Sunday 23 October 2016

ஊடகப் புரட்சியாய் உதித்த விடியல்!


1996 பிப்ரவரி மாதம். ஏழு கிணறிலுள்ள பிடாரியம்மன் கோயில் தெருவில் ஒரு கட்டடத்தின் மாடியில் சிறிய வீடு. அங்குதான் விடியலின் பயணமும் துவங்கியது. அதுதான் அலுவலகம். அதுதான் தங்குமிடம்.

சொந்தமாக கணிணி இல்லை. இராயபுரத்திலுள்ள ஒரு DTP மையத்தில் கட்டுரையை எடுத்துக்கொண்டு காலையில் சென்றால் மாலையில் திரும்பும்பொழுது ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ டைப் செய்து தருவார்கள். அந்த DTP மையத்தில் அந்த அளவுக்கு பரபரப்பு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் காத்திருக்கவேண்டும். இடையில் அவ்வப்பொழுது கிடைக்கும் இடைவெளியில் விடியலுக்கான கட்டுரைகள் தட்டச்சு செய்யப்படும்.

இப்படி மார்ச்சில் தொடங்கிய பயணம்… முதல் இதழின் பக்கங்கள் மெல்ல மெல்ல தட்டச்சு செய்யப்பட்டு, படங்களுக்கு இடைவெளி விட்டு பக்க வடிவமைப்பு (லே அவுட் செட்டிங்) செய்யப்பட்டு (அப்பொழுதெல்லாம் ஸ்கேன் செய்து படங்களை ஏற்றும் வசதியை நாம் கொண்டிருக்கவில்லை) ஒரு வழியாக 48 பக்கங்கள் தயாரானது ஏப்ரல் இறுதியில். பக்க வடிவமைப்பு எல்லாம் பக்காவாக வந்திருந்தது. தேவையான படங்கள் ஒட்டப்பட்டு ஃபிலிம் எடுக்கப்பட்டு அந்த DTP மையத்திலேயே இருந்த அச்சகத்தில் சிறிய ஆஃப் செட் இயந்திரத்தில் ஓட்டப்பட்டது.

2000 பிரதிகள் அச்சிடப்பட்டன. “யாரைத் தாக்க இந்த ஆயுதங்கள்?” - இதுதான் முதல் விடியலின் முதல் அட்டைப்படக் கட்டுரையின் தலைப்பு. அன்று புரூலியாவில் மர்மமான முறையில் விண்ணிலிருந்து ஆயுதங்கள் வந்து விழுந்தன. ‘புரூலியாவில் ஆயுத மழை’ என்று அதனை அழைத்தனர்.

அன்றைய தேதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி அது. அதன் ஆழ அகலத்தை கட்டுரை மிக அழகாக அலசியிருந்தது. இதர பகுதிகளும் மிக அழகாக வந்திருந்தன.

இப்படித்தான் 1996 மே மாதம் முதல் விடியல் முகிழ்ந்தது. முஸ்லிம் ஊடக வரலாற்றில் ஒரு புதிய புரட்சி அத்தியாயம் ஆரம்பமானது.

புரட்சி அத்தியாயம் என்று குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. அட்டைப்படம் முதல் உள்ளடக்கம் வரை விடியல் செய்த புரட்சிகள் ஏராளம்.
விடியல் கையெழுத்துப் பிரதி

அதுவரை விடியல் கையெழுத்துப் பிரதிகள் வந்து கொண்டிருந்தன. தட்டச்சு செய்து, சைக்ளோஸ்டைல் பிரதிகள் எடுத்து ஜும்ஆக்களில் விற்போம். அவற்றில் இடம் பெற்ற செய்திகளின் கனத்தைப் பார்த்து அதற்கென்று ஒரு வாசகர் வட்டம் உருவாகியிருந்தது.

அந்த வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜும்ஆ விற்பனைக்கென்று முதல் விடியல் மாத இதழின் சில நூறு பிரதிகளை சில நகரங்களுக்கு அனுப்பி வைத்தோம்.

ஏற்கனவே சேர்த்திருந்த சில நூறு சந்தாக்களின் முகவரிகள் கையில் இருந்தன. ஒவ்வொரு இதழுக்கும் பிரவுன் நிற தாள் ஒட்டி, முகவரியைக் கையால் எழுதி, மறுநாள் காலையில் தபால் அலுவலகம் சென்று (தபால் பதிவு எண் பெற்றிராததால்) சாதாரண தபால் தலைகள் ஒட்டி அனுப்பி வைத்தோம். இப்படித்தான் முதல் விடியல் சந்தாதாரர்களைச் சந்தித்தது.

ஆனால் வந்த வரவேற்பு… அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மகத்தான வரவேற்பு. முதல் விடியலின் உள்ளடக்கமும், அட்டைப்படமும், அட்டைப்படக் கட்டுரையும், தலையங்கமும், இதர கட்டுரைகளும், பக்க வடிவமைப்பும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சென்ற இடங்களிலெல்லாம் அது சுடச்சுட விற்றுத் தீர்ந்தது. மேலும் பிரதிகள் கேட்டு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் கொடுப்பதற்கு நம்மிடம் பிரதிகள் இல்லை.

முதல் இதழ் வெளிவந்த கையோடு நாம் பெரியமேடு பேரக்ஸ் சாலையில் அலுவலகம் எடுத்து மாறினோம். ஆனால் அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு, கணிணி என்று எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஓர் உள்ளூர் தொலைபேசி அழைப்பு செய்ய வேண்டும் என்றாலும் தெருக் கோடியிலுள்ள எஸ்டிடி பூத்தில் காத்திருக்க வேண்டும்.

முஸ்லிம் ஊடகப் புரட்சி

அன்றைய நாளில் முஸ்லிம் பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் பூக்கள், பழங்கள், மஸ்ஜித்கள் போன்றவையே மொட்டையாக இடம் பெற்றிருக்கும். ஒரு தலைப்பு கூட இருக்காது. ஆனால் விடியல் அன்றைய ஆங்கில இதழ்களின் பாணியில் அட்டைப்படங்களைக் கொண்டு வந்தது.

ஃப்ரண்ட்லைன், அவுட்லுக் போன்ற முன்னணி ஆங்கில இதழ்களைப் போன்று ஆழமான அட்டைப்படக் கட்டுரைகளைக் கொண்டு வந்தது. விடியலின் வருகைக்குப் பிறகுதான் பிற முஸ்லிம் இதழ்கள் இதனைக் கவனத்தில் கொண்டன. அட்டைப்படங்களிலும், உள்ளடக்கங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தன.

தலையங்கம்

ஒரு பத்திரிகையின் முத்தாய்ப்பாக அமைவது அதில் இடம் பெறும் தலையங்கம்தான். இதிலும் விடியல் முத்திரை பதித்தது.

இஸ்லாத்தைத் தீர்வாகச் சொல்லிடும் தலையங்கங்களை விடியல் தீட்ட ஆரம்பித்ததும் சமுதாயத்தில் ஒரு புதிய பார்வை பிறந்தது. அழகிய சொற்றொடர்களை அமைத்து, அன்றைய முக்கிய நிகழ்வை மையப்படுத்தி, அதற்கு இஸ்லாம் இயம்பும் தீர்வை ஆணித்தரமாக கூறியது தலையங்கம். இதுவும் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

“இன்றைய பிரச்னைகளும் இஸ்லாம் வழங்கிடும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களில் இந்தத் தலையங்கங்களின் தொகுப்பு இலக்கியச்சோலை மூலம் நூலாகவும் வெளிவந்துள்ளது.

வளர்ச்சி வேகம்

விடியல் வளர்ந்து வந்த சமயத்தில் இடையில் சில பல நெருக்கடிகளால் நிறுத்தப்பட்டாலும், மீண்டும் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தது.

இதற்கிடையில் அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு கிடைத்தது. முறைப்படி தபால் துறையில் விடியல் பதிவு செய்யப்பட்டு தபால் பதிவு எண் கிடைத்தது. இப்படி ஒரு பத்திரிகைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அதிகரித்தன.

2000 பிரதிகளில் ஆரம்பித்த விடியல் பயணம் 3000, 5000, 8000, 10000 பிரதிகள் எனக் காலத்தின் வேகத்தோடு போட்டி போட்டுக்கொண்டு வளர ஆரம்பித்தது. அத்தோடு நல்ல உறுதியான வாசகர் வட்டம் ஒன்று உருவானது.
கணிணி, நகல் இயந்திரம், ஸ்கேன்னர் என்று DTP வசதிகளும் விடியல் அலுவலகத்தில் வந்தன.

பேர் சொல்லிய பேஜ் லேஅவுட்

விடியலின் உள்பக்க வடிவமைப்புகள் (பேஜ் லேஅவுட்கள்) பரவலாக பேசப்பட்டன. கச்சிதமான தலைப்புகளுடன், ஒவ்வொரு பக்கத்தையும் படங்களைக் கொண்டும், முக்கிய சொற்றொடர்களைக் கொண்டும் அலங்கரித்தது அனைவரையும் கவர்ந்தது.

ஒருமுறை தத்துவக் கவிஞர் இ. பதுருதீன் அவர்களை விடியலை அச்சிடும் ஆசியா கிராஃபிக்ஸ் அச்சகத்தில் சந்தித்தபொழுது விடியல் உள்ளடக்கம் குறித்து அவர் சிலாகித்துக் கூறினார். “எதைச் சொல்வது என்பதை விட எப்படிச் சொல்வது என்பது மிக முக்கியம். அதனை விடியல் அழகுறச் செய்கிறது. அதன் உள்பக்க வடிவமைப்புகள் மிக அழகாகவும், கருத்தாகவும் அமைந்திருக்கின்றன” என்று அவர் கூறினார்.

20 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அவர் அன்று விடியலைப் பாராட்டிக் கூறியது இன்றும் என் நினைவுகளில் நின்று நிழலாடுகின்றது.

பாபரி மஸ்ஜித் & கிலாஃபத் சிறப்பிதழ்

1999ம் வருடம் டிசம்பர் இதழை பாபரி மஸ்ஜித் சிறப்பிதழாக கொண்டு வந்தோம். முதன் முதலாக நால்வண்ணத்தில் அட்டைப்படம் வந்ததும் அந்த இதழில்தான். அதுவரை இரு வண்ணத்தில்தான் விடியலின் அட்டைப் படம் வந்துகொண்டிருந்தது.

இந்தச் சிறப்பிதழின் அட்டைப்படத்தில் இடிக்கப்படாத முழுமையான பாபரி மஸ்ஜித் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாக நால்வண்ணத்தில் நின்றிருந்தது. பாபரி மஸ்ஜித் பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய ஆவணப் பெட்டகமாக அந்தச் சிறப்பிதழ் இன்றும் திகழ்ந்து வருகின்றது. அந்தச் சிறப்பிதழின் மகுடமாக இடம் பெற்றது அயோத்தியா நேரடி களச் செய்தி.

அதுவரை தென்னிந்தியாவிலிருந்து யாரும் அயோத்தியா சென்று நேரடியாக களச் செய்தி எடுத்ததில்லை. அன்றைய சூழலில் அது சாத்தியமான செயலும் அல்ல. இருந்தாலும் நமது செய்தியாளர்கள் பல தடைகளைத் தாண்டி துணிச்சலுடன் அயோத்தியா சென்றார்கள். பல சிரமங்களுக்கிடையில் நேரடி களச் செய்தியைப் பதிவாக்கினர். அது அச்சிறப்பிதழில் வெளிவந்தவுடன் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

அதேபோன்று 2000ம் வருடம் அக்டோபர் மாத இதழை கிலாஃபத் சிறப்பிதழாகக் கொண்டு வந்தோம். அதுவும் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது.

உள்பக்கங்களில் நால்வண்ணப் புரட்சி

விடியல் சர்க்குலேஷன் 20,000 பிரதிகளை எட்டிய பொழுது இந்தியா டுடே அச்சகத்தை அணுகினோம். இந்தியா டுடே அச்சகத்திலுள்ள வெப் ஆஃப்செட்டைப் பொறுத்தவரை உள்பக்கங்களும் நால்வண்ணத்தில் அச்சிட வேண்டும். குறைந்தது 25,000 பிரதிகள் அச்சிட வேண்டும்.

அல்லாஹ் மேல் தவக்குல் வைத்து துணிந்து இறங்கினோம். இந்தியா டுடே அலுவலகத்தில் 25,000 பிரதிகள் அச்சிட்டோம். உள்பக்கங்கள் அனைத்தும் நால்வண்ணத்தில் பளபள தாள்களில் அச்சிடப்பட்டன. இதுவும் முஸ்லிம் ஊடக வரலாற்றில் ஏற்பட்ட அடுத்த புரட்சி.

அதுவரை முஸ்லிம் இதழ்கள் உள்பக்கங்களில் நால்வண்ணம் கொண்டு வந்ததில்லை. ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு இணையாக நம்மாலும் கொண்டு வர முடியும் என்று முஸ்லிம் ஊடக உலகுக்கு வழி காட்டியது விடியல். அன்றிலிருந்து முஸ்லிம் மாத இதழ்களில் அதிக சர்க்குலேஷன் உள்ள பத்திரிகையாகவும் விடியல் மாறியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

நடுப்பக்கக் கட்டுரை (இம்பாக்ட் பக்கம்)

இம்பாக்ட் இண்டர்நேஷனல் என்றொரு ஆங்கிலப் பத்திரிகை லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதனைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே First Things First என்ற பெயரில் ஒரு பக்கக் கட்டுரை ஒன்று இடம் பெற்றிருக்கும்.

இன்றைய பிரச்சினைகளை அலசி, அதற்கு இஸ்லாமியத் தீர்வை மிக அழகாகச் சொல்லியிருப்பார்கள் அந்தப் பக்கத்தில்.

அதனைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்க வேண்டும் என்று அவா கொண்டோம். அதனால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை விடியலில் நடுப்பக்கக் கட்டுரையாகக் கொண்டு வந்தோம். அந்தப் பக்கத்திற்கு “இம்பாக்ட் பக்கம்” என்றே பெயர் வைத்தோம்.

வாசகர்களிடம் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வாசகர்கள் இதனை நூலாகக் கொண்டு வர வேண்டும் என்று விழைந்தனர். ஆதலால் “தேசியவாதமும் இஸ்லாமும்” என்ற பெயரில் முதல் பாகமும், “இம்பாக்ட் பக்கம்” என்ற பெயரில் இரண்டாம் பாகமும் இலக்கியச்சோலை வெளியீடுகளாக வெளிவந்தன.

எல்லா இஸ்லாமியப் பத்திரிகைகளுக்கும் ஏற்படும் நெருக்கடி இம்பாக்ட் இண்டர்நேஷனல் பத்திரிகையையும் விட்டு வைக்கவில்லை. அதுதான் நிதி நெருக்கடி! நிதி நெருக்கடியினால் அந்தப் பத்திரிகையை நிறுத்தி விட்டனர். அத்தோடு நாமும் நடுப்பக்கக் கட்டுரையை நிறுத்தி விட்டோம்.

இப்படிப் பயணித்த விடியலின் வளர்ச்சியில் எண்ணற்ற சகோதரர்களின் தியாகங்கள் அடங்கியிருக்கிறது. அவர்களின் உழைப்பு, நேரம், முயற்சிகள் அனைத்தும் விடியலின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றன.

புதிய விடியல்

தமிழகத்தில் விதையூன்றி, வேரிட்டு, கிளை பரப்பி வளர்ந்த விடியல் இன்று புதிய விடியலாக பரிணமித்திருக்கிறது. புதிய விடியல் புதிய ரத்தத்துடன் இன்னும் வீரியமாக தன் பயணத்தைத் தொடர்கின்றது.

வாசகர்களின் நீண்ட கால கோரிக்கையும் கனவும் இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் முதல் நிறைவேற இருக்கிறது. ஆம்! புதிய விடியல் மாதமிரு இதழாக அக்டோபர் 2016 முதல் பயணிக்க இருக்கிறது.

இந்த வளர்ச்சியின் தூண்களாக அன்றும் இன்றும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்காக வாசகர்களின் வழித்துணையுடனும், நல்லாதரவுடனும் புதிய விடியல் இன்னும் பல புரட்சிகளைச் செய்யும் இன்ஷா அல்லாஹ்!

அதற்கு அல்லாஹ் என்றும் துணை நிற்பானாக!

புதிய விடியல்  செப்டம்பர் 2016 (21வது வருட சிறப்பிதழ்)

No comments:

Post a Comment