Friday, 30 May 2014

வாசிப்பு நம் சுவாசிப்பு!


கல்வித் தேடல் என்பது முஸ்லிம்களின் கடமை. இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிக்காத சமூகம் தனது வெற்றியைப் பற்றி யோசிக்க முடியாது.

வலைத்தளங்களின் வளர்ச்சியினாலும், முகநூல் போன்ற சமூகத் தளங்களின் ஆதிக்கத்தினாலும் இன்று வாசிப்புப் பழக்கம் வெகு வேகமாக விடைபெற்று வருகிறது. பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதும், அத்தோடு தங்களது அறிவுத் தேடலை போதுமாக்கிக் கொள்ளும் போக்கும் தொடர்கின்றன. சுய தேடல் என்பதைக் கைவிட்டு விலைமதிப்பற்ற நேரத்தை வீணான காரியங்களில் ஈடுபட்டு பாழாக்குகின்ற ஒரு பரம்பரை உருவாகிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக வாசிக்கிறார்கள், மனனமிடுகிறார்கள். தேர்வு முடிவுற்றதும் தேய்ந்து விடுகிறது வாசிப்பு. எழுத்துக்கும், எழுதுகோலுக்கும் முக்கியத்துவம் கொடுத்த குர்ஆனைச் சுமந்தவர்கள் என்று பெருமையாக மார்தட்டிக் கொள்வதற்கு மட்டும் நாம் தயங்குவதில்லை.

வாசிக்க வேண்டும் என்றவுடன் சினிமா செய்திகள் நிறைந்த சில வார இதழ்களை எடுத்து புரட்ட ஆரம்பிப்பார்கள் சிலர். இது பயனுள்ள வாசிப்பு அல்ல. மாறாக, சிந்தனைக்கு விருந்தாக அமையக்கூடிய, உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய, நடத்தைகளை நெறிப்படுத்தக்கூடிய நல்ல நூல்களை வாசிப்பதே பயன் தரும்.

நமது வாசிப்பு திருக்குர்ஆனிலிருந்து துவங்க வேண்டும். திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் வாசிப்பையும், சிந்திப்பதைப் பற்றியும் கூறுகின்றான்.

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும்போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.) (திருக்குர்ஆன் 3:191)

திருக்குர்ஆனை எப்பொழுதும் நிரந்தரமாக வாசிக்க வேண்டும். தினமும் அதற்கு சில மணித்துளிகள் ஒதுக்கிட வேண்டும். அதன் பிறகு நல்ல பயனுள்ள நூல்களை வாசிக்க வேண்டும்.

“அறிவு ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போன சொத்து. அவர் அது கிடைக்குமிடமெல்லாம் சென்று ஆவலுடன் சேகரித்துக் கொள்ள வேண்டும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ)
முஸ்லிம்களின் அறிவியல் பாரம்பரிய வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால் சுய தேடலுக்கான முன்மாதிரிகளைக் கண்டுகொள்ளலாம். இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் இரு சந்தர்ப்பங்களில் மட்டுமே வாசிக்காது இருந்துள்ளார்கள். முதலாவது சந்தர்ப்பம் அவரின் தாய் இறந்த நாள். இரண்டாவது, அவரது திருமண நாள்.

அப்பாஸியர்களின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் தமது அரசவை பணிகளிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும் கூட, புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவார்களாம்.

ஐரோப்பிய - அமெரிக்க நாடுகள் அன்று நாகரிகமோ, பண்பாடோ, நல்ல பழக்கவழக்கங்களோ தெரியாமல் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிக் கிடந்தன. இஸ்லாமிய எழுச்சியும், முஸ்லிம்களின் அறிவுத் தேடலும்தான் இருள் படிந்திருந்த உலகுக்கு அறிவு தீபம் ஏற்றி ஒளி கொடுத்தது.

இஸ்லாம் அறிவையும், ஆராய்ச்சியையும் தூண்டுகின்றது. ஏனைய மதங்கள் போன்று அது ஆன்மீகம் பற்றி மட்டும் பேசவில்லை. அது இயற்கையை ஆராயச் சொல்கின்றது. இதுவே அறிவியல் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.

இஸ்லாத்தின் முதல் தூது, ‘இக்ரஃ!" (ஓது! வாசி!) என்ற கட்டளையுடன்தான் துவங்கப்பட்டது. முதலில் இறங்கிய 5 வசனங்களும் வாசித்தல், கற்றல், எழுதுதல் பற்றியே கூறுகின்றன. அறிவியலின் அனைத்துத் துறைகளையும் முஸ்லிம்கள் தொட்டார்கள். அதில் அவர்கள் உச்சி வரை சென்றார்கள். சரி, எப்படி வாசிப்பது? அதனை ஓர் அறிஞரின் வாயிலாகவே கேட்போம்.

“ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்ய வேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்” என்று Slow Reading (2009) என்ற புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா (John Miedema) கூறுகிறார்.

ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் இதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். உயிரினும் மேலான நேரத்தை அவர்கள் நாசப்படுத்தி விடாமல் வாசித்தலில் கழித்து பயன் பெற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உனக்குப் பயன் தரும் விடயங்களில் பேரார்வம் கொள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள். எதையும் செய்ய இயலாது என்று இருந்து விடாதே. உனக்கு துன்ப துயரம் ஒன்று ஏற்பட்டால் “நான் இவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமே” என்று கூறாதே! மாறாக, ”அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்தது நடந்திருக்கிறது” என்று கூறு. ஏனெனில், இவ்வாறு செய்திருந்தால், அவ்வாறு செய்திருந்தால் என்ற வார்த்தை ஷைத்தானின் செயலுக்குரிய வாயிலைத் திறந்து விடும்.” (முஸ்லிம்)

MSAH

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2014 (மனதோடு மனதாய்...)

Monday, 19 May 2014

“வேர்கள்” வரலாறு!

“ரூட்ஸ்” என்ற நாவல் எழுதியதன் மூலம் உலகப் புகழ் பெற்ற அலெக்ஸ் ஹேலி

“வேர்கள்” நூலின் மூல நூலான “ரூட்ஸ்” (Roots) என்ற ஆங்கில நாவலுக்கான வரலாறு மிக்க சுவாரஸ்யமானது. அதனை அறிய வேண்டுமென்றால் நாவலாசிரியரின் வரலாறை கொஞ்சம் அலசினால்தான் பொருத்தமாக இருக்கும்.

அலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்கக் கறுப்பர்தான் இந்த நூலை எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரியும். அவர் 1921ம் ஆண்டு, ஆகஸ்ட் 11 அன்று நியூயார்க்கில் இதாகா என்ற இடத்தில் சிமோன் ஹேலி-பெர்த்தா ஜார்ஜ் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

இளவயதில் கடலோரக் காவற்படையில் பணிபுரிந்தார். பின்னர் பத்திரிகைத்துறைக்கு வந்தார். பின்னர் கைதேர்ந்த பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest), பிளேபாய் (Playboy) ஆகிய பிரபலமான பத்திரிகைகளில் பணியாற்றினார்.

மால்கம் எக்ஸின் வரலாறை எழுதுவதற்கு இவர் பணிக்கப்பட்டார். மால்கம் எக்ஸ் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் மிக்க பரபரப்பாக இருந்ததால் அலெக்ஸ் ஹேலியிடம் ஓர் இடத்தில் அமர்ந்து பேட்டி கொடுப்பதற்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்கவில்லை. எனவே மால்கம் எக்ஸ் செல்லுமிடமெல்லாம் அலெக்ஸ் ஹேலியும் சென்றார்.

மால்கம் எக்ஸ் (வலது) தன் வாழ்க்கை வரலாறைச் சொல்லச் சொல்ல அலெக்ஸ் ஹேலி அதனை டைப் அடித்து பதிவு செய்கிறார்

அந்தப் பயணத்தின்போது காரில் வைத்து மால்கம் எக்ஸிடம் இவர் பேட்டியெடுப்பார். இப்படி 1963 முதல் 1965ம் ஆண்டு பிப்ரவரியில் நியூயார்க்கில் அவுடுபோன் அரங்கத்தில் வைத்து மால்கம் எக்ஸ் சுட்டுக்கொல்லப்படும் வரை ஹேலி அவரிடம் எடுத்த 50க்கும் மேற்பட்ட ஆழமான பேட்டிகளின் தொகுப்புதான் “மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு” (The Autobiography of Malcolm X) என்ற நூல்.

இதுதான் அலெக்ஸ் ஹேலியின் முதல் நூல். இந்நூல் 1965ம் ஆண்டு வெளியாகி, விற்பனையில் சாதனை படைத்தது. முதல் நூலிலேயே அலெக்ஸ் ஹேலி மிகப் பிரபலமானார். 1966ம் ஆண்டு இந்த நூலுக்காக அலெக்ஸ் ஹேலி அனிஸ்ஃபீல்டு-வோல்ஃப் புத்தக விருது (Anisfield-Wolf Book Award) வாங்கினார்.

 மாலிக் அல் ஷாபாஸ் என்ற மால்கம் எக்ஸ்

1977 வரை இது 60 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகை கூறுகிறது. 1998ம் ஆண்டு டைம் என்ற ஆங்கிலப் பத்திரிகை இந்நூல் இருபதாம் நூற்றாண்டின் அதிக பிரசித்தி பெற்ற, செல்வாக்கு பெற்ற நூல் என்று பறைசாற்றியது.

இதனை ஏன் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால் ரூட்ஸ் நாவலின் துவக்கப் புள்ளி இங்கேதான் ஆராம்பாகிறது. மால்கம் எக்ஸ் பல பல்கலைக் கழகங்களில் கருத்தரங்குகளில் உரையாற்ற அழைக்கப்பட்டார். அங்கே ஆற்றிய உரைகளிலெல்லாம் மால்கம் எக்ஸ் சொன்ன ஒரு வரலாற்று உண்மைதான் அலெக்ஸ் ஹேலிக்கு இந்தப் புதினத்தை உருவாக்கத் தூண்டியது.

அதாவது, அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டு அடிமைகளாக அமெரிக்காவில் விற்கப்பட்டவர்கள், அங்கே ஆப்பிரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

சிறு வயதில் அறியாமல் செய்த தவறுகளுக்காக மால்கம் X சிறையில் இருந்தபொழுது சிறை நூலகத்தின் அத்தனை நூல்களையும் படித்து முடித்து விட்டார். அப்படி பலதரப்பட்ட நூல்களையும் படித்தபொழுதுதான் அவர் இந்த உண்மையைக் கண்டறிந்தார்.

மால்கம் எக்ஸுடன் கூடவே செல்லும் அலெக்ஸ் ஹேலி இந்தச் செய்தியைக் கேட்டார். மீண்டும் மீண்டும் கேட்டார். ஆச்சரியப்பட்டுப் போனார். தானும் ஒரு கறுப்பர்தானே... தன்னுடைய மூதாதையர்களும் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு வந்தவர்கள்தானே... அவர்களெல்லாம் முஸ்லிம்களா... அப்படியென்றால் நான் முஸ்லிம்களின் வழி வந்தவனா... என்று சிந்திக்க ஆரம்பித்தார். இந்தக் கூற்று உண்மையானதுதானா என்று ஆராயவேண்டும் என்று அப்பொழுதே முடிவெடுத்தார்.

அப்பொழுதுதான் அவருக்கு அவர்களின் மூதாதையர்கள் பற்றி அவருடைய குடும்பத்தார், குறிப்பாக அவருடைய பாட்டி அடிக்கடி நாட்டுப்புறப் பாடல் போல் பாடுவது நினைவுக்கு வந்தது. அதிலேயே அவரின் மூதாதையர்களின் பெயர்களெல்லாம் வந்து விடும். தன் மூதாதையர்கள் பற்றி மேலும் பல விவரங்களை அறிந்திட அவர் தன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து பழைய வரலாறுகளையெல்லாம் கிளற ஆரம்பித்தார்.

நூலகத்தில் சென்று அன்றைய ஆப்பிரிக்க - அமெரிக்க வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்தார். அன்றைய ஆப்ரிக்க - அமெரிக்க வாழ்விடங்கள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கம் என்று அத்தனையையும் ஆராய ஆரம்பித்தார்.



இப்படியே 12 வருடங்கள் கடும் ஆராய்ச்சியை மேற்கொண்டார். மூன்று கண்டங்களிலுள்ள பலப்பல நாடுகளுக்குச் சுற்றினார். கிட்டத்தட்ட 50 நூலகங்களில் ஆய்வு செய்தார். இறுதியாக தன் முன்னோர்களின் வரலாறைத் தோண்டியெடுத்தார். தன் ஏழாவது தலைமுறை மேற்கு ஆப்ரிக்காவில் காம்பியா என்ற நாட்டில் ஜுஃபுர் என்ற செழிப்பு மிக்க ஒரு சிறிய கிராமத்தில் பாரம்பரியமிக்க ஒரு முஸ்லிம் குடும்பத்தில் முடிந்ததைக் கண்டுபிடித்தார்.

தன் ஏழாவது முப்பாட்டனாரின் பெயர் குண்டா கிண்டே என்பதை அறிந்தார். அதனை வரலாற்றுப் புதினமாக வடித்தெடுத்தார். அதுதான் “ரூட்ஸ்” என்ற ஆங்கிலக் காவியம்.

நாவல் ஆப்ரிக்காவில் குண்டா கிண்டேயிடமிருந்து தொடங்கும். குண்டா கிண்டே என்ற காக்கை போன்ற கறுப்புக் குழந்தை பிறப்பதுதான் முதல் காட்சி. முதல் அத்தியாயம். கி.பி. 1750லிருந்து தொடங்கும் நெஞ்சைப் பிழியும் அந்தக் கொடூர வரலாறு 1922ல் அமெரிக்காவில் முடிவடையும்.

ரூட்ஸ் திரைப்படமாக... (குண்டா கிண்டேவைக் கட்டி வைத்து சாட்டையால் அடிக்கும் வெள்ளை மிருகம்)

ஆப்ரிக்காவிலிருந்து குண்டா கிண்டே என்ற அந்த முஸ்லிம் அமெரிக்காவுக்குக் கடத்திக் கொண்டு வரப்பட்டு, அங்கே அடிமையாக விற்கப்படுகிறார். அவரது வழித்தோன்றல் அடிமைத் தலைமுறையாக வளர்ந்து, கிறிஸ்தவத் தலைமுறையாக மாற்றப்பட்டு, அமெரிக்காவோடு கால ஓட்டத்தில் கலந்து, கரைந்து விடுகிறது.

இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்துவிட்டு பல கறுப்பர்கள் தங்கள் மூல மார்க்கம் இஸ்லாம் என்று அறிந்து இஸ்லாத்தைத் தழுவினர். திக்குத் தெரியாமல் சிதறி, சீரழிந்து கிடந்த அமெரிக்கக் கறுப்பர்களுக்கு தங்களுக்கும் ஒரு பாரம்பரியமிக்க வரலாறு உண்டு என்ற தன்னம்பிக்கை தலைதூக்கியது. படிக்கத் தெரியாத கறுப்பர்கள் கூட தங்கள் முன்னோர்களின் வரலாறைத் தாங்கிய இந்த நூலை வாங்கி பைபிள் போல பட்டுத் துணியில் போர்த்திப் பாதுகாத்தனர்.

1976ல் ரூட்ஸ் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திற்று. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் ரூட்ஸ் இடம் பெற்றது. இதுவரை 37 மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதன் வீச்சின் வேகத்தை உணர்த்தும்.

இந்த நூலுக்காக அலெக்ஸ் ஹேலிக்கு 1977ல் பெருமைக்குரிய “சிறப்பு புலிட்ஸர் பரிசு” (Special Pulitzer Prize) வழங்கப்பட்டது.



அதே வருடம் இந்தப் புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டு தொலைக்காட்சித் தொடராக ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொடரும் நூலைப் போலவே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைக் கண்டவர்களின் எண்ணிக்கையும் சாதனைப் பட்டியலில் சேர்ந்தது. அதாவது, 13 கோடி பேர் இந்தத் தொடரைக் கண்டுகளித்தனர்.

அமெரிக்காவில் வாழும் ஆப்ரிக்கக் கறுப்பர்களின் வரலாறு நீண்ட பாரம்பரியம் கொண்டது, அது அழிந்திடவில்லை என்பதை இந்தப் புதினம் வலியுறுத்தி நின்றது. இந்த வரலாற்றுக் காவியம் இன்னொரு தீப்பொறியையும் கிளறிவிட்டது. அதாவது “பரம்பரையியல்” அல்லது “மூதாதையர் பற்றிய ஆய்வியல்” என்ற Genealogy பற்றிய ஆராய்ச்சியை அது தூண்டி விட்டது.



அலெக்ஸ் ஹேலி ஒருமுறை சொன்னார்: “நான் சந்தித்த கறுப்பர்களில் பெரும்பாலோர் - வசதிமிக்கவர்கள், வசதி குறைந்தவர்கள் எல்லோரும் அதில் அடங்குவர் - என்னிடம் சொன்னது, “நான் உங்களுக்காக பெருமைப்படுகிறேன்.” நான் இந்த நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றே உணர்கிறேன். கறுப்பர்களைத் தலைகுனிய வைக்க நான் ஒருபொழுதும் விடமாட்டேன். நான் சம்பாதித்த பணம், சம்பாதிக்கப் போகும் பணம் ஆகிவையெல்லாம் இவர்களை ஒப்பிடும்பொழுது எனக்கு ஒன்றுமே இல்லை.”

ரூட்ஸ் புதினத்திற்காக அலெக்ஸ் ஹேலி மேற்கொண்ட கடும் ஆராய்ச்சிக்காகவும், அந்த நூல் கொண்டுள்ள ஆழமான இலக்கியச் செறிவுக்காகவும் 1977ல் National Association for the Advancement of Colored People (NAACP) என்ற மனித உரிமைகள் அமைப்பு அலெக்ஸ் ஹேலிக்கு ஸ்பிங்கம் விருது (Spingam Award) வழங்கி கௌரவித்தது. இனப்பாகுபாட்டையும், நிறவெறியையும் அழித்தொழிப்பதற்காக 1909ல் உருவாக்கப்பட்ட ஆப்ரிக்க-அமெரிக்க மனித உரிமைகள் அமைப்புதான் NAACP என்பது.

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தில் உள்ள டென்னஸ்ஸி பல்கலைக்கழக நூலகத்தில் ரூட்ஸ் புதினத்திற்காக அலெக்ஸ் ஹேலி சேகரித்த அரிய பதிவுகள் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில் அவர் ரூட்ஸ் புதினத்திற்காக எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகள், முன்வரைவுகள், சட்டக் குறிப்புகள், வரலாற்றுக் குறிப்புகள் போன்றவை காணப்படுகின்றன.

1979ல் மீண்டும் ஏபிசி டிவி ரூட்ஸ் புதினத்தின் அடுத்தபடியாக உள்ள தொடரை வெளியிட்டது. அலெக்ஸ் ஹேலி காம்பியாவின் ஜுஃபுர் கிராமத்திற்குச் சென்றது வரை அதில் இடம் பெற்றிருந்தது.

தன் முன்னோர்களின் வேர்களைக் கண்டுபிடித்த அலெக்ஸ் ஹேலி, தன் ஏழாவது முப்பாட்டனார் ஜுஃபுர் கிராமத்திலுள்ளவர் என்பதை அறிந்தவுடன் வாகன வசதிகள் இல்லாத அந்தக் கிராமத்திற்கு மிகுந்த சிரமங்களுக்கிடையில் செல்வார். அவர்களின் மொழி அவருக்குத் தெரியாததால் மொழிபெயர்ப்பாளர்களையும் ஒன்றாக அழைத்துச் செல்வார்.

அவர்களின் சுத்தமான ரத்தத்தின் முன் கலப்படமுற்ற தன் ரத்தத்தை எண்ணி வெட்கப்பட்டு கூனிக் குறுகி அவர் நிற்பார். அந்த உணர்ச்சியை அப்படியே நாவலிலும் வடித்திருப்பார். இதனைப் படிப்பவர்களுக்கு உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வராமல் இருக்காது.

ரூட்ஸ் திரைப்படத்தில் அலெக்ஸ் ஹெலியின் வெவ்வேறு வயதுக்காரர்களாக கிறிஸ்டாஃப் செயின்ட் ஜான், டாமொன் இவான்ஸ், ஜேம்ஸ் ஏர்ள் ஜோன்ஸ் ஆகிய புகழ்பெற்ற நடிகர்கள் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளனர்.



அலெக்ஸ் ஹேலியின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு முக்கியமான உணர்ச்சிப் பெருக்கு நிகழ்வுதான் அன்னபோலிஸ் துறைமுகம்.

குண்டா கிண்டேயும், அவருடன் கடத்தப்பட்ட கறுப்பர்கள் அனைவரும் பயணித்த கப்பல் 1767ம் ஆண்டு அமெரிக்காவில் அன்னபோலிஸ் துறைமுகத்தில் வந்து இறங்கியது. அலெக்ஸ் ஹேலி அங்கே சென்று பழைய ஆவணங்களை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து அந்தக் கப்பலைக் கண்டுபிடித்தார்.

அவருடைய ஏழாவது தலைமுறை முப்பாட்டனாரை விலங்கிட்டு ஏற்றி வந்த அந்தக் கப்பலின் பெயர் “தி லார்ட் லிகோனியர்” (The Lord Ligonier). அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் பட்டியலை ஒருவழியாகக் கண்டுபிடித்தார். அதில் சரக்குகள் பட்டியலில் குண்டா கிண்டே என்ற பெயரும் இருந்தது. அந்தப் பெயரைப் பார்த்ததும் அப்படியே கண் குத்தி நின்றார் அலெக்ஸ் ஹேலி.



அது 1967, செப்டம்பர் 29ம் தேதி. அதாவது அந்தக் கப்பல் அங்கே வந்து சரியாக 200 வருடங்கள் கழித்து அலெக்ஸ் ஹேலி தன் முப்பாட்டனார் வந்த கப்பலைக் கண்டுபிடித்துவிட்டார். தன் வாழ்வின் உச்சகட்ட உணர்ச்சிப் பெருக்குள்ள நாள் அதுதான் என்று பின்னர் அலெக்ஸ் ஹேலி குறிப்பிடுகிறார்.
நாவலில் இந்தக் காட்சியை அவர் அதியற்புதமாக வர்ணித்திருப்பார். படிப்போருக்கு அதே உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டு, கண்களில் நீர் சுரக்கும் அளவுக்கு அந்த வரிகளில் கனம் இருக்கும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை என்றென்றும் நினைவுகூரும் விதமாக அன்னபோலிஸின் நடுவில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. அலெக்ஸ் ஹேலி தன் காலடியில் குழுமியிருக்கும் குழந்தைகளுக்கு கதை படித்துக் கொடுப்பது போன்று அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸ் ஹேலி சிலையாக...

ஹேலி ரூட்ஸ் நாவலை நியூயார்க்கிலுள்ள ஹாமில்டன் கல்லூரியில் வைத்துதான் எழுத ஆரம்பித்தார். எழுத்தின் இடைவேளையில் சிறிது இளைப்பாறும் பொருட்டு அங்கே சிறிய அளவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் பியானோ வாசிப்பதைக் கேட்டு ரசிப்பார். பின்னர் ரூட்ஸ் உலகளாவிய அளவில் புகழ்பெற்றவுடன் அதே கல்லூரியில் அந்த நூலை எழுத ஆரம்பித்ததை நினைவுகூரும் முகமாக ஒரு சிறப்பு மேஜை அமைக்கப்பட்டது.

அலெக்ஸ் ஹேலியை கௌரவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அந்த மஞ்சள் நிற மேஜையில் ஹேலி ரூட்ஸ் புதினம் எழுதிக் கொண்டிருப்பது போல் ஒரு பெயிண்டிங் வரைந்து வைக்கப்பட்டுள்ளது.

ரூட்ஸ் புதினம் அலெக்ஸ் ஹேலியின் தாய் வழி வேர்களைத் தேடிய புதினம். 1970களின் இறுதியில் அலெக்ஸ் ஹேலி தன் தந்தை வழிப் பாட்டியின் வேர்களைத் தேட ஆரம்பித்தார். அதனை ஆய்வு செய்து ஒரு நாவலை எழுத ஆரம்பித்தார். “குயீன்” (அரசி) என்று அந்த நாவலுக்குப் பெயர் வைத்தார்.



அவருடைய பாட்டியின் பெயர் குயீன். ஆனால் இந்த நாவலை அவர் முடிப்பதற்கு முன்பே பிப்ரவரி 10, 1992ம் ஆண்டு வாஷிங்டனில் வைத்து தனது 70வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் பிறந்து வளர்ந்த இடமான டென்னஸ்ஸீயிலுள்ள ஹென்னிங் என்ற இடத்தில் அவர் அடக்கப்பட்டார்.

இறப்பதற்கு முன்பு டேவிட் ஸ்டீவன்ஸ் என்பவரிடம் இந்த நாவலை முடிக்கும்படி அவர் கேட்டிருந்தார். பின்னர் அது “அலெக்ஸ் ஹேலியின் குயீன்” (Alex Haley’s Queen) என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது. 1993ல் இது திரைப்படமாகவும் வெளிவந்தது.

ரூட்ஸ் நாவலின் வீச்சும், வேகமும் அது தமிழில் வேர்களாக முகிழ்ந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியச்சோலை பதிப்பகம் வெளியிட்ட வேர்கள் தமிழ் புதினத்தைப் படித்த பலர் அதிலுள்ள கதாபாத்திரங்களின் பெயர்களை மறக்காமல் நினைவில் வைக்கும் அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.

வேர்கள் வெளிவந்த புதிதில் ஹிந்து மத பிராமண வகுப்பிலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு பெண் இதனைப் படித்துவிட்டு மூன்று நாட்கள் அழுதுகொண்டிருந்ததாக அவருடைய கணவர் என்னிடம் சொன்னபொழுது மலைத்துப்போய் விட்டேன்.



வேர்களின் இறுதியில் அலெக்ஸ் ஹேலி குறிப்பிடுவதைப்போல ஒரு தோல்வியின் வரலாறு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை எண்ணி வியந்திருக்கிறேன். அதன் வீச்சு இன்னும் குறையவில்லை. அது ஏற்படுத்தும் தாக்கம் இன்னும் தணியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு துபையில் வசிக்கும் நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த முஹம்மது அனஸ் என்ற வேர்களைப் படித்த வாசகர் மெட்ரோ ரயிலில் பயணித்தபொழுது நடந்த ஓர் அனுபவத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார். அதன் சுருக்கம் இதுதான்:

“மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் பக்கத்து இருக்கையில் ஓர் ஆப்ரிக்கர் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். அவரும் சரளமாக பேச ஆரம்பித்தார். அவருடைய சொந்த நாடு எது என்று கேட்டேன். “காம்பியா” என்றார்.

எனக்கு காம்பியா நாட்டைப் பற்றி எதிலோ படித்த ஞாபகம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். நினைவுக்கு வந்தது. உடனே அவரிடம், “காம்பியா, செனகலின் பக்கத்து நாடா?” என்று கேட்டேன். ஆப்ரிக்கர்களுக்கே உண்டான ஒரு துள்ளலில் என் கையில் ஒரு தட்டு தட்டி, “மிகச் சரியாக சொன்னீர்கள். காம்பியா, செனகலின் நடுவே அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.

நான் அவரிடம், “ரூட்ஸ் என்ற புத்தகத்தில் அந்த நாட்டைப் பற்றிப் படித்திருக்கிறேன்” என்றேன். அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “என்ன... நீங்கள் அந்தப் புத்தகத்தை படித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு காம்பியா நாட்டவனிடமும் சொல்ல வேண்டிய மிக முக்கியமான வரலாறு அந்தப் புத்தகத்தில் இருக்கிறது...” என்று அங்காலாய்த்தார். அதற்கு பிறகு அவர் இன்னும் மனது விட்டு என்னிடம் பேச ஆரம்பித்து விட்டார்.”

இவ்வாறு முஹம்மது அனஸ் பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதில் இலக்கியச்சோலை நூல்களும் இடம் பெற்றிருந்தன. நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி என்ற வாசகர் “வேர்கள்” நூலை அங்கே வாங்கிப் படித்துவிட்டு அது ஏற்படுத்திய தாக்கத்தில் ஓர் ஆய்வுரையையே அனுப்பி விட்டார்.

அதன் சுருக்கம் வருமாறு:

“நூலின் மையக் கருத்தும், மொழிபெயர்ப்பின் மொழிநடையும், சம்பவங்களின் சுவாரஸ்யமும், நூல் முழுதும் இழையோடும் வரலாற்றுக் கொடுமையின் சோகமும் வாசிப்பவர்களை ரொம்பவே பாதிக்கும் என்பதை உணர முடிந்தது.

புத்தகத்தைப் படித்ததிலிருந்து மனம் மிக பாரமாக இருப்பதை உணர்ந்தேன். தனது பரம்பரையின் வேர்களைத் தேடும் ஒரு பத்திரிகையாளரின் பரம்பரைத் தொடர் வரலாற்று நாவலாக வடிக்கப்பட்டுள்ளது. சக மனிதர்களை சிறிதும் ஈவு இரக்கமில்லாமல், விலங்குகளை விடக் கேவலமாக நடத்தி, ஒரு இனத்தின் அடையாளத்தையே அழித்து நாடோடிகளாக்கிய குரூர புத்திக்கு சொந்தக்காரர்கள் (மேலை நாட்டவர்கள்), இன்று மனித உரிமைகள் பற்றி பேசுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

நூலின் காட்சி அமைப்புகள், நம்மை அந்த இடத்துக்கே கொண்டு செல்கின்றன என்றால் அது மிகையல்ல. ஆப்பிரிக்க காம்பியாவின் ஜுஃபூர் கிராமமும், மாண்டிங்கா மக்களின் கலாச்சாரமும், அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பலும், புதிய அமெரிக்க பூமியின் பண்ணைகளும், அடிமைச் சேரிகளும், ஆப்பிரிக்காவின் மனித ஆவணக் காப்பகங்களான கிரியட்டுகளும் இன்றும் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

கதையின் பாத்திரங்களும் தலைமுறை வாரியாக மனதில் பதிந்து விட்டன: குண்டா கிண்டே - கிஸ்ஸி - கோழி ஜார்ஜ் - டாம் லீ - சியாமா - பெர்த்தா - அலெக்ஸ் ஹேலி.

இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தனது வேர்களைத் தேடும் ஆர்வம் வருவதைத் தவிர்க்க இயலாது. என் தகப்பனார் அவர்கள் எங்களது குடும்பத் தலைமுறைகளை சார்ட் வடிவில் பட்டியலிட்டு என்னிடம் இனி வரும் தலைமுறைகளையும் இதில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறது.

நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை ஸஜரா அல்லது ஸில்ஸிலா என்ற பெயரில் தங்களது குடும்ப தலைமுறை ஆவணத்தைப் பாதுகாக்கும் பழக்கம் அரபுகளிடையே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே நம்மிடையே அமெரிக்க, ஐரோப்பிய, கீழை நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்த தகவல்களை விட ஆப்பிரிக்காவைப் பற்றி அறிந்தது மிக மிகக் குறைவு என்றே நினைக்கிறேன்.

உலக முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட ஆப்பிரிக்க முஸ்லிம்களைப் பற்றி அறியும் ஆவலை “வேர்கள்” நிச்சயமாகத் தூண்டும் என நம்புகிறேன்.

இப்போதெல்லாம் துபை வீதிகளில் எந்த ஒரு ஆப்பிரிக்கரைப் பார்த்தாலும் இவர் ஒரு காம்பியனாக, மாண்டிங்காவாக இருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.

சமீபத்தில் என் நண்பரோடு பணி புரியும் ஒரு செனகல் நாட்டுக் காரரிடம் “வேர்கள்” பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மிக ஆர்வத்தோடு ரூட்ஸ் நூலில் இடம் பெற்றுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை எனவும், அடிமைகளை ஏற்றும் துறைமுகங்கள் செனகலில்தான் இருப்பதாகவும் கூறினார்.

“நீங்கள் மாண்டிங்காவா?” எனக் கேட்டதற்கு, “இல்லை. நான் உலோஃப் இனத்தைச் சேர்ந்தவன்” என அவர் கூறியதும், எனக்கு கப்பலில் குண்டாவுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தவர் ஒரு உலோஃப் தான் என்பது நினைவுக்கு வந்து போனது.

வேர்கள் மூலமாக என் சிற்றறிவுக்கு எட்டும் சில படிப்பினைகளாக நான் கருதுவது:

1. ஒரு சமூகத்தை அழிக்க முதலில் எதிரிகள் செய்வது அவர்களின் கலாச்சார அடையாளங்களை அழிப்பது. அதுதான் குண்டாவின் விஷயத்தில் நடந்தது. அடுத்த தலைமுறைகளுக்குத் தாங்கள் முஸ்லிம்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது.

2. மேலை நாடுகளின் அடிமை முறை உடல் ரீதியாக களையப்பட்டு விட்டதாக பிரகடனப் படுத்தப்பட்டாலும், உள ரீதீயான சிந்தனை அடிமைத்தனத்தை (Ideological Slavery) அவர்கள் இன்றும் திணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் (குறிப்பாக முஸ்லிம் உம்மாவின் மீது) என்பதற்கு முஸ்லிம் நாடுகளில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள கலாச்சாரத் தாக்கங்களும், போர்களும், ஹாலிவுட் கற்பனைகளும், குழந்தைகளை அடிமைப்படுத்தும் கேம்களும், கார்ட்டூன்களும், மீடியாக்களும், KFCகளும், போதைப் பொருட்களும், முதலாளித்துவ சந்தை முறைகளும், நவீன வங்கி முறைகளும், நவீன தொழில்நுட்ப போதைகளும், இன்னும் நமக்கே அறியாமல் நம்மை ஆட்கொண்டுள்ள எத்தனையோ ஆதிக்கங்களும் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.”

இவ்வாறு அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி அதில் குறிப்பிட்டிருந்தார்.

“வேர்கள்” ஏற்படுத்திய தாக்கத்தின் அடுத்த விளைவு காயல்பட்டினத்தில் துளிர் பள்ளி அரங்கில் “வேர்கள்” பற்றிய நூலாய்வுரை நிகழ்ச்சி நடத்துவது வரை சென்றுள்ளது.

இன்ஷா அல்லாஹ் இந்த நூல் இன்னும் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களை இஸ்லாத்தின்பால் சுண்டியிழுத்த இந்த ரூட்ஸ் புதினத்தின் ஆசிரியரான அலெக்ஸ் ஹேலி இறுதி வரை இஸ்லாத்தைத் தழுவவில்லை என்பது அடிக்குறியிட்டு சொல்லப்படவேண்டிய ஒன்று.

இங்கேதான் ஹிதாயத் என்னும் நேர்வழியின் அருமையும், பெருமையும் விளங்குகிறது. ஹிதாயத் என்னும் நேர்வழியை அல்லாஹ் யாருக்கு நாடுகிறானோ அவருக்குத்தான் கொடுப்பான். அது அலெக்ஸ் ஹேலியின் விஷயத்தில் நடைபெறவில்லை.

அந்த வகையில் நம்மையெல்லாம் அவனது நேர்வழியில் வைத்திருக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

MSAH

Vidiyal Velli May 2014

Saturday, 26 April 2014

வல்லரசு இந்தியாவில் வாரிசு அரசியல்!


இந்தியா ஒரு வல்லரசு நாடாக ஆகப் போகிறது என்று எல்லோரும் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்தியா வல்லரசாக மாறுமோ இல்லையோ வாரிசு இந்தியாவாக மாறிவிடும் போலிருக்கிறது.

ஆம்! இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பெரும்பாலான மூத்த அரசியல் தலைவர்கள் தங்கள் மகன்கள், மகள்கள், மனைவிகள், மருமக்கள் என்று தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கே சீட்டுகளை கிடைக்கச் செய்துள்ளார்கள்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் அலசிப் பார்த்தால் இந்த வாரிசு எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டிச் செல்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திதான் இந்த வரிசையில் முதலில் வருபவர். இவரிலிருந்துதான் இந்த எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக, எஸ்டிபிஐ, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள்தான் இந்த வாரிசு அரசியலின் விதிவிலக்குகள். (அதிமுகவில் இப்பொழுது இருக்கிற அமைச்சர்களுக்கே எப்பொழுது சீட் கிழியும் என்று தெரியாது. இதில் அவர்களின் வாரிசாவது, அரசியலாவது…!)

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒரிசாவில் மட்டும் ஐந்து முன்னாள் முதல்வர்களின் பிள்ளைகள் வரிந்து கட்டிக்கொண்டு வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.

நாட்டுக்கே சாபமான நரேந்திர மோடி ராகுல் காந்தியை "இளவரசர்" என்று கிண்டலடிக்கிறார். இவருக்கு இதனைச் சொல்ல ஒரு அருகதையும் இல்லை. ஏனெனில் அவர் சார்ந்திருக்கும் பாஜகவில் மட்டும் என்ன வாழுகிறதாம்? அங்கும் “இளவரசர்களின்” இராஜ்யம்தான்!

இரண்டு பாஜக முதல்வர்களின் பிள்ளைகள் களத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளார்கள். மூன்று முன்னாள் முதல்வர்களின் பிள்ளைகளும் களத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா ஜார்க்கண்டிலுள்ள அவருடைய தந்தையின் பாரம்பரிய தொகுதியான ஹஸாரிபாக் தொகுதியில் நிற்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் வாரிசு கார்த்தி சிதம்பரம் சிதம்பரத்தின் பாரம்பரிய சிவகங்கை தொகுதியில் நிற்கிறார்.

இது ஒரு புறம் இருக்கட்டும். இந்திய அரசியலில் அதிகரித்து வரும் இந்த வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்தையும், அதன் எதிர்கால வளர்ச்சியையும் எங்கே கொண்டு செல்கிறது?

முதலில் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். பாட்ரிக் ஃப்ரெஞ்ச் என்ற வரலாற்றாய்வாளர் இந்திய பாராளுமன்றத்திலிருந்து இப்பொழுது வெளியேறப் போகும் நடப்பு 545 தொகுதி எம்பிக்களின் பின்னணிகளை ஆராய்ந்தார். இதில் அவர் கண்டறிந்தது என்னவென்றால், எம்பிக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 28.2 சதவீத எம்பிக்கள் தங்கள் குடும்பத் தொடர்பை வைத்துதான் பாராளுமன்றத்தில் நுழைந்துள்ளார்கள்.

இது இங்கு மட்டுமல்ல. ஜனநாயகத்தை அமுல்படுத்தும் பல்வேறு நாடுகளிலும் இதுதான் நிலை. அரசியல் வர்க்கம் என்றறியப்படும் அந்த வகுப்பு மக்களிடம் இரண்டாவது, மூன்றாவது தலைமுறை வரை இந்த வாரிசு அரசியல் நீண்டு கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் வானில் குடும்பங்களின் பங்கை ஒத்திருக்கும் நாடு ஜப்பான்தான்.

பாட்ரிக் ஃப்ரெஞ்ச் தனது ஆய்வில் இன்னொரு புள்ளிவிவரத்தையும் குறிப்பிடுகிறார். 69.5 சதவீத இந்திய பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் நுழைந்தது குடும்பத் தொடர்பை வைத்துதான். இது  வயதை அனுசரித்து மாறுபடுகிறது. இள வயது எம்பிக்களே அதிகமாக  குடும்பத் தொடர்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.

40 வயதுக்குக் கீழுள்ள எம்பிக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாரிசுதாரர்கள். இதை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் 30 வயதுக்குக் கீழுள்ள அனைத்து எம்பிக்களும் வாரிசுதாரர்களே.

இதனை சொல்லிவிட்டு பாட்ரிக் ஃப்ரெஞ்ச் இவ்வாறு அந்த ஆய்வை முடிக்கிறார்: "நீங்கள் இளமையானவராக இருந்து அரசியலில் நுழைய விரும்பினால் குடும்பத் தொடர்புகள் மட்டும்தான் மிக முக்கிய வழியாக இருக்கிறது."

அப்படியென்றால் திறமை உள்ளவர்கள், துடிப்புள்ள சூடேறிய இரத்தம் கொண்ட இளைஞர்கள் அரசியலில் எளிதாக நுழைய முடியாது, மேலே வர முடியாது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்த ஆய்வின் படி அதிக வாரிசு அரசியலைக் கொண்ட கட்சிகளாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள், அகாலி தள், பிஜு ஜனதா தள், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை விளங்குகின்றன.

சட்டம், மருத்துவம், விளையாட்டு, இராணுவம் ஆகிய துறைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் வாரிசுகளும் அதே துறைகளில் நுழைந்து மிளிர வேண்டும் என்று விரும்புவார்கள். இதே போன்று அரசியல்வாதிகளும் எண்ணுவதில் என்ன தவறு இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம்.

ஆனால் பாட்ரிக் ஃப்ரெஞ்ச் சொல்லும் இன்னொரு முக்கிய விஷயம்தான் நம்மை இதில் கவனம் கொள்ள வைக்கிறது. கட்சியிலும், சமூகத்திலும் கடுமையாக உழைத்து உன்னத இடங்களை அடைந்த அரசியல்வாதிகளின் வாரிசுகளில் பெரும்பாலோர் "வெறும் வாரிசுகளாகவே" உள்ளனர் என்றும், அவர்கள் கட்சியிலோ சமூகத்திலோ மிளிரவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

வாரிசு அரசியலால் பல தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கட்சியை உருவாக்கியவர் அல்லது கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தனது வாரிசை கட்சியின் முக்கிய பதவிக்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்பினால் மற்ற உறுப்பினர்கள் அந்த பதவிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

ராகுல் காந்தி தான் பிரதமர் பதவியை ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என்று சமிக்கை காட்டிவிட்டார். இனி அந்தக் கட்சியில் ஒரு இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு வேறு யாரும் அந்தப் பதவியை அடையவே முடியாது.

கலைஞர் கருணாநிதி தன் மகன் ஸ்டாலினை அடுத்த முதல்வராக்க வேண்டும் என்று சூசகமாக தெரிவித்துவிட்டார். இனி அந்தக் கட்சியில் வேறு யாரும் முதல்வர் கனவு காண முடியுமா?

தன் மகன் அன்புமணி ராமதாசுக்கு மதிய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இதுவரை பேசி வந்த அனைத்து அறங்களையும் அடுப்பில் போட்டு பொசுக்கி விட்டு பாசிச பாஜகவுக்கு வால் தூக்கி ஓட்டு பொறுக்கிய ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியில் வேறு யாராவது மதிய அமைச்சர் ஆக முடியுமா?

தன் மைத்துனன் சதீஷுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாடாவது மண்ணாங்கட்டியாவது என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாசிச பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து மோடிக்கு பிரச்சாரம் செய்கிறேன் என்ற பெயரில் ஊர் ஊராக உளறிக்கொட்டிய விஜயகாந்தின் தேமுதிகவில்தான் வேறு யாரும் அமைச்சராக முடியுமா?

மூன்றாவது முன்னணி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் ஆகி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் முலாயம் சிங் யாதவ் தான் வகிக்க வேண்டிய முதல்வர் பதவியை மிக பாதுகாப்பாக தன் மகன் அகிலேஷ் யாதவிடம் ஒப்படைத்தார்.

அதேபோல் முன்னர் லல்லு பிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழலில் சிக்கி முதல்வர் பதவியை இழக்க நிர்பந்தம் ஆன பொழுது தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார்.

தன் சொந்த பந்தங்களை, தன் உறவினர்களை கட்சியில் மேலே கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ள தலைவர்களைக் கொண்ட கட்சியில் உண்மையிலேயே திறமை உள்ளவர்கள் ஒரு பொழுதும் மேலே வர முடியாது. அல்லது மின்னும் தலைவர்களாக மிளிர முடியாது.

அதே போல், நடப்பில் எம்எல்ஏவாக இருக்கும் ஒருவர் எம்பியாக செல்கிறார் என்றால் அவர் காலியாகப் போகும் தனது எம்எல்ஏ இடம் தன் நெருங்கிய உறவினருக்குக் கிடைக்க வேண்டும் என்று தனது செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி லாபி செய்கிறார். அதே போல் நடப்பில் எம்பியாக இருப்பவர் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு வருகிறார் என்றால் தனது எம்பி பதவிக்கு தன் நெருங்கிய உறவினரையே அமர்த்த வேண்டும் என்று துடிக்கிறார்.

இதுதான் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்தது. எம்பியாக இருந்த வீரபத்ர சிங் மாநில முதல்வராக ஆனபொழுது தனது எம்பி சீட்டை அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி தன் மனைவி பிரதிபா சிங்குக்கு கிடைக்கச் செய்தார்.

ஆக, வாரிசு அரசியல் இந்திய அரசியலை கறை படுத்தும். வாரிசு அரசியல் கட்சிக்குள் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும்.

இது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். வாரிசு அரசியல் நாட்டுக்கு ஒருபொழுதும் நல்லதல்ல.

MSAH

Monday, 24 March 2014

ATMல் பணம் எடுக்கும்பொழுது கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம்!


ATMல் பணம் எடுக்கும்பொழுது யாராவது வந்து அவர்களது கார்டைக் கொடுத்து, “எனக்கு ATMல் பணம் எடுக்கத் தெரியாது, கொஞ்சம் எடுத்துத் தாருங்களேன்” என்று கேட்டால் உடனே நல்ல பிள்ளையாக மாறி கார்டை வாங்கி அவர்களுக்குப் பணம் எடுத்துக் கொடுத்து விடாதீர்கள். எலி பொறியில் சிக்குவது போல் பிரச்னையில் சிக்கிக் கொள்வீர்கள்.

நாம் அவர்களது கார்டைக் கொண்டு பணம் எடுப்பது முழுவதும் கேமராவில் பதிவாகும். அவர்கள் அதை வைத்துக்கொண்டு, “என் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டுள்ளது, என் கார்டைத் திருடி, என் ரகசிய எண்ணை எப்படியோ கண்டுபிடித்து இவர் பணம் எடுத்துவிட்டார்” என்று புகார் கொடுத்து பிரச்னையாக்கி விடுவார்கள். இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளும் ஊருக்குள் அலைகிறார்கள்.  ஜாக்கிரதை!

உண்மையிலேயே பணம் எடுக்கத் தெரியாதவர்களும் நம்மிடம் உதவி கேட்கலாமல்லவா... அப்பொழுது என்ன செய்வது? யார் பணம் எடுத்துக் கேட்டாலும் நீங்கள் கார்டைக் கையில் வாங்காதீர்கள். “நான் சொல்லித் தருகிறேன், நீங்கள் எடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்” என்று சொல்லி அவர்களையே எடுக்க வையுங்கள்.

அவருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். உண்மையிலேயே பணம் எடுக்கத் தெரியாதவர்கள் இதன் மூலம் பணம் எடுக்க அறிந்து கொள்வார்கள். மாறாக, அவர்கள் கள்வர்களாக இருந்தால் முகத்தில் கரி பூசியது போல் ஆவார்கள்.

Friday, 21 March 2014

துளிரில் சிறப்புடன் நடந்து முடிந்த உலக வரலாற்று புகழ் பெற்ற நூல்களின் ஆய்வு!

2014 மார்ச் 16 ஞாயிறு அன்று துளிர் அறக்கட்டளை அறிவுத்துளிர் குடும்ப நண்பர்கள் வட்டம், நிரஞ்சனம் மனநல மன்றம் ஆகிய துளிரின் உள் அமைப்புகளின் சார்பில் உலக வரலாற்றில் புகழ் பெற்ற 'ரோடு ட்டூ மக்கா' எனும் தலைப்பில் முஹம்மது அஸத் வெளியிட்ட ஆங்கில நூலை 'எனது பயணம்' எனும் தலைப்பில் எஸ்.ஓ. அபுல் ஹஸன் கலாமி தமிழில் மொழியாக்கம் செய்த நூலும், 'ரூட்ஸ்' எனும் தலைப்பில் அலெக்ஸ் ஹேலி எழுதிய 'வேர்கள்' எனும் தலைப்பில் எம்.எஸ். அப்துல் ஹமீது தமிழில் மொழியாக்கம் செய்த புதினமும் ஆய்வு செய்யப்பட்டது.


மாலை 5.15 மணிக்கு துளிர் சிற்றரங்கில் நூலாய்வு நிகழ்வு துவங்கியது. அல்ஹாஃபிழ் முஹம்மது இர்ஃ;பான் திருக்குர்ஆன் சூரா 'அபஸா' விலிருந்து சில வரிகளை ஓதி நிகழ்வுகளை துவக்கி வைத்தார். விழிப்புலன் இழந்த போதும் தனது ஆற்றலால் குர்ஆனை மனனம் செய்து இருக்கும் அவருக்கு துளிரின் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

துளிர் நிறுவனர் வழக்கறிஞர் ஹெச்.எம். அஹமது வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் 16 ஆண்டு காலம் அறிவுத்திறனற்ற இயலா நிலை குழந்தைகளுக்கு மறுவாழ்வு பணியாற்றி வரும் துளிர் பொது தளங்களிலும் மக்களுக்கு பயன் தரும் பல்வேறு கருத்தரங்குகள், இலக்கிய கூட்டங்கள், விவாத அரங்குகளையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த நூலாய்வு நிகழ்வும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். கொமைந்தார் இஸ்மாஈல் நூலாய்வு உரை நிகழ்த்தும் பேராசிரியர்களை அறிமுகம் செய்து பேசினார்.

"ROAD TO MAKKAH" - “எனது பயணம்” நூலாய்வு

முதலாவதாக "ROAD TO MAKKAH" - “எனது பயணம்” என்ற நூலாய்வு நிகழ்விற்கு ஹாஜி எஸ்.எம். உஜைர், ஹாஜி எஸ்.ஐ. தஸ்தகீர் ஆகியோர் தலைமை ஏற்றனர். ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஆங்கில துறை தலைவர் முனைவர் ஏ. நிஃமதுல்லாஹ் நூலாய்வு உரையாற்றினார்.


அவர் தனது உரையில் கூறியதாவது:

சிலுவைப் போருக்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அய்ரோப்பியக் கிறித்தவர்களுக்கு இஸ்லாத்தின் மீதான வெறுப்பு முழுக்க தொடங்கி விட்டது. சிலுவைப்போர் அந்த வெறுப்பை நிலைப்படுத்தி விட்டது. இன்று வரை அந்த வெறுப்பும், அருவருப்பும் இஸ்லாத்தின் மீதும், ஏகத்துவத்தின் மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் மனதில் தலைமுறை தலைமுறையாய் வேரூன்றி வருகிறது.

இந்த நிலையில்தான் பிரபல அய்ரோப்பிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லியோ போல்டுவிஸ் (முஹம்மது அஸத்) அவர்கள் அரபியப் பாலைவன நாடுகளில் நுழைகிறார். அந்த மக்களிடம் பழகுகிறார். அரபிய இஸ்லாமிய கலாச்சாரத்தை நுகர்கிறார். அவர்கள் வாழ்முறையைக் கற்கிறார். அவர்களோடு கலந்து போகிறார். இஸ்லாத்தில் கரைந்து போகிறார். புனித கஅபாவை வலம் வருகிறார். சவூதி மன்னர் முதல் சாதாரண அரபு ஒட்டக ஓட்டி வரை இசைவுடன் அவரோடு பழகுகின்றனர். மக்காவை நோக்கிய பயணம் இந்த அய்ரோப்பியரை இஸ்லாமியராக மட்டுமல்ல, அரபியாகவும் ஆக்கி விடுகிறது.

அன்றைய பாகிஸ்தானுக்குச் செல்கிறார். மாபெரும் கவிஞர் அல்லாமா இக்பாலோடு தொடர்பு ஏற்படுகிறது. புதிய பாகிஸ்தானின் அரசியல் ஆலோசகர் ஆகிறார். ஐ.நா. சபையில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற அமைச்சர் ஆகிறார்.

இவ்வளவுக்குப் பின் அமெரிக்கா செல்கிறார். இவர் தம் பழைய நண்பர்கள் இவரை விசித்திரமாகப் பார்க்கிறார்கள். அவர்களின் அறியாமையை உடைத்தெறிய முன் வருகிறார் அஸத். அதுவரை தன் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பாதிருந்த அவருக்கு இப்போது அது அவசியமாகி விட்டது.

ஆம்! இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும், அரபு பற்றியும் அவர்களுக்கு அறிவித்திடத் துடிக்கிறார்.

எழுதுகோலால் கற்பித்த அல்லாஹ்வின் பேருதவியோடு 'ரோடு ட்டூ மக்கா' என்கிற இந்தத் தன் வரலாற்றுக் காவியத்தை இயற்றி முடித்தார். இந்த நூல் அய்ரோப்பிய அறிவாளிகளின் மனத்தில் இஸ்லாம் பற்றிப் படர்ந்திருந்த அறியாமை இருளை முழுமையாக நீக்கியது.

ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அரபியர் பற்றியும், இஸ்லாமிய வாழ்நெறி பற்றியும் உலகம் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துச் செய்திகளின் நேரடி அனுபவ அறிவிப்பாகத் திகழ்கிறது இந்நூல்.

இந்நூலை ஒருவர் படித்து முடித்தால் இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும் அவரால் நிச்சயம் உண்மையை உய்த்து உணர முடியும்.
இதோ அந்த அரிய நூல் தமிழில்!

காயல்பட்டினம் சகோதரர் ஹாஜி அபுல் ஹஸன் கலாமி, அஸத் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார். பெருநூலாய் இருப்பினும் பொருளும், சுவையும் விடாமல் படித்து முடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நூலை வெளியிட்டுள்ள சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் பாராட்டுக்குரியவர்கள்.


இவ்வாறு தெரிவித்த முனைவர் நிஃமத்துல்லாஹ், இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் எளிதில் புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த நூல் என்றும், இந்த அரிய நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


அதன் பின் நூலை மொழியாக்கம் செய்த ஹாஜி எஸ்.ஒ. அபுல் ஹஸன் கலாமி ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் முஹம்மது அஸத் எழுதிய 'ரோடு ட்டூ மக்கா' நூலை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நூலை படித்த போது அது ஒருவரின் சுயசரிதையோ அல்லது வீர செயல்களின் வர்ணணையோ அல்ல என்றும், ஒர் ஐரோப்பியர் இஸ்லாத்தை தெரிதலையும் முஸ்லிம் சமூகத்தோடு அவர் இரண்டற இணைதலையும் விளக்கிடும் கதைதான் அது என்றும் எனக்கு புரிந்தது.

இந்த நூலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அந்த முயற்சிக்காக நான் பல வருடங்கள் செலவிட்டேன். 'ரோடு ட்டூ மக்கா' எனும் ஆங்கில நூலை பல முறை திரும்ப திரும்ப படித்தேன். நான் தமிழாக்கம் செய்த இந்த புத்தகத்திற்கு 'எனது பயணம்' என்று பெயர் வைத்தேன். அதனை சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் வெளியிட்டார்கள். 

இவ்வாறு கூறிய அவர், இந்த நூலாய்வு நிகழ்வினை ஏற்பாடு செய்து என்னை கவுரவப்படுத்திய துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிகழ்வில் துளிரின் அழைப்பினை ஏற்று எல்லா தரப்பினரும் கலந்து கொண்டமைக்கு பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். இந்த நூலாய்வு நிகழ்வில் மாற்று மத சகோதர சகோதரிகளின் பங்களிப்பும் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் தனது ஏற்புரையில் தெரிவித்தார்.

“ரூட்ஸ்” - “வேர்கள்” நூலாய்வு

இரண்டாவதாக “ரூட்ஸ்” - “வேர்கள்” எனும் நூலாய்வு நிகழ்விற்கு ஆர்.எஸ். லத்தீஃப், ஸதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா) எஸ்.இ. அமானுல்லாஹ் ஆகியோர் தலைமை ஏற்றனர்.


ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் முனைவர் ஏ. அஷ்ரஃப் அலீ தனது நூலாய்வு உரையில் கூறியதாவது:

மால்கம் எக்ஸ் இஸ்லாத்தை முன் வைத்து கறுப்பர்களின் விடுதலைக்காக போராடியவர். பல லட்சம் கறுப்பர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தவர்.

மால்கம் எக்ஸ் தன்னுடைய வேகமான இஸ்லாமியப் பிரச்சாரத்தின் போது 'கறுப்பர்களின் சொந்த நாடு அமெரிக்கா அல்ல. அஃது ஆப்பிரிக்கா!' என்ற வாதத்தை முன்வைத்தார். இதில் வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டினார். அவரது ஆதாரங்கள் நிறைந்த உரைகள் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்தன. இந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மைகளை சோதிக்க விரும்பினார் அலெக்ஸ் ஹேலி.





பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் எக்ஸ் கூறும் வரலாற்று இடங்களை தானே நேரில் சென்று கண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். அது அவரது சொந்த பூர்வீகத்தைக் கண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது. 

அதாவது அவரது 'வேரை' அவர் காணும் நல்ல முயற்சியாக முடிந்தது. தனது பயணத்தை, ஆராய்ச்சியை “ரூட்ஸ்” என்று புதினமாக வடித்தார். இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு “வேர்கள்” என்ற பேரில் காயல்பட்டினத்தை சேர்ந்த எம்.எஸ். அப்துல் ஹமீது மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். பெரும் பணி இது. சளைக்காமல் செய்திருக்கிறார். அல்லாஹ் அவருக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக! இந்த நூல் 'இலக்கியச்சோலை' வெளியீடாக வந்துள்ளது.

இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நூலாய்விற்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபை) இருக்கும் எம்.எஸ். அப்துல் ஹமீதை பார்வையாளர்கள் முன்னிலையில் வழக்கறிஞர் அஹமத் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது கருத்துக்களை கேட்டார். 

அப்போது அவர் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரியப்படுத்தினார்: 

அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்ற உண்மையையும் ஆப்ரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்ற ஆச்சரியமான உண்மையையும் நான் மால்கம் எக்ஸ் நூல் மூலமாக அறிந்தேன். அத்தோடு அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” என்ற புதினத்தைப் பற்றியும் முதன் முதலில் அந்நூல் மூலம் அறிந்தேன். அப்பொழுதே “ரூட்ஸ்” நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பிற்றை நாட்களில் அந்த நூலைப் படிக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் கனத்தது. ஆப்ரிக்க கறுப்பர்கள் அமெரிக்கர்களால் பட்ட அவலங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை. அந்த நாவலை படிக்கும் யாரையும் அது உலுக்காமல் விட்டதில்லை.

இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திடும் முயற்சியை துவங்கினேன். ஆங்கிலத்தில் 729 பக்கங்களைக் கொண்டது இந்நாவல். 120 அத்தியாயங்களைக் கொண்டது. அதனை அப்படியே மொழிபெயர்த்தால் தமிழில் 1000 பக்கங்களுக்கு மேல் வரும். அதனால் முடிந்தவரை சுருக்கி மொழிபெயர்த்திருக்கிறேன்.

இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறிய எம்.எஸ். அப்துல் ஹமீது, இந்நூலை நூலாய்விற்கு தெரிவு செய்த துளிர் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

(முன்னதாக இந்த நூலை நான்கு முறை படித்து முடித்து விட்ட காயல் எஸ்.இ. அமானுல்லாஹ் “வேர்கள்” குறித்த அறிமுகவுரையை நிகழ்த்தினார்.

மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ். அப்துல் ஹமீதுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசினை அவர் சார்பில் அவரின் மாமனார் MIW முஹம்மது இஸ்மாஈலும், அவரின் இளைய மகன் முஹம்மது ஸஜீதும் பெற்றுக்கொண்டனர்.)

நன்றி: http://www.kayalnews.com