Thursday, 3 October 2013

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்


Time Management In Islamic Perspective

நேர நிர்வாகம் குறித்த முதல் தமிழ் இஸ்லாமிய நூல்


இம்மை - மறுமை வாழ்வை வெற்றிகரமாக மாற்ற அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டியான இஸ்லாத்தின் பார்வையில் நேர நிர்வாகம் குறித்து வெளிவரும் முதல் இஸ்லாமிய நூல்!


முதல் பதிப்பின் முன்னுரை

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (Time Management in Islamic Perspective) குறித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் நான் அறிந்தவரை தமிழில் முழுமையான வடிவில் ஒரு நூலும் வெளிவரவில்லை.

அந்த அடிப்படையிலேயே இந்த நூலை எழுதும் முயற்சியில் இறங்கினேன்.

அல்லாஹ்வும், அவனுடைய அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் காலத்தைப் பற்றிச் சொன்னவைகள் அனைத்தையும் என்னால் முடிந்தவரை இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறத் துடிப்பவர்களுக்கு இந்நூல் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற எண்ணம் உள்ளவர்கள் - வந்தோம் வாழ்ந்தோம் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து, தங்கள் வாழ்க்கைப் போக்கை சிறிதளவாவது மாற்றிக்கொண்டால் இந்நூல் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லலாம். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக!

இந்நூலில் போதுமான அளவு திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும், நபிவழிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

அத்தோடு வாசகர்களுக்கு நூலின் நோக்கம் எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக நேரத்தைக் குறித்து சமகால நிகழ்வுகளையும், உதாரணங்களையும் இணைத்துள்ளேன். நேரத்தை நெறியோடு கடைப்பிடித்து சாதனைகள் புரிந்த சாதனையாளர்களின் நடைமுறைகளையும் ஆங்காங்கே தொட்டுக் காட்டியுள்ளேன். இது வாசிப்பு சலிப்பு தட்டாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறையே இறுதியானவை, அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகளே அறுதியானவை. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் இஸ்லாத்தின் பார்வையில் நேர நிர்வாகம் குறித்து எழுதப் போகின்றேன் என்று சொன்னவுடனேயே தன்னிடமிருக்கும் காலித் அல் ஜெரேய்ஸி எழுதிய Time Management - From Islamic & Administrative Perspective என்ற அருமையான நூலை ‘இது உங்களுக்கு நிச்சயம் உதவும்’ என்று எடுத்துத் தந்தார் என் நண்பர் அமீரகவாழ் பொறியாளர் M.Z. இஸ்மாஈல் அவர்கள். உண்மையில் அந்த நூல் எனக்கு பெரிதும் உதவியது.

அதேபோல் நேர நிர்வாகம் குறித்து பல தகவல்களை அனுப்பித் தந்தார் என் நண்பர் சௌதிவாழ் ஸாதிக் மீரான் அவர்கள்.

இலங்கையைச் சேர்ந்த முஹம்மத் ஸாதிக் என்பார் நடத்திய ‘இஸ்லாமிய நேர மேலாண்மை’ என்ற வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வகுப்பு மூலமும் நான் பல தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். தனது பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனையே எனக்கு அனுப்பித் தந்து உதவினார் ஸாதிக்.

‘நூல் எழுதி முடித்தாயிற்றா?’ என்று கேட்டு அவ்வப்பொழுது என்னை ஊக்குவித்துக் கொண்டிருந்தார் விடியல் வெள்ளி மாத இதழின் ஆசிரியர் முஹம்மத் இஸ்மாஈல் அவர்கள்.

இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்நூலை எழுதி முடிக்க எனக்கு பல நண்பர்கள் உதவினார்கள்.

அவர்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவன்.

இந்நூலைத் தட்டச்சு செய்து தந்துதவிய சகோதரர்களும் என் நன்றிக்கு உரித்தானவர்கள்.

இந்த நூலைப் படித்துவிட்டு நிறைகுறைகளை எழுதி  msahameed@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தந்தால் எனது எழுத்துகளைச் சீர்திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

M.S. அப்துல் ஹமீது


இரண்டாம் பதிப்பின் முன்னுரை

இந்த நூல் இரண்டாம் பதிப்பைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
முதல் பதிப்பு வெளிவந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்து விட்டது என்று சொன்னார்கள்.
முதல் பதிப்பை வாசித்த என் அன்புக்குரிய வாசகர்களில் சிலர் இந்த நூலின் நிறைகுறைகளை எனக்குத் தெரிவித்தனர். நல்ல பல ஆலோசனைகளைத் தந்தனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அவர்கள் சுட்டிக்காட்டிய குறைகளை முடிந்த வரை இந்த இரண்டாம் பதிப்பில் திருத்தியுள்ளேன். அவர்களின் அருமையான ஆலோசனைகளின் படி இதில் சிலவற்றை இணைத்துள்ளேன். முதல் பதிப்பில் சுருக்கமாகக் கூறப்பட்ட சில தலைப்புகளை இதில் விரிவாக்கியுள்ளேன்.
எனினும், இந்த நூல் முழுமை பெற்று விட்டதாக நான் கூறமாட்டேன். “நேர நிர்வாகம்” என்பது கடல் போன்றது.
இந்த இரண்டாம் பதிப்பின் நிறைகுறைகளையும் வாசகர்கள் எனக்குச் சுட்டிக்காட்டுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நிறைகள் எல்லாம் நிறைந்த இறைவனைச் சாரும். குறைகள் என்னைச் சாரும்.
அந்தக் குறைகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் திருத்த முயற்சி செய்வேன்.
வாசகர்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி! ஜஸாக்குமுல்லாஹ் ஃகைர்.


M.S. அப்துல் ஹமீது
(msahameed@gmail.com)
விலை : ரூ. 50
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை, 25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை – 600 003
மின்னஞ்சல் : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

No comments:

Post a Comment