Saturday 28 September 2013

கருத்துவேறுபாடுகளைக் களைய என்ன வழி?


“இந்தச் சமுதாயத்தின் அவல நிலையைக் கண்டு மனம் அழுதது. அதற்கான காரணங்களைத் தேடி என் மனம் அலை பாய்ந்தது. நான் மால்டா
சிறையிலிருக்கும்பொழுது இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்” – இப்படிக் கூறியது ஷேகுல் ஹிந்த் மெளாலானா மஹ்மூத் உல் ஹஸன். 1920ல் தனது 69வது வயதில் இதைக் கூறிய அவர்கள் அக்காலத்தில் சிறந்த மார்க்க அறிஞராகத் திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஆங்கிலேயே காலனியாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடியவர்கள்.

ஆலிம்கள் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பொழுது அவர்கள் இதைக் குறிப்பிட்டார்கள். சமுதாயத்தின் அவல நிலைக்கு என்ன காரணம் கூறப் போகிறார்கள் என்று கூட்டம் அவர்களை ஆவலுடன் நோக்கியது.

அவர்கள் கூறினார்கள்: “நமது பிரச்னைகளுக்கு இரண்டே இரண்டு காரணங்கள்தாம்:

நாம் குர்ஆனைக் கை விட்டது.
நமக்குள் நடக்கும் உள் சண்டைகள்.”

இப்படிக் கூறிய மெளலானா அவர்கள் அதன் பிறகு சொற்ப காலமே உயிர் வாழ்ந்தார்கள். அந்த சொற்ப காலமும் இந்தக் காரணங்களைக் களைந்து, முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்குக் கடுமையாக உழைத்தார்கள்.

இந்தக் காரணங்கள் எவ்வளவு உண்மை நிறைந்தவை என்பது நமக்கெல்லாம் புலப்படும். இந்த இரண்டு காரணங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை. இரண்டாவது காரணம் முதல் காரணத்தாலேயே உருவாகிறது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களை சகோதரப் பாசமுள்ள ஒரே சமுதாயம் எனப் பிரகடனப்படுத்துகிறது. உள் சண்டைகளைப் பற்றி அது கடுமையாக எச்சரிக்கின்றது.

நாம் திருக்குர்ஆன் விடுத்த பிரகடனத்தையும், எச்சரிக்கையையும் மறந்து விட்டோம். இன்று அகிலமெங்கும் பரவி வாழும் 120 கோடி முஸ்லிம்களும் பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கின்றோம்.

சில குறுகிய மனப்போக்குள்ள சுயநலக் காரணங்களுக்காகவே நமக்குள் பெரும்பாலான சண்டைகள் நடக்கின்றன.

இஸ்லாத்தைப் பயன்படுத்தி இந்தச் சண்டைகளை நாம் தீர்த்திருக்க இயலும். ஆனால் அந்தோ துரதிர்ஷ்டம்..! இஸ்லாத்தின் பெயராலேயே நாம் பிளவுபடுகிறோம். மேலும் மேலும் பிரச்னைகளை உண்டு பண்ணுகிறோம்.
சிக்கலுக்குள் சிக்கலை உருவாக்குகிறோம்.

சின்னச் சின்ன ஃபிக்ஹுப் பிரச்னைகளைப் பெரிதாக்குகிறோம். மார்க்க விஷயங்களை அர்த்தப்படுத்துவதில் சிறுசிறு வேறுபாடுகள் எழுவது இயல்பு.
இந்தச் சிறிய வேறுபாடுகளை, சிறிய சட்டப் பிரச்னைகளைப் பெரிய யுத்தகளமாக மாற்றி விடுகிறோம். ஆனால் மிக முக்கியமான, அடிப்படையான விஷயங்கள் அங்கு கை மீறிப் போவதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

இன்று இஸ்லாம் எல்லா திசைகளிலிருந்தும், எல்லா முனைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றது. இப்படியிருக்கும் நிலையிலேயே நாம் நமக்குள்ளாலான சண்டைகளை நடத்துகிறோம்.

இஸ்லாத்தில் ஹராம் ஆக்கப்பட்டவை இன்று ஹலால் ஆக்கப்படுகின்றன. பல தெய்வக் கொள்கையுடையோரின் பழக்க வழக்கங்கள் இன்று மார்க்கத்தை அறியாத நம்மவர்களிடையே ஊடுருவுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையே பிரதானமாகக் கொள்ளும் ‘ஹீடனிஸம்’ எனும் கொள்கை நம்மவர்களை ஆக்கிரமிக்கிறது. வெட்கமின்மை வரவேற்கப்படுகின்றது. ஒழுக்கச் சீர்கேடுகள் நவநாகரிகக் கலாச்சாரமாக நம்பப்படுகின்றன.

நமது சமுதாயம் சினிமாப் படங்களாலும், தொலைக்காட்சிப் பெட்டிகளாலும், ஆபாச இலக்கியங்களாலும் சீரழிக்கப்படுகின்றது.
நமது சமுதாயத்தின் அனைத்து அடுக்கு மக்களிடமும் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாரிசுகள்தாமே நாம்..! இவைகளை அவர்கள் அனுமதித்தார்களா?

இவைகளுக்கெதிராக நமது கவனத்தைத் திருப்ப வேண்டாமா?

இத்தனைக் கொடுமைகளும், தீமைகளும் அரங்கேறி வரும் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து விடும். மறுவுலகத்தில் நாம் எழுப்பப் படுவோம். இறைவன் அவன் முன் நிறுத்தி நம்மிடம் கேட்பான்: ”இந்தக் கொடுமைகளுக்கும், தீமைகளுக்கும் எதிராக நீ என்னப்பா செய்தாய்?”

”யா அல்லாஹ்! ‘ரஃபஅ யதைன்’ (தொழுகையில் சில இடங்களில் கைகளை உயர்த்துவது சம்பந்தமான பிரச்னை) என்ற நூலை எழுதினேன்” என்று நாம் பதிலுரைக்க முடியுமா? இறைவன் விட்டுவிடுவானா?

ஒரு தடவை நான் மெளலானா அன்வர் ஷாஹ் கஷ்மீரி அவர்கள் மிகவும் கவலையாக இருக்கக் கண்டேன். என்னவென்று வினவினேன்.

“நான் எனது மொத்த வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டேன்” என்றார்கள்.
”உங்கள் வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே செலவழித்திருக்கிறீர்கள். உங்கள் மாணவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று ஆலிம்களாக – அறிஞர் பெருமக்களாக உள்ளனர். அவர்களெல்லாம் இந்த இஸ்லாத்திற்காகச் சேவைகள் செய்கிறார்கள். இதைவிட வேறு என்ன கவலை உங்களுக்கு?” – நான்.

“பாருங்கள். நமது முயற்சிகள் அனைத்தின் முழு நோக்கமும் என்னவாக இருந்திருக்கிறது தெரியுமா? ஏன் ஹனஃபி மத்ஹப் பிற மத்ஹப்களை விடச் சிறந்தது என்பதை நிரூபிக்கத்தான். இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் இதற்குத் தேவையுடையவர்களாக இருக்கவில்லை. இமாம் ஷாஃபி, இமாம் மாலிக், இமாம் அஹமது இப்னு ஹம்பல் ஆகியோரும் தலைசிறந்த மார்க்க அறிஞர்கள்.

இன்று இஸ்லாத்தின் அடிப்படை வேர்களில் தாக்குதல் நடக்கிறது. ஆனால் நாம் அதன் கிளைகளைப் பற்றிக் கவலைப்படுகிறோம்” என்று மெளலானா அவர்கள் பதிலுரைத்தார்கள்.

மார்க்க விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதும், அதற்கான விவாதங்கள் நடப்பதும் தவறானதல்ல.

ஆனால் மார்க்க அறிவு அவ்வளவாக இல்லாத பல முஸ்லிம்கள் இந்த வேறுபாடுகளைக் கண்டு வேறு மாதிரியாகச் சிந்திக்கின்றனர். ஃபிக்ஹுடைய சட்டங்கள் அனைத்தையும் எடுத்து விட்டு வேறு ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

இது சாத்தியமானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல.

அறிவும், நாணயமும் உள்ள மக்களிடத்தில் கருத்துவேறுபாடுகள் வருவது சகஜமே.

ஒவ்வொரு விஷயத்திலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒத்த கருத்து இருக்கும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அனைவரும் வாய் பேச முடியாத ஊமைகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். அல்லது அவர்கள் நாணயமற்றவர்களாக இருக்க வேண்டும் – தங்களுக்குத் தவறு என்று தெரிவதையும் ஏற்றுக்கொள்வதற்கு.

நாம் அந்தக் கருத்துவேறுபாடுகளை மிகைப்படுத்தும்பொழுதுதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கூட இருந்த நபித் தோழர்களுக்கே ஃபிக்ஹு விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதேபோல் ‘இஜ்திஹாது’ செய்யும் முஜ்தஹிதீன்களிடமும் கருத்துவேறுபாடுகள் நிலவின.

ஆனால் கண்ணியமிக்க நபித்தோழர்களோ, மதிப்புமிக்க முஜ்தஹிதீன்களோ அவைகளைச் சண்டைகளாக மாற்றவில்லை.

அவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபட்டார்கள். ஆனால் அவர்களிடையே நிலவி வந்த அன்பையும், அரவணைப்பையும் அவர்கள் விட்டுவிடவில்லை. அவைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களிடையே இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் பொன்னொளி போல் மின்னியது.

குர்ஆனும், ஹதீஸும் தெளிவாக எதனைத் தவறு என்று சொல்கின்றனவோ அவ்விஷயங்களில் எந்தக் கருத்துவேறுபாடும் கொள்ள முடியாது.

மார்க்க விஷயங்களை, கொள்கையை, நம்பிக்கையை விட்டுக் கொடுக்க இஸ்லாத்தில் இடமே இல்லை.

ஷரீஅத் எவைகளை ஹலால் என்று அனுமதிக்கிறதோ, எவைகளை ஹராம் என்று விலக்குகிறதோ அவ்விஷயங்களை மாற்றுவதற்கோ, கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

ஆனால் குர்ஆனும், ஹதீஸும் நேரடியாகக் குறிப்பிடாத விஷயங்களில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளை எடுக்கலாம் என்ற விஷயங்களில், முஜ்தஹிதீன்கள் ஷரீஅத்திற்கு நெருக்கமான தீர்வுகளை வடித்துத் தருகிறார்கள்.

இதில் அவர்கள் தங்கள் முழு திறனையும் பயன்படுத்துகின்றனர். இங்கு வேறுபாடுகளுக்கு சாத்தியமுண்டு.

இங்குதான் கருத்துவேறுபாடுகள் தோன்றுகின்றன. நான்கு இமாம்களைப்
போன்று நேர்மையாக, நியாயமாக, எல்லாவற்றிற்கும் மேலாக தக்வா எனும் இறையச்சத்துடன் முஜ்தஹிதீன்கள் இதைச் செய்யும் வரை அவர்களது மாறுபட்ட கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

சட்டவல்லுனர்களிடையே ஏற்படும் இம்மாதிரியான ஆரோக்கியமான கருத்துவேறுபாடுகளால் இன்னொரு நன்மையும் உண்டு. ஒரு பிரச்னையின் பல கோணங்கள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும். இது பல நன்மைகளை விளைவிக்கும்.

ஆனால் பிரச்னைகளை மிகைப்படுத்தினால், எல்லா அறிவும் தங்களுக்கே இருப்பதுபோல் அடாவடியாக நடந்து கொண்டால், அல்லது அவர்களுக்கென்று ஒரு பிரிவாரைச் சேர்த்துக் கொண்டால்தான் சண்டைகள் ஆரம்பமாகின்றன.

இதே மாதிரியான நிலை இஸ்லாமிய அமைப்புகளிடமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலான அமைப்பினர் தாங்கள் எந்தத் துறையைச் சார்ந்திருக்கிறார்களோ அந்தந்தத் துறைகளில் சமுதாயத்திற்குப் பலன் தரும் வகையில் தங்களால் முடிந்த நல்ல பல பணிகளைச் செய்து வருகிறார்கள்.

இந்த அமைப்பினர் தங்களுக்குள்ளால் ஒரு ஒத்துழைப்பு எனும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவுக் கரங்களை நீட்டி கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும். வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் இருப்பது இயல்பே என்ற உணர்வு மேலோங்கிட வேண்டும். இது நடந்தால் இவர்கள் இந்த உலகில் ஒரு தவிர்க்கவியலாத சக்தியாக மாறி விடுவார்கள்.

ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் துறைகளையே, தாங்கள் செயல்படுத்தும் முறைமைகளையே சரியென்றும் எண்ணுவதுதான் துரதிர்ஷ்டம்!

ஒரு அமைப்பிலிருந்து ஒரு மனிதன் வெளியேறி இன்னொரு அமைப்பில் சேர்ந்துவிடுவாரானால் அவர் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட்டவர் என்று பேசப்படுகிறது. இதுதான் ஜாஹிலிய்யா எனும் அறியாமைக் கால குலவாதம்!

அடக்கமான, நல்ல மனிதர்கள் மறைந்து போய் விடவில்லை. நமது இப்போதைய தேவை அந்த நல்ல மனிதர்கள் நானிலத்தில் மறுமலர்ச்சி செய்ய வேண்டும்.

குறுகிய வட்டத்திற்குள்ளிருக்கும் இந்தச் சமுதாயத்தை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

இந்த பூமிப் பந்தின் ஒரே மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

காலித் பெய்க்


இக்கட்டுரை விடியல் வெள்ளி  பிப்ரவரி 2000 மாத இதழில் நடுப்பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment