Wednesday 27 November 2013

எங்கும் திருக்குர்ஆன்! எதிலும் திருக்குர்ஆன்!


அல்குர்ஆன்! அல்லாஹ்வின் திருவேதம் ஓர் அற்புதம்! அற்புதங்களிளெல்லாம் அற்புதம்!

இந்தக் குர்ஆனை நாம் முறையாக, முழுமையாகக் கற்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

திருக்குர்ஆனைத் தாங்கும் அரபி மொழி தனித்துவமானது;
ஈடியிணையில்லாதது. சாதாரணமாக ஒரு நூலுக்கு முன்னுரை, பொருளுரை, முடிவுரை என்றிருக்கும். இதே முறையை எதிர்பார்த்து திருக்குர்ஆனை அணுகுபவர்களுக்கு குழப்பமே மிஞ்சும்.

திருக்குர்ஆனின் பாணியே அறியாதவர்களும், அதன் மொழியில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவர்களும் கூட அதனை அணுகலாம். நாளடைவில் அவர்கள் அதனோடு ஒன்றி விடுவார்கள். பல தலைமுறைகளாக முஸ்லிம் உலகின் முக்கிய சிந்தனையாளர்கள், அறிஞர்கள் அனைவரும் திருக்குர்ஆனின் ஆழிய ஞானத்தை வெளிக் கொண்டு வரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அறிஞர் யூசுஃப் அலீயும் இதையே தான் செய்தார். ‘தஃப்ஸீர்’ என்பது திருக்குர்ஆனின் மொழியாக்கமும், விளக்குவரையும் ஆகும். முஸ்லிம் உலகில் இதன் வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது.

திருக்குர்ஆன் கூறும் கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு அறிவுக் கருவூலம். ஆனால் இந்தக் கருவூலத்தை நாம் முறையாக, முழுமையாகப் பயன்படுத்துகிறோமா? இல்லை. நமது கருவூலத்தை நாம் பயன்படுத்தாமல் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

திருக்குர்ஆனை யாருடைய துணையுமில்லாமல், தனிமையாக விளங்குவது என்பது சற்று சிரமத்தைத் தரும். குர்ஆனைக் கற்றுக் கொள்ள நல்ல ஒரு ஆசான் வேண்டும். அத்தோடு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், விவாதிக்கவுமான ஒரு மாணவர் கூட்டம் வேண்டும். இத்தகையோர் ஆரோக்கியமான சூழ்நிலையில் குர்ஆனைக் கூர்மையாக கற்றுக் கொள்ள உதவும்.

கருத்துகள் பரிமாறப்படும்போது, புதையலை எடுப்பது போல் புதுப் புது கருத்துகள், கண்டுபிடிப்புகள் குர்ஆனிலிருந்து வெளிப்படும்.
அத்தோடு ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வணக்கங்களில் திருக்குர்ஆனை ஓத வேண்டும். அதற்கும் அதிகப்படியான நன்மைகள் உள்ளன.

ஆனால் ‘தர்ஸ்’ என்று சொல்லப்படும் கற்றுக் கொள்ளுதல், திரும்பத் திரும்பப் படித்தல் என்பது தொடர்ந்து நடக்க வேண்டும். இது முறையாக தொடர்ந்து நடப்பதில்தான் சிறப்பு இருக்கிறது.

முஸ்லிம் உலகில் ஆண், பெண் இரு பாலருக்கும் திருக்குர்ஆனை அறிவுப்பூர்வமாக அணுகுவதில் இரு நன்மைகள் உள்ளன. ஒன்று – ஒன்றுபடுதல் (ஜமாஅத்). மற்றொன்று – அறிவைத் தேடுதல்.
இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களின் மூல ஆதாரமான திருக்குர்ஆனை நேரடியாக அணுகுவதற்கு முழு உரிமை அளித்திருக்கிறது.

இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் ஏற்று நடக்க விரும்புபவர்களுக்கு, அதற்காக கடுமையான முயற்சிகளை எடுப்பவர்களுக்கு திருக்குர்ஆனுடனுள்ள தொடர்பு என்பது அத்தியாவசியமானது.

திருக்குர்ஆனை அதன் நோய் தீர்க்கும் பண்பிற்காகவும் ஓத வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன் அல் முல்க் என்ற சூராவை ஓதுவது சிறப்பு. அதேபோல் அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு யாஸீன் சூராவை ஓதுவது சிறப்பு.

இப்படி எண்ணற்ற சிறப்புகள் திருக்குர்ஆனை ஓதுவதில் இருக்கிறது. என்றாலும் இதற்காக மட்டும் குர்ஆனை அணுகாமல், அதனை முழுமையாக விளங்க முயற்சி செய்ய வேண்டும். நமது சிந்தனை ரீதியான தொடர்புகளைக் குர்ஆனோடு ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனும் இதனைத்தான் விரும்புகிறது. அது தன்னைக் கற்க வருபவர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

‘லஅல்லகும் தஃகிலூன்’ என்று குர்ஆன் நெடுகிலும் கூறப்படுவதை நாம் காணலாம். ‘நீங்கள் அறிந்து கொள்வதற்காக,’ ‘நீங்கள் அறிவுடையோர் ஆவதற்காக’ என்று இதற்கு பொருள் கொள்ளலாம்.

‘அஃபலா தஃகிலூன்’ (நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?) என்று திருக்குர்ஆன் நம்மைப் பார்த்துக் கேட்கின்றது. ‘லஅல்லகும் ததஃபக்கரூன்’ (நீங்கள் சிந்தித்து உணர்வதற்காக) என்று பல இடங்களில் திருக்குர்ஆன் கூறுகிறது.

இப்படி திருக்குர்ஆன் பல இடங்களில் ஏன் கேட்கிறது? அதற்கு ஒரே பதில்தான். அதன் செய்திகள் யாவும் சிந்தித்துணரும் மக்களுக்குத்தான் போய்ச் சேரும் (லிகவ்மின் யத ஃபக்கரூன்).

திருக்குர்ஆன் என்பது நேரடியாக அணுகும் வகையில் இலகுவானது. தங்கள் வாழ்வை வளமாக, வாய்மையாக வடிவமைக்க விரும்புபவர்களும், இந்தச் சமுதாயத்தை உயிரோட்டமுள்ள சமுதாயமாக மாற்ற விரும்புபவர்களும் திருக்குர்ஆனைத் தவிர வேறொன்றுக்குச் செல்லத் தேவையேயில்லை.

பேராசிரியர் அய்யூப் அவர்கள் தனது ‘தபரீ’ என்ற நூலில் இவ்வாறு கூறுகின்றார்: “துவக்கத்திலிருந்தே ‘தஃப்ஸீர்’ என்பது தத்துவ விளக்குமும், அதன்படி செயல்படுவது என்பதுமே ஆகும். ஏனெனில் நபித்தோழர்கள் (அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!) ஒரு நேரத்தில் 10 வசனங்களை மட்டும் ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அந்த 10 வசனங்களின் ஆழிய கருத்துகளைக் கற்பார்கள். அதன்படி செயல்படுவார்கள்.

நபித்தோழர்களிடமிருந்து குர்ஆனைக் கற்ற ஒருவர் கூறும்பொழுது, “அண்ணல நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் இறங்கும்பொழுது அதன் வசனத்தை ஓதிக் காட்டுவார்கள். நபித்தோழர்கள் அதனை தங்கள் உள்ளங்களில் ஏந்துவார்கள். ஆனால் 10 வசனங்களைத் தாண்டமாட்டார்கள். அந்த 10 வசனங்களை தங்கள் வாழ்வில் கொண்டு வரும்வரை அவைகளைத் தாண்டமாட்டார்கள். அதனால் நாங்கள் குர்ஆனுடைய வசனங்களையும் அதன் பயன்பாட்டையும் ஒருசேர, ஒரே நேரத்தில் கற்றோம்’ என்று கூறுகிறார்.” (தபரீ, பாகம் 1, தாருல் மஆரிஃப் 1954 பதிப்பு, பக்கம் 80)

யூதராக இருந்து, திருக்குர்ஆனை ஆய்ந்தறிந்து, இஸ்லாத்தைத் தழுவியவர் முஹம்மது அஸத். அவர் கூறுகிறார்: “இஸ்லாம் ஒரு மார்க்கமாக வாழ வேண்டும். அது ஒரு கலாச்சாரத்தை உருவாக்கும் காரணியாக இருக்க வேண்டும். நாம் திருக்குர்ஆனையும், நபிவழியையும் புத்துணர்ச்சியோடு, நடுநிலையோடு அணுக வேண்டும். குர்ஆன் வசனங்கள் இப்பொழுது இறங்குவது போலவும், அண்ணல் நபி (ஸல்) அவர்களது அருமையான அருள்மொழிகள் நமது காதுகளில் நேரடியாக ஒலித்துக் கொண்டிருப்பது போல, நபிகளார் என்னைப் பார்த்து, உங்களைப் பார்த்து, ஒவ்வொருவரையும் பார்த்துப் பேசுவது போல நாம் இந்தக் குர்ஆனை அணுக வேண்டும்.

ஏனெனில் 13, 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் நபித்தோழர்களுக்கு அருளப்பட்ட அதே நபிதான் இன்று எனக்கும், உங்களுக்கும் நபி. ஆதலால் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபித்தோழர்கள் எவ்வாறு திருக்குர்ஆனை அணுகினார்களோ அவ்வாறே நாமும் அணுக வேண்டும்.

“இஸ்லாத்தை இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ வைக்க வேண்டுமென்று, இஸ்லாத்தை இப்பூவுலகில் நிலைநாட்டிக் காட்ட வேண்டுமென்று இஸ்லாமிய இயக்கங்களை நிறுவி, தங்கள் வாழ்நாள் முழுவதையும் அதற்காகச் செலவிட்ட தியாகிகள், முஸ்லிம் உலகம் போற்றும் நமது முன்னோர்கள், அறிஞர் பெருமக்கள் அனைவரும் திருக்குர்ஆனின் விரிவுரையாளர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சமுதாயத்தை மாற்றிக் காட்டியவர்கள், சரித்திரத்தில்  முத்தாய் பதிந்தவர்கள் எல்லோரும் திருக்குர்ஆனை விளங்கியவர்களாகவும், அதனைச் சிறந்த முறையில் பிறருக்கு எடுத்துச் சொல்லக் கூடியவர்களாகவுமே திகழ்ந்தார்கள்.
‘இஃக்வானுல் முஸ்லிமூன்’ என்பது எகிப்தில் தோன்றிய ஒரு பேரியக்கம். அதன் தலைவர்களில் ஒருவர்தான் ஷஹீத் செய்யித் குதுப். இவர்கள் ‘ஃபீழிலாலில் குர்ஆன்’ (திருக்குர்ஆனின் நிழலில்) என்று தனது திருக்குர்ஆன் விரிவுரைக்குத் தலைப்பிட்டார்கள்.

20ம்  நூற்றாண்டின் ஈடிணையற்ற பேரறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள் ‘ஜமாஅத்தே இஸ்லாமி’ என்ற பேரியக்கத்தை இந்தத் துணைக் கண்டத்தில் நிறுவினார்கள். அவர்கள் தாம் எழுதிய திருக்குர்ஆன் விரிவுரைக்கு ‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ (திருக்குர்ஆனைப் புரிந்துக் கொள்ளுதல்) என்று பெயரிட்டார்கள். இது 6 பாகங்களைக் கொண்டது.

அல்லாஹ் அவர்களுக்கு அளப்பரிய அறிவை அள்ளிக் கொடுத்திருந்தான். அவர்கள் நினைத்திருந்தால் இஸ்லாமியச் சட்டவியலில், அரசியலில், இலக்கியத்தில், தத்துவக் கலையில் தங்கள் அறிவைச் செலுத்தியிருக்கலாம்; பல நூல்களை எழுதியிருக்கலாம். ஆனால் அவர்கள் இவைகளையெல்லாம் விட அதிக முக்கியத்துவும் கொடுத்தது திருக்குர்ஆனுக்குத்தான். அதில்தான் தங்கள் ஞானத்தை அதிகமதிகம் செலவழித்தார்கள். ஏனெனில் அனைத்துத் துறைகளுக்கும் மூல ஊற்று திருக்குர்ஆன்தான்!

இஸ்லாம் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி; அது அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வைச் சொல்கின்றது. ஆனால் திருக்குர்ஆனில் ஆழிய ஞானம் இருந்தாலொழிய இதனை நாம் நிரூபிக்க முடியாது.
திருக்குர்ஆனை அணுகும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கும். அவரவர் கோணத்தில் அவரவர் சிந்திக்கலாம். இதற்கு திருக்குர்ஆன் உரிமை அளிக்கிறது.

ஆனால் இந்த உரிமையை நேர்மையாக, ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.

ஷேக் ஸாபுனி என்ற அறிஞரது கூற்றுப்படி ‘ஃபஜ்ர்’ என்ற சூராவில் வரும் ‘ஃபஜ்ர்’ என்ற வார்த்தைக்கு 36 அர்த்தங்கள் தஃப்ஸீர்களில் காணக் கிடைக்கின்றன.

திருக்குர்ஆன் ‘தர்ஸ்’ என்பது தொடுவான எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே போகக் கூடிய ஒரு வாகனம். மனிதன் இதனைக் கொண்டு சிந்திக்க வேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும்.

முஸ்லிம்கள் பட்டுத் துணிகளால் மூடிய தங்கள் குர்ஆனைத் திறக்க வேண்டும். அல்லாஹ்வின் கிதாபோடு தங்கள் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கில உலகில் திருக்குர்ஆனை அறிய உதவுவதற்கு நிறைய நூல்கள் காத்துக் கிடைக்கின்றன. ஓதும் உச்சரிப்புகளைச் சரிப்படுத்த ஒலி, ஒளிப்பேழைகளும் உள்ளன.

திருக்குர்ஆனின் அரபியில் முஸ்லிம்கள் பாண்டித்தியம் பெற வேண்டும். திருக்குர்ஆனைப் பிறருக்குச் சொல்லித் தரும் கலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் திருக்குர்ஆனை ‘அமல்’ படுத்த வேண்டும்.

ஆம்! எங்கும் குர்ஆன், எதிலும் குர்ஆன் என்றொரு நிலை உருவாக வேண்டும்.

M.A. ஷெரீஃப்

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி,  ஜனவரி 2001

No comments:

Post a Comment