Monday 16 December 2013

உயிரினும் மேலான உத்தம நபி!


இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார். (சூரா அல் அஹ்ஸாப் 33:6)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒரு முறை உமர் (ரலி) தன் உயிருக்கு அடுத்தபடியாக அண்ணலாரை அதிகமதிகம் நேசிப்பதாகக் கூறினார். “நீர் உம் உயிரை விட அதிகமாக என்னை நேசித்தால்தான் உம்முடைய ஈமான் பூரணமடையும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே உமர் (ரலி), “நான் உங்களை என் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறேன்” என்றார்கள். அண்ணலாரின் அருமைத் தோழர்கள் வெறும் வாய்மொழியுடன் நின்று விடாமல் அதனைச் செய்து காட்டினார்கள்.

ஹிஜ்ரத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் அண்ணலாரும், அபூபக்கர் (ரலி) அவர்களும் கஅபாவுக்கருகில் காஃபிர்களால் தாக்கப்பட்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கிப் புடைத்தது. அவரின் தாய் அபூபக்கரின் நிலையைக் கண்டு கதறி அழுதார்.

அந்த நிலையிலும் அவர், “அண்ணலார் எப்படியிருக்கிறார்கள்?” என்றுதான் முனங்கிக்கொண்டிருந்தார். அண்ணலாரைப் பார்க்காமல் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கமாட்டேன் என்று தன் தாயிடம் கூறிவிட்டார். இறுதியில் அவரின் தாயாரும், இன்னொரு உறவினர் பெண்ணும் சேர்ந்து அண்ணலார் இருந்த வீட்டுக்கு அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். அண்ணலாரைச் சந்தித்த பின்தான் அவர் சமாதானம் அடைந்தார்.

ஹிஜ்ரத்துக்கு நபிகளார் புறப்பட்டபொழுது எதிரிகள் அண்ணலாரின் வீட்டைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அண்ணலார் தங்கள் படுக்கையில் அலீ (ரலி) அவர்களைப் போர்வையைப் போர்த்தி படுக்க வைத்தார்கள். எதிரிகள் அண்ணலாரின் படுக்கைக்குப் பாய்ந்து வெட்டுவதற்கான ஆபத்து அதிகமாக இருந்தும் அலீ (ரலி) எந்தத் தயக்கமும் இன்றி படுத்துக்கொண்டார். ஏனெனில் அவருக்கு அவரது உயிரை விட அண்ணலாரின் உயிர்தான் முக்கியம்.

அதேபோல் ஹிஜ்ரத்துக்காக நபிகளாரும், அபூபக்கரும் புறப்பட்டுச் சென்றபொழுது எதிரிகளின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தவ்ர் குகையில் தங்கியிருந்தார்கள். எதிரிகளின் காலடிச் சப்தம் கேட்டவுடன் அபூபக்கர் (ரலி) பதறினார். எதிரிகள் கொஞ்சம் குனிந்து கீழே பார்த்தால் அவ்விருவரும் தெரிந்துவிடுவார்கள்.

அபூபக்கர் (ரலி) பதறியது தன் உயிர் போகும் என்பதற்காக அல்ல. அண்ணலாருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்றுதான் அஞ்சினார்.

குபைப் இப்னு அதீஃ (ரலி) இஸ்லாத்தின் எதிரிகளிடம் கைதியாகப் பிடிக்கப்பட்டபொழுது எதிரிகள் உயிர்ப் பிச்சை அளிக்க ஆசை வார்த்தை காட்டினார்கள். “உமது இடத்தில் முஹம்மதை வைத்து விட்டு, அதற்குப் பதிலாக நீர் விடுதலை அடைந்து உமது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீரா?” என்று கேட்டார்கள் எதிரிகள்.

கொதித்துப் போனார் குபைப். “அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் ஆருயிர் அண்ணலார் அவர்களை இந்த இடத்தில் வைத்து விட்டு, நான் என் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பதா? அவர்களது காலில் ஒரு சிறு முள் குத்தக்கூட நான் அனுமதிக்க மாட்டேன்” என்று முழங்கினார்கள்.

உஹதுப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். முஸ்லிம்களின் படை பனூ தீனார் என்ற கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் போரில் அந்தப் பெண்ணின் கணவர், சகோதரர், தந்தை ஆகியோர் கொல்லப்பட்டு விட்டனர். இந்தச் செய்தியைச் செவிமடுத்த அவர் கேட்ட கேள்வி இதுதான்: “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படியிருக்கிறார்கள்?”

அண்ணலாரை ஒடோடிச் சென்று நேரில் கண்ட பின் இவ்வாறு கூறினார்: “எந்தச் சோகமும் சோகமே அல்ல - உங்களைக் காணாததைத் தவிர!”

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தங்கள் சொத்துகள், குடும்பத்தினரைக் காட்டிலும் என்னை ஒருவர் நேசத்திற்குரியவராகக் கருதாத வரை அவர் முழுமையான இறைநம்பிக்கையாளராக முடியாது.”

இந்த வாக்கை வாய்மைப்படுத்தி வாழ்ந்து காட்டினார்கள் அருமை நபித்தோழர்கள். எந்நிலையிலும் தங்களை விட அதிகமாக அல்லாஹ்வின் தூதரிடம் அன்பு பாராட்டினார்கள். அளவுக்கு அதிகமாக நேசித்தார்கள்.

அதனால்தான் அந்தச் சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக மாற முடிந்தது. அகில உலகும் அன்றைய அரேபிய உலகை மரியாதையுடன் பார்த்தது. அவர்கள் செல்லுமிடமெல்லாம் இஸ்லாத்தின் செய்தி வேரூன்றியது. இஸ்லாம் இகமெங்கும் பரவியது.

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை (தூதரை) அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் (பாவத்தை விட்டும்) பரிசுத்தமாக்குகிறார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர். (சூரா ஆல இம்ரான் 3:164)

MSAH

இது விடியல் வெள்ளி  டிசம்பர் 2013 இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.

No comments:

Post a Comment