Saturday 9 November 2013

உடற்பயிற்சியின் அவசியம்!



ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்க வேண்டும்.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். ஆரோக்கியமான வாழ்வுதான் அருள் பெற்ற வாழ்வு.

ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் உடலை வலிமையாக வைத்திட வேண்டும். உடலை வலுவாக வைத்துக் கொள்வதற்காக மனிதன் ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பே பல விளையாட்டுகளைக் கண்டுபிடித்தான்.

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற உணவில் நிதானமும், சுத்தமும், சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலும், முறையான உடற்பயிற்சியும் தேவை.
உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. சோம்பேறித்தனத்தை அகற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கிறது. கடும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.



உடற்பயிற்சி என்பது நமது ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமான ஒன்று. ஆனால் நம்மில் பெரும்பாலனவர்கள் உடற்பயிற்சி என்பதையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம் காரணம், இன்றைய நவீன உலகின் தேவைகள். இன்று மனிதனின் தேவைகள் அதிகரித்து காலத்தின் கட்டாயமாக நாம் இயந்திர வாழ்க்கை வாழ்கிறோம்.

நேரமின்மை மிகப் பெரும் காரணமாக கூறப்பட்டாலும் சோம்பறித்தனத்தைத்தான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு மிகச் சிறந்த நேரம் அதிகாலைப் பொழுது என்று இன்றைய உடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மூச்சை ஆழமாக இழுத்து மூச்சுப் பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் பத்து வினாடிகள் அப்படியே வைத்திருந்தால் உடலுக்கு நல்லது.



உடலில் கொழுப்பு வடிவில் சேமித்து வைக்கப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பைக் கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது. உடலின் “வளர்சிதை” மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது.

எப்படியானாலும் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தைத் தயாரித்துக் கொள்ளுங்கள். ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து கடைப்பிடியுங்கள். மாற்றங்கள் காண்பீர்கள்.

உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்பொழுது தொடக்கத்தில் நேரம் குறைவாக ஆரம்பிக்க வேண்டும். மெல்ல மெல்ல நாளுக்கு நாள் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். இதுவே தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய உதவும்.

ஆர்வக்கோளாறினால் தொடக்கத்தில் ஆ… ஊ… என்று அதிக நேரம் கடினமாக உடற்பயிற்சி செய்து விட்டு, அதன் பின் அதனால் ஏற்படும் உடல் வலியினால் தடாலடியாக உடற்பயிற்சியை விடும் நிலைதான் ஏற்படும். இது ஆரோக்கியமானதல்ல. உடலுக்கு கேடு விளைவிக்கும்.

அத்தோடு நம் உடல் திடீர் மாற்றத்தை உடனே ஏற்றுக்கொள்ளாது. மெல்ல மெல்ல ஏற்படும் மாற்றம்தான் உடலுக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது.
“நீங்க என்ன சொன்னாலும் சரி எனக்கு தனியா உடற்பயிற்சி செய்ய நேரமே இல்லை. பொழப்ப பார்ப்பனா… கைய கால தூக்கிக்கிட்டு உடற்பயிற்சி செய்வனா…?” என்று சொல்லும் ரகம் நீங்கள் என்றால் உங்களுக்கும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையையே உடற்பயிற்சி போல் ஆக்கிக் கொள்ளலாம்.



காலையில் வேலைக்குப் போய்விட்டால் சோம்பேறித்தனத்தை முறித்து விட்டு சுறுசுறுப்பாக இருங்கள். பணித் தளத்தில் (சைட்டில்) வேலை பார்ப்பவர்கள் அங்கே இங்கே நடக்கும்பொழுது வாக்கிங்கை மனதில் வைத்துக்கொண்டு வேகமாக நடப்பது, தேவையிருந்தாலும், இல்லையென்றாலும் குனிந்து நிமிர்வது, மதிய வேளையில் அளவான ஓய்வு, மீண்டும் சுறுசுறுப்புடன் வேலை… என்றிருந்தால் அதுவே உங்களுக்கு உடற்பயிற்சியாகி விடும்.

அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து சிறிது நடக்க வேண்டும். முடிந்தால் முன் பின் குனிந்து உடலை ஸ்ட்ரெஸ் செய்ய வேண்டும். நின்று கொண்டு செய்யலாம் என்ற வேலைகளை நின்று கொண்டே செய்ய வேண்டும். அனாவசியமாக அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சியில் மிக முக்கியமானதும், எளிமையானதும் நடைப்பயிற்சி. அதாவது வாக்கிங். வாக்கிங்கை யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் மிக எளிதாக செய்யலாம்.

நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டு அன்றாடம் செய்து வந்தால் நலமாக வாழலாம். அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையிலும் நடப்பது நல்லது.

தினமும் குறைந்தது 20 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடமாவது நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.



நடைப்பயிற்சியினால் அதிக இரத்த அழுத்தம் (ஹை ப்ளட் பிரஷ்ஷர்) குறைகிறது. சர்க்கரை நோய் (ஷுகர்) உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன், தொந்தி குறையும்.

தொடர் உடற்பயிற்சியினால் இரவில் நன்றாக தூக்கம் வரும். இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். மலச்சிக்கல் வராது. அஜீரணக் கோளாறு அகன்று போகும்.
உடற்பயிற்சியினால் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பு கரைந்து விடும். இதயம் புத்துணர்ச்சி பெறும். இதனால் ஹார்ட் அட்டாக் வருவது பெரும்பாலும் தவிர்க்கப்படும்.

“நபிகள் நாயகத்தின் நோய் நிவாரணி” என்ற நூலில் நபிகள் நாயகம் அவர்கள் தினமும் தன் வீட்டிலிருந்து பேரீச்சம்பழத் தோட்டம் வரை நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

உணவுப் பழக்கம்

உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல உணவுகளை உண்ண வேண்டும். மிதமாக உண்ண வேண்டும். மெதுவாக உண்ண வேண்டும். நன்றாகச் சவைத்து, சுவைத்து உண்ண வேண்டும். எச்சில் நீர் உணவில் கலப்பதற்கு ஏதுவாக வாயை மூடி சவைக்க வேண்டும்.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனம் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.



இயற்கை உணவே இனிய உணவு. பெப்சி, கொக்கோ கோலா, செவன் அப் போன்ற செயற்கை பானங்கள், அதிவேகமாகத் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் ஆகியவற்றைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் நம் உடலின் எதிரிகள்.

குறிப்பாக, இனிப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிட்ட பின் உடனே படுக்கக் கூடாது. சாப்பிட்ட பின் குறைந்தது அரை மணி நேரம் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும். இது உண்ட உணவு செரிமானமாவதற்கு மிகவும் உதவும்.

சாப்பிட்டவுடனே தண்ணீர் குடித்தால் நம் வயிற்றில் உணவைச் செரிப்பதற்காக சுரந்திருக்கும் அமிலத்தை அது நீர்த்துப் போகச் செய்து விடும். அதாவது டைல்யூட் ஆக்கி விடும். இதனால் உணவு சரிவர செரிமானமாகாது.
சாப்பிட்ட பின் உடனே படுத்தால் வயிற்றிலுள்ள உணவைச் செரிக்க சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் வழியாக மேலே வரும். உணவுக் குழாயின் சுவர்கள் அந்த அமிலத்தால் அரிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.



நம் வாயையும், பற்களையும் சுத்தமாகப் பேணினாலே பல நோய்கள் நம்மை அண்டாது. வாயை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். காலையில் ஒரு தடவை, இரவில் ஒரு தடவை.

தவறாமல் உணவுக்குப் பின் வாயை அலசி படுக்கைக்குச் செல்லும் முன் பல் துலக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பிரஷ்ஷைக் கண்டிப்பாக மாற்ற வேண்டும். தேய்ந்து திப்புலியாகப் போகும் அளவுக்கு பிரஷ்ஷை பயன்படுத்தக்கூடாது.

கண்ட கண்ட செயற்கைக் குளிர்பானங்களுக்குப் பதிலாக அதிக அளவு தண்ணீர் அருந்துவதுடன் சத்தான கால்சியம், கனிமம், ஆரோக்கியமான வைட்டமின்கள் கொண்ட பால் பொருட்கள், கேரட், ஆப்பிள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

An apple a day keeps away Doctor என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைத் தின்றால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே வராது என்று இதற்கு அர்த்தம்.

தண்ணீரே ஒரு மருந்து. அதனை அருந்தி வந்தாலே வயிற்றின் உபாதைகள் நீங்கும்.



ஈறுகள் பழுதாகும் விதமாக தீவிரமாக பல் துலக்குதல், கடுமையான பல்துலக்கியைப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். சிலர் பல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தேய் தேய் என்று தேய்ப்பார்கள்.
இது பற்களுக்கு நல்லதல்ல. இதனால் பற்களிலுள்ள இனாமல் போய் விடும். இனாமலைத்தான் பற்களுக்குப் பாதுகாப்பாக இறைவன் படைத்துள்ளான். அது போய் விட்டால் பற்கள் கூசும். உணவுகளைச் சவைக்க முடியாது.



பல் வலி ஏற்படும்பொழுது விக்ஸ், கோடாலித் தைலம், ஜண்டு பாம் போன்ற வலி நிவாரணக் களிம்புகளை முகத்தில் தேய்த்தல் கூடாது.

இவ்வாறாக நம் உடலைப் பேணினால் நீடூழி வாழலாம். ஆரோக்கியமாக வாழலாம். உடற்பயிற்சியை, நடைப்பயிற்சியை மறந்து விடாதீர்கள். இவைதான் நம் ஆயுளைக் கூட்டும் ஆசான்கள்.

MSAH

No comments:

Post a Comment