Thursday, 28 November 2013

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 13

மீடியா எப்படி முஸ்லிம்களைக் கொல்கிறது?


இங்கே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும்,பிரபல மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் கூற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.


2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையில் முஸ்லிம் இனப்படுகொலைகள் நடந்தேறின.ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட வாயில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன; அழிக்கப்பட்டன.

இந்தக் கொடுமைகளைக் கண்டு திடுக்குற்ற நடுநிலையான மனித உரிமை ஆர்வலர்கள் இந்த இனப்படுகொலையின் உண்மைகளை அறிந்து உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதற்காக ஓர் உண்மையறியும் குழுவை ஏற்படுத்தினார்கள். அந்தக் குழுவிற்குப் பெயர் “அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம்“ (Concerned Citizens Tribunal).
இனப் படுகொலைகளின் சூடு ஆறுவதற்கு முன்பே இந்தக் குழுமம் களத்தில் இறங்கியது. குஜராத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட அத்தனை பேரிடமும் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து, பதிவு செய்தது.  முஸ்லிம்கள், ஹிந்துக்கள், ஃபார்சிகள் என்று எல்லோரையும் இந்தக் குழுமம் பேட்டி கண்டது.

இறுதியில் தங்கள் பதிவுகள் அனைத்தையும் “மனித இனத்திற்கெதிரான குற்றம்” (Crime Against Humanity) என்ற பெயரில் அறிக்கையாக இரண்டு பகுதிளாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. (“மனித இனத்திற்கெதிரான குற்றம்” என்ற பெயரில் ‘இலக்கியச்சோலை’ நூல் வெளியீட்டு நிறுவனம் இதன் முதல் பாகத்தைத் தமிழில் வெளியிட்டுள்ளது.)

இதனை வாசிக்கும்பொழுது இன்னொன்றையும் மனதிற்கொள்ள வேண்டும். இந்தக் குழுமத்தின் அறிக்கை வெளிவரும் சமயம் கோத்ராவில் நடந்தவை பற்றி பெரும்பாலான உண்மைகள் வெளிவரவில்லை. ஆனால் தற்பொழுது கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறி விசாரணை அறிக்கைகள் வந்துவிட்ட.ன. (ஆனாலும் அரசு அமைத்த விசாரணைக் கமிஷனின் கூற்றையே முழுமையாக ஏற்று கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் முஸ்லிம்களையே குற்றப்படுத்தி, முஸ்லிம்களுக்குத் தண்டனை வழங்கியிருக்கின்றது என்பது வேறு விஷயம்.)

ஆனால் இந்த அறிக்கைகள் ஒன்றும் வெளிவராத அந்தக் காலகட்டத்தில் அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டது:

இந்த இனப்படுகொலையில் வானொலி, தொலைக்காட்சி, அச்சு என்று அனைத்து மீடியாக்களின் பங்கும் மிக முக்கியமானவை. எந்தப் பாரபட்சமும் இல்லாமல் செய்திகளை வெளியிடுதல், விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொண்டு வரத் தூண்டுதல், உண்மைகளை உலகுக்கு அறிவித்தல், அநீதிகளை அம்பலப்படுத்துதல் போன்றவை மீடியாவின் உடன்பாடான அம்சங்கள் (Positive aspects of media coverage).

இதில் எதிர்மறையான அம்சங்கள் (Negative aspects) என்று பார்த்தோமானால் இனவெறியைத் தூண்டும் விதமாகத் கொட்டை எழுத்துகளில் தலைப்புகளைப் போடுதல், பொய்யான செய்திகளை அறிவித்தல் போன்றவையாகும். இந்த எதிர்மறையான அம்சங்கள் வதந்திகளுக்கு எண்ணை ஊற்றும், பகை எனும் புகையைக் காற்று வீசிப் பற்ற வைக்கும், குறி வைக்கப்பட்டு தாக்கப்படும் ஓர் இனத்திற்கெதிராக வன்முறையைத் தூண்டும், அந்த வன்முறையைச் சரி காணும்.

இந்த இரண்டாவது எதிர்மறையான அம்சங்கள் மூலம் மீடியா தனக்கென்று உள்ள சுதந்திரமான, நடுநிலையான நெறியைக் கை விட்டு விடுகிறது. அதாவது, நேர்மையான செய்தி, நடுநிலையான அலசல், நீதியை நிலைநாட்டும் விமர்சனம் போன்றவைகள் காற்றில் பறந்தோடி விடுகின்றன. அதற்குப் பதிலாக, அந்த அக்கிரமங்களின் ஒரு பகுதியாக இந்த மீடியா மாறிவிடுகிறது.

நரேந்திர மோடியின் கட்டளைக்கேற்ப, சபர்மதி எக்பிரஸ் ரயிலில் கொல்லப்பட்ட பயணிகளின் பிணங்கள் சாலையில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, அஹமதாபாதிலுள்ள சோலா சிவில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்தில் வந்த “ராம பக்தர்கள்” முஸ்லிம்களுக்கெதிராக வெறியைத் தூண்டும் விதமாக கோஷங்களை எழுப்பினர், தங்கள் வெறியை வெளிக்காட்டினர், பழி வாங்குவோம் என்று மிரட்டினர்.

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அத்தனை மீடியாக்களும் இந்த ஊர்வலத்தை ஒளிபரப்ப பயன்படுத்தப்பட்டன. பிணங்கள் மருத்துவமனையை அடையும் சமயத்தில், அதற்கு முன்பே வெறி முறுக்கேறிய மக்கள் அங்கே ஒன்று கூடியிருந்தனர். “ரத்தத்திற்கு ரத்தத்தால் பழி வாங்குவோம்” என்று வெறியோடு அவர்கள் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.”

அக்கறையுள்ள குடிமக்களின் குழுமத்தின் அறிக்கை வெளியிட்ட உண்மைகளின் தொடரை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

No comments:

Post a Comment