Friday, 25 October 2013

மக்கள்தொகைப் பெருக்கம் : தீர்வு என்ன?கலிஃபோர்னியாவில் அமைந்திருக்கும் ஸான்டீகோ என்ற மிருகக்காட்சி சாலை உலகப் புகழ் பெற்றது.

அன்று அந்த மிருகக்காட்சி சாலையே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்தது. அங்குள்ள ஒரு காண்டாமிருகம் அழகிய குட்டியை ஈன்றெடுத்தது. அந்தச் சந்தோஷத்தை வாரங்கள் பலவாக அவர்கள் கொண்டாடினார்கள்.

அந்த மிருகக்காட்சி சாலையில் கரடி, கங்காரு, யானை என்று எந்த மிருகம் குட்டிகளை ஈன்றாலும் அங்கு மகிழ்ச்சி பிரவாகமெடுத்து ஓடும்.

ஆம்! இந்த உலகத்திற்கு வரும் ஒவ்வொன்றாலும் இந்த உலகம் வளம் செழிக்கின்றது.

ஆனால் ஒரு மனிதக் குழந்தை இந்த உலகில் ஜனித்து விட்டால் இந்தச் சந்தோஷத்தைக் காணோம். உலகிலுள்ள ‘அறிவு ஜீவிகள்’ இது கவலைப்படத்தக்கது என்கின்றனர். இந்த உலகம் ஒரு குழந்தையைத் தாங்கிக் கொண்டதால் அது ஏழ்மைப்பட்டு விடும் என்று கூறுகின்றனர்.

ஒரு காண்டாமிருகம் குட்டியைப் பெறும்பொழுது இது அருட்கொடை என்று சந்தோஷப்படும் இந்த உலகம், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அதைச் சுமை எனக் கருதுகிறது என்னே வினோதம்!

இதில் இன்னொரு வினோதம் அதைப் பொருளாதாரப் பிரச்னையாக ஆக்குவது.

ஒரு காண்டாமிருகம் சுமார் 50 கிலோ உணவை ஒரு நாளைக்கு உண்ணுகிறது. ஆனால் மனிதனோ சில கிலோ உணவையே உண்ணுகிறான்.

மேலும் காண்டாமிருகம் அது உட்கொள்ளும் எதனையும் அது உற்பத்தி செய்வதில்லை. வேறு எந்த மிருகமும் இதனைச் செய்வதில்லை.

மனிதர்கள் மட்டுமே அவர்களது உணவை உற்பத்தி செய்கின்றனர்.

சிங்கம் ஆட்டைத் தின்கிறது. அதே ஆட்டை மனிதரும் உண்ணுகிறான். ஆனால் சிங்கம் ஆடுகளை வளர்ப்பதில்லை. மனிதன்தான் வளர்க்கிறான்.

ஐரோப்பாவிலுள்ள ஒரு வகை கழுகுகள் கோழிகளைத் தின்கின்றன. மனிதனும் அவற்றை உண்ணுகிறான்.

ஆனால் மனிதன் மட்டுமே கோழிகளை உணவூட்டி வளர்க்கிறான். மக்கள்தொகைப் பெருக்கத்தோடு பொருளாதராத்தை இணைத்துப் பேசுபவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

அந்த விவாதம் மற்ற எல்லா மிருகங்களுக்குத்தான் பொருந்தும்; மனிதனுக்கு மட்டும் அது பொருந்தாது.

ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு பயங்கரப் பிரச்சாரம் நடந்து வருவதை நாமறிவோம். இந்த உலகம் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஒரு பெரிய பிரச்னையையே எதிர்நோக்குகிறதாம்.

மிக நுணுக்கமாகப் பார்த்தால் இந்தச் சிந்தனை ஜாஹிலிய்யா கால சமூகங்களில் மிகச் சிறிய அளவில் நிலவி வந்ததை நாம் காணலாம். அங்கே பெற்ற பிள்ளைகளைத் தங்கள் கரங்களாலே கொன்றார்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனிருந்தால் அவர்களுக்கு உணவு முதற்கொண்டு அனைத்து செலவுகளையும் செய்து வளர்க்க வேண்டும்.

இன்று இது பெரிய அளவில் அமுல்படுத்தப்படுகிறது.

தாமஸ் ராபர்ட் மால்தஸ் (1766-1834) என்றொரு அறிஞர். மக்கள்தொகைப் பெருக்கத்தால் நாம் உணவு உற்பத்தியைப் போதுமான அளவு செய்ய முடியாமல் போவோம் என்ற கருத்தை இவர்தான் முன்வைத்தார்; இன்னும் சொல்லப் போனால் பலவந்தமாகத் திணித்தார்.

மக்கள்தொகை வளர்ச்சி 2, 4, 8 … (Geometric Progression) என்று இருப்பதாக அவர் சொன்னார்.

ஆனால் உணவு உற்பத்தி வளர்ச்சியோ 2, 3, 4 ... (Arithmetic Progression) என்று இருப்பதாக அவர் சொன்னார்.

துவக்கத்தில் அனைவருக்கும் அதிக உணவு கிடைத்தாலும், இன்னும் இரண்டு பரம்பரைக்குப் பின் மக்கள் அதிகமாக இருப்பர், ஆனால் அவர்களுக்கு உணவுப் பற்றாக்குறை இருக்கும் என்று அவர் கூறினார். இதைத்தான் ‘மக்கள்தொகைப் பிரச்னை’ என்கின்றனர்.

மால்தஸின் இந்தக் கூற்றைச் சற்று அலசுவோம். மால்தஸ் அமெரிக்கக் காலனிகளைப் பார்க்கிறார். இதனைப் பற்றிய விரிவான பார்வை இல்லாமல் குறுகிய அறிவே அவருக்கு உள்ளது. இதன் விளைவு உண்மைகளுக்கு முரணான அவரது கூற்று!

உலக மக்கள்தொகை இவர் சொல்வது போலுள்ள வளர்ச்சி விகிதத்தில் இல்லை. அந்த அளவுக்கு அது வேகமாக வளரவில்லை.

ஆப்ரிக்க மக்களை ஐரோப்பியர்கள் அடிமைகளாக்கினர் அன்று. அடிமைச் சந்தைகளில் அவர்களை வியாபாரப் பொருள்களாக்கி விற்றனர். ஆப்பிரிக்க மக்கள்தொகை அந்தச் சமயத்தை விட தற்பொழுது குறைவாக உள்ளது. மால்தஸின் கூற்று இங்கு முரண்படுவதை நாம் காண்கிறோம்.

மால்தஸ் கூற்றின் அடுத்த முரண்பாடு உணவு உற்பத்தி. இது மால்தஸ் சொன்னதை விட அதிக அளவு நடக்கிறது.

ஒரு சிறு ஆய்வைப் பார்த்தால் இது மிக எளிதாகப் புரியும். 1950-லிருந்து மக்கள்தொகை இன்று இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் உணவு உற்பத்தியோ மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

மேலும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்: “இன்றைய வளர்ச்சி விகிதத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே செல்லுமானால், இன்று இருக்கும் விவசாய பூமியை வைத்தே 100 கூடி மக்களுக்கு உணவு வழங்கலாம்!”

உலக அளவில் 30 கோடி ஏக்கர் நிலம் விவசாயத்திற்குப் பயன்படுகிறது. மகசூல் அதிகரிப்பினால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த விவசாய நிலப்பகுதி சிறிது அதிகரித்துள்ளது.

பிற ஆய்வுகள் கூறுகின்றன. இந்த உலகம் 330 கோடி மக்களுக்கு உணவு வழங்கலாம்!

மால்தஸின் கூற்று எந்த வகையிலும் சரியில்லை என்று அறிந்த பிறகும் அது ஆர்வமாக ஓங்கி உயரத் தூக்கிப் பிடிக்கப்படுவதற்குக் காரணம் அரசியலே!

தொழிற்புரட்சியும், அதனைச் சார்ந்த முதலாளித்துவமும் தாம் வாக்களித்தவற்றை இன்னும் கொடுக்கவில்லை. முதாலாளித்துவம் தந்த வாக்குகள் பொய்த்துப் போயின.

பொருட்களை உற்பத்தி செய்வது எளிதாகவும், அதிகச் செலவுமில்லாததாகவும் ஆகிவிட்ட பிறகு, ஒவ்வொருவரும் அதன் பலனை அடைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அலை உயரும்பொழுது அதில் பயணிக்கும் அனைத்துப் படகுகளும்தானே உயர வேண்டும்! ஆனால் அதுதான் நடக்கவில்லை.

முதாளித்துவம் ஒரு சிறு கூட்டத்தை மட்டும் அதிகம் செல்வம் கொழிக்கும் பணக்காரர்களாக மாற்றியது. இதனால் இந்த அமைப்பு குறித்து மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

இந்த அமைப்பின் மூலம் ஏற்பட்ட அநீதிகளின் உச்சகட்ட பிரதிபலிப்பே காரல் மார்க்ஸின் தத்துவம்!

இரண்டாவது உலகப் போருக்குப் பின், ஐரோப்பிய நாடுகளால் அவற்றுக்குக் கீழுள்ள காலனி நாடுகளை அவற்றின் கட்டுபாட்டில் வைத்திருக்க முடியவில்லை. அது ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. காலனி நாடுகள் தங்களை ஐரோப்பியக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்துக் கொண்டன.

இப்படி புதிதாகச் சுதந்திரமடைந்த காலனி நாடுகளை சுயமாக வளர விட்டால் எங்கே அவை பொருளாதாரத்தில் சுய சார்புள்ள நாடுகளாகவும், அரசியல் ரீதியாக சக்தி வாய்ந்தவையாகவும் மாறி விடுமோ என்று அஞ்சின ஐரோப்பிய நாடுகள்.

இதன் விளைவுதான் ‘மக்கள்தொகைக் கட்டுப்பாடு’ என்ற பூச்சாண்டி.

மால்தஸின் கூற்று குப்பைத் தொட்டியில் முடங்கிக் கிடக்கும் அதே நேரத்தில் நவீன மால்தஸ்வாதிகள் ‘சுற்றுப்புறச் சூழல்’ பற்றிக் கவலைப்படுபவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்கின்றனர்.

திருக்குர்ஆனை அலசிப் பார்ப்பவர்களுக்கு ஓர் உண்மை விளங்க வரும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரத்தின் அடிப்படை அம்சங்களை அடியோடு தகர்க்கிறது அல்குர்ஆன்.

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப்படுத்தினோம். ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம். நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம். (அல்குர்ஆன் 15:19-20)

ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கி வைப்பதில்லை. (அல்குர்ஆன் 15:21)

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும், (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. (அல்குர்ஆன் 11:6)

மேற்கண்ட வசனங்கள் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிறப்புக் கட்டுப்பாடு செய்வதை தகர்த்துக் காட்டுகிறது. அந்த ஒரே இறைவனை, இந்தப் பிரபஞ்சத்திற்கே உணவளிப்பவனை நம்பி நிற்பவர்கள் எப்படி தங்கள் குழந்தைப் பிறப்பைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்த முடியும்? இருக்கின்ற வளங்களை அறிவுப்பூர்வமாக, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, அவற்றை நீதமாக அனைவரும் பகிர்ந்து கொள்ள வைப்பதே நமது வேலையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் வாக்களித்தப்படி அனைத்து மனிதர்களுக்கும் அவன் உணவளிப்பவன். ஆம்! அவனால் மட்டுமே அனைவருக்கும் உணவளிக்க முடியும்.

ஃகாலித் பெய்க்

இக்கட்டுரை விடியல் வெள்ளி மே 2000 மாத இதழில் நடுப்பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment