Wednesday, 27 November 2013

‘வேர்கள்’ பற்றிய ஒரு நுனிப்புல்லின் பார்வை

“வேர்கள்” நூல் பற்றி
நெல்லை ஏர்வாடி அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி
அவர்கள் எழுதிய வாசகர் உரை


சமீபத்தில் நடைபெற்ற ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில், தாங்கள் மொழிபெயர்த்து எழுதியுள்ள “ வேர்கள்” புத்தகம் வாங்கி வாசிக்கத் தொடங்கினேன்.

சுப்ஹானல்லாஹ். நூலின் மையக் கருத்தும், மொழிபெயர்ப்பின் மொழிநடையும், சம்பவங்களின் சுவாரஸ்யமும், நூல் முழுதும் இழையோடும் வரலாற்றுக் கொடுமையின் சோகமும் வாசிப்பவர்களை ரொம்பவே பாதிக்கும் என்பதை உணர முடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம் என வழக்கம் போல சோம்பேறிப்படும் நான், கதையின் சுவாரஸ்யத்தால் உந்தப்பட்டு, நேரம் கிடைக்கும்போதும், குறிப்பாக மெட்ரோவில் அலுவலகத்திற்கு போகும்போதும் வரும்போதும் என்று முழு மூச்சில் படித்து 4 அல்லது 5 நாட்களில் முடித்து விட்டேன். மாஷா அல்லாஹ்.

புத்தகத்தைப் படித்ததிலிருந்து மனம் மிக பாரமாக இருப்பதை உணர்ந்தேன். தனது பரம்பரையின் வேர்களைத் தேடும் ஒரு பத்திரிகையாளரின் பரம்பரைத் தொடர் வரலாற்று நாவலாக வடிக்கப்பட்டுள்ளது. இன்றைய அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான கறுப்பின மக்களின் பூர்வீக மதம் இஸ்லாம்தான் என்பது நெஞ்சைச் சுடும் நிஜமாக புத்தகத்தில் பதிவாகியுள்ளது. சக மனிதர்களை சிறிதும் ஈவு இரக்கமில்லாமல், விலங்குகளை விடக் கேவலமாக நடத்தி , ஒரு இனத்தின் அடையாளத்தையே அழித்து நாடோடிகளாக்கிய குரூர புத்திக்கு சொந்தக்காரர்கள் (மேலை நாட்டவர்கள்), இன்று மனித உரிமைகள் பற்றி பேசுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

இதை எண்ணும்போது, சில வருடங்களுக்கு முன்பு மேலை நாட்டவர்கள் கலந்து கொண்ட ஒரு சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில், முன்னாள் மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது அவர்கள் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது. “ சரித்திரம் முழுக்க இரத்தம் தோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரர்களுக்கு மனித உரிமைகள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்றார்.

இந்நூலைப் படிக்கும் போது அது நிதர்சனமாகத் தெரிகிறது. மேலும் நூலின் காட்சி அமைப்புகள், நம்மை அந்த இடத்துக்கே கொண்டு செல்கின்றன என்றால் அது மிகையல்ல.

ஆப்பிரிக்க காம்பியாவின் ஜூஃபூர் கிராமமும், மாண்டிங்கா மக்களின் கலாச்சாரமும், அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பலும், புதிய அமெரிக்க பூமியின் பண்ணைகளும், அடிமைச் சேரிகளும், ஆப்பிரிக்காவின் மனித ஆவணக் காப்பகங்களான கிரியட்டுகளும் இன்றும் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

கதையின் பாத்திரங்களும் தலைமுறை வாரியாக மனதில் பதிந்து விட்டன. [உமரோ – குண்டா கிண்டே – கிஸ்ஸி – கோழி ஜார்ஜ் – டாம் லீ – சியாமா - பெர்த்தா – அலெக்ஸ் ஹேலி ( மூல நூல் ஆசிரியர்) ].

இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தனது வேர்களைத் தேடும் ஆர்வம் வருவதைத் தவிர்க்க இயலாது.  என் தகப்பனார் அவர்கள் எங்களது குடும்பத் தலைமுறைகளை சார்ட் வடிவில் பட்டியலிட்டு என்னிடம் இனி வரும் தலைமுறைகளையும் இதில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறது.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை ஸஜரா அல்லது ஸில்ஸிலா என்ற பெயரில் தங்களது குடும்ப தலைமுறை ஆவணத்தைப் பாதுகாக்கும் பழக்கம் அரபுகளிடையே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே நம்மிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் கீழை நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்த தகவல்களை விட ஆப்பிரிக்காவைப் பற்றி அறிந்தது மிக மிகக் குறைவு என்றே நினைக்கிறேன்.

உலக முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட ஆப்பிரிக்க முஸ்லிம்களைப் பற்றி அறியும் ஆவலை ‘வேர்கள்’ நிச்சயமாகத் தூண்டும் என நம்புகிறேன்.

இப்போதெல்லாம் துபாய் வீதிகளில் எந்த ஒரு ஆப்பிரிக்கரைப் பார்த்தாலும் இவர் ஒரு காம்பியனாக, மாண்டிங்காவாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

சமீபத்தில் என் நண்பரோடு பணி புரியும் ஒரு செனகல் நாட்டுக் காரரிடம் ‘வேர்கள்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மிக ஆர்வத்தோடு ‘ரூட்ஸ்’ நூலில் இடம் பெற்றுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை எனவும், அடிமைகளை ஏற்றும் துறைமுகங்கள் செனகலில் தான் இருப்பதாகவும் கூறினார்.

நீங்கள் மாண்டிங்காவா? எனக் கேட்டதற்கு, இல்லை. நான் உலோஃப் இனத்தைச் சேர்ந்தவன் என அவர் கூறியதும் எனக்கு கப்பலில் குண்டாவுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தவர் ஒரு உலோஃப் தான் என்பது நினைவுக்கு வந்து போனது.

மேலும் அவர் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் குறித்த பல சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அடுத்த மாதம் துபாயில் நடக்கவிருக்கும் அவர்களின் ஜமாஅத் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

‘வேர்கள்’ மூலமாக என் சிற்றறிவுக்கு எட்டும் சில படிப்பினைகளாக நான் கருதுவது : ஒன்று – ஒரு சமூகத்தை அழிக்க முதலில் எதிரிகள் செய்வது அவர்களின் கலாச்சார அடையாளங்களை ( Identity) அழிப்பது. அது தான் குண்டாவின் விஷயத்தில் நடந்தது. அடுத்த தலைமுறைகளுக்குத் தாங்கள் முஸ்லிம்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது.

இன்றும் கூட நாமும் நம்மை அறியாமலேயே நமது தனித்துவ அடையாளங்களை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறோம். உடையில் தொடங்கி மொழி வரை… (இதில் தொப்பியும் லுங்கியும் தாடியும் அரபியும் தமிழும் அடங்கும்...)

கமால் அத்தா துர்க்கின் காலம் தொடங்கி இன்று வரை இந்த சதி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விஷயத்தில் உங்கள் ஊர் (காயல் பட்டணம்) மற்றும் கீழக்கரை சகோதரர்கள் எங்கு சென்றாலும் தமிழ் முஸ்லிம்களுக்குரிய அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது வரவேற்கத் தக்கது.

அடுத்ததாக, மேலை நாடுகளின் அடிமை முறை உடல் ரீதியாக களையப்பட்டு விட்டதாக பிரகடனப் படுத்தப்பட்டாலும், உள ரீதீயான சிந்தனை அடிமைத்தனத்தை (Ideological Slavery) அவர்கள் இன்றும் திணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் (குறிப்பாக முஸ்லிம் உம்மாவின் மீது) என்பதற்கு முஸ்லிம் நாடுகளில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள கலாச்சாரத் தாக்கங்களும், போர்களும், ஹாலிவுட் கற்பனைகளும், குழந்தைகளை அடிமைப்படுத்தும் கேம்ஸ், கார்ட்டூன்களும், மீடியாக்களும், KFC களும், போதைப் பொருட்களும், முதலாளித்துவ சந்தை முறைகளும், நவீன வங்கி முறைகளும், நவீன தொழில்நுட்ப போதைகளும் ( Facebook addiction…etc.) இன்னும் நமக்கே அறியாமல் நம்மை ஆட்கொண்டுள்ள எத்தனையோ ஆதிக்கங்களும் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.

இவற்றை உணர்ந்து எச்சரிக்கையாக, எந்த தஜ்ஜாலிய சக்திகளின் மாய வலையிலும் விழுந்துவிடாமல், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், அவர்கள் தந்த வாழ்க்கை நெறிக்கும் மாத்திரம் கட்டுப்பட்டவர்களாக, என்றும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமைகளாக வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக. இதற்கு இந்த வேர்களைத் தூண்டுகோலாக இறைவன் ஆக்கித் தருவானாக.

‘வேர்கள்’ மூலம் சமூகத்தின்  சிந்தனையைத்  தூண்டி வேர்களைத் தேட வைத்த உங்களின் பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

உங்களின் இஸ்லாமிய இலக்கியப் பணி மூலம் இன்னும் பல வேர் விட்டு வளரும் விருட்சங்கள் வெளிவர பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,

உங்கள் வாசகன்,

அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி

No comments:

Post a Comment