Thursday 3 October 2013

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 10

இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் மேற்குலகம் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் சிலுவைகளின் (Crusades) அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்று சென்ற தொடரில் கண்டோம்.

இந்தச் சிலுவைகள்தாம் பலப் பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்தின்பால் ஐரோப்பாவின் மனநிலையை – அதன் கண்ணோட்டத்தைத் தீர்மானித்து வைத்துள்ளது.  ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்து, அது தன் வளர்ச்சியைத் தொடங்கிய பொழுதே இந்தச் சிலுவைகள் அங்கே தமது ஆதிக்கத்தை அரங்கேற்றிவிட்டன.  அங்கே என்ன கலாச்சாரம் நிலவ வேண்டும், என்ன பண்புகள் மிளிர வேண்டும் என்று அவைதாம் தீர்மானித்தன.

அந்த ஆரம்ப காலகட்டத்திலேயே அவை இஸ்லாத்தின் மீது தாம் கொண்ட தீராப் பகையைப் பறை சாற்றும் விதமாக இஸ்லாம் விரோதக் கொள்கைகளை விஷ விதைகளாகத் தூவிற்று.

இந்த இஸ்லாத்திற்கெதிரான சிந்தனைகள் அங்கே தனி மனிதன் தொட்டு ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் வரை நாடி நரம்பெங்கும் ஓடிப் பாய்ந்ததன. எனவே ஐரோப்பியர்கள் உணர்ந்தோ உணராமலோ, அறிந்தோ அறியாமலோ இஸ்லாத்தை தங்கள் பரம எதிரியாகப் பார்த்தார்கள். இவையெல்லாம் இந்தச் சிலுவைகளின் கைங்கரியமே. ஆதலால் வரலாற்றில் ஐரோப்பா என்பது இஸ்லாமிய உலகின் எதிர் உலகம் என்றானது.

நவீன ஐரோப்பா என்பது சிலுவைகளின் உணர்வுகளின் அடிப்படையிலேயே உருவான கண்டம். இது மிகைப்படுத்திக் கூறப்பட்டதல்ல. சிலுவைகளின் ஆதிக்கம் அரங்கேறுவதற்கு முன்பு ஐரோப்பியர்கள் ஆங்கிலோ-சாக்ஸன்கள் (Anglo-Saxons), ஜெர்மன்கள், ஃபிரஞ்சுக்காரர்கள், நார்மன்கள், இத்தாலியர்கள், டேன்கள் (Danes) என்றுதான் அறியப்பட்டனர். ஆனால் சிலுவை யுத்தங்களின் பொழுது மொத்த ஐரோப்பாவிலும் “கிறிஸ்தவமயம்” உருவானது (இதற்கும் கிறிஸ்தவ மத போதனைகளுக்கும் வித்தியாசம் உண்டு).

இஸ்லாமிய உலகில் இந்தச் சிலுவைக்காரர்கள் நடத்திய குரூரங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை. அவை இஸ்லாமிய நாடுகளை ஆக்கிரமித்தன. அத்தனை கொடுமைகளையும் அங்கே அரங்கேற்றின. இஸ்லாத்திற்கு விரோதமான விஷச் செடிகளை அங்கே வளர்த்தன. இறுதியில் கிழக்குலகும், மேற்குலகும் எந்தவிதத்திலும் ஒட்ட முடியாத அளவுக்கு மாறிப் போனது. இந்தச் சிலுவைக்காரர்களின் கைங்கரியம் இல்லையென்றால் அங்கே இந்த அளவுக்கு இஸ்லாத்திற்கெதிரான சிந்தனை வளர்ந்திடத் தேவையில்லை. இஸ்லாத்திற்கெதிரான பகைமை படர்ந்திடத் தேவையில்லை.

இஸ்லாமிய நாகரிகங்களும், மேற்குலகின் நாகரிகங்களும் அவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் வித்தியாசப்பட்டாலும் அவை ஒன்றோடொன்று சகித்துப் போகலாம்.தங்களுக்கிடையில் நட்பை வளர்த்துக்கொண்டு சகஜமாக வாழலாம். முஸ்லிம் உலகம் இந்த நட்பை வளர்த்துக்கொண்டு சகஜமாக வாழ பல முயற்சிகளை எடுத்துள்ளதை வரலாறு முழுவதும் காணலாம். கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் அந்த அடிப்படையிலேயே பேரரசர் சார்லி மேக்னி (Emperor Charlemagne) என்ற கிறிஸ்தவ மன்னருக்குத் தூதுச் செய்தியை அனுப்பினார்.  வெறுமனே நட்பை வளர்த்து லாபம் பார்ப்பதல்ல இதன் நோக்கம்.

நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையுணர்ச்சியைப் போக்கி நட்புறவையும், நல்லுறவையும் வளர்ப்பதே இதன் நோக்கம். ஆனால் ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தவற விட்டு விட்டது.

No comments:

Post a Comment