Thursday 17 October 2013

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 2


இதுவரை வெளிவராத உண்மைகள்

.ஜி. நூரானி

காந்தியைக் கொன்ற கோட்சே கும்பலுடன் சாவர்க்கர்

மொரார்ஜியின் மௌனம், ஒரு நீதிபதியின் தடை!

மெரார்ஜி மிகத் தாமதமாக தன் கருத்தைத் தெரிவித்தார். காந்தி படுகொலை வழக்கில் அவர் ஆதாரங்களைத் தந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.கே. தஃப்தாரி என்பவர் நீதிபதி அத்மா சரணுக்கு அளித்த மனுவின் உள்ளடக்கச் செய்தியை 1948ம் ஆண்டு செப்டம்பர் 1 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் வெளியிட்டது. அதில் சாவர்க்கர் சம்பந்தப்பட்ட செய்தி உள்ள பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

கண்ணியத்திற்குரிய மொரார்ஜி தேசாய் அவர்களைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கர்) வழக்கறிஞர் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டார்: “சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பேரா. ஜெய்னின் கூற்று போக, உங்களுக்கு சாவர்க்கர் குறித்து வேறு ஏதேனும் தகவல் தெரியுமா?”

மொரார்ஜி இதற்கு இவ்வாறு பதிலளித்தார்: “நான் முழு உண்மைகளையும் சொல்லட்டுமா? நான் பதிலளிக்கத் தயாராகவே வந்திருக்கிறேன். சாவர்க்கர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”

குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கரின்) வழக்கறிஞர் தான் கேட்ட கேள்வியைப் பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்தக் கேள்வி, பதில், சாவர்க்கரின் வழக்கறிஞரின் கூற்று இவையனைத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய அனுமதிக்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதி அவ்வாறு பதிவு செய்வதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.”

இப்படி நீதிபதி போட்ட தடையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 8, 1948 அன்று பாம்பே சட்டசபையில் மொரார்ஜி வெளிப்படையாக இவ்வாறு சொன்னார்: “சாவர்க்கரின் கடந்த கால சேவைகள் அனைத்தும் இந்தத் தீய சேவையின் மூலம் அழிந்துவிட்டது.”

அனைத்துக் கொலைகளிலும் முக்கிய குற்றவாளிக்கெதிரான வழக்கில் அவருடன் கூட சென்று, அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்து, பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூற அனுமதிக்கப்பட்ட ஒருவரின் (அப்ரூவராக மாறியவரின்) வாக்குமூலம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும்.

காந்திப் படுகொலை வழக்கில் அது நடந்தது டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரால். இந்த வழக்குக்குத் தீர்ப்பளித்த நீதிபதி ஆத்மா சரண் தனது தீர்ப்பில் டிகாம்பர் பாட்கேவின் வாக்குமூலத்தை மிகத் துல்லியமாக அலசுகிறார்.

டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் 20.07.1948 முதல் 30.07.1948 வரை நடைபெற்றது. அவர் ஏழு நாட்கள் குறுக்கு விசாரணை மட்டும் செய்யப்பட்டார். ஆதலால் அவரது ஆதாரம் கொடுக்கும் விதம், அவரது அந்தஸ்து அனைத்தையும் அறிய முடிந்தது. அவர் அவரது தரப்பு உண்மைகள் அனைத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக விவரித்தார். அவர் எந்தவொரு குறுக்கு விசாரணைக் கேள்விக்கும் நழுவலாக பதில் சொல்லவில்லை. அல்லது அந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்க முயலவில்லை. இவ்வளவு நீண்ட நெடிய சம்பவத்தை பிசிறில்லாமல் துல்லியமாகச் சொல்வது வேறு யாருக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இவ்வளவு நீண்ட விஷயங்களை எவராலும் மனனம் செய்யமுடியாது.

