Saturday 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 37

ஒரு நாளிதழையோ, பருவகால இதழையோ தொடங்குவதற்கு சட்ட ரீதியாக என்னென்ன செய்யவேண்டும் என்பதை இதுவரை கண்டோம்.

இனி இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்திய பத்திரிகைகள் பற்றியும், அதன் தற்போதைய நிலையையும் காண்போம்.

1947ல் இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு முஸ்லிம்களின் கைவசமிருந்ததில் எஞ்சி நின்ற சில நாளிதழ்களும், பருவகால இதழ்களும் உர்து மொழியில்தான் இருந்தன.

உர்து மொழி என்பது இந்தியர்கள் அனைவருக்கும் தெரிந்த மொழியல்ல. முஸ்லிம்களில் சில குறிப்பிட்ட பகுதியினருக்கே உர்து எழுத, படிக்க தெரிந்திருந்தது. ஆதலால் உர்து பத்திரிகைகளும் அவர்கள் அளவிலேயே சுருங்கி விட்டிருந்தது. அப்பத்திரிகைகளில் வரும் செய்திகளும் மொத்த இந்திய நாட்டின் செய்திகள் என்றில்லாமல் முஸ்லிம் சமுதாயச் செய்திகள் என்ற அளவில் குறுகிப் போனது.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் குறித்த செய்திகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுகி, அவற்றின் பார்வை முஸ்லிம்களின் வறுமை, துன்பங்கள், பிற்போக்கு நிலை, அரசுத் தரப்பிலிருந்தும், பெரும்பான்மை சமுதாயத்தவரிடமிருந்தும் அவர்களுக்கிழைக்கப்படும் அநீதிகள் என்ற அளவில் சுருங்கிப் போனது.

சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் அனைத்து அநீதிகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள், தனிமைப்படுத்தப்பட்டார்கள், இனப் படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பது உண்மை எனினும், அதனையும் மீறி சுமார் 4 சதவீத முஸ்லிம்கள் கல்வி கற்றார்கள், அரசுப் பணிகளில் நுழைந்தார்கள், தொழிற்துறைகளில் மேலோங்கினார்கள்.

முஸ்லிம்களின் மக்கள்தொகை 15 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. அதனைப் பார்க்கும்பொழுது 4 சதவீதம் என்பது மிகக் குறைவே. அதேபோல் விளையாட்டுத் துறையிலும் சில முஸ்லிம்கள் மின்னினார்கள். ஆனால் உர்து பத்திரிகைகள் முஸ்லிம்கள் அடைந்த இந்தச் சில வெற்றிகளை வெளிச்சம் போட்டுக் காட்டிடத் தவறி விட்டன. மிகச் சில செய்திகளே இது குறித்து வெளிவந்தன.

முஸ்லிம்களில் பலர் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தும், குறைந்தது 4 சதவீத முஸ்லிம்களாவது பொருளாதார ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் ஓரளவு தன்னிறைவு அடைந்திருந்தும், சுதந்திரம் வாங்கிய பின் இந்த 65 வருடங்களில் ஓர் ஆங்கில நாளிதழைக் கூட அவர்கள் நிறுவிட முன்வரவில்லை. சுமார் 20 கோடி முஸ்லிம்கள் இருந்தும் ஒரு மின்னணு செய்திச் சேவையைக் கூட அவர்கள் தொடங்கவில்லை.

ஆனால் நம்மை விடக் குறைவான மக்கள்தொகை கொண்ட பிற சமுதாயத்தவர்கள் நாளிதழை ஆரம்பித்துள்ளார்கள். இந்தியாவின் பொருளாதாரம் வளர வளர அவர்களும் வளர்ந்து இன்று வெற்றிகரமாக நாளிதழ்களை நடத்தவும் செய்கிறார்கள்.

ஆக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தன் குறைகளை, பிரச்னைகளை இன்னபிற இந்தியர்களுக்குமுஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதோருக்கும்எடுத்துச்சொல்லிட வழியில்லாமல் ஆனது. உர்து பேசும் மிகச் சிலருக்கு மட்டுமே ஏதோ கொஞ்சநஞ்ச செய்திகள் கிடைத்தன.

பொதுப்
பத்திரிகைகள் தங்கள் பிரச்னைகளைப் பேசுவதில்லை என்பதால் கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களுக்குள்ளாக ஒரு சில முஸ்லிம்கள் ஆங்கிலத்தில் இருவார செய்தித் தாள்கள், இணைய செய்திச் சேவை போன்றவற்றை ஆரம்பித்தார்கள்.

இந்தப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் நமது செய்திகள் பொதுச் சமுதாயத்திற்குச் சென்றடைய வேண்டும் என்பதே. ஏனெனில் ஆங்கில மொழி நாடு முழுவதும் பேசப்படுகின்றது, எழுதப்படுகின்றது, வாசிக்கப்படுகின்றது. இது நல்ல செய்தி.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக அலசும்பொழுது இந்த முஸ்லிம் ஆங்கிலப் பத்திரிகைகள் ஏற்கனவே உள்ள உர்து பத்திரிகைகளின் வழியிலேயே, அதே மாதிரியைக் கடைப்பிடித்து நடைபோடுவது போலுள்ளது.

இந்தப் பத்திரிகைகளும் பொதுச் சமுதாயத்தைக் கவரத் தவறி விடுகின்றன. காரணம், இங்கேயும் முஸ்லிம் பிரச்னைகள் மட்டுமே பேசப்படுகின்றன. எழுதப்படும் கட்டுரைகள் முஸ்லிம்களைச் சுற்றியே வருகின்றன.

உதாரணத்திற்கு முஸ்லிம் ஆங்கில ஊடகத்தின் கடந்த ஒரு வருடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாட்டில் பொதுவாக நடக்கும் முக்கிய நிகழ்வுகள் அதில் மிகக் குறைவாகவே காணப்படும். அந்தப் பொதுவான நிகழ்வுகள் வருமாறு:

மத்திய அமைச்சர்களிடம் மலிந்துபோன ஊழல், மூத்த அரசு அதிகாரிகளின் தகிடுதத்தங்கள், நடுநடுங்க வைக்கும் பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு, இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, கடந்த 2012 ஜூலையில் பாதி நாட்டில் ஏற்பட்ட மின்தடை, பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகளைக் குறித்து பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளி, பாராளுமன்றப் பருவகாலத் தொடரில் பாதி அமர்வுகளை ஒத்தி வைத்தது, சர்வதேச தகவல் தொடர்பு கம்பெனியான அஸீம் பிரேம்ஜியின் விப்ரோ அடைந்த வெற்றிகள், தரமான கல்வி நிலையங்களின் வளர்ச்சிகள், …

ஆக, முஸ்லிம் ஆங்கில மீடியா முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்னைகளைப் பேசுவதோடு மேற்கண்ட பிரச்னைகள் உட்பட பல பொதுப் பிரச்னைகளை எழுத வேண்டும், விவாதிக்க வேண்டும், வீதிக்குக் கொண்டு வரவேண்டும்.

ஒரு முஸ்லிமல்லாதவர் முஸ்லிம் ஆங்கில ஊடகத்தைப் பார்ப்பாரேயானால் அவரால் முஸ்லிம் செய்திகளை மட்டும் படித்துக்கொண்டிருக்க முடியுமா? அனைத்துச் செய்திகளையும் கலந்து வெளியிட்டால்தான் அனைத்துத் தரப்பு மக்களும் படிப்பார்கள்.

No comments:

Post a Comment