Monday, 7 October 2013

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்துரை - 1


ஸாதிக் மீரான், தம்மாம்


நேர நிர்வாகம் என்ற தலைப்பு, நூலின் உட்புகுமுன் எதிர்மறையான சிந்தனையை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.

காரணம், இதுவரை நேர நிர்வாகம் குறித்து நாம் வாசித்த நூல்களில் அதுநாள் வரை கேட்டே இராத புதிய ஆங்கில வார்த்தைகள், ஒன்றிற்கு பத்து முறை படித்தாலும் மனதில் நிற்காத சுலோகன்கள், எளிதில் விளங்குவது போன்று தோன்றும் ஆனால் மனதில் நிற்காத உதாரணங்கள் என்பவைகளைத்தான் அதிகம் கண்டிருக்கிறேன்.

ஆனால் இந்நூல் வாசிக்க வாசிக்க சலிப்பில்லா நடை, பாமரனும் விளங்கிக் கொள்ளும் உதாரணங்கள், அவ்வப்போது நம் காதுகளில் விழும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் என்பவை, சொல்ல வரும் விஷயத்தை எளிதில் மனதில் பதிய வைப்பவைகள்.

நேர நிர்வாகத்தை மேலைநாட்டு மினுமினுப்பில் ஒப்பீடு செய்பவர்களுக்கு இந்த நூலில் புதுமைகள் இல்லாமல் தோன்றலாம். ஆனால் மரணத்தை நோக்கிய பயணத்தில், மனிதன் தன் இறைவனை நெருங்குவதற்கு தடையாக இருக்கும் நேரத்தை எங்ஙணம் நிர்வகிக்க முடியும் என்பதற்கான பல நூறு வழிகள் நூல் முழுக்க விண்மீன்களாய் விரவிக் கிடக்கின்றன.

வாசிப்பினூடே மனதில் பதிந்த சில சிறப்பம்சங்களுள் சில: 

• நேரம் என்ற மாணிக்கக் கல்லை வெறும் கல் என்று எண்ணிக் கொண்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி என்ன செய்வது என்று தெரியாமல் நம் வாழ்க்கை முழுவதையும் வீணாக தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். (பக்கம் : 22)

• ஒரு நிமிடத்தில் என்னென்ன செய்யலாம் எனும் 21 குறிப்புகள். (பக்கம் : 28-31)

• ஒரு ஆசிரியரின் குடுவை நிரப்பும் கதை. (பக்கம் : 56)

• மனதைக் கட்டுப்படுத்தி ஷைத்தானை ஆள்பவர்கள்தான் நேரத்தை ஆக்கப்பூர்வமாக ஆளும் சாதனையாளர்களாக இம்மையிலும்,
மறுமையிலும் ... (பக்கம் : 91)

• வாழ்க்கை என்பது சாவை நோக்கிய ஒரு பயணம். நாமெல்லாம் மரணத்தின் வாயிலில் கைதி போல் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றோம். நமக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் நெருங்க நெருங்க ஒன்றும் செய்ய இயலாமல் ”ஙே” என்று விழித்துக் கொண்டிருக்கின்றோம். (பக்கம் : 112)

• மனிதர்கள் நேரத்தைக் கொல்வது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நேரம் ஆரவாரமின்றி அமைதியாக மனிதனைக் கொன்று கொண்டிருக்கிறது. (பக்கம் : 115)

• நாம் எப்போதும் பிஸியாக - பரபரப்பாக இருக்கின்றோம். ஆனால் நாளின் இறுதியில் இஸ்லாத்திற்காக என்ன செய்து கிழித்தோம்? (பக்கம் : 130)

• ஆம்! மரணம் அனேக தர்க்கங்களுக்கு அணை போடுகின்றது. முடிவு கட்டுகின்றது. (பக்கம் : 135)

குறைத்திருக்கலாமோ என்று தோன்றும் சில விஷயங்கள்:

• காலம் என்பது ஓர் அருள் என்ற தலைப்பில் இரவும் பகலும் குறித்து குர்ஆன் சொல்லும் 8 வசனங்கள். இதனை சுருங்க இரண்டு அல்லது மூன்று வசனங்களில் சுருக்கி இருக்கலாமோ? (பக்கம் : 20 - 21)

• நேரத்தைத் திட்டமிடுதலும், ஒருங்கிணைத்தலும் எனும் தலைப்பில் சூறா யூசுஃபின் 47 – 48 வசனங்கள் மன்னர் கண்ட கனவிற்கான விளக்கமாகவே குர்ஆன் சொல்கிறது. யூசுஃப் (அலை) அவர்களின் தனிப்பட்ட திட்டமிடல் அல்ல என்பது சரியாக இருக்குமோ? (பக்கம் : 71)

• நேரத்தை வீணடிப்பது பற்றிய விழிப்புர்வு எனும் தலைப்பில் எடுத்தாளப்பட்டுள்ள சூறதுன் நூரின் 27 – 28 வசனங்கள் சொல்ல வரும் விடயம் அதுவல்ல என்பதால் அதனை தவிர்த்திருக்கலாமோ? (பக்கம் : 39 - 40)

• நூலின் துவக்கத்தில் தலைப்புகளை எளிதில் சென்று படிக்கும் வகையில் ஒரு உள்ளடக்கப் பட்டியலை இணைத்திருக்கலாமோ?

மொத்தத்தில் வர்ணங்கள் பல தீட்டி விளம்பரம் செய்து மக்களின் பணத்தை சட்டைப் பைகளில் திணித்துக் கொள்ள நவீன சிந்தனைவாதிகள் நடத்தும் நேர மேலாண்மை குறித்த வகுப்புகளுக்கு சாவு மணி அடிக்கும் நூல் இது என்றால் அது மிகையல்ல.

இந்நூலினூடே ஆசிரியர் ஏராளமான செய்திகளை சொல்லியிருக்கின்றார் என்றாலும் அவைகளில் முத்தாய்ப்பாக, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்களே, இதோ நீங்கள் அன்றாடம் படிக்கும் திருமறையிலும், நபிமொழியிலும் நிர்வாகவியல் குறித்த ஏராளம் செய்திகள் நிரம்பிக் கிடக்கின்ற, அவைகளை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா எனும் கேள்வியே!

இவ்வளவு எளிதாக நிர்வாகவியல் குறித்த நூல் எழுத முடியுமா எனும் ஆச்சரியமான கேள்வியை இஸ்லாமிய எழுத்தாளர்களிடையே, சிந்தனைவாதிகளிடையே இந் நூல் எழுப்பப் போவது உண்மை.

அந்த வகையில் இந்த நூல் ஒரு மைற்கல் என்றால் அது மிகையல்ல!


நன்றி: puthiyadesam.blogspot.ae

No comments:

Post a Comment