான் சந்தித்ததாகக் கூறும் வித்தியாசமான மனிதர் டேவிட் ஹிக்ஸ். சிறையில் உள்ளோர் தாம் குற்றமற்றவர்கள் என்பதை சொல்வது வழக்கம். ஆனால் டெர்ரி சந்தித்த டேவிட் ஹிக்ஸ் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். உசாமாவுடன் தான் பழகியதையும் அல் கொய்தாவில் தாம் பயிற்சி பெற்றதையும் மறைக்காமல் பகிர்ந்து தன் நிலையை ஒப்புக்கொண்டிருந்ததாக டெர்ரி குறிப்பிட்டிருந்தார். இந்த டேவிட் ஹிக்ஸ் குவாண்டனாமோவிற்கு வந்த முதல் கைதிக் குழுவில் ஒருவர். அவர் மீதான குற்றத்தை விலக்கி அவரை விடுதலை செய்தது நீதிமன்றம். டேவிட் ஹிக்ஸ் எழுதிய “குவாண்டனாமோ: எனது பயணம்” என்ற நூலும் சித்திரவதைக் கூடத்தின் சித்திரத்தை அப்பட்டமாக விளக்குகிறது. இன்னும் முன்னாள் கைதிகளின் நூல்கள் அதிகம் காணக் கிடைக்கின்றன. வாய்ப்பு கிடைப்பின் அதையும் வாசித்துப் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

சமூகத்தின் தேவை, தேவையின் விழிப்புணர்வு, விழப்புணர்வின் இலக்கு, இலக்கின் பயணம் என அனைத்தையும் ஒருங்கே திட்டமிட்டு சிந்தனையை சரியான திசைக்குக் கொண்டு செல்லும் இலக்கியச்சோலையின் மற்றுமொரு மைல்கல் ‘துரோகி’.

அபாயகரமான உலகை நோக்கிய அகோரப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தை சிலமணி நேர வாசிப்பு கொடுத்து விட்டுச் செல்கிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

ஆமினா முஹம்மத்

இக்கட்டுரை புதிய விடியல் ஏப்ரல் 16-30, 2017 இதழில் வெளியானது.

Saturday 6 May 2017

நெருக்கடியில் முஸ்லிம்களின் நிலைப்பாடு!


இன்று முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலகட்டம். ஆட்சி பீடங்கள் எதிரிகளின் கைகளில் அடைக்கலமாகி விட்ட நேரம் இது. மாட்டு உயிரை விட மலிவாக முஸ்லிம்களின் உயிர்கள் மாறிவிட்ட காலம் இது.

இந்தச் சமயத்தில் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு மிக முக்கியம் வாய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இக்கட்டான காலத்தில் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள், எப்படி தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இன்று இந்தியா மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மட்டும் கழுத்துச் சுறுக்கு இடப்படுகிறது. பலருக்கும் முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தில் மட்டும் மாச்சரியங்கள் ஏற்பட்டு விடும்.

இதே நிலை அன்றைய மக்காவிலும் இருந்தது. மக்காவின் மதச் சடங்குகளைத் தாண்டி வெளியிலுள்ள வணக்க வழிபாட்டு முறைகள் எதனையும் எதிர்க்கும் பழக்கம் மக்காவாசிகளுக்கு இருந்ததில்லை. இறைபக்தர்களும், வியாபாரிகளுமாக வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வந்து போகின்ற ஊராக மக்கா இருந்ததால் கலாச்சார சகிப்புத்தன்மை இயல்பாகவே அங்குள்ள மக்களுக்கு இருந்தது.

புனித கஅபா ஆலயம் உள்ள பகுதியில் அமைதி குலையாமல் குறைஷிகள் சிறப்பு கவனம் எடுத்து பார்த்துக் கொண்டார்கள். அங்கே உரிமை மீறல்களையும், இரத்தம் சிந்துவதையும் அவர்கள் அனுமதித்திடவில்லை.

அதனால்தான் மக்காவாசிகளின் பலதெய்வக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த வரகா இப்னு நவ்ஃபல், ஸைத் இப்னு கத்தாப் போன்ற வேற்று மதப் பண்டிதர்கள் எந்தவித அச்சமுமில்லாமல் மக்காவில் சுதந்திரமாக வாழ முடிந்தது. அப்படியானால் முஹம்மத் (ஸல்) அவர்களின் புதிய மார்க்கத்தை மட்டும் மக்காவாசிகள் மல்லுக்கட்டி எதிர்த்தது ஏன்?

முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் இருந்த அதிக முக்கியத்துவத்தை அவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்தார்கள். தங்கள் சமூக அந்தஸ்து தகர்ந்து போகும் என்று அஞ்சினார்கள். அதனால்தான் அவர்கள் அண்ணலாரையும், அவர்தம் தோழர்களையும் ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தார்கள்.

இன்று இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் எதிரிகள் அதிகமாக குறி வைப்பதும் இதே காரணத்திற்காகத்தான். இஸ்லாம் தழைத்தோங்கி விட்டால், முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளுடன் வாழ ஆரம்பித்து விட்டால் அவர்களது குடுமிகள் ஆட்டம் கண்டு விடும் என்று அஞ்சுகிறார்கள்.

மக்காவுக்கு சிறிது தூரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் முஸ்லிம்கள் ஒரு தடவை கூட்டாக தொழுகையில் ஈடுபட்டிருந்ததை குறைஷிகள் பார்த்தவுடன் அவர்களைத் தாக்கினார்கள். ஆட்கள் குறைந்த பலஹீனமான நிலையிலும் முஸ்லிம்கள் கையில் கிடைத்ததைக் கொண்டு திருப்பித் தாக்கினார்கள். ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) ஒட்டகத்தின் நாடி எலும்பைக் கொண்டு எதிரிகளைத் தாக்கினார்.

ஒரு சமூகத்தின் மேல் தொடர்ந்து நடத்தப்படும் துன்புறுத்தல்களும், புறக்கணிப்புகளும் அதன் தனித்துவம் பாழ்படுவதற்குக் காரணமாகி விடும். அச்சம் என்பது அடிமைத்தனத்தின் பாதையைத் திறந்து கொடுக்கும்.
அதனால்தான் அண்ணலார் அவர்தம் தோழர்களை சுதந்திரமாக வாழ வைக்க முயற்சிகளை எடுத்தார்கள். எதிரிகளின் விமர்சனங்களையும் கிண்டல்களையும் கண்டு பயந்து ஒதுங்கி நிற்காமல் மக்காவிலேயே அவ்வப்பொழுது பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தங்கள் உரிமைகள் எதனையும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. குறைஷிகளின் பிடியிலிருந்த கஅபாவில் வைத்து மக்கள் கேட்கும்படி உலக மறையை உரக்க ஓதினார்கள். பகிரங்கமாக பல பேர் பார்க்கும் வண்ணம் தொழுதார்கள்.

நிராகரிப்பாளர்களுக்கு பலமான பதிலடிகள் அடங்கிய குர்ஆன் பாகங்கள் இறங்கிய காலகட்டமாக இருந்தது அது. ஊர்க்காரர்களின் வெறுப்புக்கு அஞ்சி அண்ணலார் அந்த அருள்மறை வசனங்களையெல்லாம் பகிரங்கப்படுத்தாமல் மூடி வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட வீழ்ச்சி நேரிட்டுவிடக் கூடாது என்று அல்லாஹ் அண்ணலாருக்குக் கட்டளை பிறப்பித்தான்.

(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும். நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை. அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான். (ஹூது 11:12)

இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் பலஹீனமாக இருந்த மக்கா வாழ்க்கையில் தங்கள் சக்திக்கேற்ப சத்தியத்தின் பாதையில் மக்களை அழைத்து மார்க்கத்தைப் பாதுகாத்தார்கள். மதீனா சென்றதும் தங்கள் பலத்தை ஒன்று திரட்டி எதிரியுடன் பொருதினார்கள்.

ஆக, எந்நிலையிலும் நமது கலாச்சாரத்தையும், உரிமைகளையும் விட்டுவிடக் கூடாது. எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவது அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.