Monday 26 February 2018

குண்டு வெடிப்புகள் - பிரவீன் சுவாமி பார்த்த விதம்

ஒரு குண்டுவெடிப்பு நிகழ்கிறதென்றால் -
கொல்லப்படுபவர்கள் - முஸ்லிம்கள்!
குற்றம் சாட்டப்படுபவர்கள் - முஸ்லிம்கள்!
கூண்டில் அடைக்கப்படுபவர்கள் - முஸ்லிம்கள்!

இப்படி ஒரு கொடூரத்தை வேறு எந்த நாட்டிலாவது கேள்விப்பட்டிருப்பீர்களா? இந்தக் கொடுமையைக் கண்டு கொதித்தெழாமல் முஸ்லிம்களையே குற்றப்படுத்தி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்ற மீடியாவை நாம் மனசாட்சியுள்ள துறை என்று கூற முடியுமா?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகத்துறை இன்று ஊனமாகிப்போய்விட்டது. தூணில் ஓட்டை விழுந்து விட்டது.

இந்தியாவிலேயே மதச்சார்பற்ற, நடுநிலையான, தரமான பத்திரிகை என்று அறியப்படுவது தி ஹிந்து ஆங்கில நாளிதழும், அதன் சகோதரப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைன் மாதமிரு இதழும்.

“பிரவீன் சுவாமி போன்றவர்களைக் கொண்டிருக்கும் தி ஹிந்து பத்திரிகையை இன்னுமா நடுநிலையான, மதச்சார்பற்ற பத்திரிகை என்று கூறுகிறீர்கள்?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறார் ஒரு புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளர். 

இவர் தி ஹிந்து மும்பை பதிப்பில் பணியாற்றியவர். அதிலிருந்து வெளியேறிய அவர் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற, நடுநிலையான இளைஞர்களிடையே உரையாற்றிக்கொண்டிருக்கும்பொழுதுதான் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

யார் இந்தப் பிரவீன் சுவாமி?

தரமான செய்தியாளர் என்று நம்பப்படுபவர். தி ஹிந்துவிலும், ஃப்ரண்ட்லைனிலும் பல காலமாக எழுதி வருபவர். சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர். சாதனையாளர் விருதுகள் பல பெற்றவர்.

எங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் தவறாமல் இவரது கட்டுரைகள் மேற்படி பத்திரிகைகளில் இடம் பெற்று விடும். அத்துணையிலும் அழகாக, நயம்பட அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டு விடுவார்.

இத்தனைக்கும் குண்டுவெடிப்பின் இடத்தில் குண்டு வீச்சின் சூடு கூட தணிந்திருக்காது. அது பற்றிய விசாரணை தொடங்கியிருக்காது. ஆனாலும் தமிழகத்தில் வெளிவரும் நாலாந்தரப் பத்திரிகை மாதிரி அவரது ஆட்காட்டி விரல் முஸ்லிம்களையே சுட்டி நிற்கும்.

இவருக்கு எங்கிருந்து இந்த ‘ஞானோதயம்’ வருகிறது? இருக்கவே இருக்கிறார்கள் உளவுத்துறையினர். அவர்கள் இவரைக் கைக்குள் போட்டு வைத்திருக்கின்றனரா? அல்லது இவர் அவர்களைக் கைக்குள் போட்டு வைத்திருக்கின்றாரா? யாருக்கும் தெரியாத ரகசியம் இது.

உளவுத்துறையினர் சொல்வதை அப்படியே விழுங்கி, இவர் பங்குக்கு வயிற்றுக்குள் ரசாயனம், அமிலம், மசாலா எல்லாம் சேர்த்து செய்தியாக வாந்தியெடுத்து விடுவதில் வல்லவர் இவர்.

2007 பிப்ரவரி 20ல் சம்ஜோதா எக்பிரஸ் ரயிலில் இரண்டு கோச்சுகளில் குண்டுகள் வெடித்து 66 முஸ்லிம்கள் இறந்தபொழுது இவர் ஃப்ரண்ட்லைனில் எழுதிய கட்டுரையின் தலைப்பு : “அமைதிக்கு எதிரான சதி”

“இந்தியா-பாக். நட்பை விரும்பாத பாகிஸ்தானிய இஸ்லாமியவாதிகள்தான் இந்தக் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர்” என்பது அவர் எழுதிய செய்திக் கட்டுரையின் சாராம்சம். இதற்கு என்னென்னவோ ஆதாரங்களை எடுத்துக் கையாண்டிருந்தார்.

இப்பொழுது என்ன ஆயிற்று? அந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று சுவாமி அசிமானந்தா ஆசி வழங்கியுள்ளார்.

2007 மே 19ல் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிக்கின்றது. ஜும்ஆ தொழுகைக்கு வந்த 9 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர். அந்தச் சம்பவத்தை எதிர்த்து கண்டனப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது அதை விடக் கொடுமை. இப்படி முஸ்லிம்களின் உயிர்கள் அங்கே பலியாகியிருக்க, நான்கு நாட்கள் கழித்து 2007 மே 23 அன்று தி ஹிந்து நாளிதழில் பிரவீன் சுவாமி ஒரு செய்திக் கட்டுரை எழுதுகிறார். தலைப்பு: “மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்குப் பின்னால்” 

துணைத் தலைப்பு: “வகுப்புவாத வன்முறை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றம், உலக அளவிலான ஜிஹாத் ஆந்திரப் பிரதேச தலைநகரை உலுக்குகிறது”

இந்தியாவின் நகரங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குறி அப்படியே இருப்பதாகவும், அதன் ஒரு முன்மாதிரிதான் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு எனவும், மும்பை தொடர் குண்டுவெடிப்பிற்குப் பிறகு வன்முறைகள் குறைந்திருப்பதைச் சகிக்க முடியாமல் லஷ்கர் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் செய்த பயங்கரம்தான் இது என்றும் அதில் பிரகடனப்படுத்துகிறார் பிரவீன் சுவாமி.

ஆனால் இன்று என்ன ஆயிற்று? மக்கா மஸ்ஜிதிலும் நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று நீதிமன்றத்தில் அடித்துச் சொல்கிறார் அசிமானந்தா.

2007 அக்டோபர் 12ம் தேதி அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிக்கிறது. புனித ரமலான் மாதம் நோன்பு துறக்க வந்த நோன்பாளிகள் 3 பேர் தங்கள் நோன்புகளைத் துறக்காமலேயே கொல்லப்பட்டனர். 28 நோன்பாளிகள் படுகாயமுற்றனர்.

மறுநாள் வழக்கம்போல் தி ஹிந்து பத்திரிகையில் பிரவீன் சுவாமி ஒரு கட்டுரை எழுதுகிறார். தலைப்பு: “பாப்புலர் இஸ்லாமிற்கு எதிரான போர்”

இவர் இங்கே ‘பாப்புலர் இஸ்லாம்’ என்று கூறுவது பெரும்பாலான முஸ்லிம்கள் பின்பற்றும் நடைமுறைகள் என்பதாகும். அதாவது தர்காவைப் பிடிக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள் அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிக்கச் செய்துள்ளார்கள் என்கிறார். 2006ல் மாலேகானில் ஒரு தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கும் அவர்கள்தான் காரணம் என்கிறார்.

இதனை நம்ப வைப்பதற்காக அஜ்மீரில் அடக்கப்பட்டிருக்கும் காஜா முயீனுத்தீன் சிஷ்டியின் வரலாறிலிருந்து தன் புரட்டைத் துவங்குகிறார். இந்தியா முழுவதும் வகுப்புவாதப் போரைத் துவங்கவே இவை நடத்தப்படுவதாக அதில் கூறுகிறார்.

இப்படிக் கூறி முஸ்லிம்களிடையே பிளவையும், பிரிவையும் உருவாக்க அவர் அந்தக் கட்டுரையில் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? அஜ்மீர் தர்காவிலும், 2006ல் மாலேகான் தர்காவிலும், 2008ல் மாலேகானில் நடந்த இன்னொரு சம்பவத்திலும் குண்டுகளை வைத்தது நாங்கள்தான் என்று ஆர்.எஸ்.எஸ். அசிமானந்தா அம்பலப்படுத்துகிறார்.

“ரிப்போர்ட்டிங் என்னும் செய்திகளைக் கொடுப்பதில் பிரவீன் சுவாமி ஒருபொழுதும் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது கிடையாது” என்று டெல்லியை மையமாகக் கொண்டு புலனாய்வு ஆவணப் படங்களைத் தயாரிப்பவரும், குஜராத் இனப்படுகொலை பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தவருமான சுப்ரதீப் சக்கரவர்த்தி கூறுகிறார்.

“பிரவீன் கூறும் செய்திகளுக்கு அவர் ஒரு பொழுதும் ஆதாரங்களைக் குறிப்பிட மாட்டார்” என்கிறார் அவர்.

பிரவீன் சுவாமி அதிகமாகக் கூறும் ஆதாரமே “புலனாய்வுத்துறையினர் இப்படி நம்புகின்றனர்” என்பதுதான்.

உளவுத் துறையினர் பிரவீன் சுவாமி மாதிரி பத்திரிகையாளர்களைப் பயன்படுத்தி ஜிஹாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஊடகங்களில் ஊதிப் பெருக்குவதும், மிகைப்படுத்திக் கூறுவதும், எப்பொழுதும் நாட்டில் பரபரப்பை நிலைநிறுத்துவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் எந்த இஸ்லாமிய பயங்கரவாதமும் இதுவரை 100 சதவீதம் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் நிரூபிக்கப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதத்தைப் பற்றி இதே உளவுத்துறையினர் சாதாரணமாகக் கூட ஊடகத்தில் அலசுவது இல்லை.

இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து பக்கம் பக்கமாக எழுதத் தயாராகும் இந்தப் பத்திரிகையாளர்கள் ஹிந்துத்துவ பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்வதற்கோ, எழுதுவதற்கோ எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

இதுதான் பிரவீன் சுவாமியின் நிலை. இதுதான் இந்தியா டுடே போன்ற இந்தியா முழுவதும் படிக்கப்படும் பத்திரிகைகளின் நிலை. இதுதான் மொத்த இந்திய ஊடகங்களின் நிலை.

பிரவீன் சுவாமி போன்ற நச்சுக்கிருமிகள் ஊடகத்துறையிலிருந்து அகற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஜனநயாகத்தின் நான்காவது தூண் தலை நிமிர்ந்து நிற்கும். ஊடகத்துறை செழித்தோங்கும். பத்திரிகை தர்மம் நிலைநிறுத்தப்படும்.

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2011

No comments:

Post a Comment