Monday 5 January 2015

இறையச்சமுடையோரின் இலக்கணங்கள்!


“சுவனம் இறையச்சமுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” என்று இறைவன் சூரா ஆல இம்ரானில் 133வது வசனத்தில் கூறுகிறான்.

இந்த இறையச்சம் என்ற தக்வா என்றால் என்ன?

இரண்டு நபித்தோழர்கள் வழி இதனை நாம் அறிந்து கொள்வோம். ஒரு முறை உமர் (ரலி) அவர்களுக்கும், உபை இப்னு கஅப் (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த உரையாடல் வருமாறு:

உமர் (ரலி): உபையே! தக்வா என்றால் என்ன?
உபை (ரலி): நீங்கள் முட்கள் நிறைந்த பாதையில் நடந்திருக்கிறீர்களா?
உமர் (ரலி): ஆம். நடந்திருக்கிறேன் தோழரே…
உபை (ரலி): எப்படி நடப்பீர்கள்?
உமர் (ரலி): எனது ஆடைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு, எந்த இடத்தில் முள் இல்லையோ அந்த இடத்தில் பாதங்களை வைத்து எச்சரிக்கையாக நடப்பேன்.
உபை (ரலி): அதுதான் தக்வா!

இந்த உலகத்தில் ஒவ்வொரு கணமும் நாம் இப்பாழுது செய்யக்கூடிய காரியம் அல்லாஹ்வுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? இதில் அல்லாஹ்வின் பொருத்தம் இருக்கிறதா? அல்லாஹ்வின் கோபம் இருக்கிறதா? இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எச்சரிக்கையுடன் செய்வதுதான் தக்வா.

ஒரு முறை அலீ (ரலி) அவர்களிடம் “தக்வா என்றால் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு பதிலளித்தார்கள்: “அல்லாஹ்வை அஞ்சுவது, திருக்குர்ஆன் வழியில் நடப்பது, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, மரணத்தை எதிர்நோக்கி தயாராக இருப்பது.”

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் நெஞ்சத்தைத் தொட்டுக் காட்டி, “அத்தக்வா ஹாஹுனா” (“இறையச்சம் என்பது இங்கேதான் இருக்கிறது”) என்று மூன்று தடவை சொன்னார்கள்.

ஆக, உள்ளம்தான் தக்வாவின் உறைவிடம்!

சூரா ஆல இம்ரானில் 134ம் வசனத்தில் அல்லாஹ் இத்தகைய பயபக்தியுடையோருக்கான பண்புகளைச் சொல்கிறான்.

(இறையச்சமுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)

தவிர, மானக்கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். (3:135)

மேற்கண்ட வசனங்களில் இறைவன் கூறும் இலக்கணங்கள் வருமாறு:

1.   இறைப்பாதையில் செலவு செய்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பேரீத்தம் பழத்தின் துண்டை தர்மமாக கொடுத்தாவது நரகிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.” (புகாரீ)

2.   கோபத்தை அடக்குதல்.

கோபத்தை அடக்குவது என்பது இறையச்சத்தின் ஒரு பகுதி. பென்னம் பெரிய நபித்தோழர்களைக் கூட இந்தக் கோபம் என்ன பாடு படுத்தியது என்பதைப் பார்ப்போம்.

ஒரு முறை உமர் (ரலி) அவர்களுக்கும், அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் இடையே ஒரு வாக்குவாதம். அபூபக்கர் (ரலி) கோபப்பட்டு விடுகிறார். உடனே உமரும் (ரலி) கோபத்துடன் நகர்கிறார். தவறை உணர்ந்த அபூபக்கர் (ரலி) உமரிடம் மன்னிப்பைப் பெறுவதற்காக உமர் (ரலி) வீட்டுக்குச் செல்கிறார்.

ஆனால் உமர் (ரலி) கதவை அடைத்து விடுகிறார். அபூபக்கர் (ரலி) அண்ணலாரிடம் வந்து கவலையுடன் இதனை சொல்கிறார். இதனைக் கேட்டதும் அண்ணலாரும் கோபமாகி விடுகிறார்கள். “அண்ணலாரே, தவறுக்குக் காரணம் நான்தான்” என்றார் அபூபக்கர் (ரலி).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் தோழரை நீங்கள் கைவிடுகிறீர்களா? என்னை ஆரம்ப காலத்தில் அனைவரும் பொய்ப்படுத்தினீர்கள். அபூபக்கர் மட்டும்தான் உண்மைப்படுத்தினார்.” அந்த அவையில் உமரும் இருந்தார். உடனே உமர் (ரலி) அபூபக்கரை மன்னித்தார். அண்ணலாரும் அமைதியானார்கள்.

3.   மனிதர்களை மன்னித்தல்.

4.   பாவமன்னிப்பு தேடுதல்.

5.   பாவங்களில் தரிபடாதிருத்தல்

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

அத்தகையோருக்குரிய (நற்)கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர். இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது. (3:136)

இத்தகைய மன்னிப்பையும், மகத்தான ஜன்னத்தையும் பெறுவதற்கு ஒரு பயிற்சிக் காலமாகத்தான் அல்லாஹ் ரமலானை ஏற்படுத்தியுள்ளான். நம்மைக் கடந்துபோன இந்த ரமலானும் நமக்கு இந்தப் பயிற்சியை அளித்திருக்க வேண்டும்.

ரமலான் வரும்பொழுதெல்லாம் பத்ரையும், மக்கா வெற்றியையும் சுமந்துகொண்டே வருகிறது. இங்கே பத்ரை சுவர்க்கத்திற்கும், மக்கா வெற்றியை மன்னிப்பிற்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நோன்பும், குர்ஆனும் மனிதனுக்காக சிபாரிசு செய்யும். நோன்பு கூறும்: ’இறைவா! உணவு, உடல் இச்சை ஆகியவற்றிலிருந்து பகல் முழுவதும் நான் அவனை தடுத்தேன்! அதனால் அவனுக்காக என்னுடைய சிபாரிசை நீ ஏற்றுக்கொள்வாயாக!’ அப்பொழுது அந்த சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படும்!” (பைஹகீ)

இந்த அடிப்படையில் நோன்பு எதிர்பார்க்கும் தக்வாவைப் பெறுவோம். திருக்குர்ஆனும், நோன்பும் நாளை சுவர்க்கத்திற்காக நம்மை சிபாரிசு செய்யும் மனிதர்களாக மாறுவோம்.

விடியல் வெள்ளி  ஆகஸ்ட் 2014

No comments:

Post a Comment