Tuesday 17 December 2013

நமக்கு சுவனம் வேண்டுமா? நரகம் வேண்டுமா?

விடியல் வெள்ளி, ஆகஸ்ட் 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “பிள்ளைகளின் மீது பெற்றோர்களின் உரிமை என்ன?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “அவர்கள் உங்களது சுவர்க்கம். அவர்கள் உங்களது நரகம்.” (ஸுனன் இப்னுமாஜா)
இந்தப் பிரபலமான ஹதீஸின் மூன்றே மூன்று வார்த்தைகளில் (அரபியில் மூன்று வார்த்தைகள்தான் இடம் பெற்றுள்ளன) பிள்ளைகளின் மீது பெற்றோர்களின் உரிமை என்ன என்பது மட்டுமல்ல; ஏன் என்பதும் அடங்கியிருக்கிறது.

நம்மால் முடிந்த வரை நாம் நம் பெற்றோர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் இப்படிப்பட்ட பிள்ளைகள் குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான். அவர்களை சுவர்க்கத்திற்கு அனுப்புகிறான். மாறாக, பெற்றோர்களை அவமரியாதை செய்பவர்களும், கண்ணியக் குறைவாக நடத்துபவர்களும் நரகத்தின் கதவைத்தான் தட்ட வேண்டியிருக்கும்.

திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் பெற்றோர்களைப் பேண வேண்டிய கடமையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். எந்த அளவுக்கு எனில், அல்லாஹ்வை நினைவு கூரும் இடங்களிலெல்லாம் பெற்றோர்களைப் பேணும் விஷயத்தையும் இறைவன் குறிப்பிடுகிறான்.

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல் குர்ஆன் 31:14)

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (அல் குர்ஆன் 6:151)

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல் குர்ஆன் 17:23-24)

பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலுள்ள உறவு என்பது மற்ற மனித உறவுகளைக் காட்டிலும் வேறுபட்டது. ஈடியிணையில்லாதது.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்து அவர்களைப் பேணி வளர்க்கிறார்கள். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

பெற்றோர் அன்பு என்பது உண்மையில் இறையன்புதான். பெற்றோர் அன்பு என்பது இவ்வளவு தியாகமும், தன்னலங்கருதாமையுமாய் இருக்கும் பொழுது நாம் எப்படி அதற்கு கைமாறு செய்யப் போகிறோம் என்பது நமது கையில் தான் இருக்கிறது.

நாம் அவர்களைக் கண்ணியப்படுத்தும் பாதையை, அவர்களுக்குக் கீழ்ப்படியும் பாதையைக் தேர்ந்தெடுக்கலாம். அல்லது இதற்கு மாறான பாதையையும் தேர்ந்தெடுக்கலாம். இது நம்பிக்கையில்தான் உள்ளது.

அதாவது, சுவர்க்கமா, நரகமா என்பது நம் கையில்தான் உள்ளது. இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

நாம் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்துவிட்டோம் என்று ஒரு போதும் எண்ணக் கூடாது. இது மாதிரி எண்ணம்தான் இன்றைய காலம் கட்டத்தில் பரவலாக நிலவுகிறது.

ஓர் ஆங்கில அறிஞர் குடும்பத்தை பறவையின் கூட்டுக்கு ஒப்பிடுவார். பறவைக் குஞ்சுகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும். தாயின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கிடைக்கம். தாய்ப் பறவை பறந்து திரிந்து இரையைத் தேடி, தனது அலகில் அதனைப் பத்திரப்படுத்தி, கூட்டுக்கு வந்து, தனது குஞ்சுகளுக்கு உணவு புகட்டும்.

சிறிது காலம் கழியும். பறவைக் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் சக்தியைப் பெறும். சிறிது காலத்தில் அது கூட்டை விட்டுப் பறந்து சென்று விடும். அதன்பின் தன்னை உணவூட்டி வளர்த்த தாய்ப் பறவையை அது திரும்பிக் கூடப் பார்க்காது. பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, மாமாமார்கள், மாமிகள், இன்ன பிற உறவுகள் எதுவும் அதற்குத் தெரியாது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அது பறந்து சென்று விடும்.

இது பறவைகள் மாதிரி உயிரினங்களுக்குச் சரி. ஏனெனில் அவை ஒரு நாகரிகத்தைக் கட்டமைத்துக் கொள்ளவில்லை. ஒரு சமூக அமைப்பு அவற்றிற்கு இல்லை.

துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆங்கில அறிஞர் நமது மேலைநாட்டுச் சூழலை மனதில் வைத்து, பறவைகளுடன் மேலைநாட்டுக் குடும்பங்களை  ஒப்பிடுகிறார்.

ஆம்! உண்மையில் மேலைநாட்டுக் குடும்ப அமைப்பு மேற்சொன்ன பறவையின் நிலைக்குத்தான் இன்று வந்துள்ளது.

இங்கு தந்தைதான் “வயதான மனிதர்.” அவரின் பிள்ளையின் போர்க்குரல் என்ன தெரியுமா? “என்னைச் சுதந்திரமாக விட்டு விடுங்கள். இது என் வாழ்க்கை!”

அங்குள்ள சட்ட அமைப்பும் இதனையே ஆதரிக்கின்றது. அங்குள்ள இலக்கியங்கள், மீடியா ஆகியவையும் அங்குள்ள அறிஞர்களும் இதனையே பிரதிபலிக்கின்றனர்.

இதன் விளைவை இன்று மேலைநாடுகள் அனுபவித்து வருகின்றன. அங்கே குடும்பங்கள் கண்ணாடிச் சில்லுகளைப் போல் உடைந்து சிதறிக் கிடக்கின்றன. மனித உறவுகள் அறுந்து கிடக்கும் சங்கிலி போல் தொடரற்று கிடக்கின்றன.

வயதான மக்கள் முதியோர் இல்லங்களில் கனத்த இதயங்களுடன் காலத்தைத் தள்ளுகின்றனர். பெற்றோர்களைப் பேணுவதற்கான தியாகம், கடப்பாடு ஆகியவை அங்கு அந்நியக் கலாச்சாராமாகிவிட்டன; பத்தாம்பசலிகள் செய்யும் வேலையாகிவிட்டன.

இஸ்லாத்தைத் தழுவியுள்ள ஒரு அமெரிக்கர் கூறுகிறார்: “மேற்குலகில் ஒருவன் அல்லது ஒருத்திக்கு முழுமையான நம்பகமான ஆள் என்று ஒருவரும் இல்லை!” இப்படிப்பட்ட கோரமான நிலையே அங்கு நிலவுகிறது. மேற்குலகின் குடும்ப அமைப்பின் இந்தச் சோகமான, கனத்த சூழ்நிலையை முஸ்லிம் சமூக அமைப்போடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஆஹா...! அங்கே அருள் மழைகள் பொழிகின்றன. பாசங்கள், தியாகங்கள் அங்கு நிச்சயம். பொதுவாக, முஸ்லிம் சமூக அமைப்பு வீழ்ச்சியடைந்து வந்தாலும் அங்கு பாசத்திற்குக் குறைவில்லை; தியாகத்திற்குக் குறைவில்லை.

ஏன் முஸ்லிம் சமூகத்தில் வீழ்ச்சி? ஒரு முஸ்லிம் குடும்பம் அனைத்து திசைகளிலிருந்தும் கலாச்சாரத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது.

இந்தத் தாக்குதலில் முக்கிய இடத்தைப் பிடிப்பது குழந்தைகள் தான். ‘குழந்தைகளின் உரிமைகள்’ என்ற பெயரில் இந்தத் தாக்கம் உருவாகியிருக்கின்றது. அதாவது, பெற்றோர் சொல்லை மீறுவது, பெற்றோர்களுக்குக் கட்டுப்படாமல் கலகம் செய்வது.

இந்தக் கலாச்சாரத்திலேயே ஊறிப் போய் வளர்ப்பவர்களுக்கு இஸ்லாம் சொல்லும் குடும்ப அமைப்பு அந்நியமாகவே படும். ஒரு நோயாளிக்கு சாதாரணமான, ஆரோக்கியமான, சுவையான உணவு எப்படி அந்நியமாக இருக்குமோ அது  மாதிரி, பெற்றோர்களைப் பிள்ளைகள் பேண வேண்டியவை பற்றி ஒரு சுருக்கத்தைக் கீழே காண்போம்.

1.  எல்லா சூழ்நிலைகளிலும் நாம் நமது பெற்றோர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும்; மதிப்பளிக்க வேண்டும். இது அல்லாஹ்வால் நமக்குக் கொடுக்கப்பட்ட உரிமை. நம் பெற்றோர்கள் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும் நாம் அவர்களுக்குக் கண்ணியம் கொடுத்தே ஆகவேண்டும்.

2. ஷரீஅத் சொல்கின்ற எல்லைக்குள் நாம் அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும். இஸ்லாத்தில் முழுமையான கீழ்ப்படிதல் என்று யாருக்கும் இல்லை. அல்லாஹ் ஒருவனுக்கு தவிர.

3.  கடந்த காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அநீதமாக நடந்து கொண்டாலும், பிள்ளைகள் அவர்களுக்குரிய கண்ணியத்தை ஷரீஅத் சொல்லும் எல்லைக்குள் நின்று அளித்தே ஆக வேண்டும்.

பெற்றோர்களிடம் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்கிறோமோ அதே அளவு மரியாதையை உறவினர்களிடமும், நண்பர்களிடமும் காட்ட வேண்டும்.

நாம் மறுமையில் நற்கூலி கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே இதனைச் செய்ய வேண்டும். அதேபோல் நாம் பெற்றோர்களை எவ்வாறு நடத்துகிறோமோ, நல்ல விதமாகவோ, தீய விதமாகவோ, அதனுடைய பிரதிபலனை இந்த உலகிலும் மறுவுலகிலும் தெரிந்து கொள்ளலாம். பெற்றோர்களுக்கு எப்பொழுதும் கவலையை உண்டு பண்ணுகிறவர்கள் பிற்காலத்தில் கவலையிலேயே மூழ்கி வாழ்வார்கள். பெற்றோர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துபவர்கள் பிற்காலத்தில் தாங்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இது தான் இஸ்லாம் கற்றுத் தந்த அற்புதம்!

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

No comments:

Post a Comment