Saturday 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 38

முஸ்லிம் ஆங்கில ஊடகத்திற்கு நிறைய பொறுப்புகள் உணடு. நவீன, படித்த முஸ்லிமல்லாத இந்தியர்களுக்கு அது நிறைய சொல்ல வேண்டியுள்ளது. முஸ்லிம்களும் அவர்களைப்போல்தான் நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். இந்தியாவை இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு வெற்றிகரமாக அழைத்துச் செல்வதில் முஸ்லிம்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

முஸ்லிம் அறிவுஜீவிகளும், செல்வந்தர்களும் இந்த முஸ்லிம் ஆங்கில ஊடகத்தை ஊக்குவிக்க வேண்டும். மானசீகமான அனைத்து ஆதரவுகளுடன் பொருளாதார ஆதரவுக் கரத்தையும் நீட்ட வேண்டும். இல்லையென்றால் இவற்றிற்கும் கடந்த கால முஸ்லிம் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்.

இதனைத் தவிர்க்க யுனைட்டெட் மீடியா நிறுவனர் தவுலத் கான் அவர்கள் ஒரு தடவை மீடியாவின் முக்கியத்துவம் குறித்து நடத்திய உரையை நாம் கவனத்திற்கொள்ளலாம். அவரது உரையின் துளிகள் வருமாறு:

* தனி மனிதனும் சரி, ஒரு சமுகமும் சரி ஆளுமை மிக்கவர்களாக ஆவதற்கு ஊடகம் அவசியம்.


* ஊடகத்துறை பற்றி நமது சமுதாயத்திற்கு விழிப்புணர்வு இல்லை. மாறாக எதிர் கருத்தே நிலவுகிறது. அந்த நிலை மாற்றபடவேண்டும்.


* ஊடகம் என்றால் தகவல்களையும் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பித்து, மக்கள் கருத்தை உருவாக்குவது.


* அச்சு, வானொலி, தொலைக்காட்சியைத் தொடர்ந்து டிஜிட்டல் மிடியா என்ற இணைய ஊடகம் வந்துவிட்டது. இது இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் தொழிற்புரட்சியாகும்.


* இணைய ஊடகம் வழியாக வாசகர்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைப்பார்கள்.


* ஒரு ஊடகத்தை நாம் அடையாளம் காண்டு கொள்ளவேண்டும்.அது செய்தி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஊடகமாகட்டும்.



*செய்தி கிடைக்கப் பெற்ற மூலத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

* பிழையான, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பும் ஊடகத்தை சமூகம் புறக்கணிப்பு செய்யும்போது அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.


* ஊடகத்தில் பணியாற்றுபவர் சமூகத்திற்கு ஆதரவாக இருப்பார்  எனவே நாமும் ஊடகத்துறையில் நுழைய வேண்டும்.


* ஊடக நிறுவனம் அரசியல், அறிவியல், நிதி, விளையாட்டு உள்ளிட்ட எல்லா துறை எழுத்தாற்றல் மிக்கவர்களையும் வரவேற்கிறது. நாம் எந்தத் துறை சார்ந்து படிந்திருந்த போதும் ஊடகத்தில் பணியாற்ற முடியும். ஏன், உங்களின் துறை வேலைகளைக் கவனித்துக்கொண்டே, இல்லத்தில் இருந்துகொண்டே கூட பங்களிப்பு செய்ய முடியும்.


* ஊடகத்தில் நுழைய பேச்சாற்றல், எழுத்தாற்றல் முக்கியமானது. இந்த ஆற்றல் பெற வாசிப்பு பழக்கம் வேண்டும். குறிப்பாக இலக்கிய நூல்கள், பத்திரிக்கைகள் தொடர்ந்து படிக்க வேண்டும்.சரளமாக பேசவும் கற்றுக்கொள்ளவேண்டும்.சொற்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.


* இதழியல் படிப்பு 3, 6 மாதங்கள் 1,2,3 வருடங்கள் என்று உள்ளது. நீங்கள் கல்லுரியில் படித்துக்கொண்டோ, வேலை செய்துகொண்டோ இதழியல் படிக்க முடியும்! இதர துறை படிப்புகளுடன் இதழியலும் படித்து உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு ஊடகத்தின் முக்கியத்துவம் அறிந்து நாம் செயல்பட்டால் உள்ளபடியே வெற்றி பெறலாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment