Sunday 29 September 2013

பெருமானார் முன்னறிவிப்பு செய்த பாரபட்சம்!


உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் கூட சிகிச்சை செய்து குணப்படுத்தி விடலாம்.மனதில் காயம் ஏற்பட்டால் எளிதில் குணப்படுத்த இயலுமா?

வார்த்தைகளுக்கும், பாரபட்சத்திற்கும் வாளை விடக் கூர்மையான சக்தி உண்டு. நஷ்டமடைந்த பொருளாதாரமும், இழந்த உரிமைகளும் திரும்பக் கிடைத்தாலும் பாரபட்சம் அல்லது புறக்கணிப்பு ஏற்படுத்திய மனக்காயம் அவ்வளவு எளிதாக ஆறாது.

பாரபட்சம் காட்டுவதன் நோக்கம் உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்ல. அது ஒரு மானசீகமான போரும் ஆகும். பாரபட்சத்திற்கு இரையாக்கப்படும் சமூகம் தங்களுக்கு பாதிக்கப்படுவது உரிமைகள் மட்டும்தான் என்று எண்ணிவிடக் கூடாது. தொடர்ந்து பழிகள் சுமத்தப்பட்டு அடி மேல் அடி வாங்கும் ஒரு சமுதாயம் சமூக அடிமைத்தனத்திற்கு தள்ளப்படும் என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.

மதீனாவில் அன்சாரிகளுக்கு அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தாராளமாக பொருள்களை வினியோகம் செய்தார்கள். அதன் பிறகு அவர்களிடம் அண்ணலார் இவ்வாறு கூறினார்கள்:

“அன்சாரிகளே,இஸ்லாமிற்காக நீங்கள் செய்த அபரிமிதமான அளப்பரிய சேவைகளுக்கு அல்லாஹ் உங்களுக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக. நீங்கள் எனக்கு அறிமுகமாகிய நாள் முதல் உங்களை உதவி செய்யும் நற்குணமுடையவர்களாகவும், பொறுமையாளர்களாகவுமே நான் கண்டேன். எனது காலத்திற்குப் பிறகு உங்கள் மீது பாரபட்சம் காட்டப்படலாம். ஆனால் என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். மிக்க உன்னதமான சுவர்க்கம் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது.”

உபைத் இப்னு ஹுளைர் (ரலி) அந்தக் கூட்டத்தில் இருந்தார். இறுதித்தூதர் (ஸல்)அவர்களின் மறைவுக்குப் பிறகு நீண்ட நாட்கள் அவர் உயிர் வாழ்ந்தார். கலீஃபா உமர் (ரலி)அவர்களின் ஆட்சியின்பொழுது ஒருமுறை மதீனாவில் எல்லோருக்கும் ஆடை வினியோகிக்கப்பட்டது.அளவு குறைந்ததாக இருந்ததால் உபைத் அதனை உபயோகிக்கவில்லை.

இப்படியிருக்க ஒருமுறை மஸ்ஜிதில் ஒரு குறைஷி இளைஞரை உபைத் (ரலி) காண நேரிட்டது.தனக்கு வினியோகிக்கப்பட்ட அதே ஆடையை அவன் அணிந்திருந்தான். ஆனால் தனக்கு வழங்கப்பட்டதை விட அதிகளவில் அந்த ஆடை இருந்ததை உபைத் (ரலி) கவனித்தார். பாரபட்சத்தை உணர்ந்தார்.
அண்ணலார் அறிவித்த முன்னறிவிப்பு அவரது நினைவுக்கு வந்தது. அருகிலிருந்தவர்களிடம் உபைத் (ரலி) இவ்வாறு கூறினார்: “எனக்குப் பிறகு நீங்கள் பாரபட்சம் காட்டப்படுவீர்கள் என்று அண்ணலார் சொன்னது இதோ தொடங்கியிருக்கிறது.”

இது கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காதுகளுக்கு எட்டியது. பாரபட்சம் குறித்து எள் முனையளவு கூட எண்ணம் கொண்டிராத உமர் (ரலி) அவர்கள் இதனை எப்படி சகித்துக்கொள்வார்கள்?அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை.

மஸ்ஜிதுக்கு விரைந்தோடி வந்தார்கள். அப்பொழுது உபைத் (ரலி) தொழுதுகொண்டிருந்தார்.தொழுகை முடியும் வரை உமர் (ரலி) அவர்கள் காத்திருந்தார்கள். உபைத் (ரலி) தொழுது முடித்த பின் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்: “தாங்கள் என்ன சொன்னீர்கள்? இந்தக் குறைஷி இளைஞருக்கு நான் அதிகமான துணி கொடுத்துவிட்டேன் என்றா?”

உபைத் (ரலி) தனது தரப்பு விளக்கத்தைக் கூறினார்: “எனக்குக் கிடைத்த ஆடையின் அளவு அந்த இளைஞருக்குக் கொடுக்கப்பட்ட ஆடையின் அளவை விடக் குறைவாக இருந்தது”

இதனால் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளோம் என்ற எண்ணம் உருவானது உண்மைதான் என்று உபைத் ஒப்புக்கொண்டார்.

உமர் (ரலி) அவர்கள் அதற்கு இவ்வாறு பதிலளித்தார்கள்: “தங்களை அல்லாஹ் மன்னிக்கட்டுமாக.அந்த ஆடையைக் குறைஷி இளைஞருக்கு நான் கொடுக்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அகபாவில் வைத்து உடன்படிக்கை செய்தவரும், அண்ணலாருடன் ஏராளமான யுத்தங்களில் கலந்துகொண்ட ஒரு சிறந்த அன்சாரிக்குத்தான் நான் அந்த ஆடையை அளித்தேன். இந்த இளைஞர் அந்த அன்சாரித் தோழரிடமிருந்து அதனை விலைக்கு வாங்கியுள்ளார்.”

உபைதுக்கு நடந்த நிகழ்வு புரிந்தது. உமர் (ரலி) அவர்கள் தொடர்ந்தார்கள்: “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த பாரபட்சம் என்னுடைய காலத்திலேயே வரும் என்று தாங்கள் கருதுகிறீர்களா?”

இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டது ஒரு துணிதான். இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சித் தலைவர் அதனை எளிதாக எடுத்துக்கொள்வில்லை. தனது ஆட்சியில் சாமானியர்கள் யாரும் பாரபட்சம் காட்டப்பட்டுவிட்டோம் என்று துளி கூட எண்ணி விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.

சமுதாயப் பாதுகாப்புக்கு கறுப்புச் சட்டங்களை விட மேலானது இந்தப் பேணுதல்தான் என்றால் அது மிகையல்ல.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment