Saturday 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 36

பத்திரிகையின் பெயர் சரிபார்த்தல் (Title Verification)

நாம் தேர்ந்தெடுக்கும் பத்திரிகையின் பெயர் அதிகாரப்பூர்வமாகச் சரிபார்க்கப்பட வேண்டும். அதற்கு பத்திரிகையின் பதிப்பாளரோ அல்லது அச்சாளரோ சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் விண்ணப்பிக்கவேண்டும். தாங்கள் ஆரம்பிக்கப் போகும் பத்திரிகையின் பெயர் உட்பட பல தகவல்களை அதில் தரவேண்டும்.

அச்சுப் பதிவாளரோடு இதனைச் சரிபார்த்துத் தருமாறு நாம் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைக்கவேண்டும். முறைப்படுத்தப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்தே நாம் விண்ணப்பிக்க முடியும்.

நாம் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் பத்திரிகையின் பெயர் ஏற்கனவே உள்ளது என்பதனால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களைத் தெரிவு செய்து கொடுக்கவேண்டும்.

பெயரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு இந்திய நாளிதழ்களின் பதிவாளர் (Registrar of Newspaper, India – RNI) இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பெயர்களின் பட்டியலைப் பார்வையிட வேண்டும். ஒரே மொழியில் ஏற்கனவே உள்ள பெயரை நாம் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

மாஜிஸ்திரேட்டிடமிருந்து விண்ணப்பத்தைப் பெற்றவுடன் அச்சுப் பதிவாளர் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையின் பெயர்களுடன் இந்தப் பெயரைச் சரிபார்ப்பார். ஒரே மொழியில் ஒரே மாநிலத்தில் இரண்டு பெயர்கள் ஒன்று போல் வரக்கூடாது. வேற்று மொழிகளில், வேற்று மாநிலங்களில் வரலாம்.

பெயர் சரிபார்க்கப்பட்ட பின் அச்சுப் பதிவாளர் இந்தப் பெயரை அனுமதிக்கலாம் என்று மாஜிஸ்திரேட்டுக்கும், விண்ணப்பதாரருக்கும் ஒரு கடிதம் (Title Verification Letter) கொடுப்பார்.

இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றவுடன் விண்ணப்பதாரர் மாஜிஸ்திரேட்டிடம் ஒரு பிரகடனம் (Declaration) அளிக்கவேண்டும். இதற்கும் முறைப்படுத்தப்பட்ட ஒரு விண்ணப்பப் படிவம் உள்ளது. அதனை மாஜிஸ்திரேட்டிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அதனைப் பூர்த்தி செய்து மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அச்சாளரும், பதிப்பாளரும் வேறு வேறு என்றாலோ, அல்லது இருவரும் வேறு வேறு இடத்தைச் சார்ந்தவர்கள் என்றாலோ இரு இடங்களைச் சார்ந்த மாஜிஸ்திரேட்டிடம் வெவ்வேறு பிரகடனங்களை அளிக்கவேண்டும்.

மாஜிஸ்திரேட் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம், நிராகரிக்கவும் செய்யலாம்.

மாஜிஸ்திரேட் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டால் அவரது கையெழத்திட்டு ஒரு நகலை சம்பந்தப்பட்ட நபருக்கும், இன்னொரு நகலை அச்சுப் பதிவாளருக்கும் அனுப்பி வைப்பார்.

No comments:

Post a Comment