Monday, 20 March 2017

அல்லாஹ்வின் அன்பை வளர்க்கும் அற்புத அமல்!


கியாமுல் லைல் என்னும் தஹஜ்ஜுத் தொழுகையை ஒருவர் தொழுவதன் மூலம் இரவை உயிர்ப்பிக்கிறார். இஹ்யாவுல் லைல் என்ற இரவை உயிர்ப்பிப்பது இறைவனுக்கு மிகவும் பிடித்தமான செயல்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களைப் பார்த்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக; அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக. (அல் முஸ்ஸம்மில் 73:1-4)

மற்ற உபரித் தொழுகைகளை நேரமிருந்தால் தொழுது கொள்ளலாம். ஆனால் இத்தொழுகை தொழ வேண்டுமெனில் நேரத்தை நாம் உருவாக்க வேண்டும். ஆம்! இரவுத் தூக்கத்தின் ஒரு பகுதியைத் தியாகம் செய்தாலே ஒழிய இந்த வணக்கத்தை நிறைவேற்றிட முடியாது.

இதனால் இறைவனே இறைமறையில் இத்தொழுகையைப் பற்றிய மாண்புகளைக் கூறி இவ்வாறு ஆர்வமூட்டுகிறான்:

(நபியே!) இன்னும் இரவில் (ஒரு சில) பகுதியில் உமக்கு உபரியான (நபிலான) தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுது வருவீராக! (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் 'மகாமே மஹ்மூதா' என்னும் (புகழ் பெற்ற) தளத்தில் உம்மை எழுப்பப் போதுமானவன். (சூரா பனீ இஸ்ராஈல் 17:79)

அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள். அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தை துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கையார்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தர்மங்களில்) செலவும் செய்வார்கள். (சூரா அஸ்ஸஜ்தா 32:15,16)

நிச்சயமாக இரவில் எழுந்திருந்து வணங்குவது (நாவு, மனம், செவி, பார்வை ஆகியவற்றையும்) ஒருமுனைப்படுத்துவதில் சக்தியானது. இன்னும் வாக்கையும் நேர்படச் செய்கிறது. (சூரா அல் முஸ்ஸம்மில் 73:6)

இந்த அற்புத அமலின் சிறப்புகளை அறிந்தவர்கள் அல்லாஹ்வுடன் உரையாடுவதற்காக ஆர்வத்துடன் எழுந்து அவன் முன் நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

“ரமளானுக்குப் பிறகு நோற்கப்படக்கூடிய நோன்புகளில் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். மேலும் கடமையான தொழுகைகளுக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்.” (முஸ்லிம், திர்மிதீ, நஸஈ, அஹ்மத்)

“நான் நபி ﷺ அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளைக் கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவுகளிலுமாகும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

தனியோனாம் அல்லாஹ் தஹஜ்ஜுத் வேளையில் எங்கிருப்பான் என்பதை நபி ﷺ அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“நம் இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ)

மேலும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

“மக்களே! ஸலாம் கூறுவதை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நபி ﷺ அவர்கள் இரவில் எழுந்து தொழுவார்கள். அதனால் அவர்களின் பாதங்கள் வீங்கி விடும். ‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? தங்களுக்குத் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்டனவே...’ என்று நான் வினவினேன். அதற்கு நபி ﷺ அவர்கள் ‘நான் (இறைவனுக்கு) நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?’ என்று பதிலளித்தார்கள்.” (புகாரீ, முஸ்லிம்)

அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெறுவதற்காக பாடுபட்ட அருமை நபித்தோழர்களும், முத்தகீன்களான முன்னோர்களும் கியாமுல் லைல் தொழுவதில் பெரும் கவனம் செலுத்தியுள்ளார்கள். அதனை அனுபவித்து செய்துள்ளார்கள். மேலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரகசியமாக செய்து வந்துள்ளார்கள்.

முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்ற அறிஞர் கூறுகிறார்: “வாழ்க்கையில் மூன்று விஷயங்களைத் தவிர வேறு எதுவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியவை அல்ல. அவை: 1. கியாமுல் லைல். 2. முஃமினான சகோதரரைச் சந்திப்பது. 3. ஜமாஅத்துடன் தொழுவது.”

அல் காஸிம் இப்னு மாஈன் என்ற அறிஞர் அறிவிக்கிறார்: “இமாம் அபூஹனீஃபா அவர்கள் இரவு முழுவதும் நின்று வணங்குபவர்களாக இருந்தார்கள். “அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும். (54:46)” என்ற இறைவசனத்தை திரும்பத் திரும்ப அழுது கொண்டே ஓதிக்கொண்டிருப்பார்கள். அதிகாலை வரை அல்லாஹ்விடம் மன்னிப்பு வேண்டி கெஞ்சிக்கொண்டிருப்பார்கள்.”

இப்றாஹிம் இப்னு ஷம்மாஸ் என்ற அறிஞர் அறிவிக்கிறார்: “இமாம் அஹமத் இப்னு ஹம்பல் அவர்கள் தங்கள் இளம் வயதில் இரவு நேரங்களில் நின்று வணங்கிக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.”

ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் புகாரீ அவர்கள் ஸஹர் நேரம் வரும் வரை கியாமுல் லைல் தொழுது கொண்டிருப்பார்கள். அப்பொழுது திருக்குர்ஆனின் பாதிக்கும், மூன்றில் ஒரு பகுதிக்கும் நடுவில் ஓதுவார்கள்.

‘ஷேகுல் இஸ்லாம்’ இப்னு தைமியா அவர்களின் இரவு வணக்கங்களைப் பற்றி அல்லாமா இப்னு அப்துல் ஹாதி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்: “இரவு நேரங்களில் அவர்கள் மக்களை விட்டும் அகன்று இருப்பார்கள். இரவு நேரங்களை தொழுகையிலும், திருக்குர்ஆன் ஓதுவதிலும், பாவமன்னிப்பு கோருவதிலுமே அவர்கள் செலவழிப்பார்கள். அவர்கள் தொழ ஆரம்பித்தால், அவர்களின் உடல் குலுங்க ஆரம்பிக்கும். இடது பக்கமும், வலது பக்கமும் மாறி மாறி சாய்ந்து கொண்டிருக்கும்.”

ஷேக் இப்னுல் கய்யூம் அவர்களைப் பற்றி இப்னு ரஜப் அவர்கள் கூறியதாவது: “அவர்கள் இறைவணக்கத்தில், தஹஜ்ஜுதில், நீண்ட தொழுகைகளில் சிறந்து விளங்கினார்கள். இப்படிப்பட்ட வணக்கசாலியையும், குர்ஆன், ஹதீத், ஷரீஆ ஆகியவற்றில் இவ்வளவு அறிவுள்ளவரையும் நான் கண்டதேயில்லை.”

கியாமுல் லைலுக்கு உறுதுணை செய்யும் விஷயங்கள்!

1. அல்லாஹ்வுக்கு உண்மையாக, நேர்மையாக இருத்தல்.
2. கியாமுல் லைல் தொழ விரும்பும் மனிதர் அல்லாஹ் கியாமுக்கு அழைக்கிறான் என்பதை உணர வேண்டும்.
3. கியாமுல் லைலின் சிறப்புகளை, மாண்புகளை அறிந்திருத்தல்.
4. ஸலஃபுகளும், நேர்வழி பெற்ற மக்களும் எப்படி கியாமுல் லைலை நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை அறிதல்.
5. வலது பக்கம் சாய்ந்து படுத்தல்.
6. தூய்மையான நிலையில் (தஹாரத்) உறங்குதல்.
7. முற்கூட்டியே உறங்கச் செல்வது.
8. உறங்குவதற்கு முன் சொல்லப்படவேண்டிய திக்ருகளைச் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்.
9. ளுஹருக்கு முன்போ அல்லது பின்போ சிறிது நேரம் உறங்குதல் (கைலூக்கா).
10. அதிகமாக மிதமிஞ்சி சாப்பிடுவதையும், குடிப்பதையும் தவிர்த்தல்.
11. கியாமுல் லைல் தொழுவதற்கு நமது ஆன்மாவுடன் போராடுதல்.
12. பாவங்களைத் தவிர்த்தல்.
13. கியாமுல் லைல் தொழுவது குறித்து சோதனை செய்தலும், தொழாவிட்டால் கண்டித்தலும் வேண்டும்.

இப்படிப்பட்ட உன்னத வணக்கத்தை – இரவை உயிர்ப்பிக்கும் கியாமுல் லைல் வணக்கத்தை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் பரபரப்பான உலகில் நமது பாவங்களைக் கூறி அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி மன்றாடுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே நாம் அல்லாஹ்வின் அன்பைப் பெற முடியும். அப்போது மட்டுமே நாம் வெற்றி பெற்றவர்களாக மாற முடியும். அல்லாஹ் நம்மை வெற்றியாளர்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!

No comments:

Post a Comment