Wednesday 2 October 2013

தீமைக்கெதிரான போராட்டம்!


அபூஸுஃப்யானும் (ரலி), ஸுஹைல் இப்னு அம்ரும் (ரலி) கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர். கலீஃபா அவர்களைக் கண்டு சில காரியங்கள் குறித்து அவர்கள் பேச வேண்டியிருந்தது.

வேறு சில குறைஷிகளும், குறைஷிகள் அல்லாதாரும் கலீஃபாவைச் சந்திப்பதற்காக அங்கே காத்திருந்தனர். யாருக்கும் கலீஃபாவைச் சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. கலீஃபா வேறு ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தார்கள்.

இறுதியில் கலீஃபாவின் வீட்டினுள் ஒரு சிலர் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் வந்தவருக்கு முதலில் அனுமதி என்ற ரீதியில் அனுமதி வழங்கப்படவில்லை. காத்திருந்தவர்களின் தராதரங்களை அலசியும் அனுமதி வழங்கப்படவில்லை. பிலால் (ரலி) போன்றவர்களுக்குத்தான் முதலில் அனுமதி கிடைத்தது.

அபூஸுஃப்யானுக்கு (ரலி) இதனைக் கண்டு பொறுக்கவில்லை.

“இதுபோன்ற அவமானம் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்டதேயில்லை. இந்த அடிமைகளுக்கு நம்மைக் காட்டிலும் முன்பே அனுமதி கிடைக்கிறது. நாம் இங்கே இருக்கிறோம். நம்மை யாரும் கவனிக்கக்கூட இல்லை” என்று அபூஸுஃப்யான் (ரலி) ஸுஹைலிடம் (ரலி) கூறினார்.

ஸுஹைல் (ரலி) புத்திசாலியான மனிதர். அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நன்றாகப் புரிந்துவிட்டது. பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களுக்குத்தான் கலீஃபா அவர்கள் முதலில் அனுமதி வழங்குகிறார்கள் என்பதை அவர் விளங்கிக்கொண்டார்.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் மேல் ஒரு தனிப்பட்ட அன்பும், மரியாதையும் ஸுஹைலுக்கு (ரலி) இருந்தது.

அவர் கூறினார்:
“குறைஷிகளே! உங்கள் முகங்கள் வெளிறிப் போனதை நான் காண்கிறேன். உங்களுக்கு ஓர் அதிருப்தி தோன்றுகிறதல்லவா!அப்படியானால் நீங்கள் உங்கள் மீதே அதிருப்தி கொள்ளுங்கள். ஒரு காலத்தில் மக்களனைவரும் நன்மையின்பால் அழைக்கப்பட்டார்கள். நீங்களும் அழைக்கப்பட்டீர்கள்.
மற்றவர்கள் நன்மையின்பால் செல்வதற்கு முனைந்த பொழுது நீங்கள் அதனை வெறுத்தீர்கள். பின்வாங்கிச் சென்றீர்கள். நீங்கள் சம்பாதித்து வைத்திருந்தவைகளும் கீழான எண்ணங்களும் இஸ்லாமை ஏற்பதற்கு உங்களுக்குத் தடைகற்களாக இருந்தன.

அதனால்தான் நீங்கள் காக்க வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்குத்தான் தெரியுமே… அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர்கள் உங்களுக்கு முன்பு நன்மையின்பால் சென்றவர்கள். நீங்களும் முன்வரிசைக்கு வரலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

தீமைக்கெதிரான சமரத்தில் முனைப்பு காட்டுங்கள். அல்லாஹ் உங்களுக்குப் பாதைகளைத் திறந்து காட்டுவான். ரத்த சாட்சியம் அளித்து அருள் புரிவான்.”
பேசி முடித்துவிட்டு ஸுஹைல் (ரலி) எழுந்தார். கலீஃபாவைச் சந்திப்பதற்கு அவர் காத்திருக்கவில்லை. உடனடியாக அவர் ஷாம் தேசம் நோக்கிச் சென்றார். அங்கிருந்த முஸ்லிம் இராணுவப் படையில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அவரோடு ஒன்றாகச் சென்ற அபூஸஅதிடம் (ரலி) ஸுஹைல் (ரலி) இவ்வாறு கூறினார்:

“இறுதித் தூதர் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கிறேன். உங்களில் ஒருவர் இறைமார்க்கத்தில் தீமைக்கெதிரான போராட்டத்தில் சில நிமிடங்கள் செலவழித்தாலும் அது வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் செலவழிப்பதைக் காட்டிலும் சிறந்தது.”


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளிவந்தது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment