Sunday 29 September 2013

ஹுனைன் தந்த பாடம்!


வெற்றியை மனதில் உறுதிப்படுத்திக்கொண்டு முஸ்லிம் படை ஹுனைன் நோக்கிப் புறப்பட்டது. மொத்தம் 12,000 பேர் கொண்ட படை. மதீனாவிலிருந்து வந்த 10,000 பேரும், மக்காவில் வைத்து புதிதாக இணைந்த 2000 பேரும் அதில் இருந்தனர்.

அதிக எண்ணிக்கையிலான படை அகம்பாவத்திற்குக் காரணமானது. ஹுனைன்வாசிகளின் எதிர்த்தாக்குதலுக்கு முன்பு முஸ்லிம்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மலை உச்சியிலிருந்து முஸ்லிம்கள் மீது பயங்கர தாக்குதல் நடைபெற்றது. அம்புகள் அணை கடந்த வெள்ளம் போல் முஸ்லிம்கள் மேல் பாய்ந்து வந்தன. முஸ்லிம்கள் சிதறியோடினர்.

அம்புகளைத் தொடர்ந்து காலாட்படைத் தாக்குதல் ஆரம்பமானது. என்ன நடக்கிறது என்று கூட முஸ்லிம்களுக்கு அறிய முடியவில்லை. ஒரே அல்லோலகல்லோலம்! முஸ்லிம்கள் திரும்பி ஓடினர்.

அதற்கு முந்திய நாள் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்பு தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தவர்களும் முஸ்லிம் படையில் இருந்தனர். முஸ்லிம்கள் தோற்று ஓடுவதைப் பார்த்த அவர்களுக்கு அவர்களின் பழைய பகையுணர்வு மீண்டும் தலை தூக்கியது.

அண்ணலாரின் படைக்கு ஏற்பட்ட தோல்வி அபூஸுஃப்யானின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திற்று. களிப்புற்ற அவர் இவ்வாறு கத்தினார்: “இந்தப் புறமுதுகு ஓட்டம் கடலில் சென்றுதான் முடியும்!”

ஷைபா இப்னு உஸ்மான் அளவு கடந்து பேசினான். அவனது உள்ளத்திலிருந்தது வெளியே வந்தது இவ்வாறு இருந்தது: “இன்று நான் முஹம்மதைப் பழிக்குப் பழி வாங்குவேன்.”

இன்னொரு ஆள் சொன்னான்: “இன்று எல்லா மாயாஜாலங்களும் முடிவுக்கு வந்தன.”

சூழ்நிலை ஓட்டத்தை அனுசரித்து நிலைப்பாடு மாறுவது பொதுவாக உள்ளதுதானே… மக்காவில் சூழ்நிலை மறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குச் சாதகமாக இருந்தபொழுது அவர்களுடன் ஒன்று கூடியவர்கள் அடுத்த நாளே ஹுனைனில் மாறிவிட்டனர். அவர்கள் உருவாக்கிய பீதி உறுதியான உற்ற தோழர்களையே தடுமாற வைத்தது. நம்பிக்கையான நபித்தோழர்களைக் கூட நடுங்க வைத்தது.

முஸ்லிம்கள் சிதறி ஓடியபொழுது பிடித்து நிற்க வேண்டும் என்ற உணர்வு சிறிய அளவு நபித்தோழர்களுக்கே உண்டானது.

அகிலங்களின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் உறுதியுடன் நின்றார்கள். அவர்களின் புனித நபித்துவப் பணி தொடங்கி 20 வருடங்களாயிற்று. இதுவரை எதிர் சக்திகளிடம் எந்தச் சமயத்திலும் அடிபணிந்ததில்லை. வெற்றி, அல்லது வீரமரணம்! அதுதான் நல்லது.
ஒரு கூட்டம் அன்சாரிகளும், சில முஹாஜிர்களும், ஒரு சில உறவினர்களும் அண்ணலாருடன் கூட நின்றார்கள்.

எதிரிகளின் பக்கம் ஹவாசின், ஸகீஃப் ஆகிய கோத்திரங்களின் படையினர் மலைக்குன்றுகளின் முகடுகளில் நின்று இறங்கி வந்தனர். கண்ணில் கண்ட முஸ்லிம்களையெல்லாம் வெட்டிக் கொன்றனர்.

கடுமையான, மிகக் கொடுமையான அந்தச் சூழ்நிலையிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாகனத்தில் உறுதியுடன் தளராமல் நின்றார்கள். ஒரு சமயம் எதிரிகளுக்கிடையில் பாய்ந்து தாக்க முனைந்தார்கள். அன்னாரின் ஒன்றுவிட்ட சகோதரர் அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் (ரலி) அண்ணலாரைத் தடுத்து விட்டார்.

அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) அண்ணலாருடன் இருந்தார். முஸ்லிம்களைத் திரும்ப அழைக்குமாறு அப்பாஸிடம் அண்ணலார் சொன்னார்கள். அப்பாஸ் இவ்வாறு உரக்கக் கூறினார்:

“முஸ்லிம்களுக்கு அபயமும், உதவியும் நல்கிய அன்சாரித் தோழர்களே! மர நிழலில் உறுதிப் பிரமாணம் எடுத்த முஹாஜிர்களே! ஓடி வாருங்கள்! முஹம்மத் (ஸல்) அவர்கள் இதோ உயிருடன் இருக்கிறார்கள்.”

அப்பாஸின் சப்தம் அந்தப் பள்ளத்தாக்கெங்கும் ஒலித்தது. அப்பாஸ் இவ்வாறு மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை அழைத்துக்கொண்டேயிருந்தார்.
என்னே விந்தை! முஸ்லிம் அணியில் அந்த அழைப்பு அற்புதமான மாற்றத்தை உண்டாக்கிற்று.

அகபாவில் அண்ணலாரின் அருமைக் கரம் பற்றி உறுதிமொழி எடுத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். தங்களின் மக்களையும், செல்வத்தையும் பாதுகாப்பது போல் அண்ணலாரைப் பாதுகாப்போம் என்று அவர்கள் வாக்களித்திருந்தார்கள்.

ஹுதைபியாவில் உறுதிமொழி எடுத்தவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மரணம் வரை மஹ்மூது நபிகளாருடன் போராடுவோம் என்று அவர்கள் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.

அப்பாஸின் சப்தம் அவர்களின் காதுகளிலல்ல, கல்புகளில் ஊடுருவி ஒலித்தது. மனங்கள் சாந்தமாயின. அவை ஒரே திசையை நோக்கித் திரும்பின. அண்ணலாரைச் சுற்றிலும் அருமைத் தோழர்கள் அணி அணியாய் திரள ஆரம்பித்தனர்.

அவர்களின் இதயங்களில் இப்பொழுது ஆள்கூட்டத்தின் அகம்பாவம் இல்லை, அதிவேகம் இல்லை. அல்லாஹ்வின் நம்பிக்கையும், திட உறுதியும் மட்டுமே குடிகொண்டிருந்தன.

முஸ்லிம்கள் அனைத்தையும் மறந்து போராடினார்கள். வெற்றி பெற்றார்கள்.
ஹுனைன் யுத்தம் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிற்று: ஆள் கூட்டங்கள் தோல்வியைத் தழுவும். அல்லாஹ்வின் மேல் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள்.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment