Thursday 17 October 2013

சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?





சட்டம் என்பது சமுதாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் நிலைகளும், தேவைகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. மனித அறிவு காலத்தாலும், பார்வையாலும் குறுகியது; வரையறுக்கப்பட்டது. மேலும் சட்டமியற்றுபவர்களின் பார்வைகள் ஒருபக்கச் சார்பாக இருப்பது இயல்பு.

இதனால் மனிதக் கரங்கள் இயற்றிய சட்டங்கள் அதன் ஓட்டைகளைக் காட்டிக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இந்தக் குறைபாடுகளை புத்திசாலிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மனிதக் கரங்கள் இயற்றிய சட்டங்கள் இறை நம்பிக்கையிலிருந்து (ஈமான்) துளிர்த்தது அல்ல. அது தனி மனித ஒழுக்கத்திற்கு வழி காட்டுவதில்லை.

ஒரு மனிதன் இந்தச் சட்டங்களை உடைத்து, மீறி நடப்பானேயானால், அவனுக்கு எந்தக் குற்ற மனப்பான்மையும் வருவது இல்லை. அவன் வருங்கலாத்தில் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை.

சட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் கண்களுக்கு இவர்கள் குற்றவாளிகள் என்று தெரியாதவரை இவர்கள் எந்தக் கவலையுமின்றி ஊர் சுற்றலாம்.

அப்படியே அவர்கள் அகப்பட்டுக் கொண்டாலும் அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படும் வரை அவர்கள் நிரபராதிகளே! இப்படித்தான் சட்டம் அவர்களைப் பார்க்கச் சொல்கிறது.

ஆனால் இறை உதவியின் அடிப்படையில் அமைந்த சட்ட முறையில் இம்மாதிரி குறைபாடுகள் இல்லை.

தனி மனிதனின் நம்பிக்கையையும், மனசாட்சியையும் நன்கறிந்து, அதே போல் சமுதாயத்தின் நாடித் துடிப்பையும் நன்கறிந்து இறைச்சட்டம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.

இதன் அர்த்தங்களை அலசிப் பார்ப்பதிலோ, இதனைப் புரிந்து கொள்வதிலோ எந்தச் சிரமுமில்லை. இது மிகவும் தெளிவாக, அழகாக வகுக்கப்பட்டுள்ளது. இதனை விளங்குவதற்கு பெரிய சட்ட ஞானமோ, இடைத்தரகர்களோ தேவையில்லை. இறைச்சட்டம் காலத்தாலும், இடத்தாலும் கட்டுப்பட்டதில்லை. அது கடந்த காலத்தின் நாள் குறிக்கப்பட்ட ஒன்று அல்ல. அது வருங்காலத்தில் செயல்படுத்துவதற்கு, இன்னும் விரிவுபடுத்துவதற்கு நெகிழ்ச்சித்தன்மை கொண்டது.

இதெற்கெல்லாம் காரணம் மிக எளிதானது. அனைத்து அதிகாரங்களும் கைவரப் பெற்ற, அனைத்தையும் அறிந்த அந்த அல்லாஹ்வின் புறத்திலிருந்து இந்தச் சட்டம் வருகிறது.

அவன் ‘அலீம்’ (யாவையும் அறிந்தவன்). அவனது ஞானம் காலத்தாலும், இடத்தாலும் கட்டுப்பட்டதல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

யாரும் அவனை விட இரக்கமுள்ளவனாகவும், கருணையாளனாகவும் இருக்க முடியாது. அவனது இரக்கமும், கருணையும் மனித இனத்திற்கு மட்டுமல்ல, இந்த மொத்த உலகத்தின் மேலும் படர்ந்திருக்கிறது. விலங்கினங்களுக்கும், தாவர இனங்களுக்கும், இன்னும் அனைத்துப் பொருட்களுக்கும் அவனது கருணையின் கடாட்சம் விரிந்து செல்கிறது.

எந்தப் பாரபட்சமுமில்லாமல், சட்டத்தை மட்டுமே மனதிற்கொண்டு, உண்மையான, நியாயமான, நீதியான, அனைத்து மக்களுக்கும் உகந்த சட்டத்தை இயற்றக்கூடிய ஒருவன் இருக்க முடியுமென்றால் அவன் அல்லாஹ்வாகத்தான் இருக்க முடியும். அவனைத்தவிர வேறு எந்தக் கொம்பனாலும் முடியாது.

இஸ்லாம் கூறும் சட்டம் மனிதர்களுக்கிடையில் உள்ள விவகாரங்களைத் தீர்மானிக்கிறது. அதே போல் சுற்றுப்புறச் சூழல்களுக்கிடையிலான உறவுகளையும் எடுத்தியம்புகிறது. அது நீதிமிக்கதாயும், தராசின் முள்ளைப் போல் நடுநிலையோடும் இருக்கிறது.

சட்டத்தை மீறி யாரும் இருக்க முடியாது. எல்லோரும் சட்டத்திற்குட்பட்டவர்களே!

இந்த எளிய, அடிப்படை விஷயங்களே ஒவ்வொருவரையும் அவர்களது வாழ்வைச் செம்மைப்படுத்த உதவுகிறது. நீதியும், நல்லவைகளைச் செய்யும்பொழுது ஏற்ப்படும் மனமகிழ்ச்சியும் இதனாலேயே வருகின்றன. அடுத்தவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவது, தனக்குரிய உரிமைகளைப் பெறுவது ஆகிய பண்புகள் இதனாலேயே வருகின்றன.

சரி எது, தவறு எது என்பதில் இங்கு குழப்பமோ, முரண்பாடோ இல்லை. இதில் ஒரே ஒரு விஷயம் என்னவெனில் தவறானவைக்கு ஒரு படி மேலே நாம் சென்று சரியானவையைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்.

இதற்குத்தான் சட்டம் என்பதற்கு முன்னால் இறைநம்பிக்கை (ஈமான்) வருகிறது.

இறைநம்பிக்கை ஒன்றே இறைவனோடு ஒரு மனிதனின் உறவை வரையறுக்கிறது. இந்த விஷயம் தெளிவு பெற்று விடுமேயானால், இதற்குப் பிறகு உள்ளவை எல்லாம் எளிதாகிவிடும்.

அதனால்தான் ஆரம்ப கால இஸ்லாமிய சமுதாயத்தில் நாம் வீண் விவாதங்களையும், வெட்டி விமர்சனங்களையும் காண முடிவதில்லை.

இன்றைய தினத்திலிருந்து மது குடிப்பது ஹராம் என்று குர்ஆன் கூறியது. இந்தக் குர்ஆன் வசனம் இறங்கியதும் யாரும் மதுவுக்கான இரசாயன விளக்கத்தைத் தேடி அலையவில்லை. அல்லது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் உள்ள மதுவைத்தான் குர்ஆன் தடை செய்கிறது; ஆதலால் நச்சுப் பொருட்கள் தென்படும் வரை மது அருந்தலாம் என்று யாரும் வீண் விவாதங்களையும், வெட்டி விமர்சனங்களையும் செய்து கொண்டிருக்கவில்லை.

யாரும் இதனால் ஏற்படும் சமூக, பொருளாதாரா இழப்புகளைக் கணக்குப் போட்டுப் பார்க்கவில்லை (இப்பொழுது ‘நாகரிகமடைந்த’ இந்த உலகம் சிந்திப்பது போல).

இந்தக் குர்ஆன் வசனம் இறங்கியவுடன் அவர்கள் செய்ததெல்லாம் அவர்களிடம் இருந்த மதுக் குப்பிகளை உடைத்துத் தள்ளியதுதான்; மதுவைச் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை எட்டி உதைத்ததுதான். அதனால் அன்றைய அரேபிய வீதிகளெல்லாம் மது வெள்ளக் காடாகக் காட்சியளித்தது.

குர்ஆன் வட்டியை ஹராமாக்கிய பொழுது, இன்றைக்கு எழுப்பப்படும் கேள்விகளை அன்று யாரும் கேட்கவில்லை.

ஆனால் இறைவனின் வார்த்தைகள் தெளிவாக இருக்கின்றன.

வட்டியில் ஈடுபடுவது, வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கு எழுதுவது, வட்டிக்கு சாட்சியாக இருப்பது இவையனைத்தும் தெளிவாகத் தடுக்கப்பட்டுள்ளது.

வட்டியில் ஈடுபடுவது இறைவன் மீதும், இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் போர் தொடுப்பதற்கு ஈடாகும்.

வட்டி வாங்குவது நமது பொருள் வளத்தைக் குறைக்கும். ஆனால் ஜக்காத் வழங்குவது நமது பொருள் வளத்தைக் கூட்டும்; அபிவிருத்தி செய்யும்!

இது உண்மையா? பொய்யா? - இந்தக் கேள்விக்கு இறைவனின் வார்த்தைகள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஆழத்தைப் பொறுத்தே பதில் அமையும்.

விபச்சாரம் இஸ்லாத்தில் மிகப் பெரிய பாவம். இந்தத் தீமை தனிமனிதனோடு நின்று விடுவதில்லை. இது மொத்த சமுதாயத்தையும் பாதிக்கிறது. அதே போல் இந்தத் தீமையின் பாதிப்பு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிகாலத்திலும் எதிரொலிக்கும்.

ஆனால் உரிய சாட்சிகள் இல்லாமல் இதற்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது.

ஓர் ஆண் அல்லது ஒரு பெண் மீது யாராவது பொய்யான குற்றச்சாட்டைச் சொன்னால் அவருக்கு கடுமையான தண்டனை உண்டு.

ஆனால் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். ஒரு பெண் அண்ணலாரிடம் வருகிறாள். “நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு அதற்குரிய தண்டனையைத் தாருங்கள” என்று கூறுகிறாள்.

அந்தத் தீமையின் பொழுது அவளை யாரும் பார்க்கவுமில்லை. அவள் மீது யாரும் குற்றம் சுமத்தவுவில்லை. இருந்தும் அவளை அண்ணலாரிடம் வர வைத்தது எது?

அதுதான் அல்லாஹ்வின் மேலுள்ள அச்சம்! இந்த உலகில் யாரும் பார்க்காவிட்டாலும் மறுவுலகில் நமக்கு நிரந்தர தண்டனை உண்டு என்ற அச்சம்.

ஒரு முஸ்லிம் தன்னை இஸ்லாமிய ஷரீஅத்தால் ஆள வேண்டும்.

இஸ்லாமியச் சட்டங்களைச் சொல்லும் நூல் மிகவும் மெலிதானது. பிற சமூகங்களில் உள்ள சட்ட நூல்களைப் போல் தூக்க முடியாத கனத்துடன் தொகுதி தொகுதியாக இருக்காது.

மேலை நாடுகளில் சட்டங்கள் அதிகமாக உள்ளன. ஆனால் அந்தச் சமுதாயம், சட்டப்படி வாழவில்லை. இதனை நாம் கண் கூடாகக் காணலாம்.

மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் மது அருந்துவதில்லை. சூதாடுவதில்லை. வட்டியில் மூழ்குவதில்லை. ஆனால் அந்த நாடுகளில் இவைகளுக்கு தடைகள் இல்லை.

அங்கு இவை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அங்குள்ள முஸ்லிம்கள் இவற்றை விட்டும் நீங்கி இஸ்லாமிய ஷரீஅத்திற்கு முழுவதும் கட்டுப்பட்டு வாழ எத்தனிக்கிறார்கள்.

ஈமானுக்கும், நடத்தைக்கும் உள்ள உறவுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

டாக்டர் செய்யது M. தர்ஷ்


இக்கட்டுரை விடியல் வெள்ளி எப்ரல் 2000 மாத இதழில் நடுப்பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment