Thursday 28 November 2013

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 15

குஜராத் இனப் படுகொலையில் மீடியாவின் பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் அளித்த அறிக்கையின் தொடர்ச்சி தொடர்கிறது:
பிப்ரவரி 28 அன்று அதிகமாக விற்பனையாகும் சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகிய இரண்டு குஜராத் செய்தித்தாள்கள் கோத்ரா ரயில் எரிப்பில் “அந்நியக் கைகள்” இருக்கின்றன என்ற அரசின் பொய்ச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன.

3-4 வாரங்கள் கழித்து இந்தச் செய்தி மகா பொய்யானது என்று மீடியாவில் கசிய ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் அனைத்து அக்கிரமங்களும் அரங்கேறி அடங்கியிருந்தன.

1998ல் பா.ஜ.க. அரசு மீண்டும் குஜராத்தில் அரியணையில் அமர்ந்ததும் சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகிய இரண்டு செய்தித்தாள்களும் வகுப்புவாத வெறியைத் தூண்டி விட்டுக்கொண்டே இருந்தன. இந்த இனப்படுகொலையில் சந்தேஷ் நாளிதழின் பங்கு மிகக் கீழ்த்தரமாக இருந்தது. ஆனால் குஜராத் டுடே, ஸத்பார், குஜராத் மித்ரா ஆகிய நாளிதழ்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டன.

கோத்ரா ரயில் எரிப்பு நடந்த அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 28 அன்று சந்தேஷ் நாளிதழ் ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எரிந்த பெட்டியின் படத்தைப் போட்டு இவ்வாறு கொட்டை எழுத்தில் தலைப்பிட்டிருந்தது: “50 ஹிந்துக்கள் உயிருடன் எரிப்பு!”

அதற்குக் கீழே எரிந்த உடல்களின் கோரப் படங்களை பல வண்ணங்களில் வெளியிட்டிருந்தது. மீடியா தர்மத்தை மீறிய மிகப் பெரிய செயல் இது.
எரிந்த உடல்களின் கோரப் படங்களைத் தாங்கிய சந்தேஷ் நாளிதழை ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்க்தள் குண்டர்கள் பல பிரதிகளைப் போட்டு கிராமப்புற மக்களிடம் பரவலாக வினியோகித்தனர்.

சாதாரண மக்களைக் கோபமூட்டி, தொடர்ந்து நடந்த இனப் படுகொலையில் பங்கெடுக்க வைக்கவே இப்படி வினியோகிக்கப்பட்டது.
அதே நாளிதழில் இன்னொரு தலைப்புச் செய்தியும் இவ்வாறு இடம் பெற்றிருந்தது: “ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து கடத்தப்பட்டவர்களில் இரண்டு இளம் ஹிந்துப் பெண்களின் உடல்கள் சிதிலமடைந்த நிலையில் கலோலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டன!”

இந்தத் தலைப்பின் கீழ் பின்வரும் செய்தி இடம் பெற்றிருந்தது:  “வதோதரா, வியாழன்: நேற்று ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில், அதிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு இளம் பெண்களின் உடல்கள் கலோலில் ஒரு குளத்துக்கருகில் சிதிலமடைந்த நிலையில், கோரமாக உருமாற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.” இந்தச் செய்தி ஏற்கனவே பதட்டமாக இருக்கும் பாஞ்ச்மஹால் மட்டுமல்லாமல் மொத்த மாநிலத்திலுமே எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது.
மனிதாபிமானமற்ற இந்தக் கோரச் செயலின் உச்சம் என்னவெனில் அந்த இரண்டு இளம் பெண்களின் மார்பகங்களும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சடலங்களின் நிலையைப் பார்க்கும்பொழுது அந்த இரு இளம் பெண்களும் திரும்பத் திரும்பக் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாலியல் வன்புணர்வினாலேயே அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.”

இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்று காவல்துறை விசாரணைகளுக்குப் பின் கண்டுபிடித்தது.
ஆனால் காவல்துறை எந்த அடிப்படையும் இல்லாமல் வெளியிடப்பட்ட, மிகப் பெரிய ஓர் இனப் படுகொலைக்குக் காரணமாக இருந்த இந்தப் பொய்ச் செய்தியை வெளியிட்ட சந்தேஷ் பத்திரிகை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மௌனமாக இருந்தது. அந்த வகையில் காவல்துறையும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

இதற்கிடையில் சந்தேஷ் நாளிதழ் தனது வெறுப்பூட்டும் பணியைத் தொடர்ந்தது. முஸ்லிம்களை ஈன இரக்கமற்ற கொலைகாரர்களாகவும், தேசத் துரோகிகளாகவும் சித்தரித்து செய்திகளை வெளியிட்டது.

மார்ச் 1ம் தேதி அது ஒரு செய்திக்கு இவ்வாறு தலைப்பிட்டிருந்தது: “பள்ளிவாசலிலிருந்து அழைப்பு : விசுவாசிகளல்லாதவர்களைக் கொல்லுங்கள் – இஸ்லாம் இப்பொழுது ஆபத்தில்!” இந்தத் தலைப்பின் கீழ் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது: “பிப்ரவரி 27ம் தேதி, காலை 11.30 மணியளவில், ரயில் தண்டவாளத்தின் அருகிலுள்ள ஒரு பள்ளிவாசலிலிருந்து மக்கள் கூவியழைக்கப்பட்டார்கள்.

“விசுவாசிகளல்லாதவர்களைக் கொல்லுங்கள். இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது. இந்த அழைப்பைக் கேட்டவுடன், ஒரு கூட்டம் எரிக்கப்பட்ட ரயில் பெட்டியில் உயிரோடிருந்த எஞ்சியுள்ள ராம சேவகர்களைத் தாக்க ஆரம்பித்தது. அவர்கள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்திருந்தனர்.”
இந்தச் செய்தியும் எந்த அடிப்படையும் அற்றது.

அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் அளித்த அறிக்கையின் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் தொடரும்.

No comments:

Post a Comment