Thursday, 28 November 2013

மீடியாஉலகில் முஸ்லிம்கள் – 20

மீடியாவை எதிர்கொள்வது எப்படி?

மீடியாவை நாமும் எதிர்கொள்ளலாம். ஆக்கபூர்வமாக சில பணிகளைச் செய்யலாம். பாதிப்புகளை ஓரளவு தடுக்கலாம். அது எப்படி என்று காண்போம்.

ஒரு நாட்டின் பணிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது மீடியா. அதனை நாம் தவிர்த்துவிட்டு வாழவே முடியாது. ஆதலால் அதனை எப்படி எதிர்கொள்வது, எப்படி பயனுள்ள வகையில் நடத்துவது, எப்படி நமக்குச் சாதகமாக மாற்றுவது என்பதைப் பற்றித்தான் நாம் ஆலோசிக்க வேண்டும்.

முதலில் ஒன்றை நாம் மனிதல் இறுத்த வேண்டும். மொத்த மீடியாவும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரானது அல்ல. அப்படி யாருக்கும் எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நேர்மையான, நாணயமான பத்திரிகையாளர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். கண்ணியமான ஊடகவியலாளர்கள் கணிசமாகவே உள்ளனர். அவர்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வரவேற்கின்றனர். நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

அச்சு ஊடகங்களிலும், மின்னணு ஊடகங்களிலும் உள்ள செய்தி ஆசிரியர்கள் உங்கள் கருத்துகளைக் கேட்க ஆர்வமாகவே உள்ளனர்.

நீங்கள் அவர்களுடன் பேசலாம், ஒரு செய்தியின் மறுபக்கத்தைச் சொல்லலாம், அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியிலுள்ள தவறுகளின் பக்கம் அவர்களது கவனத்தைத் திருப்பலாம்.

இதற்கு நல்ல பல வழிகள் உள்ளன. இந்த வழிகள் மூலம் நாம் மீடியாவை அழகிய முறையில்எதிர்கொள்ளலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை அழிக்க முற்படலாம்.

ஆசிரியருக்குக்கடிதம் (Letters to the Editor)

அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரை அதனை எதிர்கொள்வதற்கு முதற்படி, ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவதுதான்.

ஆனால் முஸ்லிம்களிடமிருந்து வரும் கடிதங்களை அச்சு ஊடகங்கள் பிரசுரிப்பதில்லை என்றொரு புகார் உண்டு. ஆனால் அது 100 சதவீத உண்மையல்ல.

பத்திரிகைகளில் வரும் செய்திகள் குறித்து ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் பொழுது ஆசிரியர் குழு கண்டிப்பாக அதனைப் படிக்கவே செய்யும். ஏனெனில் அனைத்துப் பத்திரிகைகளும் வாசகர்களின் கருத்துகளை அறிவதற்கு மிகுந்த ஆவலாகவே உள்ளன. வாசகர்தான் அவற்றின் குரு. வாசகர்களின் கருத்துகளுக்கேற்பதான், வாசகர்களின் ருசிக்கேற்பதான் அவர்கள் பத்திரிகைகளை வடிவமைக்கிறார்கள்.

எனவே நாம் எழுதும் கடிதங்கள் பிரசுரிக்கப்படுகிறதோ இல்லையோ, அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்கு அது சென்று விழும். உங்கள் கருத்துகள் அவர்களைச் சென்றடைந்து விடும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் பொழுது கீழ்க்கண்ட விஷயங்களை மனதிற்கொள்வது நன்மைபயக்கும். அவையாவன:

1. ஒரு செய்தியால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர் அந்தச் செய்திக்கு மறுப்புக் கடிதம் எழுதினால்அது சாலப் பொருத்தமாக இருக்கும். அந்தக் கடிதத்தின் மதிப்பு தானாகக் கூடிவிடும்.

2. கடிதத்தில் விஷயத்தை நேரடியாகவும், தெளிவாகவும் எழுதிவிட வேண்டும். உங்கள் வாதங்களுக்கு உறுதுணையாக ஆதாரங்கள் இருந்தால் அதனைக் குறிப்பிட வேண்டும். ஆவணங்கள் இருந்தால் அதனை இணைத்து அனுப்பவேண்டும். அந்த ஆவணங்கள் அவர்கள் எங்கும் பரிசோதிக்க முடிகிறதாக இருக்கவேண்டும்.

நீங்கள் கடிதம்தான் எழுதுகிறீர்கள். கட்டுரை அல்ல. எனவே கடிதங்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கவேண்டும். அந்த மாதிரி கடிதங்களைப் படிப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.

3. ஒரு புதிய கருத்தைச் சொல்ல வருகிறேன் என்று சுற்றி வளைத்து இழு இழு என்று இழுக்கக் கூடாது. பத்திரிகையாசிரியர்கள் எப்பொழுதும் பணியின் அழுத்தத்தால் பரபரப்பாக இருப்பார்கள். எனவே அவர்கள் நீண்ட நெடிய கடிதத்தைவிட சுருக்கமான, தெளிவான கடிதங்களையே விரும்புவார்கள்.

4. கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று ஆசிரியர் குழுவுக்கு எண்ணம் வரவேண்டும். அந்த வகையில் நாம் கடிதத்தை வரைந்திருக்க வேண்டும். அந்த எண்ணம் வந்துவிட்டால் அந்தக் கடிதத்திற்கு மதிப்பளித்து, கருத்தூன்றிப் படிப்பார்கள்.

5. வெளியிடப்பட்ட செய்தி ஒரு தனி நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அங்கத்தவரையோ எப்படி பாதித்தது என்பதற்கு நியாயமான காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.

6. பத்திரிகைத்துறையில்பழமொழி மாதிரி ஒரு சொல் உண்டு. அதாவது “முழுமையான உண்மை என்பது முழுமையான பாதுகாப்பு”.

ஒரு ஆசிரியருக்குஅவர் வெளியிட்ட செய்தி முழுமையான உண்மை என்பதில் உறுதி இருந்தால் உங்கள் கடிதத்தைப் பிரசுரிப்பதற்கோ, மறுப்பதற்கோ அவருக்கு உரிமை உண்டு.

7. கடிதம் வரையும் பொழுது கோபப்படாதீர்கள். கொந்தளிக்காதீர்கள். கொப்பளிக்காதீர்கள் வாயில் வந்தவைகளை. அசிங்கமாகத் திட்டி எழுதாதீர்கள். பெயர்களைச் சொல்லி அழைக்காதீர்கள். நீங்கள் ஆசிரியருடன் சண்டை போட வரவில்லை என்பதை நினைவில் வையுங்கள். சாங்கியமான சொற்களைப் பயன்படுத்தி சாந்தமாக எழுதுங்கள்.

8. ஆசிரியருக்கும், பத்திரிகைக்கும் தேவையற்ற, எரிச்சலூட்டும் அடைமொழிகளைக் கொடுக்காதீர்கள். முஸ்லிம்களிடமிருந்து வரும் பல கடிதங்கள் பிரசுரிக்க மறுக்கப்படுவதற்கு இதுவே மிக முக்கிய காரணம். இம்மாதிரி கடிதங்கள் பகைமையை வளர்க்கவே உதவும்.

9. எந்தச் செய்திக்கு மறுப்பு எழுதுகிறீர்களோ அந்தச் செய்தி இடம் பெற்ற பத்திரிகையின் தேதி, பக்கம் ஆகியவற்றை முதலிலேயே குறிப்பிட்டு விட வேண்டும். (உதா: தாங்கள் …………………………… தேதியில்…………………….. பக்கத்தில் “…………………………………………….” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி குறித்துநான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.)

No comments:

Post a Comment