Saturday 2 November 2013

நெற்களும், பதர்களும்!



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அருமைத் தோழர்களும் ஒரு முறை நடந்து செல்லும்பொழுது மரணக் கிரியை ஒன்று நடப்பதைக் கண்டார்கள்.

மரணித்தவர் குறித்து அண்ணலாரின் தோழர்கள் நல்லவிதமாகப் பேசிக்கொண்டார்கள். இதனைச் செவியுற்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “உறுதியாகிவிட்டது!”

இன்னும் சிறிது தூரம் அவர்கள் சென்றபொழுது இன்னொரு மரணக் கிரியை நடப்பதைக் கண்டார்கள். இங்கே மரணித்தவரைக் குறித்து நபித்தோழர்கள் மோசமாகப் பேசிக்கொண்டார்கள். இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “உறுதியாகிவிட்டது!”

இறந்த ஒரு மனிதரைப் பற்றி நல்லவிதமாகப் பேசப்பட்டபொழுதும், இன்னொரு மனிதரைப் பற்றி மோசமாகப் பேசப்பட்டபொழுதும் அண்ணலார் ஒரே பதிலைச் சொன்னதைக் கவனித்த நபித்தோழர்கள் இவ்வாறு கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! என்ன உறுதியாகிவிட்டது?”

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்:
முதலில் கண்ட இறந்தவரைப் பற்றி நீங்கள் புகழ்ந்தீர்கள். அதன் காரணமாக அவருக்கு சுவனம் உறுதியாக்கப்பட்டது. இரண்டாவது கண்ட இறந்தவரைப் பற்றி நீங்கள் இகழ்ந்தீர்கள். அதன் காரணமாக அவருக்கு நரகம் உறுதியாக்கப்பட்டது. நீங்கள்தான் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள்!”

ஒவ்வொரு மனிதரும் அவரவர் வாழ்ந்த வாழ்க்கை முறையை வைத்து மரணத்திற்குப் பின்னுள்ள அவரவரது உறைவிடம் உறுதியாக்கப்படுகிறது. நன்மை செய்தவருக்கு சுவர்க்கம். தீமை செய்தவருக்கு நரகம். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்கான கூலியை அங்கே அவர் பெற்றுக் கொள்வார். அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்கான தண்டனையை அவர் அங்கே பெற்றுக் கொள்வார்.

இறுதிச் சடங்கில் இலட்சக் கணக்கில் செலவிட்டு மலர் அஞ்சலியைச் சமர்ப்பித்தாலும் இறைவனின் தீர்மானத்தில் மாற்றம் வர வாய்ப்பில்லை. தங்கள் அருமைத் தோழர்கள் மாற்றிப் பேசுபவர்களல்லர் என்ற காரணத்தினால்தான் அவர்களின் விமர்சனங்களை அண்ணலார் அங்கீகரித்தார்கள்.

சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனைப் பொருட்படுத்தாது உண்மைகளை உயர்த்திப் பிடிப்பவர்களல்லவா உத்தம நபியின் உண்மைத் தோழர்கள். அதன் காரணமாகத்தான் அவர்களைஅல்லாஹ்வின் சாட்சிகள்என்று அண்ணலார் அன்புடன் அழைத்தார்கள்.

இன்னொரு சமயம் தங்கள் கூட்டத்தில் ஒரு ஆள் மரணித்தபொழுது அந்த ஜனாஸாவை நோக்கி நபித்தோழர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “தாங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். தாங்கள் சுவனத்தில்தான் இருப்பீர்கள்.”

இந்த விமர்சனத்தை அண்ணலார் அப்படியே அதே அளவில் அங்கீகரிக்கவில்லை. அண்ணலார் கூறினார்கள்: “ஒருவேளை இவர் தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டு அதுகுறித்து பேசியிருக்கலாம். தனக்கு நஷ்டமில்லாத காரியங்களில் செலவழித்திட கஞ்சத்தனம் காட்டியிருக்கலாம். உங்களுக்கு இது தெரியாமல் போயிருக்கலாம்.”

அண்ணலாரின் இந்தக் கூற்று கவனிக்கத்தக்கது. மரணித்தவரின் வாழ்க்கையில் வெளிப்படையாகத் தோன்றுபவற்றை மட்டும் கணக்கில் எடுத்து தங்கள் தோழர்களில் ஒருவர் இறந்தவரை மதிப்பீடு செய்தது தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இறந்தவரிடம் காணப்பட்ட இரண்டு விஷயங்கள் ஒரு வேளை அவரது அறுதித் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் என்று அண்ணலார் சந்தேகித்தார்கள். எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து கருத்து சொல்வதும், பொது நன்மைக்காக பொதுப் பணத்திலிருந்து செலவு செய்வதற்கு தடையாக நிற்பதும் சமுதாயச் சேவை என்று சிலர் எண்ணியிருக்கிறார்கள். அதுதான் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு என்று சிலர் தவறாகக் கருதியிருக்கின்றனர்.

இக்கட்டுரை விடியல் வெள்ளி  மார்ச் 2013 மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment