Thursday 28 November 2013

வெளிச்சம் வந்த வழி!


அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரன்தான் ஹம்ஸா. அவர்களிருவருக்குமுள்ள பந்தம் அந்த உறவு மட்டுமல்ல. இருவரும் ஒரே வயதுக்காரர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். பால்குடி சகோதரர்கள். இளைஞர் பருவம் வரை இணைபிரியா நண்பர்கள்.

இப்படியெல்லாம் இருந்தாலும் அவர்கள் இருவரின் குணாதிசயங்களும் வித்தியாசமானவை. அண்ணலார் சாந்தமானவர்கள். எளிமையும், அடக்கமும் அவர்களின் அடையாளங்கள். ஆரவாரமின்றி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பதில் அண்ணலாருக்கு அலாதி ஆர்வம். முதிர்ச்சியடைந்தபொழுது தனிமையிலும், தியானத்திலும் அவர்கள் நேரத்தை செலவழிக்கத் தொடங்கினார்கள்.

ஹம்ஸா அப்படியல்ல. ஊரில் தன் குடும்பத்தின் மீது நிலவி வந்த கண்ணியத்தை அவர் உணர்ந்திருந்தார். அதனைத் தக்க வைத்துக்கொள்ள ஊரில் நிலவிலிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஆடம்பரப் பிரியர். ஊரில் தலைவர்களுக்கிடையில் தனக்கொரு இடத்தைப் பிடிக்க அவர் தனிக் கவனம் செலுத்தினார். வேட்டையாடுதலும், உடற்பயிற்சியும் அவரது விருப்பமான பொழுதுபோக்குகள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பாணியையும், போக்கையும் ஹம்ஸா கவனிக்காமல் இருந்ததில்லை. அவர்கள் மேல் மிகுந்த கண்ணியமும், மரியாதையும் வைத்திருந்தார் ஹம்ஸா. இதற்கிடையில்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் தங்கள் தூதுத்துவச் செய்தியை எத்தி வைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இதிலெல்லாம் சிறிதும் ஆர்வம் காட்டிடவில்லை ஹம்ஸா. முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளுக்குமிடையில் வெறும் பார்வையாளராகத்தான் இருந்தார் அவர்.

இரு தரப்பாரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது இவருக்கு தமாஷாகப் பட்டது. இஸ்லாம் சம்பந்தப்பட்ட பேச்சு வரும்பொழுதெல்லாம் சிரித்து அலட்சியப்படுத்தி வந்தார்.

ஒரு நாள் ஊர்க்காரர்களில் சிலர் வழமை போல் கஅபாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஹம்ஸாவும் அங்கே வந்தார். பேச்சு முஹம்மதைக் குறித்து நடக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது. அண்ணலார் மேலிருந்த வெறுப்பின் வெப்பம் அங்கே அவர்களது பேச்சில் கொப்பளித்தது.

முஹம்மதுடைய பேச்சுகளை ஒரேயடியாக நிராகரித்துத் தள்ள வேண்டும் என்பது ஹம்ஸாவின் நிலைப்பாடாக இருந்தது. அதனைத்தான் அவர் அங்கே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.

அவருடைய முகத்தில் பரிகாசச் சிரிப்பு வெளிப்பட்டது. அபூஜஹ்ல் அதனை வேறுவிதமாகக் கண்டான். ஆபத்தின் அறிகுறி அறிந்தும் ஹம்ஸா அதனை அலட்சியப்படுத்துகிறார் என்று அவன் குற்றம் சாட்டினான். முஹம்மத் வளர்வதற்கு ஹம்ஸா இடம் கொடுக்கிறார் என்றும், முஹம்மத் தன் நிலையை உறுதிப்படுத்திவிட்டால் நம்மால் அப்பொழுது ஒன்றும் செய்ய இயலாது என்றும், இதனை முஹம்மதே முன்னறிவிப்பு போல் சொல்லியிருக்கிறார் என்றும் அவன் வாதிட்டான்.

இப்படிப் பேச்சு நீண்டு கொண்டே சென்றது. ஹம்ஸா அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எதனையும் பொருட்படுத்தவில்லை. நடக்கின்றவையெல்லாம் ஒரு தமாஷாகவே அவருக்குப் பட்டது.

ஒரு நாள் வேட்டையாடி விட்டு ஹம்ஸா மக்கா திரும்பினார். வெளியே சென்று விட்டு மக்கா திரும்பினால் புனித கஅபா ஆலயத்தைத் தரிசிக்காமல் அவர் வீடு செல்வதில்லை. இதற்கிடையில் வழியில் ஹம்ஸாவைப் பார்த்த அவருடைய நண்பரின் வேலைக்காரி இவ்வாறு கூறினார்: “அபூ உமாரா, உம் சகோதரரின் மகனான முஹம்மதை அபூஜஹ்ல் எப்படியெல்லாம் துன்புறுத்தினான் தெரியுமா? நீர் அதனைப் பார்த்திருந்தால்……”

ஹம்ஸாவின் நெஞ்சத்தில் அனல் பறந்தது. அல்லாஹ்வின் தூதரை குறைஷிகள் கேலி செய்து, துன்புறுத்திய ஒரு தினமாக இருந்தது அது. வீட்டிற்கு ஹம்ஸா வந்ததும் அவரின் மனைவியும் இதே விஷயத்தைச் சொன்னார். இனிதான் அந்த ஆச்சரியம் நடந்தது.

ஆவேசம் வந்தவராய் கையிலிருந்த வில்லைக் கீழே வைக்காமல் நேரே கஅபா நோக்கி நடந்தார் ஹம்ஸா. அபூஜஹ்ல் அங்கே வீற்றிருந்தான். அவனைச் சுற்றி குறைஷிகள் அமர்ந்திருந்தனர். வேகமாக வந்த ஹம்ஸா ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் வில்லைக் கொண்டு அபூஜஹ்லின் தலையில் ஓங்கி அடித்தார். தலையிலிருந்து மூக்கின் மேல் வழிந்த ரத்தத்தை அபூஜஹ்ல் துடைக்கும்பொழுது ஹம்ஸா சொன்னார்: “முஹம்மதை நீ துன்புறுத்துவாய் இல்லையா… அப்படியானால் கேட்டுக்கொள். நானும் மதம் மாறியிருக்கிறேன். முஹம்மதின் மார்க்கம்தான் எனது மார்க்கம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். நீ என்னை அடி பார்க்கலாம்.”

அபூஜஹ்லுக்கு முதலில் கிடைத்த அடியை விட அதிக வலியைத் தந்தது ஹம்ஸாவின் பேச்சு. ஒன்றும் பேசாமலிருந்தான். தான் பேசியது ஹம்ஸாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சகோதரனின் மகன் மேல் சிறு வயதிலிருந்தே தான் வைத்திருந்த நேசத்தின், பாசத்தின் வெளிப்பாடு தன்னை ஆவேசத்தில் ஏதேதோ பேசுபவனாக மாற்றி விட்டதே என்று ஹம்ஸா திகைத்தார். கோபத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டோம் என்று எண்ணி அதிசயித்தார்.

ஏனெனில் இஸ்லாத்தைத் தழுவுவதற்கான மனநிலையிலோ, மனப்பக்குவத்திலோ அவர் அப்பொழுது இல்லை. அவர் ஆவேசத்தில் சொன்னது போல் அப்படியொரு சம்பவமும் நடக்கவில்லை.

அடுத்தடுத்த தினங்களில் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார் ஹம்ஸா. கஅபாவிலுள்ள சிலைகளின் பிம்பங்களை தன் மனதிலிருந்து அவரால் அவ்வளவு எளிதாக அகற்றிட முடியவில்லை. நாட்கணக்கில் ஆழ்ந்த சிந்தனையும், பிரார்த்தனையுமாக அவரது கணங்கள் கழிந்தன. இறுதியில் இறைவன் அவரது இதயத்தைத் திறந்தான். நேர்வழி என்னும் வெளிச்சத்தைக் காட்டினான்.

அல்லாஹ்வின் தூதரிடம் வந்து ஹம்ஸா தன் முடிவைத் தீர்க்கமாகச் சொன்னார்.

நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்

தமிழில் : MSAH

இக்கட்டுரை விடியல் வெள்ளி  நவம்பர் 2013 இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment