Saturday, 23 November 2013

துபையில் காயலர்கள் ஒன்று கூடல் (2013) !


அழகான பூங்கா
அன்பான காயலர்கள்
அருமையான வானிலை
அறுசுவை உணவு (களறி)
அப்பப்பா...
அனைவருக்கும் ஆனந்தம்
அகவை மறந்த குதூகலம்
அன்றைய மகிழ்ச்சி
அன்றாடம் நிலைத்திட
அல்லாஹ்வை பிரார்த்திப்போம்!

ஸஃபா பூங்காவில் சங்கமம்!


நாள் : 22/11/2013 வெள்ளிக்கிழமை


முந்தின நாள் வியாழக்கிழமை அன்று பகலிலும் இரவிலும் அமீரகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. ஆதலால் ஒன்றுகூடல் பூங்காவில் நடக்குமா, இல்லை சென்ற வருடம் மாதிரி அஸ்கான் டி பிளாக்கில்தானா என்ற சந்தேகம் வலுக்க, ஈசா காக்காவிடம் தொலைபேசியில் கேட்டேன்.


“ஸஃபா பூங்காவில்தான்” என்று உறுதியாகச் சொன்னார். அன்றிரவு பல மஷூராக்களுக்குப் பிறகு, வானிலை அறிக்கைகளை அலசி ஆராய்ந்து ஸஃபா பூங்காவிலேயே நிகழ்ச்சியை நடத்தலாம் என்று தைரியமாக முடிவெடுத்துள்ளார்கள் காயல் நலச் சங்க நிர்வாகிகள். அவர்களின் இந்த உறுதியான முடிவுக்கு ஒரு சபாஷ்!


அன்று நான் ஸஃபா பூங்காவை காலை 10.30 மணியளவில் சென்றடையும் பொழுது  நல்ல வெயில் அடித்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் நிம்மதி. ஆனால் 11 மணிக்குப் பிறகு மேகங்கள் திரண்டு வந்து மிரட்டின. நிகழ்ச்சிக்கு முற்கூட்டியே வந்திருந்தவர்கள் அனைவரும் அதனைக் கண்டு மிரண்டனர். என்ன செய்வது? அல்லாஹ்வின் அருட்கொடையாயிற்றே... அதனை வரக்கூடாது என்று சொல்ல முடியுமா?


11.40 மணியளவில் பூங்காவுக்கருகில் உள்ள ஜும்ஆ மஸ்ஜிதுக்கு ராவன்னா அபுல் ஹசன் காக்கா அவர்களுடன் சென்றேன். அவர்கள் பஹ்ரைனில் உள்ள காயல் நலச் சங்கத்திற்கு பல காலம் தலைவராக இருந்து ஊருக்கு நல்ல பல சேவைகள் செய்தவர்கள். இப்பொழுது துபையில் இருக்கிறார்கள். பஹ்ரைனில் இருக்கும்பொழுது ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார்கள். பேசிக்கொண்டே மஸ்ஜிதுக்குள் நுழைந்தோம்.ஜும்ஆ முடித்துவிட்டு வெளியே வருகிறேன். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்ததை அப்பொழுதுதான் அறிந்தேன். மஸ்ஜிதுக்குள் இருக்கும்பொழுது ஒன்றுமே தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள் என்ன செய்திருப்பர்கள் என்று மனம் அங்கலாய்த்தது.


வழமை  போன்று ஜும்ஆவுக்குப் பிறகு நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. ஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ராவன்னா அபுல் ஹசன் காக்கா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். காயல் நலச் சங்கத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் தலைமையுரையாற்றினார்.


அதன் பின்னர் புதுமுகங்கள் அறிமுகம் நடந்தது. நிகழ்ச்சிகளை சாளை சலீம் காக்கா அவர்களும், காயல் யஹ்யா அவர்களும் நெறிப்படுத்தினார்கள்.


அறிமுக நிகழ்ச்சி முடிந்ததும் அறுசுவை விருந்து ஆரம்பமானது. காயல் கல்யாணக் களறிச் சாப்பாட்டை அப்படியே பிரதி எடுத்தது போல் அதே சுவை. அதே யதார்த்தம் வரவேண்டும் என்பதற்காக இந்த முறை வெறுஞ்சோறும், புளியாணமும் வைத்திருந்தார்கள். கறியும், கத்தரிக்காய் மாங்காயும் இல்லாமல் களறிச் சாப்பாடா? அவையும் பறக்கத்தாக இருந்தன.


அனைவரும் உண்டு முடித்தவுடன் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பமானது. துபை பிரைம் மெடிக்கல் சென்டரில் காது, மூக்கு, தொண்டை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் செய்யது அஹமது அவர்கள் காது, மூக்கு, தொண்டை பற்றிய மருத்துவ விளக்கங்களை உரிய படங்களுடன் அழகுற விளக்கினார்.


பின்னர் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


மதி மயக்கும் மாலை வேளை வந்தவுடன் சூடான கறி சம்சாவும், தேநீரும் பரிமாறப்பட்டன. பின்னர் ‘தமிழிலேயே பேச வேண்டும்’ என்ற போட்டி நடைபெற்றது.


அபுதாபியிலிருந்து வந்த ஒரு சகோதரர் மைக்கைப் பிடித்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு “கணிணி”. என்ன பேசப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்க, “நீராறும் கடலுடுத்த...” என்று பாட்டு பாட ஆரம்பித்தார். அனைவரும் தங்களை மறந்து சிரித்தனர்.


பின்னர் வினாடி வினா போட்டி நடைபெற்றது. விடை சரியாகச் சொன்னவர்களுக்கெல்லாம் அப்பொழுதே பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் பகல் 12 மணிக்குள் வந்தவர்களின் டோக்கன்கள் குலுக்கப்பட்டு இருவருக்கு தலா ஒரு கிராம் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.


எனது வீட்டுக்கு அருகிலுள்ள செய்து ஹசன் காக்காவும், என் நண்பன் முத்து ஃபரீதும் அந்த அதிர்ஷ்டசாலிகள்.


புதுமுகங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டனர். வந்திருந்தவர்கள் பரஸ்பரம் பழகி அளவளாவினர். ஜும்ஆவுக்குப் பிறகு மழையில்லாமல் மப்பும் மந்தாரமுமாக வானிலை இருந்தது அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது.நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற உதவிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

No comments:

Post a Comment