Monday 20 March 2017

பல்ஆம் இப்னு பாஊரா

உலகில் எந்த ஒரு மனிதனையும், சக மனிதர்கள் மிக எளிதாக அடையாளப்படுத்துவது அவன் பெற்றிருக்கிற வெற்றியைக் கொண்டுதான்.
அது அவன் சார்ந்திருக்கிற துறை ரீதியிலான வெற்றியாக இருக்கலாம். அல்லது குடும்ப ரீதியிலான வெற்றியாக இருக்கலாம். நிர்வாக ரீதியிலாகவோ அல்லது அரசியல் தொடர்பானதாகவோ, அல்லது ஆன்மீக ரீதியிலான வெற்றியாகக்கூட இருக்கலாம்.

எந்த வெற்றியாக இருந்தாலும் அதன் பின்னணியில் அவன் மேற்கொண்ட முடிவுகளும், அதை அவன் கையாண்ட விதமும்தான் அடிப்படையாக அமைந்திருக்கும்.

இறைமார்க்கம் இஸ்லாமும் அதைத்தான் வெற்றிக்கான இலக்காக, படிக்கல்லாக வகுத்துத் தந்துள்ளது.

இப்லீஸ் மல்வூனாக மாறுவதற்கும், பர்ஸீஸா வழிகேட்டில் வீழ்வதற்கும், பல்ஆம் இப்னு பாவூரா நாயை விட கேவலமான நிலைக்கு தள்ளப்படுவதற்கும் அவர்கள் மேற்கொண்ட தவறான முடிவுகள்தான் காரணமாக அமைந்ததாக அல்குர்ஆன் விளக்கிக் கூறுகின்றது.

எனவே, வாழ்வில் ஒரு மனிதன் மேற்கொள்கிற முடிவுதான் அவன் வாழ்க்கைப் போக்கையே மாற்றுகிறது. அதுதான் அவன் வாழ்க்கையின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது என்பதை நாம் விளங்க வேண்டும்.
ஒவ்வொரு இபாதத்தின் முடிவிலும் கபூலிய்யத்தின் கவலை வேண்டும். நாம் செய்யும் வணக்கத்திற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையானால் வணக்கம் பயனற்றுப் போய்விடும்.

அமல் என்பதும், அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும். அல்லாஹ் சிலருக்கு அமல் செய்யும் நஸீபை வழங்குவான். ஆனால் அங்கீகாரம் வழங்கமாட்டான்.

ஆயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்த இப்லீஸின் வணக்கத்திற்கு அல்லாஹ்விடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது. அல்லாஹ்வின் கபூலிய்யத் கிடைக்காமல் தங்களின் ஈமானை இழந்த வணக்கசாலிகள் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.

ஸஃலபா எனும் நபித்தோழர் முதல் பல்ஆம் இப்னு பாஊரா எனும் இறைநேசர் வரை பட்டியல் நீளமானது.

அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்க சில நேரங்களில் ஒரு சின்ன அமலும் காரணமாக ஆகிவிடலாம். தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டிய ஒரு விபச்சாரியின் அமல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதால் அவளுக்கு சுவனத்தை பெற்றுத் தந்தது.

அமலுக்கான அங்கீகாரம் யாருக்கு கிடைக்கும்?

இதோ அல்லாஹ்வின் வசனத்தை கவனியுங்கள்...

إِنَّمَا يَتَقَبَّلُ اللَّـهُ مِنَ الْمُتَّقِينَ

"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக்கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்துதான்" என்று (ஹாபீல்) கூறினார்.

இணைவைப்பும் இறைமறுப்பும் மட்டுமே ஈமான் பறிபோக காரணமாக சொல்ல முடியாது. பல நேரங்களில் ஈமான் பறி போக பாவங்களும் காரணமாக அமைந்துவிடும்.

பல்ஆம் இப்னு பாவூராவின் வாழ்வு இதற்கு சரியான சான்று. நபி மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்ஆம் பின் பாஊரா என்பவர் மிகப் பிரபல்யமான துறவியாக இருந்தார்.

வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபாட்டுடன் இருந்தார்.

அவருக்கு அல்லாஹ் தனது மகத்தான பெயராகிய அல் இஸ்முல் அஃழம் என்பதை கற்றுக் கொடுத்திருந்தான்.

அந்தப் பெயர் கூறி பிரார்த்தித்தால் கேட்டது கிடைக்கும்; பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுபவராக அவர் கேட்டு அல்லாஹ் எதையும் கொடுக்காமல் இருந்ததில்லை.

அந்த அளவுக்குப் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுபவராக இருந்தார்.

வாழ்நாளில் அவர் செய்த எந்த துஆவும் மறுக்கப்பட்டதில்லை என்பதும், இஸ்முல் அஃழம் எனும் அல்லாஹ்வின் விசேஷ திருநாமத்தை அறிந்திருப்பதும், தவ்ராத் வேதம் முழுவதும் மனனம் செய்த நான்கு பேரில் ஒருவராக அவர் இருந்ததும் அவர் பெற்ற அற்புதங்களில் உள்ளதாகும்.

ஆனால் அவர் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரம் மற்றும் பகட்டின் பக்கம் சாய்ந்து அதன் இன்பங்களையும், சுகபோகங்களையும் எதிர்நோக்க ஆரம்பித்து பாவங்களில் குதித்தார்.

இறுதியில் நபி மூஸா (அலை) அவர்களுக்காகவும், அவர்களுடன் இருந்தவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்ய எழுந்து நின்றார்.

இறுதியில் அகப் பார்வையை இழந்து அல்லாஹ்வுடைய அருளை விட்டும் தூரமாகி அழிவில் போய் விழுந்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகள் அகற்றப்பட்டன. அவரது நாக்கு வெளியே தள்ளி நெஞ்சு வரை வந்து தொங்கியது.

(சுருக்கம் அறிவிப்பு : இப்னு மஸ்ஊத் (ரழி), முஸன்னஃப் அப்தில் ரசாக், இப்னு அப்பாஸ் (ரழி), தஃப்ஸீர் தபரி, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 7:175-177, விரிவுரை பாகம் : 3 பக்கம் : 954-965.)

அல்லாஹ் அவருக்கு ஒரு அத்தாட்சியல்ல, பல அத்தாட்சிகளை வழங்கியதாக கூறுகின்றான்.

இந்தளவு தூரம் இறைநெருக்கம் பெற்ற ஒருவரை அல்லாஹ் ஈமானை பிடுங்கி சபித்த வார்த்தையை கவனியுங்கள்:

(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக் காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான். அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.

நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது என்று கூறுகின்றான்.

பல்ஆம் நேரடியாக இணைவைப்பு, இறைமறுப்பு போன்ற காரியங்களில் ஈடுபடவில்லை. நபி மூஸா (அலை) அவர்களுக்கு எதிராக துஆவுக்காக கையேந்தினார் எனும் பாவமே அவரின் ஈமான் இழப்புக்கு காரணமாகிவிட்டது. அவர் பல்ஆமின் ஈமான் பறிப்புக்கு காரணத்தை பின்னர் வந்த ஒரு நபி அல்லாஹ்விடம் கேட்டபோது, “நான் கொடுத்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருக்கவில்லை” என்று அல்லாஹ் சொன்னானாம்.

இங்கே நாய்க்கு ஒப்பிட்டுக் கூறியதானது நாயானது உணவையும், உடல் ஆசையையும் அடைவதில் மட்டுமே குறியாக இருக்கும். நல்லறிவு, நல்வழி ஆகிய உயர் தளத்தை விட்டு வெளியேறி ஆசைகளை முன்னிறுத்தி மன விருப்பத்தைப் பின்பற்றி வாழ்பவன் ஏறத்தாழ நாயின் குணத்தைப் பெற்றவனாகின்றான்.

“நான் உங்கள் மீது மிகவும் அஞ்சுவது ஒரு (வகை) மனிதரைப் பற்றித்தான். அவர் குர்ஆனை ஓதுவார். அதன் பொலிவு அவரிடம் காணப்படும். அவர் இஸ்லாத்துக்கு பக்க பலமாக இருப்பார். (இந்நிலையில் அவரது பாவங்களின் காரணமாக) அல்லாஹ் அவரை தான் நாடியவாறு (வழிகேட்டின் பக்கமாக) மாற்றிவிடுவான். அவரிடமிருந்து அந்தப் பொலிவு கழன்று விடும். அவர் அதை தனது முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக ஹுதைஃபா பின் அல் யமான் (ரழி) கூறுகிறார். (இப்னு ஹிப்பான், தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:959)

1 comment: