Tuesday, 15 November 2016

கரை சேர்க்கும் கப்பலோட்டிகள்!


1857ம் ஆண்டு செப்டம்பர் 12ம் நாள் “சென்ட்ரல் அமெரிக்கா” என்ற அமெரிக்க கப்பல் வட கரோலினா கடலில் மூன்று நாள் சூறாவளியில் சிக்கி அலைக்கழிந்தது. அது தறி கெட்டு மூழ்கத் தொடங்கிய போது அதிலிருந்த 152 பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக உயிர் காக்கும் படகுகளில் ஏற்றி அனுப்பினார் அந்தக் கப்பலின் மாலுமி.

கப்பலில் எஞ்சியுள்ள 400 பயணிகளையும் காப்பாற்ற வழி தெரியாமல் அந்த மாலுமியும், இதர ஊழியர்களும் தவித்தனர். அந்தக் கப்பலோட்டிகளுக்கு தங்களது உயிரும் உடலும் பெரிதாகத் தெரியவில்லை. வீட்டில் தங்களின் வருகைக்காக காத்திருக்கும் வயதான பெற்றோரின், இளம் மனைவியரின், பால் வடியும் குழந்தைகளின் முகங்களும் நினைவிற்கு வரவில்லை. கப்பலிலுள்ள 400 பயணிகள்தான் நினைவில் நின்றார்கள். ஆனால் ஹடீராஸ் முனையில் அந்த கப்பல் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் மூழ்கி விட்டது.

முடிந்த வரை காப்பாற்றி விட்டோம், இனி நாம் தப்புவதில் தவறில்லை என மாலுமியும், சக கப்பலோட்டிகளும் முடிவு செய்து நீந்தி வெளியேறி இருந்தாலும் உலகம் அவர்களை பழித்திருக்காது. 44 வயதே நிரம்பிய அந்தத் தலைமை மாலுமியின் பெயர் கமாண்டர் வில்லியம் லூவிஸ் ஹெண்டன் (William Lewis Herndorn).

ஒரு கப்பல் பயணம் தொடங்கிவிட்டால் அதன் முழு பொறுப்பும் அந்த மாலுமிக்கும், அதில் பணி புரியும் சக ஊழியர்களுக்குமே சாரும். அதே போன்றுதான் சமூக சேவகர்களும்.

சமூகம் என்ற கப்பலை சுமூகமாக ஓட்டிச் சென்று, காப்பாற்றி கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூக சேவகர்களுக்கு இருக்கிறது.

சமூக சேவகர்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள். இப்படி பல திறமை உடையவர்களை, பல கலைஞர்களை, பலதரப்பட்ட மக்களை ஒரே குழுவாக ஆக்கி, ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இந்தச் சமூகத்தின் இடர்பாடுகளை நீக்கி இதன் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும்.

அந்தக் குழு கட்டுக்கோப்பாக செயல்படுவதற்கு, அனைத்து சமூக ஊழியர்களும் ஓர் ஒழுங்குடன் பணியாற்றுவதற்கு, அவர்களை சமுதாய முன்னேற்றத்தின்பால் அழைத்துச் செல்வதற்கு ஓர் உறுதியான தலைமை தேவை. அந்தத் தலைமையும், ஊழியர்களும் சேர்ந்து ஒரு குழுவாக மாறி செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குழு அதன் இலட்சியத்தை அடையும். இதனைத்தான் இஸ்லாமும் இயம்புகிறது.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். (சூரா அன்னிசா 4:59)

ஒரு கப்பலை மாலுமி எப்படி செலுத்துவாரோ அதே போன்று அந்தக் குழுவை தலைமை வழிநடத்திச் செல்லும். அந்தத் தலைமைக்குக் கீழ் கப்பலின் ஊழியர்களாக சமூக ஊழியர்கள் செயல்பட வேண்டும். கப்பல் கடலில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்று தன் இலக்கை அடைவதற்கு அந்த மாலுமியும், அதன் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாகப் பணியாற்றுவது போன்று இவர்களும் பணியாற்ற வேண்டும்.

கடல் சீற்றம், புயல், கொட்டும் மழை என்பன போன்ற அமைதியற்ற சூழல் இந்தக் குழுவுக்கும் நேரிடலாம். இத்தகைய காலகட்டங்களில் இறையச்சமும், கூர்மதியும், துணிவும், தன் இழப்பை துச்சமென கருதும் தீரமும் கொண்ட மாலுமிகளாலும், கப்பலின் ஊழியர்களாலும்தான் சமூகம் என்ற கப்பலைக் காப்பாற்ற முடியும்.

கப்பல் ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள். அவர்களின் குணம், திறமை, மனோநிலை, ஆர்வம் எல்லாம் மாறுபடும். அவர்களெல்லோரையும் அரவணைத்துச் சென்று, கப்பலைக் கரை சேர்ப்பதுதான் மாலுமிகளின் பணி.

நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த தோழர்களும் ஒரே மாதிரியாக இருந்திடவில்லை. பலவிதத்தில் மாறுபட்டு நின்றார்கள். வட துருவங்களும், தென் துருவங்களும் அங்கே இருந்தன. நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினாலும் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அபூபக்கர் (ரலி) போன்றோரும், சில வேளைகளில் மனக் கஷ்டமும், நிராசையும் அடைந்த உமர் (ரலி) போன்றோரும் அங்கே இருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் பேரப் பிள்ளைகளை முத்தமிட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘‘எனக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் இன்று வரை நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” எனக் கூறிய நாட்டுப்புறத்து அரபியைப் போன்றோரும் அங்கே இருந்தனர். முதலிரவில் தன் மனைவியிடமிருந்து பிரிந்து சென்று போர்க்களத்தில் ஷஹீதான நபித்தோழர் ஹன்ழலா (ரலி) போன்ற வீரத் தியாகிகளும் அங்கே இருந்தனர். இஸ்லாத்திற்காக கொடூரமான சித்திரவதைகளைத் தாங்கிய பிலால் (ரலி) போன்ற பொறுமையின் சிகரங்களும் அங்கே இருந்தனர்.

இப்படி அத்தனை வித்தியாசமான குணங்களையும் உட்கொண்டு, அவர்களுடன் தோளோடு தோள் நின்று, பொறுமையுடன் அவர்களை வளர்ச்சியை நோக்கி வழிநடத்திச் சென்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அதாவது, அவர்களைத் தூய்மைப்படுத்தி பண்படுத்தினார்கள். வெவ்வேறு நோக்கத்தில் இருந்தவர்களை ஒரே இலட்சியத்தின்பால் இட்டுச் சென்றார்கள்.

இப்படிப்பட்ட தலைமையும், சமூக ஊழியர்களும் கப்பலோட்டிகளாக மாறி சமூகம் என்ற கப்பலை முன்னேற்றம் என்ற கரையில் கொண்டு சேர்க்க முன்வர வேண்டும்.

விடியல் வெள்ளி  ஜனவரி 2015 (மனதோடு மனதாய்...)

No comments:

Post a Comment