அப்ரூவர் அவரது ஆதாரத்தில் சொல்லும்பொழுது, 20.01.1948 அன்று மெரினா ஹோட்டலில் வைத்து அவர்கள் வெடிப்பஞ்சுகளுக்கு பிரைமர் பொருத்தியதாகவும், கையெறி குண்டுகளுக்கு வெடிக்கருவி பொருத்தியதாகவும், சதித்திட்டம் குறித்து கலந்தாலோசித்ததாகவும், அவர்களிடையே சிலவிஷயங்களைபரிமாறிக்கொண்டதாகவும் கூறுகிறார். ஆனால் இதற்கு நேரடி தொடர் ஆதாரம் எதனையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்க முடியவில்லை.

ஆனால் மறைமுகமான தொடர் ஆதாரம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. நைன் சிங் என்பவரின் ஆதாரத்தின் படி (விசாரணைகள் பி-17, பி-24 ஆகியன ஆதரித்தபடி) மூன்று தேநீர்கள் சொல்லப்பட்டு, அறை எண் 40ல் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.

ஆதாரங்களை ஆராயும்பொழுது ஒரு விஷயம் எல்லோருக்கும் நன்றாக விளங்கும். அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கூறும்பொழுது அதன் வெளிச்சத்தில் முந்தைய நடப்புகளையும் நாம் கணித்துக்கொள்ளலாம். அப்ரூவரின் வாக்குமூலம் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளுக்கு முழுமையாகப் பொருந்துகிறது. தொடராகவும் அமைந்துள்ளது. ஆனால் வி.டி. சாவர்க்கர் போன்ற சில குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் விஷயத்தில் அப்ரூவரின் ஆதாரம் தொடராக இல்லை.

அப்ரூவர் (சாவர்க்கர் விஷயத்தில்) கூறிய ஆதாரம் என்னவென்றால் 14.01.1948 அன்று நாதுராம் வி. கோட்சேயும், நாராயண் டி. ஆப்தேவும் அவரை தாதரில் உள்ள ஹிந்து மகாசபா அலுவலகத்திலிருந்து சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். “விஷயத்தைவைப்பதற்கு சில ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டது. “விஷயம்அடங்கிய பையைக் கையில் வைத்திருந்த கோட்சேவும், ஆப்தேவும் சாவர்க்கர் சதானின் வெளியில் அப்ரூவரை விட்டு விட்டு வீட்டின் உள்ளே சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் அதே பையுடன் வெளியே வந்தனர்.

அதன் பிறகு அப்ரூவர் என்ன சொல்கிறார் என்றால், 15.01.1948 அன்று, தீட்சித் மகாராஜ் கோயிலின் சுற்றுச்சுவருக்கருகில் வைத்து நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் இவ்வாறு கூறினார்: “காந்தி கொல்லப்படவேண்டும் என்று சாவர்க்கர் தீர்மானித்திருக்கிறார். அந்த வேலையை எங்களிடம் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.”

அதன் பிறகு அப்ரூவர் சொல்வது என்னவென்றால், 17.01.1948 அன்று கடைசியாக ஒரு தடவை சாவர்க்கரைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று நாதுராம் வி. கோட்சே சொன்னார். அதன்படி அவர்கள் சாவர்க்கர் சதானுக்குச் சென்றனர். நாராயண் டி. ஆப்தே தரைத் தளத்திலுள்ள ஓர் அறையில் அப்ரூவரைக் காத்திருக்குமாறு கூறிவிட்டு, அவரும், கோட்சேவும் முதல் தளத்திற்குச் சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் கீழே வந்தனர். அவர்களுக்குப் பின்னால் சாவர்க்கரும் தொடர்ந்து வந்தார். நாதுராம் வி. கோட்சேவையும், நாராயண் டி. ஆப்தேவையும் நோக்கி சாவர்க்கர்யஷஸ்விஹூன்யா” (சென்று வாருங்கள், வென்று வாருங்கள்) என்று கூறினார்.

சாவர்க்கர் சதானிலிருந்து திரும்பி வரும்பொழுது நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் சாவர்க்கர் தங்களிடம் இவ்வாறு கூறியதாகக் கூறினார்: “காந்தியின் 100 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த வேலை வெற்றிகரமாக முடியும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை”.

வினாயக் டி. சாவர்க்கர் மேல் அரசுத்தரப்பு தொடுத்துள்ள வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தை மட்டுமே மையமாக வைத்து அமைந்துள்ளது. வினாயக் டி. சாவர்க்கருக்கெதிரான அப்ரூவரின் கூற்றே அரசுத் தரப்பு விளக்கத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அப்ரூவர் கூறும் நிகழ்வுகளின் இடைத்தொடர்ச்சிக்கு செல்வி ஷாந்தாபாய் பி. மோடக், அய்தப்பா கே. கோடியான் ஆகிய இருவரின் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நீதிமன்றம் அந்த இருவரையும் அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை.

சாவர்க்கரின் இல்லத்தில் முதல் தளத்தில் நாதுராம் வி. கோட்சேவுக்கும், நாராயண் டி. ஆப்தேவுக்கும் இடையில் என்ன உரையாடல் நடைபெற்றது, அவ்விருவருக்கும், சாவர்க்கருக்குமிடையே என்ன உரையாடல் நடைபெற்றது என்பது குறித்த எந்த விவரமும் வழக்குப் பதிவில் இல்லை. ஆதலால் சாவர்க்கர் அப்ரூவர் முன்னிலையில் கோட்சேயிடமும், ஆப்தேவிடமும் (சென்று வாருங்கள், வென்று வாருங்கள் என்று) வாழ்த்துக் கூறியது மகாத்மா காந்தியின் படுகொலை சம்பந்தப்பட்டதுதான் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

ஆதலால் அப்ரூவரின் கூற்றை வைத்து சாவர்க்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது உறுதியில்லாததாக ஆகிறது.”

ஆக, அப்ரூவராக மாறிய பாட்கே உண்மையான ஒரு சாட்சிதான் என்று நீதிபதி ஒப்புக்கொண்டாலும், சாவர்க்கர் சம்பந்தப்பட்டு அவர் கூறிய நிகழ்வுகள் ஒப்புறுதிப்படுத்தப்படாததால் (uncorroborated), அதன் தொடர்ச்சி உறுதிப்படுத்தப்படாததால் சாவர்க்கருக்கு தண்டனை அளிப்பதுபாதுகாப்பற்றதுஎன்று நீதிபதி கருதுகிறார்.

ஆனால், ஏழு பக்கங்கள் கழித்து, அடுத்த அத்தியாயத்தில் (XXV), பாட்கே குறித்து நீதிபதி கூறிய கருத்துகளுக்கு அவரே முரண்படுகிறார். ஆதாரச் சட்டத்தின் அடிப்படையில் சாவர்க்கரை சிறைக்கு அனுப்புவதுபாதுகாப்பற்றதுஎன்றுதான் நீதிபதி கூறியுள்ளார். ஆனால் சாவர்க்கரின் பங்கு குறித்து நீதிபதி இவ்வாறு கூறுகிறார்:

வினாயக் டி. சாவர்க்கர் அவரது வாக்குமூலத்தில் இந்தச்சதியில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுகிறார். தனக்கு கோட்சே, ஆப்தே ஆகியோர் மேல் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்றும் கூறுகிறார். மேலே குறிப்பிடப்பட்டது போல் அரசுத்தரப்பு வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக குறிப்பிடப்பட்டது போல் அப்ரூவரின் கூற்றை மட்டுமே வைத்து சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது பாதுகாப்பற்றது. ஆதலால் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்று கருதுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை.”

இந்த இறுதி வாக்கியம் தீர்ப்பின் இடைக்கூற்று மட்டுமே. இதற்கு சட்டரீதியாக எந்த மதிப்பும் இல்லை. அப்ரூவர் பாட்கேயின் வாக்குமூலத்தில் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்ரூவரின் கூற்றில் நம்பகத்தன்மைக்கு எந்தக் குறைவுமில்லை. ஆனால் ஒப்புறுதிப்பாடு (Corroboration) குறைபாடு மட்டுமே உள்ளது.

ஆதாரம் ஒப்புறுதிப்படுத்தப்பட்டது, ஆனால் மிகத் தாமதமாக!

சாவர்க்கரின் மரணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவரது உதவியாளர்கள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷன் முன் காந்திப் படுகொலை குறித்து பேசினார்கள். அப்பொழுது அப்ரூவர் பாட்கேவின் கூற்றுகளுக்கு போதுமான அளவு ஒப்புறுதிப்பாட்டைக் கொடுத்தார்கள்.

நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷனின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “1948 மார்ச் 4ம் தேதி பாம்பே போலீசில் பதிவு செய்யப்பட்டபடி, சாவர்க்கரின் மெய்க்காப்பாளரான அப்பா ராம்சந்த்ர காசரின் வாக்குமூலம் இவ்வாறு கூறுகிறது: 1946லேயே ஆப்தேவும், கோட்சேவும் சாவர்க்கரை அடிக்கடி சந்திக்க வருவர். கர்க்கரேயும் சில நேரங்களில் சாவர்க்கரைச் சந்திக்க வருவார்.

1947 ஆகஸ்ட் மாதம் சாவர்க்கர் ஒரு கூட்டம் சம்பந்தமாக பூனா சென்றிருந்தபொழுது கோட்சேயும், ஆப்தேயும் அவர் கூடவே எப்பொழுதும் இருந்தனர். அவர்கள் சாவர்க்கருடன் ஹிந்து மகாசபாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். தனக்கு வயதாகிக்கொண்டு வருவதாகவும், அவர்கள்தான் இந்தப் பணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சாவர்க்கர் ஆப்தேவிடமும், கோட்சேயிடமும் கூறினார்.

1947 ஆகஸ்ட் 5 அல்லது 6ம் தேதி, டெல்லியில் அனைத்திந்திய ஹிந்து மாநாடு நடைபெற்றது. அதற்கு சாவர்க்கரும், கோட்சேயும், ஆப்தேவும் விமானத்தில் சென்றனர். அதேபோல் அங்கிருந்து பாம்பேக்கு ஒன்றாகவே விமானத்தில் திரும்பினர். 1948 ஜனவரி 13 அல்லது 14 அன்று, கர்க்கரே ஒரு பஞ்சாபி இளைஞனோடு சாவர்க்கரிடம் வந்தார். அவர்கள் சாவர்க்கரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேட்டி கண்டனர்.

அதேபோல் 15 அல்லது 16ம் தேதி, ஆப்தேவும், கோட்சேவும் இரவு 9.30 மணியளவில் சாவர்க்கரைச் சந்தித்தனர். அதற்கு ஒரு வாரம் கழித்து, 23 அல்லது 24 தேதியாக இருக்கலாம், ஆப்தேவும், கோட்சேவும் மீண்டும் சாவர்க்கரைச் சந்திக்க வந்தனர்காலை 10 முதல் 10.30 மணியளவில் அவருடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.”

இப்படிப் போகிறது அந்த அறிக்கை.

ஆக, சாவர்க்கர் காந்திப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதுது முழு முதல் உண்மை. வழக்கு நடந்த நேரத்தில் அப்ரூவரின் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கருதியதால் சாவர்க்கர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதற்குப் பின்னால் வந்த அனைத்து ஆதாரப்பூர்வ தகவல்களும் காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக்கு முழு பங்கிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இதனை உணர்ந்து நாட்டையே களங்கப்படுத்தும் விதமாக பா... அரசு பாராளுமன்றத்தில் சாவர்க்கருக்கு வைத்த சிலை அகற்றப்படுமா?

நன்றி: Frontline
தமிழில் (சுருக்கம்) : MSAH

இக்கட்டுரை விடியல் வெள்ளி ஏப்ரல் 2013 மாத இதழில் வெளியானது.

No comments:

Post a Comment